என் மன்னவன் நீதானோ - 16

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,569
6,512
113
என் மன்னவன் நீ தானோ
அத்தியாயம் 16

பத்மா இரவு உணவைத் தயாரித்து விட்டு அகிலனுக்காக காத்துக் கொண்டிருந்தார். அவன் வந்ததும் இருவருமாக அன்றைய நாளைப் பற்றி கதைத்தவாறு சாப்பிட்டு முடிந்ததும் “சௌமி வந்திட்டுப் போனவள்” என்றவர் அவனைப் பார்த்தார்.

அவள், தான் என்னை விரும்புவதை பற்றி ஏதும் கதைத்தாளோ என எண்ணியவன் நிமிர்ந்து தாயைப் பார்த்தவாறு, என்னவென்றாலும் அவரே ஆரம்பிக்கட்டும் என்ற எண்ணத்துடன் ”ம்…” என்றான்.

“அவள் உன்னை விரும்புறாளாம்” என்றார் அவனையே பார்த்தவாறு.

அதற்கு அவன் “ம்…” என்றான் சாதாரணமாக.

“என்னை எல்லாரோடையும் கதைச்சு கல்யாணத்தை செய்து வைக்கச் சொல்லுறாள்”. என்றார் அவர்.

“ம்…”

“நீ அவளைப் பற்றி என்ன நினைக்கிறாய்…? உனக்கு அவளை பிடிக்குமா…? நீ அவளை விரும்புறியா…?” எனக் கேட்டார்.

“ எனக்கு அவளைப் பிடிக்கும் தான், அதுக்காக கலியாணம் செய்யோணும் எண்டு நினைக்கல்ல…” என்றான் அவன்.

“ஏன் அவளளுக்கு என்ன குறை...? நல்ல பிள்ளை தானே…? கலியாணம் செய்தால் என்ன…?” எனக் கேட்டார்.

“அவளுக்கு ஒரு குறையும் இல்லை... நல்ல பிள்ளை தான் அதை நான் மறுக்கேல்ல… அதுக்காக கலியாணம் செய்யோணும் எண்டில்லை.”

“அவள் உனக்கு எல்லா விதத்திலும் பொருத்தமானவள் எண்டு நானே பல தடவை யோசிச்சு ஆசைப்பட்டு இருக்கிறன். ஆனால் அதை வெளிப்படுத்த தயங்கிக் கொண்டிருந்தனான். இப்ப அவளே வந்து தன்ர விருப்பத்தை சொல்லிட்டாள். நீ ஏன் அவளைக் கட்ட யோசிக்கிறாய் ?” எனக் கேட்டார்.

“அவளுக்கும் எனக்கும் வயசுப் பொருத்தம் இருக்கு எண்டு நீங்கள் நினைக்கிறீங்களா…?” என அவரைப் பார்த்து வினாவினான்.

“அவளுக்கு வயசு கொஞ்சம் குறைவு தான்…” என்றார்.

“கொஞ்சம் இல்லை… நல்லாக் குறைவு…” என்றான் நக்கலாக.

“அதெல்லாம் ஒரு பெரிய விசயம் இல்லை தம்பி…”

“முதல்ல நான் அப்பிடி ஓர் எண்ணத்தோடு அவளோட பழக இல்லை…, சகுந்தலா ஆண்டி என்னை தன்ர மகன் மாதிரி தான் நினைக்கிறவா…, அவா என்னை நம்பி, நான் அவளை நல்லா பார்த்துக் கொள்வன் எண்டு தான் அவளை எல்லா இடத்துக்கும் என்னோட அனுப்பினவா, அவையளுக்கு நான் நம்பிக்கை துரோகம் செய்ய விரும்பேல்ல…”

“அவள் உன்னை விரும்புறாளே அகில், அதுக்கு நீ என்ன செய்யேலும்…”

“அவளுக்கு புத்திமதி சொல்லோணும்…”என்றான்.


“உனக்கும் அவளுக்கும் இடையில் ஏதும் பிரச்சினையா…?” எனக் கேட்டார்.

‘இல்லை’ என்பது போல தலையை ஆட்டியவன் “இது சரிவராது, நான் அப்பிடியான எண்ணத்தில உம்மோட பழகேல்ல எண்டு சொன்னனான் அது அவளுக்குப் பிடிக்கேல்ல…” என்றான்.

“அவள் உன்னைத் தான் கட்டுவன் எண்டு ஒற்றைக் காலில நிக்கிறாள்”.

