அசோகவனத்தில் ராமன் - 12

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,208
16,454
113
Germany
அத்தியாயம் 12



அன்று வயிற்றுப்பிள்ளையோடு மென்னடை போட்ட லீலாவதியை ஆதுரமாக தழுவின சித்தார்த்தனின் விழிகள்.


பூ வேலை செய்யப்பட்ட- வெளீர்பச்சை நிற- டிஸ்யூ சேலை கட்டியிருந்தாள் அவள். ரவிக்கையோ பாதாம் பச்சை சாட்டின் துணியில் தைக்கப்பட்டதாய். கழுத்திலும் கையிலும் ஒற்றை அடுக்காய் ஓடிய மரகதங்கள் கூட அவளின் அழகிற்கு தொண்டு புரிபவையாய்.


பக்கத்து அரண்மனையில் விருந்து ஒன்றில் கலந்து கொண்டு திரும்பியிருந்தாள். அவளின் தேர்வுகளை ரசித்துக்கொண்டே வந்தவனின் மனம் ஆத்மீகாவை அவளிடத்தில் பொருத்திப் பார்த்தது.


அவளின் நிறத்திற்கு எடுப்பாய் தான் இருக்கும் இப்புடவை என்று மனப் பட்டம் உல்லாசமாய் பறந்தபோது, ஆவேசமாய் மாஞ்சாவை பிடித்து நிறுத்தினான் சித்தார்த்தன்.


மீண்டும் லீலாவதியை பார்த்தான்.


பவித்திரமான உள்ளம்- அமைதியான அழகு- இவளை ஏன் என்னை போல் சோதித்தான் அந்த இறைவன் என்று கலங்கினான்.


அவள், “இறைவனுக்கு சில நேரம் கருணை இருக்குறதில்ல சித்.” என்றதும், அவன் வெலவெலத்தான்- மனதை படிக்கிறாளோ என்று.


“நேத்து நடந்த நிலசரிவை தான் சொல்றேன். எதிர்பாராதது. ஒரு குடும்பமே அழிஞ்சுப் போச்சு பாருங்க.”‌ என்றதும் தான் ஆசுவாசப்பட்டான்.


அவளின் இந்த இரக்கக்குணம் அவன் அறிந்ததே.


“இந்த மாதிரி நேரத்துல நீங்க நியூஸ் பேப்பர் வாசிக்காம இருக்கறது நல்லதுனு நெனைக்கறேன் மேடம்.” என்றான் நாசுக்காக.


“சரி தான். ஆனா சிலர் முகத்தை வாசிக்கற திறமையை கொடுத்துட்டானே கடவுள். அவன் மனசை வாசிக்கற திறமையையும் கொடுத்திருக்கலாம்.” என்றதும்,


“இல்ல நீங்க சொல்றது புரியல” என்றவனது இமைகள் இடுங்கின.


அவளுக்கு குழந்தைத்தனமாய் அவைகளை நீவிவிட தோன்றியது.


“உங்க தங்கச்சி பானுவை பத்தி தான் சொல்றேன். எனக்கு அவ அவளா இல்லையோனு சந்தேகம். அவ சில நேரம் தன்னை மறந்து தன் துடுக்குதனத்தை வெளிக் காமிச்சிடுறா தெரியுமா? அது தான் அவ இயல்புனு நெனைக்கறேன். அவ எதனாலயோ பயங்கரமா காயப்பட்டிருக்கனும். தன் சுயத்தை இழந்திருக்கனும். நான் சொல்றது சரியா சித்?” எனவும், அவன் அந்த கல்மேடையில் உட்கார்ந்தவளை பிரமிப்புடன் பார்த்தான்.


இவள் இந்த அரண்மனையை மட்டுமல்ல, இந்த உலகையே கட்டி ஆள தகுதியானவள் என்று நினைத்தான்.


“பதில் சொல்லலையே. நீங்க விரும்பினா சொல்லலாம். நான் கட்டாயப் படுத்தல.”


