• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

செதுக்கிய சிற்ப பாவையே - 20

Vishakini

Moderator
Staff member
சிற்ப பாவை - 20

சுடர் விம்மல்களுக்கிடையே மெல்லிய குரலில் கேட்டாள், "அவர் இன்னும் கொஞ்ச நாள் நம்ம கூட இருந்திருக்கலாம் இல்லக்கா? உன் கல்யாணத்தையாவது அவர் கண்ணாரப் பார்த்திருக்கலாம். அவருக்கு அது மனசுக்குள்ள ஒரு பெரிய குறையாவே இருந்திருக்கும் இல்லக்கா?"

நகை ஒரு பெருமூச்சை வெளிவிட்டாள். "எது நடக்கணும்னு விதி இருக்கோ, அதுதான் நடக்கும் சுடர். காலத்தை நம்மால மாத்த முடியாது. இப்போ கல்யாணத்துக்கான ஏற்பாடு பண்றதோ, அதைப் பத்தி யோசிக்கிறதோ நம்ம குடும்ப சூழ்நிலைக்கு ஒத்து வராது. கஷ்டப்பட்டு இப்பதான் வாங்குன கடன்களை ஒரு வழியா அடைச்சிருக்கோம். இன்னும் சின்னவ படிப்பு பாதியில நிக்குது. இப்படிப்பட்ட நேரத்துல நான் மட்டும் சுயநலமா கல்யாணம் பண்ணிட்டுப் போயிட்டா, இவங்களை யார் கவனிப்பா? அதனால என் கல்யாணத்தைப் பத்தி இனி யாரும் பேசாதீங்க. எனக்கு இப்போதைக்கு அந்த எண்ணமே இல்லை. இனி வர்றதை வர்றபடி பார்க்கலாம்," என்று உறுதியான குரலில் கூறி, கலங்கி நின்ற தாயையும் தங்கையையும் தேற்றி, அவர்களுக்கு ஒரு கவளம் உணவாவது கொடுத்து சாப்பிட வைத்தாள்.

நகை தன்னை தானே சமாதானம் செய்து கொண்டாளா என்றால், அதுதான் இல்லை.

தந்தை என்றால் அவளுக்கு உயிர்... தன் ஆன்மாவின் ஒரு பகுதியை அவர் சிதையில் வைத்துவிட்டு வந்தது போல் உணர்ந்தாள்.

அப்படிப்பட்ட ஒரு பெரும் இழப்பை தாங்கிக் கொண்டு அவளால் எப்படி இயல்பாக இருக்க முடியும்? அவள் வாழ்வின் சரிபாதி தொலைந்து போனது போன்ற ஒரு வெற்றிடம் அவளை ஆட்கொண்டிருந்தது.

மீண்டும் ஒரு வாரம் ஓடியது. சுடருக்கு அவள் வேலை செய்யும் இடத்திலிருந்து அழைப்புகள் வரத் தொடங்கின.

மீண்டும் பணிக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம்.

யாருக்கும் பெரிய அளவில் தகவல் சொல்லாமல், மிக நெருக்கமான சுற்றத்தை மட்டும் வைத்துக்கொண்டு, பதினாறாவது நாள் காரியத்தை மிக எளிமையாக முடித்தனர்.

முக்கியமாகக் காத்தவராயனின் உடன்பிறந்த தங்கைகளை எதிலும் தலைகாட்ட விடவில்லை நகை. அவர்களை முற்றிலுமாக ஒதுக்கி வைத்தனர்.

"அவர்கள் யார்? இந்த வீட்டுக்கும் அவர்களுக்கும் என்ன சம்பந்தம்?" என்பது போன்ற ஒரு தீர்க்கமான மௌனத்தை அவர்கள் மீது வீசினார்கள். காத்தவராயனின் இறப்பை விட, அந்தப் பெண்களுக்கு இந்த அவமானமே மிகப்பெரிய அடியாக விழுந்தது.

"சுடர், நீ இனி வேலைக்கு கிளம்பு. இப்படி வீட்டுக்குள்ளேயே எல்லாரும் முடங்கிக் கிடந்தா, ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்து அழுதுகிட்டு தான் இருக்கணும். வாழ்க்கை இப்படியே போனா சாத்தியமில்லை. நானே உன்னைக் கொண்டு போய் விடறேன்," என்று தன் தங்கை சுடரைத் தயார் செய்து, அழைத்துக் கொண்டு சென்னைக்குக் கிளம்பினாள் நகை.

