மையல் மீளுதே மேகவியே - 5

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ரோசி கஜன்

Administrator
Staff member
Nov 11, 2018
1,726
1,146
113

பெண் அழைப்பிற்கு மாப்பிள்ளையின் உறவுகளில் இருந்து சிலர் வந்து மேகவியை அழைத்துச் சென்றனர். அவள் மண்டபத்திற்குப் போகும் பொழுது, சாகரனின் வருங்கால மனைவியான பிரார்த்தனா குடும்பத்தாருடன் முன்னரே வந்திருந்தாள்.

இரு ஜோடிகள் என்பதால் மணப்பெண்ணிற்காக இரண்டு அறைகள், மாப்பிள்ளைக்கு இரண்டு அறைகள் இருப்பது போலான அரங்கைத் தேர்வு செய்து இருந்தனர்.

சத்யகீர்த்தி, பிரார்த்தனாவின் தமையன் என்பது கூடுதல் தகவல். பெண் எடுத்துப் பெண் கொடுக்கும் படியாய் பேசி முடித்திருந்தனர்.

தமையனின் காதலியை முன்னரே அறிவாள் மேகவி. ஐந்தாண்டு கால காதல். மூன்று வருடங்களிற்கு முன்பே இவர்களின் விபரம் இரு குடும்பத்தாருக்கும் தெரிந்துவிட, பச்சைக்கொடி காட்டி விட்டனர். அத்தருணத்தில் இருந்தே உறவாக மாறி விட்டனர். ஊரிற்கு வந்து செல்லும் பொழுது மேகவியும், பிரார்த்தனாவை சிலமுறை பார்த்து இருக்கிறாள். ஆனால் அவளின் குடும்பத்தைப் பற்றி பெரிதாய் அறிய மாட்டாள்.

நினைத்தால் இரண்டு நிமிடங்களில் வீட்டில் இருக்கும் எவரிடமாவது பேசித் தெரிந்து கொண்டிருக்கலாம். ஆனால் மங்கை தான் ஆர்வம் காட்டவில்லை. உண்மையில் 'தமையனின் காதல் இத்தனை காலம் திடமாய் தாக்குப் பிடித்து, அது திருமணம் வரையில் வரும்!' என எதிர்பார்க்கவில்லை.

'காலம் நகர்ந்தால், காதலும் நீர்த்துப் போய்விடும்!' என்று சாகரனின் முந்தைய காதலை மனதில் வைத்து அவள் எண்ணி இருக்க, தங்கையின் அக்கணிப்பைப் பொய்யாக்கி இருந்தான் மூத்தவன்.

சாகரனின் முதல் காதலும், அப்பெண்ணிற்குத் திருமணம் நடந்த பொழுது அவன் அதை அசட்டையாய் கடந்து வந்ததும், பள்ளிக் காலத்தில் உடன்பயிலும் மாணவன் ஒருவனுடன் உண்டான அனுபவமும்.. மேகவிக்கு ஆண்களின் மீதான நம்பிக்கை முற்றிலுமாய் உடைந்து போவதற்கு விதையாய் அமைந்துவிட்டது.

அவளிற்கு மற்றவர்களைப் பற்றி கவலை இல்லை. ஆனால் 'தன்னுடன் பிறந்தவனே இப்படி இருக்கிறானே?' என்ற எண்ணம் தான், எவரையுமே நம்பவிடாது செய்து விட்டது.

நேசித்த பெண்ணை ஏமாற்றியதால்.. அத்தருணத்தில் இருந்தே, தமையனுடனான நெருக்கத்தை மெல்ல மெல்ல குறைத்து தேவைக்கு மட்டுமே பேசுவது என்ற நிலைக்கு வந்திருந்தாள்.

ஆனால் அனைத்தையும் கடந்து, தமையனின் தற்போதைய காதலானது கைக்கூடி வரும் நிகழ்வுகள் ஒவ்வொன்றும் அவளிற்குப் பெரும் வியப்பையே கொடுத்தது.

விவேகானந்தன் மெட்டல்ஸ் அண்ட் ஃபர்னிச்சர்ஸ் என்ற பெயரில் வீட்டு உபயோகப் பொருட்களின் விற்பனையகத்தை நடத்தி வருகிறான் சாகரன். பால் காய்ச்சும் பாத்திரம் முதல் மரக்கட்டில் வரை அனைத்தும் அவனது அங்காடியில் கிடைக்கும். மாதத்தவணை வசதியும் உண்டு.

