அசோகவனத்தில் ராமன் - 2

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,208
16,454
113
Germany
அத்தியாயம் 2



அழுது கரைந்தவளை ஒரு வழியாய் தேற்றியெடுத்து அவளுடனே ஒரு மேசையில் சாப்பிட உட்கார்ந்தான் சித்தார்த்தன்.


எவ்வளவு அழகான உணவு விடுதி! உட்கார்ந்தாலே பாதியாக உள்ளமுங்கும் குஷன் இருக்கைகள். ஒவ்வொரு மேசைக்கு மேலும் அலங்கார விளக்குத் தொங்கல்கள், நறுமணம் வீசும் பூச்சாடிகள் என்று சற்றுநேரம் தனது துன்பத்தை மறந்து தான் போனாள் நந்தினி.


அவளுக்கு பிடிக்குமென்று அவளது பீங்கான் கிண்ணத்தில்‌ இளநீர் பாயாசத்தை அதிகமாய் ஊற்றச் சொன்னான்‌ சித்தார்த்தன்.


அவன் தனது பிடித்தங்களை அறிந்து வைத்திருப்பதற்காக காதலுடன்‌ அவனை நோக்கினாள் நந்தினி. அவனும் பதிலுக்கு பரிவுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.


அப்போது தான் அருகில் கேட்ட‌ செறுமலில் தலையை திருப்பினாள் நந்தினி. அவளது மொத்த உலகமும் ஸ்தம்பித்து போனது. அந்த ராட்சசியை அவள் தற்போது இங்கு இந்த இடத்தில் கண்டதும், அனிச்சையாக எழுந்து நின்றாள்.


உதட்டில் ஏளன புன்னகையை தவழ விட்டவளோ, “ரொம்ப சந்தோசமா இருக்கீங்க போல மிஸ் நந்தினி? அவ்வளவு சீக்கிரம் பணத்துக்கு ஏற்பாடு பண்ணீட்டீங்களா? ஆச்சரியம் தான். அப்ப என்கிட்ட அழுது கரைஞ்சதெல்லாம் நடிப்பு தான் இல்லையா?” என்று குரலின் உஷ்ணத்தை கூட்டவும்,


“இல்ல மேடம். நான் பணத்தை புரட்டுறது பத்தி தான் இவர்கிட்ட பேசிட்டு இருந்தேன்.” என்று கண்ணீர் வடித்தாள் நந்தினி.


“பார்த்தா அப்படி தெரியலையே? காதல்ல உருகி கரைஞ்ச மாதிரி இல்ல இருந்தது?” என்று ஒற்றை புருவத்தை ஏற்றவும், சித்தார்த்தனுக்கு அவளின் பேச்சு அநாகரீகமாய் பட்டது.


தனது எதிர்ப்பை வெளியிட்டான்: “இது உங்க கார்மெண்ட்ஸ் இல்லைனு உங்களுக்கு நினைவுபடுத்த கடமைபட்டிருக்கேன் மிஸ் ஆத்மீகா கண்ணபிரான்” என்றான் நேர்பார்வையாக.


அவனின் அமர்த்தலான குரலில், அவனை மேலிருந்து கீழாக அளவிட்டவள், கண்மணிகளின் விட்டம் காட்டினாள்.


அது அவனுக்கு கடுப்பாக இருந்தது.


அதையும் ரசித்தவள் கேலியாக, “சாரோட தங்கச்சிக்காக தான் இருபது லட்சத்தை திருடினீங்க இல்லையா மிஸ் நந்தினி? தப்பில்ல. வொர்த்து தான். நானாயிருந்தா இருபது கோடி கூட செலவு செய்ய தயங்கியிருக்க மாட்டேன்” என்று கண்ணடித்தாள்.


அதில் பாதாதிகேசம் பற்றியெரிந்தான் சித்தார்த்தன்.


ச்சே! இப்படியும் ஒரு பொண்ணா என்றிருந்தது அவனுக்கு. இக்கட்டான சூழ்நிலையில் நின்றாலும், அவளுக்கு திருப்பி கொடுக்கவில்லை என்றால் அவனுக்கு தூக்கம் வராதே.


“எப்படி இன்னும் ரெண்டு நாளுக்கு போற இடமெல்லாம் வந்து கழுத்துல கத்தி வைக்கறதா உத்தேசமா?” என்றான் அவளை குற்றம் சாட்டும் பார்வையோடு.


