அசோகவனத்தில் ராமன் - 5

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,208
16,454
113
Germany
அத்தியாயம் 5


அன்றிரவு வீட்டிற்கு வந்ததும் இலகுவான டீசர்ட்-சார்ட்ஸிற்கு மாறிக்கொண்டு, ஹாட்பாக்ஸில் இருந்த இட்லிகளை தட்டிற்கு இடம் மாற்றிக் கொண்டிருந்தான் சித்தார்த்தன்.


இட்லிகளை போலவே அவன் நாசிகளிலிருந்தும் அனல் மூச்சுகள் வெளிவந்தன.


எவ்வளவு கேவலமாக தன்னை நினைத்திருக்கிறாள் அந்த ஆத்மீகா கண்ணபிரான் என்றவன் கொதித்துக் கொண்டிருந்தபோது, அவன் தங்கை பானுமதி, “அண்ணா எனக்கு மிச்சம் வைக்காம இட்லிங்க எல்லாத்தையும் நீயே சாப்பிட்டுடறதா தீர்மானமா? இன்னைக்கு உனக்கு என்னாச்சு? முகமே சரியில்ல” என்றவள் நேற்றைய கோபம் மறந்து அன்பாக வினவ,


அவளை குழந்தையாகவே பாவித்தவன், “ஒன்னுமில்ல பானு. நீ போய் உனக்கும் ஒரு பிளேட் எடுத்துட்டு வா. அதுல உன்னோடதை வைக்கறேன்” என்றதும், அவளும் எழுந்து சென்றாள்.


அவன் நடப்பதையெல்லாம் பகிர்வதற்கு அவளுக்கு இன்னும் பக்குவம் போதாது என்று நினைத்தான். ஆனால், அவள் அப்படியல்ல என்று விரைவிலேயே காலம் அவனுக்கு உணர்த்த காத்திருந்தது.


அவன் அந்த புதினா சட்னியில் இட்லியை தொய்த்து ஒரு வாய் தான் வைத்திருப்பான், “அண்ணா, சட்னி‌ நல்லாயிருக்காண்ணா? நானே யூடியூப் பார்த்து கஷ்டப்பட்டு வேற ஸ்டைல்ல சமைச்சது” என்றதும்,


“உன் சாப்பாட்டை நான் எ‌ன்னைக்கு குறை சொல்லியிருக்கேன் பானு? அதிரிபுதிரியா இருக்கு.” என்று பாராட்டவும்,


இதழை இரண்டு இன்ச் விரித்தவள், “அண்ணா..” என்று இழுத்தாள்.


“சொல்லு பானு என்ன?”


“அண்ணா அது வந்து எங்க காலேஜ்ல கல்ச்சரல்ஸ் நடக்க இருக்குதுனு முன்னாடியே சொன்னேன் இல்ல? நானும் அதுல குரூப் டான்ஸ் ஒன்னுல கலந்துக்கறேண்ணா. ஸ்டேஜ்ல எல்லாரும் ஒரே மாதிரி தெரியனும் இல்லையா? எனக்கு அந்த காஸ்ட்யூம் வாங்க ஒரு ரெண்டாயிரம் ரூபா கொடுத்தன்னா..” என்று இழுத்ததும், அவளை உறுத்து விழித்தான்‌ சித்தார்த்தன்.


“என்னண்ணா பார்வைலயே எரிக்கற?” என்றவள் கண்களை கசக்கியதும், அவனுள்ளம் இளகியது.


அந்த நந்தினியின் மீதும், ஆத்மீகா கண்ணபிரானின் மீதும் உள்ள கோபத்தை, காற்று கடத்தும் சீதோஷ்ண நிலையாக தான் அவளிடம் கடத்திக் கொண்டிருப்பது புரிய, “பானுமா புரிஞ்சிக்கோடா. அண்ணன் கிட்ட சுத்தமா காசு இல்ல. உன்னை ஒவ்வொரு தடவையும் கஷ்டப்படுத்தி பார்க்கறது அண்ணனுக்கே வேதனையா இருக்குடா. ஆனா, நம்ம எப்பவுமே இதே நிலைமைல இருக்க மாட்டோம். நிச்சயம் நம்ம நிலைமையும் ஒருநாள் மாறும். அப்ப அண்ணன் உனக்கு வேணுங்கற எல்லாத்தையும் இந்த‌‌ வீடே நிறையற அளவுக்கு வாங்கிக் குவிப்பேன்” என்று இரு கைகளையும் விரித்தபோது, பானு அவநம்பிக்கையோடு அவனைப் பார்த்தாள்.


