வர்ணம் 18
அருள் தடுமாறும் அடிகளோடு மேடைப் படிகளில் ஏறி நின்றான்.
அரங்கத்தில் இருந்த ஆயிரக்கணக்கான ஜோடிக் கண்கள் அவனை நோக்கித் திரும்பியிருக்க, மத்திய அமைச்சர் புன்னகையோடு அவனுக்கு அந்த மாபெரும் தேசிய விருதையும், கோப்பையையும், பாராட்டுச் சான்றிதழையும், பத்து லட்சம் காசோலையும் வழங்கிப் பொன்னாடை போர்த்தினார். மேடையில் இருந்த கேமராக்களின் பிளாஷ் வெளிச்சங்கள் அருளின் முகத்தில் மின்னின.
அமைச்சர் மைக்கை அருளிடம் நீட்டி, “இந்த வரலாற்றுச் சாதனைக்குப் பின்னாடி இருக்கிற உங்க உழைப்பைப் பத்தி நாலு வார்த்தை பேசுங்க அருள்மொழிவர்மன் சார்,” என்றார்.
அருள் மைக்கைப் பிடித்து நின்றான். அவனது கைகள் லேசாக நடுகின. தொண்டை அடைத்தது.
தன் கையில் இருக்கும் தேசிய விருதைப் பார்ப்பதா… அல்லது மேடையின் நடுவே கண்ணாடிப் பேழைக்குள் ஒளிரும் தன் குடும்பத்தின் பரம்பரைப் பட்டுப் புடவைகளைப் பார்ப்பதா என்று தெரியாமல் திகைத்தான்.
மைக்கைப் பிடித்துக் கொண்டு, “இது… இது என் தனிப்பட்ட உழைப்பு இல்லைங்க. எங்க தாத்தா, எங்க அப்பா, அப்புறம் எங்க பாரம்பரிய நெசவாளர்களோட வேர்வை… இதையெல்லாம் விட…” என்று நிறுத்தியவன், தழுதழுத்தக் குரலில், “இந்தக் கலையை எனக்குள்ள இருந்து வெளியே கொண்டு வந்து, டெல்லி வரைக்கும் கொண்டு வந்த ரெண்டு பேருக்குத்தான் இந்த விருது சேரும்…” என்று கூறி கண்ணீர் சிந்தினான்.
அப்போது, அரங்கத்தின் பின்னணியில் இருந்த மாபெரும் எல்.இ.டி திரையில் ஒரு ஆவணப் படம் திரையிடப்பட்டது!
அதில்… சிரசா மலையின் அழகும், அருளின் தறிக்கூடமும், அவன் நூலுக்குச் சாயம் காய்ச்சும் அழகும், தறியை இயக்கும் நேர்த்தியும் தத்ரூபமாக ஒளிபரப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து, அந்த மூன்று பட்டுப் புடவைகளின் பின்னணியில் இருக்கும் கதையும், நெசவாளர்களின் வாழ்வியலும் அகில உலகத் தரத்தில் விவரிக்கப்பட்டிருந்தது.
வீடியோவின் இறுதியில், “இயக்கியவர்கள்: ராஷி & சாரு” என்ற பெயர்கள் திரையில் கம்பீரமாக மிளிர்ந்தன!
அருளின் நெஞ்சு படபடவென அடித்தது. ‘ராஷி… சாரு…’ அவனது கண்கள் அரங்கமெங்கும் அவர்களைத் தேடி அலைந்தன.
அப்போது மேடையில் மீண்டும் அறிவிப்பு வந்தது:
“இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பட்டு நெசவை மிக அற்புதம் வாய்ந்த ஆவணப் படமாக மாற்றி, இந்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்த செல்வி. ராஷி மற்றும் செல்வி. சாரு ஆகியோருக்கு இந்த ஆண்டின் சிறந்த இளம் ஆவணப் பட உருவாக்கத்திற்கான தேசிய விருது வழங்கப்படுகிறது!”
தொகுப்பாளர் பெயர்களை அறிவித்ததும், அரங்கமே மீண்டும் கைதட்டலால் அதிர்ந்தது. ஆனால், விருதைப் பெற ராஷியும் சாருவும் மேடையேறவில்லை. அவர்களுக்குப் பதிலாக, அவர்களின் பெற்றோர்கள் மேடையேறினர்.
அமைச்சரின் கரங்களால் அந்தத் தேசிய விருதையும், சான்றிதழையும் ராஷியின் தந்தையும் சாருவின் தந்தையும் பெற்றுக் கொண்ட போது, இருவரின் பெற்றோர்களின் கண்களிலிருந்தும் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. அந்த ஆனந்தக் கண்ணீருக்குப் பின்னால் ஏதோ ஒரு மாபெரும் துயரமும், தவிப்பும் மறைந்திருப்பதை அருள் உணர்ந்து கொண்டான்.
