நான் அறிய நீ - 13

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,543
6,383
113
கோட்டை ரயில் நிலையம் இரவின் கனம் சுமந்து இருந்தது.



கோணி மூட்டைகள் சரக்கு ரயில் பெட்டிகளில் ஏற்றப் படும் சத்தமும் சிங்கள மொழி ஏவல்களும், எங்கோ தூரத்தில் ரயில் வரும் சத்தமும் இதுவும் தூங்கா நகரம் எனக் கூவியது.



புகையிரத மேடையில் வீசிக் கிடந்த வெற்று ஐஸ்கிரீம் கோப்பையை காலால் தட்டில் தட்டி குப்பைத்தொட்டி புறம் நகரத்தியபடி ஃபோன் பேசிக் கொண்டிருந்தான் வரோதயன்.



காத்திருப்பு ஆசனத்தில் பிரார்த்தனா அமர்ந்திருந்தாள். வாடை காற்று குத்தும் கையையும் சேர்த்து துப்பட்டாவால் மூடி இருந்தவள் கைப்பையை மடியில் வைத்திருந்தாள்.



வாய் பூட்டு போட்டுக் கொண்ட மௌனத் திரைக்கு பின்னால் நிச்சயம் ஒரு மீன் சந்தையே இயங்கும்.



பிரார்த்தனாவினுளும் கூவி கூவி விற்கிறது.



வசந்தாவுடன் தங்கச் சொல்லி அவளே சொன்ன தாய் போயிருப்பாளா? மருந்து மாத்திரை மறக்காமல் எடுத்து சென்று இருப்பாளா...



'எங்க போனிங்க எல்லாரும், கதவு பூட்டி கிடக்கு?' என்று சற்று முன்பு அழைத்துக் கேட்ட அரை போதை தகப்பன் பூத் தொட்டிக்கடியில் மறைத்த சாவியை கண்டு பிடித்து இருப்பானா.. கதவு திறந்தவன் சரியாக பூட்டி இருப்பானா..



எந்தப் பலனும் இல்லாது நான் ஏன் உன்னோடு அவளுக்காக அலைய வேண்டும் என்ற தம்பியார் என்ன போக்கில் எங்கே அலைகிறாரோ..



இத்தனையோடும், இங்கு எங்கோ தான் நிலானி இருக்கிறாள் அவளை நெருங்கி விட்டோம் என்று உள்ளுணர்வு கட்டியம் கூறுகிறது..



வெகு நேரமாய் ஃபோன் பேசும் வரோதயன் பற்றியும் சிந்தனை சுழன்றது.



பொறுமையாக வருகிறான். கரிசனமாக நடந்து கொள்கிறான். ஃப்ளாட்பாரத்தில் துணையாக நிற்கிறான்.



ஒரு லார்ச்சில் அறை எடுத்து ஓய்வு கொள்ளும் அவசியம் உண்டு இருவருக்கும்.



இந்த பனியில் சாமத்தில் நான்கு மணிக்கு புறப்பட இருக்கும் சிலாபம் ரயிலுக்கு காத்திருந்து நேரத்தை கடத்தும் இவளுடைய சுயநலமான தீர்மானத்துக்கு தலை அசைத்து இருக்கிறான்.



ஒரு இடத்தில் வெறுப்பு காட்டவில்லை. களைப்பை வெளிப்படுத்தவில்லை.



இதற்கெல்லாம் காரணம் என்னவென்று யோசிக்கலாம்..



தவிர்த்தாள்.



உன்னை அறிந்து கொள்ள ஆவல் என்றவன் கூடவே இருந்து அறிந்து கொள்ளட்டும். என் முதுகில் எத்தனை மூட்டை அழுக்கு, என் குடும்பத்தில் எத்தனை எத்தனை கிழிஞ்சல் என்று தெரிந்து கொள்ளட்டும்.



இந்நேரத்தில் ஒரு முடிவுக்கு வந்திருப்பான். நிலானியை சந்திக்கும் தருணம் அவனது அபிப்பிராயம் அதளபாதாளத்திலும் வீழலாம்.



