அசோகவனத்தில் ராமன் - 4

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,208
16,454
113
Germany
அத்தியாயம் 4


நேற்றிரவு தான்- தனது நகைகளை பாதி விலைக்கு விற்பது குறித்து ஒரு நகைக்கடைக்காரரிடம் விபரம் கேட்டாள் நந்தினி.


அவள் சித்தார்த்தனிடம் பொய் கூறியிருந்தாள் தன்னிடம் நகை எதுவுமே கிடையாதென்று. தெரிந்தால் அந்த நாற்பது பவுனையும் மதுமதியின் திருமணத்தின் போதே தானமாக வழங்க வேண்டியிருந்திருக்குமே.


நந்தினி தனக்கென்று எதையும் ஒதுக்காமல் - அனைத்தையும் தனது தமக்கை மஞ்சரிக்கு வாரி வழங்க- பத்தாம்பசாலி கிடையாது என்பது- விநயமற்ற சித்தார்த்தனுக்கு தெரியாமல் போனது விந்தையல்ல.


அவள் அதை இன்று வேறு வழியின்றி விற்க எடுத்துச் செல்லும் முன், அவசரமாக ஆத்மீகா கண்ணபிரான் தன்னை நேரில் அழைத்திருந்தது வேறு கடுப்பை கிளப்பியது. கடுகடுவென்று அமர்ந்திருந்தாள்.


“என்னதான் நிலைமை கம்பி எண்ணுற இடத்துக்கு போனாலும், இந்த திமிருக்கு மட்டும் குறைச்சலில்ல. ம்?” என்றாள் முதலாளி.


“என்ன விசயமா கூப்ட்டீங்கன்னு தெரிஞ்சா, நான் என் அடுத்த வேலைகளை பார்க்க வசதியாயிருக்கும்.”


“அடுத்த வேலைன்னா இங்க ஒரு வேலைப் பார்த்தீங்களே அந்த மாதிரி வேலையா?”


“மேடம் ப்ளீஸ். என் சூழ்நிலைய நான் நேத்தே எடுத்து சொல்லிட்டேன். இதுக்கு மேலயும் வெந்த புண்ணுல வேலைப் பாய்ச்ச வேணாம்.”


“ஓகே ஓகே. ரொம்ப சூடா இருக்கீங்கன்னு தெரியுது. ஒரு பேஸன் ஃப்ரூட் மொஹிதோ குடிக்கறீங்களா ஜில்லுனு? உங்களுக்கு அது தானே பிடிக்கும்?” என்று புருவத்தை ஏற்றி இறக்கவும், தொண்டை நீர் வற்றிப் போயிருந்த நந்தினிக்கும் ஏதாவது குடித்தால் தேவலாம் போல் தான் இருந்தது.


ஆனாலும் மொஹிதோ அருந்த சங்கடப்பட்டு, “இல்ல மேடம். ஐஸ் வாட்டரே போதும்” என்றாள் கம்மிய குரலில்.


அடுத்த இரண்டு நிமிடங்களில் அவளின் வாளிப்பான தொண்டைக்குள் ஜில்லென்று இறங்கியது தண்ணீர். உதட்டுச்சாயம் கலையாத வண்ணம் கைக்குட்டை கொண்டு அவள் அதரங்களை ஒற்றியெடுக்க,


மெதுவாக முன்புறம் குனிந்த ஆத்மீகா கண்ணபிரான், “அதுவந்து மிஸ் நந்தினி.. எனக்கு உங்களை வேலையை விட்டு அனுப்ப விருப்பமில்ல” என்றாள் அவளிடம் ஒரு பேரதிர்ச்சியை எதிர்பார்த்து.


அதுபோலவே வெடித்த பாதாம்பழமானது அவளது இதழ்கள்.


“உண்மை தான். நீங்க பணத்தை திருப்பிக் கொடுக்கக்கூட தேவையில்ல”


தனது காதுகளையே நம்ப முடியாமல் உட்கார்ந்திருந்தாள் நந்தினி. ஆனாலும் இத்தனை வருட பழக்கத்தில் ஆத்மீகா கண்ணபிரான் எப்பேர்ப்பட்ட தொழிலதிபர் என்பதை தெரிந்தவளாயிற்றே.


