பாவை 09

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 94

Active member
Staff member
May 5, 2026
42
141
33
chennai
அப்பார்ட்மென்ட் வளாகம், எப்எம் அலுவலகத்தை தவிர ரிஷி எங்கும் செல்வதில்லை என்பதை கவனித்த நிருஷிகா ஒரு நாள் அவனிடம், “ரிஷி எப்போ பாத்தாலும் வீட்லயே இருந்தா போரடிக்கலயா? வெளியே எங்காச்சும் போயிட்டு வரலாமா?”

“வேணாம்”

“இன்னும் எத்தனை நாளைக்கு இந்த அபார்ட்மென்டையும் குயிலோசை எப்எம்மே கதினு இருக்க போறீங்க? வெளி உலகத்த பாக்க வேணாமா?”

“ஏற்கனவே நான் வெளி உலகத்த பாத்தாச்சு நிரு, புதுசா பாக்கறதுக்கு எதுவுமில்ல”

“ப்ளீஸ் ரிஷி. நாளைக்கோட நீங்க கொடுத்த டைம் முடியுது. ரெண்டு பேரும் ஒரு லாங் டிரைவ் போயிட்டு வந்தா நல்ல மெமரியா இருக்கும் இல்ல”

“இப்படி சொல்லியே எல்லாத்தையும் என்கிட்ட சாதிச்சுக்கிற”

“எத்தனை நாளைக்கு சொல்ல போறேன்? இன்னைக்கும் நாளைக்கும் தானே?”

“கதிர் வரட்டும், மூணு பேரும் கார்ல போவோம்”

“நோ, என்கூட ஸ்கூட்டியில வாங்க. நான் நல்லா டிரைவ் பண்ணுவேன்”

“உன்கூடவா? முடியாது”

கதிர் இல்லாமல் புது இடத்திற்கு சென்றால் தடுமாறுவோம் என்பதால் ரிஷி தீவிரமாக மறுக்க, நிருஷிகா அவனின் தாடையை பற்றி, “ப்ளீஸ் ரிஷி நாம ரெண்டு பேரும் மட்டும் போவோம். என்னை நம்பி வரமாட்டீங்களா?” என்றாள் கெஞ்சலாக

“சரி கைய எடு, வரேன்”

‘ராட்சசி ஆரம்பத்துல இருந்து இவ நினைச்சத சாதிக்காம விட மாட்டேங்கிறா. நானும் இவ சொல்றதுக்கெல்லாம் ஏன் ஆடறேன்னு தெரியல’ என்று முனகி கொண்டே பார்க்கிங் வரை அவளோடு சென்றான்

நிருஷிகாவின் ஸ்கூட்டியில் அவள் பின்னால் அமர சொல்லி, அவன் எத்தனை அடிகள் நடக்க வேண்டும் என குறிப்பு கொடுக்க, அதன்படி தடுமாற்றமில்லாமல் அவள் பின்னால் அமர்ந்தான். வண்டியை ஸ்டார்ட் செய்ததும் தன்னியல்பாக கதிரின் தோள் மேல் கைபோடுவது போல, நிருஷிகாவின் இருதோள்களையும் அழுத்தமாக அவன் பற்றிக் கொள்ள, அவளோடு சேர்ந்து வண்டியும் தடுமாறியது.

பெண்ணவளின் வெற்று தோள்களின் மென்மையில் தடுமாறிய ரிஷி சட்டென கைகளை எடுத்து பின்னாலிருந்த கம்பியை பிடித்துக் கொண்டான்.

“ரிஷி, என்னை பிடிச்சுக்கோங்க”

“எப்பவும் ஸ்லீவ்லெஸ் தான் போடுவியா?” என்றான்

“ஆமா, டாப், ஜீன்ஸ் ஸ்கர்ட், எப்பவாச்சும் சுடிதார் சல்வார் கமீஸ் போடுவேன்” என்றபடி சாலையை பார்த்து வண்டியை ஓட்டினாள்.

“புடவை?”

“எனக்கு கட்ட தெரியாதே. நான் வயசுக்கு வந்தப்போ அம்மா கட்டிவிட்டாங்க. அதுக்கப்புறம் தான் அவங்க வேற உறவ தேடிக்கிட்டு, எனக்கு பிடிக்காம போயிட்டாங்களே. அதனால காலேஜ் கல்சுரல்ஸ் டைம்ல கூட நான் புடவை கட்ட சொல்லி அவங்ககிட்ட கேக்கல”

“அவங்ககிட்ட இதுவரைக்கும் நீ எதுவும் கேட்டதில்லயா?”

