அசோகவனத்தில் ராமன் - 20

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,208
16,454
113
Germany
அத்தியாயம் 20


மறுநாள் காலை கிங்லாண்ட் தேயிலை தோட்டத்தை சுற்றிப் பார்ப்பதற்காக, அந்த அரண்மனைக்கு வந்திருந்தாள் ஆத்மீகா கண்ணபிரான். நேற்று அவளை தன்னுடன் அழைத்துச் செல்வதாக லீலாவதி கூறியிருந்ததால் அவளுக்காக வரவேற்பறையில் காத்திருந்தாள்.


அவள் வந்த செய்தியறிந்ததும், லீலாவதி சங்கடமாக உணர்ந்தாள். இரவு முழுவதும் சித்தார்த்தனின் துரோகத்தை நினைத்து மனதிற்குள் வெம்பித் தவித்தவள், தற்போது வெளியே செல்லும் நிலையிலேயே இல்லை.


ஆனால், ஆத்மீகா சிரத்தையெடுத்து கிளம்பி வந்திருப்பதால் அலுப்பு பார்க்காமல் தயாரானாள்.


அவளுக்கு ஆத்மீகாவுடன் வெளியே செல்லும்போதாவது மனம் சற்று அவனை பற்றி நினையாமல் இருக்குமோ என்றொரு எண்ணம்.


அவள் கீழே வந்ததும் தனது லாண்ட் க்ரூஸரில் ஆத்மீகா கண்ணபிரான், சித்தாரா மற்றும் விஹானை ஏற்றிக்கொண்டு கிங்லாண்ட் நோக்கிச் சென்றாள்.


அப்போது காரின் ஸ்டீரியோவில் பாடல் ஒன்றை ஓடவிட்டாள்.


“இஞ்சி இடுப்..பழகா

மஞ்ச சிவப்..பழகா

கள்ள சிரிப்..பழகா

மறக்க மனம் கூடு..தில்லையே!” என்று அவர்களின்‌ செவிப்பறைகள் அதிர்ந்தன.


முன்னிருக்கைகளில் உட்கார்ந்திருந்த இரண்டு பெண்களுக்கும் சித்தார்த்தனின் நினைவு தான்.


என்ன ஆத்மீகா கண்ணபிரான் பாடலை குதூகலமான மனநிலையில் கேட்டாள் என்றால், காரை ஓட்டிக்கொண்டிருந்த லீலாவதியோ காதல் தோல்வியடைந்த மனநிலையில் கேட்டாள்.


நீண்டநேரம் ஜனசந்தடியில் சென்ற கார் ஒரு முனையில் திரும்பி ‘கிங்லாண்ட் டீ எஸ்டேட்’ என்று பதாகை வைக்கப்பட்ட சாலையில் பயணித்தபோது, புதினா சட்னிக்குள் மூழ்கியவர்கள் போலானார்கள் புதிதாய் வந்தவர்கள்.


தேயிலைத் தோட்ட மேலாளர் குறித்துக் கொடுத்த இடத்தில் இன்று தேயிலை கத்தரித்துக் கொண்டிருந்தார்கள் உள்ளூர்

வாசிகள்.


அவர்களின் தலையைச் சுற்றி கிளியோபாட்ரா ஹேர் ஸ்டைலில் ஒரு துண்டை கட்டியிருந்தார்கள். அது முதுகிலிருக்கும் கூடையின் கைப்பிடி தலையிலிருந்து நழுவாமல் இருப்பதற்காக. காலிலோ பூச்சிப்பட்டை எதுவும் கடிக்காமல் இருக்க முழங்கால் வரையிலுமான பூட்ஸ். சிலர் ஆண்களின் முழுக்கை சட்டைகளை சேலைக்கு மேல் அணிந்திருக்க, சிலர் கம்பளி ஆடைகளை அணிந்திருந்தார்கள்.


சிலரின் முதுகிலோ கத்தரித்த தேயிலைகளை சேமிக்க சாக்கு பைகள்‌.


