Skip to content
அத்தனை வலியிலும் கீழே விழுந்துவிட்ட கைப்பேசியை எடுக்க முயன்று கொண்டிருந்தார், ஆரோன். மகனைக் கண்டதும் அவர் முகம் ஒளிர்ந்தது.
“ஏ …த …ன்” என்ற ஆரோன் குளறல்தான் உறைந்து நின்றவனைச் சுயத்துக்கு இழுத்து வந்ததும்.
தாமதியாது அம்புலன்சுக்கு அழைத்தவன், காருக்குள் குளிசை உண்டு என்று தகப்பன் சொல்ல விளங்காது நின்றான். அப்போதுதான் ஏற்கனவே இரு வருடங்களுக்கு முதல், அமெரிக்கா சென்றிருந்த சமயம் மைல்டு ஸ்ட்ரோக் வந்ததும்
ஸ்டென்ட் வைக்கப்பட்டதும் சொல்லி, அவனுக்கு அதிர்வு மேல் அதிர்வு கொடுத்தார், ஆரோன்.
ஆரோன் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பைபாஸ் செய்ய வேண்டும் என்றார்கள். உடனே செய்வது என்றாலும் தாம் தயார் என்றார்கள். பதைபதைத்து அழுதுகொண்டு வந்த சோஃபியாவும் பிள்ளைகளும் ஏதனும் எவ்வளவு விரைவாக இயலுமோ செய்யுங்கள் என்று சொல்லி விட்டார்கள்.
ஆரோனோ, பிடிவாதமாக முடியவே முடியாது என்று விட்டார். காரணம் கேட்டால்…
நினைவுகள் இறுக்கிப் பிடித்து நெரிக்க நகர்ந்தான், ஏதன். மிகுந்த அதிருப்தியை உள்ளத்துள் அடக்கிக்கொண்டு பைபாஸுக்கு ஒத்துழைக்கும்படி தாய் கெஞ்சுவது செவிகளில் வந்து விழுந்தது.
நெடு மூச்சு விட்டவன் கதவில் மெதுவாகத் தட்டிவிட்டுத் தலையை மட்டும் உள்ளே விட்டான்.
“மோம், எனக்கு ஒரு முக்கிய அலுவல் இருக்கு. போயிட்டு வந்திருரன்.” என்றுவிட்டு வெளி வாயில் நோக்கி நடந்தவன், வீடு சென்று திரும்பும் சகோதரனையும் தங்கைகளையும் எதிர்கொண்டான். அவர்களோடு சில நிமிடங்கள் கதைத்துவிட்டு வந்து காருக்குள் ஏறினான்.
ஒலிவியாவைப் பார்த்தே ஆக வேண்டும், அதன் பின்னரே சேர்ஜரி செய்து கொள்வேன் என்று தகப்பன் பிடியாக நிற்கவே, அவர் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அடக்கி வாசித்தாலும் தங்கள் விருப்பமின்மையைக் காட்ட ஏதனின் தாயோ, உடன் பிறப்புகளோ தயங்கவில்லை.
அப்போ, ஒலிவியா இங்கு வருவதோ உன் தகப்பனோடு உறவாடுவதோ உன் மட்டில் எவ்விதமான பாதிப்பையும் தரப்போவதில்லையா? ஏதன் மனம் சீண்டியது.
இக்கணம், இந்த விடயத்தில் அவன் நிலைப்பாட்டை அவனால் வரையறுக்க இயலவில்லை. ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிந்தது, இந்த விடயத்தில் ஒலிவியா என்ன குற்றம் செய்தாள்? இவனுக்கு அந்தப் பெண்ணில் துளியும் வருத்தமில்லை. தந்தையில் இருந்த கோபம், வருத்தம் எல்லாம் தம் இருப்பின் பயனின்மை விளங்கியதால் ஒரு கரையாக ஒதுங்கி விட்டது.
