பாவை 11

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 94

Active member
Staff member
May 5, 2026
42
141
33
chennai
நிருஷிகாவின் கைப்பேசி ஒலித்ததில் இருவருமே சுயம் பெற்றனர். தன் கைவளைவிற்குள் எப்போது சிறைப்பட்டாள் என்று திகைத்த ரிஷி மெல்ல விலகி நின்றான்.

கைப்பேசியை பார்த்தவள், “என் ஆபீஸ்ல இருந்து தான் போன். இன்னும் வரலயேனு போன் பண்றாங்கனு நினைக்கிறேன்”

“சாரி நிரு” என்று நெற்றியை தேய்த்து கொண்டவன், அவளுக்கு முதுகு காட்டி நின்று கொண்டான். தானும் சராசரி ஆண்மகன் போல தனிமையில் ஒரு பெண் சிக்கியதும், அவளிடம் உரிமை எடுத்துக் கொண்டேனே என்ற குற்ற உணர்ச்சி ஒருபுறம், இனி இவளிடம் காதல் இல்லை என்று மறுத்து பேசவும் முடியாதே என்ற தவிப்பு ஒருபுறம் என்று சுழலில் சிக்கியிருந்தான்.

கைகெட்டும் தூரத்தில் இருந்தவளை இழுத்து தனக்குள் அடக்கி கொள்ளும் ஆவல் எழ, மிகவும் பிரயத்தனப்பட்டு தன்னை அடக்கி கொண்டான்

“நிரு சீக்கிரம் கிளம்பு”

அவன் நினைத்தது போலவே அவள் பதில் இருந்தது

“இதுக்கு மேலயும் என்கிட்ட காதல், கல்யாணம் எல்லாம் சரிவராதுனு சொல்லி என்னையும் ஏமாத்தி உங்களையும் ஏமாத்திக்காதீங்க ரிஷி. உங்களுக்கு என்னை பிடிச்சிருக்குனு எனக்கு நல்லா தெரிஞ்சு போச்சு. வீட்ல பேசட்டுமா?” என்றபடி அவன் பின்னால் நெருங்கி நின்றாள்.

“அவங்க ஒத்துக்கலனா” அவன் குரல் ஆழ்ந்து ஒலித்தது

“நம்ம வாழ்க்கைய நாமளே அமைச்சுக்கலாம். உங்களுக்காக நான் எல்லாத்தையும் விட்டுட்டு வர தயார். நீங்க உங்க பிடிவாதத்தை மட்டும் விட்டீங்கனா போதும். என்ன சொல்றீங்க?”

“யாரு? நான் பிடிவாதம் பிடிக்கறனா? நல்லாயிருக்கு உன் நியாயம். ஆரம்பத்துல இருந்து உன் பிடிவாதத்துல என்னை ஆட்டிவச்சிட்டு இருக்கறது நீதான்”

“நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க ரிஷி, வீட்ல ஒத்துக்கிட்டாலும் இல்லனாலும் நாம கல்யாணம் பண்ணிக்கலாம்”

“முதல்ல உன் வீட்ல பேசு. அவங்க என்ன சொல்றாங்கனு பாக்கலாம். மத்தத அப்புறமா பேசிக்கலாம்”

“ஓகே, உங்களுக்கு இந்த டெடிபியர் பிடிச்சிருக்கா?” என்றபடி அவன் வயிற்றை கைகளால் வளைத்துக் கொண்டு அவன் வெற்று முதுகில் தலை சாய்த்தாள்.

ரிஷியின் மனக்கட்டுப்பாடுகள் எல்லாம் தகர்த்தெறியப்பட்டது. அவளின் இருகரங்களையும் பிடித்து கொண்டவன், “உன் முகத்தை மட்டும் தான் தொட்டு பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன். வேற எதுவும் தெரியாம எப்படி என் முடிவ சொல்றது?” என்றவன் அவளின் கரத்தை பற்றி இழுத்து மேலும் தன்னோடு சேர்த்து கொண்டான்.

