Skip to content
ஏதன் , துர்கா இருவரினதும் நாள்கள் ஒவ்வொன்றுமே, குறுஞ்செய்திகள் அனுப்பாது, புலன அழைப்பில்லாது மலர்ந்ததில்லை, மறைந்ததும் இல்லை. அதில் முறைப்பும் முகத்திருப்பலும் கலந்துகட்டிய குறுஞ்சண்டைகளுக்குப் பஞ்சமே இருக்கவில்லை. அப்படிப்பட்ட ஒவ்வொரு தருணத்திலும் அவை பெரிதாகிவிடாது, காலத்தைக் கவ்விப் பதுக்கிவிடாமல் இருக்க இருவருமே முயன்றதன் பலன், ஒருவர் ஒருவரை ஆழமாகத் தெரிந்துகொள்ள முடிந்தது. இரு மனங்களுக்குமிடையான நேசத்தின் வேர்கள் ஆழப் பதிந்து உறுதியான இருப்புக்கு ஏதுவாகத் தம்மை பாதுகாத்துக் கொண்டன. இது எல்லாவற்றுக்கும் அடிநாதமாக, ‘உனக்கு நான் எனக்கு நீ ’ என்ற எண்ணம் இருவருள்ளும் உறுதியாக இருந்தது. இருவரும் சேர்ந்து வாழப்போகும் வாழ்க்கைக்கான எதிர்பார்ப்பில் நாட்களை நெட்டித் தள்ளினார்கள்.
ஏதன் வீட்டில், அவன் தாய் சோஃபியாவோ, மூத்த சகோதரி ஐலாவோ தம் நிலைப்பாட்டிலிருந்து இம்மியும் மாறவில்லை. “அது அவன்ட விருப்பம், நான் தலையிட விரும்பேல்ல சோஃபியா, நீயும் அப்படியே இரு. எங்கட பிள்ளைகள் மகிழ்ச்சியாக இருக்கிறது மட்டும்தான் எங்களுக்கு வேணும். தன்ர மகிழ்ச்சி துர்கா எண்டுறான் ஏதன், வாழட்டுமே!” என்றுவிட்டார், ஆரோன் டேல்.
அதன் பின்னும் அவர்கள் மாறவில்லை. ஏதனோ, என் காதல், திருமணம் தொடர்பில் உங்கள் விருப்புக்கும் விருப்பின்மைக்கும் நான் மதிப்பளிக்கத் தயார் இல்லை என்று, முகத்துக்கு நேரே சொல்லிவிட்டான்.
அது, அவர்களுள் துர்கா மீதான கோபத்தையும் எரிச்சலையும் அதிகரிக்கவே செய்திருந்தது. அவளை வருத்த, நோகச் செய்ய சந்தர்ப்பம் கிடைத்தால் என்ற மனநிலையில்தான் இருவருமே இருந்தார்கள். அவர்கள் கதை பேச்சில் அதை அனுமானித்திருந்தான், ஏதன். என்னைக் கடந்துதான் அவளை எவராலும் அணுக முடியும் என்றும் சொல்லியிருந்தான்.
இந்த விடயத்தில் ஐவன் பார்வையாளராகிவிட்டான். அவன் மனைவி, அவளுள் வளரும் தம் வாரிசு என்று, அவன் கவனம் தன் தனிப்பட்ட வாழ்வில் குவிந்திருந்தது.
ஏவாவோ, சிட்டுக்குருவியாக மிகுந்த மகிழ்வோடு நடமாடினாள். ஒலிவியா அவள் சகோதரி, துர்கா தமையனின் காதலி, வருங்கால மனைவி என்றது கடந்து, இருவரும் அவள் நெருங்கிய தோழிகளாகி இருந்தார்கள். ஒரு சிறு சந்தர்ப்பம் கிடைத்தாலும் போதுமென்று அவுஸ்திரலியா பயணங்களை ஒழுங்கு செய்துகொண்டாள். இலண்டனில் எப்படித் துர்காவின் சித்தி வீட்டில் செல்லப்பிள்ளையானாளோ அப்படித்தான் அங்கும் துர்கா, ஒலிவியா குடும்பத்தில் தன்னையும் ஒரு அங்கமாக்கிக்கொண்டாள். அதோடு, இலண்டனில் இளநிலைப் படிப்பை முடித்துவிட்டு இரு வருடங்களுக்கு முதுநிலைப் படிப்பைத் தொடர அங்கே சென்றவள் ஆறு மாதங்களாக துர்காவோடுதான் தங்கியிருக்கிறாள்.
