மை டியர் ராவணா - 1

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,208
16,511
113
Germany
அத்தியாயம் 1


( இந்தக் கதை முற்றிலும் கற்பனையே.. யாரையும் குறிப்பிடுவன அல்ல..!! )


மாலை ஐந்து மணி......


தரமான ஆடைகளின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு பேர் போன திருப்பூர் மாநகராட்சி அந்த மாலை வேளையிலும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது..


திருப்பூர் புது பேருந்து நிலையம்..


வெளியூருக்கு போகும் பேருந்துகளும் வாகனங்களும் ரோடு முழுக்க அடைத்திருந்தது..


பண்டிகை நேரம் என்கிற காரணத்தினால் டிராஃபிக் சற்று அதிகமாகவே இருந்தது..


முழம் போட்டு அளந்து பூக்களை விற்றுக் கொண்டிருந்தார் ஒரு அக்கா, இன்னொரு பக்கம் சுட சுட வடை போண்டாக்களை சுட்டு விற்பனை செய்து கொண்டிருந்தார் ஒரு பாட்டி, வெயிலுக்கு இதமாக நீர் மோர் பந்தல் போட்டு ஒரு வயதானவர் நின்றிருந்தார் இன்னொரு பக்கம்..


ரோட்டோரமாக வியாபாரம் செய்து கொண்டிருக்கும் இவர்களை கண்டும் காணாமல் குதிரைக்கு கடிவாளம் கட்டியது போல ரோட்டில் கண்களை பதித்து வாகனங்களை மின்னல் வேகத்தில் ஓட்டிச் சென்றனர் வாகன ஓட்டிகள்..


புழுதியை கிளப்பிக் கொண்டு புகைச்சலோடு சூழ்ந்திருந்தது அந்த இடம் முழுக்க..


இயந்திர வேகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் மனிதர்களை வேடிக்கை பார்த்த வண்ணம் அங்கே கம்பீரமாக ஆறடி உயரத்திற்கும் சற்று அதிகமான உயரத்தில் ஆஜானுபாகுவாக நின்று கொண்டிருந்தான் அவன்..!!


மிரட்சியோடு அங்குமிங்கும் உருளும் அவனுடைய கருவிழிகள் அனைத்தையும் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தது..!!


அவனுடைய கம்பீரமான தோற்றத்திற்கேற்ப அவனுக்கு அம்சமாக பொருந்தியிருந்தது அந்த கவச குண்டலம்..


அடர் சிவப்பு நிற மேலங்கிக்கு மேல், நவரத்தினங்கள் இழைத்த தங்கக் கச்சை அவனது இடுப்பை இறுக்கிப் பிடித்திருந்தது.


அதன் இடது புறம் உறையிலிருந்த வாளின் பிடி, சூரிய ஒளி பட்டு மின்னியது..!!


காதுகளில் ஆடிய கனமான குண்டலங்கள் அவனது கூர்மையான பார்வையை மேலும் கம்பீரமாய் காட்டியது..


ஒவ்வொரு அடியிலும் அவனது காலில் இருந்த வீரக்கழல் கம்பீரமாக ஒலித்தது..!!


பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்ப்பது போல அனைத்தையும் விசித்திரமாகவும் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்..!!


அவனைக் கடந்து சென்ற அனைவரும் கூட அதே பார்வையை தான் வீசி கொண்டிருந்தனர் அவன் மீது..


" யார்ரா அவன் ஏதாவது நாடக கம்பெனியிலிருந்து தப்பிச்சு ஓடி வந்துட்டானா ?? இப்படி நிக்கிறான் நடுரோட்ல", என்று பேசிக்கொண்டே ஒருவன் வண்டியை ஓட்டிக்கொண்டு அவனை கடந்து சென்றான்.


அவர்கள் பேசும் மொழி கூட அவனுக்கு வித்தியாசமாக தென்பட்டது..


ஏதோ புரியாத மொழி பேசியது போல அனைவரையும் குழப்பத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான் அவன்..


" அடிங்கொய்யால.. என்ன வீட்ல சொல்ட்டு வந்துட்டியா?? இப்படி நடுரோட்ல நின்னுட்டிருக்க?? ஓரமா நில்லுடா என்னவோ உங்கப்பன் போட்ட ரோடு மாதிரி நடு ரோட்ல நிக்கிற??", வாய்க்கு வந்தபடி பேசிவிட்டு ஒருவன் அவனை கடிந்து விட்டு அவ்விடத்திலிருந்து கடந்து சென்றான்..


அதன் பிறகு சிறு அச்சத்தோடு ரோட்டில் ஓரமாக நின்று கொண்டான் அவன்..