அவர்கள் ஒவ்வொருவரையும் ஆச்சரியமாக பார்த்தாள் குழந்தை சித்தாரா.


அதுவும் அவர்களின் கையிலிருந்த தேயிலை வெட்டிகள் குப்பை அள்ளும் முறத்தில் கத்தரியை ஒட்ட வைத்தது போல் இருந்தது.


தேயிலையின் நுனி இலைகளாக பார்த்து அவர்கள் கத்தரித்தெடுப்பதே ஒரு கலையாக இருந்தது.


லீலாவதியை கண்டதும் மலர்ந்த முகமாக வணக்கம் வைத்தார்கள்.


லீலாவதி அங்கு எத்தனை‌ ஏக்கரில் தேயிலை பயிரிடப் பட்டிருக்கிறது என்று சொன்ன கையோடு, ஒரு தேயிலைச்செடியின் நுனி இலையை பிடுங்கி காட்டி, “இது தான் தேயிலைக்கான பதம். இது மாதிரி இலைகள் தான் ஃபேக்டரிக்கு அனுப்பப்படுது. மத்த எஸ்டேட்ட கம்பேர் பண்ணும் போது நாங்க குறைஞ்ச அளவுல தான் பூச்சிக்கொல்லி மருந்துங்க யூஸ் பண்றோம் மிஸ் ஆத்மீகா. சராசரியா ஒரு லேடி மட்டுமே ஒரு நாளைக்கு அம்பது கிலோ வரைக்கும் தேயிலை கட் பண்றாங்க. சீசன் டைம் நூறு கிலோ வரைக்கும் போகும். அதுக்கு தகுந்த மாதிரி அவங்களுக்கு கூலியும் கொடுத்துருவோம். எங்க தாத்தா காலத்துலயே இவங்களுக்கெல்லாம் சொந்தமா வீடெல்லாம் கட்டி கொடுத்திருக்கோம். இவங்க பிள்ளைங்களோட ஸ்கூல் ஃபீஸ், மெடிகல் எக்ஸ்பென்ஸஸ் எல்லாமே நாங்க தான் பார்த்துக்கறோம். அதான்‌ எங்க மேல ரொம்ப பெரிய மரியாதை வச்சிருக்காங்க. இந்த பக்கம் இருக்கு பாருங்க டீ லீவ்? இதை நேத்து தான் அறுவடை பண்ணாங்க‌. இனி இது வளர்ந்து வர பனிரெண்டு நாள் ஆகும். அதுக்குள்ள மத்தப்பக்கம் எல்லாம் முடிச்சிட்டு வந்துருவாங்க. இது இப்படியே ரொட்டினா நடக்கும்.” என்று பேசிக்கொண்டே நடந்தாள்.


பின் தொடர்ந்த ஆத்மீகா கண்ணபிரான், “உங்க டீத்தூள் கொஞ்சள் டேஸ்ட் கம்மி தானோ?” என்றாள்.


திகைத்து திரும்பியவள், “ஏன்?” என்றாள்.


“இல்ல உங்க வீட்டு டீ பார்ட்டில சிலோன் டீ தானே‌ சிந்தி சீரழிஞ்சது? அதான் கேட்டேன்” என்றதும்,


சிறிதும் அலட்டாமல் பதிலளித்தாள் லீலாவதி: “இக்கரைக்கு அக்கரை பச்சை. ஆனா தமிழ்நாட்டுலயே நம்பர் ஒன் டீத்தூள்னா அது நம்மளோடது தான்” என்று பெருமையாக பேசிக்கொண்டே நடந்தாள்.


வழியில் ஓரிருவருடன் பேசிக்கொண்டு வேறு நின்றாள்.


அப்போது தனியாக செல்ல ஆசைப்பட்டு முன்னோக்கி நடந்தாள் ஆத்மீகா.


விஹான் வேறு திசையில் சென்று செல்ஃபி எடுத்துக் கொண்டிருக்க, அவளின் மகள் சித்தாரா அவளை பின் தொடர முயன்றாள். அதில் தேயிலை இலைகள் சில அவளின் உள்ளங்கையில் கீறின.


