என் மன்னவன் நீதானோ - 10

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,569
6,512
113
என் மன்னவன் நீ தானோ
அத்தியாயம் 10
சௌமிகாவிற்கு இருபத்தியொன்றாவது பிறந்த நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. அதை எளிமையாகவும் சிறப்பாகவும் கொண்டாட வேண்டும் என சகுந்தலா விரும்பினார். அது தொடர்பாக தனது தங்கையுடனும் கலந்து ஆலோசித்துவிட்டு, விழாவுக்கான ஏற்பாடுகளில் மும்முரமாக இறங்கினார். சகுந்தலா அந்த அடுக்குமாடி குடியிருப்பில் கீழ்தளத்தில் உள்ள சிறிய மண்டபத்தில் வைத்து பிறந்த நாளைக் கொண்டாடுவது என முடிவு எடுத்து, அதை ஏற்பாடு செய்தார். ஆடைகள் தேர்வு செய்வது, கேக் செய்வது, மண்டப அலங்காரம், இரவு உணவு ஏற்பாடு செய்வது போன்றவற்றை சௌமியுடனும் கலந்து பேசி ஆயத்தப்படுத்தினார். அவர் சௌமிகாவின் ஒரு சில நண்பர்களையும் அந்த குடியிருப்பில் அவர்களுடன் நெருங்கிப் பழகும் சிலரையும் சில உறவினர்களையும் விழாவுக்கு அழைத்தார். சௌமிகாவிற்கு மெஜந்தா நிறத்தில் மிகவும் அழகான சேலையை பிறந்த நாளன்று அணிவதற்காக வாங்கி கொடுத்தார்.

பிறந்தநாளுக்கு இரண்டு நாட்கள் முன்னர் வந்த சௌமியின் பெற்றோர்களும் சகோதரனும், சகுந்தலா செய்திருந்த ஏற்பாடுகளைப் பார்த்து மகிழ்ந்ததுடன் அவர்களும் தங்களால் இயன்ற வேலைகளில் பங்கு எடுத்துக் கொண்டார்கள். அவர்கள் ஊரில் இருந்தே விழாவுக்கு தேவையான பலகாரங்களை செய்து கொண்டு வந்திருந்தனர்.

பத்மாவும் அகிலனை அழைத்துக் கொண்டு புடவைக் கடைக்கு சென்று, சௌமிக்கு பரிசளிப்பதற்காக ஓர் அழகிய சேலையை தேர்வு செய்தவர் அவனிடம் “நாளைக்குப் பின்னேரம் ஆறுமணியளவில கேக் வெட்டுவதாக சகுந்தலா ஆண்டி சொன்னவா, நாங்கள் ஐந்தரை மணியளவில போக வேணும்” என்றார்.

“அம்மா… எனக்கு நிறைய வேலை இருக்கு..., அங்க வந்து நான் என்ன செய்யுறது நான் வரேல்ல.... நீங்கள் போங்க” என்றவனுக்கு, சௌமியின் பிறந்தநாளை தவிர்ப்பது நோக்கமல்ல.

“என்ன தம்பி இப்பிடி சொல்லுறாய்? நீயும் கட்டாயம் வரோணும்” என ஆதங்கப்பட்டார் அவர்.

“அம்மா… நான், புத்தக வெளியீட்டு விழாவுக்கு சுப்ரீம் கோர்ட் ஜட்ஜை இன்வைட் பண்ண போக வேணும். அதற்கு ஆறு மணிக்கு அவரை சந்திக்க அவர் அப்பாயின்ட்மென்ட் தந்திருக்கிறார்” என்றான் அவன்.

“ சௌமின்ர பெர்த்டே பார்ட்டி இருக்கு அதுக்கு போக வேணும் என்று முதலே சொன்னனான் தானே” எனக் கேட்டார் அவர்.

“சொன்னீங்க தானம்மா…, ஜட்ஜும் சரியான பிஸி, அவர் தந்த திகதிக்கு நான் போகாவிட்டால், இன்னொரு அப்பாய்ண்ட்மெண்ட் எடுக்குறது கஷ்டம். இந்த திகதி அவர் ஒரு மாதத்துக்கு முதலே தந்தது” என்றவனுக்கு உண்மையிலேயே அவனுக்கு இருக்கும் வேலைப்பளுவில் அங்கே போய் இரண்டு மணித்தியாலங்கள் செலவிட முடியாது.


