• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

பாவை 15

STN - 94

Member
Staff member
“நிரு கதிர் ஆரம்பத்துல இருந்தே குற்ற உணர்ச்சியில இருந்தான். அவன் ஏற்கனவே த***லைக்கு முயற்சி பண்ணியிருக்கான். அது தெரிஞ்சு நான் தான் அவனை தடுத்தேன். பிறவியிலேயே பார்வை இல்லாம இருக்கறது வேற. அவங்க அதுக்கு பழகிடுவாங்க, ஆனா பாதியிலே பார்வையும் போய் பெத்தவங்களையும் இழந்துட்டு நின்னேன். மனசுல எவ்வளவு வலி இருந்தாலும் நான் கதிர் எதிர்ல சின்னதா கூட வருத்தப்பட்டது இல்ல. ஏன்னா என்னோட வலி அவன் மனசுல குற்ற உணர்ச்சிய தூண்டிடும்னு நான் உணர்ச்சியே இல்லாத ஜடம் மாதிரி தான் இருந்தேன்.

உன்னால தான் என் உணர்ச்சி தூண்டப்பட்டுச்சு. அப்பவும் உன் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு தான் உன்னை விட்டுட்டு போனேன். எதிர்பாராத விதமா பார்வை கிடைக்கறதுக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சதும் இழந்த காதல மறுபடியும் அடையலாம்னு என் மனசுல இருந்தத அவன்கிட்ட கொட்டிட்டேன். நான் வேற யார்கிட்ட சொல்லமுடியும்? எனக்குனு யார் இருக்கா நிரு?. நீ மட்டும் என் வாழ்க்கையில இல்லாம இருந்திருந்தா நானும் எதுக்காக வாழணும்னு வேற முடிவ எடுத்திருப்பேன்.

அவன் என்னை ஏமாத்திட்டு போயிட்டான், நீயும் என்னை வெறுத்திடாத. நாம சேர்ந்து வாழணுங்கிறது தான் கதிரோட கடைசி ஆசை. இப்போ நான் வாழறதுக்கான கடைசி ஆதாரம் நீதான். நீ என்னை எவ்வளவு வெறுத்தாலும் நான் உன்னை விடவே மாட்டேன்” என்றவன் அவள் முகமெங்கும் வேகமாக இதழ்பதித்து தனக்குள் அவள் முகத்தை புதைத்து கொண்டான்.

கதிரின் இழப்பினால் கோபமிருந்தாலும் ரிஷி தான் அதற்கு முழுகாரணம் என்று சொல்லமுடியாதே, ஆறுதல் தேடி அவனையே இறுக அணைத்து கொண்டு அவன் மார்பில் முகம் புதைத்து வெகுநேரம் கண்ணீர்விட்டாள், ரிஷியின் கண்ணீர் அவளின் முதுகை நனைத்துக் கொண்டிருந்தது. மெல்ல நிமிர்ந்து “இது நடந்தபின்னாடியாச்சும் என்கிட்ட பேசியிருக்கலாமில்ல” என்றாள் குற்றம்சாட்டும் குரலில்

“கதிரோட பொருளை எல்லாம் எடுத்து பார்த்துட்டு இருந்தப்போ, உன் அப்பா தேவ்ராஜ் விசிட்டிங் கார்ட் கிடைச்சது. கதிரை தான் இழந்துட்டேன், உன்னையாவது இழக்கக்கூடாதுனு நினைச்சு அவருக்கு போன் பண்ணேன்.

“சார் நான் வர்மன் பேசறேன், அன்னைக்கு ரிஷிய தேடி வந்தீங்களே”

“யெஸ் வர்மன் நல்லா ஞாபகமிருக்கு. ஆனா கடைசி வரைக்கும் ரிஷிய மீட் பண்ண முடியல வர்மன். அவர் என் பொண்ணுகிட்ட கூட சொல்லாம எங்கேயோ போயிட்டாரு. ரொம்ப மனசு உடைஞ்சு போயி பித்து பிடிச்சவ மாதிரி சுத்திட்டு இருந்தா. நாங்க அன்னைக்கு முதல்ல ரிஷிய சந்திக்காம உங்கள சந்திச்சது நல்லதா போயிடுச்சு. இல்லனா நாங்க பாட்டுக்கு கல்யாணத்த பேசி முடிச்சிருப்போம். ஓடிப்போனவன், கல்யாணத்துக்கு பின்னாடி ஓடிப்போயிருந்தா என் பொண்ணோட நிலைமை என்னாகறது?