“அவளுக்கு சொல்லி புரியவையுங்கம்மா…” என்றான் அவன்.

“நான் சொல்லி அவள் கேட்டிட்டாலும்” என்றவர் தொடர்ந்து “அவளும் சரியான பிடிவாதக்காரி, அவள் நினைச்சதை தான் செய்வாள். எப்பிடியாவது அதுவும் வெகு சீக்கிரமாக கல்யாணம் செய்யோணும் எண்டு அவள் சொல்லுறாள்…, ஏன் அவசரப்படுகிறாள் எண்டும் தெரியேல்ல ” என்றவர் சிறு கவலையுடன் அவனைப் பார்த்தார்.

சிறு சிரிப்புடன் தாயைப் பார்த்தவன் “நான் சின்னப் பிள்ளை எண்டு நினைக்க அவள் என்னவெல்லாம் கதைக்கிறாள்” என்றான்.

“நான் சகுந்தலாவோட இதைப்பற்றி கதைக்கிறன்… அவள் என்ன நினைக்கிறாள் எண்டு கேட்டுப் பார்ப்போம்”

“இப்ப அவையள் கிளம்புறதுல சரியான பிஸியா இருப்பினம்… அவையளைக் குழப்பாதையுங்கோ…, ஆண்டியை சங்கடப் படுத்தாதையுங்கம்மா”

“சரி நான் இப்ப கேக்கேல்ல… இரண்டு நாளைக்குப் பிறகு ஃபோனில கதைக்கேக்க கேட்கிறன்”.

“அம்மா… இதைப் பற்றி ஒண்டும் ஆண்டியோட கதைக்க வேணாம் ”என்றான் அவன்.

“ஏன்…?”

“முதலாவது எனக்கு அவளைக் கட்டுற ஐடியா இல்லை… இரண்டாவது நீங்கள் கேட்டு அவை மறுத்தால் எங்களுக்கு சரியான மனத் தாங்கலாக இருக்கும்… அவை விருப்பம் இல்லாமல், நாங்கள் கேட்டதுக்காக சம்மதிச்சாலும் எங்களுக்கு சங்கடமாகத்தான் இருக்கும்… எனவே நீங்கள் ஆண்டியோட இதைப் பற்றி ஒண்டும் கதைக்க வேண்டாம்” என்றான் கண்டிப்பாக.

அகிலன் கூறுவதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனவே “தம்பி... ஒருக்கா கேட்டுத் தான் பார்ப்போமே...” என்றார் கெஞ்சுதலாக.

“இல்லையம்மா… வேண்டாம் விட்டுடுங்க...” என்றவனுக்கு சௌமி மீது கடும் சினம் ஏற்பட்டது.

“அவைக்கும் உன்னைப் பிடிச்சு இருக்கலாம் தானே… அவையும் கேட்காமல் விட்டிருக்கலாம் தானே...” என்றார்

“அம்மா அவைக்கு என்னை பிடிக்கிறது, பிடிக்காதது பிரச்சினை இல்லை… எனக்கு அந்த ஐடியா இல்லை எண்டு சொல்லுறன்” என்றான் சற்றுக் கடுமையாக

அவனின் மனஓட்டம் புரிந்தாலும் அவரும் அவனுக்கு சளைத்தவர் அல்லவே “உனக்கும் ஒரு அலையன்ஸும் சரி வரேல்ல..” என்றார்.

“அதுக்கு…?” எனக் கேட்டான்.

“அவள் உன்ன தான் கட்டுவன் எண்டு ஒற்றைக் காலில நிக்கிறாள்” என்றார்.

“எனக்கு விருப்பமில்லை… என்னை வற்புறுத்தாதையுங்கோ... ” என்றான் கண்டிப்புடன்.

“அப்ப ஏன் அவள் விரும்புகிறாள் எண்டு தெரிஞ்சும் அவளோட பழகினனீ…? அவளுக்கு ஏன் நம்பிக்கை கொடுத்தனீ…?” என்றார் கோபத்துடன்.

“அவளுக்கு நான் என்ன நம்பிக்கை கொடுத்தனான்…? அப்படி அவள் சொன்னவளா...?” என அவரைப் பார்த்துக் கேட்டவன் தொடர்ந்து, “அவள் என்னை விரும்புறன் எண்டு சொன்னதிலிருந்து நான் அவளோட கதைக்கிறதில்லை… அவளைக் கண்டாலும் ஓடி ஒளிகிறனான்” என்றான் சற்று சூடாகவே.

