அத்தியாயம் 5
மன்னார் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தான், கிருபன். சாப்பிடுகிறாயா என்று கூடக் கேட்காத மாமியின் செயல், மிகுந்த மனவருத்தத்தை உண்டாக்கியிருந்தது. அந்தளவுக்கு ஏன் விலக்கி வைக்க வேண்டும்? வெறுத்து ஒதுக்க வேண்டும்? ஒருவனின் பிறப்பு ஒன்றே போதுமா, அவனைப் பற்றிய மற்ற எதையும் யோசிக்காமல் செய்ய?
மனதின் இந்த அழுத்தத்தை எல்லாம் யாரிடம் இறக்கி வைப்பான்? தன்னிலேயே தீர்க்கிறவனாக, மத்தியான உணவையும் உண்ணாமல் வீட்டுக்கு வந்து விழுந்து படுத்துவிட்டான். எழுந்து பார்த்த போது மாலை ஆறு மணி ஆகியிருந்தது. பசி வயிற்றைப் பிடுங்கியது.
வேக வேகமாக வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை என்று அனைத்தையும் கண்டதுண்டமாக வெட்டிப் போட்டு, அது வதங்கியதா என்று கூடப் பார்க்காமல், மஞ்சள் தூள், மிளகுத் தூள், சின்னச் சீரகத் தூள், மிளகாய்த் தூள் எல்லாவற்றையும் போட்டுப் பிரட்டி, இரண்டு முட்டைகளை அடித்து ஊற்றி, வறை போல் செய்தான். இரண்டு பாண் துண்டுகளை டோஸ்ட்டரில் போட்டு எடுத்து, முட்டை வறையோடு சேர்த்துச் சாப்பிட்டான்.
அதன் பிறகே, நிதானமாகச் சிந்திக்க வந்தது. துளசிக்குக் கலியாணம் பேசுகிறார் என்று சொல்லிவிட்டு வேகமாக எழுந்து போன மாமியும், அவன் பேசச் சந்தர்ப்பமே தராமல் வெளியே போன மாமாவும், அவன், அவனுடைய திருமணப் பேச்சை ஆரம்பித்து விடுவானோ என்று தான் நழுவினார்களோ? அதன் பிறகும், அவன் முகம் பார்ப்பதைத் தவிர்த்துக்கொண்டே தான் இருந்தார், ஜெயந்தி. உதட்டோரம் விரக்தியாக வளைந்தது.
மேலே இருக்கிறவனுமா அவனைக் கை விட்டுவிடுவான்?
வீட்டில் இருந்து, இதையெல்லாம் யோசிக்கப் பிடிக்கவில்லை. அரவிந்தனோடு எங்கேயாவது வெளியே போனால் நன்றாக இருக்கும் என்று நினைத்தான். அப்போது தான் அவன், இன்று, பிள்ளையார்ப் பந்து விளையாடப் போவதாகச் சொன்னது நினைவு வந்தது.
அதைக் கேட்டபோது, இன்னுமே சின்னப் பிள்ளைகள் போல் இதென்ன விளையாட்டு என்று சிரிப்புத் தான் வந்தது.
“எந்தக் காலத்திலயடா இருக்கிறீங்க? இன்னும் அதெல்லாம் நினைவு இருக்கா, என்ன?” அம்மா அப்பா இருந்த காலத்தில், புழுதி மறைத்த காட்சியாக அந்த விளையாட்டு விளையாடிய நினைவு மாத்திரமே இருந்தது அவனுக்கு.
“நீ வா! வந்தா உனக்குத் தெரியும், இது அந்தக் காலத்து விளையாட்டா இல்ல, இந்தக் காலத்து விளையாட்டா எண்டு!” என்றுவிட்டு, அரவிந்தன் சொன்ன கதையில் இவனுக்குச் சிரிப்பு வந்திருந்தது.
