• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மன்னிப்பாயா காதலே - 12

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம் 12


நாவினி ஜெர்மன் சென்று மூன்று மாதங்களாகியிருந்தன. கொஞ்சம் கொஞ்சமாக அரிக்க ஆரம்பித்து மொத்தமாகத் தின்றுவிடும் கரையானைப் போன்று, அவள் பற்றிய நினைவுகள் அவனைப் போட்டுத் தின்ன ஆரம்பித்தன.

அதைவிட அவளோடு பேசிவிட்டால் தனக்குள் இருக்கும் குழப்பங்களும் உறுத்தல்களும் தீர்ந்துவிடும் என்று நம்பித்தான் அன்று அந்தப் பேச்சை எடுத்தான். கடைசியில் அவை அதிகரித்துப்போயினவே ஒழிய எதுவும் குறைந்தபாடாக இல்லை. நிம்மதியும் சேர்ந்து போயிற்று.

அவன் கணித்ததுபோல் அவனைப் பார்க்கத்தான் ஓடி வந்திருக்கிறாள். அவனை வேண்டாம் என்று நினைத்து விலகவில்லை. அப்படியானால் அவர்களுக்குள் என்னதான் நடந்தது? யார்தான் இதற்கெல்லாம் காரணம்?

திரும்பவும் தான் எங்காவது தவறாக நடந்தோமா என்று யோசித்தான். எதுவுமே பிடிபட மறுத்தது. இன்றைய நிலையில் இது பற்றி ஒரு அளவு தாண்டி மயூரனிடம் பேச முடியவில்லை. ஒரு காலத்தில் அவன் நண்பன் மட்டுமே. இன்று மைத்துனனும். அன்றைக்கு நாவினியின் பேச்சு வந்தபோதே அவன் முகம் ஒரு மாதிரியாக மாறியதே.

சாரதா தினமுமே பேரனைப் பார்க்க இவர்கள் வீட்டுக்கு வருவார். அப்போதெல்லாம் கேசிகனை அவனறியாமல் கவனிப்பார். நாவினியையும் அவனையும் சேர்த்துவைத்தால் என்ன என்கிற யோசனை ஓடும். அதே நேரத்தில் மயூரனின் பெயர் வராமல் இதை எப்படிப் பேசுவது என்று யோசித்துத் தயங்கினார்.

அதைப் பேசாமல் தள்ளிப்போடுகிற ஒவ்வொரு முறையும் உறுத்தியது. நிறைமொழி உயிருடன் இருக்கும்வரை எப்படி இருந்தாள் என்று தெரியும். அதேபோல் அவள் தவறிய பிறகு அவன் எப்படியெல்லாம் இடிந்துபோயிருந்தான் என்றும் தெரியும். இன்றுவரை அவன் தனியாக நிற்பதும் அவளை மறக்க முடியாமல்தான்.

அப்படியிருக்க அன்று மகள் வாழ்க்கைக்காக அமைதியாக இருந்தவர் இன்று மருமகனின் வாழ்க்கைக்காகப் பேச நினைத்தார்.

“இன்னொரு கலியாணத்தைப் பற்றித் தம்பி என்னவாம்?” என்றார் பிரேமாவிடம்.

“எங்க? நானும் கேட்டுத்தான் பாக்கிறன். அசையிறானே இல்ல சாரதா.” அவனோடு பேசி பேசிக் களைத்த குரலில் சொன்னார் பிரேமா. சாரதாவை விடப் பிரேமா மூத்தவர் என்பதில் எப்போதுமே பெயர் சொல்லித்தான் விளிப்பார்.

“சஜூக்கு விவரம் தெரிய முதல் செய்தாத்தானே நல்லம்.”

“அதத்தான் நானும் தலைப்பாடா அடிச்சுச் சொல்லுறன். கேக்கோணுமே.”

“நீங்க பேசாம நாவினியக் கேட்டுப் பாத்தா என்ன?” உள்ளே தடதடக்கும் இதயத்தை மறைத்தபடி ஒரு மாதிரிக் கேட்டுவிட்டார் சாரதா.

இதைக் கொஞ்சமும் எதிர்பாராத பிரேமா கேள்வியும் குழப்பமுமாகப் பார்த்தார்.

