• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

புனர்ஜென்ம பந்தமடி நீ எனக்கு - 12

Vishakini

Moderator
Staff member
புனர்ஜென்மம் 12

அந்த வாரக் கடைசி விடுமுறை நாளில் தோழமைகள் எல்லாம் ஒன்று கூடினார்கள்.


“கல்யாண வேலை எல்லாம் தடபுடலா நடந்துட்டிருக்கு போல?? ஏதாவது உதவி வேணும்னா கேளு” என்று தோழன் ஒருவன் கூறினான்.

“மாப்பிள்ளை இப்பவே பொண்ணுக்கூட டூயட் பாட ஆரம்பிச்சுட்டாரு போல??” என்று மற்றொருவன் கிண்டல்டித்தான்.

“ஆமா ஹனிமூன் எங்க போறீங்க?” என்று இன்னொருவன் கேட்டான்.

“அட கல்யாண பொண்ணு கிட்ட எப்படி பேசுறதுன்னு ரிகர்சல் பார்த்துட்டு இருக்கான் போல?” என்றான் மற்றொருவன்.

ஏம்பா அவனை டிஸ்டர்ப் பண்றீங்க?” என்றான் இன்னொருவன்.

‘இவனுங்க வேற?’ என்று மனதிற்குள் நினைத்தவன்.

“அதெல்லாம் ஒன்னுமில்ல” என்று கூறி மழுப்பினான்.

எல்லோரும் அவனைக் கிண்டல் அடித்துக் கொண்டிருந்தாலும், அவன் கவனம் முழுவதும், ஸ்ரீ என்ற பெயர் கொண்ட தன் வருங்கால மனைவியின் நினைவிலேயே இருந்தது. அவளுக்குத் தன்னை தெரியுமா, தெரியாதா?? ஞாபகம் இருக்கிறதா, இல்லையா?? மனம் முழுவதும் அதிலேயே சுழன்று கொண்டிருந்தது.

…….

நலங்குகள் எல்லாம் முடிவடைந்து வரவேற்பு நாளும் தொடங்கிவிட்டது. அவன் குழப்பம் மட்டும் அன்று வரை தீரவில்லை. இதற்கு மேல் எதுவென்றாலும் அது திருமணம் முடிந்த பிறகு தான் என்று முடிவெடுத்துக் கொண்டான். ஆனால் தன்னை அவளுக்கு வெளிப்படுத்தி விட வேண்டும் என்ற முடிவில் திடமாக இருந்தான்.

மண்டபம், சமையல், போட்டோகிராபர் இப்படி எல்லா வேலைகளையும் பெண்ணின் தகப்பனும், அக்காள் கணவனும் சேர்ந்து பார்த்துக் கொள்வதாகத் தாய்க்கூறி விட. அதற்கு மேல் அவன் எதிலும் தலையிடவில்லை. வீடு பரபரப்பை தொற்றிக் கொண்டது. அவனுக்கான உடைகள் வந்து சேர அதை உடுத்திக் கொண்டு நேர்த்தியாகத் திருமண மண்டபத்திற்கு சென்றான்.

அவன் சென்ற சிறிது நேரத்தில் மணமகளும் வந்து சேர்ந்தாள். அவன் பார்வை அவளைத் தேடியது.


சொந்தங்கள் சூல சிவப்பு வண்ண லேகங்காவில் நடந்து வந்தாள் பாவையவள். ‘அவளைக் கடைசியாக எப்பொழுது பார்த்தது??’ அவன் சிந்தனை வயப்பட்டான்.

‘கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு மேலாகிறது. ஆனால் அன்று பார்த்தது போலவே இன்றும் இருந்தாள். பெரிதாக எந்தவித மாற்றங்களும் நிகழ்ந்துவிடவில்லை’ என்று அவனுடைய லேசர் கண்கள் அளவெடுத்து உணர்த்தியது அவனுக்கு.

“என்ன மாப்பிள்ளை?? பொண்ணு ரொம்ப அழகா இருக்காள் போல?? வச்ச கண்ணு வாங்காம பாக்குறீங்க?” தோழர்கள் அவனைக் கிண்டல் செய்ய.

அவன் கண்களை மூடித் திறந்தான். அதற்குள் அவள் அங்கிருந்து சென்றிருந்தாள். இன்னுமே அவனுக்குக் குழப்பம் மேலோங்கி இருந்தது. இந்தப் பெண் தன்னை திருமணம் செய்ய எப்படி ஒத்துக் கொண்டால் என்று??

