காதல் ராஜ வீதியில் - 25 ( pre final )

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,208
16,463
113
Germany
25

மொழியும் மதியும் செல்வாவின் வீட்டுக்கு விசாரித்து வந்து சேர்ந்தனர்.

ஜம்பு குறித்த விபரங்களை அவர்கள் போகும் முன்பு பூங்கோதையிடம் விசாரித்த அறிந்து இருந்தனர். இப்போது தன் மருமகளின் கை ஓங்கி இருக்க, பூங்கோதை தன்னின் வெளி வட்டார பேச்சு வார்த்தைகளை குறைத்துக் கொண்டு பேர பிள்ளைகளை கவனித்துக் கொண்டு நிம்மதியாக இருந்தார்.

சுசிலா பற்றிய விவரம் தெரியவில்லை. அது இவர்களுக்கு தேவையும் இல்லை. இப்படி சுழலில் சிக்கியவர்கள் இன்னும் எத்தனை பேரோ? அந்த கதை இப்போது அவசியமற்றது. அவரவர்களே திருந்தினால் தான் இதுபோன்ற மூட நம்பிக்கைகள் ஒழியும்.

ஆகவே அது குறித்து பேசாமல் ஜம்பு பற்றி மட்டும் விசாரித்துக் கொண்டு பூதக் கிணறு நோக்கி சென்றனர் மாமனும் மச்சானும்.

போகப் போகவே விசாரித்து ஒரு வழியாக செல்வா இருக்கும் வீட்டை அடைந்தனர்.

“ஆமா, கல்யாணத்தை எங்கே வச்சுக்கலாம்? ரெண்டு பேருக்கும் ஒரே நேரத்தில் ஒரே மேடையில் வச்சுக்கலாமா? இல்லை தங்கச்சி கல்யாணத்தை முதலில் நடத்திட்டு அப்புறம் அண்ணன் நான் கல்யாணம் பண்ணிக்கவா? எவ்வளவு நாள் இடைவெளி விடலாம்? பேசாம ஒரே செலவா ஒரே மேடையில் கல்யாணத்தை நடத்தலாம் இல்லையா? எனக்கு லீவு அதிகம் கிடைக்காது. உனக்கும் வேலைகள் அதிகம். லீவு எடுக்க முடியாது. என்ன சொல்ற?”

மொழியிடம் மதி தன் சந்தேகத்தைக் கேட்டுக் கொண்டே வந்தான்.

“டேய் முதல்ல உன் அப்பாவை போய் பார்க்க வேண்டாமா? நீ என்னடான்னா அதுக்குள்ள அடுத்த திட்டத்திற்கு போயிட்ட?” சிரித்துக் கொண்டே கடிந்து கொண்டான் மொழி.

“அதெல்லாம் அவரை காப்பாத்திரலாம். என்ன அலிபாபா குகைலயா இருக்கார்? இல்லை பொண்ணா? பயப்பட? ஜம்புன்னு ஒரு இத்து போன கிழவன் - அவனை பார்க்க போய் இருக்கார். அவ்வளவுதானே? இதுல பயப்பட என்ன இருக்கு? அதுக்கு அப்புறம் நடக்க போறதுல தான் மாப்ள கவனமா இருக்கணும் சும்மாவா சொன்னாங்க, ‘வீட்டை கட்டிப்பார் கல்யாணத்தை பண்ணிப்பார்’ அப்படினு. இதுல இப்ப நாம செய்யப் போற விஷயம் வரலையே?” இடை விடாமல் பேசினான் மதி.

“போடா டேய்”

இருவரும் பேசிக்கொண்டே செல்வா ஊருக்கு வந்து சேர்ந்தனர். என்னவோ மன அழுத்தம் இருக்கவே அதை குறைக்கவே மதி மொழியிடம் இந்த பேச்சுக்களை பேசி வந்தான். ஊரை நெருங்கவும் இதுவரை இருந்த விளையாட்டு பேச்சுக்கள் மறைந்து தீவிரமானான்.