ரிஷியின் பேச்சும் செயலும் நிருஷிகாவை முகம் சிவக்க வைத்தது. “சாமியார்னு நினைச்சேன், மன்மதனா இருக்கீங்களே ரிஷி” என்று அவன் முதுகில் நன்றாக முகம் புதைத்து கொண்டாள். இதழ்கள் அவனுடைய வெற்று முதுகில் படரவும் உடல் சில்லிட்டு போனான்.

“நிரு, சீக்கிரம் கிளம்பு” அவளை விலக்க முயற்சித்தான்.

“மாட்டேன்” என்று மேலும் அவனை இறுக்கி கொண்டாள்.

“கல்யாணத்துக்கு முன்னாடி குழந்தை வந்தா பரவாயில்லையா?” என்றவனின் பேச்சில் வெட்கத்துடன் விலகி நின்றாள். ஆனால் ரிஷி தன் வார்த்தைகளை கொண்டே யோசனையில் ஆழ்ந்தான்.

குழந்தை? இதப்பத்தி நான் ஏன் யோசிக்கல? என்னை போல ஒருத்தன வச்சிட்டு இவளால குழந்தையையும் எப்படி சமாளிக்க முடியும்? மீண்டும் மனதிற்குள் பாறங்கல் வைத்தாற் போன்ற பாரம் ஏறிக் கொண்டது.

நிருஷிகா ரிஷியின் வார்த்தைகளில் அவன் திருமணத்திற்கு சம்மதித்துவிட்டான் என்று சந்தோஷப்பட்டாள்.

“ரிஷி, இன்னைக்கு ஆபிஸ் முடிஞ்சதும் நேரா வீட்டுக்க போய் ரெண்டு பேர்கிட்டயும் நம்ம கல்யாணத்தை பத்தி பேச போறேன்”

ரிஷியிடம் பதில் இல்லை. மீண்டும் நிருஷிகாவின் கைப்பேசி ஒலிக்கவும், “நிரு, எதாச்சும் முக்கியமான போன் காலா இருக்க போகுது. எடுத்து பேசு” என்று பேச்சை மாற்றினான்.

“ஆமா ரிஷி ஆபிஸ்ல முக்கியமான வேலைனு சீக்கிரம் வரச்சொன்னாங்க. நான் தான் உங்கள பாக்கற ஆர்வத்துல அதை மறந்துட்டேன்” என்றவள் கைப்பேசி அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.

மறுபக்கம் என்ன பேசினார்களோ தெரியவில்லை, “சாரி சார், இதோ வரேன். ஈவ்னிங் லேட்டானாலும் வேலைய முடிச்சு கொடுத்துட்டே வீட்டுக்கு போறேன். நீங்க கவலப்படாதீங்க” என்று போனை வைத்தாள்.

“ரிஷி மேனேஜர் கத்தறான். ஈவ்னிங் உங்கள பாக்க வரமுடியாதுனு நினைக்கிறேன். நைட் வீட்ல பேசிட்டு அவங்க என்ன சொன்னாங்கனு உங்களுக்கு கால் பண்ணி சொல்றேன். ஓகேவா?”

“ஒகே, நேரமாயிடுச்சுனு வண்டிய வேகமா ஓட்டிட்டு போகாத. மெதுவா போ. ஹெல்மெட் வச்சிருக்க இல்ல?” என்றான் அக்கறையாக

அவனின் தீண்டல்களும் பேச்சும் அக்கறையும் நிருஷிகாவிற்கு அவன் காதலை வெளிச்சம் போட்டு காட்டி விட்டதால் அவன் கேள்விக்கு பதிலளிக்காமல் அவசரமாக எட்டி அவன் கன்னத்தில் இதழ் பதித்தாள்.

தன்னிச்சையாக அவளை அணைக்க எழுந்த கைகளை அடக்கி அவன் கீழிறக்கியதை கண்டு கொண்டவள், “சாமியார் ரிஷி முழு ரொமான்டிக்கா மாறிட்டாரு போல” சிரித்தாள்.