அடர்ந்த புருவங்களும் தீட்சண்யமான அவனுடைய விழிகளும் அங்கிருந்த அனைத்தையும் எடை போட்டுக் கொண்டிருந்தது..


கிட்டத்தட்ட விழிகளை கேமராவாக்கி படம் பிடித்துக் கொண்டிருந்தான் அங்கிருந்த அனைத்து காட்சிகளையும்..!!


அவனைக் கடந்து ஒரு பேருந்து மெதுவாக ஊர்ந்து செல்லவும் உடனே அதில் தாவி ஏறிக்கொண்டான் அவன்..


ஓரளவுக்கு கூட்டம் அதிகமாகவே இருந்தது அந்த பேருந்தில்..


அனைத்து சீட்டிலும் ஆட்கள் நிரம்பி வழிந்தனர்.. நிற்பதற்கு ஆங்காங்கே ஒரு சில இடங்கள் மட்டுமே பாக்கி இருந்தது..


உள்ளே நுழைந்தவன் அனைவரையும் வேடிக்கை பார்த்த வண்ணம் அழுத்தமான காலடிகளோடு நடந்து சென்றான்..


அங்கிருந்த அனைவரும் இவனை தான் வேடிக்கை பார்த்தனர் வைத்த கண் வாங்காமல்..


" எங்க போகணும் டிக்கெட் எடுங்க??", என்று அவனை பார்த்து கேட்டார் கண்டக்டர்.


உடனே அவரை மேலும் கீழுமாக ஒரு பார்வை பார்த்து வைத்தவன் விசித்திரமாக சில நொடிகள் முழித்தான்.


" என்றா முழிக்கிற ?? உன்ன தான் கேட்கறேன் டிக்கெட் வாங்கலையா?? எந்த ஊருக்கு போகோனும்?? கேட்டுட்டே இருக்கேன் என்ன பார்வை பாக்குற??", அவனைப் பார்த்து கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார் கண்டக்டர்..


ஆனால் அவனோ எதற்கும் பதில் சொல்லாமல் பேந்த பேந்த விழித்தான்..


" உன்னை தான் கேட்டுட்டிருக்கேன் டிக்கெட் எடுக்கலையா?? இல்ல நான் பேசுறது எதுவும் புரியலையா வேற ஊரா நீ ?? எந்த மொழி உனக்கு தெரியும் ?? டிக்கெட் எடுக்கலையா ?? இங்க பாரு டிக்கெட்.. டிக்கெட்..", என்று கையிலிருந்த டிக்கெட்டுகளை எடுத்து கையை ஆட்டி ஆட்டி காண்பித்தார் அவன் கண் முன்னாடி..


ஆனால் அவனும் அந்த டிக்கெட்டை ஒரு சில நொடிகள் உற்றுப் பார்த்துவிட்டு உடனே அதை கையில் பிடுங்கிக் கொண்டான்..


" துரும்பை கிழித்து இப்படி பொது இடத்தில் நின்று கொண்டு விளையாடிக் கொண்டிருக்கிறீர்களே இதெல்லாம் நன்றாகவா இருக்கிறது?? நீங்கள் என்ன சிறுபிள்ளைகளா?? எல்லோருக்கும் துரும்பை கிழித்து கொடுத்துக் கொண்டிருக்கிறீர்களே?? சிறுபிள்ளைகள் தான் இப்படி விளையாடிக் கொண்டிருப்பார்கள் நீங்களுமா?? அதெல்லாம் இருக்கட்டும் இது என்ன ??", என்று கேட்டவன் அவர் கையிலிருந்த விசிலை பிடுங்கிக் கொண்டான்..


" டேய் டேய்.. அது விசில்டா.. அதை ஏண்டா வாங்குற ஐயய்யோ இது இல்லனா என்னோட வேலையே போயிடுமே என்னுடைய வேலைக்கு உலை வைக்க பார்க்கிறியே இதெல்லாம் நியாயமா மரியாதையா கொடுத்துடுடா.. உன்னை கெஞ்சி கேட்டுக்குறேன் ராசா.. கீழே இறங்கி போய்டுப்பா.. ஆள் வேற பாக்குறதுக்கு ஒரு மார்க்கமா இருக்க?? நாடக கம்பெனியிலிருந்து எதுவும் தப்பிச்சு ஓடி வந்துட்டியா இல்ல மண்டையில எதுவும் கோளாறா??", என்று பயந்தபடி கேட்டுக் கொண்டே ஒரு அடி பின்வாங்கினார் கண்டக்டர்.


