தனது பார்வையை நிறைத்தபடி எதிரே நின்று இருந்த கணவனை திகைப்புடன் நோக்கினாள் மேகவி. இதயம் தொடர் வண்டியாய் தடதடத்தது.
ஆண்களிடம் பேசுவதோ பழகுவதோ அவளிற்கு ஒன்றும் புதிதல்ல. ஆனால் இத்தனை நெருக்கம் என்பது, இதற்கு முன் உணர்ந்திடாதது. ஆடவனின் சுவாசம் மங்கையின் நெற்றியில் மோதி அதனின் இளம்சூடு முகத்தில் பரவியது.
"என்ன பொண்டாட்டி, சட்டுனு சைலண்ட் ஆகிட்ட?"
சத்தியின் கண்களை நேருக்கு நேர் நோக்கியவள் "கொஞ்சம் தள்ளிப் போறியா?"
அவனது செயலால் மரியாதை மறைந்து போயிருந்தது.
அதை உணர்ந்து புன்னகைத்தவன், "இவ்வளவு நேரமும் வெளிய நல்ல பொண்ணு மாதிரி மெயிண்டெயின் பண்ணிக்கிட்டு இருந்த இல்ல. அதை அப்படியே ஃபாலோ பண்ணிக்கோ. என்னை, வா போனு கூப்பிடுறது எல்லாம் ரூமுக்குள்ள மட்டும் இருக்கட்டும். ரெண்டு பேரோட ஃபேமிலியும் இதைக் கேட்டா வருத்தப்படுவாங்க."
மங்கைக்கும் குடும்பத்திற்குள் எவ்வித பிரச்சனையோ, வாக்கு வாதமோ வருவதில் விருப்பம் இல்லை. அதனால் சம்மதமாய் தலை அசைத்தாள்.
"அதான் சரின்னு சொல்லிட்டேன்ல, தள்ளி நிற்கிறது?"
"நிக்கணுமா என்ன? இன்னைக்கு நமக்கு ஃபர்ஸ்ட் நைட் பொண்டாட்டி."
"கொஞ்சம் கூட மேனர்ஸே கிடையாதா உனக்கு? இப்பதான் ஃபர்ஸ்ட் டைமா பேசுறோம் நாம. தாலி கட்டிட்டா, நைட் உன்கூட கட்டில்ல படுத்திடணுமா?"
"ஏன், அதுல என்ன தப்பு?" என்றபடி இரண்டடி பின்பக்கமாய் நகர்ந்து நின்றான்.
அவள் கனல் பார்வைப் பார்க்க, "விட்டா, கண்ணாலயே எரிச்சிடுவ போல?"
"அப்புறம், என்ன தப்புனு கேட்கிற?"
"நான் சொன்னதுல தப்பு எதுவும் இல்ல. எது தப்புனு தெரியுமா.?"
பாவையின் பார்வையில் 'எது?' என்பது போல் கேள்வி தொக்கி நிற்க, "மனைவிக்கு விருப்பம் இல்லாம அதைச் செய்யிறது தான் தப்பு. உன்னைப் பார்த்தா, உனக்கு இஷ்டம் இருக்கிற மாதிரி தெரியல. அதோட எனக்கும் மூடு இல்ல. சோ, நாம இன்னைக்கு ஃபர்ஸ்ட் நைட்டை ஸ்கிப் பண்ணிடலாம்."
'அப்பாடா நல்லவேளை!' என அவள் சற்றே நிம்மதி மூச்சு விட, 'இன்னைக்கு ஸ்கிப் பண்ணிக்கலாம் அப்படினா, நாளைக்கு.?' என்று குதர்க்கமாய் வினா எழுப்பியது மூளை.
'அதான் வொய்ஃபோட விருப்பம் இல்லாம நடந்துக்கிறது தப்புனு அவனே சொல்லிட்டானே? அப்புறம் என்ன.?' என மனம் சமாதானம் உரைக்க, 'கொஞ்சம் நல்லவன் தான் போல!' என்று எதிரே நிற்பவனிற்குச் சான்று வழங்கியது சிந்தனை.