அன்னைக்கு நீங்க பேசினத நானும் மைதிலியும் அபசகுனமா நினைச்சோம். சாரி மிஸ்டர் வர்மன். இன்னைக்கு உங்களால தான் என் பொண்ணுக்கு கல்யாண ரிசப்ஷன் நடந்துட்டு இருக்கு. அட்ரஸ் அனுப்பறேன், முடிஞ்சா காலைல வந்து கல்யாணத்துல ஜாயின் பண்ணிக்கோங்களேன்”

“என்ன சொல்றீங்க? உங்க பொண்ணுக்கு கல்யாணமா? அவங்க ஒத்துக்கிட்டாங்களா?”

“ஆமா வர்மன் அவளோட முழுசம்மதத்தோட தான் கல்யாணம் நடக்குது. மாப்பிள்ளை வேற யாருமில்ல, என் அக்கா பையன் பேரு அஸ்வின்னு சொன்னார்.

இப்போது நிருஷி ரிஷியின் குற்றம் சாட்டும் பார்வையை சந்திக்கமுடியாமல் தலைகுனிந்தாள்

“நான் மனசார தான் உன்னை விட்டுட்டு போனேன். கண்பார்வை திரும்ப கிடைச்சா உன்னை தேடி வரணும், இல்லனா அப்படியே இருந்துடணும்னு இருந்தேன். மனசுக்குள்ள ஒரு ஓரமா நான் வருவேன்னு நீ காத்திருப்பியோன்னு ஒரு நாப்பாசை இருந்துச்சு நிரு. ஆனா நீ இன்னொருத்தன கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டது தெரிஞ்சதும் இதுக்காகவா பார்வை வேணும்னு துடிச்சேன்? இதுக்காகவா என் நண்பன் தன் உயிரை பலி கொடுத்தான்னு வேதனையா இருந்துச்சு. அதே சமயம் உன் கல்யாண வாழ்க்கைய கெடுக்கவும் நான் விரும்பல.

அதனால நான் இந்தியாவுக்கு வராம யுஎஸ்லயே தனியா இருந்தேன். கிடைச்ச வேலைய செஞ்ச பணத்தை சேர்த்து வச்சதுல இந்தியாவுல சின்னதா ஒரு பிசினஸ் தொடங்கினா என்னனு தோணுச்சு. அத காரணமா வச்சு சொந்த நாட்டுக்கு அப்பப்போ போய் வரலாம். ஆனா சென்னைக்கு வந்தா உன்னை பாக்கணும்னு தோணும், அதனால கோயம்பத்தூர்ல ஆடியோ ரெக்கார்டிங் கம்பெனிய தொடங்கினேன். இளங்கோ வேலைக்கு சேர்ந்ததுல இருந்து உண்மையா இருந்ததால அவனையே மேனேஜரா போட்டுட்டு எல்லா பொறுப்பையும் கொடுத்தேன்.

மூணுவருஷமா இந்தியாவுக்கே வராம இருந்தேன். புதுசா வந்த ஆர்டருக்கு செலக்ட் பண்ண வேண்டிய வாய்ஸ் ரெக்கார்டிங்கை இளங்கோ எனக்கு அனுப்பி வச்சப்போ உன்னோட குரல கேட்டேன். நீ குரல மாத்தி பேசியிருந்தாலும், அந்த குரல கேக்கும் போது எனக்கு பட்டுனு உன் ஞாபகம் தான் வந்துச்சு. ஆனா உனக்கு கல்யாணமாகிருச்சு, சென்னையில பெரிய இடத்து பொண்ணு, நீ ஏன் கோவைக்கு வந்து இந்த சின்ன கம்பெனியில வேலை செய்ய போறேனு நினைச்சேன். இருந்தாலும் இந்தியா வரணும், அந்த குரலுக்கு சொந்தக்காரிய நேர்ல பாக்கணும்னு தோணுச்சு. நான் வந்தாலும் எனக்கு பெரிசா உன்னை அடையாளம் தெரியல.

