அசோகவனத்தில் ராமன் - 23

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,208
16,454
113
Germany
அத்தியாயம் 23


சிறிது நேரம் அங்கேயே படுத்திருந்தவன் பானுமதி அலைபேசியில் வந்து கத்தவும் தான், அந்த வீட்டை சுத்தம் செய்ய வேண்டும் என்ற நினைப்பிற்கே வந்தான்.


சூறாவளியாய் சுழன்று அந்த முழுவீட்டையும் சுத்தம் செய்தவன் மதுமதியின் வீட்டிலிருந்த தங்கள் பொருட்களை எடுத்துக்கொண்டு பானுமதியையும் அழைத்துக்கொண்டு வந்தான்.


பொருட்கள் எல்லாவற்றையும் ஒதுக்கி முடிக்க இரவானது. அது அவன் படுக்கையில் விழும் நேரம். அனைத்தையும் சுத்தம் செய்தவன் அந்த மெத்தையை மட்டும் விட்டு வைத்திருந்தான்.


அவளின் வியர்வையும், வாசனையும், சிதறிய முடிகளும் ஏராளமாய் அவற்றில் அப்பியிருந்தது. அவனுக்கு அவைகளெல்லாம் ஜீவிப்பை தந்தன. குப்புற படுத்தபடியே உறங்கினான்.


மறுநாள் காலை அவன் புதிய வேலை தேடலாம் என்று புறப்பட்டபோது வாசலில் விஹான் தனது பெற்றோரோடு நின்றிருந்தான்.


அவன் தாயின் கைகளில் தாம்பாளத்தட்டு.


“வாங்க” என்று இன்முகமாக வரவேற்றான்.


ஆனால், கோகுலபிரகாஷ் அவ்வளவு இணக்கமாக தெரியவில்லை.


அதை பொருட்படுத்தாமல் அவர்களை சோஃபாவில் அமர வைத்துவிட்டு, உள்ளேயிருந்த பானுமதியை அவசரமாக வெளியே அழைத்து வந்தான்.


அவள் விஹானின் பெற்றோரைப் பார்த்ததும் தனது துப்பட்டாவையும் தலைமுடியையும் சரி செய்தாள்.


மரியாதைக்காய், “வாங்க அங்கிள்! வாங்க ஆன்ட்டி!” என்றாள்.


விஹானின் தாய் அவளை அளவிட்டார். அவருக்கு பரம திருப்தி.


ஆனால், கோகுலபிரகாஷ் தான் தனக்கு முழு சம்மதமில்லை எனும் பாவனையிலேயே உட்கார்ந்திருந்தார்.


சித்தார்த்தன், “நான் போய் காஃபி போட்டு எடுத்துட்டு வரேன்” என்று சமையலறை புகுந்துகொள்ள,


பானுமதி சங்கடமாக, “அண்ணா தான் நல்லா காஃபி போடுவாங்க. நான் அவங்களுக்கு ஹெல்ப் பண்றேன்” என்று உள்ளே ஓடினாள்.


விஹான் அவளின் பதட்டத்தை கண்டு உள்ளுக்குள் சிரித்தான். பின்னே! அவனிடம் எவ்வளவு வம்பு வளர்ப்பாள்.


அண்ணன் தங்கை இருவரும் காஃபி போட்டு எடுத்து வந்தபோது கோகுலபிரகாஷ் கையில் எடுத்துக்கொண்டாரே தவிர குடிக்கவில்லை.