மங்கையின் முகத்தையே பார்த்திருந்த சத்தி, "என்ன ஓகேவா? இல்லேனா, உனக்கு என்மேல இண்ட்ரெஸ்ட் எதுவும் இருக்கா.?"
அவனின் வினாவில் திடுக்கிட்டவள், "நோ.. நோ.." என அவசரமாய் மறுத்திட, "ஹேய்.. ரிலாக்ஸ்.." என்று புன்னகைத்தான்.
"எதுனாலும் சரி, அவன்கிட்ட ஓபனா பேசு. புரிஞ்சுப்பான்." என தமையன் உரைத்தது நினைவிற்கு வர, "கொஞ்சம் சீரியஸா பேசுவோமா.?" என்று வினவினாள் கணவனிடம்.
தலை அசைத்தவன், "சொல்லு, என்ன பேசணும்?"
"எனக்கு ஊருக்கு வர்ற வரைக்கும், மேரேஜ் ஃபிக்ஸ் ஆன விஷயமே தெரியாது. எல்லாத்தையும் அரேஞ்ச் பண்ணதுக்கு அப்புறம் நோ'னு சொன்னா, எல்லாருக்குமே கஷ்டம். சோ, வேற வழி இல்லாம தான், இதை அக்செப்ட் செஞ்சுக்கிட்டேன். அதுக்காக மேரேஜ் லைஃபையும், ஹஸ்பண்ட் அண்ட் வொய்ஃப் ரிலேஷன்ஸிப்பையும் ஏத்துக்குவேனு அர்த்தம் இல்ல.
நீயும் அப்படித்தான? இதுவரைக்கும் நாம மீட் பண்ணதே இல்ல. சோ, உனக்கும் என்மேல ஃபீலிங்ஸ் எதுவும் இருக்க வாய்ப்பு இல்ல. அதுவும் இல்லாம, உன்னோட சிஸ்டருக்காக தான் இந்த மேரேஜுக்கு ஓகே சொல்லி இருப்பன்றது என்னோட அனுமானம்.
எனக்கு நாம இப்படியே இருக்கிறதுல எந்த பிரச்சனையும் இல்ல. எப்படியும் ஒரு வாரம், இல்ல பத்து நாள்ல வேலைக்காக சென்னை கிளம்பிடுவோம். அங்க எப்படி இருக்கோம்கிறது, இங்க இருக்க ரெண்டு ஃபேமிலி மெம்பர்ஸுக்கும் தெரிய போறது இல்ல. நாம ஃபோன்ல பேசும் போது சொல்லுற இன்ஃபர்மேஷன்ஸ் தான?
சோ.. இங்க இருக்கிற வரைக்கும், ஊருக்கு வந்து போற டைம்லயும் ஒருத்தருக்கு ஒருத்தர் கொஞ்சம் ஹெல்ப் பண்ணிக்கலாம். மத்தபடி உன்னோட லைஃபை நீ பாரு, என் வேலையை நான் பார்த்துக்கிறேன். ஓகேவா.?"
மெலிதான பெருமூச்சை வெளிவிட்ட சத்தி, "உன்னோட நிலைப்பாடு ஓகே! ஆனா, நானும் உன்னை மாதிரியே யோசிப்பேன்னு எப்படி நினைச்ச?"
புரியாமல் பார்த்தவள், "உனக்கு இதைத்தவிர வேற ஏதாவது எக்ஸ்பெட்டேஷன்ஸ் இருக்கா?"
ஆம் என்பதாய் தலை அசைத்தவன், "லிசன், இது ஒன்னும் பொம்மைக் கல்யாணம் இல்ல. கழுத்துல தாலி மட்டும் கட்டிட்டு, அவங்கவங்க வேலையைப் பார்க்கிறதுக்கு."
"வாட் யூ மீன்?"
"ஐ மீன் இட்."
அவளின் விழிகளில் மெலிதான அதிர்ச்சி பரவ, "உனக்கு வேணும்னா, இது கட்டாய கல்யாணமா இருக்கலாம். பட் எனக்கு அப்படி இல்ல."
"அப்படினா?"
"நான் உன்னை இஷ்டப்பட்டுக் கட்டி இருக்கேன்!"
"வாட்.?"