இன்னும் இரண்டு நாட்களில் அவளின் காதலன் விஹானுக்கு பிறந்தநாள் வருகிறது. அவனது பரிசுக்கு குறைந்த பட்சம் இரண்டாயிரம் ரூபாயாவது செலவளிக்கவில்லையென்றால் அவளென்ன ஆதர்ச காதலி என்று மனம் சிணுங்கியது.


ஆனால், இவன் தான் நயாபைசா இல்லையென்று வருங்காலத்தை நினைத்து கற்பனை கோட்டை கட்டுகிறானே! தலைவிதியென்று அவள் சோர்ந்திருந்த நேரம் அவன் கை கழுவ சமையலறை சென்றான்.


அவனது அனாதரவான அலைபேசி டொய்ங் என்றது. பானுமதி எட்டிப் பார்த்தாள். திரையில் நந்தினியின் பெயரில் வாட்ஸப் செய்தி.


சித்தார்த்தனிடம் எவ்வித கல்மிஷப்புத்தியும் இல்லாததால், ஒளிவுமறைவின்றி தனது அலைபேசி கடவுஎண்களை தங்கையிடம் பகிர்ந்திருந்தான்.


அதை நினைவு வைத்து பூட்டிய திரைக்குள் நுழைந்தவள், வாட்ஸப்பில் நந்தினி, “நாளைக்கு நீங்க புரட்டின ரெண்டு லட்ச ரூபாயையும் எடுத்துட்டு முத்துரங்கம் பூங்காவுக்கு வந்திருங்க” என்று அனுப்பிய செய்தி இருக்கவும், உள்ளம் உலைக்களமானாள்.


அந்த நந்தினிக்கு கொடுக்க கையில் இரண்டு லட்ச ரூபாயை வைத்துக்கொண்டு, தன்னிடம் ஒரு ரூபாய் கூட இல்லையென்று சாதூர்யமாக நடித்துவிட்டானே இந்த அண்ணன்? அவனுக்குள் இந்த நயவஞ்சகத்தை புகுத்தியது அந்த நந்தினியாகத் தான் இருப்பாள். அவளும், அவள் பேச்சும் என்று முகத்தை சுளித்தாள் பானுமதி.


அப்போது அங்கு வந்த சித்தார்த்தன், “காலைல உனக்கு பிடிச்ச பிரிஞ்சி சாதமும், வெள்ளரிக்கா பச்சடியும் செய்றேன் பானு” என்று அன்பொழுக கூறவும், வலிய உதட்டைப் பிரித்து சிரித்தாள்.


நாளைய சமையலுக்கு தேவையான காய்கறிகளை சீராக நறுக்கி, செவ்வக வடிவ‌ டப்பாவில் இட்டு குளிர்சாதன பெட்டியினுள் தள்ளியவன், படுக்கையில் விழுந்த போது தான் நந்தினி அனுப்பிய வாட்ஸப் செய்தியை கவனித்தான்.


சற்று தீவிரமாக யோசித்துவிட்டு ‘சரி’ என்று பதிலனுப்பினான்.


அவனுக்கு அவனது தங்கைகளின் அமைதியான வாழ்வை நாசமாக்க விருப்பமில்லை. அதே சமயம் ஆத்மீகா கண்ணபிரானின் இச்சைக்கு இணங்கவும் பிரியமில்லை. இந்த இக்கட்டினால் தனது குடும்ப மானம் கப்பலேறாமல் தடுக்கும் வழியைத் தான் யோசித்துக் கொண்டிருந்தான்.


அவனுக்கு ஆத்மீகாவின் கட்டிலில் விழுவதை விட, காலில் விழுவது உத்தமமாகத் தோன்றவும், அதை செயல்முறை படுத்த விளைந்தான். ஆனால், ஆத்மீகா கண்ணபிரான் இரங்குவாளா?


மறுநாள் காலை முத்துரங்கம் பூங்கா சென்றபோது தனது சீருடையில் அல்லாமல், முழுக்கை நீலநிற பருத்தி சட்டையும், சாம்பல் நிற பருத்தி கால்சட்டையும் அணிந்து வந்திருந்தான் சித்தார்த்தன்.


அதிலும் அவன் அடர் பழுப்பில் பெல்ட்டும், லோஃபரும் அணிந்திருந்தது- ஒரு நேர்காணலுக்கு செல்வது போன்ற பிம்பத்தை உண்டாக்கியது நந்தினிக்கு.