“எனக்கு இருக்கது ஒரே பையன். அவனுக்கு எப்படியெப்படியோ கல்யாணம் செஞ்சு பார்க்கனும்னு ஆசைப்பட்டேன். ஆனா அவன் உங்க வீட்டுப் பொண்ணை தான் பிடிச்சிருக்கு சொல்றான். பானுமதியோட எனக்கு கல்யாணம் நடக்கலைனா, என் வாழ்க்கையில கல்யாணமே நடக்காதுனு சொல்றான். அவன் எந்த விசயத்துலயும் இவ்வளவு உறுதியா இருந்து நாங்க பார்த்ததில்ல. நான் உங்கப்பொண்ணை இதுல குறை சொல்லவே மாட்டேன். ஏன்னா, இரு கை தட்டினா தான் ஓசை மாதிரி, எனக்கு ரெண்டு மனசு சேர்ந்தா தான் காதல். அவங்க காதலிச்சிட்டாங்க நாம சேர்த்து வச்சிடுவோம்” என்றவர் பேசியதை வாயைப் பிளந்து பார்த்தாள் பானுமதி.


பின்னே அவரை காதல் பட வில்லன் தண்டபானி என்றவல்லவா நினைத்தாள்! தனது கணிப்பு பொய்யாகிய மகிழ்ச்சியில் முகம்கொள்ளா வெட்கம் அவளுக்கு.


சித்தார்த்தனுமே அவரின் தன்மையான பேச்சில் இன்பமாக அதிர்ந்தான். ஆனால், அவர்களுக்கு ஒரு உண்மை தெரியவில்லை. அவரின் இந்த முழுமாற்றத்திற்கு காரணம் ஆத்மீகா கண்ணபிரான் என்று.


விஹான் பானுமதி மிகவும் நல்லபெண் என்றபோது, எல்லாம் நடிப்பாக இருக்கும் என்றார் கோகுல பிரகாஷ்.


விஹான் அவள் அப்படியல்ல, வேண்டுமானால் ஆத்மீயிடம் விசாரித்துப் பாருங்கள்! பானு எப்படியென்று சொல்வாள் என்று ஊக்கினான்.


தந்தைக்கு மூர்க்கம் அதிகமானது.


பின்னே அவர் ஆத்மீகாவும், தன் மகனும் தங்களுக்கு ஒரு வாழ்க்கை அமைத்துக்கொள்ளவே ஊட்டி சென்றார்கள் என்று நினைத்திருக்க, இந்த ஆத்மீகா அவனுக்கு இடைத்தரகர் வேலை அல்லவா பார்த்திருக்கிறாள்! அந்த கோபத்தில் அவளுக்கு அழைப்பு விடுத்து காச்மூச்சென்று கத்தினார்.


அவள் அமைதியின் சிகரமாக அனைத்தையும் சகித்தாள்.


பின், “பேச வேண்டியதெல்லாம் பேசி முடிச்சிட்டீங்களா அங்கிள்? ஆரம்பத்துலயிருந்தே நானும் விஹானும் நல்ல ஃப்ரெண்ட்ஸ் மட்டும் தான்னு உங்ககிட்ட ஆயிரம் தடவை சொல்லியிருக்கேன். ஆனா நீங்க தான் எங்களை புரிஞ்சிக்காம முடிச்சு போட ட்ரை பண்ணீங்க. இப்பவாவது விஹான் பானுவை தான் லவ் பண்றாருன்னு உங்களுக்கு புரிஞ்சிருக்கும் நெனைக்கிறேன். பானுவும் சாதாரண வீட்டு பொண்ணுனு நெனச்சிடாதீங்க. ராஜ வம்சத்து வாரிசு. இப்பக்கூட சொத்துல பங்கு கேட்டு நீங்க ஊட்டி ராணி அஞ்சலிதேவிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பலாம். இவ்வளவு ஆதாயம் இருக்கும்போது ஏன் அங்கிள் தலைப்பாட அடிச்சிக்கிறீங்க உங்கப்பையன் தேர்வை? அங்கிள் உண்மையாவே இது ரொம்ப நல்ல சம்பந்தம். உங்க அவசர புத்தியால கெடுத்துக்காதீங்க” என்று வெற்றிலையில் சுண்ணாம்பு தடவுவது போல் நைச்சியமாக பேசியதும் தான், மகனின் முடிவுக்கு சம்மதம் தெரிவிக்கும் மனநிலைக்கே வந்தார் கோகுல ப்ரகாஷ்.