“நோ. நானா அவங்க கிட்ட போய் எதையும் கேட்டதில்ல தெரியுமா? இந்த ஸ்கூட்டிக்கு கூட நான் தான் இஎம்ஐ கட்றேன். கார் டிரைவர் பேர்ல தான் எடுத்தேன். அதுவும் உங்களோட பேச்சுல இன்ஸ்பைராகி வாங்கினது”

“நீ போட்டுக்க டிரஸ், காலேஜ் பீஸ், புக்ஸ் இப்படி எதுவும் நீயா கேக்கல. நீ கேக்கும் முன்னாடி அவங்க உனக்கு வேண்டியத செஞ்சு கொடுத்திருக்காங்க. அப்படித்தானே?” ரிஷி கேட்க, நிருஷிகாவின் வண்டியின் வேகம் சற்று குறைந்து மீண்டும் அதே வேகத்தில் சென்றது.

யோசித்து பார்க்கையில் அவளுக்கு பிடித்த உடை, பிடித்த நிறங்களில் ஏற்கனவே அலமாரியில் அடுக்கப்பட்டிருக்கும். அவள் போடும் கூலிங்கிளாஸ், ஹேர்பேண்ட் முதல், கால் செருப்பு வரை அனைத்தும் வாங்கி வைத்திருப்பார்கள். ஒருநாளும் அவளுக்கு பிடிக்காத பொருள் இருந்ததே இல்லை. பள்ளி கல்லூரி கட்டணம் செலுத்த வேண்டும் என்று அவள் எதற்காகவும் அவர்களிடம் போய் நின்றதில்லை. ஆனால் அனைத்தும் சரியாகவே நடந்தது. அப்படியென்றால் அவளுக்கு எது எப்போது தேவை என்று கண்காணித்து அதை அவள் கேட்க வேண்டிய அவசியமே இல்லாமல் அனைத்தையும் வாங்கி கொடுத்திருக்கின்றார்கள்.

அப்படிதான் ராஜ் அவளின் காதலையும் கண்டுகொண்டிருக்கிறாரோ? அவள் கேட்கும் முன் ரிஷியை கொண்டு வந்து அவளுக்கு கல்யாணம் செய்து வைத்துவிடுவாரா?

“நிரு, டிராபிக் அதிகமா இருக்கா?” ரிஷியின் கேள்வியில் கலைந்தாள்.

“இல்லயே, ஏன் கேக்கறீங்க?”

“எப்பவும் வாய் ஓயாம பேசிட்டே இருப்பியே? சைலன்ட்டா வரவும் டிராப்பிக்கா? இல்ல தூங்கிட்டியானு பாத்தேன்”

“டிரைவிங்ல யாராச்சும் தூங்குவாங்களா ரிஷி” என்று சிணுங்கியவள், “என் அம்மாவோட ஹஸ்பெண்ட் ராஜ் பத்தி யோசிச்சுட்டு வந்தேன்”

“வாட் இஸ் திஸ்? அப்பானு சொல்லு, இல்ல அங்கிள்னு சொல்லு”

“என்னமோ, அவர எந்த இடத்துலயும் வச்சு பாக்க முடியல ரிஷி. ஒரு முறை அங்கிள்னு கூப்பிட்டேன், முறைச்சு பாத்தாரு, அதுக்கப்புறம் அதையும் கூப்பிடறதில்ல”

“வேற எப்படி கூப்பிடுவ?”

“இதுவரைக்கும் கூப்பிட்டதே இல்ல. ஏன் பெரிசா பேசினது கூட இல்ல”

“தப்பு நிரு, அவரு உனக்காக எல்லாத்தையும் பாத்து பாத்து செஞ்சிருக்காரு. நீ அவர்கிட்ட பேசியிருக்கணும். இல்ல அவர் உன்கிட்ட பேசவாவது அனுமதிச்சிருக்கணும். பேசாம ஒதுங்கி போனா அவங்களோட பக்கம் உனக்கெப்படி தெரியும்?”

