• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

பாவை 21

STN - 94

Member
Staff member
இருவரும் வேலைக்கார பெண்ணின் வீட்டிற்கு சென்றார்கள். வீடு பூட்டியிருந்தது. அக்கம்பக்கம் அவளை பற்றி விசாரித்துக் கொண்டிருந்த சமயம் அந்த பெண் மதிய சமையலை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தாள். அங்கே இருவரையும் கண்டு திகைத்தாள்.

“சின்னம்மா இங்கே என்ன பண்றீங்க?”

“உன்கிட்ட பேசலாம்னு தான் வந்தேன்” என்றாள் நிருஷிகா

“என்ன விசயம் சொல்லுங்க?”

“வீட்டுக்குள்ள போய் பேசலாமா?” என்று ரிஷி கேட்க, தயக்கத்துடன் கதவை திறந்து இருவரையும் உள்ளே அழைத்தாள்.

உள்ளே நுழைந்ததும், “ராஜ் சார் சாப்பிடற சாப்பாட்டுல விஷத்தை கலக்க சொல்லி உனக்கு யார் சொன்னது?” என்று ரிஷி நேரடியாக விஷயத்திற்கு வர, “ஐயோ, என்னங்கையா இது? இம்புட்டு பெரிய விஷயத்தை நான் செஞ்சதா சொல்றீங்க? இது மாதிரி கேள்வி வரும்னு எம்புருஷன் சொன்னது சரியா போச்சே. ஆத்தா மகமாயி நான் இன்னா பண்ணுவேன்” என்று அவள் புலம்ப ஆரம்பிக்க, “நடிக்காம உண்மைய சொல்லிடு. இல்லனா கம்பி எண்ண வேண்டியது தான்”

அந்த பெண் இருகரங்களையும் கூப்பி “ஐயா, சத்தியமா நான் எந்த தப்பும் பண்ணல. நானும் என் புருஷனும் குழந்தை வரத்துக்காக தவம் கிடக்கறோம். அப்படிப்பட்ட நான் ஒரு உயிரை சாவடிக்க விஷத்தை கொடுப்பேணுங்களா? இப்பவும் சொல்றேன் மைதிலியம்மா தான் சமைப்பாங்க, நான் டிபன் பாக்ஸ்ல போடுவேன். ஐயாவுக்கு சாப்பாடு பறிமாற என்னை விட மாட்டாங்க. எனக்கெதுவும் தெரியாது. இதுல என்னைய இழுத்து விட்றாதீங்கய்யா?” என்றாள்

“நான் வந்ததும் உன் முகத்துல அதிருப்திய பாத்தேன். நீதானே மாலினி ஆன்ட்டிக்கு போன் பண்ணி வரவச்சது?” என்றாள் நிருஷிகா

“சின்னம்மா, வீட்ல யாருமில்லாம போனதும் வேலைக்கு போறதா வேணாமானு எங்களுக்கு குழப்பம். அப்போ மாலினி அம்மா வந்து சம்பளம் கொடுத்தாங்க. நீங்க வீட்டுக்கு வந்தா அவங்களுக்கு தகவல் கொடுக்க சொன்னாங்க. அதனால தான் நான் போன் பண்ணி அவங்களுக்கு தகவல் சொன்னேன். என் முகம் மாறினதுக்கு வேற காரணம் இருக்கு”

“என்ன காரணம்?”

அந்த பெண் சற்று தயங்கிகொண்டே “கிட்டத்தட்ட ஒரு வருஷம் பெரிசா எந்த வேலையும் செய்யாம சம்பளம் வாங்கிட்டு இருந்தேன். நீங்க வந்ததும் உங்களுக்கு சமைக்கணும், பசங்கள பாத்துக்கணும் மாலினி அம்மாவும் வருவாங்க, அவங்களுக்கும் வேலை செய்யணுமேனு நினைச்சேன். அதனால உங்களுக்கு அப்படி தெரிஞ்சிருக்கும். என்னை மன்னிச்சிடுங்கம்மா”

“என்னை ரூமுக்குள்ள வச்சு பூட்டினது யாரு?”

“குழந்தைங்க தாம்மா விளையாடிட்டு இருந்தாங்க, அவங்க தான் வெளியே தாப்பா போட்டிருப்பாங்க”

“சரி மாலினி அம்மாவ பத்தி என்ன நினைக்கிறே?” ரிஷி கேட்டான்

“மாலினி அம்மா, மைதிலி அம்மா மாதிரி இல்ல ரொம்ப ஸ்ட்ரிட், அதட்டி தான் பேசுவாங்க. மத்தபடி எனக்கு அவங்கள பத்தி எதுவும் தெரியாதுங்க, என்னை நம்புங்க”

“நிரு இல்லாத இந்த ஒரு வருஷத்துல வித்தியாசமா எதையாவது நீ கவனிச்சியா? உனக்கு யார்மேலயாச்சும் சந்தேகமிருக்கா?”