துர்கா வீட்டில், ஏவாவின் பிரசன்னமும் பழக்கமும் கட்டுக்கோப்பான ஒலிவியா குடும்பத்தினரோடான நெடுநாள் நெருக்கமும் தாக்கம் செலுத்தியதில், அவள் காதல் தொடர்பான விருப்பின்மை மெல்ல மெல்லக் குறைந்துதான் இருந்தது. இருந்தாலும் வெள்ளைக்காரன் என்ற ஒருவகையான பயம் இருக்கவே செய்தது.
“அவேயும் எங்களப் போலத்தான். நீங்களா உயரமாத் தூக்கி வச்சுக் கற்பனை பண்ணாதீங்க. இவ்வளவும்தான் அவே எண்டு கீழாவும் நினையாதீங்க. அக்கா மகிழ்ச்சியா வாழுவாள். அவள் நம்புறத நாங்களும் நம்போணும்.” என்று துர்காவின் தம்பிமார் இருவரும் தமக்கைக்கு ஆதரவாகப் பேசியதும் அவள் பெற்றோர் மனங்களில் தாக்கம் உண்டு பண்ணியிருந்தது. அந்தளவுக்குப் பெடியள் இருவருக்கும் தம் அத்தாரைப் பிடித்திருந்தது. இலண்டனுக்கு ஒரு தடவை போய் வந்த பின் அவர்களுக்கிடையில் நெருக்கம் அதிகரித்தும் இருந்தது.
இப்படி, கிட்டத்தட்ட இரு வருடங்கள் சென்றிருந்தன.
இருவருக்குமே அங்கும் இங்கும் சென்று வரச் சந்தர்ப்பங்கள் கிடைத்தும் முடிந்தும் கவனமாகத் தவிர்த்து, துர்காவின் இறுதிப்பரீட்சை முடியும் நாளுக்காகக் காத்திருந்தார்கள்.
இப்படியிருக்கையில் அன்று வழமை போல் ஏதனிடமிருந்து அழைப்பு வர ஏற்றாள், துர்கா. அவள் முகமே சரியில்லை.
“என்ன பிரச்சினை?” புலன அழைப்பை ஏற்றதும் கேட்டிருந்தான், ஏதன்.
“ப்ச், ஒண்ணுமில்ல விடு.” விட்டேற்றியாகச் சொன்னவள் வேறு கதைக்குத் தாவியிருந்தாள்.
ஏதன் இணைந்துகொள்ளவில்லை. “என்ன எண்டு சொல்லு துர்கா. எங்க ஏவா?”
“அதான் ஒண்ணுமில்ல எண்டுறனே. ஏவா லைப்ரரிக்கு போயிருக்கிறாள்.” விட்டேற்றியாகப் பதில் சொன்னாள்.
அவளைக் கூர்ந்து பார்த்தான், ஏதன். “இப்ப என்ன உனக்கு, உன்ர ஃப்ரெண்ட்சோட இலங்கை ட்ரிப் போகோணுமா? அதுதான் முக்கியம் எண்டா போக வேண்டியதுதானே. இப்பிடி முகத்த நீட்டிக்கொண்டு இருக்கிறத விட அது பெட்டர் துர்கா.” சிடுசிடுப்போடுதான் சொல்லியிருந்தான்.
துர்கா கணமேனும் திடுக்கிட்டுவிட்டாள். இங்க நடக்கிறது அவ்வளவு கெதியா அவன் வரை போயிருக்குதே , யாராக இருக்கும். ‘ஏவாவோ? ச்சே ச்சே. அப்ப ஆர்?’ மனத்துள் கேள்வியோட , சிடுசிடுத்தவனைப் பார்த்து முறைத்தாள்.
“இதான் என்ர முகம் ஏதன்? இப்ப கொழுவல் படவா கோல் பண்ணினனி? தயவு செய்து வச்சிரு ஏதன், நானும் குளிக்கப் போறன், பை.” என்று அழைப்பைத் துண்டித்துவிட்டு அப்படியே அமர்ந்திருந்தாள். அவன் திரும்ப எடுப்பான். அதுதான் அவர்கள் வழக்கம். ஆனால், இம்முறை அவன் வழக்கத்தை மாற்றிவிட்டானாம்.
கைப்பேசியை எடுத்தவள் தன் தம்பிகளில் பெரியவனுக்கு அழைத்தாள். அவன் அழைப்பை ஏற்றதும் , “டேய் எரும ஏதனிட்ட என்ன சொன்னனீ? நாய் நாய் உனக்கு என்னத்துக்குத் தேவையில்லாத கதை ? ஆங், நீ என்ர தம்பியா இல்லாட்டி அந்தாளிட ஸ்பையா?” கத்திவிட்டாள்.