அங்கு ஏசி வாங்க வரும்பொழுது தான், பிரார்த்தனாவிற்கும் ஆடவனிற்கும் அறிமுகம் ஆனது. அதனை இல்லத்தில் பொருத்துவதற்கு, அவனே உதவியாளுடன் சென்றிருந்தான். தவணையை வசூலிப்பதற்காக மாதமாதம் சென்று வந்ததில் மொத்த குடும்பத்தாரும் அறிமுகம் ஆகினர்.

உடல்நலம் பாதிக்கப்பட்டு வாரம் மூன்று முறை டயாலிசிஸ் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் அன்னை புஷ்பவதி. மனைவியையும் இல்லத்தையும் இரு தோள்களிலும் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சுமக்கும் தந்தை கதிரவன். ஈன்றவரின் சிகிச்சைக்காக அதிகப்படியான பணத்தேவையின் காரணமாக சென்னையில் பணி செய்யும் தமையன் சத்ய கீர்த்தி. பெற்றோரை தனியே விட்டுச் செல்ல மனமின்றி சென்னையில் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் நிறைந்த ஊதியத்துடன் கிடைத்த வேலையை மறுத்துவிட்டு, உள்ளூரிலேயே தனக்கான பணியை தேடிக்கொண்ட பிரார்த்தனா. இதுதான் அவர்களின் குடும்பம்.

குடும்பத்திற்காக இராணுவத்தில் இணைய வேண்டும் என்ற தனது ஆசையை விட்டுக்கொடுத்த சாகரனிற்கும், அதேப்போல வாழ்வில் முன்னேறும் வாய்ப்பை கைவிட்டு வீட்டின் பொறுப்பை ஏற்ற பிரார்த்தனாவிற்கும் இடையே புரிதலும் பிடித்தமும் ஏற்பட்டதில் பெரிதாய் வியப்பேதும் இல்லை என்றே சொல்லலாம்.

அத்தோடு இரு குடும்பத்தின் பொருளாதார சூழலும் நடுத்தர வர்க்கத்தில் இணையாகவே இருந்தது. மனிதர்களின் மனநிலையும் ஒன்றுபோலவே இருக்க, இளையவர்களின் விருப்பத்திற்கு சம்மதம் தெரிவித்தனர் பெற்றோர்.

அப்பொழுது சாகரனிற்கு முப்பது வயது. உடனே திருமணத்தை நடத்திவிடலாம் எனப் பெரியவர்கள் பேச, மணம் முடிக்கும் வயதில் தங்கை இருக்க அவளை அப்படியே விட்டுவிட்டு தான் மட்டுமாய் வாழ்வின் அடுத்த படி நிலைக்கு முன்னேற விரும்பாது மறுத்துவிட்டான் மேகவியின் தமையன்.

மூன்று ஆண்டுகளாய் வள்ளியும் ஷீலாவும் மாறி மாறி வீட்டுப் பெண்ணிடம் திருமணத்தைப் பற்றிப் பேசி்ப் பார்த்துவிட்டனர். ஆனால் மங்கைதான் பிடி கொடுக்கவில்லை.

சில மாதங்களாய் புஷ்பவதியின் உடல்நிலை பின்னடைவைச் சந்திக்க, இதற்கு மேலும் நாள்களைக் கடத்த விரும்பாது கதிரவனே மாப்பிள்ளை கேட்டு வந்து விட்டார் வள்ளியின் இல்லத்திற்கு.

முன்னறிவிப்பு ஏதும் இன்றி திடீரென வீட்டிற்கு வருகை தந்த சம்பந்தியை, இரு பெண்மணிகளும் குழப்பத்துடன் நோக்கினர்.

ஷீலா அவருக்குத் தேநீரைக் கொண்டு வந்து தர, "சொல்லுங்க ஐயா, திடுதிப்புனு வந்திருக்கீங்க? பிள்ளைக கூட இதைப் பத்தி எதுவும் சொல்லலையே எங்கக்கிட்ட?" என விசாரித்தார் வள்ளி.