“இஞ்ச எல்லாத்துக்கும் சகுந்தலாவும் அண்ணாவும் ஓடி ஓடி வாறவை, அவையின்ர வீட்டில ஒரு விசேஷம் என்றால் நாங்கள் போற இல்லையா?” அவரது குரலில் சினம் எட்டிப் பார்த்தது.

“அவைக்கு ஒரு தேவை எண்டால் நான் கட்டாயம் வருவன்…, பர்த்டேக்கு நான் வந்து என்ன செய்யுறது… சும்மா தானே இருக்கோணும்”

“நீ அங்க வந்து ஒண்டும் செய்யத் தேவையில்லை… ஆனால் அதில கலந்து கொள்ள வேணும்”

“சரிம்மா என்ர வேலையை விரைவாக முடிச்சிட்டு அங்க எட்டு மணியளவில வாறன்”

இந்த அளவிலாவது இறங்கி வந்தானே என நினைத்துக் கொண்டு “சரி தம்பி, பிந்தாமல் வா” என்றார் அவர் அலுத்துக் கொண்டே.

“சரிம்மா” என்றவன் தனது வேலைகளை கவனிப்பதற்காக சென்றுவிட்டான்.

மாலை ஐந்தரை மணியளவில் பிறந்த நாள் விழாவுக்கு சென்ற பத்மாவை “அகிலன் எங்க பத்மா...?, அவன் வரேல்லையா?” எனக் கேட்டார் சகுந்தலா.

“அவன் ஏதோ முக்கிய அலுவல் என்று போட்டான், அதை முடிச்சுக் கொண்டு வருவான்” என்றவர் “சௌமி எங்க?” என விசாரித்தார்.

“அங்க அவளின்ர ப்ரண்ஸோட கதைச்சுக் கொண்டு நிக்கிறாள்” என்று அவர் கையை காட்ட, அங்கே திரும்பி பார்த்தவர், அவளின் அழகில் அவர் மனம் மகிழ்ந்தது. அவள் அணிந்திருந்த மெஜந்தா வண்ண சேலையில் சிறு பூக்களும், பார்டரில் சிறு மணிகளும் கோர்க்கப்பட்டு அழகாக இருந்தது. அச்சேலை அவளுடைய நிறத்துக்கு மிகவும் பொருந்தி அவளின் அழகை மேலும் அதிகப்படுத்தியது. கழுத்துக்கு முத்து மாலையும் அதற்குப் பொருத்தமான காதணிகளும் அணிந்திருந்தாள். தலை முடியில் சிலதை எடுத்து ஓர் கிளிப்பில் அடக்கி இருந்தாள். தனது நண்பிகளுடன் கதைத்துக் கொண்டு நின்ற அவளை நோக்கி வந்தவர் “ஹப்பி பர்த்டே சௌமியம்மா” என்றவர் அவளை முத்தமிட்டு விட்டு, “நல்ல வடிவாய் இருக்கிறாய்” என்றார் அன்புடன்.

அவளது கண்கள் அகிலனைத் தேடின. அவனைக் காணாததால் ஏற்பட்ட ஏமாற்றத்துடன் “ தாங்ஸ்?” என்றாள். “பர்த்டே பரிசு…” என அவளிடம் தான் கொண்டு வந்திருந்த பரிசையும் கொடுத்தார் அவர்.

அகிலன் விழாவுக்கு வருவான் என்ற நினைப்பில், அவளின் விழிகள் அவன் வருகிறானா என அங்கும் இங்கும் பார்த்து கொண்டு இருந்தன. அவளின் மனம் அவனின் வருகைக்காக மிகவும் ஏங்கியது.

விருந்தினர்கள் அனைவரும் வந்ததும், கேக் வெட்டினார்கள். அதன் பின்னர் அவர்கள் அவளை வாழ்த்தி பரிசு கொடுத்தார்கள். நேரம் எட்டு மணிக்கு மேல் ஆகிவிட்டது, விருந்தினர்கள் சாப்பிட்டு விட்டு கிளம்பத் தொடங்கி விட்டார்கள், இவ்வளவு நேரமும் அவள் தனது நண்பர்களுடன் பேசி சிரித்துக் கொண்டிருந்தவள், அவர்கள் கிளம்பிச் சென்றதும், அகிலனை எதிர்பார்த்து வாசலையே பார்த்துக் கொண்டிருந்தாள். நேரம் எட்டரை ஆகிவிட்டது. விருந்தினர்கள் எல்லோரும் கிளம்பிச் சென்று விட்டனர். அகிலன் வருவதாகச் சொன்னதால் பத்மா அங்கேயே இன்னும் இருந்தார். அவர் அருகே வந்து அமர்ந்த சகுந்தலா “என்ன பத்மா நேரமாயிட்டுது… அகிலனை இன்னும் காணவில்லை” என்றார்.