நமுட்டுச் சிரிப்புச் சிரித்த சகோதரன் இவளுக்குப் பதில் சொல்லவில்லை. அருகிலிருந்த சகோதரன் கைப்பேசியை வாங்கிப் பார்த்தவன், “நான் சொன்னனே கேட்டுச்சா? இந்தா எடுத்துக் கத்துறாள் கேளுங்க அத்தார்.” என்றதும், “அடப்பாவிகளா?” டப்பென்று அழைப்பைத் துண்டித்துவிட்டாள்.
‘கூடப் பிறந்த எருமைகள் ரெண்டும் எட்டப்பன் வேலை செய்யிறான்களே!” பற்களை நறும்பிக்கொண்டாள். அந்நேரம் அவள் நெருங்கிய தோழியின் அழைப்பு வந்தது.
‘இவ்வளவுக்கும் காரணம் இவர்களும் அவர்களின் திடீர் பயண ஏற்பாடும்தானே?’ மனம் முணுமுணுக்க அழைப்பை ஏற்காது பார்த்திருந்தாள். அவளோ, விடுவேனா என்று அழைத்துக்கொண்டே இருந்தாள்.
எடுத்துக் காதில் வைத்ததுதான் தாமதம் , “என்ன முடிவு செய்திருக்கிற துர்கா? ப்ளீஸ் மாட்டன் எண்டு சொல்லாத. நீ இல்லாமல் எப்பிடி நாங்க மட்டும்? அது ஜொலியா இராது. சும்மா லெவல் அடிக்காமல் வாப்பா. ரெண்டு கிழமைகளுக்கு எங்களோட வாறது இந்தளவுக்கு உனக்குச் சிரமமா இருக்கு என்ன? பிறகு கலியாணம் செய்திட்டு நீ பிசி ஆகிருவ. ப்ளீஸ் துர்கா! ” என்று கெஞ்சினாள்.
இவளது இறுதிப் பரீட்சை முடிந்த மறுநாள் ஆரோன் குடும்பம் இங்கு வருவதென்பது எப்போதோ திட்டமிட்ட எதிர்பார்த்திருக்கும் விசயம். இடையில் இப்படித் திடுமென்று இலங்கைச் சுற்றுப்பயணத்தை ஒழுங்கு செய்தது இவள் சற்றுமே எதிர்பாராதது. இவளால் வர இயலாது என்றாலும் கேட்கிறார்கள் இல்லை.
அதுவே, “நான் ஒரு ஐஞ்சு நாள்களுக்குச் சரி போயிட்டு வரவோ அம்மா?” என்று தாயிடம் கேட்டிருந்தாள். வேண்டாம் என்றதோடு விட்டாரா என்ன?
“இன்னும் உனக்குப் பொறுப்பு வரேல்ல. அதுக்குள்ள என்ன கலியாணம்? எப்பிடிச் சமாளிப்ப? எல்லாமே நீ உன்ர விருப்பத்துக்குச் செய்ய நினைக்கிற துர்கா. ” என்று, ஆரம்பித்துவிட்டார்.
“வரேலும் எண்டா வந்திருவனே. இன்னொரு சந்தர்ப்பத்தில போகலாம். இப்ப நீங்க போயிட்டு வாங்க.” தீர்மானமாகச் சொல்ல, கோபத்தில் அழைப்பைத் துண்டித்துவிட்டாள்.
‘இதான் என்ர நிலை எண்டு சொல்லுறன், விளங்கிக் கொள்ளாட்டி… சரிதான் போங்கடி.’ என்று இருக்க நினைத்தாலும் நண்பிகளின் மனச்சுணக்கத்தில் ஏதோ போலுணர்ந்தாள். இது போதாதென்று அன்று இரவு வரை ஏதன் அழைப்பான் அழைப்பான் என்று காத்திருந்தாள். அவனுக்கும் அவள் மீது கோபம். துர்காவுக்கு நினைக்கவே அலுப்பாக இருந்தது. ஆனாலும் ‘ஃப்ரியா’ என்று, குறுஞ்செய்தி தட்டிவிட்டாள். ‘ம்ம்ம்’ உடனே வந்தது.
‘ஓ! சோ… நீயா கோல் பண்ண மாட்ட?’ முறுக்கிக்கொண்டு தட்டி அனுப்பினாள். தொடர்ந்து கணக்கின்றி Japanese ogre எமோஜிகளை அனுப்பினாள்.