அவளை அவள் வேலை பார்க்கும் இடத்தில் கொண்டு போய் விட்டவள், பிரியும் போது தங்கை கையைப் பிடித்துக் கொண்டாள்.

"தைரியமா இரு சுடர். இனிமேல் நடக்கிறது எல்லாம் நல்லதாகவே நடக்கும்னு நம்புவோம். பழைய நினைவுகளையே கிளறி அழுதிட்டு இருக்கக் கூடாது. முடிஞ்ச வரைக்கும் நம்ம ஊர் பக்கமே ஏதாவது வேலை கிடைக்குமானு பாரு. அம்மாவையும் கவியையும் மட்டும் தனியா விட்டுட்டு என்னால அங்கே நிம்மதியா இருக்க முடியாது," என்றாள்.

"இல்லக்கா, இந்த ஒரு வருஷம் நான் இங்க வேலை செஞ்சே ஆகணும். அதுக்கப்புறம் நான் நம்ம ஊர் பக்கமே வந்துடுவேன். எங்க ஆபீஸ் பிரான்ச் நம்ம ஊர் பக்கமும் இருக்கு. அங்கே என்னை டிரான்ஸ்பர் பண்ணிடுவாங்க. எனக்குத் தெரிஞ்சு அங்கே என் வேலை பெர்மனன்ட் ஆகிடும்னு நினைக்கிறேன்," என்றாள் சுடர் நம்பிக்கையுடன்.

"ரொம்ப சந்தோஷம்... ஒரு மனுஷனுக்கு நல்ல வேலை இருக்கும்போதுதான் மரியாதை தானா வரும். சரி, நான் போயிட்டு வர்றேன்," என்று அவள் கையில் செலவுக்காகப் பத்தாயிரம் ரூபாயைக் கொடுத்துவிட்டு நகை அங்கிருந்து விடைபெற்றாள்.

நகைக்கும் இப்போது ஊருக்குத் திரும்ப வேண்டிய தருணம். தாயையும் தங்கையையும் ஓரளவுக்குத் தேற்றி, நிலைகுலைந்த குடும்பத்தைத் தன் தோள்களில் தூக்கி நிறுத்திவிட்டு அவள் கிளம்பினாள்.

அவர்களுக்கு இனி எந்த பாதுகாப்பும் இல்லை; தான் தான் அவர்களின் கவசமாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தாள்.

கிளம்பும் முன் தாயிடம் சொன்னாள், "அம்மா, எதுக்காகவும் யாருக்காகவும் நீங்க எங்கேயும் போய் கைக்கட்டி நிக்காதீங்க. உங்களால முடிஞ்ச வேலையை மட்டும் செய்யுங்க; முடியலைன்னா அமைதியா இருங்க. யாரையும் உதவிக்குத் தேடிப் போகாதீங்க.

வீட்ல கவி இருக்கா... யாரையாவது வீட்டுக்குள் விடுறதுன்னு எதுலயும் தப்பா நடந்திடக்கூடாது. ஆம்பளை இல்லாத வீடுன்னு தெரிஞ்சா நாலு பேர் இஷ்டத்துக்கு உள்ள வருவாங்க. அதனாலதான் சொல்றேன் ஜாக்கிரதையா இருங்க."

"நான் கவியை பார்த்துக்கிறேன் நகை. இனிமேல் இந்த வீட்டு வாசப்படியை யாரும் மிதிக்க விடமாட்டேன். நீ தைரியமாப் போயிட்டு வா. உன் அம்மா பழையபடி அழுதுகிட்டே இருப்பான்னு அங்கே நீ பயப்பட வேண்டாம் சரியா?" என்று தாய் உறுதியளித்தாள்.

"சரிம்மா..."

தன் மொட்டைத் தலையைப் பார்த்து ஒரு நொடி கூட அவள் கலங்கவில்லை. அதை அசிங்கமாக, அவமானமாக அவள் கருதவில்லை. பெருமையாக தலை நிமிர்ந்து நடந்தாள்.