இப்படி சொன்னால் எப்படி அவனால் சொல்லாமல் இருக்க முடியும்? அந்த ஆத்மீகா கண்ணபிரானாயானால், கிணற்றில் தோணி போடுவது போல் கழுத்தில் கறார்தனத்தை போட்டு பதிலை இழுத்திருப்பாள். அய்யோ! மறுபடியும் அவள்.


“பானு ஒருத்தரை விரும்பினா. ஆனா அவர் அவளை லவ் பண்ணலைனு சொல்லிட்டாரு. அதான் அவ அவரை மறக்க முடியாம கஷ்டப்படுறா.” -பாதி உண்மையை கூறினான்.


“அடப்பாவமே! பானு பிழைக்கத் தெரிஞ்ச பொண்ணுனு நெனச்சனே! ஈஸியா நினைக்க தெரிஞ்ச விசயத்தை ஈஸியா மறக்கவும் தெரியனும் இல்லையா சித்? நான் அவளை மாத்தறேன்” என்றாள்.


அவன் உணர்ச்சி வசப்பட்டு அவளின் கரத்தை பற்றினான்.


அவளும் ஆறுதலாய் தன் கரங்களுக்குள் அதனை அடக்கினாள். கதகதத்தது.


“லீலா!” -காதலாய் கேட்ட குரலில் திரும்பி பார்த்தாள் அவள். அது அவள் முன்னாள் கணவன் சந்திரன்.


அவள் மின்சாரத் தாக்குண்டவளாய் நின்றாள்.


“லீலா, ப்ளீஸ் லீலா. என்னை மன்னிச்சிடு லீலா. ஐ லவ் யூ ஸோ மச் லீலா. எனக்கு நீயும் நம்ம குழந்தையும் வேணும் ப்ளீஸ்” என்று அந்த அகன்ற தோள்களையும், கச்சிதமான முகவெட்டையும் கொண்ட இளைஞன் கெஞ்சிக் கொண்டிருந்த போது,


“பாடி கார்ட்ஸ்!” என்றொரு அதட்டல் நிறைந்த குரல் அஞ்சலிதேவியிடமிருந்து வந்தது.


அரண்மனை காம்பவுண்டிற்குள் எகிறி குதித்திருந்தவன் திகைப்பூண்டை மிதித்தாற்போலானான்.


அவரின் கத்தலில் அவனை இழுத்துச் சென்றார்கள் அந்த ஹல்க்குகள்.


லீலாவதியின் உடலில் அப்படியொரு நடுக்கம். சற்று முன்னிருந்த ஏகாந்தம் தொலைதூரமானது. அவள் முகம் கலவரத்தை பூசி நின்றது.


சித்தார்த்தன் தான் உடனே செயல்பட்டு அருகில் நிழற்குடை ஒன்றில் இருந்த தண்ணீரை எடுத்து வந்து தந்தான்.


“தாங்க்ஸ்” என்றபடி குடித்தாள்.


அவர்கள் இருவரையும் மேலே பால்கனியிலிருந்து கவனித்துக் கொண்டிருந்த அஞ்சலி தேவி, அவர்களின் ஜோடி பொருத்தத்தை மெச்சிய தருணம் தான் சுற்று சுவற்றின் மீது எகிறி குதிக்கும் சந்திரனை கண்டார்‌.


உடனே கீழே ஓடி வந்தவர், அதற்குள் அவன் அவளை சமீபித்து பேசிக்கொண்டிருந்ததை கண்டதும், எரிமலையாகிவிட்டார்.


தற்போது பேத்தியின் தொய்ந்த கோலத்தை பார்த்து அவருக்கு ஆத்திரமான ஆத்திரம்.