“அவங்களோட காதல தெரிஞ்சுட்டு நான் என்ன பண்ண போறேன்? அந்த டாபிக்க விடுங்க. நீங்க கொடுத்திருக்கற கொஞ்ச நேரத்துலயும் அவங்கள பத்தி பேசணுமா? நம்மள பத்தி பேசலாமில்ல”

“நம்மள பத்தி என்ன பேசறது?”

“என்னை உங்களுக்கு பிடிக்கவே இல்லையா ரிஷி?”

“இல்ல”

“ஏன் பிடிக்கல? நான் அழகா இல்லையா?”

“அதெப்படி எனக்கு தெரியும்?”

“நான் அழகா தான் இருப்பேன் ரிஷி”

“அத நீயே சொன்னா எப்படி?” சிரித்தவன் “வீட்ல நல்ல மாப்பிள்ளையா பாக்க சொல்லு”

“சொல்றேன், மாப்பிள்ளைய நானே பாத்துட்டேன்னு சொல்றேன்”

“உன் திட்டம் எனக்கு புரிஞ்சுடுச்சு நிரு, நான் ஒத்துக்கிட்டா என்னை சேப்டியா கொண்டு போய் விடுவே, இல்லனா எதாவது வண்டியில கொண்டு போய் மோத போறே, அப்படித்தானே” என்றான் விளையாட்டாக

“என்ன ரிஷி இப்படி சொல்லிட்டீங்க. நிஜமாவே உங்களுக்கு என்னை பிடிக்கலனா, நான் நாளையிலிருந்து உங்கள தொல்லை பண்ண மாட்டேன். இந்த ஒரு வாரத்தை நினைச்சுட்டு வாழ்நாள் பூரா வாழ்ந்துடுவேன். ஆனா வேற ஒருத்தர கல்யாணம் பண்ணிக்குவேன்னு மட்டும் நினைக்காதீங்க” என்றாள் சீரியசாக

பேச்சை மாற்ற நினைத்தவனாக, “இப்போ எங்கே போயிட்டு இருக்கே?” என்ற போதே வண்டியை நிறுத்தியிருந்தாள். “ரிஷி கீழே இறங்கிக்கோங்க, வண்டிய பார்க் பண்ணிட்டு வரேன்” என்றாள்.

சற்று நேரத்தில் அவனருகே வந்தவள், அவன் கரத்தை பற்றி தன் விரல்களோடு அவன் விரல்களை கோர்த்துக் கொண்டாள். “ருஷி என்ன பண்றே?” என்றவன் அவள் விரல்களில் இருந்து தன்னை பிரித்துக் கொள்ள முயன்றான்.

“ரிஷி, இப்போ கதிரோட இடத்துல நான் இருக்கேன். என் கைய பிடிச்சுட்டு நான் பேசறத கேட்டுட்டு நார்மலா நடந்து வாங்க” என்றவள் சுற்றுபுறத்தை விளக்கி கொண்டே வர கண்ணெதிரே இருக்கும் பரந்த கடலின் அழகையும் வர்ணிக்க, அது கடற்கரை என்று உணர்ந்து கொண்டான்.

அவன் எத்தனை அடி தூரம் எந்த பக்கம் நடக்க வேண்டியிருக்கும், எந்த திசையில் கடைகள் அணிவகுத்து உள்ளன என்பது வரை அவள் விளக்கமாக கூறிகொண்டே வர, “என்கிட்ட வாய்ஸ் டிரைனிங் வேணும்னு கேட்டு வந்தே, அதுல எதுவும் உருப்பட்ட மாதிரி தெரியல. ஆனா கதிர் கிட்ட நல்லா டிரைனிங் எடுத்திருக்க போல? அவன் சொல்ற மாதிரியே எனக்கு வாயிலயே மேப் போட்டு கொடுக்கறே?” என்றான் மெல்லிய புன்னகையுடன்

“ரிஷி, நம்மள நோக்கி ரெண்டு பேர் வர்றாங்க. ஒருத்தவங்க பூக்காரம்மா, இன்னொருத்தர் அவங்களுக்கு பின்னாடி சுண்டல் விக்கிறவரு”

பூவாசம் மூக்கை துளைக்க, “ரெண்டு முழம் பூ கொடுங்க” என்றான் ரிஷி

“பூ வாங்கிக்கங்கனு கேக்கலாம்னு வந்தேன். கேட்டாலும் நிறைய பேரு வேணாம்னுட்டு போயிடுவாங்க. நான் கேக்கறதுக்கு முன்னாடியே பூ கேக்கறீங்களே தம்பி, புதுசா கண்ணாலம் ஆன ஜோடியா நீங்க? ஜோடி பொருத்தம் படு ஜோரா இருக்கு”

ரிஷி இல்லை என்று மறுப்பதற்குள், நிருஷிகா அவனின் கரத்தை அழுத்தினாள்.