விருதைப் பெற்றுக்கொண்டு கீழே இறங்கிய பெற்றோர்களை நோக்கி அருள் வேகமாக ஓடிச் சென்றான். அவனது நெஞ்சு பயத்தில் படபடவென அடித்தது.
சார் அவங்க இருவரும் எங்கே? என்க….அவர்களோ கண்ணீரோடு அருளின் தோளை தட்டினர்.
அடுத்த இரண்டு மணி நேரத்தில்…விமான இயந்திரங்களின் மெல்லிய சீறல் சத்தமும், குளிரூட்டப்பட்டக் காற்றின் ஜில்லென்ற ஸ்பரிசமும் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் நுழைவு வாயிலைக் கடக்கும்போதே அருள் மற்றும் ராஜனின் உடலை ஊடுருவியது.
சிரசா மலையின் அடிவாரத்தில், மரத்தறிகள் எழுப்பும் “டக்-டக்” என்ற தாலாட்டுச் சத்தத்தையும், கஞ்சி காய்ச்சிய நூலின் மணத்தையும் மட்டுமே சுவாசித்து வளர்ந்த கிராமத்து இளைஞர்களுக்கு, அந்த டெல்லி விமான நிலையம் ஒரு வேற்றுக்கிரகத்தைப் போலத் தோன்றியது.
உயரமான பளிங்குத் தூண்கள், கண்ணாடியால் ஆன பிரம்மாண்டமான கூரைகள், காலடிகள் சத்தமின்றி நழுவிச் செல்லும் வழவழப்பான பளிங்குத் தரைகள்… சுற்றிலும் வெவ்வேறு நாட்டு ஆடை அணிந்த மனிதர்கள், புரியாத மொழிகளில் பேசப்படும் அறிவிப்புகள், கைகளில் பெட்டிகளோடு இயந்திரத்தனமாக ஓடிக்கொண்டிருக்கும் ஜனக்கூட்டம். சாதாரண நாட்களில் இந்தச் சூழல் அருளுக்கும் ராஜனுக்கும் பேரதிர்ச்சியையும், விவரிக்க முடியாத வியப்பையும் கொடுத்திருக்கும்.
ஆனால், அந்த கணத்தில்… அந்தப் பிரமிப்புகள் அனைத்துமே அருளின் மனதிற்குள் வெறும் வெற்றுச் சித்திரங்களாகவே பிம்பமிட்டன.
அருளின் மனக்கண் முன் ராஷியின் சிரித்த முகமும், தங்கை சாருவின் சுட்டித்தனமான பேச்சும் மட்டுமே வந்து போயின.
“அங்கிள்… ராஷி எங்கே? சாரு எங்கே?” என்று அவன் கேட்டபோது, பெற்றோர் கதறி அழுத அந்த ஒரு காட்சி… அருளின் உயிரை நொடிக்கு நொடி அறுத்துக் கொண்டிருந்தது.
அவர்கள் எதுவும் சொல்லவில்லை; வார்த்தைகள் வராமல் கைகளை பிசைந்து அழுகையால் மூச்சு திணறிய அந்த நிமிடமே அருளின் நெஞ்சில் இடியை இறக்கியிருந்தது. ‘அவர்களுக்கு எதுவும் ஆகிருக்கக் கூடாது… இறைவா, அவர்களை நன்றாக வைத்திரு…’ என்று அவனது அடிமனது அலறியது.
ராஷியின் தந்தையும் சாருவின் தந்தையும் எதையோ மறைக்கிறார்கள்…
தங்கள் நிலைமையை அருளுக்குப் புரிய வைக்க முடியாமல் தவித்தனர்.
உடனடியாக அவர்களைச் சென்னைக்கு அழைத்துச் செல்ல விமான டிக்கெட்டுகளை அருளின் கையிலும் ராஜனின் கையிலும் திணித்தபோது, “அங்கே போனா எல்லாமே சரியாயிடும் அருள்… நீ சென்னைக்கு வா…” என்று மட்டும்தான் ராஷியின் தந்தை தழுதழுத்தார்.
“டேய் அருளு… எனக்கு ஏதோ மாதிரி இருக்குடா…” – ராஜன் அருளின் சட்டையைப் பிடித்தபடி மெல்லிய குரலில் நடுங்கினான்.
வாழ்நாளில் பஸ்ஸைத் தவிர வேறு எதிலும் ஏறாத ராஜனுக்கு, அந்த பிரம்மாண்ட சூழலும், பாதுகாப்பு சோதனைகளும் பெரும் அச்சத்தைக் கொடுத்தன. ஆனால், அருளுக்குள் இருந்த பயம் வேறு ரகம். அது மரண பயத்தை விட கொடூரமான காதலின், பாசத்தின் தவிப்பு.