“இது என்ன கோழைத்தனம் லீலா? இல்ல பலவீனமா? அவன் தினமும் இப்படி முன்ன வந்து நிற்கத் தான் போறான். கண்ணை மூடிட்டே இருக்கப்போறியா? இல்ல கறந்த பாலை மறுபடியும் காம்புல புகுத்த நினைக்கிறியா?” என்றதும், அவள் விழுக்கென்று நிமிர்ந்தாள்.


“ஒரு ஒழுக்கங்கெட்டவனை ஒருகாலும் நான் ஏத்துக்க மாட்டேன் பாட்டி. ஜெர்மன் பழமொழி ஒன்னு இருக்கு. நோய் குணமாகாதுனு தெரிஞ்ச பின்னாடி மருந்தை செலவளிக்கறது வீண்-ணு. நான் எப்பவோ என் காதல் நோயாளியை கொன்னுட்டேன் பாட்டி. அப்படியிருக்க..” என்றவள் மூச்சு வாங்க,


“எனக்கு தெரியும் நீ புத்திசாலினு. உ‌ன் எதிர்காலம்‌ நிச்சயம் அந்த சந்திரன் இல்லைனு மட்டும் மனசுல வச்சிக்கோ” என்று அறிவுறுத்திவிட்டு போனார்.


அவள் இதய படபடப்பு நிற்கவில்லை.


“இது எத்தனையாவது தடவையா அவர் உங்களை சந்திக்க ட்ரை பண்றது?” என்றான் சித்தார்த்தன்.


“மூணாவது தடவை” என்றவள் குரல் கமறியது.


“ஈஸியா நினைக்க தெரிஞ்ச விசயத்தை ஈஸியா மறக்கவும் தெரியனும் இல்லையா?”- சற்றுமுன் அவள் கூறியது தான். ஆனால், அவன் திருப்பி கூறினான்.


அவளுக்கு இனி அந்த சந்திரன் எப்போதும் வேண்டாம். ஆனால், தொடர்ந்து வந்து அவன் அவளை ஆட்டம் காண வைப்பது தான் சங்கடமாக இருந்தது.


“என் கதை வேற சித்” என்றாள்.


“நான் அப்படி நினைக்கலைங்க” என்றதும், அவளுக்கு சுருக்கென்றது.


“நீங்க நினைக்கறது எப்பவும் நானாக முடியாது சித். நான் நினைக்கறது மட்டும் தான் நான்” என்று ஆணித்தரமாக சொல்லிவிட்டு போனாள்.


அவளின் அக்கர்வம் அவனுக்கு பிடித்திருந்தது.


அதன்பின்னான நாட்களில் சொல்லியபடியே பானுமதியை தேற்றி, பழைய நிலைக்கு கொண்டு வந்தாள் லீலாவதி.


அவளை கல்லூரிப் படிப்பை தொடரும்படி ஊக்கி, தொலைதூர கல்வி முறையில் பயிலுவதற்கு ஏற்பாடும் செய்தாள்.


அதில் தனது தோளை அவளுக்கு செருப்பாகத் தைத்து போடவும் தயாராகயிருந்தான் சித்தார்த்தன்.


அவனின் மகிழ்ச்சி அவளின் உள்ளத்தை பூவில் நிறையும் தேனாய் தித்திக்கச் செய்தது.


நாட்களும் அதன்போக்கில் மலர்ந்து உதிர, லீலாவதிக்கு ஒரு நாள் பிரசவ வலி கண்டது.


அவள் துடித்த துடிப்பில் இதயம் பிளந்தது சித்தார்த்தனுக்கு.


ஆனால், பெரும் போராட்டத்தின் முடிவில் அவள் இவ்வுலகிற்கு கொண்டு வந்த பூமகள் இருக்கிறாளே, அவள் அப்சரஸின் குழந்தை பருவம்!


அஞ்சலிதேவிக்கு அந்த புது வரவு தனது பேத்தியின் சாயலில் இருந்ததில் பெரு மகிழ்ச்சி.