தகப்பன் எழுதிய உயிலைப் பார்த்தானே. அது கூட அவனுக்கு கோபம் தரவில்லை. தன் மொத்த உழைப்பையும் என்ன செய்யவும் தகப்பனுக்கு உரிமை உண்டே! அப்படியிருக்க, தன் ஐந்து பிள்ளைகளுக்கும் சமமாகப் பிரித்ததைப் பிழை பிடிக்க அவன் யார்? அதிலும் அவர் மகள் ஒலிவியா பற்றி நன்றாகத் தெரிந்தவர் அவளுக்குரிய பகுதியை அவள் பிள்ளைகளுக்கு என்று குறிப்பிட்டும் இருந்தார்.
இந்த எந்த விடயத்திலும் தன்னால், தன் எதிர்ப்பால் எவ்விதமான பயனும் இல்லை என்று தெரிகையில் நடப்பதைக் கண்டுவிட்டுப் போகவேண்டியதுதான் என்ற நிலையில் நின்றான், ஏதன்.
உயில் விடயம் வெளியில் தெரியவர, அவன் உடன் பிறப்புகளும் அன்னையும் எப்படி வினையாற்றுவார்கள்?
அவர் கைப்பட எழுதிய ரெசிபி புத்தகம் ஒலிவியா கைக்குச் சென்றதை இன்னமுமே சீரணிக்க முடியாது தடுமாறி நிற்கும் அவன் தமையன் பார்வைக்கு இந்த உயில் சென்றால்?
இங்கும் அவர் முதன் முதலில் உருவாக்கி, இன்று, ஏழு நட்சத்திர தகுதியுள்ள உணவகமாக எழுந்து நிற்கும் முதல் குழந்தையான உணவகத்தோடு சேர்த்து அவருக்கு மிகவுமே பிடித்த உணவகங்கள் ஒலிவியாவிற்கு என்பது தெரிந்தால்?
தலை விண்விண்ணென்று இடித்தது. நெற்றிப்பொட்டை அழுத்திவிட்டுக்கொண்டே காரைச் செலுத்தினான், ஏதன்.
*****
“உன்ர நண்பியோடு ஒரு தடவை கதைக்க ஏலுமா துர்கா?” மிகவும் முயன்று வருவித்துக்கொண்ட கம்பீரமாக இருந்தாலும் ஆரோன் குரலில் தழுதழுப்பு வெளிப்படையாகவே தெரிந்தது. தீர்க்கத்தை, கூரான பார்வையைக் காட்டி நிற்கும் விழிகளில் கண்ணீரின் பளபளப்புத் தெரிந்தது.
துர்காவிற்குகோ, அவருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. அவதியோடு பார்த்தவள் வலக்கரத்தைத் தன் இரு கைகளாலும் பொத்திப் பிடித்துக்கொண்டார், ஆரோன். மீண்டும் அதையே கேட்டார். அவர் கேட்ட விதமே ‘மறுத்துவிடாதே பெண்ணே’ என்ற வேண்டுதலை இறைஞ்சலோடு யாசித்து நின்றது.
அருகில் நின்றவனை ஏறிட்டாள் துர்கா. ஏதனோ இரும்பென இறுகி நின்றிருந்தான். அக்கணம் அவர்கள் குடும்பக் குழப்பத்தினுள் தலை குடுத்துவிட்டாளோ என்ற அசௌகர்ய உணர்வின் பிடிக்குள் அகப்பட்டுப் போனாள், அவள்.
“ஏதன்” அவளையும் மீறியே மெல்ல அழைத்திருந்தாள். நில் அழைத்துப் போகிறேன் என்றான். இல்லை இரயிலில் வருகிறேன் என்றாள், இவள். அதற்கு மிகவும் வேண்டியவன் கணக்கில் சிடுசிடுத்து உன் விருப்பம் என்று சொல்லியிருந்தான். அதன் பிறகு அவனுக்காக நின்று அவனோடுதானே வந்தாள். பிறகும் ஒற்றை வார்த்தை கதைக்கவில்லை. இவளாக அவன் தகப்பன் பற்றிக் கேட்க ஓரிரு வார்த்தைகளில் பதில் மட்டும் சொல்லியிருந்தான்.
