செம்புலம் 14
தேனூர்:
"என்ன தாயி, போன வேலை என்ன ஆச்சு?" என்று இரவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது மணி கேட்க, "அட்மிஷன் போட்டுட்டு வந்துட்டோம்பா. பி.எஸ்சி பிசிக்ஸ் தான் நாங்க நாலு பேரும் எடுத்திருக்கிறோம்," என்றாள்.
"அப்படிங்களா? சந்தோஷம்!"
"எப்போ பணம் கட்டணும்?" என்றவர், "கொஞ்சம் குழம்பு ஊத்து வள்ளி," என்க; "அடுத்த வாரம் லெட்டர் போடுவாங்கப்பா. அப்போது போய் பணம் கட்டிட்டு வந்தால் போதும்," என்றாள்.
"சரி சரி, காலேஜுக்குப் போட்டுப் போவதற்கான துணி எல்லாம் வாங்கணுமே?" என்கவும், "ஆமாங்கப்பா," என்றாள்.
"ம்ம்... நீயும் மீனாட்சியும் உன் அம்மாவைக் கூப்பிட்டுப் போயிட்டு வந்துடுறீங்களா? நம்ம வயல்ல அறுவடை வேலை இருக்கு, என்னால வர முடியாது," என்று மணி சொல்ல; "சரிங்கப்பா, நாங்க மாமாவையே கூட்டிட்டுப் போறோம்," என்றாள். அதாவது, மீனாட்சியின் அப்பா சேகரை.
அதைக் கேட்டு "ஹா ஹா" என்று சிரித்தவர், "என் மச்சான் உங்ககிட்ட மாட்டிகிட்டு படுற பாடு இருக்கே! என்ன பண்றது, பொம்பளப் புள்ளைங்க என்றாலே மச்சானுக்கு ரொம்ப உசுரு," தன் தங்கச்சியப் போலவே தங்கச்சி மகளையும் வளர்க்கிறார் என்று தனது மைத்துனரை எண்ணிப் பெருமைப்பட்டார்.
அதோ இதோ என்று நாட்கள் ஓடின. கல்லூரியில் இருந்து அட்மிஷன் கார்டு அனுப்பி இருந்தார்கள். பின்னர் தோழிகள் நால்வரும் அவரவர் அப்பா அம்மாவோடு சென்று பணத்தைக் கட்டிவிட்டு அட்மிஷன் போட்டவர்கள் அடுத்த மாதம் இரண்டாம் தேதி கல்லூரி திறக்கும் என்பதைத் தெரிந்து கொண்டு வீட்டிற்கு வந்தனர்.
அந்த வருடத்திற்கான திருவிழா வரப்போவதால், தனது மகனுக்கு போன் பண்ணிய மணி, "என்னப்பா, திருவிழாவுக்கு வரியா?" என்கவும், "கண்டிப்பா வரேன்," என்று சொல்லி கதிரும் போனை வைத்தான். அப்போது ஊருக்குள் தண்டோரா சத்தத்தோடு காப்பு கட்டும் விஷயத்தைச் சொல்லிட்டுப் போனார்கள்.
கயலுக்குச் சிறுவயதிலிருந்தே பேச்சியம்மன் ரொம்ப பிடிக்கும் என்பதால், அவளும் கடந்த சில வருடங்களாக அம்மனுக்கு விரதம் இருக்கிறாள். அதேபோல் இந்த முறையும் அம்மனிடம் வேண்டிக்கொண்டு விரதத்தை ஆரம்பித்திருந்தாள். வழக்கம் போல தனது தங்கைக்காகப் புதுத் துணியை வாங்கியவன், தனது காதலிக்கும் ரகசியமாக வாங்கி எடுத்து வந்திருந்தான்.
நான்கு மாதங்களுக்குப் பிறகு வந்த கதிரிடம் நலம் விசாரித்துப் பேசிக்கொண்டு தூங்க வெகு நேரம் ஆனது. மறுநாள் விடியலும் தொடங்கியது. கயல்விழி வீட்டினரோ குடும்பமாய்ப் போய்க் கோவிலில் விரதத்தை முடித்துவிட்டு, பூஜை செய்துவிட்டு வந்தார்கள்.