அவனைத் தனியாக அழைத்து வந்த அவனுடைய கல்லூரி தோழன். “டேய் இந்தப் பொண்ணு?” என்று கேள்வியாக நிறுத்தினான். அதற்கு மேல் எப்படி கேட்பது என்று அவனுக்கே தெரியவில்லை.

“நான் பொண்ணு பார்க்கப் போகல. அதனால எனக்கு இதுதான் பொண்ணுன்னு தெரியாது?” என்றான் மெல்லிய குரலில்.

அவன் மட்டும்தான் கல்லூரி தோழனாக இத்தனை வருடங்கள் தோழமையே வளர்த்துக் கொண்டிருப்பது. மற்றவர்களை எல்லாம் அவனே கட் செய்துவிட்டான். ஸ்ரீதர் என்கின்ற இவனை மட்டும் தான் திருமணத்திற்கும் அழைத்திருந்தான். மற்றவர்கள் எல்லாம் பள்ளி தோழமைகள், தொழில் சம்பந்தமாக பழக்கமானவர்கள்.

“அந்தப் பொண்ணுக்கு உன்னை ஞாபகம் இல்லையா?” என்று கேட்டான் ஸ்ரீதர்.

“தெரியல, எனக்கும் லாஸ்ட் வீக் தான் தெரிஞ்சது. பேசணுமா, பேசக்கூடாதான்னு யோசிச்சிட்டிருந்தேன். அக்கா கிட்டயும் போன் நம்பர் வாங்கினேன். ஆனா அம்மா செத்துருவேன் அது இதுன்னு பயமுறுத்துறதுனால போன் பண்ண தைரியம் வரல” என்று கூறினான்.


அவன் தோள்களைத் தட்டிக் கொடுத்தான்.

“ரொம்ப நல்ல பொண்ணு. அது நமக்குத் தெரியும்” என்று கூறினான்.

“ஆனா நான் அவளுக்குப் பொருத்தமானவன் இல்லைன்னு தோணுது. ஒருவேளை பழைய விஷயங்கள் ஞாபகம் வந்தா வாழ்க்கை நரகமாகிடுமோனு தோணுது” என்று ராஜ் கூற.

“ஏன்டா அப்படி சொல்ற?? நீ என்ன தப்பு பண்ண?? யாரோ பண்ண தப்பை நீ சுமக்காத. உன் மேல எந்தத் தப்பும் இல்லை. நீயும் நல்லவன் தான். அதனால தான் உனக்கு நல்ல பொண்ணு அமைஞ்சு இருக்காள். பழசை எல்லாம் மறந்துட்டு அந்தப் பொண்ணு கூடச் சந்தோஷமா வாழப்பாரு. உன் அம்மா உனக்கு நல்லது தான் பண்ணி வச்சிருக்காங்க. அதுக்காகக் கொஞ்சம் அடம் பிடிக்கிறாங்க. ஆனா அதுவும் நல்லதுக்கு தான். இல்லன்னா நீ எல்லாம் கல்யாணத்துக்கு ஒத்துக்குவியா?? நீ இனிமேல் சந்தோஷமா இருப்பேன்னு எனக்குத் தோணுது” என்று ஒரு நல்ல தோழனாக அவனை அப்பொழுதே வாழ்த்தினான் ஸ்ரீதர்.

ஆனால் அவனுக்கு அது எல்லாம் புரியவில்லை. ‘ஏன் இவ்வளவு நாள் தான் சந்தோஷமாக இல்லையா?’ என்று மனம் கேள்வி கேட்டது. அதை அவன் தோழனிடம் வெளிப்படுத்தவில்லை. ‘அடுத்த நாள் இரவு அவளிடம் முதலில் பேசி விட வேண்டும்’ என்ற முடிவை எடுத்து விட்டான்.


முதலில் பரியம் போட்டார்கள். நிச்சயம் போல வாசித்தார்கள். மறுநாள் திருமணம் நடக்க இருப்பதை வெளிப்படுத்தினார்கள். பெரியவர்கள் எல்லாம் மேடையிலிருந்து இறங்கிய பிறகு. வரவேற்பு நிகழ்வு ஆரம்பமானது.

அவன் முதலில் மேடை ஏறி நின்று கொள்ள. அவனுடைய தமக்கை தான் அவளை அழைத்து வந்து அருகில் நிறுத்தினாள். அவள் தன் அருகில் வரும் வரை அவளைப் பார்த்திருந்தவன். அதன் பிறகு அங்குக் கூடி இருந்த மக்களைப் பார்க்க ஆரம்பித்து விட்டான்.