எப்படித்தான் ஒரு சுருக்கம் கூட இல்லாமல் சட்டையை இவனால் பேண முடிகிறதோ என்று வழக்கம் போல் ஆச்சரியப்பட்டாள்.


எப்போதும் கலையாமல் இருக்கும் அந்த அடர் தலைமுடியை அவளுக்கு எத்தனைமுறை கோதிவிட ஆசையாக இருந்திருக்கிறது? விட்டானா?


மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட அந்த தாடி, மீசையைக்கூட இழுத்து விளையாட ஏங்கியிருக்கிறாளே. அவைகளைக்கூட தொட விட்டதில்லை.


“என்னை முழுசா ஆராய்ஞ்சி முடிச்சிட்டன்னா, நாம மேற்கொண்டு பேசலாம் நந்தினி” என்றதும், கோபத்தில் சிலிர்த்தாள் நந்தினி.


இவ்வளவு நாள் இலவு காத்த கிளியாக இருந்த தனக்கு எதுவும் இல்லையெனும் போது, தனக்கேன் இந்த ஆராய்ச்சி என்று உதறியவள், “தற்பெருமை‌ தான். என்ன முடிவு பண்ணியிருக்கீங்க?” என்றாள் புருவங்களை இடுக்கி.


“நேத்து எடுத்த முடிவுல எந்த மாற்றமும் இல்ல. ஆனாலும் ஒரு சின்ன நட்பாசையா அந்த ஆத்மீகா கண்ணபிரான் கால்ல விழுந்து கெஞ்சலாம்னு இருக்கேன்” என்றதும்,


சலிப்பாக, “உங்க இஷ்டம்” என்று தோள்களை குலுக்கியவள், அவனின் இருசக்கர வாகனத்திலேயே கண்ணபிரான் கார்மெண்ட்ஸிற்கு சென்றாள்.


இருவரையும் தனது அறைக்குள் வரவேற்று உட்கார வைத்தவளுக்கு யோசனையாக புருவங்கள் நெருங்கி மீண்டன.


அதே சமயம் அவனின் சாத்வீகமான முகமும், உடையலங்காரத்தில் நவீனமாக தன்னை வெளிப்படுத்திக்கொண்ட விதமும், அவன் மீதான மயக்கத்தை அவளுக்கு அதிகப்படுத்தியதே தவிர, இம்மியும் குறைக்கவில்லை. விழுங்கி விடுவது போல் பார்த்தாள்.


அதில் ஸ்டீம் பாத் எடுத்தாள் நந்தினி.


அவளை குளிர்விக்க ஆத்மீகாவின் கவனம் சிதறியது அலைபேசியால்.


“எஸ்கியூஸ் மீ. சொல்லுங்க சௌத்ரி. நோ நோ ஏஐனால ஆபரேட் ஆகற தையல் மிஷின்ஸ் சாம்பிளுக்கு பத்து வாங்கினா மட்டும் போதும். மத்தது எப்பவும் போல தான். நமக்கு மனுஷங்க தர்ற அந்த ஃபினிஷிங் அண்ட் சாட்டிஸ்ஃபேக்‌ஷனை நிச்சயம் மிஷினுங்க தர முடியாது.” என்று பேசிக்கொண்டே அவள் கண்ணடித்ததும், தூக்கிவாரிப்போட்டது சித்தார்த்தனுக்கு.


என்னவொரு அநாகரீகமான செய்கை? முறைத்தான். அவள் சட்டை செய்யவில்லை.


“தவிர்க்கவே முடியாத சமயங்களுக்கு மட்டும் தான் அது. இந்த ரெடிமேட் தோசை மாவு மாதிரி. ரேட் எல்லாம் ஓகே தான். குவாலிட்டி செக் பண்ணிட்டு, வாரண்டி பத்திலாம் விசாரிச்சிட்டு பர்சேஸ் பண்ணுங்க. உங்களுக்கு தெரியாதது இல்ல.” என்று பேசி முடித்துவிட்டு, “ம்! சொல்லுங்க. காதலனும் காதலியும் என்ன முடிவு பண்ணியிருக்கீங்க?” என்றாள் அமர்த்தலாக.


நந்தினி ‘நீயே பேசு’ என்று அவனிடம் கண்ஜாடை காட்டினாள்.


