அசோகவனத்தில் ராமன் - 1

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,208
16,454
113
Germany
அத்தியாயம் 1


அவள் மிகவும் அழகு.‌ எந்நேரமும் உடலில் வெண்ணெய் தடவியதுபோல் மிருதுவான சருமம். கண்களோ மிக நீளமாக அவள் முகத்திற்கு பொருத்தமாக இருக்கும். கூந்தல்… அலங்கோலமாய் இருந்து அந்த நிறுவனத்தில் யாரும் பார்த்திருக்கவே மாட்டார்கள். ஏனெனில் தனது தோற்றத்தில் அதிக கவனம் கொண்டிருப்பவள் அவள்.


உதட்டில் கூட சாயம் மிதமான அளவில், அதே சமயம் உறுத்தாத வண்ணத்தில் தான் இருக்கும். அவள் புடவையை இழுத்து இழுத்து இடையை மறைக்கும் ரகம் கிடையாது. அதே சமயம் எதையும் பளீரென காட்டியும் யாரும் பார்த்திருக்க மாட்டார்கள்.


அந்த நிறுவனத்தில் யார் யாரிடம் எப்படி பேச வேண்டும் என்ற நேக்கு தெரிந்தவள். அவளை பற்றி இதுவரை எந்த புகாருமே எழுந்ததில்லை. ஆனால்… ஆனால்… இன்று தனது முதலாளியின் முன் தலை குனிந்து நிற்கிறாள், அதுவும் கண்கள் குளமாக.


“இந்த மாதிரி சோக நாடகம் போடுறதை முதல்ல நிறுத்தறீங்களா மிஸ் நந்தினி? பார்க்கவே கடுப்பா இருக்கு”


எரிச்சலான குரலில் விழுக்கென்று நிமிர்ந்து பார்த்துவிட்டு, கண்ணீரை துடைத்துக்கொண்டு மீண்டும் குனிந்தாள் நந்தினி.


“உங்களுக்கென்ன பொன்னியின் செல்வன் நந்தினினு நெனப்பா? ஆனா அந்த அளவுக்கெல்லாம் உங்களுக்கு புத்தி சாதூர்யம் இல்லைனு இப்ப ஒத்துக்குவீங்கன்னு நெனைக்கறேன்”


மீண்டும் ஒரு விம்மல் நந்தினியிடமிருந்து வந்தது.


“உங்க அழகுல மயங்கி நீங்க செஞ்ச தப்புகளெல்லாம் கண்டுக்காம இருந்திடுவேன்னு நெனச்சீங்களா‌ மிஸ் நந்தினி? அப்படி நெனைக்க நான்‌ ஆண்மகனும் இல்ல. உங்க கெட்டநேரம் லெஸ்பியனும் இல்ல. நான் ஆத்மீகா கண்ணபிரான்! ஆனா என்னை இப்படியொரு‌ நளினமான முட்டாளா நீங்க எடை போட்டிருக்கக் கூடாது. நீங்க இந்த வேலைக்கு சேர்ந்து ஏழு வருசம் இருக்குமா? அதுக்குள்ள இந்த பிராஞ்சுக்கு மேனேஜர் ஆக்கின தைரியம் தானே உங்களை இருபது லட்சம் கையாடல் பண்ண ஊக்கியிருக்கு? நீங்க செஞ்ச தப்புக்கெல்லாம் ஆதாரம் என் டிடெக்டிவ் கொடுத்த இந்த ஒரிஜினல் ரசீதுங்க தான். நீங்க இப்ப ஃபைல்ல பின் பண்ணியிருக்க போலியான ரசீதுகளே போதும்; உங்களை நான் உள்ளத் தள்ள. ஆனா, அது நாலு பேருக்கு தெரிஞ்சு, என் தேர்வுகளை எடை போடுறதை நான் விரும்பல. எனக்கு இன்னும் ரெண்டு நாள்ல என் பணம் வட்டியும் முதலுமா என் கைக்கு வந்தாகனும். இல்ல? இந்த‌‌ ஆதாரங்களை வச்சு போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுக்கவும் நான் தயங்க மாட்டேன். முடிவு உங்களோடது தான்” என்றுவிட்டு மேசையில் கைகளை கோர்த்துக்கொண்டாள் அந்த ஆத்மீகா கண்ணபிரான்.