கோவிலில் எங்கு பார்த்தாலும் கூட்டமாக இருந்தாலும் ஒருவிதமான மகிழ்ச்சியே நிறைந்திருந்தது. நேரமும் கடந்து செல்ல ஊரே மின்விளக்குகளால் ஜொலித்துக் கொண்டிருந்தது. கரகாட்டச் சத்தமும், மைக் செட்டில் ஒலிக்கும் பக்திப் பாடல்களுமாக ஊர்மக்கள் பிஸியாக இருக்க, கதிர் மட்டும் அந்தப் பழைய அரசமரத்தடி இருட்டில் தனது ஆருயிர் காதலி மீனாட்சிக்காகக் காத்திருந்தான்.
கோவில் பிரகாரத்தின் பின்னால், மக்கள் நடமாட்டம் சற்று குறைந்த அந்த அரச மரத்தடிக்கு மீனாட்சி வருவாள் என்பது கதிருக்குத் தெரியும். அதுதான் அவர்கள் கடந்த மூன்று வருடங்களாக ரகசியமாகச் சந்தித்துப் பேசும் இடம். தூரத்தில் வாணவேடிக்கை சத்தமும், ராட்டினங்களின் ஒலியும் மங்கலாகக் கேட்டது.
இன்று கோயிலில் பெற்றோர்களுடன் வந்த மீனாட்சியோ, பட்டுப் பாவாடை தாவணியில் தேவதை போலத் தெரிந்தாள். சுற்றி எல்லாரும் இருந்ததால் கதிரால் அவளை ஆசையாக ரசிக்கவும் முடியவில்லை, பேசவும் முடியாமல் போனது. "பன்னிரண்டாம் வகுப்பு முடிச்சுட்டு காலேஜுக்குப் போகப்போறா... பழையபடி என்கிட்ட பேசுவாளா?" என்ற பயம் ஒருபுறம், அவளைப் பார்க்கப்போகும் ஆசை மறுபுறம்.
அவள் வரும் சத்தம் கேட்கவில்லை, ஆனால் அவளது மல்லிகைப்பூ வாசம் காற்றில் முன்னதாகவே வந்து சேர்ந்தது. இருட்டில் மெதுவாக நடந்து வந்த மீனாட்சி, கதிரைப் பார்த்ததும் சட்டென நின்றாள். இருவரும் சில நொடிகள் பேசவே இல்லை; ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டதிலேயே பாதி கதையைச் சொல்லி முடித்துவிட்டார்கள்.
இவ்வளவு நேரம் தனது மாமாவைப் பார்க்க வேண்டும் என்று வேகமாக வந்தவளோ, தற்போது தயங்கி நின்றாள். "என்னடி, உனக்காக ஓடி வந்திருக்கேன், நீ அங்கேயே நிற்கிற?" என்கவும், பின்னர் நிமிர்ந்து பார்த்தவளின் கண்கள் கலங்கின. கதிரைப் பார்த்து இதோடு நான்கு மாதங்கள் ஆகிவிட்டது அல்லவா!
"மீனு..." என்று அவன் அழைத்த குரலில் அவ்வளவு பாசம் இருந்தது. "ஊர்ல இருந்து உன்னைப் பார்க்கத்தான் ஓடி வந்தேன். காலேஜ் சேர்ந்துட்டா மாமனை மறந்துடுவியோன்னு பயமா இருக்குடி," என்றான்.
இதைக் கேட்டு மீனாட்சி மெதுவாக அவன் அருகே வர, அவள் கண்கள் லேசாகக் கலங்கியிருந்தன. "என்ன மாமா இப்படிச் சொல்லிட்டீங்க? இந்தப் படிப்பு, காலேஜ் எல்லாம் உங்களுக்காகத்தான். நான் பெரிய ஆளா வரணும்னு நீங்கதானே ஆசைப்பட்டீங்க? அங்க எத்தனை பேர் இருந்தாலும், என் மனசுல இருக்குறது நீங்க ஒருத்தர்தான்!" என்று கோபமாகக் கேட்டாள்.
அவளின் கண்கள் கலங்குவதைப் பார்த்து வேகமாக வந்தவன், எட்டி அவளது கண்களைத் துடைத்துவிட்டு, "பைத்தியம்" என்றவன் தான் மறைத்து வைத்திருந்த அழகான பேனாவை அவளிடம் நீட்டியவன், "இது நீ காலேஜ் போறதுக்காக மாமனோட அன்புப் பரிசு," என்றான்.
வெட்கத்தோடு அதை வாங்கியவள், "யாராவது வரப்போறாங்க, நான் கிளம்புறேன் மாமா. ஆனா ஒண்ணு மட்டும் நிஜம்... நீங்க இல்லாம இந்த மீனாட்சிக்கு வேற உலகம் இல்லை," என்று சொல்லிவிட்டு மின்னல் வேகத்தில் ஓடினாள்.