“மேடம் அது வந்து நான் நீங்க நெனைக்கற மாதிரி ஆள் கிடையாது. நான் ஒரு கௌரவமான குடும்பத்தை சேர்ந்த‌வன்”


“அப்ப என் குடும்பத்துக்கு கௌரவம் கிடையாதுனு சொல்றீங்களா மிஸ்டர் சித்தார்த்தன்?”


“இல்ல மேடம். அப்படி சொல்ல வரல.”


“வேறெப்படி?”


அவனது திணறலை ரசித்தாள்.


“இங்க பாருங்க மேடம்! விதண்டாவாதம் வேண்டாம். நாங்க பண்ணினது பெரிய தப்பு. அதுக்கு நீங்க ஆக்‌ஷன் எடுக்கறது ரொம்ப சரி. ஆனா எந்த சிட்டுவேஷன்ல நாங்க அந்த தப்பை செஞ்சிருப்போம்னு ஒரு நிமிசம் நீங்க யோசிச்சிப் பார்த்து எங்க மேல கருணை காட்டனும்”


“வேற?”


“எங்களை நீங்க மன்னிக்கனும்”


“அப்பறம்?”


“இப்போதைக்கு என்னால இந்த‌ ரெண்டு லட்சம் தான் புரட்ட முடிஞ்சது. அதை மறுக்காம ஏத்துக்கிடனும் நீங்க. இதுக்கப்பறம் மாசா மாசம் என் சம்பளத்துல முக்கால்வாசி டான்னு உங்க டேபிளுக்கு வந்திரும் மேடம். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நான் கடனை வட்டியோட அடைச்சிடுறேன். இது என்னோட சர்ட்டிஃபிகேட்ஸ். இதை தவிர்த்து என்கிட்ட உங்களுக்கு கொடுக்க நிலபுலன்னு எதுவும் கிடையாது மேடம். என் தங்கச்சிங்க வாழ்க்கையும் இதுல சம்பந்தப்பட்டிருக்கு. அதனால கொஞ்சம் இரக்கம் காட்டனும் எங்க மேல” என்று ஆண்மகன் உருக்கமாக பேசி முடிக்கவும், நெற்றி சுருங்கியது ஆத்மீகாவுக்கு.


“அப்ப அன்னைக்கு உங்கக்கூட கோவில்ல பார்த்தது உங்க தங்கச்சிகள்ல ஒருத்தர் தான் இல்லையா?”


“ஆமா. அது பானு”


“ம்? அப்ப சரி. நான் உங்க ரெண்டு பேரையும் மன்னிச்சிட்டேன். நீங்க போகலாம்.”


“மேடம் உண்மையாவா சொல்றீங்க?” என்று கிட்டத்தட்ட கத்தியிருந்தாள் நந்தினி.


“யெஸ், ஆனா உங்களுக்காக இல்ல மிஸ் நந்தினி. இவரோட பரிதாபமான முகத்துக்காக. மிஸ்டர் சித்தார்த்தன் மறுபடியும் என் முன்னாடி கையை பிசைஞ்சிட்டு நிற்கற சூழ்நிலைல கடவுள் உங்களை வச்சிடக்கூடாதுனு வேண்டிக்கோங்க. ஏன்னா ஒவ்வொரு தடவையும் என் இதயம் இரக்கத்தை சுரக்காது.” என்றதும், அவள் அதிசயப் பெண்மணியாய் தோன்றினாள் அவனுக்கு.


சித்தார்த்தன் நன்றி பெருக்கில் கைகளை கூப்பினான். நந்தினியும் தான். அவளுக்கு ஆத்மீகாவின் மாற்றம் மூளைக்குள் இசைக் கச்சேரியை நிகழ்த்திக் கொண்டிருந்தது.


ஆனாலும் தயக்கமாய், “மேடம் அப்படினா நான் தொடர்ந்து இங்க வேலை பார்க்கலாம் இல்லையா?” என்று கேட்க,


“அப்படியெல்லாம் மிஸ்டர் சித்தார்த்தன் என்கிட்ட கேட்கலையே” என்று அவன் முகத்தில் நிலைத்தது அவளது பார்வை.


அவன், “நான்‌ யாரையும் யார்கிட்டயும் திருடிட்டு வந்து பணம் தர சொல்லல மேடம்.” என்று ஆரம்பித்ததுமே,


படக்கென்று நாற்காலியிலிருந்து எழுந்த நந்தினி, “என்னவொரு நன்றி கெட்டதனம்! பாத்திரமறிந்து பிச்சையிடுனு சொல்றது கூட உங்களை மாதிரி ஆளுங்களை பார்த்து‌ தான் போல சித்தார்த்தன்” என்று விசத்தை கக்கினாள்.