பூக்காரம்மா பணம் வாங்கி சென்ற பின், “அந்தம்மா நம்மள புதுசா கல்யாணம் ஆனவங்கனு தப்பா நினைச்சுட்டாங்க, இல்லனு சொல்ல விடாம ஏன் தடுத்தே?”

“நீங்க இல்லனு சொல்லியிருந்தா அவங்க வேற மாதிரி நினைச்சிருப்பாங்க”

என்ன நினைச்சிருப்பாங்க என்று அவன் யோசிப்பதற்குள் சுண்டல் விற்பவர் , “சார், சுண்டல் வாங்கிக்கங்க சார், என்கிட்ட சுண்டல் வாங்கி சாப்பிட்ட ஜோடிக்கெல்லாம் சீக்கிரமே கல்யாணம் ஆயிடும். அப்படி ஒரு ராசி என்னோடது”

உன்கிட்ட சுண்டல் வாங்கி சாப்பிடவும் வேணாம், கல்யாணம் ஆகவும் வேணாம் என்று நினைத்தவன் உடனே “வேணாம்பா” என்று சொல்ல, “என்னாம்மா, உன் ஆளு ரொம்ப கஞ்சனா இருக்காரு. சூப்பர் பிகரா இருக்க, சுண்டல் கூட வாங்கி தரமாட்டேங்கிறாரு. ஒரு வேளை கல்யாணம் ஆயிடும்னு சொன்னதால வேணாங்கிறாரா? கழட்டி விட போறாரு, பாத்து நடந்துக்கோம்மா” என்று அவன் ஏக வசனத்தில் பேச, ரிஷிக்கு கோபம் வந்தது.

அவளுடைய கையை இறுக்கிபிடித்தவன் “இதுக்கு தான் வெளியே வரமாட்டேன்னு சொன்னேன் கேட்டியா?” என்றான் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்.

நிருஷிகா அவரிடம் பணத்தை கொடுத்து சுண்டலை வாங்கி கொண்டு அனுப்பி விட்டாள். “ரிஷி, டென்ஷன் ஆகாதீங்க” என்று அவனை சமாதானம் செய்தான்.

“அந்தம்மா புருஷன் பொண்டாட்டினு சொல்றாங்க, இவன் என்னடான்னா வேற மாதிரி பேசறான். இதெல்லாம் தேவையா நிரு?”

“ரெண்டு பேர் ஜோடியா வந்தா இப்படி தான் பேசுவாங்க. ஒரு நாளைக்கு எத்தனை பேரை பாக்கறாங்க?”

“அவங்களும் நாமளும் ஒண்ணா? அவங்க அப்படி பேசும் போதே நாம அந்த மாதிரியில்ல, நல்ல பிரெண்ட்ஸ்னு சொல்லியிருக்க வேணாமா?”

“சொன்னா மட்டும் நம்பிடுவாங்களா ரிஷி? அத்தோட அவர் சொன்னது எனக்கு பிடிச்சிருந்துச்சு”

“எது? அவன் என்னை கஞ்சன்னு சொல்லிட்டு போனதா? இல்ல நான் உன்னை கழட்டி விட்டுடுவேன்னு சொன்னதா?”

“அப்போ என்னை கழட்டி விடமாட்டீங்களா ரிஷி?” என்றவள் சிரித்து விட்டாள்.

ரிஷி முகம் கோபத்தில் சிவக்க, “சாரி” என்றவள் அவன் கரத்தில் சுண்டலை வைத்தாள்

“அவன் என்னை கேவலமா பேசிட்டு போனான், அவன்கிட்ட சுண்டல் வேற வாங்கினியா நீ?”

“அவன் பேசினது தப்பா இருந்தாலும் அதுல ஒரு விஷயம் மட்டும் எனக்கு பிடிச்சிருந்துச்சு. அதான்”

“அப்படி என்ன சொன்னான்?”