ஒரு தொழிலதிபராய் இருக்கும் ஆத்மீகா கண்ணபிரானுக்கு இன்னொரு தொழிலதிபரை எப்படி இளக்கவேண்டும் என்ற நேக்கு தெரிந்திருந்தது.


அவளின் தூபத்தில் அவரும் இப்போது சித்தார்த்தனின் வீடு வரை வந்திருக்கிறார்.


அடுத்த மாதமே திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்றும் உறுதி தெரிவித்து விட்டு போனார்.


பானுமதி தன் அண்ணனின் தோள்களை கட்டிப் பிடித்தாள். அங்குமிங்கும் மகிழ்ச்சியில் அலைமோதினாள். அண்ணன்காரனுக்கு மனம் நெகிழ்ந்தது அவளின் ஆனந்தத்தில்.


அவன் அதை ரசித்துக்கொண்டே நின்றபோது வீட்டின் அழைப்புமணி ஒலித்தது. சென்று திறந்து பார்த்தான். ஆத்மீகா கண்ணபிரான் தான் நின்றிருந்தாள்.


அவளை கண்டதும் அவன், “வாங்க மேடம்” என்று உபசரிக்க, புருவங்களை மெச்சுதலாக உயர்த்தினாள் அவள்.


“பரவாயில்லையே ஹாஸ்பிடாலிட்டிக்கு அர்த்தம் தெரிஞ்சிடுச்சி போல?” என்று கேலியாக கேட்டுக்கொண்டே உள்ளே வந்தாள்.


அவளின் குரல் கேட்டதுமே வெளியே வந்த பானுமதி அவசரமாக, “வாங்க மேடம்” என்றாள்.


பின், அவர்கள் இருவருக்கும் தனிமை கொடுக்க வேண்டி, “நான் சூப்பர் மார்கெட் வரை போயிட்டு வந்திடுறேண்ணா. வீட்டுல பால் பாக்கெட் இல்ல” என்று பணம் கூட எடுக்காமல் வெளியேறினாள்.


ஆத்மீகா உள்ளர்த்தத்துடன் முறுவலித்தாள்.


பின், அவனின் விழிகளிலிருக்கும் அம்புபுட்டில்களை தயங்காமல் சந்தித்தாள்.


“நான் இன்னைக்கு மஹாலக்‌ஷ்மி மாதிரி இருக்கேனா மிஸ்டர் சித்தார்த்தன்?” என்றாள்.


சம்பந்தமில்லாமல் இது என்ன கேள்வி என்று திகைத்தான் அவன்.


“இல்ல நான் இங்க வரும்போது திருமகளை நினைச்சு மந்திரம் ஒன்னும் சொல்லிட்டு வரல. ராமன் முன்னாடி போய் நிற்கறதுக்கு சூர்ப்பனகை தன் உருவத்தை மந்திரம் சொல்லி மாத்திக்கிட்ட மாதிரி. அதே கோட் சூட். அதே ஆத்மீகா கண்ணபிரான். ஆனா இவ்வளவு நாள் உங்க கண்ணுக்கு அரக்கி மாதிரி தெரிஞ்சிட்டு இன்னைக்கு மஹாலக்‌ஷ்மி மாதிரி தெரியுறேனோனு ஒரு சந்தேகம். அதான் கேட்டேன். நீங்க இன்னைக்கு என் மேல நெருப்புமழை பொழியல மிஸ்டர் சித்தார்த்தன். ஆச்சரியமா இல்ல?” என்று அவனிடம் ஏற்பட்ட மாறுதலை சரியாக இனம் கண்டு சொன்னாள்.


அவனுக்கு பகீரென்று இருந்தது. இந்தளவுக்கு தன்னை ஊடுருவுகிறாளா என்று.