" நாடகமா யார் இங்கே நாடகம் நடத்துகிறார்கள்?? நீங்கள் என்ன பேசி கொண்டிருக்கிறீர்கள் எனக்கு ஒன்றும் புரியவில்லை.. உங்கள் மொழி மிகவும் வித்தியாசமாக இருக்கிறது.. ஏற்கனவே நான் அச்சத்தில் இருக்கிறேன் என்னை தாக்குவதற்காக எதிரி நாட்டு மன்னன் தான் இப்படி எல்லாம் சதி செய்து விட்டானோ என்று எனக்கு தோன்றுகிறது..


எம் மக்களை எனக்கு எதிராக திருப்புகிறான் அந்த கயவன்.. போர் தொடுப்பதற்காகத்தான் இந்த வாகனத்தை கூட அவன் அனுப்பியிருப்பானோ என்கிற சந்தேகம் வருகிறது.. நீங்கள் எல்லோரும் எதற்காக இங்கே அமர்ந்திருக்கிறீர்கள், அவன் செய்யும் சூட்சமம் அறியாமல்..?? உடனடியாக எல்லோரும் கீழே இறங்குங்கள் எம் மக்களே..", என்று பக்கம் பக்கமாக வசனம் பேசினான் அவன் கோபத்தோடு..


பேசியதோடு நில்லாமல் அங்கு அமர்ந்திருக்கும் ஆட்களை எழுப்பி விட்டு கீழே இறங்க சொல்லி கட்டாயப்படுத்தினான்..


" யோவ் யோவ்.. என்னயா பண்ணிட்டிருக்க?? நீ வந்து இங்க உயிர வாங்குறது பத்தாதுன்னு இங்க இருக்கிற எல்லாரையும் புடிச்சு கீழே இறங்க சொல்ற உனக்கு என்ன பைத்தியமா?? முதல்ல நீ இங்கிருந்து கீழ இறங்கு.. யோவ் டிரைவர் மொதல்ல வண்டிய நிப்பாட்டுயா நீ பாட்டுக்கு போய்கிட்டே இருப்ப.. இங்க என்ன நடக்குதுன்னு தெரியுமா??", என்று கத்திக்கொண்டே டிரைவர் அருகே சென்றார் கண்டக்டர்.


சற்று நேரத்தில் அந்த பேருந்து நடுவழியில் நின்று விட்டது இவன் செய்த அக்கப்போரினால்..!!


" டேய் முதல்ல நீ கீழ இறங்கு.. உன்னால பெரிய பிரச்சினையா இருக்கு ஆள் பாக்குறதுக்கு ஒரு மார்க்கமா இருக்க.. பழைய காலத்து மன்னர்கள் மாதிரி என்னடா வேஷம் இது?? நிஜமாகவே நாடக கம்பெனியிலிருந்து ஓடி வந்துட்டியா?? இல்ல வேணும்னே கலாய்க்கிறதுக்காக கிளம்பி வந்திருக்கியா ?? முதல்ல நீ கீழ இறங்கு", என்று கூறி அவனை கீழே இறக்கி விட முயற்சி செய்தார் கண்டக்டர்..


முயற்சி மட்டும் தான் செய்தார்.. ஆனால் ஒரு பலனும் கிடைக்கவில்லை..


இம்மியளவு கூட அவனை நகர்த்த முடியாமல் படாத பாடு பட்டுவிட்டார் அவர்..


நிஜமாகவே இவன் மனுஷன் தானா?? இல்லன்னா கருங்கல் பாறையில செஞ்ச சிலையா?? இந்த கணம் கணக்கிறானே கொஞ்சம் கூட நகர்த்த முடியலயே, என்று ஆச்சரியப்பட்டார் அவர்..!!


அவனுடைய கைகளைப் பிடித்து நகர்த்த முயற்சி செய்தார் அவர் ஆனால் அவனை ஒரு இன்ச் கூட நகர்த்த முடியாமல் தவித்து போனார்..


" அந்த இடத்தில் தான் லேசாக வலிக்கிறது போர் நடக்கும் பொழுது அங்கே அடிப்பட்டு விட்டது.. இன்னும் நன்றாக கையை அழுத்தி விடுங்கள் அப்பொழுதுதான் என் கையிலிருக்கும் வலி குறையும்", என்று கூறி நன்றாக அவருக்கு கையை காட்டிக் கொண்டு நின்றான் அவன்.


" ஏன்டா.. காலங்காத்தால எனக்குன்னே கிளம்பி வருவீங்களாடா?? வந்ததுமில்லாம இப்படி என்னை பங்கமா கலாய்க்கிற முதல்ல கீழ இறங்குடா", என்று சொல்லியபடி அவனை வலுக்கட்டாயமாக பிடித்து நான்கைந்து பேர் கீழே இறக்கி விட்டார்கள்..


" சொன்னால் கேளுங்கள் எல்லோரும் இறங்கி விடுங்கள்.. எதிரி நாட்டு மன்னன் செய்த சதி தான் இந்த வாகனம் இதில் போய் உங்கள் உயிரை இழந்து விடாதீர்கள் இறங்குங்கள்", என்று பிதற்றிக் கொண்டே அவன் நடுரோட்டில் நின்றான்..