"தனாக்காக மேரேஜ் பண்ண ஒத்துக்கிட்டேன்றது உண்மை தான். பட், அந்த காரணம் ஜஸ்ட் ஃபைவ் பர்சண்ட் மட்டுமே. மீதி நயன்டி ஃபைவ்வும் என்னோட இண்டன்ஷன் தான்.
மேகவிக்குத்தான் சத்தியகீர்த்தி புது அறிமுகமே தவிர, எனக்கு நீ அப்படி இல்ல. உன்னை சென்னையிலயும் பார்த்திருக்கேன். இங்க ஊருக்கு வந்து போகும் போதும், மாம்ஸோட சிஸ்டரா தெரியும்.
நீ எதுக்காக மேரேஜை இவ்வளவு வருஷம் தள்ளிப்போட்ட. ஏன் இப்ப வரைக்கும் வேண்டாம்னு மறுத்துட்டு இருக்கனு எனக்கு எதுவும் தெரியாது, இதை அக்செப்ட் பண்ணிக்க டிரைப் பண்ணு. கணவனா என்னையும் தான்!"
ஆடவனின் சொற்கள் ஒவ்வொன்றும் அவளிற்கு சினத்தையும் அதிர்ச்சியையும் ஒருசேர தர, "நான்தான் இவ்வளவு நாளும் எதுவும் தெரிஞ்சிக்காம இருந்திருக்கேன் போல? என்னை வச்சு எல்லாரும் விளையாடி இருக்கீங்க. அப்படித்தான.?"
"விளையாட்டா.? ஏய் மக்குப் பொண்டாட்டி, எவ்வளவு சீரியஸா நான் பிரபோஸ் பண்ணிக்கிட்டு இருக்கேன். நீ என்னடானா, பட்டுனு இப்படி சொல்லிட்ட.?"
"இதுக்குப் பேரு பிரபோஸலா?" என அவள் கழுத்தில் இருந்த மஞ்சள் கயிறைத் தூக்கிக் காட்டிட, "நம்ம நாட்டு முறைப்படி உன்கூட சேர்ந்து வாழ பர்மிஷன் கேட்கிறேன்."
"நீ சொல்லுறதுல ஏதாவது லாஜிக் இருக்கா.?"
"இது அமெரிக்காவோ சைனாவோ இல்லமா. மோதிரத்தை கையில வச்சுக்கிட்டு முட்டிப் போட்டு பிரபோஸ் பண்ணுறதுக்கு. அப்படி செஞ்சா, இங்க சுத்தி இருக்கிறவன் பார்த்து சிரிச்சிடுவான். பிடிச்சா, சேர்ந்து வாழலாம்கிற கந்தர்வ மணத்தை உலகத்துக்குச் சொல்லிக் கொடுத்த சமூகம் இது. ஆனா இன்னைக்கு அப்படி வாழ முடியாது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில இருக்கிற உறவுக்கு அடையாளம் கேட்கிறாங்க. அதுக்குத்தான் இது.
எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு. நீயும் என்னைத் தெரிஞ்சிக்கவும் புரிஞ்சிக்கவும் டிரை பண்ணு. ஓகேனா, லைஃபை ஸ்டார்ட் பண்ணலாம். அதுக்கான இனிஷியல் ஸ்டெப் தான் இது." என்று முகத்திற்கு நேராய் தெரிந்த தாலியை அவளின் கழுத்தினில் சரி செய்து விட்டவன்,
"கட்டாயம் இல்ல பொண்டாட்டி. உன்னை நான் வற்புறுத்தவும் மாட்டேன். அவங்கவங்க லைஃபைப் பார்க்கலாம்னு சொன்ன இல்ல? அதைச் சேர்ந்து பார்க்கலாம்னு சொல்லுறேன் நான். ஓகேவா உனக்கு.?"
"இதை நீ கல்யாணத்துக்கு முன்னாடி இல்ல கேட்டு இருக்கணும்?"
"அப்ப கேட்டா தான், நீ பட்டுனு நோ சொல்லிடுவியே.?"
ஏனோ அவனின் வார்த்தைகளில் சட்டென்று சிரிப்பு வர, அதனை மறைக்க முயலாது மெலிதாய்ப் புன்னகைத்தாள்.
