இது காதல் காவியம் - 30

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,208
16,511
113
Germany
சூடான புழுதிக்காற்றில் அந்த இடமே புழுதி மயமாக மாறியது.செல்வி, மீரா உட்பட ஆறு பேர் கொண்ட அந்தக்குழு அதிஉயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட் கிளிநொச்சி எனும் ஊரில் வந்திறங்கியது..அது,போரில் உடல் ரீதியாகவும்,உளரீதியாகவும் பாதிக்கப்பட்ட ராணுவங்களுக்காக அரசாங்கத்தால ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு குழு.

தொழில்முறை ரீதியாக செல்வி ஒரு counselor.,NGO போன்ற அரசசார்பற்ற நிறுவனங்களிலும்,தன்னார்வமாக வேலை செய்பவர்.குறிப்பாக அவர் கணவர் பொலீஸ் உயர் அதிகாரியாக இருப்பதால் இந்த மாதிரியான ஒரு இடத்துக்கு அவர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.இதற்கு முதல் நிறையத் தடவைகள் வந்திருந்தபடியால் அவரை அங்கிருக்கும் நிறையப்பேருக்குத் தெரியும்.அதனால் பெரிதாக ஒன்றும் அவர்கள் சோதனை செய்யப்படவில்லை.ஆனால் மீரா..?

தன்னைப் பற்றித் தான் விசாரிக்கிறார்கள் என்பது மீராவுக்குப் புரிந்தது.தன்னிடம் ஏதும் கேள்வி வருமோ எனப் பயந்தவளுக்கு ,செல்வி எதையோ சொல்லி சமாளித்திருக்கிறார் இல்லையென்றால் என்னை அனுமதித்திருக்க மாட்டார்களே.என நினைத்தாள்.

என்ன சொன்னீங்கம்மா? என்னால உங்களுக்கு பிரச்சினையா? எனக்கேட்டவளின் தலையைத் தடவியவர், “ஒன்டுமேயில்ல.டென்சன் ஆகாத மீரா.உனக்கே தெரியும் தானே.நம்ம நாடு இருக்கிற நிலை.வடக்கு குறிப்பா கிளிநொச்சி,முல்லைதீவு பக்கமெல்லாம் ராணுவத்தை தவிர ஆரையும் விட்ரல்ல.போர்ல காயப்பட்ட சில முக்கியமான வீரர்களுக்கு Counseling கொடுக்கத்தான் என்னை கூப்பிட்டிருக்காங்க.நீ புது ஆள்தானே.கொஞ்சம் கேள்விதான்.சின்ன செக்கிங் இருக்காம்.அது அவங்கட கடமை.செய்யட்டுமே.வா..” என அழைத்துச் சென்றார்.

மீராவின் கண்களில் எந்தப் பயமும் இல்லை.மாறாக அவ்வளவு தேடல்.புதுசாக பார்ப்பவர்கள் கூட அவள் யாரையோ தேடுகிறாள் என்பதைக் கண்டுபிடித்து விடுவார்கள்.யார்ட்டயாவது விசாரிச்சி ரொஷானை சந்திச்சிடலாம் என அவள் மனது பிள்ளையாய் குதூகலித்தது.

“மீரா….எனக்கு இங்க இருக்கிறதுக்கு இரண்டு மணி நேரம் தான் அனுமதி.அதுக்கு பிறகு உடனே இங்கருந்து போகனுமாம்.முதல் அப்படியில்ல.இப்போ நிலமை சரியில்லை போல.என்னதான் நடக்குதெண்டும் விளங்குதில்லை.”

அவர் சொன்னது போலவே பெரிதாக எந்தக் கேள்வியும் மீராவுக்கு இல்லை.

“மீரா…இங்கயே இரு.வெளிய போகாத.என்ட வேலை முடிஞ்ச பிறகு ஏதாவது கேட்கலாம் சரியா?? என்று சொல்லி அவருக்காக ஒதுக்கப்பட்ட அந்த அறைக்குள் மீராவை விட்டுச் சென்றார்.அவள் மனதில் ஒரு நிம்மதி.அவர் இருக்கிற இடத்துக்கே வந்துட்டம் என்று.நீண்ட தூரம் பயணம் செய்து வந்த களைப்பில் தூக்கம் கண்ணைச் சுழற்றிக்கொண்டு வர மீரா தூங்கியும் போனாள்.அவள் மனது நீண்டநேரம் அவளைத் தூங்கவிடவில்லையோ??