அவள் ஓடும்போது அவளது கொலுசுச் சத்தமும், காற்றில் எஞ்சியிருந்த மல்லிகை வாசமும் கதிரின் மனக்கண்ணில் படமாக விரிந்து கொண்டிருந்தது. திருவிழாவின் கூட்டத்தை விட, அவள் சொல்லிவிட்டுச் சென்ற அந்த ஒரு வார்த்தைதான் அவன் மனதை நிறைத்திருந்தது.
திருவிழாவும் நல்லபடியாக முடிய, கதிரும் ஊருக்குப் புறப்பட்டுவிட்டான். விடிந்தால் முதல் நாள் கல்லூரிக்குப் போக வேண்டும் என்பதால் கயல்விழிக்கு வெகு நேரம் வரையில் தூக்கம் வரவில்லை.
அன்று அதிகாலை 5 மணிக்கே கயல்விழியின் வீட்டில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அலாரம் அடிப்பதற்கு முன்பே விழித்துக்கொண்ட கயல்விழி, தான் முதல் நாள் உடுத்தப்போகும் அந்தப் புதுச் சுடிதாரைத் தடவிப் பார்த்தாள். இது அவளது அன்பு அண்ணன் கதிர் வாங்கிக் கொடுத்தது.
பின்னர் குளித்து வந்து அந்தச் சுடிதாரைப் போட்டுக் கொண்டவள், கண்ணாடி முன் நின்று பலமுறை தலைமுடியைச் சரிசெய்தாள். ஒருவழியாகத் தனது அறை கதவைத் திறந்து வெளியே வர, வள்ளியோ தனது மகளை வியந்து முறைத்துக் கொண்டிருந்தார்.
"சரிம்மா, பார்வையில் தீயை உண்டாக்கியது போதும், பசிக்குது," என்றவாறு டைனிங் டேபிளில் போய் உட்கார, வள்ளியும் மகளுக்குச் சூடான தோசை, சாம்பாரைப் பரிமாறிவிட்டு, "இதில் மதிய சாப்பாடு இருக்கு," என்றார். "ம்ம்," என்றாள் கயல்.
கயல் சாப்பிட்டு முடிக்கவும், அவள் வீட்டுக்கு மீனாட்சி வரவும் சரியாக இருந்தது. பின்னர் இருவரும் சாமியைக் கும்பிட்டுவிட்டு, வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லிக்கொண்டு ரயில்வே ஸ்டேஷனுக்கு வர, அங்கே மற்ற இரண்டு தோழிகளும் காத்திருந்தனர்.
பத்து நிமிடங்கள் காத்திருப்பிற்குப் பின் வழக்கம் போல் வரும் பேசஞ்சர் ரயிலும் வர, நால்வரும் அதில் ஏறி இருக்கையைத் தேடி உட்கார்ந்தனர். "நேத்து வரைக்கும் நாம ஸ்கூல் யூனிஃபார்ம்ல வந்தோம், இன்னைக்கு கலர் டிரஸ்ல காலேஜ் போறோம்னு நினைக்கும்போதே ஒரு மாதிரி சிலிர்ப்பா இருக்குல?" என்றாள் கயல்விழி.
ஜன்னல் ஓரம் அமர்ந்து, வேடிக்கை பார்த்தபடி கனவுகளில் மிதந்து வந்து கொண்டிருக்கும் போது மீனாட்சி மட்டும் இடையில், "காலேஜ்ல ராகிங் இருக்குமா? சீனியர்ஸ் எப்படி இருப்பாங்க?" எனத் தன் சந்தேகத்தைக் கிளப்ப, நிலா உடனே, "யாராவது வம்பு பண்ணா, என் கையில இருக்கிற இந்த வெயிட்டான லஞ்ச் பேக் தான் அவங்களுக்குப் பதில் சொல்லும்!" என்று சொல்லி அனைவரையும் சிரிக்க வைத்தாள்.
பின்னர் அவர்கள் நிறுத்தத்தில் இறங்கிப் பேசிக்கொண்டே கல்லூரிக்கு வந்தனர். இன்று முதல் நாள் என்பதால் நிறைய மாணவர்கள் இவர்களைப் போல வந்து கொண்டிருப்பது தெரிந்தது.
செம்புலம் தொடரும்...
Author: Vishakini
Article Title: செம்புலப் பெயல் நீர் - 14
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: செம்புலப் பெயல் நீர் - 14
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.