“மம்மி” என்றவள் சிணுங்க, துடித்துவிட்டாள் தாய்.


“ஒன்னுமில்ல சித்தாரா. வீட்டுக்கு போனதும் பேன்டெயிட் போட்ரலாம். குட் கேர்ள் அழக்கூடாதென்ன?” என்று சமாதானப்படுத்தி கீழிறக்கி விட்டாள்‌.


மகள் மேல் அவள் வைத்திருக்கும் பாசத்தை தூரத்திலிருந்து கண்டபடியே சக தாயாய் கனிவு கொண்டாள் லீலாவதி.


ஆனால், அந்த கனிவு நொடியில் மாயமானது. ஏனெனில், வேறொரு திசையிலிருந்து ஆத்மீகாவை நோக்கி கோபமாக வந்து கொண்டிருந்தான் சித்தார்த்தன்.


அவள் கண்கள் அவனையும் தாண்டி சென்றபோது அகல விரிந்தன. அதுவொரு காட்டுப்பன்றி.


அவளுக்கு பயத்தில் இதயத்துடிப்பு அதிகரித்தது.


அப்பன்றியின் வேகம் நிச்சயம் அவனை தரையில் சாய்த்து, இரையாய் வேட்டையாடிவிடும் என்பதை, அத்தனை தொலைவிலும் அவளால் எளிதாய் ஊகிக்க முடிந்தது.


மிரட்சியாய் அதனை அளவிட்டாள். அதன் கருத்த உடல் முழுவதும் குட்டையான முரட்டு முடிகள். பிடரி முடிகளோ அடங்காமல் கம்பி போல் நிமிர்ந்து நின்றன. வால் ஓரடி நீளம் கொண்டிருந்தது. எடை எப்படியும் நூறு கிலோவிற்கு மேல் இருக்கும். உயரம் தோராயமாக நூற்றியிருபது சென்டிமீட்டர் இருக்கலாம். நீளம் நூற்றைம்பது சென்டிமீட்டர்.. இல்லை அவளால் சரியாக சொல்ல முடியவில்லை. வெளியே நீட்டிக் கொண்டிருந்த அந்த கோரப்பற்கள் இரண்டும் பலராமனின் கலப்பை‌கள் போல் பயமுறுத்தின அவளை.


அதிர்ச்சியில் ரத்தவோட்டம் அதிகமாகியவள், அவனை அழைத்து சுதாரிக்கச் செய்ய, “சித்!” என்று தான் கத்தியிருப்பாள், அதற்குள் அவன் மீது விழுந்து அவனை‌ தேயிலைச்செடிகளுக்குள் தள்ளிச் சென்றிருந்தாள் ஆத்மீகா கண்ணபிரான்.


அவள் அவனுக்கும் தனக்கும் பத்து எட்டுகள் வித்தியாசம் இருந்தபோதே‌ அவனையும், அவனுக்கு பின்னால் வந்த‌‌ காட்டுப் பன்றியையும் கவனித்து விட்டாள்.


அது அவனை‌ சமீபிக்கும் முன் அவனை இழுத்து வலப்பக்கம் சென்றிருந்தாள். இருவரும் ஒருவரின் மீது ஒருவர் கிடந்தார்கள். அந்த தருணத்தை உணரும் முன் பெரும் அவலமொன்று நேர்ந்தது.


இரை குறி தவறிய கடுப்பிலிருந்த காட்டுப்பன்றி தனது வழியிலிருந்த சித்தாராவை தனது கோரப்பற்களால் கடித்து‌‌ நகர்த்திவிட்டு சென்றது.


அதன்‌ அசுர வேகத்தில் உடல் கிழிந்து ரத்தவெள்ளத்தில் கிடந்தாள் குழந்தை.


இதற்கு முன் பலமுறை -காட்டுவிலங்குகள் தேயிலை தோட்டத்தை அண்டாமல் இருக்க, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள சொல்லி, கட்டாயப்படுத்தியிருக்கிறார் அஞ்சலிதேவி.