ஆனா நீ என்னை பார்த்தும், என்னோட கண்ணை பார்த்தும் மயங்கினதும் எனக்கு சந்தேகம் வந்திருச்சு. அப்பவும் நீ ஏன் இங்கே இருக்க போறேனு குழப்பமா இருந்துச்சு. ‘ராஜராஜசோழன் நான்’ பாட்ட போட்டதும் உன்னோட முக மாறுதல கவனிச்சேன். எதுக்கும் சென்னைல நீ இருக்கியானு விசாரிச்சு தெரிஞ்சுக்கலாம்னு நீ வராத இந்த ரெண்டு நாளும் நான் சென்னைக்கு போயிருந்தேன்” என்றதும் நிருஷிகா விலுக்கென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

உனக்கு எல்லாம் தெரிந்து விட்டதா? கண்களால் அவள் கேட்ட கேள்வியை புரிந்து கொண்டவனாய் அவன் இமைகளை மூடித்திறக்க, இப்போது ரிஷியை கட்டிக் கொண்டு அழுவது அவளின் முறையாகி போனது.

அவளின் தோள்களை அணைத்து ஆறுதலாய் அவள் உச்சந்தலையில் முத்தமிட்டான். “என்ன நடந்திருந்தாலும் உனக்காக நான் இருப்பேன் நிரு. நீ தைரியமா இரு, எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம்”

வெளியே கதவு சத்தமாக தட்டும் சத்தம் கேட்கவும் அவளை விட்டு பிரிந்து அவசரமாக கதவை திறந்தான். அவனை தாண்டிக் கொண்டு அஞ்சலி உள்ளே நுழைந்திருந்தாள். அவள் ரிஷியை சந்தேகமாக பார்த்து விட்டு தோழியை கவனித்தாள். அவள் கண்கள் கலங்கி, முகம் சிவந்து, ஆடை நலுங்கி இதழ்கள் தடித்து வீங்கியிருப்பதையும் கண்டவளுக்கு சுறுக்கென்று கோபம் வந்து விட்டது.

“நிகா, இந்த ரிஷிவர்மன் உள்ளே வந்ததும் ரவி சார் வெளியே போனாரு, நான் ரெக்கார்டிங் முடிச்சு வந்த பிறகும் அவர் வரலனு தெரிஞ்சதும், எனக்கு சந்தேகமாயிடுச்சு. அதான் என்ன ஆனாலும் சரினு கதவ தட்டினேன். இவரால உனக்கு பிரச்சனையா இருக்குமோனு நான் நினைச்சது சரியா போயிடுச்சு” என்றவள் ரிஷியை பார்த்து முறைத்தாள்.

“ஹலோ சார், உங்க ஆபிஸ்ல வேலை செய்யற பொண்ணுக்கிட்ட இப்படி தான் நடந்துக்குவீங்களா? கேக்க ஆளில்லனு நினைச்சீங்களா? வந்த முத நாளே உங்க வேலைய ஆரம்பிச்சிருக்கீங்க, அதான் பயத்துல மயங்கிட்டா. பட்டபகல்ல எல்லாரும் வந்து போற ஆபிஸ்ல கதவை சாத்திட்டு நிகாகிட்ட தப்பா நடந்துக்க பாத்திருக்கீங்க. இத நான் சும்மா விடமாட்டேன். இப்பவே போலீஸ்க்கு கால் பண்றேன்” என்றாள் கோபத்துடன்

“அஞ்சலி கொஞ்சம் பொறுமையா இரு, அப்புறமா பேசிக்கலாம்” என்றாள் நிருஷிகா மெல்லிய குரலில்

“நீ ஒரு அப்பாவி, வாய தொறந்து எதுவும் பேசமாட்டேனு நல்லா தெரிஞ்சு தான் இந்தாளு இப்படியெல்லாம் பண்றாரு. இவருக்கு பயந்து நீயேன் ஊர விட்டு போகணும்னு நினைக்கிறே. இவரோட ஆபிஸ் இல்லனா வேற ஆபிஸ், நீ எதுக்கும் பயப்படாத நிகா, நானிருக்கேன்”

அஞ்சலியின் கோபத்தை கைகட்டியபடி பார்த்துக் கொண்டிருந்த ரிஷி, அவளின் வார்த்தைகளில் அதிர்ந்து, “நிரு, என்னை அவாய்ட் பண்ண ஊர விட்டு போகணும்னு இருந்தியா?” என்றான் லேசான கோபத்துடன்

நிருஷிகா பதிலளிக்காமல் தலை குனிந்து கொண்டாள். ரிஷியின் நிரு என்ற அழைப்பும் நிருஷிகாவின் அமைதியும் அஞ்சலியை திகைக்க வைத்தது.