"நோ சொன்ன பின்னாடி, அந்தப் பொண்ணை சேஸ் பண்ணுறது தப்பு. அது ஹராஸ்மெண்ட். நீ வேற, மனசாட்சியே இல்லாதவ. சட்டுனு போலீஸ்ல கம்பிளைண்டை கொடுத்துட்டா, அப்புறம் என்னோட நிலைமை? என்னை நம்பி, அம்மா அப்பா வேற இருக்காங்க!
சோ, அதான் பிடிச்ச உன்னைக் கல்யாணம் செஞ்சு பொண்டாட்டியா மாத்திக்கிட்டு உன் மனசை சேஸ் பண்ணலாம்னு முடிவுக்கு வந்துட்டேன். இப்ப உன்னால என்மேல கம்பிளைண்ட் கொடுக்க முடியாது. அப்படிக் கொடுத்தா, அது ரெண்டு பேரோட ஃபேமிலியையும் அஃபெக்ட் பண்ணும். அதுக்காகவாது கொஞ்சம் யோசிப்ப இல்ல.?"
"மேரேஜுன்ற பேர்ல லாக் பண்ணி வச்சு, காதலிக்கிறேன்னு சொல்லுறதும் ஹராஸ்மெண்ட் தான், தெரியுமா? இப்ப இருக்க சுச்சுவேஷன்ல கம்பிளைண்ட் கொடுக்க மாட்டேன் தான். ஆனா, எப்பவும் இப்படியே இருப்பேன்னு சொல்ல முடியாது."
"யாரு இப்ப லாக் பண்ணி வச்சிருக்கா? கீ, உன்கிட்ட தான் இருக்கு. இதுக்குள்ள இருக்கிறதும், வெளிய போறதும் உன்னோட விருப்பம். எனக்கு சான்ஸ் கொடுனு தான் கேட்கிறேன்."
வலிந்து புன்னகைத்தவள், "எனக்கு ஆம்பளைங்களோட வார்த்தையில நம்பிக்கை கிடையாது. சோ.." என்று லேசான பெருமூச்சை வெளிவிட்டு அவனைக் கடந்து செல்ல, "அப்ப என்னை ஆம்பளையா இல்லாம, உன்னோட புருஷனா பாரு!"
நிதானித்துத் திரும்பிப் பார்த்தவள், "நல்லா பேசுற!"
"என்ன செய்யறது? வாய்தான் வாழ்க்கைக்கு மூலதனம். சோ, அதை தேவைக்கு யூஸ் பண்ணித் தான் ஆகணும்."
"ம்ம்.. பார்க்கலாம்."
ஆடவனின் முகம் மலர்ந்திட, "அப்ப உனக்கு ஓகேவா.?"
"ஓகே இல்லனு சொன்னா, விட்டுடுவியா.?"
"அதெப்படி விட முடியும்? கேளுங்கள் கொடுக்கப்படும்னு சொல்லி இருக்காங்க. சோ, நீ தர்ற வரைக்கும் நான் கேட்டுக்கிட்டே இருப்பேன்."
"தனாக்கு இப்படி ஒரு அண்ணனை நான் எதிர்பார்க்கல."
"ஏன்?"
"அவ ரொம்ப அமைதி. ஆனா நீ.?"
"ஆனா நான்.?"
அவனை கூர்ந்து நோக்கினாள்.
'சிறு வயதில் விளையாட்டுத் தனம் அதிகம் கொண்டவன். அன்னையின் உடல்நிலையாலும் அதிகரித்த பொறுப்புகளாலும், அவனின் அந்த குணம் மாற்றம் கண்டுவிட்டது. பள்ளிக் காலம் முதல் தற்பொழுது வரை, பெண் தோழிகள் என்று எவரும் கிடையாது. காதல் பள்ளியின் முதல் படிக்கட்டில் கூட அடியெடுத்து வைத்திடாதவன்.' எனத் தமையனைப் பற்றி பிரார்த்தனா உரைத்தது நினைவிற்கு வர,
'இவனுக்கா லவ்வைப் பத்தி ஒன்னும் தெரியாது? சரியான கேடி! யார்க்கிட்டயும் எதுவும் சொல்லாம, எப்படி எல்லாம் பிளான் போட்டிருக்கான்? அதுனாலயே, ரூமுக்குள்ள வர்ற வரைக்கும் என்னை அவாய்ட் பண்ணிக்கிட்டு இருந்திருக்கான்.' என்று மனதோடு எண்ணிக் கொண்டாள்.