இப்போ அழைத்தும் காதில் வாங்கிக்கொள்ளாது நிற்கிறான். நன்றாகவே முறைத்தாள். அவனோ, சலனமே இல்லாது பார்த்து நின்றான். அவளுக்கு, உன்னிடம்தானே கேட்கிறார், பதில் சொல் பார்ப்போம் என்று சொல்வதாகப்பட்டது.
“ஒலிவியாவோடதானே செஃப்? தாராளமாக் கதைக்கலாம். நீங்க ரிலாக்ஸ் ஆகுங்க ப்ளீஸ்!” என்றவள், “உங்களப் போய்ப் பாத்திட்டு வரச் சொன்னவள் ஒலிவியா.” அந்த மனிதனின் தவிப்பும் ஏக்கமும் அவளை ஆழமாகவே தாக்க, அதைச் சற்றேனும் போக்க முடிந்தால் என்று சொன்னாள்.
மறுநொடி அவள் தோளில் அழுத்தமாக ஒரு கரம் படிந்தது. வேறு யார், ஏதன்தான். திரும்பியவளிடம், “கதைச்சிட்டா வெளிக்கிடு, ட்ரெயின்ல போவதானே?” என்றிருந்தான்.
மகன் இப்படிச் சொல்ல, அவள் கரத்தில் ஆரோன் பிடி இறுகியது. சட்டென்று திரும்பியவள் பார்வை அவர் பிடிக்குள்ளிருந்த கரத்துக்குச் சென்றுவிட்டு அவர் மகன் முகத்திற்குத் திரும்பியது.
அவனிடமிருந்து நெடிய மூச்சொன்று பிரிந்து சென்றிட்டு. “டாட் , நான்தான் ஒலிவியாவோட கதைக்கலாம் எண்டனே. விடுங்க, துர்காவுக்கு இப்ப போகோணும்.” என்றான் தன்மையாகவே . ஆரோன், ‘இல்லை’ என்பதாக வேகமாகத் தலையாட்டினார்.
“துர்கா, உன்ர நண்பிக்கு கோல் பண்ணிக் குடு!” என்ற ஏதன் குரலில் எக்கச்சக்க எரிச்சல் ஒட்டி நின்றது.
“இப்ப நீங்க இதைச் சொல்லாட்டியும் நான் எடுத்துக் கதைக்கக் குடுத்துத்தான் இருப்பன்.” அவனிடம் அடிக்குரலில் சிடுசிடுத்தாள், துர்கா. அதை, அவன் மட்டுமல்ல அவளுமே எதிர்பார்க்கவில்லை. அவன் பார்வை இடுங்கியது. நெற்றி வேறு உச்சத்துக்கு ஏறியிருந்தது. துர்கா மனத்துள் திடுக்கிட்டுப் போனாள். ‘என்ன உரிமையில அவனோட இப்பிடி மல்லுக்கு நிற்கிற நீ?’ என்று மனம் அதட்டினாலும் கரம் அனிச்சையாக நண்பிக்கு அழைத்திருந்தது.
“துர்கா ! சொல்லு, செஃப் இப்ப எப்பிடி இருக்கிறார்? பாத்தனி தானே?” அழைத்தவளுக்கு ஒரு ஹலோ சொல்ல அனுமதிக்காது பரப்பரப்பாக கேட்ட ஒலிவியா, துர்காவின் அழைப்புக்காகக் காத்திருந்தாள் என்று ஏதனும் ஆரோனும் புரிந்துகொண்டார்கள்.
நண்பி சொல்லப்போகும் விசயம் அறிய இருந்தவளோ , “ஒலிவியா!” என்று வந்த குரலைச் சற்றுமே எதிர்பார்க்கவில்லை.
error: Alert: Content selection is disabled!!