ஆனால், லீலாவதி தான் ஜீவகாருண்யத்தால், அவைகளால் இதுவரை மனிதர்களுக்கு ஒரு தீங்கும் நேரவில்லை- அவைகள் மனிதர்களை கண்டாலே விலகிச் சென்றுவிடுகின்றன‌ என்று‌ கூறி, எந்தவொரு பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்கவிடாமல் தடுத்தாள்.


ஆனால், இன்று தனது கண்ணெதிரே குழந்தையொன்று‌‌‌‌ உதிரத்தால் குளித்திருப்பது‌ கண்டு பயத்தில் உறைந்து போனாள். அவள் கண்கள் குத்திட்டு நின்றன.


காட்டுப்பன்றி என்னவோ, அங்குமிங்கும் அலைமோதிவிட்டு வேறுபாதையில் மீண்டும் காட்டிற்குள்ளேயே ஓடி விட்டது.


ஆனால், குழந்தை சித்தாராவின் அலறலில் தான் அங்கிருந்தவர்கள் அனைவரும் வெலவெலத்துப் போனார்கள்.


பெற்றோர் இருவருமே பாய்ந்து சென்று குழந்தையை கைகளில் ஏந்தினார்கள். அவள் அணிந்திருந்த கனத்த கம்பளியையும் மீறி ரத்தம் வெளியேறியிருந்தது திகிலை தந்தது ஆத்மீகாவுக்கு.


அவளை தூக்கிக்கொண்டு சரிவான பாதையில் காரை நோக்கி ஓடினாள்.


அவளுக்கு பதட்டத்தில் கால்கள் வலுவிழந்த உணர்வு.


அப்போது அவளுடனே ஓடி வந்த சித்தார்த்தன் அவளின் நிலையுணர்ந்து, “என்கிட்ட கொடுங்க மேடம்” என்றான்.


அவளும் மறுயோசனையின்றி நீட்டினாள்.


அவன் குழந்தையை வாங்கிக்கொண்டு அவளையும் தாண்டி ஓடினான். தாங்களும் வெவ்வேறு பாதைகளில் அவர்களுடன் இணைந்து கொண்ட லீலாவதி விஹான், சித்தாராவை அருகிலிருந்த மருத்துவமனையில் கொண்டு சேர்க்க உதவினர்.


விஹானும் லீலாவதியும் வரும் வழி முழுவதும், “ஷீ வில் பி ஆல்ரைட் ஆத்மீ, டோன்ட் பேனிக்” என்றே மந்திரம் போல் கூறிக்கொண்டு வந்தனர்.


அத்தருணம் பின்னிருக்கைகளில் குழந்தையை மடியில் கிடத்தியிருந்த பெற்றோர் இருவரும் ரத்தக்கண்ணீர் வடித்தார்கள்.


குழந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பத்து நிமிடங்கள் கடந்தும், பரிதவிப்புடனே நின்றிருந்தாள் ஆத்மீகா கண்ணபிரான்.


சற்றுமுன் அந்த தேயிலை சித்தாராவின் உள்ளங்கையை கீறியது கூட, ஒருவித அசரீரி தானோ என்று தாய் மனம் பைத்தியமாய் எதையெதையோ சிந்தித்தது.


சித்தார்த்தனோ முற்றிலுமாய் நொறுங்கி போயிருந்தான். அந்தக் குழந்தையை அவன் வெறுத்ததால் கடவுள் ‘போடா உனக்கு அவளின் அருமை தெரியவில்லை. நானே வைத்துக் கொள்கிறேன்’ என்று முடிவு கட்டி விட்டானோ என்று இடிந்துபோனான்.


அவனின் இருண்ட முகத்தை பார்த்த லீலாவதிக்கு கோபம் தலைக்கேறியது.