ஊருக்குள் கால் வைத்ததுமே ஜம்பு இறந்த செய்தி அவர்களை அடைந்து இருந்தது. அவர் உடலை புதைத்த விதத்தையும் சொன்னார்கள். ஜம்பு இறந்து விட்டார் என்றார் தமிழ் எங்கே?

ஜம்புவின் வீட்டை அறிந்து கொண்டு அங்கே ஓடினார்கள். அந்த வீட்டுக்கு வந்து படலைத் திறந்து கொண்டு உள்ளே நுழைய, ஏதோ ஒரு அழுத்தம், இறுக்கம் தன் மனதை அழுத்தி இழுப்பதை மதி உணர்ந்தான். கூடவே ஓர் படபடப்பும்.

இவர்கள் உள்ளே கால் எடுத்து வைக்கும் போது உயரமான கருப்பு நாய் ஒன்று வேகமாக அவர்களை நோக்கி ஓடி வந்தது.

இதுவரை கட்டி வைத்திருந்த நாய் இப்போது செல்வாவால் அவிழ்த்து விடப்பட்டு இருந்தது.

நாய் மதியை முதலில் அவனை சுற்றி சுற்றி வந்து விட்டு முகர்ந்து பார்த்தது. பின் மொழியை முகர்ந்து பார்க்க சென்று விட்டது. நாய் இவர்களை நம்பி அமைதியாகும் வரை மூச்சடைக்கி அமைதியாக அதே இடத்தில் நின்று இருந்தனர்.

நாய் குறைக்கும் சத்தத்தில் வெளியே வந்த செல்வா அந்நிய ஆண்கள் இருவரையும் யோசனையாக பார்த்தான். இவர்களும் மாய மந்திரம் செய்ய வேண்டி வந்தவர்களோ என நினைத்தான்.

இவன் யார்? என்றுதான் இவர்கள் இருவரும் பார்த்தனர். செல்வா குறித்த தகவல் பெரிதாக யாரும் சொல்லி இருக்கவில்லை. ஒரு பையன் உண்டு என்றிருந்தார்கள். அவன்தானா இவன்?

இரண்டு தரப்பினரும் குழம்பி நின்றது ஒரு கணம் தான்.

அந்த சமயம் ஒரு இளம் பெண் சில ஆண்களை கூட்டிக்கொண்டு இவர்களுக்கு பின்னால் அதே வீட்டுக்குள் நுழைந்தாள்.

அவள் தான் செல்வாவின் மனைவி.

தனக்கு நியாயம் கேட்டு தனது சொந்தக்காரர்களை இந்த வீட்டுக்கு அழைத்து வந்திருந்தாள் அவள். நாய் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தது. செல்வா இவர்களை விட்டுவிட்டு அவர்களை கவனித்தான். வாசலிலேயே பஞ்சாயத்து நடக்க ஆரம்பித்தது.

அங்கே இருந்த இரண்டு சிறு கற்பாறைகளில் மாமனும் மச்சானும் அமர்ந்து விஷயத்தை கிரகித்துக் கொண்டு இருந்தனர். பஞ்சாயத்து முடிவில் அந்தப் பெண்ணுக்கு ஜீவனாம்சம் போன்ற தொகை வழங்க செல்வா சம்மதித்தான். குழந்தைக்கு அப்பா என்பதையும் ஒத்துக்கொண்டான்.

வந்த வேலையை விட்டுவிட்டு இந்த கதையை பராக்கு பார்த்துக் கொண்டிருக்கும் தங்களை நினைத்து இவர்கள் கேலியாக சிரித்துக் கொண்டனர். அதே நேரத்தில் இவர்களிடம் ஜம்பு குறித்தும் தமிழ் குறித்தும் அறிந்து கொள்ளலாம் என்ற எண்ணமும்தான் அவர்கள் இங்கே தொடர்ந்து இருக்க காரணம் என்பதையும் மறுக்க முடியாது.