"உங்களுக்கே தெரியும்மா, என் சம்சாரத்தோட நிலைமை. கொஞ்ச நாளா, அவளோட உடல்நிலை ஒன்னும் சொல்லிக்கிறது மாதிரி இல்ல. பொம்பளைப் பிள்ளைக்கும் வயசு இருபத்தஞ்சு ஆச்சு. மாப்பிள்ளைக்கும் வயசு கூடுதலு தான? முப்பத்து மூனு ஆகுதே? இதுக்கு மேலயும் கல்யாணத்தைத் தள்ள வேணாம்னு நினைக்கிறேன். அவ நல்லபடியா இருக்கும் போதே, மகளோட கல்யாணத்தைக் கண் நிறைஞ்சு பார்த்துக்கட்டுமே?

உங்க பேத்திக்கிட்ட பேசுங்கம்மா. இல்லேனா, இவங்க கல்யாணத்தை முதல்ல செஞ்சிடுவோம். பொண்ணு சரினு சொல்லும் போது, அந்தப் பிள்ளைக்குப் பின்னாடி செய்யிவோம். இவங்களும் தான் எத்தனைக் காலத்துக்குக் காத்துக்கிட்டு இருப்பாங்க?" என்று கதிரவன் தனது எண்ணத்தை உரைக்க, ஷீலா மறுமொழி சொல்ல வழி இல்லாது அமைதி காத்தார்.

வள்ளிதான் மூத்தவராய் அச்சூழலைத் தன் பொறுப்பில் ஏற்றுக் கொண்டார்.

"எனக்கு உங்க எண்ணம் புரியிதுங்க ஐயா. இதுக்கு மேல தள்ள வேணாம். நான் சீக்கிரமே என் பேத்திக்கிட்ட பேசிட்டு, உங்களுக்கு நல்ல செய்தி சொல்லி விடுறேன்!" என உரைத்து அனுப்பினார்.

'மேகவியிடம் திருமணத்தைப் பற்றிப் பேசி அவளைச் சம்மதிக்க வைப்பது எல்லாம் வேலைக்கு ஆகாது!' என்று உடனடியாய் பெயரனின் மூலமாய் மாப்பிள்ளை பார்க்கத் துவங்கி விட்டார்.

''அனைத்தையும் ஏற்பாடு செய்த பின்னர், அவளை ஊரிற்கு வர வைத்து எப்படியேனும் திருமணத்தை நடத்தி விடலாம்!' என்பது அவரின் திட்டமாக இருந்தது.

இரண்டு மாதங்களில்.. திருமண தகவல் மையங்கள், தரகர், சுற்றத்தார், அறிந்தவர், தெரிந்தவர் என ஒவ்வொருவரின் மூலமாய் வந்த ஜாதகங்களின் எண்ணிக்கையே முன்னூறைத் தாண்டி இருக்கும்.

மேகவிக்கு வயது இருபத்தெட்டு. வந்த வரன்களில் பாதிக்கும் மேல் நாற்பதை நெருங்கும் மாப்பிள்ளைகளாய் இருந்தனர். வயதிற்குத் தக்கபடி தானே அவர்களின் தோற்றம் இருக்கும்.

மங்கையோ பார்வைக்கு அழகுச் சிலை. காண்பவர் எவரும், அவளின் வயதை உரைத்தால் நம்ப மாட்டார்கள். இருபத்து மூன்றில் இருந்து இருபத்து ஐந்திற்கு உள்ளேதான் இருக்கும் எனச் சொல்லும் அளவிற்குத் தன்னைப் பராமரித்து வைத்திருந்தாள்.

வந்த மாப்பிள்ளைகளில் ஒன்றுகூட, குடும்பத்தாருக்குத் திருப்தி இல்லை.

தோற்றமோ, கல்வியோ, வருமானமோ, இருப்பிடமோ, குடும்பச் சூழலோ, ஜாதகமோ ஏதோ ஒன்று பொருந்தாமலேயே இருந்தது.

பொருந்தி வந்த சிலரில்.. "பொண்ணு கல்யாணத்துக்குப் பின்னாடி வேலைக்குப் போக வேண்டாம். வயசு கூட இருக்கே, நகை கொஞ்சம் சேர்த்துப் போடலாம்ல? மேரேஜ் முடிஞ்சதும் உடனே குழந்தை பெத்துக்கணும்!" என்பன போன்ற நிபந்தனைகள் மாப்பிள்ளையின் பக்கம் இருந்து விதிக்கப்பட்டன.

இவர்கள் எதிர்பார்ப்பது போலத்தானே, அவர்களும் எதிர்பார்ப்பர். யாரையும் குறை சொல்வதற்கு இல்லை.