ஊருக்கே இனிப்பு வழங்கி கொண்டாடினார். ஆனால், குழந்தையின் தகப்பன் சந்திரன் குழந்தையை காணத் துடித்தபோது மட்டும் பெரிய மறுப்புதிரையை இழுத்துப்போட்டார்.


தகப்பன் பலமுறை குழந்தையை காண முயற்சி செய்தான். சட்டப்போராட்டங்கள் மேற்கொண்டான். பணத்தால் அனைத்தையும் தகர்த்தார் அஞ்சலி தேவி.


லீலாவதியோ சித்தார்த்தனின் மீதிருந்த கரிசனம்- காதல் என்ற புரிதலுக்கு வந்தாள்.


ஆனால், அதை அவனிடம் வெளிப்படுத்தத் தான் அவ்வளவு தயக்கம்.


அவளுக்கு தனது பாட்டி தனது காதல் ரகசியம் தெரிந்தும் எப்படி அமைதியாய் இருக்கிறார் என்று சந்தேகமாய் இருந்தது. ஆனாலும், அவர் மறைமுகமாய் பச்சைக்கொடி காட்டியதே அவளுக்கு பெரு நிம்மதி.


தனது மகள் ஈஷாவிற்கு ஒரு வயதான போது ஒரு வழியாய் சித்தார்த்தன் மீது தனக்கு ஏற்பட்ட காதலை அவனிடம் தெரிவித்துவிட்டாள் லீலாவதி.


அவன் விதிர்த்தான் முதலில். பின், அவள் மேல் தனக்கு அந்த மாதிரி எண்ணமெதுவும் இல்லையென்று நாசுக்காய் மறுத்துவிட்டான்.


அவள் அவனது உணர்வுகளுக்கு மதிப்பளித்தாள். அவனை தொந்தரவு செய்யவில்லை. அதே சமயம் காதலிப்பதையும் நிறுத்தவில்லை. அவன் தனக்காக மாறுவான் என்று காத்திருந்தாள்.


ஐந்து வருடங்கள் கழித்து….



அந்த குறும்புக்காரி பள்ளி ஆண்டுவிழாவிற்காக தயாராகி நின்றாள்.


சித்தார்த்தனிடம் சென்று, “அங்கிள் நீங்க கண்டிப்பா இன்னைக்கு எங்க ஸ்கூலுக்கு வரனும் சரியா?” என்று அன்பு கட்டளையிட்டாள்.


சித்தார்த்தன் குனிந்து நின்று, “உத்தரவு இளவரசி” என்றான்.


அவள் அவன் கன்னத்தில் முத்தமிட்டு, “ஸ்கூலுக்கு டைமாச்சு. பாய்” என்று அரண்மனைக்குள் ஓடினாள்.


தூரத்தில் நின்று அவர்கள் பாசபிணைப்பை கண்ட லீலாவதிக்கு நெஞ்சம் நிறைந்தது.


அவளை காரில் பானுமதியுடன் அனுப்பிவைத்தாள்.


அதே பள்ளியில் தான் பானுமதியும்- தனது பட்டப்படிப்புகளை முடித்துவிட்டு வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாள்.


சென்ற வருடம் தான் அந்த பள்ளியையும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார் அஞ்சலி தேவி. அவருக்கு பேத்தியின் மகள் தங்களுக்கு சொந்தமான பள்ளியில் தான் படிக்க வேண்டும் என்று அகந்தை.


அவர் பள்ளியில் அன்றைய ஆண்டுவிழாவின் போது அனைத்து மாணவ மாணவிகளையும், ஆசிரியப் பெருமக்களையும் வாழ்த்திவிட்டு, அடுத்த கல்வி ஆண்டிலிருந்து பள்ளியில் அனைத்தும் தரமிக்கதாகவும், முன்னேற்றத்தை வலியுறுத்துவதாகவும் இருக்கும் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு போனார்.