“சீச்சீ! நான் ஒன்னும் ஃபாலோவ் பண்ணி வரல. அதுக்கான அவசியமும் எனக்கு இல்ல.” என்றவள் சொல்லிக் கொண்டிருந்தபோதே,


“ஹே ஆத்மீ! நீ இங்க தான் இருக்கியா? அப்பாகிட்ட சர்வன்ட்ஸ் யூனிஃபார்ம் பத்தி பேசிட்டு வர்றதுக்குள்ள இங்க வந்து நிற்கற?” என்றவள்,


சித்தார்த்தனை கண்டதும், “ஹலோ ஹேண்ஸம் இங்க தான் இருக்கீங்களா? அப்பா எப்படியும் உங்களை இப்ப கூப்பிடுவாரு. ரெடியா இருங்க” என்று சொல்லிவிட்டு,


“வா ஆத்மீ! உனக்கு நான் ஒரு சூப்பர் வீவோட டேபிள் காட்டுறேன்” என்று மின்தூக்கி இருக்கும் பகுதிக்கு சென்றாள்.


அவள் பிருந்தா. அவன் முதலாளியின் மகள்.


அப்போது‌ தான் மூச்சு விடவே முடிந்தது நந்தினியால். அவளின் சங்கடத்தையும் புரிந்து கொள்ள முடிந்தது அவனால்.


அவன் அவளை தேற்றுவதற்காக சொற்களை தேடிக்‌ கொண்டிருந்த நேரம், “உங்களால எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பணம் புரட்டிக் கொடுங்க சித்துமா. நானும் ட்ரை பண்றேன். நல்லதே நடக்கும் நம்புவோம்” என்று ஒரு பெருமூச்சோடு கையை கழுவிக்கொண்டு‌ அங்கிருந்து புறப்பட்டாள் நந்தினி.


அவனுக்கு‌ தான் வீணாய் போன இளநீர் பாயாசத்தை கண்டு மனம் வெந்தது.


இவ்வளவு அயோக்கியத்தனம் நிறைந்தவளாக இந்த ஆத்மீகா கண்ணபிரான் இருப்பாள் என்று அவன் நினைத்துப் பார்க்கவில்லை.


அவனைக் கண்டதும் அவனை உரித்து தின்பது போல் அவள் பார்த்த பார்வை இருக்கிறதே? அவளும் தான் அழகாக இருக்கிறாள். அதற்காக அவன் இப்படியா பார்த்து வைத்தான்?


அவனுக்கு எப்போதுமே நிமிர்வான பெண்களின் மீது மதிப்பு உண்டு. அதிலும் சொந்தக் காலில் நிற்பவர்கள் மீது தனி மரியாதையே உண்டு.


சின்னத்திரை உதவி இயக்குநராக இருந்த அவனது தந்தை- அவனுக்கு பத்து வயதில் மஞ்சள்காமாலையால் இறந்த பின், இல்லத்தரசியான அவனது தாய் அநுத்தமா- ஒரு தென்றல் புயலானக் கதையாய்- தனது நான்கு குழந்தைகளையும் அயராது- ஸ்பாட்லைட்டின் உஷ்ணத்தில் வெந்து வளர்த்த கதையெல்லாம் அவனுக்கு நெஞ்சில் பசுமரத்தாணி தான்.


அவரின் கண்டிப்பான வளர்ப்பின் பலனோ என்னவோ, சித்தார்த்தன் பெண் சகவாசத்தில் ராமனாக திகழ்ந்தான். யாராயிருந்தாலும் கண்ணியமாக நோக்குவதையே தலையாய கடமையாய் கொண்டிருந்தான்.


இன்றும் கூட அவனின் பார்வை அந்த ஆத்மீகா கண்ணபிரான் முகத்தின் மீது தான் முக்கால்வாசி நேரம் நிலைத்திருந்தது.


அதிலும் அரைவாசி நேரம் அவளின் கண்களின் மீது. அவை பாதாமின் வடிவத்தை ஒத்திருந்தன. கண்மணிகளோ புளியின் அடர் பழுப்புநிறத்தை உண்டவையாய். ஐலைனர் இமைகளை தாண்டாமல்- அதே சமயம் அடர்த்தியாய் தீட்டப்பட்டிருந்தது கூட, ஒருவித நுட்பமாய் தோன்றியது. அந்த செதுக்கப்பட்ட புருவங்கள் தான் எவ்வளவு கருமையாகவும், அவளது கர்வத்திற்கு குடை பிடிப்பவையாகவும் இருந்தன!


நந்தினியை காணும் போது அலட்சியத்தையும், தன்னை காணும் போது ரசனையையும் மாறி மாறி கொட்டிய- அத்தகைய உணர்வுப் பூர்வமான விழிகளை இதற்கு முன் அவன் கண்டதே இல்லை.


அந்த இதய வடிவிலான முகத்தை அவனால் மறக்க முடியுமா என்றால், நிச்சயம் முடியாது. ஏனெனில், அது மிதமிஞ்சிய வெறுப்பை உண்டாக்கிய முகமும் அல்லவா?