படபடப்பு கூடி கொண்டது ராஜ்கு. அதை வெளிப்படுத்தாமல் இருக்க மிகச் சிரமப்பட்டான். அவள் சாதாரணமாக வந்து நின்று விட்டாள். அவளுக்கு அந்தப் படபடப்பு இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை???.

இப்பொழுது இன்னும் அவனுக்குச் சந்தேகம் வழுக்க ஆரம்பித்தது. அவளைத் தனக்கு ஞாபகம் இருக்கிறதா இல்லையா என்று?? அத்தனை நாட்கள் கட்டுப்படுத்தி வைத்திருந்தவன். அப்பொழுது கட்டுப்படுத்த முடியாமல் தவித்துப் போனான். மனது மட்டுமல்லாமல், உதடுகளும் படபடத்தது.


செயற்கை புன்னகையோடு தலையாட்டியபடி கொலுவில் இருக்கும் பொம்மையைப் போல நின்றிருந்தான். இருவருமே தங்கள் துணைகளின் பக்கம் தலையைத் திரும்பவே இல்லை.


ஒரு கட்டத்தில் எல்லாம் முடிவடைந்திருக்க. கூட்டங்கள் எல்லாம் உணவிற்கு சென்றிருக்க. அவர்கள் மட்டும் தனித்து நின்றார்கள்.

மீண்டும் அவனுக்குள் போராட்டம். கேட்கலாமா வேண்டாமா என்று?? அவனுக்குள் குழப்பங்கள் அதிகரித்திருந்தது. மறுநாள் இரவு தனிமையில் பேசிக் கொள்ளலாம் என்று நினைத்தவையெல்லாம் காணாமல் போயிருந்தது.

அவள் நெருங்கியபிறகு, பதட்டம் கூடிக் கொண்டதனால் பேசிவிட வேண்டும் என்ற பதைபதைப்பும் அதிகரித்தது.

அவன் வாயைத் திறப்பதற்கு முன்பாக அவன் தனியாக இருப்பதை உணர்ந்து அவனுடைய தமக்கை மேலே ஏறி வந்தாள். அவன் அமைதியானான்.

ஸ்ரீ ஆர்வமாக நாத்தனாரை பார்க்க. நெருங்கி வந்தவள்.

“ராஜ் அப்பா ஓரமா ஒக்காந்து இருக்காருரா. நீ சம்மதிச்சனா அவரையும் கூட்டிட்டு வந்து ஒரே ஒரு போட்டோ எடுத்துக்கலாம் டா ப்ளீஸ்” என்று கெஞ்சினாள்.


“உனக்கு இந்தக் கல்யாணம் நடக்கணுமா வேண்டாமா??” அவன் அழுத்தமாக கேட்டான்.


“டேய் எதுக்குடா பெரிய பெரிய வார்த்தை எல்லாம் பேசுற?? அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு??” என்று கேட்டாள்.

“முதல்ல அந்த மனுஷனுக்கு யார் இன்விடேஷன் வச்சது?? அவர் எதுக்கு என் கல்யாணத்துக்கு வந்தாரு?? அவர் மட்டும்தான் வந்திருக்கிறாரா? இல்ல அவரோட அந்த எடுப்பு தொடுப்பு எல்லாத்தையும் இழுத்துட்டு வந்திருக்காரா??” அழுத்தமான வார்த்தைகள்.

கல்லூரியில் அவள் உடல் நடுங்கியது போல இப்போதும் உடல் நடுங்கியது.

“டேய் ஸ்ரீ இருக்காள். எதுக்கு இப்படி பேசுற?? அவள் பயப்படுறாள் பாரு” என்று கூறினாள்..

அவன் திரும்பி அவளைப் பார்த்தான். அவள் கைகளைப் பிசைந்து கொண்டு நின்றிருந்தாள்.

பிறகு தான் நிதானித்தான்.

எச்சிலை உள் கூட்டி விழுங்கினான். “உனக்கு உண்மையிலேயே அவர் மேல அக்கறை இருந்தா தயவு செஞ்சு அப்படியே அனுப்பி வச்சிடு. அவர் இங்க இருந்தாருனா மாலையைக் கழட்டி போட்டுட்டு நான் பாட்டுக்குப் போய்கிட்டே இருப்பேன்” என்றான். ஏனோ அவன் தந்தை என்று வரும்போது அவனுடன் நிதானம் தப்பி விடுகிறது.