‘ராட்சசி ராட்சசி’ என்றே மனதுள் உருப்போட்டாள் நந்தினி.


அவள், “மேடம், அந்த பணம் எதையும் நான் எனக்காக ஒரு பைசாக்கூட செலவளிக்கல. அதை ஒரு அப்பாவிப்பொண்ணோட வாழ்க்கைக்கு தான் செலவு பண்ணினேன். இப்ப திடீருனு நீங்க அவ்வளவு பணம் கேட்டா நான் எங்க மேடம் போவேன்?” என்று பாவமாக கதறினாள்.


“நீங்க எங்க வேணா போங்க மிஸ் நந்தினி. அது உங்க பிரச்சனை. எனக்கு தானம் பண்றதுனா என் கையால பண்ணனும். மத்தவங்க கையால இல்ல. ஸோ, எனக்கு என் பணம் வந்தாகனும். இதுக்கு மேல பேச ஒன்னுமில்லைனு நெனைக்கறேன்.” என்று கைகளை விரித்தாள் அந்த நிமிர்வுக்காரி.


அதற்கு மேல் அங்கு நிற்க நந்தினிக்குமே விருப்பமில்லை. தனது மைக்கேல் கோர்ஸ் கைப்பையை தூக்கிக்கொண்டு வெளியேறினாள். கீழே அவளது காரை நெருங்கினாள். அந்த ஸ்விப்ட் கூட அவள் அந்த கண்ணபிரான் கார்மெண்ட்ஸின் தாம்பரம் கிளை மேலாளர் என்பதால் ஆத்மீகா கண்ணபிரான் கொடுத்திருந்தது தான்.


அதிலேறி தனது அடுக்குமாடி குடியிருப்பிற்கு செல்ல மனமின்றி, பொடிநடையாகவே தனது காதலன் பணிபுரியும் உணவுவிடுதிக்குச் சென்றாள்.


அங்கு அவன் மேலாளராக பணி புரிந்தாலும், இன்று‌ சற்று கூட்டம் அதிகம் என்பதால் தானே ஒரு மேசையை சுத்தப்படுத்தி, ஒரு குடும்பம் அமர தயார் செய்து கொண்டிருந்தான்.


கோட் ஷூட் அணிந்த அவனை‌ அக்குடும்பத்தினர்‌ பிரம்மிப்போடு பார்த்துக் கொண்டிருந்தனர்.


அவன் முகக்களை அவனை அந்த உணவு விடுதிக்கு முதலாளி என்றே கட்டியம் கூறும். ஆனால், உண்மை‌ அதுவல்ல. அவர்கள் குடும்பம் ஒரு வாழ்ந்துகெட்டது.


எட்டு வருடங்களுக்கு முன்பு வரை ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றில் மேலாளராய் பணிபுரிவதே தனது குறிக்கோள் என்று தீவிரமாக ஹோட்டல் மேனேஜ்மெண்ட் பிரிவெடுத்து படித்துக் கொண்டிருந்தவன், திடீரென‌ ஒரு தீ விபத்தில் தன் தாயை பறிகொடுத்தப் பின், குடும்ப‌ ஜீவனத்திற்கே வழியின்றி, அரைகுறை படிப்போடு தற்போது பணி புரியும் இந்த உணவுவிடுதியில் வந்து, வரவேற்பாளராக சேர்ந்தான்.


அவனின் அசர வைக்கும் தோற்றத்திற்கு கிடைத்த வெகுமதி தான் அந்த ‌பதவி.


ஆனால், கடந்த எட்டு வருடங்களில் முழுக்க முழுக்க தனது திறமையினால் மட்டுமே அவன் தற்போது இந்த மேலாளர் பதவியை அடைந்திருக்கிறான்.


குடும்ப நிலவரத்தை பொறுத்தவரை முன்பு வந்த சொற்ப வருமானத்தையும், அவனது தாயின் நகைகளையும் கொண்டே முதல் தங்கை இந்துமதியை வீட்டைவிட்டு கடத்தியாகிற்று.


இரண்டாம் தங்கை மதுமதியையும் அவள் ஆசைப்பட்டவனுக்கே கடனை உடனை வாங்கி, இரண்டு மாதங்களுக்கு முன் திருமணம் செய்து வைத்தாகிற்று. மீதம் இருப்பது கடைக்குட்டி பானுமதி மட்டும் தான்.