அவளை பார்த்த கணத்தில்- செங்கல் சிவப்பில் ஆழமான வீ‌ திறப்பு கொண்ட கோட்டும், வெள்ளை நிறத்தில் உடலை இறுக்கிப் பிடித்த பனியனும்- அவள் உடல் வாகிற்கு கட்சிதமாய் பொருந்தியிருப்பதை கண்டு- வியக்காதவர்கள் இருக்க மாட்டார்கள். ஆனால், சித்தார்த்தன் அதைக்கூட உற்றுநோக்கவில்லை.


ஏன் வாகைப்பூவை கவிழ்த்தியது போல் அவளின் தோளில் தவழ்ந்த மிருதுவான- நீள பாப் கட் முடிகளை கூட அவன் சட்டை செய்யவில்லை. ஆனால்… ஆனால்… அவளொரு ஆண்மகனை எவ்வாறு நோக்கினாள்?


அதிலொரு கண்ணியம் இருந்ததா? ம்ஹூம் சுத்தமாக. இப்படிப்பட்டவள் எப்படி நந்தினியை வெறுமனே பணத்தை வாங்கிக்கொண்டு வழியனுப்பி வைப்பாள் என்று யோசனையாக இருந்தது அவனுக்கு.


அவனின் யோசனையை கலைப்பது போல் ரீங்காரமிட்டது அலைபேசி. ஏற்று பேசினான். அதன்‌ சாராம்சம்: அந்த இரண்டு பிரகஸ்பதிகளுக்கும் அவன் தான் தட்டில் உணவை கொண்டு போய் கொடுக்க வேண்டுமாம். என்னவொரு தலையெழுத்து!


ஆனால், சம்பளத்தை எண்ணிக் கொடுக்கும் முதலாளியின் மகளாயிற்றே! அவன்

பணிந்தான்.


முதலாளியின் மகள் கண்களால் தனது தோழியிடம் ஏதோ ஜாடை பேசுவது அவனுக்கு புரியத்தான் செய்தது. ஆனால், அதில் அதிக கவனம் செலுத்தவில்லை. நிமிர்வுடன் நின்றிருந்தான். என்ன அந்த ஆத்மீகா கண்ணபிரான் கொஞ்சம் அவனை உரித்து தின்காமல் இருந்திருந்தால் நன்றாகயிருந்திருக்கும்.


அவன் அவர்கள் கை கழுவிக்கொள்ள வெள்ளிக்கோப்பை ஒன்றை எடுத்துவரச் சென்றபோது, “சொன்ன மாதிரியே சாப்பாடு ரெண்டு கவளம் எக்ஸ்ட்ரா உள்ள இறங்குச்சி இல்ல ஆத்மீ? அது தான் சித்தார்த்தனோட அழகின் ஆற்றல்” என்று பிருந்தா கண்ணடித்து நகைக்க, தானும் இணைந்தாள் ஆத்மீகா கண்ணபிரான்.


முதலில் அங்கு வந்து அமர்ந்ததும், பெரிய கண்ணாடி சுவற்றின் வழியே, பிருந்தா அடர் நீலநிற நீச்சல் குளத்தை காண்பித்தபோது, ஆத்மீகா அதில் லயிக்காமல், அந்த‌ சித்தார்த்தனின் அழகில் லயித்தவளாக, யோசனையுடன் காணப்பட்டாள்.


தோழி காரணம் கேட்டதற்கு மறைக்காமல் நந்தினி பற்றியும், தனது துப்பறிவாளர் முன்னமே கூறிய அந்த சித்தார்த்தனை பற்றியும் கூறினாள்.


பிருந்தாவோ அவளை கேலிப் பேசினாள்: “இவன் இவ்வளவு அழகா இருப்பான்னு தெரிஞ்சிருந்தா நீ பணமே கேட்டிருக்க மாட்டல்ல?”


அது ஒத்துக்கொள்ள வேண்டிய விசயம் தான் என்பதால் அமைதியாக ஆமோதித்தாள் ஆத்மீகா கண்ணபிரான்.


கூடவே, “இப்பவும் ஒன்னும் கெட்டுப்போயிடலையே” என்றாள் புருவங்களை இருமுறை ஏற்றியிறக்கி.


மறுமுறையும் கிளுக்கிச் சிரித்த பிருந்தா தீவிரமானாள்.


“சித்தார்த்தன் நீ மாசம் ரெண்டு தடவை உன் மெத்தையில சந்திக்கற ஆம்பளைங்க மாதிரி இல்ல ஆத்மீ. அவர் ஏகபத்தினி விரதன். அவர் அப்பா ராஜ வம்சத்தை சேர்ந்தவர்னால அவர்கிட்ட அந்த மிடுக்கும், கர்வமும் எப்பவும் இருக்கும். அவரை உன் மெத்தைக்கு வர வைக்கறது அவ்வளவு சுலபம் இல்ல. ஒழுக்கத்தை இதய தீபமா நெனச்சி அணையாம தொழுதுட்டு வர்றவர்கிட்ட உன் லீலைகள் செல்லுபடி ஆகாதும்மா. ஆனா பாரு அவரை அடையற பாக்கியம் அந்த ஃப்ராடு நந்தினிக்கு வாய்ச்சிருக்கு.” என்று சற்று பொறாமையாக சொல்லவும், ஆத்மீகாவுக்கு எரிச்சல் மூண்டது.