சாரதாவுக்கு இன்னும் அதிகமாக உள்ளே படபடத்தது. ஆரம்பித்த விசயத்தை இடையில் விடவும் முடியவில்லை. “இல்ல ஒரே ஊர், நல்ல பழக்கம். அவாவும் அபி பெத்த பிள்ளை இல்லை எண்டேக்க சஜுக்குட்டிய எப்பிடிப் பாக்கோணும் எண்டு விளங்கும். அதான்…” உண்மைக் காரணத்தை விட்டுவிட்டுச் சுற்றிவளைத்தார்.

அவர்கள் இருவரையும் சேர்த்து யோசித்துப் பார்த்திராத பிரேமாவால் சட்டென்று பதிலிறுக்க முடியவில்லை. கொஞ்சம் யோசித்துவிட்டு, “நீங்க சொல்லுறது நல்ல ஐடியாவாத்தான் இருக்கு. இஞ்சயே இருப்பா எண்டா கேட்டிருக்கலாம். அவா இனி அங்கதான் எண்டு சொன்னவா.” என்று சொன்னார்.

பேரனிடம் விளையாடுவதுபோல் காட்டிக்கொண்டு, “அது அவே ரெண்டு பேருக்கையும் முந்தி விருப்பம் இருந்திருக்கு போல.” என்று இழுத்தார்.

“என்ன சொல்லுறீங்க?” பிரேமாவால் இதை மருந்துக்கும் நம்ப முடியவில்லை. இருவருமே அவர் பார்க்க வளர்ந்த பிள்ளைகள். ஒரு நாளும் அப்படி ஒரு சந்தேகம் அவருக்கு வந்ததேயில்லையே.

“இல்ல. அவே தங்களுக்கயே இதைப் பற்றிக் கதைச்சுக்கொண்டது இல்லையாம். அப்ப அவா சின்ன பிள்ளைதானே. கொஞ்சம் வளரட்டும் எண்டு இருந்திருக்கிறார் போல. அவா ஜெர்மன் போனதோட அது அப்பிடியே விடுபட்டுட்டுதாம். அதாலதான் கலியாணத்துக்கு நாங்க கேட்ட நேரம் மாட்டன் எண்டு நிண்டிருக்கிறார். அதான்… அவாக்கும் அங்க கலியாணத்துக்குப் பாக்கினம் எண்டேக்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கலாமே எண்டு நினைச்சன்.” மென்று விழுங்கி ஒரு வழியாகச் சொன்னார் சாரதா.

ஒரு பயம் பிடித்து ஆட்டாமல் இல்லை. ஆனால், ஒரு அளவிற்கு மேலே மனச்சாட்சியைத் தூக்கி எறியவும் முடியவில்லை.

பிரேமாவுக்கு இன்னுமே அதிர்ச்சி நீங்கியபாடாக இல்லை. இந்த முறை அவள் வந்தபோது கூட அப்படி எதையும் அவன் காட்டிக்கொள்ளவில்லையே.

“என்ன யோசிக்கிறீங்கள்?”

“இல்ல, நீங்க இவ்வளவு சொல்லியும் நம்பேலாமா கிடக்கு. ஆனா… அவா அங்க. தம்பிக்குக் கடை, வாழ்க்கை எல்லாம் இஞ்ச. பிறகு எப்பிடி ரெண்டு பேருக்கும் பொருந்தி வரும்? எனக்கு எண்டு இருக்கிறதும் அவன் ஒருத்தன்தான். அவனையும் அங்க அனுப்பிப்போட்டு…” என்கையிலேயே அவர் விழிகள் கலங்கிப்போயின.

இதைச் சாரதா யோசிக்கத் தவறியிருந்தார். கேசிகனுக்கு இரண்டு வயதாக இருக்கும்போதே அவர் கணவர் அவரை விட்டுவிட்டுப் போயிருந்தார். அப்படியிருக்க அவனை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு வாழ்ந்த, வாழும் பெண்மணி எப்படி அவனையும் பேரனையும் பிரிந்து வாழ்வார்?