ஹ்ஹ்ம்ம்..



ஸ்டேஷன் கடைகளின் ஓரத்தில் தார்பாய் விரித்து சுருண்டிருந்த யாசகர், அடுத்த ரயிலுக்கு விநியோகிக்க கோப்பி தயாரிக்கும் நடமாடும் கடை வியாபாரி, தூரம் இருந்து வந்து அகாலத்தில் சிக்கிக் கொண்டு அழைத்து செல்ல ஆள் வரக் காத்திருக்கும் வயதான தம்பதி, யாத்திரை செல்ல வந்த வெள்ளையுடை குழு என இந்த அகன்ற புகையிரத நிலையத்தில் அவளுக்கு தைரியம் பல வகையில் கிடைக்கிறது.



இளம் காதல் ஜோடி ஒன்று.. காதல் ஜோடியா அல்லது, வேறு தேவையா தெரியவில்லை.. அநாகரிக நெருக்கத்தில் விளக்கு வெளிச்சம் விழாத ஒதுக்கத்தில் நெளிவதும் ஒரு அங்கமாக..



அவளைப் போல அங்கிருந்த அவர்களும் விடுதி தேடவில்லை. போக்கு வரத்து சிரமம் இருக்கலாம். பணக் கஷ்டமும் இருக்கலாம்.



பணம் பற்றி எண்ணும் போது, கொழும்பு வந்து இறங்கியதில் இருந்து உண்ணக், குடிக்க விரோதயனே பர்ஸை கரைப்பது ஒரு ஓரத்தில் உறுத்துகிறது.



வாலட்டை எடுக்க முன்பே கணக்கு முடித்து விடுகிறான் அவன்.



பிரதியுபகாரமாக என்ன செய்யலாம்?



‘இது உங்களுக்காக கொழும்புல வாங்கி வந்தன்’ என்று சொல்லிக் கொடுக்க ஒரு நல்ல புடவை வாங்கிக் கொடுக்க வேண்டும் அவன் தாய்க்கு.



அவனைப் பற்றி சிந்திக்கும் போது அவனையே பார்த்தாள். கவனித்தவன் அலைபேசியை காதில் இருந்து அகற்றி வந்தான்.



அமர்ந்தவன் அவனை அவள் தேடுவதாக உணர்ந்து என்ன எனக் கேட்க,



"நித்திரைய சமாளிக்க கஷ்டப்படுறிங்க போல.."



"உங்களுக்கு சொக்குதா?"



"இல்ல எனக்கு வரல்ல.. வராது..நீங்க கொஞ்சம் சாஞ்சி இருக்கலாம்.."



"பரவால்ல.."



"ஃபோன்ல அம்மாவோ.. வேலை முடிஞ்சா எண்டு கேட்டாங்களோ?"



புன்னகையுடன் முதுகை சாய்த்து நெடிய கால்களை அகட்டி நீட்டியவன் "அம்மா நேரத்துக்கே படுத்துட்டா.. இது பஞ்சு.."



"பஞ்சு? தம்பியா?"



"எனக்கு தம்பி இல்லயே!"



"சொரி! ஒரு அண்ணன் மட்டும் தானே என.."



'ம்.. பஞ்சு என்ர மாமிட மகன். அவன் நான் இன்னொருவர் ராசு. மூணு பேரும் ஒரு செட். பஞ்சலிங்கம் சோளக்காட்டுக்கு காவலுக்கு போய் நிக்கான். அவனுக்கு நித்திர வரக் கூடாது. எடுத்து வச்சி அலம்பிக் (அலட்டிக்) கொண்டிருந்தான்.."

பஞ்சு ராசு பற்றிக் கேட்டவளுக்கு ரமணி ஞாபகம் வந்தது. தன்னை கொஞ்சமாக சிரிக்க வைக்கும் ஜீவன் அவர். அடுத்தடுத்து அழைத்து தொந்தரவு செய்யவில்லை. குறுஞ்செய்தியாக அனுப்பி கொண்டிருந்தார்.