செக்-இன் முடிந்து, விமானத்தை நோக்கிச் செல்லும் ‘போர்டிங் கேட்’ வழியே நடந்தபோது, அருளின் கால்கள் தடுமாறின.
தன் காதலி ராஷி—அவள் தான் அவனுக்குள் ஒளிந்திருந்த கலைஞனை உலகிற்கு அடையாளம் காட்டியவள். அவனது ஒவ்வொரு நூலிழையின் உழைப்பையும், பரம்பரைப் பட்டுப் புடவையின் பெருமையையும் புரிந்து கொண்டு, தன் கேமரா வழியே உலகையே திரும்பிப் பார்க்க வைத்த தேவதூதி.
சாரு—அவள் வெறும் உதவி இயங்குனர் மட்டுமல்ல, அருளைத் தன் சொந்த அண்ணனாகவே பாவித்து, “அண்ணா… இந்த புடவையோட கலர் டெல்லி மேடையில மின்னப் போகுது பாரு!” என்று துள்ளிக்குதித்த செல்லத் தங்கை.
அவர்கள் இருவரும்தான் இன்று அவனுக்கு தேசிய விருதை வாங்கித் தந்திருக்கிறார்கள். ஆனால், அதை அவனோடு இணைந்து கொண்டாட வேண்டியவர்கள் எங்கே?
விமானத்திற்குள் அடியெடுத்து வைத்த போது, அங்கிருந்த பணிப்பெண் புன்னகையோடு வரவேற்பதைக்கூட அருளால் பார்க்க முடியவில்லை. ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்தான்.
விமானத்தின் கதவுகள் மூடப்பட்டன. இயந்திரங்கள் உறுமத் தொடங்கின. மெல்ல வேகமெடுத்து, தரையை விட்டு வானத்தை நோக்கி விமானம் சீறிப் பாய்ந்தபோது, ராஜன் பயத்தில் அருளின் கையை இறுகப் பற்றிக் கொண்டு கண்களை மூடிக்கொண்டான்.
விமானம் மேகங்களைக் கிழித்துக் கொண்டு உயரப் பறந்தது. ஜன்னலுக்கு வெளியே டெல்லி நகரம் மெல்லச் சிறிய புள்ளியாக மாறி மறைந்தது.
அருள் ஜன்னல் கண்ணாடியில் தன் தலையைச் சாய்த்துக் கொண்டான். அவனது கண்களில் இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் வழிந்து, விமானத்தின் இருக்கையில் விழுந்து உறைந்தது.
“ராஷி… சாரு… நான் வந்துட்டே இருக்கேன். உங்களுக்கு ஒன்னும் ஆகியிருக்காது… எனக்கு நல்லா தெரியும். நீங்க ரெண்டு பேரும் என்னை ஏமாத்த மாட்டீங்க…”
மனதிற்குள் நம்பிக்கையைத் தேற்றிப் பிடித்துக் கொண்டு, டெல்லியிலிருந்து சென்னை நோக்கிப் பறக்கும் அந்த வான்வெளிப் பயணத்தில், ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாகக் கரைய, தவிப்போடு பயணிக்கத் தொடங்கினான் அருள்.
விமானத்தின் ஜன்னல் வழியே வெளியே பார்த்த அருள், அந்த விசித்திரமான காட்சியில் சில நொடிகள் தன் பார்வையை இழந்து நின்றான்.
முன்னெப்போதும் கண்டிராத ஒரு புதிய உலகம் அது. மேகங்கள் பஞ்சுப் பொதிகளைப் போல விமானத்தின் இறக்கைகளை உரசிக்கொண்டு மிதந்தன. கீழே, பரந்து விரிந்த டெல்லி மாநகரம் மெல்ல மெல்லச் சிறிய புள்ளிகளாகவும், நூல் இழைகளைப் போன்ற சாலைகளாகவும் மாறி, இறுதியில் மேக மூட்டங்களுக்குள் முற்றிலும் மறைந்து போனது.
சாதாரண சூழ்நிலையாக இருந்திருந்தால், இந்த முதன்முதல் வான்வெளிப் பயணம் அருளுக்கு அளவில்லா வியப்பையும் மகிழ்ச்சியையும் தந்திருக்கும். ஜன்னல் கண்ணாடியில் முகத்தை ஒட்டி வைத்துக்கொண்டு, “மாமா… அங்க பாருங்கள் மேகத்தை!” என்று சிறுபிள்ளை போல துள்ளிக் குதித்திருப்பான்.
ஆனால் இப்போது… அந்தப் பஞ்சு மேகங்கள் அவனுக்கு நெருப்பு போல இருந்தது..