“இன்னொரு கலியாணம் வேணவே வேணாம் எண்டு நிக்கிற தம்பி, அவா எண்டா ஓம் எண்டு சொல்லுவாரோ எண்டு நினைச்சுத்தான் இதச் சொன்னனான். இப்ப உங்கட இடத்தில இருந்து யோசிக்க நீங்க சொல்லுறது சரியாத்தான் இருக்கு. அதால நிறைய யோசிக்காதீங்கோ. நாங்க இஞ்சயே அவருக்குப் பாப்பம்.” என்றுவிட்டுப் புறப்பட்டிருந்தார் அவர்.

பிரேமாவால் அப்படி அமைதியாக இருக்க முடியவில்லை. மகன் மனத்தில் ஒருத்தி இருந்திருக்கிறாள் என்கிற எண்ணமே போட்டு அரித்தது. முதல் முறை என்ன நடந்து பிரிந்தார்கள் என்று அவருக்குத் தெரியாது. இந்த முறை அவளோடு சேர்வதற்கு வழி இருந்தும் தனக்காக யோசித்து, அவன் ஆசைப்பட்ட ஒன்றை நடத்திக்கொடுக்காமல் விடுவதா என்று அல்லாடினார்.

ஆசைப்பட்டவளை மணந்தால் அன்னை தனியாகிப்போவார் என்று எண்ணித்தான் அவனும் அதைப் பற்றிப் பேசாமல் இருக்கிறானோ என்று நினைத்த மாத்திரத்தில் சர்ரென்று கன்னத்தில் கண்ணீர் இறங்கிற்று.

அவருக்குக் கணவர் வாய்க்கவில்லை என்பது உண்மைதான். இல்லாமல் காரணமே சொல்லாமல் இரண்டு வயது மகனோடு இருந்த மனைவியை விட்டுவிட்டு ஒருவனால் ஓடிப்போக முடியுமா?

ஆனால், அவர் மகன் அருமையானவனாயிற்றே. அவருக்குச் சிறு குறையும் இல்லாது பார்த்துக்கொள்கிறவன். அவனுக்கு அவர் என்ன செய்யப்போகிறார்?

இரண்டு நாள்களாகவே அவர் முகம் சரியில்லை என்பதைக் கேசிகன் கவனித்துக்கொண்டுதான் இருந்தான். தினமும் கோயிலுக்கு வேறு போய் வந்துகொண்டிருந்தார். மனத்தில் நிம்மதி இல்லாத பொழுதுகளில்தான் கோயிலே கதி என்று கிடப்பார் என்று தெரியும். அதில் ஒரு நாள் அவரைப் பிடித்து வைத்து விசாரித்தான்.

முதலில் ஒன்றுமில்லை என்று சமாளிக்கப் பார்த்தாலும் அவரால் முடியவில்லை. அவருக்கென்று இருப்பதும் அவன் ஒருவன்தானே.

“நாவினிய உனக்குப் பிடிக்குமா தம்பி?” கூர்மையான பார்வையை அவனிலேயே நிலைக்க விட்டபடி வினவினார்.

இதை எதிர்பாராதவன், “அம்மா!” என்றான் வேறு பேச வராமல்.

“அம்மாட்ட ஒரு வார்த்த சொல்லேல்லையே நீ?”

“உங்களுக்கு ஆர் இதையெல்லாம் சொன்னது?”

“அப்ப அது உண்மை.”

“ஐயோ அம்மா. அது இப்ப இல்ல. அவள் இஞ்ச இருந்த காலத்தில.”

“எப்பவா இருந்தா என்ன தம்பி? அம்மாட்டச் சொல்லேல்லையே நீங்க. ஏனப்பு? அவா இஞ்ச வந்திருந்த நேரமாவது சொல்லியிருக்கலாமே.”

“ப்ச் அம்மா! அது சின்ன வயசில வந்த ஆச எண்டு எத்தின தரம் சொல்லுறது? அத விடுங்கோ.”

அவர் நம்பாமல் பார்த்தார். முழுவதுமாகத் தெரியாமல் விடமாட்டார் என்று புரிந்தது. அதே நேரத்தில் முடிந்தவற்றைப் பேசத்தான் வேண்டுமா என்றும் நினைத்து மௌனம் காத்தான்.