'எனக்கு உன் பயணத்துடன் உடன்பாடில்லை. உருப்படி இல்லாத உறவைத் தேடிப் போவது பயித்தியக்காரத் தனம். சொல்லிப் பார்த்தேன். தடுக்க முடியவில்லை. கிளம்பி விட்டாய். கவனம்! கவனம் நீ! சீக்கிரம் திரும்பி வா. நான் அம்மாளாச்சியை மனம் உருக வேண்டிக் கொண்டிருக்கிறேன் உனக்காக' தனது தவிப்பை அக்கறையை பல விதங்களில் எழுத்தாக அனுப்பிக் கொண்டிருக்கிறார்.



ஃபோன் எடுத்து நேரம் பார்க்க, மூன்று முப்பது. சிலாபம் ரயில் வந்தது. பயமும் சேர்ந்து சுரந்தது.



ரெஸ்ரூம் போனவள் பல் துலக்கி முகம் கழுவி வந்தாள். சூடாக கோப்பியுன் காத்திருந்தான் வரோதயன். பருகியதும் பெட்டியில் ஏறி அமர்ந்தனர்.



தலைநகர் கொழும்பில் இருந்து 80 கிலோமீட்டர் வடக்கே அமைந்துள்ள கடற்கரை நகரம் சிலாபம்.



வடமேல் மாகாணம் பழங்காலத்தில் முத்துக்குளிப்பிற்கு பெயர் போனது. பெரிய மீன்பிடி துறைமுகம் இன்றும் சிலாபத்தில் உண்டு.



பஞ்ச ஈஸ்வரங்களுள் ஒன்றான உலகம் புகழ்பெற்ற முன்னேஸ்வரம் கோவில் அங்கே அமைந்துள்ள. ராமர் சிவனை வழிபட்ட இடம் எனும் ஐதீகமும் உடையது.



சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பறங்கியர் என கலந்து வாழ்கின்றனர். மீன்பிடி, தென்னை, இறால் வளர்ப்பு முக்கிய தொழில்.



விடிந்தது சிலாபத்தை அடைந்தனர். ஸ்டேஷன் விட்டு வெளியேறி முட்சக்கர வண்டி தேடும் போது, எதிரில் உள்ள சைவ உணவகம் கண்ணில் பட்டது. "சாப்பிட்டு போவம்!" என்றான் வரோதயன்.


"

நீங்க சாப்பிட்டு வாங்க.. நான் இங்க இருக்கிறன்.." என அமர இடம் தேடியவளை பார்த்து நெற்றி சுரண்டினான்.


"பரவால்ல நீங்க போங்க வரோதயன்"

"

தங்கச்ச தேடத் தான் வேணும். பட்டினி கிடந்து தேடணும் எண்டு இல்ல. போற நாம எங்க எப்புடி அலைய போறம் எண்டு தெரியாது சைவக் கடையா இருக்கு. டீயாவது குடிச்சிட்டு போவம்.." வற்புறுத்தி அழைத்துச் சென்றான்.



டீயுடன் ஒரு உழுந்து வடையும் உட்கொள்ளவதற்கு தொண்டை வெகுவாக அவஸ்தை பட்டது.



வரோதயன் இட்லி சட்னி சாம்பாருடன் நிறைவாக சாப்பிட்டு கை அலம்பியதும் அவனது பசி உணர்ந்தவளுக்கு சங்கடம் இடுக்கியது.



ஆட்டோ காரன் முகவரி சிட்டையை பார்த்து சில ஆயிரங்கள் கேட்டான் கொண்டு விடுவதற்கு.



ஒத்துக் கொண்ட வரோதயன் பிரார்த்தனா ஆட்சேபித்து வார்த்தை வளர்ப்பாளோ என்று தயங்க, இதய லயம் கெட்டிருந்தவள் உள்ளே ஏறி அமர்ந்து விட்டாள்.