“கேக்கறேன் இல்ல நிருஷி? என்மேல இருந்த கோபத்துல உன்னை வெளிகாட்டிக்காம இருந்தேனு நினைச்சேன். ஆனா என்மேல நம்பிக்கையில்லாம என்கிட்ட இருந்து ஓடி ஒளிய நினைச்சிருக்கே, அப்படித்தானே”

“ரிஷி, இதப்பத்தி அப்புறம் பேசிக்கலாம்” என்றாள் கெஞ்சுதலாக

“நோ, எனக்கு இப்பவே தெரியணும்” என்றான் அவளை அழுத்தமாக பார்த்து

நிருஷிகா சங்கடமாக அஞ்சலியையும் ரிஷியையும் பார்க்க, “நிகா உனக்கு ரிஷி சாரை ஏற்கனவே தெரியுமா?” கேட்டாள் அஞ்சலி

அவள் ஆமாம் என்பதாக தலையாட்ட, “சாரி, நான் தான் தேவையில்லாம உங்க நடுவுல வந்துட்டேன் போல” என்று வெளியே செல்ல எத்தனித்தாள்

“அஞ்சலி, இளங்கோ கிட்ட சொல்லி ரவிக்கு வேற வேலை கொடுக்க சொல்லுங்க. இன்னும் ஒரு மணிநேரத்துக்கு இந்த ரூம் கதவ யாரும் தட்டாம பாத்துக்கோங்க” என்றான் அதிகாரத்துடன்

“ரிஷி, ஆபிஸ்ல இருக்கறவங்க என்ன நினைப்பாங்க? நான் போறேன், ரவி சார் வந்த பின்னாடி உள்ளே வரேன்” என்றவள் அஞ்சலியின் பின்னால் செல்ல முயல, ரிஷி அவளின் கரம் பற்றி இழுத்தணைத்து, “என்னை விட்டு விலகி போகணும்னு நினைக்காத நிருஷிகா. இனி நீ எந்த மூலைல இருந்தாலும் உன்னை விட மாட்டேன். உனக்காக நான் எந்த எல்லைக்கும் போக தயார், மைன்ட் இட்” என்றவன் அவளின் கன்னத்தில் முத்தமிட்ட பின்பே அவளை விடுவித்தான்.

‘விஷயம் தெரியாம முந்திரி கொட்ட மாதிரி உள்ளார வந்து இப்படி மொக்க வாங்கினதுமில்லாம ப்ரீ ஷோ வேற பாக்க வேண்டியதா போச்சே’ என்று மனதிற்குள் புலம்பியபடி வெளியேறினாள் அஞ்சலி.

அவளுடன் வெளியே வந்த நிருஷிகா தோழியை அழைத்தாள்.

“உன் பேரு நிகா இல்லயா? நிருஷிகாவா?”

“நிருஷிகாவ தான் நிகானு சுருக்கி சொன்னேன்” என்றாள் மெல்லிய குரலில்

“நான் உன்கிட்ட என்னோட எல்லா விஷயத்தையும் சொல்லியிருக்கேன். ஆனா நீ உன் பேரை கூட முழுசா என்கிட்ட சொன்னதில்ல. நான் தான் உன்னை பிரெண்டா நினைச்சிருக்கேன். நீ எப்பவுமே என்னை பிரெண்டா ஏத்துக்கிட்டதேயில்ல, அப்படித்தானே?” என்றாள் ஆற்றாமையுடன்

“அப்படியெல்லாம் இல்ல அஞ்சலி, எனக்கு பெரிசா நெருங்கிய நட்புனு இருந்ததேயில்ல. அந்த இடத்துல இந்த ஒருவருஷமா நீ மட்டும் தான் இருந்தே. என்னோட நிலைமை சரியானதும் நானே உன்கிட்ட எல்லாத்தையும் விவரமா சொல்றேன். ப்ளீஸ் தப்பா நினைக்காதே”

“சரி போகட்டும், நெருங்கிய நட்புனு யாருமில்லனு எப்படி சொல்றே? ரிஷி வர்மனுக்கும் உனக்கும் நெருக்கமில்லனு மட்டும் என்கிட்ட பொய் சொல்லாத. உங்க நெருக்கத்தை கண்ணால பாத்துட்டேன்” என்றாள் சீண்டும் குரலில்

நிருஷிகாவின் கன்னம் தன்னைமீறி லேசாக சிவந்தது. அதற்குள் ரவி வந்துவிட்டதால் அவர் “நிகா” என்று அழைக்க, மீண்டும் ரெக்கார்டிங் அறைக்கு சென்றாள். கன்ட்ரோல் அறையில் ரிஷியும் அமர்ந்து கொண்டு ரெக்கார்டிங் அறையில் இருப்பவளை கண்கொட்டாமல் பார்த்தபடி அவளின் குரலை கேட்டு கொண்டிருந்தான்.