கடைசியில் அவர் விடுத்து விடுத்துக் கேட்கிற கேள்விகளுக்குப் பதில் சொல்ல இயலாமல், தமக்குள்ள உண்டான விருப்பத்தையும், அது கடிதப் போக்கு வரத்தாகத் தொடர்ந்ததையும், ஒரு கட்டத்தில் அவளிடமிருந்து பதில் எதுவும் வராது போனதையும், தன்னால் முடிந்தவரையில் தான் முயற்சித்ததையும் அவன் சொன்னபோது, அப்படி என்னாயிற்று என்று அவருக்கும் யோசனையாயிற்று.

“அவாட்ட இத நீ கேக்கேல்லையா?”

“அண்டைக்கு எங்கட வீட்டுக்கு வந்திட்டுப் போனாளே. அண்டைக்குக் கேட்டனான். ஒண்டுமே சொல்லேல்ல அவள்.”

முற்றிலுமாக முடிந்து போனதைப் பற்றிப் பேசிப் பிரயோசனம் இல்லை என்று நினைத்திருப்பாள் என்று நினைத்தார். கூடவே, “அவா அப்பிடியான பிள்ளை இல்லையே தம்பி. அது ஏன் உனக்குத் தெரியாமப் போனது? என்னட்ட ஒரு வார்த்த சொல்லியெல்லா ஐயா இருக்கோணும். அபியோட நான் கதச்சிருப்பனே. இப்ப என்னவோ யோசிக்க யோசிக்க உன்னாலதான் அந்தப் பிள்ளை இப்ப வரை கட்டாம இருக்கிறாவோ எண்டு இருக்கு.” என்றதும் ஒன்றுமே சொல்ல இயலாமல் நின்றான் அவன்.

“அவா சொல்லேல்ல எண்டு நீ விட்டிருக்கக் கூடாது. என்ன நடந்தது எண்டு கேட்டுத் தெரிஞ்சிருக்கோணும்.”

அவனும் எத்தனையோ நாள்களாக இதைத்தான் நினைத்து நினைத்து அல்லலுறுகிறான். ஆனால், கண்ணீரைத் தேக்கி அவனைப் பார்த்து முறுவலித்தவளை அவனால் எதற்கும் வற்புறுத்த இயலாமல் இருந்ததே. என்ன செய்ய?
 

Vishakini

Moderator
Staff member
“அப்பிடி வற்புறுத்திக் கேட்டு மட்டும் என்னம்மா காணப்போறன்? அதவிடப் பழசுகளக் கதைச்சு அவளைக் காயப்படுத்த விருப்பம் இல்ல. எப்பிடியும் அவளின்ர மேனகா அன்ட்ரி கட்டாயம் அவளுக்கு ஒரு கலியாணம் செய்து வைப்பா. அதால அவள் அவளின்ர வாழ்க்கையைப் பாக்கட்டும் எண்டு நினைச்சன்.”

“மூண்டு மாதத்துக்கு மேல ஆச்சே தம்பி. கடைசியா நான் கதைச்ச நேரமும் கொஞ்ச நாள் போகட்டும் எண்டுதான் சொன்னவா.”

ஆக அவரிடம் அவள் கைப்பேசி இலக்கம் இருக்கிறது. அவனுக்குத் தரத்தான் அவளுக்கு விருப்பமில்லை.

மகன் சொன்னதுபோல் அவள் வாழ்க்கையை மேனகா பார்ப்பார் என்று இனியும் பிரேமாவால் விட்டுவிட்டு இருக்க முடியும் போல் இல்லை. இவர்களுக்குள் என்ன நடந்திருக்கும் என்றே இடையறாது சிந்தித்தார்.

வெளிநாட்டு வாழ்க்கையைக் கண்டுவிட்டு ஊரையோ, ஊர் மனிதர்களையோ மறக்கிற பெண்ணாக அவரால் நாவினியை நினைக்க முடியவில்லை. இத்தனை வருடங்களுக்குப் பிறகு வந்த இந்த முறையும் எத்தனை பண்போடும் இதத்தோடும் பழகினாள்.

தங்கைக்கு நல்ல வாழ்க்கை அமையட்டும் என்று மயூரன் எதையாவது மறைத்திருந்தால்? இந்தக் கேள்வி உதித்ததும் அவர் நெஞ்சு ஒரு கணம் பதறியே போயிற்று. இல்லையா அபிராமி ஏதாவது செய்திருக்க வேண்டும்.