விரைவாகவே, எழுந்தவள் செல்விக்காக எதிர்பார்ப்போடு காத்திருந்தாள்.அங்கு வைக்கப்பட்டிருந்த உணவை மறுக்கமுடியவில்லை.அவளுக்கு தேவையில்லாவிட்டாலும் “அம்மா சாப்பிடு எனக்குப் பசிக்கிது” என்பது போல் வயிறு காந்தியது.மள மளவென்று அவள் சாப்பிட்டு முடிக்கவும் , செல்வி வரவும் சரியாக இருந்தது.

“நல்லா சாப்பிடனும் மீரா.அப்பதான் பிள்ளை ஆரோக்கியமா இருக்கும்”

நீங்க ?

“நானும் சாப்பிட்டன்.மீரா..உன்ட ஹஸ்பன்ட் என்ன வேலை? சொல்லு?

குழப்பமாய் புருவத்தை சுருக்கியவள் “ராணுவம்” என்றாள்.

நிச்சயமா தெரியுமா?? ராணுவம் மட்டும் தானா??

அவளுக்குத் தெரிந்து ராணுவம் போடுகின்ற உடையைத் தான் அவன் போட்டிருக்கான்.அவனுடைய தொழில் பற்றி அவ்வளவாகப் பேசியதில்லை.ஆனால் முதலாவது சந்திப்பிலேயே ராணுவம் என்று தானே அறிமுகம் கிடைத்தது. “ஓம்..அவர் ராணுவம் தான்” என்றாள் உறுதியாக.

“மீரா….காதலுக்கு கண்ணில்லை.அதுக்காக அறிவுமா இல்லை”.அதைக்கேட்டவுடன் மீராவின் முழியைப் பார்த்துச் சிரித்தவர், “உன்ட ஹஸ்பன்ட் ஒரு மேஜர்.அவரோட இந்த சின்ன வயசுக்கு எவ்வளவு பெரிய போஸ்ட் என்டு உனக்குத் தெரியுமா?நீ மேஜர் ரொஷானோட மனைவி.ஸ்ட்ரோங்கா இருக்க வேண்டிய பெண்.”

அவன் பேரை சொன்னதும் தனக்குக்கிடைத்த மரியாதையை நினைத்துப் பார்த்தாள்.அவ்வளவு பெரிய போஸ்ட் போல என நினைப்பதைத் தவிர எதுவும் அவளுக்குத் தெரியாது.அவளுக்குத் தெரிந்ததெல்லாம் அன்பான ரொஷான் மட்டும் தான்.

நீங்க விசாரிச்சதா?? அவர் எங்க? நான் போ….மேலும் பேச முடியாமல் மீராவுக்கு சந்தோசத்தில் மூச்சுவாங்கியது.ஏழு மாத நிறைகர்ப்பிணி அவள்.முன்னது போலில்லாமல்,உடல் வாகு முழுதாக மாறியிருந்தது.கொஞ்சம் குண்டாகி, கன்னமெல்லாம் உப்பி, அவளுக்குத் தெரியுமோ இல்லியோ இரட்டிப்பு அழகாக இருந்தாள்.

“ஹேய்…..பதட்டப்படாத.எனக்கு இங்க வார முதல்லயே அவரப்பத்தி முழுசா விசாரிச்சிட்டன்.ஆனா உண்மையிலேயே அனுராதக்கி ஒன்டும் தெரியாது.எனக்குத் தெரிஞ்ச ராணுவம் மூலமாத் தான் கேட்டன்.முதல்ல எதுவுமே சொல்லல.அவர் ராணுவம் மட்டுமில்லையே.கொஞ்சம் பெரிய பதவில இருக்கிறவரு.நீ நினைக்கிற மாதிரி இல்ல மீரா.நம்மட நாடு இருக்கிற பதட்டமான நிலையில எந்தத் தகவலும் சாதாரணமா கிடைக்காது.அது பாதுகாப்பு சம்மந்தப்பட்டது.உலக மீடியா எல்லாமே இலங்கையப் பத்தின ப்ரேகிங் நியூஸுக்காக காத்திட்டு இருக்குற காலம்.

மீராவின் முகத்தில் இன்னமும் குழப்பம் மறையவில்லை.அவர்..??