“இல்லைங்க, மாலினி அம்மா மட்டும் அப்பப்போ வீட்டுக்கு வந்து சின்னம்மாகிட்ட இருந்து போன் வந்துச்சா? யாராவது வீட்டுக்கு வந்தாங்களானு விசாரிப்பாங்க. அதுவும் அவங்க பையனுக்கும் சின்னம்மாவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும், அதான் ஐயாவோட கடைசி ஆசைனு சொல்லுவாங்க”

இருவருக்கும் குழப்பமாக இருந்தது. அவர்கள் விசாரித்த வரையில் வேலைக்கார பெண்ணை பற்றி அக்கம்பக்கத்தினர் நல்லவிதமாகவே கூறியதால் அந்த பெண்ணை மேற்கொண்டு தொல்லை செய்ய மனம் வரவில்லை.

“நாங்க வந்து விசாரிச்சது யாருக்கும் தெரியக்கூடாது. தெரிஞ்சா விளைவுகள் மோசமாயிருக்கும்” என்று விரல் நீட்டி எச்சரித்தான் ரிஷி.

நிருஷிகாவும் ரிஷிவர்மனும் மதிய உணவை முடித்துக் கொண்டு ஆபிஸூக்கு சென்றபோது அஸ்வின் அவர்களை வரவேற்றான்.

“நிருஷிகா நீ காலைலயே வரப்போறதா அம்மா போன் பண்ணாங்களே? ஏன் இவ்ளோ லேட்? இவ்வளவு நாளா எங்கே போயிட்ட? நீ இங்கே இருந்தா தானே அத்தையோட கேஸ்ஸ நடத்த முடியும்?” என்று அவன் வரிசையாக கேள்வி கேட்க நிருஷிகா மிகுந்த குழப்பத்துடன் ரிஷியை பார்க்க, அஸ்வினும் ரிஷியை பார்த்தான்.

“இவரு?”

“ஹாய், ஐயம் ரிஷிவர்மன். நிருஷிகாவோட பி.ஏ”

“ரிஷிவர்மன்? உங்க குரல எங்கேயோ கேட்டிருக்கேனே? கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி குயிலோசை எப்எம்ல இருந்த ரிஷியா நீங்க?”

“ஆமா”

“அப்போ நீங்கதான் நிருஷிகாவோட காதலன்னு சொல்லுங்க”

இப்போது இருவருமே அதிர்ந்து அஸ்வினை பார்த்தார்கள்.

“மாமாகிட்ட என் அம்மா எனக்கும் நிருஷிகாவுக்கும் சம்மந்தம் பேசும்போது, அவர் என்னை தனியா அழைச்சுட்டு போய் பேசினாரு. ‘அஸ்வின், என் பொண்ணு விஷயம் அவள கட்டிக்க போற உனக்கு மட்டும் தெரிஞ்சா போதும்னு தான் உன்னை தனியா அழைச்சுட்டு வந்தேன். அவ குயிலோசை எப்எம்ல வேலை செஞ்ச ரிஷிங்கிறவற லவ் பண்ணா, ஆனா அவர் இப்போ காணாம போயிட்டதால நிருஷி மனசு உடைஞ்சு போயிருக்கறா, உனக்கு பரவால்லனா மேற்கொண்டு பேசலாம், இல்லனா இப்பவே நிறுத்திக்கலாம்னு சொன்னாரு. எனக்கு அவர் மேல ரொம்ப மதிப்பு இருக்கு. அதேசமயம் காதலிக்காத பொண்ணை தான் கல்யாணம் பண்ணனும்னா எனக்கு கல்யாணமே நடக்காது. எல்லாருக்குமே ஏதாவது ஒரு சமயத்துல யார்மேலயாவது ஒரு சின்ன சலனமாச்சும் ஏற்பட்டிருக்கும். அதுமாதிரி எப்எம்ல இருந்த ரிஷி மேல உனக்கு ஒருதலை காதல் ஏற்பட்டிருக்கலாம், ஆனா அவர் உன்னை காதலிச்சிருக்கமாட்டாருனு நினைச்சேன்.