பஞ்சாயத்து முடிந்ததும் மெதுவாக ஜம்பு குறித்து வந்தவர்களில் ஒருவனிடம் கேட்டான் மதி.

“அவரோட பையன் தான் இவன்“ என்று சொல்லிச் சென்றான் அவன்.

அப்படி என்றால் சரியான இடத்திற்கு தான் வந்திருக்கிறார்கள். ஒருவரை ஒருவரை பார்த்துக் கொண்ட இவர்கள் “அவர் எங்கே?” என்று அதே ஆளிடம் உறுதிப்படுத்திக்கொள்ள கேட்டான் அவன்.

“அவர்தான் இறந்துட்டாரு. அதுக்கு அப்புறம் தான் இவரு தலையெடுத்து இருக்கார். இவருக்கு ஏதாவது பெரிய பணம் வரும் போல இருக்கு. அதுதான் எங்க வீட்டு பொண்ண அத்து விட்டுட்டு வேற யாரையும் கட்டிக்கணும்னு நினைக்கிறார் போல. எப்படியோ போகட்டும் இப்படிப்பட்ட ஒருத்தன் எங்க புள்ளைக்கு புருஷனா இருக்க வேண்டிய அவசியம் இல்லை”
சொல்லிக் கொண்ட அந்தக் கூட்டம் கலைந்து போனது.

அப்படி ஜம்பு இல்லை என்றால் அவரை தேடி வந்த தமிழ் என்ன ஆனார்? கேள்வியாக செல்வாவை பார்த்தனர் தங்கள் சொந்தத்தை தேடி வந்திருந்த ஆண்கள் இருவரும்.

“நீங்க யாரு?”

செல்வா இரண்டு கைகளையும் தட்டிக் கொண்டு இவர்களை பார்த்து கேட்டான்.

“நாங்க டவுன்ல இருந்து வரோம்”என்றவன்,

“ஜம்பு லிங்கம் அப்டிங்கிறவரை தேடி ரெண்டு நாள் முன்ன இவங்க அப்பா வந்தார். அவர்கிட்ட இருந்து போனும் இல்ல. நாங்க கூப்பிடவும் முடியல. அதான் பாத்துட்டு போகலாம்னு வந்தோம்” மொழி தான் சொன்னான்.

செல்வா சுதாரித்துக் கொண்டான். இவர்கள் தன்னை மோப்பம் பிடித்து விட்டார்களோ? எதாவது சொல்லி இவர்களை திருப்பி அனுப்பி விட வேண்டியது தான். முடிவு செய்து கொண்டவன்,

“நீங்க சொல்ற மாதிரி யாரும் இங்க வரல” என்றான் அவசரமாக.

முன்னே போய்க் கொண்டிருந்த அவன் முன்னாள் மனைவி (?) வெடுக்கென திரும்பி, “ அன்னிக்கு யாரோ ஒருத்தர் வந்திருந்தார். பட்டணத்தில் இருந்து வந்தவர் மாதிரி தான் இருந்தார். இவன் மாய மந்திரம் செய்றவன். வயித்துல இருந்த என் பிள்ளையை கொன்னுட்டான். இவனை நம்பாதீங்க. நல்லா தேடிப்பாருங்க” என்றாள் ஆவேசமாக.

“உன் வேலை முடிஞ்சிருச்சுல்ல. பின்ன பேசாம போக வேண்டியது தானே?” என்று மீண்டும் கெட்ட வார்த்தைகளால் திட்ட தொடங்கினான் செல்வா.

கூட வந்த அப்பெண்ணின் சொந்தக்காரர்கள் கூட்டம் எகிறிக் கொண்டு வந்து அங்கே சிறிய கைகலப்பு ஆனது. அவர்கள் அந்த இடத்தை விட்டு அசைய மறுத்தனர்.

“உள்ள என்னதான் இருக்குன்னு பார்த்துருவோம்” என்றனர் முடிவாய்.