பஸ்ஸில் செல்ல வேண்டிய தூரம் அது. ஆட்டோ இவர்களை சுமந்து சென்று காம்பவுண்ட் வீட்டு வரிசைத் தெருவில் நிறுத்தியது.



"இது தான் ரோட்.." என்று பணத்தை வாங்கிக் கொண்டு போனது.


தெருவில்

பாடசாலை சிறுவர்கள் நடையிலும் சைக்கிள்களிலும் கடக்க, பிள்ளையை கை பிடியில் அழைத்து வந்த பெண்மணியிடம் விசாரித்தான் வரா.



நல்ல வேளை அவருக்கு தெரிந்து இருந்தது. அடையாங்கள் கூறி நேரே கை காட்டினார்.



வீட்டில் ஷ்யாம் இருப்பானா, நிலானி நிற்பாளா.. இருவரும் இல்லாமல் வேறெவரும் இருந்தால்?



"ஒழுங்கைல திரும்பி மூணாவது வீடு எண்டு சொன்னாங்க.. இடது கை பக்கமா இதானே மூணாவது" என்று குத்து மதிப்பாக அந்த வீட்டு கேட்டில் தட்டினான் வரோதயன்.


வீட்டு முற்றத்தில் பிள்ளைக்கு ஜடை போட்டுக் கொண்டிருந்த

பெண் வந்தாள். "யாரு?" என்றாள்.



"நாங்க ஷ்யாம் சேர்ர பார்க்க வந்திருக்கிறம்!"



வரோதயனை அச்சம் கலந்து நோக்கியவள் அவன் பின்னால் நின்ற பிரார்த்தனாவை சந்தேகமாக பார்த்தாள்.



"அம்மா, அப்பா கூப்பிடுறார்.." என்று உள்ளிருந்து பெண் பிள்ளை அழைக்க, "அப்பாவ வரச் சொல்லுங்க துஷிமா.." என்றாள் இவள்.



ஏழெட்டு இருக்கும் வயது. வெள்ளை சீருடையில் பள்ளிக் கூடம் செல்ல ஜடை போட்டிருந்த பிள்ளை அரை ரவுசர் டீஷர்டில் ஒருவனை கூட்டி வந்தது. பொண்டிங் தாடி கலைந்த தலையுடன் வயது முப்பது முப்பத்தைந்து சொல்லலாம்.



"யாரு?"



"ஷ்யாம்?"



"ஓம்.."



பிரார்த்தனா வரோயனை தாண்டி முன் வர, அவள் கரம் பற்றித் தடுத்து "உள்ளுக்கு வந்து கதைக்கலாமா நாங்க?" என்று தணிவாக கேட்டான் வரோதயன்.



அந்த தன்மை அவனை ஒத்துக் கொள்ள வைத்தது.
 

Author: Vishakini
Article Title: நான் அறிய நீ - 13
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,543
6,383
113
சிறிய காம்பவுண்ட் வீடு தான். இரண்டு படுக்கை அறை கிச்சன் ஹால் என கைக்கடக்கமாக அமைந்திருந்தது.



சோஃபாவில் உட்கார்ந்தனர்.



"யார் அம்மா இவங்க.." பெண் பிள்ளை கிசுகிசுப்பாக கேட்க, "கொலெம்போ இருந்து வத்திங்களா அங்கிள்?" என்று சிறுவன் கேட்டான். அவனுக்கு நான்கைந்து இருக்கும் வயது.



"நீங்க கூட்டிட்டு போங்க மேகலா.. நான் பார்த்துக் கொள்றன்" என்றான் ஷ்யாம்.



தயங்கி தயங்கியே அந்த பெண் பிள்ளைகளை அழைத்துப் போனது.



அவர்கள் படி இறங்கியதும் "எங்க இருந்து வாறிங்க.. உங்கள எனக்கு இதுக்கு முதல் தெரியாது.."



"எங்களுக்கும் தான்.." என்ற வரோதயன் பிரார்த்தனாவை பார்த்தான்.