ஆகையால், “அதுக்கு நஷ்ட‌ ஈடு?” என்றாள் கண்ணாக.


“கரெக்ட். என் தேர்வு அவ்வளவு ஒன்னும் மோசமில்லனு நிரூபிச்சதுக்கு தாங்க்ஸ்.”


“புகழ்ச்சி தேவையில்ல மேடம். நேரடியா விசயத்துக்கு வரலாம்.”


புன்முறுவல் பூத்தவள், “நான் முன்னாடியே சொன்னேன் இல்லையா? நான் லெஸ்பியன் இல்லைனு? ஸோ… எனக்கு உங்க லவ்வரை நீங்க ஒரு நாள் மட்டும் அரேஞ்ச் பண்ணி கொடுக்கனும்” என்றதும்,


“வாட்?” என்று நாற்காலியிலிருந்து துள்ளி எழுந்தாள் நந்தினி.


முகம் ரோசத்தில் சிவக்க, “என்னை என்ன புரோக்கர்னு நெனச்சீங்களா? இந்த பிராஞ்ச்ல இருக்கற ஒவ்வொருத்தர் கிட்டயும் கேட்டுப் பாருங்க, நான் எப்படினு சொல்வாங்க. என்னைப்போய் இப்படி ஒரு வேலையை செய்யச் சொல்றீங்க? அது மட்டுமில்லாம அவர் அப்படிப்பட்டவர் கிடையாது.” என்று கொந்தளித்தாள்.


“கூல் மிஸ் நந்தினி. இன்னொரு ஐஸ் வாட்டர் வேணும்னா கொண்டு வரச் சொல்லவா?”


“தேவையில்ல”


“பொறுமையா கேளுங்க. உங்களுக்கு நான் கொடுத்தது ஒரு ஆப்ஷன் தான். உங்களால பணம் கொடுக்க முடியாத பட்சத்துல நீங்க அந்த வழியை யூஸ் பண்ணிக்கலாம்னு ஒரு ஹிண்ட் கொடுத்தேன். அவ்வளவு தான். நீங்க பணத்தை கொடுத்த பின்னாடி இங்கயிருந்து உங்களுக்கு எக்ஸ்பீரியன்ஸ் சர்ட்டிஃபிகேட்டும் கிடைக்கப் போறதில்ல. நீங்க முதல்ல இருந்து உங்க கரியரை தொடங்கற மாதிரி தான் இருக்கும். எங்க போனாலும் ஒரே நாள்ல மேனேஜர் போஸ்ட்டும், இதே அளவுக்கு சம்பளமும் கிடைக்கப் போறதில்ல. அப்பறம் எதுக்கு இந்த வீராவேசம் சொல்லுங்க? நாளைக்கும் நான் இங்க தான் இருப்பேன். பணம் இருந்தா கொண்டு வாங்க, பிரச்சனையில்ல. ஒருவேளை இல்லைனா? நீங்க நடந்து சங்கடப்பட வேணாம். வாட்ஸப்ல என் அட்ரஸ் அனுப்பி வைக்கறேன். அவரை அனுப்பி வைங்க.” என்று சாவகாசமாக சொல்லவும், பதிலேதும் கூறாமல் தனது கைப்பையை தூக்கிக்கொண்டு விருட்டென்று வெளியேறினாள் நந்தினி.


நந்தினி ஒன்றும் அவ்வளவு முட்டாளில்லை என்று அவளுக்கு தெரியும். ஆனால், எப்படி அவனை அதற்கு சம்மதிக்க வைப்பாள் என்று அறிய தான் அவளுக்கு ஆர்வமாயிருந்தது.


எப்படியும் இன்னும் இரண்டு நாட்களில் அவன் அவளது மெத்தையில் கிடப்பான். அப்போது கேட்டுவிட்டால் போயிற்று என்று தோள்களை குலுக்கிக் கொண்டாள்.


அங்கிருந்து வெளியேறியதுமே நந்தினி நடையை விரும்பாமல், ஆட்டோ பிடித்து வந்த இடம் சித்தார்த்தனின் உணவு விடுதி.