அவன், “நீங்க இங்க வந்த காரணம் இன்னும் சொல்லல மேடம்” என்றதும், மீண்டும் புருவங்களை உயர்த்தினாள்.


தனது கோட்பாக்கெட்டிலிருந்து கைக்கடிகாரம் ஒன்றை எடுத்தாள்.


அவனிடம் நீட்டி, “நீங்க திருப்பியனுப்பின அதே கிங் செய்கோ வாட்ச். இதை கடந்த ஆறரை வருசமா உங்ககிட்ட சேர்க்க துடியா துடிச்சிட்டிருந்தேன். ஏன் தெரியுமா? இது உங்ககிட்ட இருந்தா தான் நமக்குள்ள நடந்தது வெறும் கொடுக்கல் வாங்கல் உறவு. உங்க பொருள் என்கிட்ட இருந்தா, அது காந்தர்வ விவாஹமாகிடும் மிஸ்டர் சித்தார்த்தன். அதனாலயோ என்னவோ வேற ஒரு ஆண்மகனை என் மனசும், உடலும் அன்னைலயிருந்து தேடல” என்று மனம் ஒலிபரப்பிய ஒரு சமாதானத்தை சொன்னாள்.


அவன், “என்னை இதை நம்பச் சொல்றீங்களா மேடம்?” என்றான்‌ ஆழ்ந்த குரலில்.


“உங்களை நம்ப வைக்க, சீதை அசோகவனத்துலயிருந்து திரும்பினதும் அக்னி பிரவேசம் செஞ்ச மாதிரி எல்லாம் என்னால செய்ய முடியாது மிஸ்டர் சித்தார்த்தன்” என்று இலகுவாக கூறினாள்.


அவனுக்கு தான் காதுகளில் தேள் கொட்டின.


“நானும் அப்படியெல்லாம் கேட்க மாட்டேன் மேடம். ஏன்னா நீங்க சீதையும் இல்ல. நான் ராமனும் இல்ல. என் அம்மா நெருப்புல எரிஞ்ச துக்கத்தையே இன்னை வரைக்கும் என்னால ஜீரணிக்க முடியல” என்று முகம் கசங்கினான்.


அவன் அவனது அன்னையின் மீது கொண்டுள்ள பாசமும், மதிப்பும் அவளுக்கு புரிந்தது.


“நீங்க நமக்குள்ள நடந்த அந்த உறவுக்கப்பறம் உங்க அம்மா அப்பா முகத்துலயே முழிக்க முடியலைனு சொன்னீங்கல்ல? நான் அதுக்கு ஒரு தீர்வு சொல்லவா மிஸ்டர் சித்தார்த்தன்? ஒன்னுமில்ல, உங்கம்மா உங்க மூளைக்குள்ள ஒருத்தனுக்கு ஒருத்தி கான்செப்ட்டை ஆணி அடிச்சு இறக்கியிருக்காங்க. ஆமா நான் ஏன் உங்களுக்கு அந்த தீயா இருக்கக்கூடாது? ஒருத்தீயா? நீங்க தொட்ட முதல் பெண் நான் தான். கடைசி பெண்ணும் நானாவே இருந்துட்டா, நீங்க ஏகபத்தினி விரதன் ஆகிடுவீங்க இல்லையா? என் கழுத்துல ஒரு தாலி கட்டி மூனு முடிச்சு போட்டுட்டா, அவங்க வளர்ப்புக்கு எந்த பங்கமும் வராது இல்லையா? நான் சொல்றது சரி தானே மிஸ்டர் சித்தார்த்தன்?” என்றதும், அயர்ந்து நின்றான் அவன்.


இப்படி அவன் ஒருநாளும் யோசித்தது கிடையாது. இவளுக்கெப்படி இப்படியெல்லாம் தோன்றுகிறது என்று பார்த்தான்.