அவனின் அழுத்தமான பார்வையில் கதிர்மாறன் என்னும் நண்பனின் நினைவுகளே எழவும் அவனை நினைத்து நிருஷிக்கு குரல் தழுதழுத்தது. தன்னால் தான் அவளால் இயல்பாக பேசமுடியவில்லை என்று உணர்ந்து கொண்ட ரிஷி எழுந்து வெளியே சென்று விட்டான்.

அவர்களின் ரெக்கார்டிங் முடிய தாமதமானதால் அஞ்சலி வேலையிருப்பதாக சொல்லி கிளம்பி விட்டிருந்தாள். நிருஷிகா வெளியே வரும்போது இருட்டிவிட்டதால் ஆட்டோவில் செல்லலாம் என்று நினைத்தபடி வெளியே வர, அங்கே ரிஷிவர்மன் அவளுக்காக கார்கதவை திறந்து விட்டான்.

“இல்ல, நான் ஆட்டோவுல பாேய்க்கறேன்” என்றாள் மறுப்பாக

“நிரு, பிடிவாதம் பிடிக்காம கார்ல ஏறு உன்கிட்ட பேசணும்”

“பேசறதுக்கு எதுவுமில்ல ரிஷி. நீங்க சொல்லிக்காம போனதால ஏற்பட்ட ஏமாற்றத்துக்கு கொஞ்சமும் குறைவில்லாத ஏமாற்றம் கதிரோட இழப்பு. முதலாவத கூட என்னால மன்னிச்சிட முடியும், ஆனா கதிரை இழந்தத என்னால மறக்க முடியாது.” என்றவளுக்கு பேச முடியாமல் குரல் கமறவும், அவளின் கரம் பற்றி வேகமாக காருக்குள் தள்ளி அவனும் ஏறி அமர்ந்தான்.

அவளின் கன்னங்களை இருகரங்களால் ஏந்தி, “உன்னை விட கதிரோட இழப்பு எனக்கு ஈடுசெய்யவே முடியாதது நிரு. இதுக்கு நான் தான் காரணம்னு நீ நினைச்சா என்ன தண்டனை வேணும்னாலும் கொடு, ஆனா என்கூடவே இருந்து அதை கொடு”

“கூடவே இருக்கறதா? உங்க கண்ணை பார்த்தாலே கதிர் தானே நினைவுக்கு வர்றான். உங்கள எப்படி காதலனா பாக்கறது?”

“கண்ணுல லென்ஸ் போட்டு இந்த பச்சை நிற கண்ணை என்னால மறைக்க முடியும். ஆனா நான் அதை விரும்பல. பார்வை போனதிலிருந்து கதிர் தான் எனக்கு கண்ணா இருந்தான். இப்போ என்னோட கண்ணுலயே இருக்கான். இந்த கண்ணால தான் கதிர் என்கூடவே இருக்கறதா நான் பீல் பண்றேன் நிரு. இல்லனா மொத்தமா உடைஞ்சு போயிருப்பேன். நாம காதலிக்கறதுக்கு முன்னாடி மூணு பேரும் ப்ரெண்ட்ஸா தானே இருந்தோம். அதுமாதிரி என்கூடவே இரு நிரு. உன் மனசு மாற்ர வரைக்கும் நான் காத்திருப்பேன்”

“முடியாது”

“உன் குடும்பத்தை காப்பாத்தற வரைக்குமாவது என் பேச்சை கேளு”

“நான் அவங்கள காப்பாத்திக்கிறேன்”

“கோர்ட் கேஸ்னு நீ அலைஞ்சிட்டு இருந்தா உன் அம்மாவ எப்போ வெளியே கொண்டு வரப்போறே? நீ கோவைல வேலை செஞ்சிட்டு இருந்தா சென்னைல எல்லாம் தானா நடந்துடுமா?” என்றான் சூடான குரலில்

அது நன்றாகவே வேலை செய்ய நிருஷிகா திகைப்புடன் ரிஷியை பார்த்தாள். அவளின் முடியை ஒதுக்கிவிட்டபடி மென்மையாக பேசினான்.