கடந்த ஒரு வருடமாக பள்ளியின் கட்டமைப்பை பலப்படுத்தி, அதன் தோற்றத்தையே உலகத் தரத்தில் மாற்றியமைத்தவர், பிள்ளைகளின் சீருடைகளையும் மாற்ற வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். அதற்கு அவர் தேர்வு செய்த கார்மெண்ட்ஸ், கண்ணபிரான் கார்மெண்ட்ஸ்.


பெருமதிப்பு மிக்க அஞ்சலிதேவியை அவரின் வேண்டுகோளுக்கிணங்க, அவரின் அரண்மனைக்கே சென்று சந்தித்தாள் ஆத்மீகா கண்ணபிரான்.


பொதுவாக ஊட்டியில் பணக்காரர்களின் வாரிசுகள் மட்டுமே தங்கிப்‌ படிக்கும் போர்டிங் ஸ்கூல்களும், கான்வென்டுகளும் அதிகம் என்பதால், அவளது கார்மெண்ட்ஸ் ஏற்கனவே பிரசித்திபெற்றதாய் இருந்தது.


அதனால் தைரியமாய் அந்த வரவேற்பறையில் அவள் கால்‌ மேல் கால் போட்டு அமர்ந்திருந்தபோது, அவளின் அந்த தோரணை மிகவும் பிடித்திருந்தது அஞ்சலிதேவிக்கு.


ஆத்மீகாவோ தனது வியப்புகளை தனக்குள் மறைத்தபடியே அமர்ந்திருந்தாள். பின்னே எவ்வளவு பிரம்மாண்டத்தை உள்ளடக்கி இருந்தது அந்த வரவேற்பறை! அவள் வாழ்க்கையில் அத்தனை பெரிய சான்டீலியரை அங்கு தான் பார்த்திருக்கிறாள்.


இருக்கைகளின் குஷன்களோ மொசுமொசு முயல்குட்டி போல் அத்தனை மென்மை. தரையில் பளபளத்த பளிங்குகள் ஸ்பெயினின் பெருமையை சொன்னன. அவர்கள் வழங்கிய சிலோன் டீயின் சுவையில், வேறு உலகிற்கே சென்று வந்தாள் அவள்.


தனக்கான உயர்ந்த சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த அஞ்சலிதேவி பெரிய டேப்-இல் அவள் காட்டிய சீருடைகளில் தனக்கு பிடித்த ஒன்றை தேர்வு செய்தார்.


அதனை அட்டகாசம் என்ற ஆத்மீகா, அந்த நிறங்கள் சுட்டும் அம்சங்களை விவரித்தாள்.


“க்ரே கலர்ல ஸ்கர்ட் அண்ட் வெயிஸ்ட் கோட்- மெச்சூரிட்டி அன்ட் பேலன்ஸ் இன்டிகேட் பண்ணுது மேம். வொயிட் கலர்ல சர்ட்- ஃப்ரெஷ் அன்ட் க்ளாரிட்டி இன்டிகேட் பண்ணுது மேம். வொயிட் அண்ட் ரெட் மிக்ஸ்ல லைன்ஸ் போட்ட நேவி ப்ளூ டை- இதுல நேவி ப்ளூ ஃபார் டிஸிப்ளீன், ரெட் கலர் ஃபார் எனர்ஜி அன்ட் பேஸன். உங்க சாய்ஸஸ் எல்லாமே தனித்துவமா இருக்கு மேம்” என்றாள்.


அவள் தொழிலில் மிகப்பெரும் கெட்டிக்காரி என்பதை புரிந்து கொண்டார் அஞ்சலி தேவி. புன்னகைத்தார்.