“அடி வாங்க போறே, கிளம்பு முதல்ல” என்றான் ரிஷியும் தன் குழப்பத்தை மறந்து

ரிஷி தன் காதலை வெளிப்படுத்திய மகிழ்ச்சியோடு அலுவலகத்திற்கு கிளம்பி சென்றாள் நிருஷிகா. எப்போதுமில்லாமல் அங்கே பணிபுரியும் அனைவரிடமும் சிரித்து பேசினாள். ஆர்வத்துடன் வேலை செய்தாள். மதிய உணவு இடைவெளியின் போது அவளிடம் தெரிந்த மாற்றத்தை பற்றி அனைவரும் கேள்வி கேட்க, தன் காதல் நிறைவேறியதால் மகிழ்ச்சியாக இருப்பதாக சொல்லி அனைவருக்கும் மதிய உணவை வரவழைத்து கொடுத்தாள்.

கதிருக்கு கைப்பேசியில் அழைத்து விவரம் சொன்னாள், “தேங்கஸ் கதிர், எங்களுக்கு குழந்தை பொறந்தா உங்க பேரை தான் வைப்பேன்”

“கல்யாணமே முடிவாகல, குழந்தை வரைக்கும் யோசிச்சாச்சா?” சிரித்தான் கதிர்மாறன்

“ரிஷி வெட்ஸ் ருஷினு போர்ட் மட்டும் ரெடி பண்ணி வையுங்க கதிர். கல்யாண டேட்டை நாளைக்கு சொல்றேன்”

“ஓ அவ்வளவு நம்பிக்கையா? உன் வீட்ல ஒத்துபாங்களா?”

“ஒத்துப்பாங்கனு தான் நினைக்கிறேன். இல்லனா இருக்கவே இருக்கு ரிஜிஸ்தர் ஆபிஸ். நீங்க சாட்சி கையெழுத்து போட மாட்டீங்களா?”

“அத விட எனக்கு வேறென்ன வேலையிருக்கு?”

“சரி கதிர், நான் நைட் கால் பண்ணி உங்க ரெண்டு பேர்கிட்டயும் பேசறேன்” என்று போனை வைத்தவள் மீண்டும் வேலையில் முழ்கி போனாள். மேனேஜரிடம் வாக்கு கொடுத்தது போல வேலை நேரம் முடிந்து எட்டு மணி வரை வேலை செய்து வீட்டை அடைந்த போது மணி ஒன்பது ஆகியிருந்தது.

வழக்கம் போல மைதிலி வாசலில் அவளுக்காக காத்திருப்பாள் என்று நினைத்தபடி ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தாள். வாசலில் மைதிலி இல்லை, ஏன் தாமதம் என்று கேட்டு இதுவரை போனும் வரவில்லை என்ற யோசனையுடன் தன் அறைக்கு சென்று உடை மாற்றி முகம் கழுவிக் கொண்டு இரவு உணவிற்காக சாப்பாட்டு மேஜைக்கு வந்தாள்.

அவள் வந்ததை கண்டு பணிப்பெண் உணவு பறிமாறவும், தேவ்ராஜ் மற்றும் மைதிலி இருக்கும் அரவம் தெரியாததால் அவர்களின் அறை வாசலையும், தெரு வாசலையும் மாறி மாறி பார்த்தாள். அவளின் பார்வையை உணர்ந்து கொண்ட பணிப்பெண், “ஐயாவும், அம்மாவும் கிளம்பி எங்கேயோ போனாங்க. இன்னும் வரலம்மா”

“ம், புவன் புவனிகா எங்கே?”

“அவங்க இன்னைக்கு சீக்கிரம் தூங்கிட்டாங்க”

மேற்கொண்டு எதுவும் பேசாமல் சாப்பிட்டு முடித்து தன் அறைக்கு வந்தாள். வெகுநேரம் விழித்திருந்து கார் சத்தம் கேட்கிறதா என்று அவர்களுக்காக காத்திருந்தாள். அவர்கள் வருவதாக தெரியவில்லை. போன் செய்து விசாரிக்கவும் மனம் இடம் கொடுக்கவில்லை. காலையில் பேசிக் கொள்ளலாம் என்ற முடிவிற்கு வந்தவள் ரிஷியின் எண்ணிற்கு அழைத்தாள்.