“ம்… நானும் அவனுக்காகத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறன்” என்றார் அவர்.

“புத்தக வெளியீட்டு விழா எப்ப?”

“வாற மாசம், அதுக்காகத் தான் அவன் இரவு பகல் பாராமல் ஓடித் திரியுறான்” என்று பத்மா கூறிக் கொண்டிருக்கும் போது அகிலன் அங்கே வந்தான்.

“வா… அகிலன்” என்று வரவேற்ற சகுந்தலாவிடம் “சாரி ஆண்டி நேரமாகிட்டுது, ஜட்ஜை சந்திக்கப் போனனான், அவரோட கதைச்சுக் கொண்டிருந்ததில நேரம் போயிட்டுது” என்றவன் சௌமிகாவைப் பார்த்தான். முதன்முதலாக இன்றுதான் அவளை சேலையில் பார்க்கிறான். பெரிய பெண் போல மிகவும் அழகாக இருந்தவளை தன்னையும் மீறி ரசித்தவன், அவளிடம் “ஹப்பி பர்த்டே” என்றான் அன்புடன்.

அவன் வந்ததுமே முகம் மலர அவனையே பார்த்திருந்தவள் “தேங் யூ” என்றாள் மெதுவாக.

அவளிடம் ‘சரி’ என்பது போல தலையை அசைத்து விட்டு அருகில் உள்ள கதிரையில் அமர்ந்தவனை வரவேற்ற கமலாவும் அவரது கணவரும் அவனுடைய புத்தக வெளியீட்டு விழா பற்றி விசாரித்தனர். “வாற மாசம் பதினைந்தாம் திகதி விழா, நீங்கள் எல்லாரும் கட்டாயம் வரோணும் ” என்று அவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்தான்.



“நாங்கள் நாளைக்கே கிளம்ப இருக்கிறம், எனக்கு வேலையில லீவு எடுக்க ஏலாது, மகனும் இரண்டு நாளா பள்ளிக்கூடத்துக்கும் போகேல்ல. அடுத்த மாசம் எங்களுக்கு திரும்பவும் வாறது கஷ்டம். அண்ணா, மச்சாளோட சௌமி வருவாள்” என்ற சிவநாதன் தொடர்ந்து “சின்ன வயசிலேயே இதெல்லாம் செய்யுறீங்கள்… விழா சிறப்பாக நடக்க எங்களுடைய வாழ்த்துக்கள் தம்பி’ என்றார்.

“அத்தான்… அகிலன் சின்ன வயசுல இருந்தே படிப்பிலேயும் சரியான கெட்டிக்காரன், சகல போட்டிகளிலும் பங்கு கொள்வான், ஸ்போர்ட்ஸும் நல்லா செய்வான்” என்றார் சகுந்தலா பெருமையாக.

“அப்படியா…? கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு… நீங்கள் நல்லா இருக்கோணும் தம்பி...” என்றார் அவர்.
“தேங்ஸ் அங்கிள்” என்றான் அகிலன்.

“தம்பி சாப்பிடும் ” என்றார் ரவீந்திரன்.

“நீங்கள் எல்லாரும் சாப்பிட்டீங்களா?” என்று கேட்டவனிடம் “நாங்கள் சாப்பிட்டோம்… சௌமி தான் இன்னும் சாப்பிடேல்ல...” என அவனிடம் கூறிய சகுந்தலா “சௌமி நீயும் சாப்பிடு” என்றார் அவளிடம் ..

“ம்…” என்றவள், அவன் எழுந்து செல்லவும், அவளும் அவனை பின் தொடர்ந்து சாப்பாடு வைத்திருக்கும் இடத்திற்குச் சென்றாள். அங்கே தனது தட்டில் சாப்பாடு பரிமாறிக் கொண்டிருந்த அகிலனிடம் “நீங்கள் வரமாட்டீங்க எண்டு நினைச்சன்” என்றாள் கண்களை விரித்து ஓர் விதமான குரலில். இப்போது அவர்கள் சந்திப்பதும் கதைப்பதும் வெகுவாக குறைந்துவிட்டது. அன்றைக்குப் பிறகு இப்பத்தான் அவர்கள் இருவர் மட்டும் பேச சிறு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

“ஏன்..?” அவளைப் பார்த்துக் கேட்டான் அவன்.