உடனேயே சென்று மகனிடமும் அதே கேள்வியைக் கேட்டார். ஒரு நொடி அதிர்ந்தாலும், “அவன் அப்பிடியானவன் இல்லையம்மா!” என்று உடனேயே மறுத்தான் மகன்.

“அப்ப நாவினி ஏமாத்திற பிள்ளை எண்டு சொல்லுறியா தம்பி?”

இல்லையே! அவன் உள்ளம் உடனேயே அடித்துச் சொல்லிற்று. தன் பக்கம் தவறில்லை என்று நினைத்தாலும் இன்றுவரையில் இனம்புரியா வலியொன்று அவனைத் துன்பத்தில் ஆழ்த்திக்கொண்டிருப்பதற்கு மூலகாரணமே அதுதானே.

“நானும் முதல் மயூரன் அப்பிடியான பிள்ளை இல்லை எண்டுதான் நினைச்சனான். அவர் இல்லாட்டி அபி ஏதாவது செய்திருக்கோணும். ஆனா இண்டுவரை இன்னொரு வாழ்க்கைக்க போகாம இருக்கிற பிள்ளை, அபியால ஒரு பிரச்சினை எண்டால் அத உன்னட்டச் சொல்லாம இருந்திருக்க மாட்டா. அதால இதுக்க வேற என்னவோ நடந்திருக்கு தம்பி. மயூரன் காரணமா இல்லாட்டியும் அந்தக் காரணம் மயூரனுக்குத் தெரியாம இருக்க சான்ஸே இல்லை.” என்று அடித்துச் சொன்னார் பிரேமா.

இவர்கள் இருவருக்கும் நடுவில் நின்றவன் அவன். அதுதான் அவ்வளவு உறுதியாக அவர் சொல்லக் காரணமாக இருந்தது.

கேசிகனுக்கும் அன்னை சொன்ன திசையில் யோசிக்க யோசிக்கத் தலையைச் சுற்றிக்கொண்டு வந்தது. “இதையெல்லாம் ஏன் அம்மா தூண்டித் துருவுறீங்க. எல்லாமே முடிஞ்சு போச்சு. பேசாம இருங்கம்மா.” மெல்லிய எரிச்சலோடு சொன்னவனின் உள்ளத்தில் ஒரு பதற்றம். அப்படித்தான் என்று உறுதியானால் அதற்கு அடுத்து யோசிக்கவே முடியவில்லை. நெஞ்சமெல்லாம் உலர்ந்துபோயிற்று.

மகன் மனம் படும்பாடு அவருக்கும் புரிந்தது. இன்று மயூரன் நண்பன் மட்டுமில்லை. மொழியின் சகோதரனும். ஒன்றும் சொல்லாமல் அவன் தோளைத் தட்டிக்கொடுத்துவிட்டுப் போனார்.

இப்போது கேசிகனின் நிம்மதி தொலைந்துபோயிற்று. இதற்கு ஒரு முடிவு கிடைத்தால் மட்டுமே சுவாசிக்கவே முடியும் போன்றதொரு நிலை. நேராக யாழ்ப்பாணத்துக் கடைக்கே சென்று மயூரனைச் சந்தித்தான்.

“என்னடா, வரப்போறதா சொல்லவே இல்ல.” திடீரென்று வந்து நின்றவனைக் கண்டு விசாரித்தான் மயூரன்.

ஒன்றுமே சொல்லாமல் இறுக்கத்துடன் அமர்ந்திருந்தான் கேசிகன்.

“டேய் என்னடா?” அருந்துவதற்கு வரவழைத்த குளிர்பானத்தை எடுத்து அவன் கையில் திணித்துவிட்டுத் திரும்பவும் கேட்டான்.

“இல்ல சும்மாதான்.”

“என்ன மச்சான்?”

நிமிர்ந்து அவனையே பார்த்தான் கேசிகன். கேட்கவென்றே வந்துவிட்டுக் கேட்பதா வேண்டாமா என்று மதில் மேல் பூனையாக நின்றான்.

“என்னடா?”

“எனக்கும் நாவினிக்குமிடையில தொடர்பு அறுந்துபோனதுக்கு என்ன காரணமா இருக்கும் எண்டு உனக்கு ஏதும் தெரியுமா மச்சான்?” என்றான் அவனையே பார்த்து.