"இல்ல. ஒத்து வராது!" என்ற பதிலில் ஒவ்வொன்றாய் முடிந்து போனது.

திருமண தகவல் மையங்களிற்கும், மாப்பிள்ளையை பற்றி விசாரிப்பதற்காகவும் சாகரன் சென்று வரும்போது.. ஊரில் இருந்தால், கடையின் பொறுப்பை ஏற்றுக் கவனித்துக் கொள்வான் சத்யகீர்த்தி.

முன்னரே பிரார்த்தனாவின் மூலமாய் இருவரும் பேசிப் பழகி மூன்று ஆண்டுகளின் நகர்தலில் மாமன், மச்சினன்களாய் மாறி இருந்தனர்.

மேகவிக்கு, அவனும் கதிரவனும் கூட தங்கள் பக்கம் இருந்து இயன்ற அளவு மாப்பிள்ளை பார்த்தனர். ஆனால் கன்னியைப் போலவே காலமும் மனம் இறங்கவில்லை.

ஒருநாள், "ஒன்னுமே செட் ஆக மாட்டிது சத்தி!" என நம்பிக்கை இழந்து சோர்வுடன் கடைக்கு வந்து அமர்ந்த சாகரனை கவலையுடன் நோக்கிய ஆடவன், "மாம்ஸ்.."

"என்னடா.?" என்றபடி அவன் பக்கம் திரும்பிட, "அப்பா சொல்லுற மாதிரி, உங்க கல்யாணத்தை முதல்ல முடிக்கலாமா?"

மெலிதான ஒரு பெருமூச்சை வெளிவிட்டவன், "எனக்கு என்னமோ மனசு ஏத்துக்க மாட்டிது மாப்ள. இதுவே எங்களுக்கு அப்பா இருந்தா, ஒன்னும் தெரியாது. எல்லாத்தையும் அவர் பார்த்துப்பாருனு நான் கவலை இல்லாம இருக்கலாம். ஆனா, இப்ப அவரோட இடத்துல நான்தான இருக்கேன்? அண்ணனா மட்டும் இல்லாம தகப்பனாவும் எனக்கு இந்தக் கடமை இருக்கு இல்ல? பாப்பாவை அப்படியே விட்டுட்டு நான் கல்யாணம் செஞ்சுக்கிட்டாலும், உன் தங்கச்சிக்கூட என்னால சந்தோஷமா இருக்க முடியாதுடா!"

தனது தங்கையின் வருங்கால கணவனை வலியுடன் பார்த்தவன், "மாம்ஸ், அப்ப நான் ஒரு யோசனை சொல்லவா?"

அவன் கேள்வியாய் பார்க்க, "நான், கல்யாணம் செஞ்சிக்கவா உங்க தங்கச்சியை?"

சாகரன் அதிர்ந்து, "என்னடா கிறுக்குத் தனமா பேசுற? அவ.." எனப் பேச முயன்றவனின் கரம் பற்றி, தோளில் தட்டிக் கொடுத்து அமைதிப் படுத்தினான் கீர்த்தி.

சற்று நிதானத்திற்கு வந்திருந்த மற்றவன், "என்ன, உன்னோட தங்கச்சிக்காக தியாகம் பண்ணலாம்னு எண்ணமா?"

மெலிதாய்ச் சிரித்த கீர்த்தி, "அப்படி எல்லாம் இல்ல மாம்ஸ். உங்க சிஸ்டர் அழகா தான இருக்காங்க? நல்ல வேலை. சொல்லிக்கிறது மாதிரி சேலரி. நீங்க, ஷீலா அத்தை, அம்மாச்சினு குடும்பத்துல இருக்க எல்லாரும் எனக்கு நல்லப் பழக்கம்.

எப்படியும் இன்னும் ஒன்னு இல்ல ரெண்டு வருசத்துல நான் மேரேஜ் பண்ணிக்கத்தான போறேன்? அதை இப்பவே செஞ்சுக்கிறதுல என்ன தப்பு? பொண்ணு, உங்க தங்கச்சியா இருக்கட்டுமே.?" என்று மேகவியுடனான தனது திருமணத்திற்கு ஆடவனே பிள்ளையார் சுழி இட்டான்.

தோற்றம், கல்வி, வருமானம், குடும்ப சூழல் என அனைத்திலும் மேகவிக்குப் பொருத்தமானவன் தான் கீர்த்தி. ஆனால் இருவருக்கும் பொருந்தாத, ஒரு விஷயம் இருந்தது.