இங்கு இவர்கள் இந்த பக்கம் அடித்துக் கொண்டு இருக்கும் போது மொழியும் மதியும் அந்த வீட்டுக்கு உள்ளே சென்றனர். குரைத்துக் கொண்டு இவர்கள் பின்னால் வந்தது அந்த கருப்பு நாய்.

மொழி அந்த நாயை தடவிக் கொடுக்க அது வாலாட்டிக் கொண்டே அவன் பின் வந்தது. “சும்மா இர்ரா” என்ற மதி கையில் ஒரு கல்லை எடுப்பது போல் பாவனை செய்ய, அந்த நாய் தடுமாறியது. அந்த இடைவெளியில் முன் கதவை சாற்றி விட்டு சென்றனர் இருவரும். அதாவது அனைவரும் வீட்டுக்கு வெளியே இருக்க இவர்கள் கதவை உள்ளுக்குள் பூட்டிவிட்டு வீட்டுக்குள் இருந்தனர்.

வீட்டினுள் ஒவ்வொரு அறையாக ஒவ்வொரு இடமாக தேடியதில் தமிழ் கண்டுபிடிக்கப்பட்டார். முழு மயக்கத்தில் இருந்த தமிழை கை தாங்கலாக பிடித்துக் கொண்டு தேடிப் போன இருவரும் வெளியே வந்தனர்.

அதுவரை கூட்டமும், செல்வாவும், நாயும் இவர்கள் வரும் வழியையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

“என் வீட்டுக்குள்ள என்ன வெளிய தள்ளிட்டு போக யாருடா நீங்க? என் வீட்டை விட்டு என்னை வெளியே தள்ள எவ்வளவு தைரியம் உங்களுக்கு?” விதம் விதமாக குரல் கொடுத்துக் கொண்டு இருந்தான் செல்வா. தமிழ் வீட்டிற்குள் இருக்கும் இடத்தை அவர்களால் கண்டுபிடிக்க முடியாது என்று நம்பினான். அதனால் கொஞ்சம் தைரியமாக இருந்தான். அவனை அங்கிருந்த மற்ற ஆண்கள் கிளம்பாமல் பிடித்து வைத்து இருந்தனர்.

“இது என் மாமனார். ஒரு வேலையா இங்க வந்தவரை இந்த செல்வா இப்படி மயக்கி வச்சிருக்கான். போலீஸ் ஸ்டேஷன்ல கம்பிளைண்ட் இவரை காணலைன்னும் கடைசியா இங்க வந்தார்னும் குடுத்து இருக்கோம். அவங்க வந்து உங்களை அரெஸ்ட் பண்றதுக்குள்ள நீங்களா விட்டா நாங்க பாட்டுக்கு போயிருவோம்” என அதிகாரமாக சொன்னான்.


கூட்டம் அடக்கியதில் செல்வா மடங்கி இருந்தால் அவன் நாய் மட்டும் கூட்டத்தினரை பார்த்து அவ்வப்போது குரைத்தாலும் அதனுடைய இன்னொரு எஜமானி செல்வாவின் மனைவி அருகில் இருப்பதால் தன் காட்டத்தை குறைத்து இருந்தது. அவள் அதனை அகற்றி வைத்திருந்தாள்.

ஆம்புலன்ஸ் தேவைக்கு போன் பண்ணி விட அது வர அரை மணி நேரம் ஆனது. அதுவரை அங்கே இருந்த திண்ணையில் தமிழை கிடைத்துவிட்டு மதி அவரை பரிசோதித்தான். உயிருக்கு ஆபத்து இல்லை. ஏதோ போதை மட்டும்தான் என அறிந்து கொண்டவன் இன்னும் ஒரு மணி நேரத்தில் தமிழுக்கு முதல் உதவி கொடுத்து விட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான். அவனுடைய முயற்சியால் அரை மணி நேரத்தில் வர வேண்டிய ஆம்புலன்ஸ் தேவையில்லை என்று பக்கத்து டவுனில் இருந்து மாருதி வேன் ஒன்று வந்தது. அதில் ஏறி அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்றனர்.