அழைப்பு தொடர்ந்து துண்டிக்கப்பட்டது. யோசனையுடன் கதிருக்கு போன் செய்தாள். அதுவும் வெகுநேரம் ஏற்கப்படவில்லை. பின்பு அழைப்பு ஏற்கப்பட்டதும், “என்னாச்சு கதிர்? ஏன் ரிஷி போனை எடுக்கல?”

“ரிஷி, ரெக்கார்டிங்ல இருக்கான். புதுசா ஒரு ப்ராஜெக்ட் வந்திருக்கு. ரெண்டு நாள்ல முடிச்சு கொடுக்க சொல்லியிருக்காங்க. அவன் ப்ரீ ஆனதும் பேச சொல்றேன்” என்று அவள் பதிலுக்காக காத்திராமல் போனை வைத்து விட்டான்.

அன்றைய நாளின் மகிழ்ச்சியும், அதிகப்படியான வேலையும் நிருஷிகாவிற்கு நிறைவான தூக்கத்தை வரவழைத்திருக்க, நிம்மதியாக உறங்கினாள். காலை எப்போதும் எழுவதை விட தாமதமாக எழுந்தவள் குளித்து தயாராகி காலை உணவிற்காக சாப்பாட்டு மேஜைக்கு சென்றாள்.

தேவ்ராஜ் மற்றும் மைதிலி இருவரும் தங்களுக்குள் மெல்லிய குரலில் ஏதோ தீவிரமாக பேசிக் கொண்டிருந்தார்கள். நிருஷிகாவின் வரவினால் பேச்சை நிறுத்திவிட்டனர். யோசனையோடு நாற்காலியில் அமர்ந்தவளுக்கு மைதிலி உணவு பறிமாறவும் மறந்து யோசனையில் நின்றிருந்தார். அவரை பார்த்தபடி நிருஷிகா தன் தட்டில் உணவை வைத்துக் சாப்பிட தொடங்கினாள்.

ராஜ் கூட அவளை கவனிக்காமல் ஆழ்ந்த யோசனையில் இருந்தார். தொண்டையை செருமி, “உங்க ரெண்டு பேர்கிட்டயும் நான் பேசணும்” என்றாள்.

அதில் இருவரும் திடுக்கிட்டு அவளை பார்க்க, “நான் ஒருத்தர லவ் பண்றேன். அவர் பேரு ரிஷிவர்மன், குயிலோசை எப்எம்ல ஆர்ஜேவா இருக்காரு. அவரை தான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்” அறிவிப்பு போல சொன்னாள்.

அவர்களின் முகத்தில் எந்த அதிர்ச்சியும் இல்லை. ஆனால் இருவரும் கேள்வியோடு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். மைதிலியின் கலங்கிய கண்கள் ராஜ்ஜிடம் என்ன சொன்னதோ தெரியாது, ராஜ் கண்களால் மனைவிக்கு ஆறுதல் சொன்னார். மைதிலியின் கரம் அவரின் தோள்களை அழுத்த, அவர் தன் கரத்தால் மனைவியின் கரத்தை தட்டிக் கொடுத்தார்.

‘பெத்த பொண்ணு லவ் பண்ற வயசுல கூட இவங்க லவ்ஸ் குறையல’ என்று மனதிற்குள் பொருமிக் கொண்டு தன் கோபத்தை காட்டாமல் முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டாள். ‘இவங்க என்ன என் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்றது? இவங்க தலைமையில அது நடக்கணும்னு எந்த அவசியமும் இல்ல. எல்லாம் இந்த ரிஷியால வந்தது. வீட்ல சம்மதிப்பாங்களானு கேட்டு உசுர எடுக்கறாரு’ என்று பல்லை கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