அதைத் தன் தந்தைக்கு ஒரு மகளாகச் செய்த மகா பாக்கியமாகவே கருதினாள். அதை மறைக்க துணியால் மூடவோ, அசிங்கப்பட்டு ஒதுங்கவோ அவள் நினைக்கவில்லை.

தன் பொருட்கள் அடங்கிய பையை சுமந்துகொண்டு அவள் கீழே இறங்கி வரும்போது, அந்தத் தெருவே அவளை ஒருவித மரியாதையோடும், வியப்போடும் பார்த்தது.

"புள்ளை பெத்தா இப்படி ஒரு வைரம் மாதிரி பெக்கணும்! நானும் தான் பெத்து வச்சிருக்கேனோ என்னவோ..." என்று பக்கத்து வீட்டுப் பெண்மணி தன் மகனைப் பார்த்து சாடினார்.

அவன் நகையையே ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருக்க, அவன் தந்தை அவனை எட்டி ஒரு உதை தள்ளினார்.

"அந்தப் புள்ளை கையால குண்டடிப்பட்டு சாவாதே, உள்ள போடா!" என்று விரட்டியவர், மனதிற்குள் நகையை நினைத்துப் பெருமிதம் கொண்டார்.

எல்லாத் தந்தைக்கும் இப்படி ஒரு பிள்ளை அமைந்துவிடாது. தந்தையின் கனவுகளையும், அவர் விட்டுச் சென்ற சுமைகளையும் தன் மெல்லிய தோள்களில் சுமக்கும் பிள்ளை என்பது வரம். அது ஆயிரத்தில் ஒருவருக்குத் தான் கிடைக்கும்; அது காத்தவராயனுக்கு கிடைத்திருந்தது.

பக்கத்து வீட்டு அங்கிள் ஓடி வந்து, "நகை, நீ பயப்படாம போயிட்டு வாம்மா. உன் அம்மாவுக்கும் தங்கைக்கும் நாங்க இருக்கோம். இந்தத் தெருவுல இதுவரைக்கும் எந்தத் தப்பும் நடந்ததில்லை, இனியும் நடக்காது. எங்களைத் தாண்டி யாரும் அவங்களைத் தொட முடியாது," என்று ஆறுதல் கூறினார்.

"எனக்கு நம்பிக்கை இருக்கு அங்கிள். இனி அம்மாவே எல்லாத்தையும் பார்த்துப்பாங்க. நான் வர்றேன்," என்று கூறிவிட்டு வைராக்கியத்தோடு கிளம்பினாள்.

முன்பெல்லாம் விடுமுறை முடிந்து செல்லும்போது, "அப்பாவைப் பாக்குறது இதுதான் கடைசி முறையோ? அவருக்கு ஏதாச்சும் ஆகிடுமோ? அவர் எங்களை விட்டு சென்று விடுவாரோ? அடுத்த முறை பார்க்க மாட்டோமோ?" என்ற பயத்தோடும் மன பாரத்தோடும் செல்வாள்.

ஆனால் இன்று, "இனி என் அப்பா என் கூடவே வருவார். என் நிழலாய், என் துணையாய் அவர் என்னுடனேயே இருப்பார், ஒவ்வொரு நொடியும் எங்களுடன் துணை நிற்பார்." என்ற தைரியம் அவளை இன்னும் ஒரு படி உயரத்தில் ஏற்றி வைத்தது.

இறந்த தந்தை ஒரு ஆன்மாவாக தன்னை வழிநடத்துவார் என்ற நம்பிக்கை அவளுக்குள் ஒரு புது ரத்தத்தைப் பாய்ச்சியது.

நகை மீண்டும் தன் பணியில் சேர்ந்தாள். அத்துடன், இத்தனை நாட்களாக நிறுத்தி வைத்திருந்த எழுத்துப் பிழை திருத்தும் வேலைகளையும், 'வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட்' பணிகளையும் தீவிரமாகத் தொடங்கினாள்.

கடன்கள் ஓரளவுக்கு அடைக்கப்பட்டிருந்தாலும், மூன்றாவது தங்கையின் படிப்பு, இரண்டாவது தங்கையின் திருமணம், தாயின் முதுமை என எல்லாப் பொறுப்புகளும் அவளுக்குள் ஒரு பெரு நெருப்பாக எரிந்து கொண்டிருந்தது.