"நிலானி எங்க?" என்ற பிரார்த்தனாவின் குரல் உணர்வுக் குழம்பாக ஒலித்தது.



ஷ்யாமில் அதிர்ச்சி தெரிந்தது. இவர்கள் நிலானி சம்பந்தப்பட்டவர்கள் என்று புரிந்தது அவனது கொஞ்ச நஞ்ச பயமும் விலகி இருக்க வேண்டும்.



"நிலானிட ரிலேஷனா நீங்க?"



"நான் இல்ல, இவங்க. சொந்த தங்கச்ச தேடி வந்திருக்கிறாங்க.."



"எங்க நிலானி! இங்கையும் இல்லையா அவள்?" பிராத்தனாவின் குரல் சிரமப்பட,



"நிலானி இங்க இல்ல. ஆனா எங்க இருக்கிறா எண்டு தெரியும். ஒரு நிமிஷம்" என உள்ளே சென்று அலைபேசியுடன் வந்தவன் திரையில் தடவிக் காதில் வைத்து "நிலானி இல்லையா?" என்று கேட்டு "அவளுட்ட குடு" என்று பிரார்த்தனாவிடன் அலைபேசியை நீட்டினான்.



எட்டி வாங்கி கரம் நடுங்க, காதில் வைத்ததும் "ஹெலோ!" என்றது நிலானியின் குரல்.



வயிறும் நெஞ்சும் விம்ம பிரார்த்தனா பேசாமல் இருந்தாள்.



"ஹெலோ ஹெலோ" என்று பல முறை சொன்னவள் "என்ன ரிஷி, ஷ்யாம் சேர் சத்தமே இல்ல.. கோல் எடுத்துட்டு தூங்கிட்டாரா?" என்று அந்தப் பக்கம் சொன்னாள்.



"என்ன கட் ஆகிட்டா? தாங்க!" என எதிரில் நிற்பவன் கேட்க அவனிடம் அலைபேசியை கொடுத்தவள் எழுந்து வெளியேறி விட்டாள்.


எக்ஸோரா, கடதாசி பூச் செடிகளை காம்பவுண்ட் சுவரோடு நட்டு நறுக்கி இருந்தனர். செவ்வந்தி பூ செடிகள் மஞ்சள் செம்மஞ்சளில் பூத்திருந்தன. ரோஜா தொட்டிகள் வட்டமாக அமர்ந்து பட்டன் சைசில் மலர்ந்திருந்தன.

ஆடவர் முன் அழுது விடுவோமோ என்று பயந்தே வெளியேறி இருந்தவள் பூச் செடிகளை வெறிக்கவே செய்தாள்.

'ஹெலோ!' என்ற நிலானியின் குரலில் உற்சாகம் ததும்புகிறது.

'ஷ்யாம் சேர் தூங்கிட்டாரோ கோல் எடுத்துட்டு..' என்று கேலியும் கிண்டலுமாக கேட்கிறாள். அருகில் உள்ளவனுடன் நகைச்சுவையாக கதைக்கிறாள்.

என்ன பெயர் சொன்னாள்?

ரிஷி!

அவன் யார்?

அவன் தான் காதலனா?

அப்போது இவன்?

ஷ்யாம் எனும் இவன்?

இவனுக்கு மனைவி குழந்தைகள் இருக்கிறது.

அடுத்தவனிடம் நேரம் கேட்பதற்கு கூட திணறி விடுபவள் நான்.

நிலானி எப்படி இப்படி பழகினாள்?

நிலானியும் நானும் ஒன்றில்லை தான்.

நிலானிக்கு குறையொன்றும் இல்லை. அவள் நன்றாக தான் இருக்கிறாள்.

எரிந்த வயிறு குளிர,

பயித்தியம் போல வரோதயனை கூட்டிக் கொண்டு நகர வீதிகளில் அலைந்த நான் தான் புத்தி சுவாதீனம் உடையவள்.