அதனால தான் கல்யாணத்தை நிறுத்த நான் மெனக்கெடல. இப்போ ரிஷி உன்கூட வந்திருக்கார்னா அவரும் உன்னை லவ் பண்ணியிருக்கார்னு தெரியுது.

நிருஷிகா யு டோன்ட் வொர்ரி, அம்மாகிட்ட நான் உங்க ரெண்டு பேர் விஷயமா பேசறேன். இனிமே அவங்க நம்ம ரெண்டு பேர் கல்யாணத்தை பத்தி பேசமாட்டாங்க. உனக்கும் ரிஷிக்கும் கல்யாணம் நடக்க நான் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன்”

இருவரும் நினைத்தது போல இல்லாமல் அஸ்வின் மிகவும் நட்புடன் பேசினான். அலுவலக வேலைகளை இருவருக்குமே விவரித்தான். கிடைத்த தனிமையில் நிருஷிகா புலம்பினாள். “என்ன ரிஷி இது? ஆரம்பிச்ச இடத்துக்கே வந்துட்டோம். அப்பாவுக்கு யார் ஸ்லோ பாய்ஸன் கொடுத்திருப்பாங்க? நடக்கறத பாத்தா மாலினி ஆன்ட்டி அஸ்வின் இவங்க மேலயும் எந்த தப்பும் இல்லனு தோணுது. அப்பாவுக்கு வேற யாராச்சும் தொழில்முறை விரோதிங்க இருப்பாங்களா?”

“எனக்கும் குழப்பமா தான் இருக்கு. நீ வீட்ல இருக்கும் போது எல்லாரையும் க்ளோஸா வாட்ச் பண்ணு. நான் ஆபிஸ்ல இருக்கறவங்க கிட்ட விசாரிக்கறேன்”

“ம். இன்னைக்கு ஈவ்னிங் அப்பாவ பாக்க போகணும் ரிஷி”

“கண்டிப்பா போகலாம்”

அன்று மாலை இருவரும் ராஜ் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு சென்றனர். நிருஷிகா வெகு நேரம் ராஜ் அருகில் அமர்ந்து அவரின் கரத்தை பற்றிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

வேலைக்காரபெண் போன் செய்தாள், “சின்னம்மா புவனும் புவனிகாவும் ஸ்கூல்ல இருந்து வந்ததுல இருந்து உங்கள காணாம அழுதுட்டு இருக்காங்க”

“உடனே வர்றேன்” என்றவள் ரிஷியிடம் விவரத்தை சொல்ல அவன் அவளை அழைத்துக் கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியேறினான். அப்போது அவனுக்கு புதிய எண்ணிலிருந்து அழைப்பு வரவும் எடுத்து பேசியவன், “நிரு நான் அவசரமா போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போகணும்” என்று நெற்றியை தேய்த்தான்.

“செக்ரட்டரி உங்க மேல கேஸ் கொடுத்துட்டானா?”

“தெரியல, செக்ரட்டரி விஷயமா பேசணும்னு இன்ஸ்பெக்ட்டர் உடனே வரச்சொல்றாரு”

“சரி, போகும்போது வக்கீல அழைச்சுட்டு போங்க, முடிஞ்சா முன்ஜாமின் வாங்கிடுங்க. நான் வீட்டுக்கு போகலனா புவன்புவனிகா ரொம்ப பயந்துடுவாங்க, இல்லனா நானும் உங்க கூட வருவேன்”

“பரவால்ல நிரு இது சின்ன விஷயம் நான் பாத்துக்கறேன். உங்கப்பா விஷயத்துல யார் குற்றவாளினு இன்னும் தெரியாததால எல்லார்கிட்டயும் ஜாக்கிரதையா இரு. நான் இந்த விஷயத்தை முடிச்சுட்டு உன் அப்பாவோட தொழில்முறை எதிரிங்க, இன்னும் வேற எதாச்சும் பகை இருக்கானு விசாரிச்சுட்டு காலைல வரேன்”

“ஓகே ரிஷி. நீங்களும் பத்திரமா இருங்க, என்ன நடந்துச்சுனு போன் பண்ணி சொல்லுங்க. நான் கிளம்பறேன்”

ரிஷிக்கு நிருஷிகாவை தனியாக அனுப்ப மனமில்லை, அதே சமயம் காவல் நிலையத்தில் உடனடியாக வரச்சொன்ன கட்டளையை மீறவும் முடியாது. நிருஷியின் கரத்தை அழுந்தப்பற்றிக் கொண்டு அவளை அழுத்தமாக பார்த்தான்.