மயூரன் முகத்தில் அப்பட்டமான அதிர்ச்சி. “மச்சான்!” என்றான் தடுமாறி.

“இந்த மச்சான் உன்ர தங்கச்சியக் கட்டினதாலயா, இல்ல உயிர் நண்பனா பழகினதாலயா?”

இப்போது மயூரனுக்கு அந்த மச்சான் கூட வரமாட்டேன் என்றது.

“நடந்த எதுக்கும் நீ காரணம் இல்லை எண்டு சொல்லு மச்சான் ப்ளீஸ்.” ஒன்றாகவே வளர்ந்து, ஒன்றாகவே படித்து, உறவாகி, தொழில் கூட ஒன்றாகப் பயணிப்பவன் பொய்த்துவிடக் கூடாது என்று அவன் உள்ளம் அடித்துக்கொண்டது.

“கேசி டேய்!” மயூரன் தடுமாறினான்.

இது போதாதா? அவன் முகத்தில் வெறுப்பும் வேதனையும் சேர்ந்து படர்ந்தன. ஏன் இப்படி ஒரு துரோகத்தைச் செய்தாய் என்று பார்த்தான்.

“ப்ளீஸ் மச்சான்! என்னை அப்பிடிப் பாக்காத!”

“நீ இதச் செய்திருக்கக் கூடாது மயூரன். அதெல்லாம் நடந்து எத்தினையோ வருசமாச்சு. ஆனா இதுக்கெல்லாம் நீ காரணமா இருப்பியோ எண்டு ஒரு நாள் கூட நான் யோசிச்சதில்ல. அவ்வளவு நம்பிக்கை. என்னை நம்பினவளை, நான் ஆசையா விரும்பினவளக் கூடப் பிழையா நினைச்ச நான், உன்னச் சந்தேகப்படவே இல்ல.” என்றவனுக்கு இப்போது தன்னை நினைத்தே கசப்பாயிற்று.

“என்னைப் பற்றி எல்லாம் தெரிஞ்சும் தங்கச்சியக் கட்டித் தந்தவன்ர நம்பிக்கையை உடைக்கவே கூடாது எண்டு நினைச்சு நினைச்சு மொழியோட வாழ்ந்தவனடா நான். ஆனா நீ? சே!” வெறுப்புடன் மொழிந்தவனைக் கண்டு சுக்கு நூறாக நொறுங்கிப்போனான் மயூரன்.

“எப்பிடியடா இப்பிடி நடக்க உனக்கு மனசு வந்தது. இண்டு வரைக்கும் நாவினிய நினைச்சு என்ன பாடு படுறன் எண்டு எல்லாரையும் விட உனக்குத்தானேடா நல்லா தெரியும். ஆனாலும் எப்பிடி முடிஞ்சது உன்னால? மொழி… என்ர மனுசிக்காக மட்டும்தான் உன்னைச் சும்மா விட்டுட்டுப் போறன்.” வெறுப்பும் கசப்புமாகச் சொல்லிவிட்டு எழுந்தவனை,

“அவளுக்காகத்தான்டா நானும் இதையெல்லாம் செய்தனான்.” என்றவனின் பேச்சுத் தேக்கிற்று.

“முதல் நானும் இந்தக் கலியாணம் வேண்டாம் எண்டுதான் சொன்னனான். அது உனக்கே தெரியும். அப்ப அவள்தான் வந்து அவளுக்கு உன்னைப் பிடிக்குமாம் எண்டு சொன்னவள். உன்னைக் கட்டினா சந்தோசமா இருப்பாளாம் எண்டு சொன்னவள். கூடப்பிறந்தவள் கண்ணில தண்ணியோட வந்து தன்ர ஆசையச் சொல்லேக்க ஒரு அண்ணனா என்னை என்ன செய்யச் சொல்லுறாய்? பிழைதான். எதையும் நான் தெரியாம செய்யவும் இல்ல. ஆனா உனக்குத் துரோகம் செய்யோணும் எண்டு நினைச்சுச் செய்யேல்ல மச்சான்.”