தமிழுக்கு முதல் உதவிகள் செய்து அவர் உடலில் இருந்து நச்சு நீக்கப்பட்டாலும் அவர் இன்னும் மயக்கத்தில் தான் இருந்தார்.

காவல்துறை செல்வாவை தனது கஸ்டடியில் எடுத்திருந்தது. கூடவே ஜம்புவின் மரணத்திற்கு தான் தான் காரணம் என்று ஒத்துக் கொண்டான் செல்வா.

செல்வாவிடம் விசாரிக்கப்பட்ட எல்லா கேள்விகளுக்கும் ‘என் அப்பா தான் எல்லாத்துக்கும் காரணம்’ என்பதாக சொன்னான்.

“அவருடைய சுயநலத்துக்காக என்னை முன்னேற விடாம தடுத்துட்டார். ஆலமரத்துக்கு கீழ வளர்ந்த சின்ன செடிதான் நான். அவர்கிட்ட கத்துகிட்ட வித்தையை விட, அதை தப்பா எப்படி பயன்படுத்தலாம்னு யோசிச்சு நான் செஞ்சது தான் அதிகம். அவர் என்னை வளர விடலை. வாழவும் விடலை.

அப்புறம் அந்த சடங்கு. அதுல குறிப்பிட்ட நட்சத்திரத்தில் குறிப்பிட்ட நாள்ல பிறந்த பெண்ணோட கணுக்காலை அறுத்து அந்த ரத்தத்தை பூஜை செஞ்சா ஆயுள் அதிகரிக்கும்னு ஒரு பழைய புக்குல அப்பா படிச்சுக்கிட்டு இருந்தார். அந்த பொண்ணு அந்த தமிழ் ஐயாவோட பொண்ணு. அதை அப்பா கண்டுபிடிச்சுட்டு அந்த பொண்ணை தூக்க ஆள் செட் பண்ணி இருந்தார். அவரால் அந்த பொண்ணை தூக்க முடியல.

பிற்பாடு அந்த விஷயம் எனக்கு தெரிஞ்சது. நான் அதுக்கு முயற்சி செய்றதுக்கு முன்னவே தமிழ் ஐயா அவரே வந்து சிக்கிகிட்டார். அவருக்கு அந்த விஷ மூலிகைகளை சுருட்டுல வச்சு கொடுத்தேன். கொடுக்கும்போது நான் மூக்கையும் வாயையும் துணியை வச்சு மூடிக்கிட்டேன். அதனால எனக்கு ஒன்னும் ஆகல.

அதிலேர்ந்து நாப்பத்தட்டு மணி நேரம் கழிச்சு அவர் எந்திரிச்சு, நான் என்ன சொன்னாலும் செஞ்சி இருப்பார். இந்த சடங்குக்கு அப்புறம் அந்த பொண்ணு உயிரோடு இருக்குமாங்கிறது உறுதியில்லை. அதனால்தான் அப்பா இதை ரகசியமாக வச்சிந்தார். எனக்கு அப்படி பயம் எல்லாம் ஒன்னும் இல்லை” என்ற செல்வாவை தோண்டி துருவியதில் அவன் செய்த இதர கொலைகள் மற்றும் பாதகங்கள் வெளியே வந்தது.

எப்படியோ பிள்ளையார் பிடிக்க குரங்காக முடிந்ததோ இல்லை அனுமார் பிடிக்க பிள்ளையாராக முடிந்ததோ, தமிழ் கிடைத்து விட்டார். ஊரை ஏமாற்றிக் கொண்டிருந்த ஒரு போலியும் பிடிப்பட்டான். ஆனால் தான் செய்வது தவறு என்று அறியாத குருட்டுக் கோழி, பலரை போல.
 
Last edited by a moderator:

Author: நிதனிபிரபு
Article Title: காதல் ராஜ வீதியில் - 25 ( pre final )
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: Magizh kutty