அத்தனையும் நினைத்துப் பார்த்த நகை, தனக்கென்று ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை ஒரு நொடி கூட சிந்தித்துப் பார்க்கவில்லை.

தன் திருமணத்தை பற்றி யோசிக்கக்கூட அவளுக்கு நேரமில்லை.

உண்மையில் அவளுக்குள் ஆசை இல்லையா? இல்லை, ஆசைகள் இருந்தும் தன் குடும்பத்திற்காக அதைத் தானே குழிதோண்டிப் புதைத்துக் கொண்டிருக்கிறாளா? இந்தக் கேள்விக்கு அவள் மனமே சாட்சி!

பணத்திற்காக அவள் அலையவில்லை; ஆனால் பணம் தான் வாழ்க்கையில் மனிதர்களை ஓட வைக்கிறது என்ற கசப்பான உண்மையை அவள் உணர்ந்தாள். பணம் இல்லாமல் வாழ்க்கை நகராது என்பது ஏற்க முடியாத உண்மை.

கணவர் இறந்து ஒரு வருடம் முடியும் வரை எந்த சுப காரியமும் செய்யக்கூடாது என்பதால், தேடி வந்த வரங்களை வெண்பாவால் ஏற்க முடியவில்லை.

வரும் வரங்கள் அனைத்தும் சுடருக்காகவே இருந்தன; நகையின் தியாகத்தை யாரும் உணரவில்லை.

"ஐயோ, சுடருக்கு மொதல்ல கல்யாணம் பண்ணுங்கம்மா... எனக்கு வேண்டாம்," என்று நகை சொல்லச் சொல்ல, வெண்பாவின் மனப்பாரமும் குற்ற உணர்வும் பெருகிக் கொண்டே போனது.

"கவி... நாம கோவிலுக்குப் போயிட்டு வரலாமா?"

இருவரும் ஒன்றாகக் கிளம்பினர்.
"காத்தவராயன் இறந்து ஒரு வருஷம் முடியும் வரை கோவிலுக்குப் போகக்கூடாது" என்று சொல்லுவார்கள் தான்.

ஆனால் வெண்பாவின் மன அழுத்தம் தாங்க முடியாத நிலைக்கு செல்லும் போதெல்லாம், அந்த தெய்வத்தின் காலடியில் தான் அவர் ஆறுதல் தேடிப் போகிறார்.

இருவரும் மெல்ல நடந்து சென்று அந்தப் பழமையான அம்மன் கோவில் வாசலில் அமர்ந்தனர்.

வெண்பா, அங்கிருந்த வெறிச்சோடிய பிரகாரத்தையும், அமைதியாக வீற்றிருந்த அம்மனையும் பார்த்துக் கொண்டிருக்க, அங்கே ஒரு காட்சி அவள் கவனத்தை ஈர்த்தது.

சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல், கல் தரையில் பரந்தாமணியின் அன்னை அங்கப்பிரதட்சணம் செய்து உருண்டு வந்து கொண்டிருந்தார். வியர்வையும் கண்ணீரும் அந்தப் பக்திப் போராட்டத்தில் கலந்திருந்தது.

அவரின் பின்னால், தன் தாயின் நிலையைப் பார்த்து கண்கலங்கிய படி மகள்கள் இருவரும் அரணாகத் துணையாக வந்து கொண்டிருந்தனர்.

"இந்த வயசான காலத்துல, உடம்பு முடியாத நேரத்துல இவங்க எதுக்கு இப்படி ஒரு வேண்டுதலை வச்சுக்கிட்டாங்க?" என்று யோசனையோடு வெண்பா தன் மகளின் கையை மென்மையாக, ஆனால் உறுதியாகப் பிடித்துக் கொண்டு அவர்களை நோக்கிச் சென்றார்.

அதற்குள் அங்கப்பிரதட்சணம் முடித்துவிட்டு, பரந்தாமணியின் தாய் கண்ணகி தட்டுத்தடுமாறி எழுந்து, ஈரத் துணியுடன் தெய்வத்தை நோக்கி கைகூப்பி நின்றார்.

வெண்பாவைக் கண்டதும், வலியையும் மீறி ஒரு மெல்லிய புன்னகை அவர் முகத்தில் அரும்பியது.
 
Top Bottom