“நிரு இங்கே வேலை பாக்கறதா உனக்கு முக்கியம்? உன் பிரச்சனைய தீர்க்க வேணாமா? சென்னைக்கு போகலாம்டா, என்கூட கிளம்பு”

“சென்னைக்கா?”

“ஆமா”

நிருஷிகா தயக்கத்துடன் அவனை பார்க்க, “எல்லாத்தையும் நான் சரி பண்றேன் நிரு. என்மேல நம்பிக்கையிருந்தா என்கூட வா” என்றான்.

மறுபேச்சின்றி காரில் ஏறி கொண்டாள். கார் சென்னையை நோக்கி விரைந்தது. வழியில் சாப்பிட வைத்தான்.

“என்ன நடந்துச்சு நிரு? தேவ்ராஜ் சாருக்கு என்ன ஆச்சு? உன் அம்மா மேல யார் கேஸ் கொடுத்தது? புவன் புவனிகா எங்கே? நீ எப்படி இங்கே வந்தே?”

“ரிசப்ஷன் நடந்தப்போ உங்க கிட்ட அப்பா பேசினாருனு சொன்னீங்களே அது தான் அவர் கடைசியா பேசினது. அன்னைக்கு ராத்திரியே அவருக்கு மூணாவது தடவையா ஹெவியா ஸ்ட்ரோக் வந்துடுச்சு. உடனே ஆஸ்பிட்டலுக்கு கொண்டு போனோம், கொஞ்ச நேரத்துல கோமா ஸ்டேஜ்க்கு போயிட்டாருனு சொன்னாங்க. நல்லாதானே பேசிட்டு இருந்தாருனு சந்தேகப்பட்டு நானும் அம்மாவும் முழுசா டெஸ்ட் பண்ண சொன்னாேம்.

அவரை டெஸ்ட் பண்ண டாக்டர்ஸ் அவருக்கு ரொம்ப நாளாவே ஸ்லோ பாய்ஸன் கொடுக்கப்பட்டிருக்கு அதனால அவரோட மூளைக்கு போற நரம்புகள் ரொம்ப பலவீனமாகியிருக்குனு ரிப்போர்ட் கொடுத்தாங்க. விஷம் கொடுக்கப்பட்டிருக்கறது தெரிஞ்சதும் அவங்க போலீஸ்க்கும் தகவல் சொல்லியிருக்காங்க.

போலீஸ் எங்களையும் அஸ்வின் குடும்பம், ஆபிஸ், தொழில்முறை எதிரினு எல்லாரையும் விசாரிச்சாங்க. எல்லாரும் சொன்ன ஒரே பதில் அவர் வீட்டு சாப்பாட்டை தவிர வேற எங்கேயும் வெளியே சாப்பிட மாட்டார்ங்கறத தான். அது உண்மையும் கூட. அப்பா எப்பவும் அம்மா சமைச்சத தான் சாப்பிடுவாரு. அதுக்கப்புறம் அம்மாவை விசாரிச்சாங்க, ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டவங்கனு சொன்னதும் அவங்களுக்கு டவுட் வந்துடுச்சு. இதுல அப்பா வேற சொத்துக்களை என் பேருக்கு சிலத மாத்தி வச்சிருக்காரு. சோ சொத்துக்காக அம்மாவும் நானும் அப்பாவுக்கு ஸ்லோ பாய்ஸன் கொடுத்திருக்கலாம்னு சந்தேகப்பட்டு அரெஸ்ட் பண்ணிட்டாங்க.

ஆனா நாங்க அப்படி எதுவும் செய்யல ரிஷி, மாலினி ஆன்ட்டியும் அஸ்வினும் என்ன சொல்றதுனு தெரியாம குழப்பத்தோட இருந்தாங்க. எங்கள யாருமே நம்பல, ரெண்டு பேரையும் அரெஸ்ட் பண்ணிட்டாங்க. மீடியா, நியூஸ்பேப்பர்னு எங்க பேரை போட்டு அசிங்கப்படுத்திட்டாங்க. அம்மா என்ன நினைச்சாங்களோ தெரியல. கோர்ட்ல அவங்க தான் செஞ்சதா ஒத்துக்கிட்டாங்க, எனக்கு இதுல எந்த சம்மந்தமும் இல்லனு சொல்லி என்னை ரிலீஸ் பண்ண சொல்லி கேட்டாங்க.