“நீங்கள் சரியான பிஸியான ஆள் தானே அது தான்...”என்றாள் அவள் நக்கலாக.

“நீர் சொல்லுறது சரிதான், உண்மையிலேயே பிஸிதான் ” என்றான் அவன் சிறு அலுப்புடன்.

“ம்… டயர்டா இருக்கீங்களா” அக்கறையோடு விசாரித்தாள்..

“ம்...., அது சரி. நீர் ஏன் இவ்வளவு நேரமா சாப்பிடேல்ல…?”

“சாப்பிடப் பிடிக்கேல்ல...”

“ஏன்…?”

“தெரியேல்ல...” என்றவளை ஒரு விதமாக பார்த்தவாறு

“பார்ட்டி நல்லா நடந்துச்சா…? எல்லாரும் வந்தவையா…?” என அக்கறையோடு கேட்டான்.

“ம்… நல்லா நடந்துச்சு, நீங்களும் வந்தது எனக்கு சரியான சந்தோசம். போட்டோ எல்லாம் நல்லா இருக்கு… உங்களுக்கு அனுப்புறன் ” என்றாள் அவள் மிகுந்த குதுகலத்துடன்.

அவளது ஆனந்தத்தைப் பார்த்து ரசித்தவாறே “சரி… எல்லாவிதமான சாப்பாடும் இருக்கு…, எல்லாம் எடுத்துட்டீரா?” என அவளிடம் கேட்டான். “நான் எடுத்திட்டன்… நீங்கள்…?” “ஓம் நானும் எடுத்திட்டன்… அவையளுடன் இருந்து சாப்பிடுவம் வாரும்” என அவளை அழைத்துச் சென்றான். எல்லோருடனும் சேர்ந்து அமர்ந்து கதைத்தவாறு உண்டனர்.

சாப்பிட்டு முடித்த பின்னர் அனைவரிடமும் விடை பெற்றுக் கொண்டு சௌமியிடமும் கண்களால் விடைபெற்றவாறு தாயையும் அழைத்துக் கொண்டு அகிலன் கிளம்பினான்.

அவர்கள் கிளம்பியதும், சௌமி, தனது பெற்றோரிடம் ‘எனக்கு டயர்டா இருக்கு நான் படுக்க போறன்’ என்று விட்டு தனது அறைக்கு வந்து கதவைச் சாத்தியவள் மனம் முழுவதும் அகிலனே நிறைந்து நின்றான். இதுவரை காலமும் எதைப் பற்றியும் சிந்தியாமல் அம்மா, அப்பா, தம்பி, படிப்பு, விளையாட்டு எனத் தனது வாழ்க்கையை அதன் பாட்டுக்கு அமைதியாக நடாத்திச் சென்றவளுக்கு, இப்போது என்ன நடந்தது, எப்பிடி நடந்தது என அவள் அறியாமலேயே அவள் மனம் முழுவதும் அகிலனே நிறைந்து நின்றான். எந்நேரமும் அவன் நினைவாகவே இருப்பவள் தனது பிறந்த நாள் விழாவிற்கு அவன் கட்டாயம் வந்து தன்னை வாழ்த்த வேண்டும் எனப் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தாள். அவனின் வரவை எதிர்பார்த்து வாசலையே பார்த்துக் கொண்டிருந்தவள், அவன் வராமலேயே கேக் வெட்டும் போது, மிகுந்த வேதனைப்பட்டாள். இறுதியில் அவன் வந்த போது அளவில்லா ஆனந்தம் அடைந்தாள். அந்த மகிழ்ச்சியுடன் அவள் தூங்கிப் போனாள்.
 

Author: Vishakini
Article Title: என் மன்னவன் நீதானோ - 10
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
383
83
Chennai
ரொம்ப ரொம்ப கஷ்டம் டா சௌமி அவன் லவ் பண்றது எல்லாம்..... நல்லா யோசிச்சிக்கோ
 
  • Like
Reactions: STN - 78

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Members online