“பெரிய பெரிய வார்த்தை எல்லாம் பேசாத ராஜ். உன்னை நம்பி பொண்ணு குடுத்திருக்காங்க. உன்னை நம்பி ஒருத்தி மேடையில உன் பக்கத்துல நின்னுட்டிருக்காள். இதெல்லாம் தெரிஞ்சும், யார் மேலையோ இருக்கிற கோபத்தை. எப்படியோ வெளிப்படுத்தற? சரி விடு. நான் அவர்கிட்ட சொல்லிப் புரிய வச்சுக்கிறேன். நீ அமைதியா இரு” என்று கைகளில் அழுத்தம் கொடுத்துவிட்டு நகர்ந்தாள்.


அவள் அப்படி நகர. அவன் மன்னிப்பு கேட்கலாம் என்று நினைக்க. அதற்குள் தாய் மேடை ஏறினார்.

அவளை அப்படியே விட்டுவிட்டு அவன் அவரை நோக்கி நடந்தான். அவரைப் பிடித்துக் கொண்டு அவன் அறைக்கு அழைத்துச் சென்றான்.

மேடையில் தனியாக நின்றிருந்தாள் ஸ்ரீ.

“என்னங்க இது? நம்ம பொண்ணு இப்படி அனாதையா நிக்க வச்சுட்டு போய்ட்டாங்க??” என்று கேட்டபடி கல்பனா பரிதவிப்பாக மேடை ஏறித் தன் ஒற்றை மகளின் கையைப் பிடித்துக் கொண்டார்.

ஆனால் அவளுக்கு அவன் கோபம் புதிதில்லை. அந்தச் செயலும் புதிதில்லை. அவனுக்குக் கோபம் வந்தால் சுற்றி இருக்கும் எதையும் சிந்திக்க மாட்டான். அது அவளுக்கு நன்றாகவே தெரியும்.

அதனால் தாயின் கையில் அழுத்தம் கொடுத்து.

“இல்லம்மா ஏதோ பிரச்சனை. அதான் அவங்க அம்மாவ கூப்பிட்டுகிட்டு பேசப் போயிருக்காங்க. என்கிட்ட சொல்லிட்டுத்தான் போனாரு” என்று தன் வருங்கால கணவனுக்காகத் தோள் கொடுத்தாள்.

கணவனை விட்டுக் கொடுக்காமல் பேசும் மகளை பாதூரமாகப் பார்த்தனர் பெற்றவர்கள்.

அதன் பிறகு அவன் மேடை ஏறவில்லை. பிறகு இவர்களாகத் தான் சென்று மணமக்கள் சாப்பிட வேண்டும் என்று அழைத்து வந்தார்கள். அவளுடன் அமைதியாக நடந்தான். எல்லோரும் ஒன்றாக அமர்ந்தார்கள்.

அஷ்டலட்சுமி முகத்தில் மட்டும் கண்ணீர் வடிந்தது. ஆயிரம் தான் இருந்தாலும் அவனுடைய தகப்பன் அவர் தானே??.

அவன் ஒதுக்கி வைப்பது தவறில்லை. ஆனால் திருமணத்தில் கூட ஒதுக்கி வைப்பது, யாரோ போல மூன்றாவது மனிதர் போலத் தூரமாக நின்று பார்த்து விட்டுச் செல்வது, அதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

அவர் அஷ்டலட்சுமிக்கு தான் துரோகம் செய்தார். காலம் கடந்து விட்டது. அவர் அதை ஏற்றுக்கொண்டு மன்னிக்கக் கூட தயாராக இருக்கிறார்.

பிள்ளைகளுக்கு அவர்தான் தகப்பன் அல்லவா?? அதை எக்காலத்திலும் மாற்ற முடியாது எனும் போது, தன்னுடைய ஏமாற்றங்களை ஓரம் நிறுத்திவிட்டு அவர் வரும்போதும் போகும்போதும் சகஜமாகப் பேசி அனுப்பி வைப்பார். ஆனால் அதற்காகக் கணவன் மனைவியாக அவரால் வாழ முடியாது. அதை மட்டும் கணவனுக்கு உணர்த்திவிட்டார். அதை அவரும் புரிந்து கொண்டு சென்று விட்டார்.


ஆனால் இன்று ஒரே மகனின் திருமணம் அல்லவா?? அதற்கு இப்படி தூரம் நிறுத்துவது அவருக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. பெரிய பெண்ணின் திருமணம் நடக்கும்போது இதே பிரச்சினைகள் எழுந்தது. ஆனால் மாப்பிள்ளை வீட்டார் எதிர் பார்க்கிறார்கள் என்று ராஜ்ஜின் வாயைக் கட்டி போட்டு விட்டார்.