ம்ம்ம்ம்….அவருக்கு ஒன்டுமில்லையாம்.உயிரோட பாதுகாப்பாத்தான் இருக்காறாம்.ஆனா நாலு மாசமா…சின்ன ட்ரீட்மென்ட்ல இருக்காறாம் என சொல்லி முடித்தார்.

மீராவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.அவர் என்னைப்போல உயிரோடு தான் இருக்கிறார்.இந்த பூமிலதான் இருக்கிறார் இது போதும்…நன்றி கடவுளே.வார்த்தை இல்லாமல் கண்ணீர் வடித்தாள். இந்த ஏழு மாதங்களாய் அவனைப்பற்றி ஒரு தகவலும் தெரியாமல் பைத்தியக்காரியைப் போல சுற்றித்திரிந்ததன் வலி அவளுக்குத்தானே தெரியும்.

மீராவை அணைத்துக் கொண்டார் செல்வி.”எம்மோர்ஷனல் கேர்ள் என்றவர், “ மீரா..இந்தத் தகவலை அங்கயே ஊர்ல சொல்லியிருப்பன்.ஆனா அதை உன்ட மனது நிச்சயமா நம்பியிருக்காது.சும்மா சொல்றதா நினைச்சி நீ திருப்பவும் அலைஞ்சிட்டேதான் இருப்பாய்.அதுதான் ரிஸ்க் எடுத்து கூட்டிட்டு வந்தன்.உன்ன பார்த்ததுமே எனக்கு ஒரு சொந்த உணர்வு மீரா.இத்தனை வருஷத்துல யார்லயும் தோன்றாத உணர்வு.எனக்கு மகள் இருந்தா உன்ட வயதுதான் இருந்திருக்கும்.”என்றார் செல்வி.

மீரா அவரை இறுக அணைத்துக்கொண்டாள்.செல்வி மேல் மீராவுக்குத் தோன்றிய உணர்வை வரையறுக்க முடியவில்லை.இந்திரா மேல் சித்தி அன்பைப் பொழியும் போதெல்லாம் அவள் காணாதது போல் நடந்தாலும் தனக்கும் அம்மா இருந்திருந்தால் … என்ற ஏக்கம் அவ்வளவு இருக்கும்.ஆனால் அந்த வலியை யாரிடமும் காட்டியதில்லை.படிப்பு படிப்பு என்று சிந்தனையை வேறுபக்கம் மாற்றிக்கொள்வாள்.
இன்று,மீரா தாய்மை அடைந்திருக்கிறாள்.இந்த நிலையில் பெண்கள் தேடுவது தாய் அன்பைத்தானே.அதனால்தான் என்னவோ, மனதளவில் நிறையவே தன் பாட்டியின் அருகாமையை தேடியிருக்கிறாள். செல்வி இப்படி சொன்னதும் மீரா உடைந்தே போனாள்.இத்தனை நாள் அவள் மனது தேக்கி வைத்திருந்த உணர்வுகள் எல்லாம் கரைபுரண்டோடியது.அவளுக்கு என்னவென்றே சொல்லத்தெரியவில்லை.

ஹேய்….மீரா, அழாத… நீ இப்டி அழுதுக்கே இருந்தா ரொஷானுக்கு பிடிக்கும் போல.அதான் எப்பயும் அழுகுறியோ?.அவர் சொன்னதைக் கேட்டு சின்னச் சிரிப்புடன் கண்களைத் துடைத்தாள்.

“நம்ம இப்ப போகனும் மீரா..இப்டி உடனே திரும்ப சொல்லுவாங்கன்டு எனக்குத் தெரியாது.உனக்கு டயர்டா இருக்குதா??”

“இல்லம்மா நான் தூங்கினதானே.உங்களோட வந்தா டயர்டே காட்டாது.அதெல்லாம் பிரச்சினையில்ல.” வரும் போது அவளை அவ்வளவு வசதியாக செல்வி அழைத்து வந்திருந்தார். கர்ப்பிணிப் பெண் என்பதால் ,கூட வந்தவர்களும் அவளுக்கு ஆதரவாகவே இருந்தனர்.

“நாம வவுனியாவுல தங்கிட்டு போவம்.எப்படி சொகுசா போனாலும் ரெஸ்ட் இல்லாத பிரயாணம் கஷ்டம்”என்றார்.

சற்றுத் தயங்கி அவர் முகத்தைப் பார்த்த மீரா, “அப்ப அவர பார்க்கேலாதா?? எங்க ட்ரீட்மென்ட்ல இருக்கார்? அவருக்கு என்ன? .