நேற்றைக்கு முந்தைய நாள் போலல்லாமல், அன்றளர்ந்த மலர் போல் அவள் இருப்பதை பார்த்து அவனுக்கு ஆச்சர்யம். ஒருவேளை பணத்தை புரட்டிவிட்டாளோ என்று ஆர்வமாக அவளை தனியே அழைத்துச் சென்று விசாரித்தான்.


ஆனால், நொடியில் அவள் முகம் வாடியது.


அவன் குழப்பமானான்.


“உன் மாமா நகைங்களை கொடுக்க சம்மதிக்கலையா நந்து? என் கையில இப்ப ஒரு ரெண்டு லட்சம் இருக்கு. அதுவும் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட வாங்கினது தான். ரொம்ப தயக்கமா இருந்தது. மான ரோசம் பார்த்தா வேலையாகாது இல்லையா?” என்றதும், அவளது கண்கள் பளபளத்தன.


அவன் புரியாமல் பார்த்தான்.


“நானும் அதைத் தான் சொல்ல வந்தேன் சித்துமா. இந்த காலத்துல மான ரோசத்துக்கெல்லாம் வேலையே கிடையாது. அதுலயும் ஒழுக்கம் கிலோ என்னனு கேட்கற சமூகத்துல தான் நாம இருக்கோம். அதுக்காக நாமளும் நம்மளை மம்மி மாதிரி இறுக்கிக் கட்டிட்டு இருக்கனுமா சொல்லுங்க? பாம்பு திங்கற ஊர்ல நடுத்துண்டு நமக்குனு கேட்டு வாங்கறது தான புத்திசாலித்தனம்?” என்று அவள் பீடிகைகளாக போட, பொறுமை எல்லை கடந்தது அவனுக்கு.


“நந்து நான் இப்ப வீட்டுல வெட்டியா உட்கார்ந்துட்டு இல்ல. உன் புதிர் பேச்சுக்கெல்லாம் விடை தேடிட்டு இருக்கறதுக்கு. வேலைல இருக்கேன். ரொம்ப நேரம் சாவகாசமா நின்னு உன்கூட பேச முடியாதுனு உனக்கும் தெரியும். அதனால சுத்தி வளைக்காம நேரடியா விசயத்துக்கு வா” என்று கோபமுகம் காட்டினான்.


அவள் தயங்கிக்கொண்டே உண்மை தேங்காயை உடைத்தாள். சிதறிய ஒவ்வொரு சில்லும் அவன் இதயத்தை குறி பார்த்தன.


“சித்துமா நீங்களே யோசிச்சுப் பாருங்க. இதைவிட்டா நமக்கு என்ன வழி இருக்கு? அவ இப்ப திடீருன்னு எனக்கு பணம் எதுவும் வேணாம். உன் அவர் தான் வேணும்னு சொல்றா. இல்லைனா என்னை ஜெயிலுக்கு அனுப்பிருவேன்னு மிரட்டுறா.”


“உனக்கு பதிலா நான் ஜெயிலுக்கு கூட போகத் தயார் நந்து. நீ போலீஸ்கிட்ட நான் தான் உன்னை திருட சொன்னேன்னு சொல்லு. எப்பவும் தப்பு செய்ய தூண்டினவங்களுக்கு தான தண்டனை அதிகம்? நான் பட்டுட்டு போறேன். ஆனா செத்தாலும் இது மாதிரி ஒரு விசயத்துக்கு சம்மதிக்க மாட்டேன். முடிவா சொல்லிரு அந்த ஆத்மீகா கண்ணபிரான்கிட்ட”


“அய்யோ! புரியாம பேசறீங்களே சித்துமா. இப்ப தான் மதுவுக்கு கல்யாணம் முடிஞ்சிருக்கு. அவ புருசன் வீட்டுக்கு நீங்க திருடிட்டு வந்த பணத்துல தான் கல்யாணத்தை நடத்துனீங்கன்னு தெரிஞ்சா, உங்க தங்கச்சியை மடியில தூக்கி வச்சி கொஞ்சுவாங்களா சொல்லுங்க? அடுத்து பானு கல்யாணம் நடக்கறது கூட டவுட் தான். அது மட்டும் இல்லாம நான் இதே வேலைல இருந்தா தான் நாளைக்கு நம்ம பானுவுக்கு கூட மத்த ரெண்டு பேர் மாதிரியும் ஜாம் ஜாம்னு கல்யாணம் பண்ணி வைக்க முடியும். என்ன சொல்றீங்க?” என்று ஆர்வமாக பார்த்தாள்.