“அவள் சொல்லித்தான் அவள் உன்னை விரும்புறாள் எண்டு உனக்குத் தெரிஞ்சதாக்கும்… அவளை, அவளின் நடவடிக்கைகளை பார்த்தாலே தெரியேல்ல...” என்றவருக்கு சற்றும் சினம் குறையவில்லை.

“இல்லை...” எனக் கூறியவனுக்கும் கோபம் தணியவில்லை.

“நீ என்ன சின்னப் பிள்ளையா…? இது கூட உனக்கு விளங்கேல்ல…” எனச் சினந்தார்.

“இல்லை எண்டு தான் சொல்லுறன்” என்றவனும் தனக்கு அவளில் பாசம் இருப்பது போல் அவளுக்கும் இருக்குதாக்கும் என்று தான் நினைத்திருந்தான்.

“நீ அவளை நம்ப வைச்சு, நம்பிக்கை குடுத்திட்டு இப்ப ஏமாத்துறாய்…” என்றார் கோபமாக.

“அம்மா உங்களுக்கு தெரியாததை கதைக்காதையுங்கோ…” என்றவனின் முகம் கோபத்தில் சிவந்தது.

“அவள் உன்னில ஆசையை வளர்த்து வைச்சிருக்கிறாளே…?” என்றார் ஆற்றாமையுடன்.

“அதுக்கு நான் என்ன செய்ய…? இது சரிப்பட்டு வராது எண்டு அவளுக்கு அட்வைஸ் பண்ணுங்க…” என்றவனுக்கு ஆத்திரம் மட்டுப்படவில்லை.

“பொறுப்பில்லாமல் கதைக்காதே தம்பி… எனக்கு கோபம் வருகுது…"

“எனக்கும் தான் அவளில ஆத்திரமாய் இருக்கு…, நான் இல்லாத நேரமாய் வந்து என்னவெல்லாம் சொல்லி இருக்கிறாள்” சீறினான்.

“நீ அவளைக் கட்டுறதில எனக்கும் சந்தோசம்…, தெரிஞ்சோ தெரியாமலோ அவளும் உன்னை விரும்பிட்டாள்…. அவளை கை விடேலாது... அதனால…” என்றவரை இடைமறித்த அகிலன் “அம்மா… இந்த கதையை இதோட நிப்பாட்டுங்க…” என்றான் சினத்துடன்.

அவனின் பதிலை கேட்டவருக்கு சீற்றம் ஏற்பட “நான் எல்லாத்தையும் பார்த்துச் செய்யுறன் எண்டு அவளுக்கு நம்பிக்கை கொடுத்திட்டன்… நானும் அவளை ஏமாற்ற ஏலாது. இதை என்ர பொறுப்பில விடு நான் பார்த்துக் கொள்ளுறன்…” என்றார்.

“நீங்கள் என்ன பார்க்க போறீங்க… இவ்வளவு நேரமா நான் சொல்லுறது உங்களுக்கு விளங்கேல்லையா…? என்ன ‘நானும் ஏமாற்ற ஏலாது’ எண்டு சொல்லுறீங்க…, அப்படி நான் என்ன ஏமாற்றினனான்…? நான் சொல்றதையும் கொஞ்சம் நம்புங்க…” என்றான் ஆத்திரத்துடன்.

“நீ சொன்னது எல்லாம் எனக்கு விளங்குது…, நான் சொல்லுறதையும் நீ கேள். ஒரு பிள்ளை என்கிட்ட வந்து’ உங்கட மகனை எனக்கு கட்டி வையுங்க’ எண்டு சொல்லுறாள்…, அவளை பற்றியும் நான் சிந்திக்க வேணும். இந்தப் பிரச்சினையை என்னட்டை விடு… நான் எல்லாத்தையும் பார்க்கிறன்…” என்றார்.

தான் எவ்வளவோ கூறியும் தாய் அதை செவிமடுக்காததில் அவனுக்கு சினம் ஏற்பட்டது, இதற்கு எல்லாம் சௌமி தான் காரணம் என்பதில் அவள் மீது கண்மண் தெரியாத கோபம் ஏற்பட “நீங்கள் ஒண்டையும் பார்க்க தேவையில்லை…, நான் அவளோட கதைக்கிறன்…” என சினத்துடன் கூறியவன் விறுவிறுவென நடந்து தனது அறைக்குள் சென்றவன் அங்கும் இங்கும் நடந்தான்.