“பாலி விஸ்காஸ் மெட்டீரியல் இந்த யூனிஃபார்ம்ஸ்க்கு ஆப்ட்டா இருக்கும் மேம். பாலிஸ்டர் கூட கம்ப்பேர் பண்ணும் போது இது ஹண்ட்ரெட் பெர்சண்டேஜ் ப்ரீத்தபிள். இந்த மெட்டீரியல்ஸ்க்கு மினிமல் அயர்னிங்கே போதும் மேம். நார்மல் காட்டன் மாதிரி சுருங்காது. கொஞ்சம் பாலிஸ்டர் தன்மையும் இருக்கதால கிட்ஸ் ப்ளே பண்றப்போ கிழியுற சான்ஸும் கம்மி.” என்றதும், அதுவே இருக்கட்டும் என்றார் அஞ்சலிதேவி.


“அப்பறம் மேம் ஒரு எல்கேஜி குழந்தைக்கு ஒரு யூனிஃபார்மோட காஸ்ட் குறைஞ்சது ஆயிரத்தி ஐந்நூறு ரூபா வரை வரும். இதே மாதிரி ஸ்போர்ட்ஸ் ட்ரெஸ், யோகா ட்ரெஸ், ஸ்விம்மிங் காஸ்ட்யூம்னு எல்லாம் நம்மக்கிட்ட அவைலபிள் மேம். டீச்சர்ஸுக்கு கூட நீங்க பிரியப்படுற மாதிரி ஓவர் கோட் ரெடி பண்ணலாம் மேம்.” என்று வியாபாரத்தில் கவனமாயிருக்க, அவளின் கம்பீரமும், புத்திசாலித்தனமும், ஏன் வார்த்தைகளின் தெளிவும், அவளை ரசிக்க செய்தன அஞ்சலி தேவியை.


அவளை பற்றி அறியும் பொருட்டு, “எங்க ஸ்கூலை பத்தி என்ன நினைக்கறீங்க மிஸ் ஆத்மீகா கண்ணபிரான்? உங்க வீட்டு குழந்தைகளை இது மாதிரி ஒரு ஸ்கூல்ல சேர்ப்பீங்களா?” என்று முறுவலுடன் கேட்டார்.


“என்ன மேம் இப்படி கேட்டுட்டீங்க? கூகுள்ல பார்த்தேன் மேம். ஸ்கூல் உங்க அரண்மனை மாதிரி இருக்கு. இது மாதிரி ஒரு ஸ்கூல்ல சேர்க்கறது தான் ஒவ்வொரு பேரண்ட்ஸோட கனவாவே இருக்கும். என் பொண்ணுக்கு நான் சென்னைல அட்மிசன் வாங்கலைனா, கண்டிப்பா இங்க தான் சேர்த்திருப்பேன்” என்றதும், பெருமிதம் கொண்டவர்,


“உங்களுக்கு குழந்தைங்க இருக்கா? எத்தனை?” என்றார்.


“ஒன்னே ஒன்னு; கண்ணே கண்ணு” என்று வெட்கப்புன்னகை சிந்தினாள்.


“அவளுக்கு கடவுளோட ஆசீர்வாதம் கண்டிப்பா இருக்கும்.” என்றார் அஞ்சலி தேவி.


தாய் ஆமோதிப்பது போல் புன்னகைத்தாள்.


அவர், தனது உதவியாளரிடம் திரும்பி, “சித்தார்த்தனை வரச் சொல்லுங்க” என்றதும், அவள் தோள்கள் நிமிர்ந்தன.


அவள் இத்தனை வருடம் கனவுகளில் சந்தித்தவன்- கற்பனைகளில் சல்லாபித்தவன்- இங்கா இருக்கிறான்?



தொடரும்…


லீலாவதியின் காதல் கைகூடுமென்று நீங்கள் நினைக்கிறீர்களா நண்பர்களே?

ஓரிருவரை தவிர்த்து யாரும் லைக், கமெண்ட் செய்ய முன் வர மாட்டேன் என்று இருக்கின்றீர்கள் நண்பர்களே! இனியாவது அந்த விரதத்திலிருந்து வெளியேறுவீர்கள் என்று நம்புகிறேன்.
 
Last edited by a moderator:

Author: நிதனிபிரபு
Article Title: அசோகவனத்தில் ராமன் - 12
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Members online