அவள் இப்போது தான் இளங்கலை முதல் வருடம் என்பதால் திருமணத்திற்கு அவசரமில்லை. அவள் திருமணத்திற்கு தயாராகி நிற்கும் போது தங்களின் நிலைமை இன்னும் கொஞ்சம் உயர்ந்திருக்கும் என்றே கணக்கிட்டான் சித்தார்த்தன்.


பெயருக்கேற்ற தன்மையோடு சௌஜன்யமும், சௌந்தர்யமும் ஒருங்கே வாய்க்கப் பெற்றவன் அவன்.


வாடிக்கையாளர்களை கண்டால் மட்டும் புன்முறுவல் புரியும் அவனது சுந்தர முகம், மற்ற நேரங்களில் இறுகியே இருக்கும். யாரும் தன்னை அளவுக்கு மீறி ரசித்து நோக்குவதைகூட விரும்பாதவன் அவன்.


எவ்வளவு பெரிய‌ அழகி அங்கு வருகை புரிந்தாலும், நாசுக்காக அவர்களின் தட்டுகளின் மீது மட்டுமே அவனின் கவனம் இருக்கும். பரிமாறுபவரை‌‌ அழைத்து அவர்களுக்கு தேவையானதை பரிமாறச் சொல்வான்.


அங்குள்ள கட்டமைப்பையே மாற்றி, அலங்காரப் பொருட்களை நயமாக தேர்ந்தெடுத்து, ஒரு ஒழுங்குக்கு கொண்டு வந்தவன் கூட அவன் தான்.


அதனால் தான் அவனது முதலாளிக்கு கூட அவனை நிரம்பப் பிடிக்கும். ஆனால், பண விசயத்தில் மட்டும் என்றுமே அந்த முதலாளி கறார் தான்.


ஆகையால் தான், மூன்று மாதங்களுக்கு முன்பு அவனது இரண்டாம் தங்கை மதுமதியின் திருமணத்திற்காக பண உதவி கேட்டபோதுக்கூட நிர்தாட்சண்யமாக மறுத்துவிட்டார்.


அப்போது அவனுக்கு கைக்கொடுத்தது அவனது காதலி நந்தினி மட்டுமே. அதனாலோ என்னவோ, அவளை காதலியாய் அல்லாமல் கடவுளாய் பார்த்தான் சித்தார்த்தன்.


எப்படியாவது அந்தக் கடனை சிறுக சிறுக அடைத்துவிட வேண்டும் என்ற குறிக்கோளில் தான் அவன் அயராது உழைப்பது. தற்போதும் அவன் வேலையே‌ கண்ணாய் இருக்க, அவன் இருக்கும் பகுதிக்குள் நுழைந்தாள் நந்தினி.


அவளைக் கண்டதும் அவன் முகம் இட்லிப்பூவாய் மலர, எப்போதும் அதில் வண்டாய் மாறி பூரிப்பவள், இன்று முகம்‌ சோபையிழந்து நின்றாள்.‌


அதிலும் அவளின் முகத்திலிருந்த கண்ணீர் தடயங்கள் அவனுக்குள் உறுத்தல் உண்டாக்க, அவளை அழைத்துக்கொண்டு சமையலறையின் கடைகோடிக்கு சென்றான். அவசரமாக நடந்ததை விசாரித்தான்.


அவனைப் பாய்ந்து கட்டிக் கொண்டவள் நாகரீகம் கருதி அடக்கி வைத்திருந்ததையெல்லாம் தற்போது கொட்டிவிட்டாள்.


அருவியான விழிகள் அவனது சட்டையை நனைக்க, அவளின் தலைமுடியை வருடிவிட்டவன்,‌‌ “நந்துக்குட்டி, நீ இப்படி உடைஞ்சு அழறதுக்கு காரணம் நான் தான? நான் மட்டும் நம்ம மது கல்யாணத்துக்கு இருபது லட்சம் கேட்கலைனா, நீ‌ அந்த தப்பை செஞ்சிருக்க மாட்ட தான? என்னால உனக்கு எவ்வளவு கஷ்டம்?” என்று சஞ்சலப்பட்டான்.