அவர்கள் பிள்ளையார்ப் பேணி விளையாடும் நிலம் கமலியின் சீதனக் காணியாம். அவளுக்குத் திருமணம் ஆகிவிட்டால் அந்தக் காணியில் வீடு கட்டி விடுவாளாம் என்று அவளின் நண்பர்கள் படை, அவளுக்குத் திருமணம் ஆகக் கூடாது என்று நேர்த்தி வைத்திருக்கிறார்களாம். இல்லையோ, வருகிறவன் பணக்காரனாக இருக்க வேண்டுமாம். முக்கியமாக, அவனுக்கு வீடு சொந்தமாக இருக்க வேண்டுமாம். அப்படியானவனுக்குத் தான் அவர்கள் அவளைக் கொடுப்பார்களாம்.
தகப்பன் அவளுக்கான வீட்டினைக் கட்ட ஆயத்தமான போது கமலியும் தடுத்து விட்டாளாம். ‘இப்ப கட்டுற வீடு நான் கலியாணம் கட்டுற காலத்தில பழைய டிசைன் ஆகிடும். கலியாணம் சரி வந்ததும் கட்டித் தாங்க. இல்லையோ, காசைத் தாங்க எனக்குப் பிடிச்ச மாதிரி நான் கட்டிக் கொள்ளுறன்’ என்றாளாம். அப்படிச் சொன்னதற்கு முக்கிய காரணம், விளையாடுவதற்கு இடம் இல்லாமல் போய்விடும் என்பது தானாம்.
சிறு பிள்ளைத்தனமான விசயமாகத் தோன்றினாலும், அவர்களுக்குள் இருந்த பிணைப்பு மனத்தைத் தொட்டது. மாலை ஆறு மணி ஆகியிருந்தது. எப்படியும் விளையாடி முடித்திருப்பார்கள் என்று கணித்து, அவனுக்கு அழைத்தான்.
“டேய் மச்சான், வாடா! மன்னார்க் கடல்ல போட்டிங் போவம். இப்ப போனாத் தூண்டிலும் போடலாம்.”
“அதுக்கு நாளைக்குப் போவமடா. இப்ப நீ வெளிக்கிட்டு இங்க வா.” என்று அழைத்தான், அவன்.
“டேய் என்னடா? இன்னுமா முடியேல்ல?”
“இன்னும் இருட்ட இல்லையே. நீ வா!” என்றுவிட்டு, அழைப்பைத் துண்டித்திருந்தான், அவன்.
‘ப்ச்!’ அலுப்புடன் ஃபோனை மேசையில் போட்டுவிட்டுத் தலையைப் பிடித்துக் கொண்டான், கிருபன்.
விருட்டென்று எழுந்து போன மாமா, அவரின் ஒற்றைப் பார்வையில் அறைக்குள் நழுவிய பெண்கள், ஒட்டுதல் இல்லாமலேயே பேசிய மாமி என்று, அவர்களின் செய்கைகள் மீண்டும் மீண்டும் கண் முன்னே ஓடியது. அதற்கு மேலும், அதைப் பற்றி யோசிக்கப் பிடிக்காமல், தலையை உதறிக்கொண்டு எழுந்து, வேகமாகத் தயாராகி வெளியேறினான்.
அங்கோ, அந்தக் காணியில், அவர்களின் தெருவின் இளவட்டம் முழுவதும் நின்றது. அதில், இளம் பெண்களும் அடக்கமாக இருப்பதைக் கண்டு அதிர்ந்து போனான். ‘அடப்பாவி! வெக்கமே இல்லாமப் பெட்டையளோட விளையாடுறியேடா!’ என்று, நண்பனைத் திட்டிக் கொண்டான்.
அதை விட, எப்போதுமே நேர்த்தியாகப் பார்த்துப் பழகிய கமலி, இன்று, குப்பத்து முனியம்மா போல் முழங்கால் வரை நின்ற தொள தொள ஜம்பர் ஒன்றுக்கு அரவிந்தனின் பழைய டீ ஷேர்ட் ஒன்றினைப் போட்டிருந்தாள். முடி எல்லாம் கலைந்து, பறந்து, அதைக் கொண்டையாக்கி, அந்தக் கொண்டையுமே அவிழ்ந்து தொங்கி என்று, படு கன்றாவியாக இருந்தாள். மண்ணில் உருண்டவள் போன்று, தேகம் முழுக்கப் புழுதி அப்பிக் கிடந்தது.