பின், அழுத்தமாக ஒவ்வொரு வார்த்தைகளையும் சொன்னான்: “அன்னைக்கு ஒரு நாள் செஞ்ச தப்பை உங்களுக்கு தாலி கட்டி ஒவ்வொரு நாளும் செய்யச் சொல்றீங்களா மேடம்?” என்று.


“தப்பா? அதுல ஒரு கணம் கூட என்னால நீங்க சந்தோசப்படலையா மிஸ்டர் சித்தார்த்தன்?” என்றதும், அவன் உடல் விறைத்தது.


“எந்த வகையிலயுமே நான் அன்னைக்கு உங்களை இம்ப்ரெஸ் பண்ணலையா?” என்று பரிதவிப்புடன் கேட்டாள்.


என்ன பதில் சொல்வான் இதற்கு?


அன்று முதலில் விருப்பமின்றியே அவன் கரங்கள் அவளை தொட்டாலும், அவளின் ஒத்துழைப்பு தந்த இன்பத்தில் அவன் ஓரிருமுறை சொர்க்கம் சென்று‌ தானே வந்தான்! அதனை இல்லையென்று அவனால் மறுக்க முடியுமா? தனது உடலி‌ன் அந்த தடித்தனத்திற்கு அவன் தன்னையே அருவருக்கக் கூட செய்தானே!


ஆக, அன்று அவள் அவனின் இணங்கிய நிலையை கண்டறிந்திருக்கிறாள். அதுதான் கிடுக்குபிடி போடுகிறாள் என்று அவமானமாக உணர்ந்தான்.


“நான் உங்களை அவமானப்பட வைக்க இதை சொல்லலை மிஸ்டர் சித்தார்த்தன். நீங்க மொத்தமா என்னை வெறுக்கலைனு உங்களுக்கு நினைவு படுத்த தான் சொன்னேன். இங்க யாரும் முற்றும் துறந்த முனிவர் கிடையாது” என்று அவளே சமாதானம் கூறினாள்.


அவனுக்கு அவள் பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவது போல் இருந்தது.


“முனிவரா ஆக நெனச்சாக்கூட உங்களை மாதிரி ஆளுங்க விடறதில்லையே மேடம். விஷ்வாமித்ரருக்கு மேனகை மாதிரி, எனக்கு நீங்க. அப்பறம் எனக்கு நீங்க என்னை விடாம துரத்தி வர்றதுக்கான காரணம் தான் இன்னும் புரியல மேடம். ஒருவேளை உங்களுக்கு குணப்படுத்தவே முடியாத வியாதி ஏதாவது… ஐ மீன் எயிட்ஸ் ஏதாவது வந்துடுச்சா? சித்தாராவை தனியா விட்டுட்டு போயிடுவோமோனு பயந்து அவ அப்பா என்கிட்ட உரிமையா ஒப்படைக்க, என்னை கல்யாணம் பண்ணிக்க நெனைக்கறீங்களா மேடம்?” என்றதும், கண்களில் கண்ணீர் வரும்வரை குலுங்கி குலுங்கி சிரித்தாள் ஆத்மீகா கண்ணபிரான்.


பின் ஒரு கட்டத்தில் ஓய்ந்து, “எப்படி மிஸ்டர் சித்தார்த்தன் இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க? நான் ஹண்ட்ரெட் பெர்சண்ட் ஹெல்தியா இருக்கேன். அதுலயும் எய்ட்ஸ் வரல்லாம் வாய்ப்பே இல்ல. நான் ப்ளட் ரிபோர்ட் காமிக்காம, காண்டம் யூஸ் பண்ணாம எந்த ஆணையும் என்னை தொட அனுமதிச்சதேயில்ல உங்களை தவிர.” என்று அழுத்தமாக சொன்னதும்,


“ஏன் மேடம்? என் விசயத்துல மட்டும் ஏன் அவ்வளவு அலட்சியம்?” என்று ஆர்வமாகக் கேட்டான்- அவள் தன் காதலை சொல்லிவிட மாட்டாளா என்று.