அவளுக்கு உண்மையில் பானுமதி பற்றியெல்லாம் அக்கறை கிடையாது. ஏற்கனவே அவள் ஒரு பணக்காரனிடம் மயங்கிக் கிடக்கிறாள் என்பது கூட ஒரு பேரங்காடியில் வைத்து அவள் கண்டுகொண்டது தான். அவளை அவனுடன் எப்படியாவது ஓடிப்போக வைத்துவிட வேண்டும் என்று தான் அடிக்கடி, சித்தார்த்தனுக்கு தன் மேல் காதல் கரை புரள்கிறது என்றும், பானு மீதான பாசம் குறைந்து வருகிறது என்றும், அவளிடம் பொறாமையை தூண்டி விம்மச் செய்வது.


தற்போது தூண்டுகோலாக அந்த பானுவையும் இழுத்தாயிற்று என்று தன் புத்திசாதூர்யத்தை அவள் மெச்சிய தருணம், அவன் துச்சமான பார்வை ஒன்றை வீசினான்.


உ‌ண்மையில் அவனுக்கு அப்படியொரு ஆத்திரம். அவன் அவளது காதலன். எப்படி அவளால் இப்படி பொருளாதார அளவிலான லாப நஷ்டக் கணக்குகளை பற்றி மட்டுமே யோசிக்க முடிகிறது என்று அவனுக்கு அருவருப்பு உண்டானது.


ஒரு நொடியில் அவன் பார்வையில் தரமிறங்கினாள் நந்தினி. அதனால் நந்துவிலிருந்து நந்தினியாகவும்.


“நான் ஊர் உலகத்தார் வாயை விட மனசாட்சிக்கு அதிகம் மதிப்பு தர்றவன் நந்தினி. அதனால தான் நீ இருபது லட்சத்தையும் திருட்டு பணம்னு சொன்னப்ப, எப்படியாவது அதை கொஞ்ச கொஞ்சமா திருப்பி தர்றேன்; ஏதாவது ஒரு வகையில கார்மெண்ட்ஸ் பணத்தோட சேர்த்திடுனு சொன்னேன். லாஸ்ட் டூ மன்த்ஸ் என் சம்பளப் பணத்துல முப்பது முப்பதாயிரமா மிச்சம் பிடிச்சி கொடுக்கவும் செஞ்சேன். இது உன் அருமை முதலாளியம்மாவுக்கு தெரியுமா தெரியாது. ஆனா உனக்கு தெரியும் தான? இந்த சித்தார்த்தனோட தன்மானம் பத்தி தெரியும் தான? எந்த நம்பிக்கையில நான் இதுக்கு சம்மதிப்பேனு என்கிட்ட தைரியமா வந்து சொல்ற? ம்? பசுமாடு புலால் சாப்பிடறதை பார்த்திருக்கியா நீ?” என்று உறுமினான்.


அவளுக்கு பயம் ஒரு பக்கம் வியர்வைத் துளிகளை வாரியிறைத்தாலும், கோபக்கனல் மறு பக்கம் அதனை ஆவியாக்கியது.


“பசுமாடு புலால் சாப்பிடாது தான். அதே சமயம் அதை புலாலா ஆக்கற நடைமுறை நம்ம‌ சமூகத்துல இல்லாம இருக்கா என்ன? உங்க பிடிவாதம் அசட்டுத்தனம். யாருக்கும் அதனால ஒரு நன்மையும் கிடைக்கப்போறதில்ல”


“ச்சீ! நீ இப்படி பேசறதை கேட்க நாராசமா இருக்கு நந்தினி. உனக்கு நான் உனக்கானவனா மட்டுமே இருக்கனும்னு பிடிவாதம் இல்லையா? நாளைக்கு நமக்கு கல்யாணம் ஆனாக்கூட இப்படியொரு அசிங்கத்தை தயங்காம செய்வியா?” என்று கேட்டதும், அவளுக்கு ஆத்திரம் அதிகமானது.