சிரித்தார் செல்வி.மீரா….நான் சொன்னா நீ அங்க போகனும் என்டு சொல்லக்கூடாது.அங்க போகவும் ஏலாது.அது ஆர்மி ஹாஸ்பிடல்.போர் முடியிற வரைக்கும்,இல்லாட்டி…. அவரா வந்து உன்னை பார்க்குற வரைக்கும் நீ காத்திட்டுதான் இருக்கனும்.அவர மாதிரி சில முக்கியமானவங்க அங்க தான் அட்மிட் பண்ணியிருக்காங்க. பாதுகாப்புக்காகத் தான் இப்டி செய்றாங்க. வேற யோசிக்க ஒன்டுமில்ல.சரியா?

ம்ம்ம்ம்…என்றவள் அரைமனதாய் அவருடன் சென்றாள்.அவன் உயிருடன் தான் இருக்கிறான் என்பதை நினைத்து சிரிப்பதா? இல்லை நான்கு மாதமாக ட்ரீட்மென்டில் இருக்கிறான் என்று அழுவதா?? அவளுக்கே புரியவில்லை.இந்தமாதிரியான ஒரு சூழலில் இவ்வளவு தூரம் தன்னை அழைத்து வந்த செல்வியை மேலும் கேள்வி கேட்டு சங்கடப்படுத்த மீராவுக்கும் விருப்பமில்லைதான்.

**************
ரொஷான்….அதானே உங்க பேரு??

ரொஷான்..??

உங்க கை,கால் எல்லாமே சரியாகிட்டு…நான் பேசுறது விளங்குதா?

ரொஷான்..உங்க டீம்ல நீங்க இல்லாதது கடும் இழப்பு போல.உங்கள பார்க்க வார எல்லாருமே அதத்தான் சொல்றாங்க.

அந்த டாக்டர் ரொஷானிடம் பேச்சுக்கொடுத்துக் கொண்டே அவனின் உடலை பரிசோதித்தார்.இங்கு வந்ததில் இருந்து அவன் பேசவேயில்லை.
அதற்கான தெரபி நடந்து கொண்டுதான் இருக்கிறது.அவனது இடது தோள் பட்டையிலும்,வலது கையிலும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது.அவனது நினைவுகள் கூட சரியாக இருக்கவில்லை.ஆனால்,இப்போதுதான் எல்லாவற்றிலும் சின்ன முன்னேற்றம் வந்திருக்கிறது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு மீமீமீ…என்று அவன் பேச முயற்சித்துக் கொண்டிருந்த போது ஒரு பேப்பரைக் கொடுத்து டொக்டர் எழுதச் சொன்னதும் அவன் மீரா என்று சிங்களத்தில் எழுதினான்.கையில் சின்ன நடுக்க இருந்தது.

“அது யாரு மீரா??” என்று அவர் கேட்க,ரொஷான் யோசித்தான்.
கண்களை மூடி நெற்றியில் ஒற்றை விரலை அழுத்தினான்.

அவனது தீவிர சிந்தனையை கலைக்க அவன் கையில் இருந்த பேனாவை வாங்கியவர்.
“நோ….ரொஷான்.நீங்க எழுதிட்டே இருந்தா பேச நாளாகும்.கஷ்டம்தான் ஆனாலும், உங்களால பேச முடியும்.நான் கேட்கிற கேள்விக்கு பதில் வாயினால சொல்லித்தான் காட்டனும்.எழுத அனுமதிக்க முடியாது” என்றுவிட்டார் டாக்டர் ஜெயதிலக.

அப்போது,அறைக்கதவு தட்டப்பட்டது.

“யெஸ்” யாரு?

அங்கு வந்த விதுர்ஷியை குழப்பமாகப் பார்த்தார்.
நிச்சயமாக இந்தப் பெண் பெரிய இடமாகவே இருக்க வேண்டும்.
இல்லையென்றால் யாரும் அனுமதிக்க முடியாத இடத்தில் இப்படி நிமிர்வாக உரிமையாக வந்திருக்க முடியுமா?

நீங்க…? என்றார்.

“விதுர்ஷி..லெப்டினன் மகள்.ரொஷானுடைய கேர்ள் ஃப்ரெண்ட்.” என்றபடி ரொஷானைப் பார்த்தாள்.அவள் முகத்தில் கவலை தெரிந்தது.