அவள் தன்னைப் பார்த்தபடி அமைதியாய் இருப்பதைக் கவனித்த சத்தி, "என்ன பொண்டாட்டி? எதுவும் சொல்லாம இப்படி இருக்க? புருஷனை சைட் அடிக்கிறியா?"
"ஆமா.. எனக்கு வேற வேலை இல்லப் பாரு!" என்றுவிட்டுத் திரும்ப, "ஹேய்.. என்னைப் பத்தி எதுவோ சொல்ல வந்தியே.?" எனக் கேட்டவாறே மங்கையின் எதிரே சென்று நின்றான்.
"ஒன்னும் இல்ல. கொஞ்சம் நகருறியா? படுக்கணும் நான்! வந்ததுல இருந்தே, முன்னாடி முன்னாடி வந்து வழியை மறைச்சு நின்னுகிட்டு."
சற்றே விலகிக் கொண்டவன், "ஒரே பெட்டுலயா.?"
அவனை முறைத்தவள், "நான் பெட்டுல, நீ கீழ!"
"இந்த கட்டிலும் பெட்டும் நான் வாங்கிப் போட்டது. நானே அதுல படுக்கக் கூடாதா? சோ சேட்!"
"அப்ப நீ மேல படு. நான் கீழ படுத்துக்கிறேன்!"
"நோ நோ. புதுப் பொண்டாட்டிய கீழ படுக்க விட்டா, அப்புறம் என் மரியாதை என்ன ஆகுறது.?"
"இப்ப என்னதாண்டா சொல்ல வர்ற.?"
"ரெண்டு பேரும் மேலயே படுத்துக்கலாம். நீ லெஃப்ட் சைடுல, நான் ரைட்ல. ஓகேவா.?"
"சரி.. போய்த் தொலை!" என்றவள் படுக்கையில் விழ, "பொண்டாட்டி."
"என்ன?"
"நாம கொஞ்சம் அண்டர்ஸ்டேண்டிங்கு வந்தா நல்லா இருக்கும். ஃப்யூச்சர்ல ரெண்டு வீட்டு ஆளுங்களும் ஏதாவது கேட்டா பதில் சொல்லணும்ல?"
"என்ன விஷயம்?"
"முதல்ல, என்னை நீ எப்படிக் கூப்பிடலாம்னு இருக்க?"
அவள் புரியாது பார்க்க, "பிராண நாதா, சுவாமி, பிரபு, அய்த்தான், மாமா, மாமாக்குட்டி, டார்லிங்..” என வரிசையாய் அடுக்கினான்.
"மிஸ்டர் கீர்த்தி. ஏதோ உங்கமேல லைட்டா கொஞ்சம் மரியாதை இருக்கு. இப்படி எல்லாம் பேசி, அதை முழுசா கெடுத்துக்காதீங்க!"
"அட.. இதுக்கூட நல்லா இருக்கு. மிஸ்டர் கீர்த்தியா, அப்ப நான்.? ஐ லைக் இட், மிஸ்ஸஸ் கீர்த்தி. சரி ரெஸ்ட் எடு, பொண்டாட்டி. எனக்கும் நாலு நாளா செம வொர்க். அப்பாடானு உட்காரக் கூட முடியல. நானும் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கிறேன்!" என்றபடி அவனும் படுக்க, எதிரெதிர் புறமாய் இருவரும் திரும்பிக் கொண்டனர்.
நள்ளிரவில் மனைவியின் பக்கம் புரண்டு படுத்த ஆடவன், "மையல் மீளுது மேகவிமா!" எனச் செவியினில் மெலிதாய் உரைத்து பட்டும் படாமல் அவளை ஆதூரமாய் அணைத்துக் கொண்டான்.
Author: ரோசி கஜன்
Article Title: மையல் மீளுதே மேகவியே - 8
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: மையல் மீளுதே மேகவியே - 8
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.