ராஜ் நிருஷிகாவை பார்த்து, “நிருஷி முதன்முதலா எங்க கிட்ட வந்து உன் விருப்பத்தை சொன்னதுல எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். நீயே உன் வாழ்க்கைய தேர்ந்தெடுக்கற அளவுக்கு வளர்ந்துட்டியானு ஆச்சரியமா இருக்கு. எங்ககிட்ட பேச வந்ததுக்கு காரணம் உன்னோட காதல் தான்னா, அந்த காதல நிறைவேத்த நாங்க தயார். உனக்கு யார பிடிச்சிருக்கோ, அவங்கள கூட்டிட்டு வா, கல்யாணத்தை பத்தி பேசி முடிவெடுக்கலாம்”

அவர்களின் காதல் கடுப்பை தந்தாலும், தன் காதலுக்கு பச்சை கொடி காட்டியதால் மற்றதை மறந்து முகம் மலர்ந்தவள், “தேங்க்யூ, இப்பவே ரிஷிய கூட்டிட்டு வரேன்” என்று துள்ளி கொண்டு வாசலை நோக்கி ஓடினாள்.

என்ன நினைத்தாளோ மீண்டும் சாப்பாட்டு மேஜையை நோக்கி மூச்சு வாங்க ஓடிவந்தாள்.

“என்ன நிருஷி?” என்றனர் இருவரும்

“நான் ரிஷிய கூட்டிட்டு வந்தப்பறம், நீங்க அவர் வேலை, எங்க காதல், கல்யாணத்தை பத்தி மட்டும் தான் பேசணும், அவர பத்தி பெர்சனலா வேற எதுவும் கேள்வி இருந்தா, அவர்கிட்ட கேக்க வேணாம். தனியா என்கிட்ட கேளுங்க. முக்கியமா அவரோட மனசு புண்படும்படி எதுவும் இங்கே நடக்க கூடாது” என்றாள் கட்டளையாக

“ஏன் அப்படி சொல்றே?” மைதிலி கேள்வி கேட்க

ராஜ் மனைவியை கண்களால் அடக்கி, “நிருஷி, நாங்க எதுவும் கேட்க மாட்டோம். கல்யாண தேதிய பத்தி மட்டும் பேசுவோம், ஓகேவா?”

சம்மதமாக தலையை ஆட்டியவள் மீண்டும் வாசலை நோக்கி ஓடினாள். கதிர்மாறனை போலவே நிருஷிகாவின் எண்ண ஓட்டம் இருந்தது. ரிஷிக்கு இது குறை என்று நான் ஏன் சொல்ல வேண்டும்? இங்கு யாருக்கு தான் குறையில்லை. ரிஷியின் நடவடிக்கையில அவருக்கு பார்வையில்லைங்கிறதே சொன்னா தவிர இவங்களுக்கு தெரியபோறதில்லை. முதல்ல வீட்ல எதுஎது எங்கே இருக்கும் எத்தனை அடி நடக்கணும் இது எல்லாத்தையும் ரிஷிகிட்ட சொல்லிடணும் என்று நினைத்தபடி ஸ்கூட்டியில் பறந்தாள்.

செல்லும் வழியில் அலுவலகத்திற்கு அழைத்து விடுப்பு சொன்னவள், ரிஷியின் அபார்ட்மென்ட்டை நோக்கி சென்றாள். அவசரமாக வண்டியை நிறுத்திவிட்டு லிப்டிற்குள் நுழைந்தாள். ரிஷிக்கு அலைபேசியில் அழைத்து விஷயத்தை சொல்லாமல் நேரில் சென்று இந்த மகிழ்ச்சியை கொண்டாட வேண்டும், அவனை கையோடு அழைத்துக் கொண்டு வீட்டில் பேசி திருமண நாளை குறித்து விட வேண்டும், அதற்கு பின் நிருஷிகாவின் எண்ண ஓட்டங்கள் அவளை முகம் சிவக்க வைத்தன.

லிப்ட் நின்று கதவு திறந்தது கூட தெரியாமல் நின்றிருந்தாள். யாரோ அவளை ஒரு மாதிரியாக பார்த்தபடி உள்ளே நுழையவும் சுயம் பெற்றவளாய் வெளியேறி ரிஷி இருக்கும் அறையை நோக்கி சென்றாள்.