“நீ கடுமையா மெலிந்து போயிட்டாய் ரொஷான்.நீ இங்க இருக்கிற விஷயம் சீக்ரட் என்டு டாடி சொன்னார்.அவரோட பெரிய சண்டை எல்லாம் போட்டுத்தான் உன்ன பார்க்க வந்திருக்கன்.உன்ன எவ்வளவு தேடினன் தெரியுமா? மிஸ் யூ ரொஷான்.” என அவனை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள் விதுர்ஷி.

அவனது பார்வையில் யோசனை இருந்ததைப் பார்த்த திலக், அவளை அழைத்துக்கொண்டு வெளியே சென்றார்.

முதலில் விது யாரென்று விசாரித்தார்.அவள் யாரென்று தெரிந்ததும் ஆச்சயப்பட்டவர் பிறகு ரொஷானின் உடல்நிலை பற்றி விளக்க ஆரம்பித்தார்.

“அவரு இப்பதான் ரீகவர் ஆகிட்டிருக்கார்.இவர் பின் தலையில பெரிய காயம் இருந்து ஆறியிருக்கு.
தலையில பெரிசா ஏதோ விழுந்திருக்கனும்.அப்போ இவர் காயத்துக்கு மட்டும்தான் ட்ரீட்மென்ட் நடந்திருக்கு.ஆனா அந்த அடியின் தாக்கத்துல அவருக்கு சில மெமோரி லொஸ் இருந்தது யாருக்குமே தெரியாது.”

விது அதிர்ச்சியாய் அவரைப் பார்த்தாள். “அப்போ என்னையும் மறந்துட்டாரா? பழசு எல்லாமே நினைவே இல்லியா..?” எனக் கேட்டாள்.

“இல்ல…இல்ல..முதல் அப்படித்தான் இருந்தார்.இப்போ நினைவு நல்லாவே திரும்புது.அவரோட பழய நினைவுகளை ஞாபகப்படுத்த அவர் ஃப்ரெண்ட்ஸ்,ரிலேடிவ்ஸ் இப்படி யாராவது சில பேர் வேணும்.ஆனா அதுக்கு டிஃபன்ஸ் அனுமதி இல்லியே.இப்போதைக்கி என்னால அவர் பேர் பதவி மட்டும் தான் சொல்ல முடியும்.அவர் கடந்தகாலம் எனக்குத் தெரியாதே.நீங்க வந்தது ஹெல்ப்பா இருக்கு என்று நம்பறன்” என்றார்.

“நான் என்ன செய்யனும் டாக்டர்?? என்னால முடிஞ்ச எல்லாத்தையும் செய்றன்.இவர சரியாக்கி தாங்க.என்னோட பழய ரொஷான் கிடைக்கனும்” என்றாள் விது.அவள் குரலில் ஏக்கம் இருந்தது.

“நீங்க பழய நல்ல விஷயங்களை பேசுங்க.அடிக்கடி வந்து பேசினா அது அவருக்கு ஹெல்ப்பா இருக்கும்” என்றவர்,

“ஆனா… அதிகமா யோசிக்க விட்றாதீங்க.அது அவர இன்னும் குழப்பமான மனநிலைக்கு தள்ளிடும்.”

“இவர் பேசமாட்டார் என்று டாடி சொன்னார்.உண்மையாவா?”

அதுக்கான ட்ரீட்மென்ட் நடக்குது.அவர் பேசுறது அவர் முயற்சி செய்றதுல தான் இருக்கு.இன்டைக்கி தான் முதலாவதா பேச முயற்சி செய்திருக்கார்.நல்லா பேச கொஞ்சம் டைம் எடுக்கும்.

ம்ம்ம்ம்…மீரா யாரு? ரொஷான்தான் இந்தப் பெயரை எழுதிக்காட்டினார். அந்தப் பெயரைத் தான் சொல்லவும் ட்ரை பண்ணினார்.

திலக் சொன்னதைக் கேட்டதும்,விதுவின் முகம் சட்டென்று சுருங்கிப் போனதை திலக் கண்டுவிட்டார்.அவருக்கு விதுவின் மனநிலை கொஞ்சமாய் புரிந்தது.

“ஒரு வேளை அந்த மீரா இங்க வந்தா இவரு முழுசா குணமாகலாம்.
முடிஞ்சா கூட்டிட்டு வாங்க” என்றார்.
 
Last edited by a moderator:

Author: நிதனிபிரபு
Article Title: இது காதல் காவியம் - 30
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.