‘நான் அவளை ஏமாத்தினதாக அம்மா சொல்லுறாவே..., அவள் என்னத்தை சொன்னாளோ…!’

‘நான் அவளுக்கு எந்த நம்பிக்கையையும் கொடுக்கவுமில்லை… அவளை ஏமாற்றவும் இல்லையே…’

‘அம்மா என்னைத் தானே தவறா நினைக்கிறா....’

‘என்னை விட அவளைத் தான் நம்புறா…, அந்தளவுக்கு அவளைப் பிடிக்குது… ம்…’

‘அம்மா இனி என்ன செய்ய போறாவோ…’

‘எப்படியும் இந்த கல்யாணத்தை செய்து வைக்கத்தான் முயற்சிப்பா…’

‘எனக்கு அவளை விட்டால் வேற ஒரு பெண்ணும் கிடையாது என நினைக்கிறாவோ!’

‘சகுந்தலா ஆண்டியும் அங்கிளும் என்னைப் பற்றி என்ன நினைப்பினம்…’

‘நான் அவளோட எவ்வளவோ கவனமாக நடந்தும் ஒரு பிரயோசனமும் இல்லை…’

‘நான் எவ்வளவோ சொல்லியும் அவள் அவற்றை காதில் வாங்கவில்லையே’ எனப் பலவாறு எண்ணியவனின் சீற்றம் சற்றும் அடங்கவில்லை.

மேசையில் இருந்த தனது கைபேசியை எடுத்து சௌமிக்கு அழைப்பை ஏற்டுத்தினான்.

காலையில் கிளம்ப வேண்டும் என்பதில் எல்லாவற்றையும் அடுக்கி ஒழுங்குபடுத்தி வைத்துவிட்டு, தூங்குவதற்கு ஆயத்தமாகி கொண்டிருந்த சௌமி, கைபேசியின் சத்தம் கேட்க, அதைப் பார்த்தவளுக்கு அகிலன் அழைக்கின்றான் என்பதில் குதூகலம் ஏற்பட்டாலும் பத்மா ஆண்டி ஏதும் கூறியிருப்பாரோ… அது தான் அழைப்பை ஏற்படுத்தி இருக்கிறானோ… என எண்ணியவளுக்கு சற்று பதட்டமாகத் தான் இருந்தது. அழைப்பை ஏற்றவள் “ஹலோ” என்றாள் மெதுவாக.

“அம்மாட்ட என்ன சொன்னனீ…?” கடுங்கோபத்துடன் பற்களை கடித்தான்.

“....” அவளுக்கு அவனின் சினத்தை உணரக்கூடியதாக இருந்தது.

“உன்ர ஆசை நிறைவேறாது எண்டு உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் விளங்காதா…?” எனக் கோபத்துடன் கத்தினான் அகிலன்.

முதல் முறையாக அவளிடம் வெளிப்படுத்திய அவனின் கோபத்தை உணர்ந்தவளுக்கு பயத்தில் உடல் நடுங்கியது…, வார்த்தைகள் வெளிவரவில்லை.

“உன்னைத் தான் கேக்குறன்....” சீறினான். அவனது சத்தத்தில் காது அடைப்பது போல தோன்ற காதுக்கு அருகில் பிடித்திருந்த கைப்பேசியை சற்றுத் தள்ளிப் பிடித்தாள்.

அவள் பதில் கூறாதால் சினம் மேலும் அதிகரிக்க “ஏய்… உனக்கு காது கேக்குதா…? இல்லையா…? நான் விசரன் மாதிரி கத்திக் கொண்டிருக்கிறன்… எல்லாத்துக்கும் காரணமான நீ வாயை மூடிக் கொண்டிருக்கிறாய்…” வார்த்தைகளைத் துப்பினான். .

அவனது இந்தப் புது அவதாரத்தை கண்டு திகைத்து நின்றவளிடம் “சௌமீ…” இரைந்தான்.

அவனது சீற்றத்தை பேலும் அதிகரிக்க விரும்பாமல், “ம்…?” என நடுக்கத்துடன் கூறியவளின் குரல் அவளுக்கே கேட்கவில்லை.