இவன் வந்ததைக் கவனிக்கும் நிலையில் இல்லை, அவள். வெகு மும்முரமாக, நண்பர்களுக்குள் உருவாகியிருந்த ஏதோ ஒரு பிணக்கைத் தீர்த்து வைத்துக் கொண்டிருந்தாள்.
“இனிச் சிரட்டையை ஆரும் கொண்டு ஓடுறேல்ல, சரியா? போட்டுட்டுத் தான் ஓட வேணும். ரெண்டு தரப்புக்கும் இது தான் ரூல். சரி தானே? இனி வாங்கோ!” என்று, அழைத்து வந்தாள்.
மீண்டும் விளையாட்டு ஆரம்பமானது. ஒரு ஆறு வயதுச் சிறுவனை இளைப்பாற அமர்த்திவிட்டு அவனுக்குப் பதிலாக, “நீ வாடா!” என்றான், அரவிந்தன்.
எதிரணியில் இருப்பவர்கள் எல்லோருமே பெரும்பாலும் இளம் பெண்கள். அவர்களோடு எப்படி? அவர்கள் வேறு இவனையே பார்ப்பது தெரிய உள்ளுக்குள் நெளிந்தான், கிருபன்.
“நல்ல உடுப்பு மச்சி.” உடையைச் சாட்டித் தயங்கினான்.
“நாங்க மட்டும் கூடாத உடுப்பா போட்டிருக்கிறம். ஒண்டுக்கு நாலு தரம் ரின்சோ போட்டு, நல்ல வடிவா அலம்பினாச் சரி!” கண்களில் முறைப்புடன் பதில் சொன்னாள், கமலி.
பெரும் கூச்சம் அவனுக்கு. பிள்ளையார்ப் பந்து விளையாடும் போது எதிரணியைத் துரத்த வேண்டும். பந்து கையில் கிடைத்தால் சிரட்டைகளை அடுக்கும் அவர்களை அடித்து ஆட்டமிழக்க வைக்க வேண்டும். இதையெல்லாம் எப்படிப் பெண்களிடம் செய்வது? அதுவும், பெண்களைப் பின்னால் துரத்துவதை நினைக்கவே அவனுக்கு முகம் சிவந்து விடும் போலிருந்தது. அவர்கள் அவனைத் துரத்தும் நிலை வந்தால்?
ஆனாலும், வேறு வழியில்லை. இனியும் மறுத்தால் இந்தப் பெண்கள், அவனைக் கேலி செய்தே ஒரு வழியாக்கி விடுவார்கள். இப்போதே, அவனைக் குறுகுறு என்று பார்க்க ஆரம்பித்து இருந்தார்கள். சும்மா விளையாடுவது போல் போக்குக் காட்டுவோம் என்று வந்து நின்று கொண்டான்.
ஆரம்பத்தில் உடம்பு வளைந்து கொடுக்க மாட்டேன் என்று இறுகி நின்றது. பெண்களின் முன்னே ஓடுவது ஒரு மாதிரி இருந்தது. ஆயினும், தேங்கி நிற்க முடியாமல் அந்த விளையாட்டே அவனை விரட்டிற்று. போகப் போக, சிரட்டையை அடுக்கப் பார்ப்பதையும், பந்து எறிந்ததும் சிரட்டையைப் போட்டுவிட்டுத் தலை தெறிக்க அவர்கள் ஓடுவதையும், சில நேரங்களில் விழுந்து எழும்புவதையும் கண்டு சிரித்து சிரித்து வயிறே வலித்தது அவனுக்கு. அதை விட, அவனே அறியாத ஒருவித உற்சாகம் தொற்றிக்கொள்ள, தன்னை மறந்து, அந்த விளையாட்டில் ஐக்கியமாகிப் போனான்.
ஒரு முறை, கமலி அடுக்கப் பார்க்க, அவளை நோக்கிப் பந்தை எறிந்தான். அவள் எழுந்து ஓடிய போதும் சரியாகச் சென்று அவள் காலில் பட்டது, பந்து.
“ஹேய் மச்சி, சூப்பர் டா!” கூவியபடி ஓடி வந்த அரவிந்தன், இவனைக் கட்டிக்கொண்டு ஆர்ப்பரித்தான்.