அம்மா கண்டிப்பா இதை செஞ்சிருக்கமாட்டாங்கனு எனக்கு நல்லா தெரியும், ஏன் இப்படி சொன்னாங்கனு எனக்கு ஷாக்கா இருந்துச்சு, வெளிய வந்ததும் வக்கீல அழைச்சுட்டு போய் கேட்டேன். இத யாரோ பண்ணி நம்பள சிக்க வச்சிருக்காங்க. ரெண்டு பேரும் மாட்டிக்கிட்டு வாழ்க்கைய தொலைக்க வேணாம். என் வாழ்க்கை முடிஞ்சிருச்சு, நீயாச்சும் வெளியே இரு, புவன் புவனிகாவ ஹாஸ்டல்ல சேர்த்துடு உன்னால அவங்கள கவனிக்க முடியாதுனு சொன்னாங்க. எனக்கு என்ன பண்றதுனு தெரியல. வக்கீலுக்கு பீஸ் கொடுக்க கூட என்கிட்ட பணமில்ல. ஏற்கனவே என் அம்மாவ பத்தி தப்பா பேசிட்டு இருந்த ஜனங்க, சொத்துக்காக கொலை செய்யற அளவுக்கு அம்மாவும் பொண்ணும் துணிஞ்சிட்டாங்கனு பேச ஆரம்பிச்சிட்டாங்க. எனக்கு அங்கே இருக்கவே புடிக்கல.

அதான் புவன் புவனிகாவை ஹாஸ்டல்ல சேர்த்துட்டு, சென்னைய விட்டு கோவை வந்துட்டேன். அவங்களுக்கு பணம் கட்டவும் வக்கீலுக்கு பீஸ் கொடுக்கவும், என்னை பாத்துக்கவும் பணம் தேவை பட்டுச்சு. என்னோட சர்டிபிகேட் எல்லாம் நாங்க இருந்த வீட்ல தான் இருக்குது. எனக்கு அங்கே போய் அத கேட்க பிடிக்காம இந்த ஸ்டுடியோவுல வேலைக்கு சேர்ந்தேன். என் பேரு, அப்பா அம்மா பேரை சொன்னாலே எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்னு அவங்களும் என்னை வேலைக்கு சேர்த்துக்கமாட்டாங்களோனு நினைச்சு என்னை பத்தி எதுவும் பெரிசா சொல்லாம என் பேரு நிகானு மட்டும் சொல்லி இந்த வேலைக்கு சேர்ந்துட்டேன்”

“அஸ்வின், மாலினி, இவங்க யாரு?”

“அப்பாவோட அக்கா மாலினி, அவங்க பையன் அஸ்வின்”

“அவனை தானே உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க போறதா உன் அப்பா போன்ல சொன்னாரு?” ஸ்டிரியங்கை பிடித்திருந்த ரிஷியின் கைகள் முறுக்கேறுவதையும் அவன் முகம் இறுகுவதையும் கண்டவள் அவரசமாக சொன்னாள்.

“சாரி ரிஷி, அந்த கல்யாண ஏற்பாடும் அப்பாவுக்காக தான் நடந்துச்சு”

“அப்பாவுக்காகவா? நீயெப்போ மிஸ்டர் ராஜ்ஜை அப்பாவா ஏத்துகிட்ட? அவர் பேச்சை மீறாதா மகளா எப்போ மாறின நிரு?” என்றான் ஆச்சர்யத்துடன்

“அம்மாவுக்கும் அப்பாவுக்கும் எந்த சூழ்நிலைல கல்யாணமாச்சுனு தெரிஞ்சுக்கிட்டேன். அப்போ தான் அவர் எவ்வளவு நல்லவர்னு தெரிஞ்சது. அவருக்காக எதையும் செய்யலாம்னு தோணுச்சு”

புருவமுடிச்சுடன் நிருஷிகாவை பார்த்த ரிஷி “முதல்ல இருந்து என்ன நடந்துச்சுனு விவரமா சொல்லேன் நிரு” என்றான்


(தொடரும்)
 

Attachments

Last edited:
Top Bottom