“நான் ரொம்ப ஃபீல் பண்றேன் சித்து. நான் ஏன் உங்களை மாதிரி ஒரு அழகான ஆண்மகனா பிறக்காம போயிட்டேனு. இல்லைனா உங்க கால்ல விழுந்து இப்படி கெஞ்ச வேண்டி இருக்காது பாருங்க” என்றதும், அவன் அவளை கெட்டுப்போன சாப்பாடாய் மனப்பாத்திரத்திலிருந்து வீசியெறிந்தான்.


“உன்னை காதலிச்சதுக்காக வெட்கப்படுறேன் நந்தினி. உன்கூட பழகினதுக்காக அருவருக்கறேன். இனி நாம சந்திச்சிக்க வேணாம். தயவுசெஞ்சு உன் மூஞ்சில முழிக்கற அந்த கஷ்டத்தை எனக்கு கொடுக்காத” என்றான் திடமான குரலில்.


“அய்யோ சார்! இப்படி சொன்னா எப்படி? அந்த ஆத்மீகா கண்ணபிரான் பணத்தை கொடுக்காம நம்மளை விடப்போறதில்ல” என்று எச்சரித்தாள்.


இப்போது தான் அந்த ஆத்மீகா கண்ணபிரான் பணம் வேண்டாம்-அவன் தான் வேண்டும் என்றதாக சொன்னாள். இப்போது மீண்டும் பணத்தில் வந்து நிற்கிறாளே என்றவன் பார்வை அவளை துளைக்க,


அசராமல் பார்த்தவள், “ஒன்னு நாளைக்கு பணம் கொடுக்கனும். இல்ல நீங்க அவளோட வீட்டுக்கு போகனும். நான் கூட உங்களை விரும்பின பாவத்துக்கு என்னோட நகைங்களை வித்து அந்த பணத்தையெல்லாம் திருப்பிக் கொடுக்கலாம் நெனச்சேன். ஆனா இப்ப நீங்க யாரோ, நான் யாரோனு ஆகிட்ட பின்னாடி நான் ஏன் உங்களுக்காக அந்தப் பணத்தை கொடுக்கனும்? நான் ஜெயிலுக்கு போனா கண்டிப்பா உங்கப் பேரை இழுக்காம இருக்க மாட்டேன். உங்க அம்மா வேற முன்னாள் சின்னத்திரை நடிகை. மீடியாக்காரங்களுக்கு கேட்கவா வேணும்? உங்க வீட்டு பாத்ரூம் டூர் வரை சோசியல் மீடியால உலாவரப் போகுது. கங்ராட்ஸ்! அத்தோட அந்த கேஸ்ல இருந்து வெளிய வர நான் எந்த எல்…லைக்கு வேணா போவேனு இப்பவே உங்களுக்கு தெரியப் படுத்திடுறேன்.” என்று பல வகைகளில் எச்சரித்தாள்.


அதில் சற்று அரளத் தான் செய்தான் சித்தார்த்தன்.


தொடரும்…


நந்தினி போன்ற பெண்களை குறித்து உங்கள் கருத்து என்ன நண்பர்களே? சித்தார்த்தனின் அடுத்தகட்ட நகர்வு எவ்வாறு இருக்கும் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா?

இந்தக்கதை உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்யவும், கமெண்ட் செய்யவும், கதை லிங்கை ஷேர் செய்யவும் மறக்காதீர்கள் நண்பர்களே.
 
Last edited by a moderator:

Author: நிதனிபிரபு
Article Title: அசோகவனத்தில் ராமன் - 4
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
379
83
Chennai
Aww இப்பவே இந்த பிள்ளையோட சாயம் வெளுத்து போச்சி.....ரொம்ப சந்தோஷம்.....
இனி என்ன டா பண்ணுவா சித்து
 
  • Love
Reactions: STN-124

STN-124

Member
Jun 8, 2026
42
6
8
Madurai
Aww இப்பவே இந்த பிள்ளையோட சாயம் வெளுத்து போச்சி.....ரொம்ப சந்தோஷம்.....
இனி என்ன டா பண்ணுவா சித்து
அவன் பாவம் சிஸ்😂❤️