அவளின் நடுங்கிய குரலில் இருந்து அவளின் பயத்தை உணர்ந்தவன் தன்னை கட்டுப்படுத்த முயற்சித்தவாறு, “உன்ர விருப்பத்தை என்ர அம்மாவைக் கொண்டு நிறைவேற்றி விடலாம் எண்டு நீ நினைக்கிறதால உனக்கு பேச்சு வரேல்லையோ…?” என்றான் நக்கலாக.

“...”

“உன்ர விருப்பம் நிறைவேற வேணுமெண்டால் நானும் சம்மதிக்க வேணும் அதாவது உனக்கு விளங்குதா…?” என்றான் மிகுந்த எரிச்சலுடன்.

“...”

“அம்மாவின்ர கட்டாயத்தால நான் கல்யாணத்துக்கு சம்மதிச்சா அது இரண்டு பேருக்குமே வாழ்க்கையில சந்தோசத்தை தராது… ஒரு நிறைவு இருக்காது…, ஏதோ கல்யாணம் பண்ணி ஆச்சு அதுக்காக வாழுறம் எண்டு தான் இருக்கும்” என்றவனின் குரல் சற்று இறங்கி இருந்தது. அவளிடம் கோபத்தை காண்பிக்க முடியவில்லை.


“...”

“உனக்கு உன்ர மேரேஜை பற்றி உன்ர வீட்டுக்காரரோட கதைக்கத் துணிவு இல்லை…, அதுக்கு சப்போர்ட்டுக்கு அம்மா தேவையாக்கும்…?”

அவனின் சீற்றம் சற்று மட்டுப்பட்டிருந்ததில் “எனக்கு என்ர வீட்டில கதைக்கத் துணிவில்லாட்டியும் உங்களோடையும் ஆண்டியோடையும் கதைச்சிட்டன் தானே... ” என்றாள் தைரியத்துடன்.

“ஆஹா… உன்னை நீயே பாராட்டிக்கொள்” என்றவனின் குரலில் நக்கல் நிறைந்து இருந்தது.

“ஆண்டிக்கும் உங்களுக்கும் ப்ராப்ளமா…?” தயங்கியவாறு கேட்டாள்.

“எல்லாம் உன்னாலதான்…”என்றான் ஆத்திரத்துடன்.

“நான் என்ன செய்தனான்…?” எதுவும் தெரியாத மாதிரி கேட்டாள்.

“என்ன செய்யவில்லை…?” என சீறினான்.

“ஆண்டி தன்ர ஒரே செல்ல மகனுக்கு அலையன்ஸ் பார்த்து, ஒண்டுமே சரி வராமல் களைச்சுப் போய் இருந்தவா…, நான் எனக்குத் தெரிஞ்ச நல்ல வடிவான ஒரு பிள்ளையை அவவுக்கு இன்ரடியூஸ் பண்ணி விட்டனான். அந்தப் பிள்ளைக்கும் அவவின்ர மகனில இன்ட்ரஸ்ட் இருக்கு என்றும் சாடையாக சொன்னனான்... இதில என்ன தப்பு இருக்கு…? நான் அறிய அவவுக்கும் அவ்வின்ர மகனுக்கும் நல்லது தான் செய்திருக்கிறேன்…” என்றாள் மிகவும் பவ்வியமாக.

“ஓ…, அப்ப நீ எனக்கு நல்லது தான் செய்திருக்கிறாய்…?” எனச் சினந்தான்.

“கண்டிப்பாய்...., உங்களுக்கு இத்தனை வயசாகியும் மேரேஜ் சரி வரேல்ல தானே…, அது தான்…” என இழுத்தாள்.

அவளின் நக்கலில், அகிலனுக்கு கோபம் தலைக்கேற “ஏய் வாய மூடு…, நீ எனக்கு பாவம் பார்த்து வாழ்க்கை தரப் போறியா…?” என்று கர்ஜித்தான்.

அவனின் கோபத்தை தூண்டிவிட்டதை உணர்ந்தவள் “நான் உங்களுக்கு வாழ்க்கை தாறதா சொல்லேல்ல… உங்களோட வாழ… சேர்ந்து வாழத்தான் விரும்புறன்…” என்றாள் அவனை சமாளிக்கும் விதமாக.

அவள் கூறியதில் கண்மண் தெரியாத சினம் ஏற்பட “ஸ்… அப்பா... உன்னோட கதைச்சு பிரியோசனம் இல்லை…” என்றவாறு அழைப்பைத் துண்டித்தான்.
 

Author: Vishakini
Article Title: என் மன்னவன் நீதானோ - 16
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Members online