அந்த அழகிய பாம்பின் தலையில் தன் வார்த்தை மகுடியால் நச்சென்று போட்டாள் ஆத்மீகா கண்ணபிரான்.


“மிஸ் நந்தினி! என்ன சொன்னீங்க? பாத்திரமறிந்து பிச்சையிடுனா? உங்களுக்கு இன்னொரு பழமொழி தெரியுமா? பிச்சையெடுக்குமாம் பெருமாளு. அதை பிடுங்கி தின்னுமாம் அனுமாரு. நீங்க மிஸ்டர் சித்தார்த்தனுக்கு கொடுத்தது என்னோட பணம். என் சொந்த உழைப்புல விளைஞ்சது. அதனால கொஞ்சம் அடக்கியே வாசிங்க. நீங்க சொல்லுங்க மிஸ்டர் சித்தார்த்தன்” என்றதும், முறுக்கிக்கொண்டு நின்றாள் நந்தினி.


“நந்தினி திருடினது தப்புனாலும், எனக்கும் நன்றியுணர்வுனு ஒன்னு இருக்கு மேடம். அதனால நீங்க நந்தினியை தொடர்ந்து வேலைல வச்சிக்கனும்” என்றதும்,


“உங்க விருப்பத்துக்கு மறுப்பு சொல்ற சக்தியை கடவுள் எனக்கிப்ப கொடுக்கல மிஸ்டர் சித்தார்த்தன்” என்று மோனநிலையில் சொன்னாள் ஆத்மீகா கண்ணபிரான்.


அவளுக்கு அவன் சிவன், பிரம்மா, விஷ்ணு மற்றும் இந்திரன் ஆகிய நால்வரின் கலவையாக தோன்றினான்.


நந்தினிக்கோ முகத்தில் எள்ளும் கொல்லும் வெடித்தன. ஆனால், ரோசம் கொள்ள முடியாதே. மாதம் ஒன்றரை லட்ச ரூபாய் சம்பளம் எனும்போது!


“ரொம்ப தாங்க்ஸ் மேடம். தாங்க்ஸ் சித்தார்த்தன்” என்றவள் வம்படியாய் இதழை இழுத்து வைத்து சிரிக்க,


எழுந்து நின்று மீண்டுமொருமுறை ஆத்மீகாவை நோக்கி கைகளை கூப்பிய சித்தார்த்தன், அவளின் அனுமதியோடு விடைபெறும் போது, “இதை எடுத்துட்டு போங்க மிஸ்டர் சித்தார்த்தன்” என்றாள்.


அவன் இரண்டு எட்டில் வந்து சான்றிதழ்களை எடுத்தான்.


“இதையும் தான்” என்று பணத்தை காண்பித்தாள்.


அவன் தயங்கினான். மறுகணம் அருகிலிருந்த அவர்களின் அறக்கட்டளைக்கு சொந்தமான உண்டியலில், இரண்டு லட்சத்தையும் போட்டான்.


மரியாதையாக அவளிடமிருந்து விடைபெற்றான்.


கண்ணாடிப்பெட்டிக்குள் தெரிந்த நோட்டுக்கட்டுகளையே ஆச்சரியமாக வெறித்துக் கொண்டிருந்தாள் ஆத்மீகா கண்ணபிரான்.



தொடரும்…
 
Last edited by a moderator:

Author: நிதனிபிரபு
Article Title: அசோகவனத்தில் ராமன் - 5
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
379
83
Chennai
அட ஆத்மி.....இந்த நல்ல உள்ளத்தை உன் கிட்ட எதிர்பார்க்களையே.....
எப்படியோ இந்த சந்து பேய் கிட்ட இருந்து சித்து எஸ்கேப் ஆகிட்டான்....
ஓ நோ..... விஹான் - பானு விசயம் இருக்கு இல்ல
 
  • Love
Reactions: STN-124

STN-124

Member
Jun 8, 2026
42
6
8
Madurai
அட ஆத்மி.....இந்த நல்ல உள்ளத்தை உன் கிட்ட எதிர்பார்க்களையே.....
எப்படியோ இந்த சந்து பேய் கிட்ட இருந்து சித்து எஸ்கேப் ஆகிட்டான்....
ஓ நோ..... விஹான் - பானு விசயம் இருக்கு இல்ல
😍😍😍 ஆனா ஆத்மீகா கிட்ட எஸ்கேப் ஆக முடியாது சிஸ்😂