“இல்ல சித்துமா. நீங்க ஒன்னும் என்னை கையாடல் பண்ணிட்டு வர சொல்லலையே? நானா தானே இந்த தப்பை செஞ்சேன்? அதுவும் மது என்‌னோட வருங்கால நாத்தனாருங்கற பாசத்துல. இதுல நீங்க உங்களை வருத்திக்க ஒன்னுமே இல்ல. என் அக்கா மஞ்சரி கல்யாணம் ஒரு வருசத்துக்கு முன்னாடி நடந்திருந்தா கூட, நீங்க கேட்ட நேரத்துக்கு என் கையில கொஞ்சம் சேமிப்பு இருந்திருக்கும். ஆனா அவளுக்கு தடபுடலா கையிருப்பையெல்லாம் போட்டு கல்யாணம் பண்ணின மறுமாசம் தான் நீங்க மது கல்யாணத்துக்கு பணம் கேட்டீங்க. அதான் வேற வழியில்லாம நான் கார்மெண்ட்ஸ் பணத்துல கை வைக்க வேண்டியதா போச்சு. அதை உங்க தங்கச்சி கல்யாணம் முடிச்சப்பறம் சொன்னப்ப கூட நீங்க எவ்வளவு கோபப்பட்டீங்க? அதனால இதுல உங்க தப்பு எதுவுமே இல்ல” என்றாள் அவனின் கையணைப்பில் இருந்தபடி.


அவனுக்கு நன்றியுணர்வில் கண்கள் இரண்டும் கரையுடைத்தன.


“ச்சு! என்னதிது? எனக்கு ஐடியா சொல்லாம, இப்படி கண் கலங்கிட்டு?”


“உன்னோட இந்த அபரிமிதமான‌ அன்பு கிடைக்க நான் என்ன தவம் செஞ்சேனோன்னு இருக்கு நந்து”


“இப்படியொரு அழகான ராஜ வம்சத்து பையன் கிடைக்க நான் கூட தான் கொடுத்து‌ வச்சிருக்கனும்.”


“ராஜ வம்சம்? அம்மஞ்சல்லிக்கு பிரயோஜனம் இல்ல நந்து” என்று சலித்தான் அவன்.


ஆனால், நந்தினி அப்படி நினைக்கவில்லை. உண்மையில் அவன் அழகனாகவோ, இல்லை ராஜ வம்சத்தை‌ சேராதவனாகவோ இருந்திருந்தால்‌, அவன் பின்னால் அவளுக்கு சுற்றி அலைய காரணமே இருந்திருக்காது.


அவனது முதல் தங்கை இந்துமதியும், அவளும் கல்லூரிகாலத் தோழிகள்.‌


இந்துமதியை சித்தார்த்தன் தனது அன்னையின் காரில் -கல்லூரியில் இறக்கிவிட வரும்‌ சமயம் தான், அவன் மீது காதலில் விழுந்தாள் நந்தினி. அவளின் ஒட்டு மொத்த தோழிகளுமே விழுந்த போது அவள் விழுவதற்கென்ன?


அப்போது தான் அவளது மனதிற்குள் இத்தனை பேர் பார்த்து ஏங்குபவனை‌ தனது உடைமையாளனாக மாற்றிக்கொண்டால் எப்படியிருக்கும் என்ற பேராசை உருவானது.


அதற்காகவே இந்துமதியின் நெருங்கிய தோழியானாள். வீட்டிற்கும்‌ அடிக்கடி வந்து சென்று சித்தார்த்தனின் நன்மதிப்பை பெற்றாள்.


ஆனால், அவனது தாய் அநுத்தமாவுக்கு முன்பிருந்தே அவள் மீது ஒரு ஒவ்வாமை இருந்தது. அவர் தான் பணி புரியும் துறை ஆணாதிக்கம் நிறைந்ததென்றாலும்- எளிதில் யாரைப் பற்றி வேண்டுமானாலும் அவதூறு பரவும் சூழ்நிலையில் நின்றாலும்- ஒருபோதும் அந்த கொடூரவட்டங்களுக்குள் சிக்காத- திறமையான சின்னத்திரை நடிகை.


நாடகங்களில் பலரின் நடிப்புத் திறமையை கண்டதாலோ என்னவோ நந்தினியின் நடிப்புத்திறமை அவரிடம் செல்லுபடியாகவில்லை. பலமுறை அவளை பற்றி எச்சரித்தும், இந்துமதி நட்பில் உறுதியாயிருந்தாள்.


ஆனால், ஒரு விசயம் மட்டும் தெளிவு. அநுத்தமா மட்டும் தற்போது உயிரோடு இருந்திருந்தால், நந்தினி நிச்சயம் சித்தார்த்தனின் காதலியென்ற அடைமொழியோடு வலம் வர முடியாது.