நெஞ்சு உலர்கிறது.

ஏழு மணிப் பொழுது இளங்காலை காற்று வீசிய பூந்தோட்டத்து மத்தியில் நின்ற பெண்ணை தேடி வந்தான் வரோதயன்.

ஒற்றைப் பக்கமாக வழிந்த துப்பட்டாவை சரி செய்து அவனைப் பார்த்தாள்.

"நான் சொன்னனே எனக்கு தப்பா படல்ல, கடைசி வரைக்கும் போய் பார்ப்பம் எண்டு.. நீங்க பயந்த மாதிரி ஒண்டும் இல்ல. உங்கட தங்கச்சி சேஃபா தான் இருக்காள்.."

பிரார்த்தனா தலை அசைத்தாள்.

"ஏன் கதைக்கல்ல.. கேட்டு இருக்கலாமே.. மனசுல உள்ள ஆதங்கத்த காட்டி இருக்கலாம்.. கோபத்த கொட்டி இருக்கலாம்.."

தோளை தூக்கி கை விரித்தவளின் பாவனை அவனை பாவமாக பார்க்க செய்தது.

"கடைசியா போன வீட்டுல அந்த வயசானவர் சொன்னாரே.. அவன் உத்தமன் இல்ல நீ தேடி வந்து பாக்குற அளவுக்கு எண்டு. அத நினைச்ச இப்பவும் உடம்பு நடுங்குது எனக்கு. பயம் பயம் மட்டும் தான். இளம் பெண் கொலை, இளம் பெண் தற்கொலை, இளம் பெண் சடலம் மீட்கப்பட்டது இந்த மாதிரி நியூஸ் கேள்வி பட்டிருவனோ எண்டு பயந்தே ஃபோனே பார்க்க இல்ல நான்.. ஆனா இவள்.." தொண்டை அடைக்க உதட்டை கோணினாள்.

"ரிலாக்ஸ் பிரார்த்தனா.." அவளை நெருங்கி வந்தான் வரோதயன்.

சுதாரித்து "இங்க என்ன நடக்குது வரோதயன்? இவன் தானே ஷியாம். நாம தேடி வந்த இவன் இங்க இருக்கான். அவள் எங்கையோ எவனோடவோ இருக்காள்.. எனக்கு விளங்கல்ல வரோதயன்.."

"எல்லாம் விளக்கமா சொல்லிட்டார் ஷ்யாம். நீங்க வெளில வந்த கேப்ல.."

அவனுக்கு என்ன மரியாதை என நினைத்தவள் "என்ன சொன்னான்?"

"ஷ்யாம் இதுல சம்பந்தப்பட்டிருக்கார். ஆனா அவருக்கும் உங்கட தங்கச்சி லவ் பண்ணதுக்கும் சம்பந்தம் இல்ல. அப்டி எண்டு அவர் சொல்றார்.."

பிரார்த்தனாவுக்கு கெட்ட வார்த்தை துடித்தது நாவில். தினம் தினம் வருணன் வைக்கும் பிரசங்கத்தில் பல தூசண வார்த்தைகள் அவளுக்கு மனப்பாடம்.

எதிரில் உள்ளவனை நினைத்து கோபத்தை அடக்கிப் பொறுமை பேண,

"ஷியாமுக்கு கல்யாணம் பேசின பிள்ளைட தம்பி தான் ரிஷிகேஷ். ரிஷிகேஷ தான் உங்கட தங்கச்சி நிலா விரும்பி இருக்கா. ரிஷிகேஷ் ஷ்யாம் ரெண்டு பேரும் அத்தை மாமா பிள்ளைகள். ரிஷி ஷியாமோட க்ளோஸ். வேலை விஷயமா அடிக்கடி திருகோணமலை வந்திருக்கான். ஷியாமோட தங்கி இருக்கான். அங்க தான் ரிஷிக்கும் நிலாக்கும் பழக்கம் ஆகி இருக்கு"

"ரிஷியிட அக்காவ ஷியாம் கல்யாணம் செய்ற எண்டு சின்ன வயசில இருந்து முடிவாகி இருந்து இருக்கு. இவர் அந்த முடிவுக்கு எதிரா, விருப்பினவங்கள கல்யாணம் கட்டி இங்க கூட்டிட்டு வந்திருக்கிறார்.."