“ஏன்னா என் கட்டிலுக்கு வந்த முதல் பிரம்மச்சாரி நீங்க தான். உங்களுக்கு முன்னாடி என் கட்டிலுக்கு வந்தவங்கல்லாம் அதையே தொழிலா செஞ்சவங்க. நான் வற்புறுத்தி என் கட்டிலுக்கு வரவழைச்ச‌ முதல் ஆணும், கடைசி ஆணும் நீங்க தான்” என்று ஆணித்தரமாக சொன்னதும், அவன் நிச்சலனமா‌க நின்றான்.


அவள் வேறு மாதிரி யோசித்தாள். அவன் தன்னை கல்யாணம் செய்துகொள்ள யோசிப்பதற்கும், லீலாவதியை வேண்டாம் என்றதுக்கும் ஒரே காரணம் இருக்குமோ என்று நினைத்தாள். பின், சித்தார்த்தன் அப்படியான குறுகிய மனப்பான்மை கொண்டவன் கிடையாது என்ற உறுதியில், அவனிடம் கேலியாக ஒன்றை சொன்னாள்.


"நல்ல புருஷன் கிடைக்கனும்னு சில பொண்ணுங்க பூஜை, விரதம்னு இருக்கற மாதிரி, நீங்களும் நல்லப்பொண்ணு கிடைக்கனும்னு தீ மிதிச்சிருக்கலாம் மிஸ்டர் சித்தார்த்தன். பாருங்க என்கிட்ட வந்து மாட்டிக்கப் போறீங்க!” என்றதும் விரக்தியாக சிரித்தான்.


அவளுக்கு மேலும் மேலும் அவனை வற்புறுத்துவது கடினமாக இருந்தது. ஆதலால், முடிவை அவன் வசமே ஒப்படைத்தாள்.


“மிஸ்டர் சித்தார்த்தன் நான் உங்களை வற்புறுத்தி என் கட்டிலுக்கு வரவழைச்சதுக்கு, எனக்கு தண்டனை கொடுக்கற உரிமையை உங்க கையிலேயே ஒப்படைக்கறேன். இந்த வாட்ச் உங்ககிட்டயே இருக்கட்டும். எப்ப உங்களுக்கு என்னை மனைவியா ஏத்துக்கனும்னு தோணுதோ அப்ப என் கையில இதை கட்டிவிடுங்க. அதுவரைக்கும் நீங்க யாரோ! நான் யாரோ! நான் சொன்னா சொன்ன வாக்கை காப்பாத்துவேன்னு உங்களுக்கு தெரியும்” என்று ஊட்டியில் அவளை அவன் தொட்டுத் தூக்கிய சம்பவத்தையும் நினைவுபடுத்திவிட்டு போனாள்.


தனித்து நின்றவனுக்கோ அறையில் காற்றில்லா உணர்வு.


உள்ளங்கையிலிருந்த கைக்கடிகாரம்‌ அவ்வளவு கனம்.


அவள் மனதில் காதல் இருப்பது அவனுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி. ஆனால், அதை தவிர்த்து அவள் பேசியவிதம் உண்மையிலேயே அவனுக்கு ஆச்சர்யம்!


தொடரும்…

அடுத்த அத்தியாயம் இறுதிஅத்தியாயம். இத்தருணத்திலாவது நாவல் குறித்து ஓரிரு வார்த்தைகள் சொல்லலாமே டியர்ஸ்?
 
Last edited by a moderator:

Author: நிதனிபிரபு
Article Title: அசோகவனத்தில் ராமன் - 23
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

STN-124

Member
Jun 8, 2026
42
6
8
Madurai
அருமை
அயராமல் ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் நீங்கள் கமெண்ட் செய்வது வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது சிஸ்😘😘😘😘😘😘
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Members online

No members online now.