பெரியவர்களிற்குத் தெரிந்தால் நிச்சயம் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். சாகரனிற்கு அதை எண்ணி சற்று மனக்கலக்கம் தான். கீர்த்தியோ அதைக் கருத்திலேயே கொள்ளவில்லை.

"நான் மேகவியை முன்னாடியே பார்த்திருக்கேன் மாம்ஸ், யாரோ ஒரு பொண்ணா. தனா.. மொபைல்ல உங்க ஃபேமிலி ஃபோட்டோவைக் காட்டும் போதுதான், அவங்க உங்க சிஸ்டர்னு தெரிஞ்சிச்சு. அப்புறம் அவங்களைப் பத்தி சொன்னா. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வரைக்கும் என் மனசுல எந்த எண்ணமும் இல்ல. ஆனா, இப்ப கல்யாணம் செஞ்சிக்கிட்டா என்னனு தோணுது?" என தனது விருப்பத்தைத் தெரிவித்தான்.

"பாப்பா, ரொம்ப பிடிவாதக்காரிடா. உன்னை பத்தித் தெரிஞ்சா நிச்சயமா ஒத்துக்க மாட்டா."

"அப்ப, சொல்லாதீங்க மாம்ஸ்.."

சாகர் திகைத்து, "டேய்!"

"அவக்கிட்ட மட்டும் இல்ல. மத்தவங்களையும் சேர்த்து தான் சொல்லுறேன். இதை அத்தையோ அம்மாச்சியோ எங்கப்பாக்கிட்ட கேட்டு விசாரிக்கப் போறது இல்ல. அதேமாதிரி தான் அவரும். உங்க வீட்டுலயும் எங்க வீட்டுலயும் நீங்க சொல்லுறது தான வார்த்தை. அதை யாரு சந்தேகப்படப் போறாங்க?"

"அதுசரிடா.. ஆனா பின்னாடி தெரிய வந்தா?"

"அதுக்காக நடந்த கல்யாணத்தை மாத்த முடியாதுல?"

"ம்ம்.. இருக்கிற நிலைமைக்கு பின்னாடி தெரிய வந்தா, பெரியவங்க எல்லாரும் அக்செப்ட் பண்ணிக்குவாங்க தான். ஆனா பாப்பா.?"

"அதுக்குள்ள அவ மனசை மாத்த வேண்டியது என்னோட பொறுப்பு!"

மச்சினனை ஒரு விதமாய்ப் பார்த்த சாகரன், "டேய், எனக்கு ஒரு உண்மையை சொல்லு!"

"என்ன மாம்ஸ்?"

"பாப்பாவை முன்னாடியே பார்த்து இருக்கேனு சொன்ன தான? பார்க்க மட்டும் தான் செஞ்சியா? இல்ல வேற எதுவும்.?"

"நான் அக்மார்க் நல்ல பையன் மாம்ஸ். நம்புங்க!"

"நீ இப்ப செய்ய சொன்ன வேலையை பார்த்தா, எனக்கு அப்படி தெரியல. ஏதோ ஃப்ராடு மாதிரி தோணுது!"

"ஆனானப்பட்ட ராமனே மறைஞ்சு நின்னுதான் வாலியைக் கொன்னாரு. நம்ம எல்லாம் எம்மாத்திரம்? அதை சரினு இந்த உலகம் ஏத்துக்கலயா? அதேபோல, நான் செஞ்சதையும் வருங்காலம் ஏத்துக்கும்!"

"அந்த வருங்காலம் உனக்கும் எனக்கும் சமாதி கட்டாம இருந்தா சரிதான்!"

"அப்படி எல்லாம் எதுவும் நடக்காது மாம்ஸ். அப்புறம் நான் எதுக்கு இருக்கேன்?" என்று தைரியம் அளித்திட, இரு குடும்பத்தாரிடமும் தங்கையின் திருமணத்தைப் பற்றி பேசினான் சாகரன்.

கீர்த்தியும் தன் பங்கிற்குச் சொல்ல, சில தினங்கள் பேச்சுவார்த்தை நீண்டு.. இறுதியாய் பெரியவர்கள் ஒருமனதாய் சம்மதித்தனர்.
 

Author: ரோசி கஜன்
Article Title: மையல் மீளுதே மேகவியே - 5
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: Priya saravanan