இது அவனுடைய திருமணம் எனும்போது, அவன் வாயைக் கட்டி போட முடியவில்லை.

தாயின் கையைப் பிடித்துக் கொண்டே தான் சென்றான். மனைவியை ஒருபுறம், தாயை மறுபுறம் என்று நிறுத்திக் கொண்டு அமர்ந்தான்.

இப்பொழுது சற்று நிதானம் திரும்பி இருந்தது ராஜ்ஜிற்கு. யாரும் பெரிதாக இல்லை. நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே இருந்தன. இரவும் நெருங்கியிருந்தது. அதுவரை மேடையில் குடிக் கொண்டிருந்த பதட்டம் இப்போது மீண்டும் அவள் அருகாமையில் துளிர் விட ஆரம்பித்தது ராஜ்ஜுக்கு.

‘ஹங்கூன்’ என்று தொண்டையைக் கனைத்தான். உணவைப் பிசைந்து கொண்டிருந்தவள். அப்படியே ஒரு நிமிடம் நிறுத்தினாள். அவள் தன்னை திரும்பிப் பார்ப்பாள் என்று அவன் பார்த்திருக்க. அவள் பார்க்கவில்லை.

அவன் அருகில் தண்ணீர் இருக்கிறதா என்று பார்த்தாள். அது சற்று தொலைவாக இருக்க. அவள் அருகில் இருந்த பாட்டிலை எடுத்து அவன் முன்னால் வைத்தாள்.

தனக்காகச் செய்கிறாள் என்று தெரிந்தது. ஆனால் தன்னை ஏன் அவள் நிமிர்ந்து பார்க்கவில்லை?? உதட்டை ஈரமாக்கினான். தண்ணீரை கவிழ்த்து தொண்டையை ஈரமாக்கினான்.

‘இது வேலைக்கு ஆகாது’ என்று நினைத்தவன் அவள் பக்கம் திரும்பினான். “என்னை உனக்கு ஞாபகம் இல்லையா??” என்று மெல்லிய குரலில் கேட்டான்.

“வாய்க்குக் கொண்டு சென்ற உணவை வாய்க்குள் திணிக்காமல் அப்படியே ஸ்டாச்சு போல நின்றாள்.

அந்தச் செயலே, அவளுக்குத் தன்னை நினைவில் இருக்கிறதோ என்று அவனுக்குக் கேள்வியை எழுப்பியது.

“சொல்லு?? ஞாபகம் இருக்கா?? பீட்டர்ஸ் காலேஜ், அங்க தானே நீ படிச்ச??” அவன் தயக்கத்தோடு கேட்டு முடித்திருந்தான்.

இதற்கு மேல் மறைக்க ஒன்றுமில்லை. இன்று மறைத்து நாளைத் தெளிவுபடுத்த முடியாது. அவன் கேட்கும்போது சொல்லி விடுவது தான் சாலச்சிறந்தது. இத்தனை நாள்கள் கேட்காமல் இருந்து இன்று கேட்கிறான் என்றால் ஏதோ விஷயம் இருக்கிறது என்று நினைத்தவள்.

“ஞாபகம் இருக்கு?” என்று கூறியபடி தலையாட்டினாள்.

அதற்கு மேல் என்ன கேட்பது என்று தெரியவில்லை அவனுக்கு. அவளும் சாப்பாட்டை வாயில் வைக்காமல் இலையிலேயே கோலம் போட்டுக்கொண்டிருந்தாள்.

அவனுக்கும் ஏனோ உணவு இறங்க மறுத்தது. ஆனால் அதற்கு மேல் என்ன கேள்வி கேட்பது?? அதுவும் மறுநாள் திருமணத்தை வைத்துக் கொண்டு. தவித்தபடி அமர்ந்திருந்தான்.

புகைப்படம் எடுக்கும் இளைஞர்கள் அவர்களை நெருங்கி விட. நேரம் அதிலேயே செல்ல. ஒரு வழியாக உண்டு முடித்து எழுந்து களைந்து, அவரவர்கள் அறைகளையும் நோக்கிச் சென்றார்கள்.

அறைக்குள் வந்ததும் தான் ஸ்ரீயால் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது. ஆனால் இது இத்தோடு முடிந்து விடாது அல்லவா??








 
Top Bottom