அதைப்பார்த்தவன் உதடுகளில் முறுவல். ‘இல்ல, அப்போத நீ தானே கட் பண்ணினனி? விரும்பினா நீயே எடு. இல்லையோ, தூங்கு துர்கா.’ என்று பதில் வர, இவள் புறமிருந்து வீடியோ கோல் பறந்தது.
தாமதிக்காது ஏற்றுவிட்டான். விழிகளால் கசிந்த சிரிப்பைக் கட்டுப்படுத்திகொண்டு உம்மென்று இருக்க முனைந்தான்.
“நான் என்ன செய்யோணும் எண்டு நீ சொல்லாத சரியா. தூங்குவன் முழிச்சு இருப்பன் அது என்ர விருப்பம். ” என்று சீறியவள், அவனுக்குச் சிரிப்பு மூட்டினாள்.
கன்னத்தில் இரு கைகளையும் ஊன்றிக்கொண்டான், ஏதன். வேடிக்கை பார்க்கும் அவன் தோரணையும் விழிகளில் கசிந்த நகைப்பும் சற்றுத் தாமதமாகவே அவளை எட்டியிருந்தது.
“ஏதன்…உங்களுக்கு என்னைப் பாத்தா நக்கலா இருக்கோ? என்ன அலுவலுக்கு அப்போத சினந்தனீங்க? கத சொல்லுறவேட்ட சரியாக் கேக்கோணும். அந்த ரெண்டு எருமைகளுக்கும் செய்யிறன் வேலை பொறுங்க.”என்றவள், “நான் கட்டாயம் போகோணும் எண்டு எல்லாம் நினைக்கேல்ல. ஒரே கேக்கினம் எண்டு அம்மாட்டக் கேட்டுப் பாத்தன். அதில என்ன பிழை இருக்கு? மனிசி அப்ப இருந்து ஏசினபடி. எனக்கு ஏச்சு விழுது எண்டு பெரிசா எல்லாம் மகிழ வேணாம். உங்கள என்ர விருப்பத்துக்கு லவ் பண்ணினதையும் சொல்லி ஏசினவா.” என்றபோது இருவருமே சிரிக்க ஆரம்பித்திருந்தார்கள்.
“நான் எப்படா அங்க வருவன் எண்டு இருக்கிறன். இதுக்க நீ ட்ரிப் போகக் கேட்டனி எண்டா எனக்கு ஒரு மாதிரியாகிற்று. அதான். சரி விடு.” என்றவன், “உன்ர நண்பிகள் நாலு பேரும் கொஞ்சத்துக்கு முதல் எடுத்துக் கதைச்சவே.” என்றான்.
“அவேக்கு எவ்வளவு சொன்னாலும் விளங்குதில்ல. இப்ப பார் உன்னட்ட எடுத்திருக்கினம்.” என்றவளுக்கு உண்மையில் நட்புகளில் சற்றே கோபம் எழுந்தது. எல்லோருக்கும் எல்லாம் எல்லா நேரங்களிலும் சாத்தியமாவதில்லை. அதைப் புரிந்து கொள்ள வேண்டுமா இல்லையா?
“அவேட அலட்டல் கதைகளை விடு, நாளைக்கு இருக்கு அவேக்கு.” என்றவளிடம், “நீ கொஞ்சம் சிரிச்ச மாதிரிக் கதைக்கிறியா துர்கா ப்ளீஸ்! பாக்கச் சகிக்கிது இல்ல.” சீண்டினான், ஏதன்.
“நீ சிரிச்சாலும் அழுதாலும் கோவப்பட்டாலும் பாத்துக்கொண்டே இருக்கலாம் போல அவ்வளவு வடிவா இருக்கு எண்டு ஒரு மடையன் அடிக்கடி சொல்லுறவன். ஆர் அவன், எங்க இருக்கிறான் எண்டு உனக்குத் தெரியுமா?” என்று அவள் சீறிக்கொண்டு கேட்க, “ஆர் அந்த வடிகட்டின மடையன்?” நமுட்டுச் சிரிப்போடு கேட்டான், ஏதன்.
திரைக்குக் கிட்ட நெருங்கி வந்து முறைத்தாள், அவள். அவனும் திரைக்குக் கிட்ட வந்தவன், “கனக்க யோசியாம சும்மா போயிட்டு வா. ஆனா ரெண்டு கிழமையெல்லாம் வேணாம், ஐஞ்சு அல்லது ஆறு நாள்களுக்கு.” என்று மெல்லச் சொல்ல, அவள் விழிகள் விரிந்தன.
******
error: Alert: Content selection is disabled!!