“நிரு” என்றான் கவலையான குரலில்

“ம்”

“நான் வர்றவரைக்கும் பத்திரமா இருப்பேன்னு எனக்கு சத்தியம் பண்ணு” என்றவனின் உள்ளங்கையில் தன் கையை வைத்து அழுத்தினாள். அவளை இழுத்து அவளின் உச்சந்தலையில் தன் தாடையை அழுத்திக் கொண்டான்.

“பத்திரமா இருப்பேன், பதட்டபடாதீங்க”

“எனக்கு ஒரு ராசி இருக்கு நிரு. என்னை சேர்ந்தவங்க யாரும் என்கூட இருக்க மாட்டாங்க. நீயும் என்னை விட்டு போயிடுவியாேனு பயமா இருக்கு?”

“நான் உங்கள விட்டு போகமாட்டேன்” என்றாள் உறுதியான குரலில்

“என்னமோ உன்னை தனியா அனுப்ப மனசு வரல நிரு” அவன் இதயம் வேகமாக துடிப்பதை உணர்ந்தாள்.

“ப்ச், ரிஷி என்ன இது? நான் ஒரு வருஷமா தனியா தானே இருந்தேன். மாலினி ஆன்ட்டி அஸ்வின் இவங்க மேல சந்தேகம் இருந்தப்பவே நேத்து நைட் தைரியமா என்னை வீட்ல இருக்க சொன்னீங்க. இப்போ அவங்க ரெண்டு பேரும் அப்பாவோட நிலைமைக்கு காரணமில்லனு தெரிஞ்சுபோச்சு. வெளியே யாராச்சும் தான் இதை செஞ்சிருக்கணும். நாளைக்கு நீங்க வந்ததும் நாம அதை கண்டுபிடிப்போம், இடையில என்ன பிரச்சனைனாலும் நான் உங்களுக்கு உடனே போன் பண்ணிடுவேன்”

“எல்லாம் சரிதான் நிரு. இப்போ வீட்டுக்கு எப்படி தனியா போவே?”

“நீங்க கவலைப்படாதீங்க, அப்பாகிட்ட ரொம்ப வருஷமா டிரைவரா இருக்கற அண்ணாவுக்கு போன் பண்ணா அவர் அஞ்சுநிமிஷத்துல வந்து பத்திரமா என்னை கூட்டிட்டு போயிடுவாரு. அப்பா எப்பவும் அவர மட்டும் தான் என்கூட துணைக்கு அனுப்பி வைப்பாரு”

“உன் அப்பாவுக்கு ரொம்ப வருஷமா டிரைவரா இருந்தவரு உனக்கு அண்ணாவா?” மெல்ல புன்னகைத்தான்.

“அவர் பேரே அண்ணாமலை, எனக்கு அண்ணானு கூப்பிட்டு பழகிடுச்சு, இருங்க அவருக்கு போன் பண்றேன்” என்று கைப்பேசியை எடுத்தாள். அதே நேரம் ரிஷியின் எண்ணிற்கு காவல்நிலையத்திலிருந்து மீண்டும் அழைப்பு வருவதை பார்த்தவள், “ரிஷி நீங்க கிளம்புங்க, நான் டிரைவர் வரவரைக்கும் அப்பா அட்மிட் பண்ணியிருக்கற ரூம்ல காத்திருக்கேன். அவர் வந்தபின்னாடி போறேன் சரியா?” என்றாள்.

“ஆர் யு ஷ்யூர்?”

“யெஸ், நீங்க கிளம்புங்க” ரிஷி மனமேயில்லாம் நிருஷிகாவை மருத்துவமனை வாசலில் விட்டு வேகமாக காரை எடுத்துக் கொண்டு காவல்நிலையம் சென்றான்.

“சார், ஐயம் ரிஷிவர்மன். வரச்சொல்லியிருந்தீங்களே”

“மிஸ்டர் ரிஷி, நீங்க தங்கியிருந்த அபார்ட்மென்ட் செக்கரட்டரி சேகர் இப்போ ஹாஸ்பிட்டல்ல இருக்காரு, தெரியுமா?”