சூரியனின் கதிர்கள் மேகக் கூட்டங்களின் மீது பட்டுத் தங்க நிறத்தில் மிளிர்ந்த போது, அவனுக்கு ராஷியின் ஞாபகமே வந்தது. தன் தறிக் கூடத்தில், பட்டு நூல்களுக்குச் சாயம் காய்ச்சும் போது உருவாகும் அதே தங்க நிற ஒளி அது.
“அருள்… இந்த நூலோட ஒளியும், உன்னோட உழைப்பும் சாதாரணமானது இல்லை. உலகமே இதைப் பார்த்து வியக்கப் போகுது!”
அதே நேரத்தில், டெல்லியிலிருந்து பல நூறு மைல்கள் தள்ளி… சிரசா மலையின் அடிவாரத்தில் இருந்த அருளின் சிறிய கிராமம் அலைகடலெனக் கூடி நின்றது.
ஊரின் நடுவே இருந்த பஞ்சாயத்து அலுவலகத்தின் பெரிய தொலைக்காட்சிப் பெட்டியின் முன் ஊர்க்காரர்கள் அனைவரும் திரண்டிருந்தனர். அருள்மொழிவர்மனுக்குத் தேசிய விருது வழங்கப்படும் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு நேரலையாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.
டிவித் திரையில் அருள் மேடையேறுவதைப் பார்த்ததுமே, “அடடே… நம்ம அருள் டா! நம்ம ஊரு பயடா!” என்று ஊரே கைதட்டி ஆரவாரம் செய்தது.
முன்னணியில் அமர்ந்திருந்த அருளின் தந்தை முத்தையாவும், தாய் பார்வதியும் ஆனந்தக் கண்ணீரில் மூழ்கியிருந்தனர்.
தறி நெய்யும் போது கைகளில் ஏற்பட்ட தழும்புகளையும், காலம் காலமாக வறுமையோடு மட்டுமே போராடிய தங்கள் பரம்பரையின் கஷ்டங்களையும் நினைத்துப் பார்த்த முத்தையாவின் உடம்பு சிலிர்த்தது. தன் மகன் கையில் அந்தத் தங்க நிறக் கோப்பையையும், தேசிய விருதையும் மத்திய அமைச்சர் வழங்கிய போது, அவரோ தறியின் சத்தத்தைக் காட்டிலும் உரக்கக் குரலெழுப்பி அழுதே விட்டார்.
“பார்வதி… பாருடி! நம்ம பரம்பரை நெசவை, நம்ம ஊரு மண்ணை டெல்லி வரைக்கும் கொண்டு போயிட்டான்டி என் மகன்!” என்று தன் மனைவியின் கையைப் பிடித்துக்கொண்டு பூரிப்பில் திளைத்தார்.
அருளின் தாய் பார்வதி, தன் முந்தானையால் கண்ணீரைத் துடைத்தபடி, திரையில் பிரகாசித்த தன் மகனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். “என் ராசா… எம்புட்டு அழகா இருக்கான் பாரு…” என்று அவள் தாய் மனம் உருகி வாழ்த்தியது.
அதைத் தொடர்ந்து, திரையில் அந்த ஆவணப் படம் ஒளிபரப்பான போது ஊர்க்காரர்களின் வியப்பு எல்லை கடந்தது.
அவர்கள் தினமும் பார்க்கும் அதே தறிக்கூடம், நூலுக்குச் சாயம் காய்ச்சும் பானைகள், சிரசா மலையின் அழகு என அனைத்தும் அகில உலகத் தரத்தில் திரையில் மிளிர்ந்தன.
“அடடே! நம்ம வீடுகளும், நம்ம தறியும் கூடவா டெல்லி டிவியில வருது?” என்று மூத்த நெசவாளர்கள் வியப்பில் வாயடைத்துப்போயினர்.
“நம்ம கலையை அழிஞ்சு போயிடும்னு நினைச்சோமே… இப்போ இந்திய அரசாங்கமே அதைக் கொண்டாடுதே!” என்று ஊர்ப் பெரியவர்கள் முத்தையாவைக் கட்டிப்பிடித்து வாழ்த்துகளை மழை போல் பொழிந்தனர்.
கிராமத்துத் தெருக்களில் சிறுவர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். தறிக்கூடங்களில் வேலை செய்துகொண்டிருந்த நெசவாளர்கள் தங்கள் வேலைகளை நிறுத்திவிட்டு, பெருமையோடு பரஸ்பரம் இனிப்புகளைப் பகிர்ந்துகொண்டனர்.
தன் மகன் பெற்றுத் தந்த இந்தப் பெரும் புகழால், தலைமுறை தலைமுறையாகத் தங்களைச் சூழ்ந்திருந்த வறுமையும் இருளும் விலகி, தங்கள் தறிக்கலைக்கு ஒரு புதிய விடியல் பிறந்துவிட்டதாக அருளின் பெற்றோர் மெய் மறந்து பெருமிதம் கொண்டன்..!
வர்ணம் மிளிரும்…