ஆனால் அந்த பேருந்தோ நிற்காமல் உடனே கிளம்பி போய்விட்டது புகைச்சலை கிளப்பிக்கொண்டு..!!


நிற்காமல் வேகமாக அந்த பேருந்து நகர்ந்து செல்லவும் ஏமாற்றத்தோடு பின்னாடியே நகர்ந்தவன் யார் மீதோ முட்டி மோதி நின்றுவிட்டான்..!!


யாராக இருக்கும் என்ற எண்ணத்தில் மெதுவாக அவன் திரும்பிப் பார்க்க அங்கே டிராஃபிக் போலீஸ் நின்று கொண்டிருந்தார்..


" யார்யா நீ?? உன்னுடைய டிரஸ் எல்லாம் வித்தியாசமா இருக்கு.. எங்கிருந்து வர்ற? உன் பேர் என்ன?? ஊர் என்ன??", என்று அவனை சந்தேகத்தோடு பார்த்துக் கொண்டே கேள்வி கேட்டார் அவர்..


அவரையும் வித்தியாசமாக மேலும் கீழுமாக ஒரு பார்வை பார்த்தவன் அவர் தலையிலிருக்கும் தொப்பியை கழட்டப் போனான்..


" டேய் டேய்.. கையை எடுடா என்னடா பண்ணிட்டிருக்க முதல்ல கையை எடு..", சொல்லிக்கொண்டே அவனை பிடித்து தள்ள முயன்றார் அவர்.


உடனே கோபம் கொண்டு தன் உறையிலிருந்து வாளை எடுத்து, அவரை தாக்க முயன்றான் அவன்..!!


" எம்மை வீழ்த்துவதற்காக நிச்சயமாக இது எதிரி நாட்டு மன்னன் செய்த சதியே தான் என்னை கொல்வதற்காக உன்னை அனுப்பி வைத்தானா அந்த கோழை??", என்று கேட்டுக்கொண்டே வாளை எடுத்துக் கொண்டு அவரை நோக்கி முன்னே நகர்ந்தான்.


" அடப்பாவி நீ பைத்தியமா?? டேய் நகருடா.. யாராவது இங்க வாங்க இவனை முதல்ல பிடிங்கயா.. என்னய்யா பாத்துட்டு நின்னுட்டிருக்கீங்க இவன புடிங்கய்யா..", என்று பயத்தில அலறினார் அவர்.


" என்னதான் நீ கத்தினாலும் கதறினாலும் இன்று உன்னை நான் சும்மா விட மாட்டேன் இதோ என் வாளுக்கு இப்போது நீ பதில் சொல்ல வேண்டும் ", என்று கூறியவன் அந்த கூர்மையான வாளை அவர் முகத்திற்கு முன்பாக கொண்டு சென்றான்..


அந்த நேரம் பார்த்து அவனுடைய வலிய கரங்களை இறுக்கமாக பற்றி தன் புறமாக இழுத்தது ஒரு மெல்லிய கரம்...!!


இழுத்த வேகத்தில் அவன் அந்த பஞ்சு மேகத்தின் மீது மோதி நின்றான்..!!


ஆம்...


பஞ்சுமேனிக்கொண்ட வெண்ணிற சிலை தான் அவள்..!!


கூர்மையான விழிகளிலிருந்து கோபத்தை வெளிப்படுத்திய வண்ணம் அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் சீதா..!!


யார் என்ன சொன்ன போதும் கேட்காமல் அடங்காமல் திரிந்து கொண்டிருந்தவன்.. அவளுடைய பட்டு மேனி அவனை தீண்டியதும் அப்படியே பூனை குட்டி போல அவளிடம் அடங்கி போனான் அந்த ஆறடி ஆண்மகன்..!!


- தொடரும்..
 
Last edited by a moderator:

Author: நிதனிபிரபு
Article Title: மை டியர் ராவணா - 1
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
380
83
Chennai
அப்ப இவன் ராவணன் ஆ ரைட்டர் 😳😳😳😳😳
அங்க இருந்து எப்டி இங்க??????
வாவ் interesting 🤩🤩🤩🤩🤩
 
  • Like
Reactions: பிரபா
May 19, 2026
60
12
8
Tiruppur
அப்ப இவன் ராவணன் ஆ ரைட்டர் 😳😳😳😳😳
அங்க இருந்து எப்டி இங்க??????
வாவ் interesting 🤩🤩🤩🤩🤩
போக போக புரியும் ஜி 😂😂
மிக்க நன்றி மா ❤️ ❤️ ❤️ ❤️