“அதுவந்து” ரிஷி தயங்க

“அவரை யாரோ அடிச்சிட்டு போனதா எதிர் பிளாட்ல இருந்தவங்க சொன்ன கம்ளெய்ண்ட் வச்சு நாங்க விசாரிக்க போனோம். ஆனா அவர் பெரிசா எங்ககிட்ட பிடி கொடுத்து பேசல. யார் அடிச்சாங்கனும் சொல்லல. எங்களுக்கு டவுட்டா இருந்ததால அப்பார்ட்மென்டடோட சிசிடிவி கேமரா அன்ட் அவரோட போனை வாங்கி செக் பண்ணோம். அப்போ அவர் தன் போன்ல இருந்து கடைசியா யாருக்கோ வாட்ஸ்அப்ல வாய்ஸ் மெசேஜ் பண்ணிருக்காரு அத செக் பண்ணப்போ, ‘ராஜ்ஜோட பொண்ணு நிருஷிகாவ காதலிச்ச ரிஷிவர்மன் திரும்பி வந்துட்டான், இப்போ அவனுக்கு பார்வை வேற நல்லா தெரியுது, நான் வேணும்னு தான் அவங்க காதல பிரிச்சேன்னு தெரியலனாலும் அவன் கிளம்பி யுஎஸ் போனதுக்கு நான் தான் காரணம், அதனால தான் அவன் பிரண்ட் செத்துட்டான்னு என்னை அடிச்சு கைய காலை உடைச்சிட்டான். அவன் தேவ்ராஜ் விஷயத்துல மூக்கை நுழைக்க வாய்ப்பிருக்கு. அவன் நோண்ட ஆரம்பிச்சா எல்லா விஷயமும் வெளிய வந்துடும், கவனமா இருனு பேசியிருக்கான்.

அவன் சொல்ற ரிஷி யாரு, தேவ்ராஜ் யார்னு விசாரிச்சப்போ தான் உங்கள கண்டுபிடிச்சோம், அன்ட் தேவ்ராஜ் மேலயும் கொலைமுயற்சி நடந்திருக்கு. அதனால் தான் உங்கள உடனே ஸ்டேஷனுக்கு வரச்சொன்னோம்”

“சார், செக்ரட்டரி மெசேஜ் அனுப்பின நம்பர் யாரோடதுனு கண்டுபிடிச்சிட்டீங்களா சார்?”

“அந்த நம்பர் தேவ்ராஜ் வீட்டு டிரைவர் அண்ணாமலையோட நம்பர்”

“ஓ மை காட்” ரிஷி பதற்றத்துடன் வெளியே செல்ல முயல, அவரின் கரம் பற்றி நிறுத்திய இன்ஸ்பெக்டர், “என்னாச்சு?” என்றார்

“சார், நீங்க போன் பண்ணதும் நிருஷிகாவ ஹாஸ்பிட்டல் வாசல்லயே விட்டுட்டு வந்தேன். அவ அந்த டிரைவர் கூட தான் வீட்டுக்கு போறதா சொன்னா. எனக்கென்னமோ பயமா இருக்கு, உடனே நிருஷிகாவ காப்பாத்தணும்”

“முதல்ல நிருஷிகாவுக்கு போன் பண்ணுங்க, அவங்களுக்கு எச்சரிக்கை பண்றது நல்லதில்லையா?” என்று இன்ஸ்பெக்டர் கேட்டதும் அதுவும் சரியென்று தோன்ற அவளுக்கு அலைபேசியில் அழைத்தான். ஆனால் அது அணைத்து வைக்கப்பட்டிருக்கவும் உடல் வியர்த்து விட்டது.

“நிருஷி, உன்னை இழக்க மாட்டேன்” என்று தனக்குள் சொல்லி கொண்டவன் இன்ஸ்பெக்டருக்காக காத்திருக்காமல் நிருஷிகாவின் வீட்டிற்கு காரில் பறந்தான். தன்னிடம் அன்பு காட்டும் யாருமே உயிருடன் இருக்கமாட்டார்களா? முதலில் அவன் பெற்றோர், பிறகு நண்பன் இப்போது நிரு? இல்லை, இந்தமுறை எந்த இழப்பையும் ஏற்றுக்கொள்ள அவன் தயாராக இல்லை. நிரு என்னும் பாவையின்றி அவனுக்கு பார்வையும் தேவையில்லை, இந்த வாழ்க்கையும் அவசியமில்லை.

வழியெங்கும் நிருஷிகாவுக்கு அழைத்து ஓய்ந்தவன் அவள் வீட்டை அடைந்தான். புவன் புவனிகா இருவரும் காரின் ஓசையை கேட்டு வாசலுக்கு ஓடிவந்தார்கள். “அக்கா வரலயா?” என்று இருவரும் கோரசாக கேட்க, அவள் இன்னும் வீட்டிற்கு வராததை உணர்ந்தவனின் இதயதுடிப்பு தாறுமாறாக துடிக்க ஆரம்பித்தது.

(தொடரும்)
 
Top Bottom