தற்போது மெதுவாக தன்னைவிட்டு அவளை பிரித்தான் சித்தார்த்தன்.


நந்தினிக்கு அதில் கொஞ்சம் மனசுணக்கம் தான். இருந்தாலும் தன் சுண்டு விரலை கூட தொட அனுமதியாதவன், இன்று கூந்தலை வருடி ஆறுதல் சொன்னதே பெரிய விசயம் தான் என்று தன்னை தேற்றிக்கொண்டு, ஆத்மீகா கண்ணபிரானைப் பற்றி பொரிய ஆரம்பித்தாள்.


“அவளுக்கு மனசை ஆண்டவன்‌ கல்லுல படைச்சானா என்னனு தெரியல சித்துமா? கொஞ்சம் கூட இளக மாட்டேங்கறா? ரொம்ப கடவுள் நம்மளை சோதிக்கறார்” என்று புலம்பினாள்.


அந்த ஆத்மீகா கண்ணபிரானை பற்றி நந்தினி கூறுவதை கேட்டபோது அவனுக்கு அவள் மேல் கோபமேதும் உண்டாகவில்லை. ஏனெனில் தவறு முழுவதும் அவர்கள் பக்கம் தானே?


“இப்ப என்ன செய்யலாம்னு இருக்க நந்து? என்கிட்ட‌ சம்பளப் பணத்துல‌ மிச்சம் ஒரு ஐம்பதாயிரம் இருக்கு. உன்கிட்ட‌?” என்றான்.


அவள் சோகமே உருவாய், “என் அக்கா மஞ்சரி கிட்ட தான் அவ நகைங்களை கேட்டுப் பார்க்கணும் சித்துமா. மாமா கொடுக்க விடுவாரான்னு‌ வேற தெரியல” என்று நகத்தை கடித்தாள்.


“ச்சு!” என்று அவள் நகம் கடிப்பதை கண்களால் சுட்டிக்காட்டி தடுத்தவன், “ஒருவேளை பணத்தை திரும்ப கொடுக்கலைனா நிச்சயம் ஜெயிலுக்கு அனுப்பறது உறுதி தானா?” என்று இறங்கிய குரலில் கேட்டான்.


அவளின் அரண்ட பார்வை ஆமென்றது.



தொடரும்…

இதுவொரு ஆன்டிஹீரோயின் கதை நண்பர்களே!

கோகுலத்தில் சீதை இருக்கும்போது அசோகவனத்தில் ராமன் இருக்க முடியாதா என்ற தர்க்கத்தில் எனக்குள் முளைத்த கரு இது. அரக்கர்களிலும் நல்லவர்கள் உண்டு தானே? விபீஷணன்‌ போல.

கதை தொடர்பான உங்கள் கருத்துகள் தான் எனக்கு ஹார்லிக்ஸ். ஆதலால் லைக் போடவும், கமெண்ட் எழுதவும் தவறவேண்டாம்.
 
Last edited by a moderator:

Author: நிதனிபிரபு
Article Title: அசோகவனத்தில் ராமன் - 1
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
379
83
Chennai
ஆத்மிகா இஸ் ரைட்.....
இந்த நந்தினி சரி இல்ல..... சித்து ஏண்டா இவ கிட்ட மாட்டிக்கிட்ட🤦🤦🤦🤦🤦
Interesting start..... எனக்கும் இந்த தலைப்பு தான் முதலில் கவர்ந்தது🤩🤩🤩🤩🤩
 
  • Love
Reactions: STN-124

STN-124

Member
Jun 8, 2026
42
6
8
Madurai
ஆத்மிகா இஸ் ரைட்.....
இந்த நந்தினி சரி இல்ல..... சித்து ஏண்டா இவ கிட்ட மாட்டிக்கிட்ட🤦🤦🤦🤦🤦
Interesting start..... எனக்கும் இந்த தலைப்பு தான் முதலில் கவர்ந்தது🤩🤩🤩🤩🤩
😍 நன்றி சிஸ்❤️ ஆமாம் சிஸ் மாட்டிக்கிட்டவனை காப்பாத்த தான் ஆத்மிகா வந்திருக்கா☺️
 
  • Love
Reactions: Gowri Karthikeyan

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Members online