"இவன்ர காதல் கதை நமக்கு தேவை இல்ல. நிலானி லவ் பண்ணது இவனுக்கு தெரியாம இருக்குமா? வீட்ல உள்ளவங்கள பத்தி துளி கவலை படாம சேர்த்து வச்சிருக்கான். சரி போகுது, ஃபோன் வேலை செய்யல்ல அவள்ட. அம்மா அக்கா ரெண்டு பேர் பயந்து செத்திருக்கம் இந்த நாலைஞ்சு நாள்ள. அதெல்லாம் இவனுக்கு தெரியுமா? இவனுக்கு என்ன மரியாதை. நீங்க சாவகாசமா கதை பேசிட்டு வந்திருக்கிறிங்க"



"ரிலாக்ஸ் பிரார்த்தனா, நிலாவும் ரிஷியும் ரன் பண்ணப் போறது ஷியாமுக்கு தெரியாது. அவர் கல்யாணம் பண்ணி வந்த அண்டைக்கு தான் அவங்க ரெண்டு பேரும் எஸ் ஆகி இருக்கிறாங்க.."

என்ன உளறல் இதுவென பார்த்தாள் பிரார்த்தனா வரோதயனை.



"ஸ்கூல் போற பிள்ளைகள் ரெண்டு இருக்கு. நேற்று கல்யாணம் செய்து வந்தாங்க என்றிங்க.."


"ம். அங்க தான் குடும்பம் விரோதமாகி இருக்கு. நாம கண்டது தான் ஷியாம்ட வைஃப். ஆனா அந்த ரெண்டு பிள்ளைகளும் இவருட இல்ல. ஷியாம்ர அண்ணாக்கு பிறந்தவங்க. அண்ணன்ர வைஃப தான் ஷியாம் இப்ப மெரி பண்ணி கூட்டி வந்திருக்கிறார்"



அசிங்கம் மேனியில் தெறித்தது போல முகத்தைச் சுளித்தாள் பிரார்த்தனா.



"இருங்க பிரார்த்தனா, அவசரப்படாதிங்க. ஷியாம்ர அண்ணன் செத்து ஆறு வருஷம் ஆகுது. ரெண்டாவது பிள்ளை வயிற்றில இருக்கும் போது ஒரு ஆக்சிடன்ட்ல மோசம் போயிருக்கார் மேகலாட ஹஸ்பண்ட்.."

ஷியாம் பெயரைக் கேட்டு முகத்தில் அறைந்தது போல் கதவு ஏன் சாத்தப்பட்டது என புரிந்தது பிரார்த்தனாவுக்கு.


"வரோதயன்.." ஷியாம் கூப்பிட்டான்.

இருவரும் ஒருங்கே திரும்பிப் பார்த்தனர்.

"டீ குடிப்பம். மேகலா வர லேட் ஆகும். நானே போட்டுட்டன். மோசமா இருக்காது. ஓரளவுக்கு பரவால்ல மாதிரி டேஸ்ட் இருக்கும். வாங்க" என்று முறுவலுடன் அழைத்தான்.


அவனை இமைக்காமல் பார்த்தாள் பிரார்த்தனா.
 
Last edited by a moderator:

Mrs. Jeevakan Rathika

Active member
Aug 21, 2025
161
152
43
France
கதை, அதிக நாட்கள் இடைவெளி விட்டு வருவதால் ஆர்வமாக படிக்க முடியவிஸ்லை.நன்றாக போகிறது
 

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
374
83
Chennai
இந்த ஆணியை அவ வீட்டில் சொல்லிட்டே புடுங்கி இருக்கலாம்😬😬😬😬😬😬
கடுப்புகள் வருது