அவனை பிருந்தா எட்டாக்கனி போல் பேசியது அவளின் தன்மானத்தை சீண்டியது.


மனதுள் புகைந்தாள்: ‘அந்த நந்தினி ரொம்ப நல்லவள்னு அவக்கூட இந்த துரை இருப்பாராம். ஆனா, என் கூட இருக்க மாட்டாராமா? அந்த நந்தினியோட உண்மை முகத்தை இவனுக்கு தோலுரிச்சி காட்டல? என் பேர் ஆத்மீகா கண்ணபிரான் இல்ல.’ என்று சூளுரைத்தாள்.


மேலும் பிருந்தாவிடம், “கிடைக்காத பொருளை அடையுறதுலயும் ஒரு கிக் இருக்கத் தான் செய்யுது இல்ல?” என்று தங்களை நோக்கி வருபவனை பார்த்துக்கொண்டே கிறக்கமாக சொன்னாள்.


மறுத்து ஏதோ சொல்ல வந்த பிருந்தா, சித்தார்த்தனை கண்டதும், வாய்க்கு பூட்டிட்டாள்.


பின், பிருந்தாவின் குடும்பத்திற்கு சொந்தமான - தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் இருக்கும்- அவர்களின் உணவுவிடுதிகளில் வேலைப் பார்ப்பவர்களுக்கு உரிய- சீருடை குறித்து பேசுவதைப் போல பேச்சை மாற்றிக்கொண்டனர்.


இறுதியில் பிருந்தாவின் தந்தையுடனும் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டாள் ஆத்மீகா கண்ணபிரான்.


இவ்வளவு நேரமும் அவளின் துச்சாதன விழிகளில் அனலில் இட்ட புழுவாய் துடித்துக் கொண்டிருந்த சித்தார்த்தன்‌, அவள் அங்கிருந்து கிளம்பியதும் தான் நிம்மதி பெருமூச்சு விட்டான்.


ஆனால், அது நிரந்தமானது அல்ல என்பதை, அப்போது அவன் அறியவில்லை.



தொடரும்…

ஆத்மீகா கண்ணபிரான் குறித்த உங்கள் மதிப்பீடு என்ன நண்பர்களே? நான் முதலில் இந்தக் கதைக்கு 'பெண்ணே! நீயும் பெண்ணா?' என்று தான் தலைப்பு வைக்க நினைத்தேன். ஆனால், ஆத்மீகா கண்ணபிரான் செய்யும் இதே தவறுகளை ஆண்கள் செய்தால் நாம் "ஆணே! நீயும் ஆணா?" என்று கேட்பதில்லையே! இதற்காக ஆத்மீகா செய்யும் தவறுகளை நான் நியாயப்படுத்தவில்லை. ஆண் பெண் யார் செய்தாலும், தவறு தவறு தான் என்கிறேன்.


இந்தக்கதை உங்களுக்குப் பிடிச்சிருந்தா லைக் இடவும், கமெண்ட் எழுதவும் தயங்க வேண்டாம் நண்பர்களே!
 
Last edited by a moderator:

Author: நிதனிபிரபு
Article Title: அசோகவனத்தில் ராமன் - 2
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
379
83
Chennai
அச்சோ இவ என்ன ஆன்டி ஹீரோ போல எல்லா விஷயமும் பண்ணிட்டு இருக்கா😳😳😳😳
Aww
 
  • Love
Reactions: STN-124

STN-124

Member
Jun 8, 2026
42
6
8
Madurai
ஆத்மி தான் வில்லி யா... play boy போல் இவள் play girl யா...
ஆமாம் சிஸ்☺️ ப்ளே கேர்ள் தான் இவ😂 முன்னாடி ஒரு தடவை உங்களுக்கு ரிப்ளை பண்ண ட்ரை பண்ணினேன் சிஸ். வெப்சைட் பக்கம் ட்ரபிள் போல. அதான் சிஸ் இப்ப ரிப்ளை பண்றேன்☺️❤️
 

STN-124

Member
Jun 8, 2026
42
6
8
Madurai
ஆஹா இவ சீதான்னு நெனைச்சா ப்ளேகர்ல்லா இருக்கா 😯😯
😂😂😂 ஹாஹாஹா அசோகவனத்துல‌ சீதை இல்ல சிஸ், ராமன்! ஸோ ராவணன் வேலையைப் பார்க்க ஒருத்தர் வேணுமில்ல😊❤