அறை பூட்டியிருந்தது, ஒரு வேளை ரிஷி குளித்து கொண்டிருக்கிறாரா? கதிர் அறையை பூட்டிக் கொண்டு போயிருப்பாரோ? சாவி ஏற்கனவே கதிரிடம் கொடுத்து விட்டாமே என்று நினைத்தவள் ரிஷிக்கு போன் செய்தாள். அது அணைத்து வைக்கப்பட்டிருப்பதாய் பதில் வரவும் கதிருக்கு போன் செய்தாள், அதுவும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

குழப்பத்துடன் நின்றிருந்தவளுக்கு முந்தையநாள் இரவு ஏதோ புது பிராஜெக்ட் ரெண்டு நாள்ல முடிச்சு கொடுக்கணும்னு கதிர் சொன்னது நினைவிற்கு வந்தது, ஒருவேள ரெண்டு பேரும் ரெக்கார்டிங்கலயே இருக்காங்களா?

குயிலோசை எப்எமிற்கு போன் செய்தாள். “அங்கே ரிஷி, கதிர் யார் இருந்தாலும் எனக்கு போன் பண்ண சொல்லுங்க”

“ரெண்டு பேரும் இல்லையே”

“எப்போ கிளம்பினாங்க”

“கதிர் நேத்து மதியம் கிளம்பி போனாரு. ரிஷி நேத்து வரவேயில்ல. அவரோட ப்ரோக்ராம கூட வேற ஆள வச்சு தான் பண்ணோம். நீங்க அவங்கள பாத்தா ஆபிசுக்கு போன் பண்ண சொல்லுங்க. எந்த தகவலும் சொல்லாம போனை ஸ்விட்ச் ஆப் பண்ணா எப்படி?” என்று அந்த பக்கம் அவளையே கேள்வி கேட்க, நிருஷிக்கு தலை சுற்றியது.

யாரை விசாரிப்பது என்று தெரியாமல் லிப்டில் கீழே இறங்கினாள். “நீ அவன கழட்டி விடுவேனு நினைச்சா, அவன் உன்னை கழட்டி விட்டுட்டான் போல?” என்ற நக்கலான குரலை கேட்டு நிமிர்ந்து பார்த்தாள்.

அன்று அவளையும் அவள் தாய் மைதிலியையும் பற்றி கேவலமாக பேசிய அபார்ட்மென்டின் செக்ரட்டரி தான் நின்று கொண்டிருந்தார்.

“ராத்திரியோட ராத்திரியா வீட்டை காலி பண்ணிட்டு ரெண்டு பேரும் கிளம்பிட்டானுங்க. என்ன ஏதுனு கேட்டதுக்கு பதிலே சொல்லல. காலைல எந்த கடன்காரன் வந்து நிக்க போறானோனு நினைச்சிட்டு இருந்தேன். பாத்தா நீ வந்து நிக்கறே. பார்வையில்லாதவனா இருந்தாலும் அவன் ஆம்பளனு காட்டிட்டான் பாத்தியா? ரெண்டு ஆம்பளைங்க இருக்கற இடத்துக்கு தனியா வந்து போனா இது தான் நடக்கும். வயித்தை ரொப்பிட்டு கிளம்பிட்டானா?” என்று அவர் தன் பாட்டிற்கு அசிங்கமாக பேசிக் கொண்டே போக, அங்கே நிற்க பிடிக்காமல் அங்கிருந்து வெளியேறினாள்.

ஸ்கூட்டி இருப்பதையும் மறந்து கால் போன போக்கில் கலங்கிய கண்களுடன் நடந்தாள். வழியெங்கும் ரிஷிக்கும் கதிர்மாறனுக்கு பலமுறை போன் செய்தாள். இருவரின் எண்ணுமே அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

(தொடரும்)
 
Last edited:

Author: STN - 94
Article Title: பாவை 11
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
370
83
Chennai
ஏண்டா இப்படி?????
முன்னாடி நாள் மைதிலி - ராஜ் வெளியில் போன விஷயம் கூட ரிஷி பத்தி இருக்குமா??????
 
  • Love
Reactions: STN - 94

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.