“அவன்கிட்ட சுண்டல் வாங்கி சாப்பிட்டா, நமக்கு கல்யாணம் நடக்கும்னு சொன்னானே”

“இதெல்லாமா நம்பறே நிரு?”

“நீங்களும் அத நம்பி தானே சுண்டல் வேணாம்னு சொன்னீங்க?”

தன் மனதை படித்துவிட்டிருக்கிறாளே என்று நினைத்தவன் அதற்கு மேல் எதுவும் பேசாமல் தொண்டையை செரும, நிருஷிகா கலகலவென்று சிரிக்க ஆரம்பித்தாள். என்ன முயற்சித்தும் அடக்க முடியாமல் போக ரிஷியும் சிரித்து விட்டான்.

இருவரும் மனம் விட்டு சிரித்தபடி கடற்கரை மணலில் கைகோர்த்துக் கொண்டு நடக்க ஆரம்பித்திருந்தார்கள். நடக்கும் போது நிருஷிகாவின் வெற்று தோள்கள் அவ்வப்போது ரிஷியின் தோள்களை உரசி சென்றது.

பஞ்சுபொதியாய் கைகளுக்குள் அடைக்கலமாகியிருந்த பெண்ணவளின் பிஞ்சு விரல்களும், தோள்களின் உரசலும் ரிஷிக்குள் கிளர்ச்சியையும் கிலியையும் ஒருங்கே கொடுத்தது. சட்டென அவளிடமிருந்து பிரிந்து தனியாக நடந்தான்.

“ரிஷி, எனக்கு கடல் அலைக்கு நடுவுல நிக்கறதுக்கு ஆசை, ஆனா பயம். நான் உங்க கைய பிடிச்சுக்கட்டுமா ப்ளீஸ்” என்றாள். அவனை தனியாக விட அவள் விரும்பவில்லை. அதே சமயம் அவள் உதவிக்காக கரத்தை நீட்டினால் கட்டாயம் அதை விரும்ப மாட்டான். அதனால் தனக்கு உதவி கேட்டாள். அவள் நினைத்தது போல ரிஷி மறுக்காமல் அவளின் கரத்தை அழுத்தமாக பிடித்துக் கொண்டான்.

தன் மனதிலும் உடலிலும் ஏற்படும் கிளர்ச்சியில் புதுவித அவஸ்தையை உணர்ந்தவன், தன்னை வெளிகாட்டிக் கொள்ளாமல் அவளுடன் நடந்தான். கடற்கரை மணலில் கால்கள் புதைய, அலைகளினால் வேகமாக வீசும் காற்றை கிழித்துக் கொண்டு நடக்கும் போது இருவருமே தடுமாறி ஒருவரை ஒருவர் ஆதூரமாக பற்றிக் கொள்ள வேண்டியதாய் இருந்தது.

நிருஷிகாவின் வெற்று தோள்களை அழுத்தி பிடித்திருந்த ரிஷிக்கு ஏனோ தோள்களின் மென்மையை வருடிவிட மனம் அலைபாய்ந்தது. அந்த அலை ஆழியின் பேரலையை விட பேராவலாய் பெரும் பிரவாகமாய் மனதிற்குள் எழவும் அதிர்ந்து போனான்.

மனதிற்கு பிடித்த பெண்! அதுவும் தன்னை விரும்பும் பெண்! அவனுக்கு மிக அருகில்! அதுவும் அவன் கைவளைவில்! அவள் சூடியிருந்த மல்லிகையின் மணமும், முகத்தை மோதும் ஈரமான காற்றும் ரிஷியின் சிந்தையை கலைத்தது. ‘ரிஷி இது சரிவராது’ என்று மூளை அபாய குரல் கொடுக்க, மனமோ ‘ரிஷி இவள் உன்னுடையவள், எல்லாம் சரியாக வரும்’ என்று அபயக்குரல் கொடுத்தது.

என்னோட மனக்கட்டுப்பாடு இவ்வளவு தானா? என்றும் தோன்ற தன்னை ஒருவாறாக நிலைப்படுத்திக் கொண்டு அவளின் புறம் சாயும் மனதை எழுப்பி நிறுத்தினான். தோள்களை பற்றியிருந்த தன் கரத்தை விலக்கி கொண்டான்.