அப்படியே தொய்ந்துபோய் அமர்ந்துவிட்டான் கேசிகன். அவளுக்கு முதலே தன்னைப் பிடிக்கும் என்று அவனுக்கும் தெரியும். திருமணத்தின் பின் அவளே சொல்லியிருக்கிறாள்.

எல்லாம் சரி. அவனை மட்டுமே நம்பிக்கொண்டு இருந்தாளே ஒரு பெண். அவன் தன்னை மறந்திருக்கவே மாட்டான் என்று நம்பிக்கொண்டு அவன் வீடு வரை ஓடி வந்தாளே. அவளுக்கு அவனால் என்ன நியாயம் செய்துவிட முடியும்?

அவனை மனைவியோடும் அவள் வயிற்றில் குழந்தையோடும் கண்டபோது எப்படி இருந்திருக்கும்? தவறு செய்யாமலேயே தண்டிக்கப்பட்ட குழந்தையாகக் கண்ணீருடன் நோக்கியவள் காரணம் கேட்டுக்கொண்டு கூட வரவில்லையே? தலையைப் பற்றிக்கொண்டு மேசையின் முன்னே அமர்ந்திருந்தவனின் கண்ணீர் சொட்டுச் சொட்டாக மேசையில் விழுந்து சிதறியது.

“கேசி டேய்!” மயூரன் வந்து அவன் தோளைப் பற்றினான். அந்தத் தோளாலேயே அவன் கரத்தை உதறித் தள்ளினான் கேசிகன்.

“மச்சான், நான் செய்தது பிழைதான். ஆனா, இதுக்கு நான் மட்டுமே காரணமா இருக்கேலாது. நீ என்னட்ட தந்த கடிதங்களையும் அவளிட்ட இருந்து வந்த அவளின்ர கடிதங்களையும் நான் கிழிச்சுப் போட்டது உண்மைதான். உன்ர பழைய ஃபோனை எடுத்து மறைச்சு வச்சதும் நான்தான்…” என்றதும் சரக்கென்று நிமிர்ந்து அவனை வெறித்தான் கேசிகன்.

அன்றைக்கு நீ ஏன் என்னைத் தொடர்புகொள்ளவில்லை என்று கேட்டபோது கண்ணீருடன் புன்னகைத்தவள் கண்களுக்குள் வந்து நின்றாள். அவன் நினைப்பது சரியானால் அவன் எப்படித் தன்னால் முடிந்த அத்தனை வழிகளிலும் முயன்றானோ அப்படி அவளும் முயன்றிருப்பாள். நிச்சயமாக!

இவனிடமிருந்து ஒரு தகவலும் வரவில்லையே என்று எத்தனை துடித்திருப்பாள்? எவ்வளவு ஏங்கியிருப்பாள்?

ஆனால் இவன், செய்வதை எல்லாம் செய்துவிட்டுத் தன்னை நியாயப்படுத்த முனைகிறான். அவன் முகம் பார்க்கவே பிடிக்காமல் போய்விட, விருட்டென்று அங்கிருந்து வெளியேறினான்.
 

EswariSasikumar

Active member
பரதேசி.... கூடவே இருந்து குழி பறிச்சிருக்கானே... மொழி தங்கச்சி... அப்போ இவளுக்கு செய்தது நம்பிக்கை துரோகம் இல்லையா 😡😡😡😡
 

aymaan

New member
மொழி உயிருடன் இருந்திருந்தால் கேசிகன் நாவினியை பற்றி யோசித்து கூட இருக்க மாட் டான் தானே mam அப்போ இப்போ எதுக்கு உருகுறான். I understand that it is just a story mam but unable take it. Sorry mam.
 

Chitra ganesan

Active member
மொழி இருந்திருந்தால் இதே போல மயூரனிடம் கேட்டு இருப்பானா கேசி...நடந்தது நடந்து விட்டது என்று ஒரு சாரியுடன் தளுக்கி கொண்டு போய் இருப்பான் கேடு கெட்ட கேசி..கேசி அம்மாக்கு வந்த சந்தேகம் கூட இவனுக்கு வரலேயே...இவனுக்கு வாய்ப்பு எப்ப என்று எதிர்பார்த்த மாறி இருந்துட்டு
மத்தவங்க மேலே குற்றம் சொல்லிட்டு இருக்கான்.
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Members online

No members online now.
Top Bottom