கடல் அலை கால்களை நனைக்கவும், நிருஷிகா ரிஷியின் கைவிரல்களோடு தன் விரல்களை கோர்த்துக் கொண்டாள். கடல் அலை முன்னேறுவதும் பின்னே செல்வதுமாக இருந்தது. ரிஷியின் மனதை போல! நிருஷியின் காதலை ஏற்றுக் கொண்டு அவளோடு வாழ வேண்டும் என்று காதல் மனம் சண்டித்தனம் செய்ய, உனக்கு சுகமாக இருக்கும்? ஆனால் அவளுக்கு? காலமெல்லாம் ஒரு சுமையாக அவளுக்கு இருக்க கூடாது என்று தோன்ற மீண்டும் மனதை நிலைப்படுத்திக் கொண்டான்.

“நிரு கிளம்பலாமா?”

“இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாம் ரிஷி. இன்னைக்கு பெளர்ணமி வெளிச்சத்துல கடற்கரைய பாக்கறதுக்கு ரொம்ப அழகா இருக்கும்”

நிருஷிகாவின் பேச்சில் நிதர்சனம் உறைத்தது. அவளுடைய சின்ன சின்ன ஆசைகளை கூட கணவனாக அவனால் நிறைவேற்ற முடியாது. காலமெல்லாம் அவள் அவனை ஒரு சுமையாக சுமக்க வேண்டும். அவளுக்கு பிடித்த விஷயங்களை அவளுடைய தந்தை போல பார்த்து பார்த்து தன்னால் செய்ய முடியுமா? இப்படி பல கேள்விகள் அவனுள்.

நிருஷிகாவின் மனதில் தன்னால் ஏற்பட்ட சலனத்தை நட்பாக மாற்றி அவளுக்கு புத்தி சொல்லி அனுப்ப நினைத்திருந்தான். இப்போது அவளை விட அவன் தான் பெருஞ்சலனத்தில் போராடிக் கொண்டிருக்கிறான்.

நிருஷிகா கடற்கரை மணலில் அவனையும் அமரச்செய்து, அவளும் அவனை நெருங்கி அமர்ந்தாள். பின்பு கண்ணுக்கு எட்டிய தூரத்தில் யார் யார் இருக்கிறார்கள்? என்னென்ன விற்பனை செய்கிறார்கள், எந்தமாதிரி உடை அணிந்து வந்திருக்கிறார்கள் என்று விவரிக்க ஆரம்பித்தாள். அவள் பார்க்கும் காட்சியை எல்லாம் அவன் மனக்கண்ணில் கொண்டுவர முனைகிறாள் என்று ரிஷிக்கு நன்றாகவே புரிய மீண்டும் மனம் அவளிடம் குடை சாய்ந்தது.

“ரிஷி, ரெண்டு சின்ன பொண்ணுங்க மணல் வீடு கட்டிட்டு இருக்காங்க. ஒரு வாண்டு பையன் ஓடிவரான், அவங்க தம்பினு நினைக்கிறேன், அச்சோ அவங்க மணல் வீட்டு மேல குதிச்சிட்டான் ரிஷி. இப்போ அந்த பொண்ணுங்க அவனை துரத்திட்டு ஒடறாங்க

இந்த பக்கம் போட் ஓரமா ஒரு ஜோடி உட்கார்ந்து இருக்காங்க. லவ்வர்ஸ்னு நினைக்கிறேன்…” என்றவள் அதற்கு மேல் பேசாமல் ரிஷியின் தோள்களில் முகத்தை மூடிக் கொண்டாள்

“என்னாச்சு நிரு?”

“ரிஷி, நான் அந்த பக்கம் பாத்திருக்க கூடாது” என்றாள் மெல்லிய குரலில்

“எந்த பக்கம்” என்றவன் உடனே புரிந்து கொண்டு, “அதுக்கு தான் இருட்ட ஆரம்பிச்சதும், கிளம்பிரணும். இல்லனா இப்படித்தான் நடக்கும். கிளம்பு போகலாம்” என்று எழுந்து கொண்டான்.

இருவரும் மெளனமாக நடந்தனர். வெளியே மெளனம்! ஆனால் உள்ளே இருவருக்குள்ளும் பேரிரைச்சல்!

(தொடரும்)
 

Attachments

  • பாவையின்றி பார்வையில்லை! (3).jpg
    பாவையின்றி பார்வையில்லை! (3).jpg
    262.8 KB · Views: 0
Last edited:

Author: STN - 94
Article Title: பாவை 09
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.