“உங்களால தான் சித் இப்படியாச்சு.‌ நீங்க மட்டும் அங்க வராம இருந்திருந்தா ஆத்மீகா அவங்க குழந்தையை தான் முதல்ல காப்பாத்தியிருப்பாங்க. நீங்க குறுக்க வரப்போய் தான் ஒரு பிஞ்சு உசிர் ஊசலாடிக்கிட்டிருக்கு. அப்படியென்ன உங்களுக்கு அவசரம்? அவங்களை இங்க தேடி வர்ற அளவுக்கு?” என்று ஆத்திரமாகக் கத்தினாள்.


ஒரு‌ தாயாய் அவளால் இந்த கோரவிபத்தை ஜீரணிக்கவே முடியவில்லை. அதிலும், ஆத்மீகாவின் இளஞ்சிவப்பு கோட்டில் அப்பியிருந்த ரத்தக்கறைகள்… அவளால் கண்கொண்டு பார்க்க முடியவில்லை.


ஆனால், ஆத்மீகா அவளை தடுத்தாள்.


“இதுல அவர் தப்பு எதுவுமில்ல மிஸ் லீலாவதி. நீங்க அவரை குற்றம் சொல்ல வேண்டாம். எங்கயோ - ஏதோ ஒரு குழந்தையை தெருநாய் கடிச்சி குதறிடுச்சின்னு கேள்விபட்டாலே நாம அப்படி துடிச்சிப்போயிடுறோம். பாவம் இப்ப இவர் ரொம்ப துடிதுடிச்சிப் போயிருப்பாரு. அவரை ஏன் இன்னும் காயப்படுத்துறீங்க?” என்று அவனுக்கேற்று பேசினாள்.


அதில் வாயடைத்துப் போனாள் லீலாவதி.


அப்போது தான் மருத்துவர் ஒருவர் வந்து, “குழந்தையோட ப்ளட் க்ரூப் என்ன?” என்று கேட்டார்.


ஆத்மீகா, “பி நெகட்டிவ்” என்றாள்.


உடனே அவர், “உங்கள்ல யாராவது பி நெகட்டிவ் ஆர் ஓ நெகட்டிவ் ப்ளட் க்ரூப் காரங்க இருக்கீங்களா? குழந்தைக்கு ப்ளட் தேவைப்படுது.” என்றதும், தனது இரத்த வகை ‘ஓ பாசிட்டிவ்’ என்பதால் பயத்தில் விதிர்த்தாள் ஆத்மீகா.


அப்போது, “என் ப்ளட் க்ரூப் பி நெகட்டிவ் தான்” என்று அவருடனே சென்றான் சித்தார்த்தன்.


லீலாவதிக்கு அவனின் மீதான கோபம் சற்று மட்டுபட்டது.


அவன் ரத்தம் கொடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் அவன் எங்கேயிருக்கிறான் என்று கேட்டு அலைபேசியில் கத்தினாள் பானுமதி.


பின்னே, ஊரைவிட்டே கிளம்புவதாகச் சொல்லி‌ அனைத்தையும் மூட்டை கட்டியவன், திடீரென வெளியே ஓடிவிட்டான் என்றால் அவளுக்கு எப்படியிருக்கும்?


அதுவும் ஒரு தகவலும் சொல்லாமல் நேரம் தாழ்த்தியிருக்கிறான்‌ என்றதும், வெகுண்டு அலைபேசியில் அவனை பிடித்தாள்.


அவனோ நீட்டி முழக்காமல் சித்தாராவுக்கு நடந்ததை கூறி அந்த மருத்துவமனைக்கு அவளை வரச்சொன்னான். அவளும் பதறியடித்து ஓடிவந்தாள்.



தொடரும்…


சித்தார்த்தன் தேயிலைத்தோட்டம் ஓடி வந்த காரணம், நந்தினி சொல்லிய ஒரு செய்தி. அது என்னவென்று அடுத்த அத்தியாயம் வரும்வரையில் யோசித்துக் கொண்டிருங்கள் நண்பர்களே! உங்களின் யூகத்தையும் கமெண்ட்டாக பதிவிடலாம்.

உங்கள் லைக், கமெண்ட்ஸை எதிர்நோக்கி நான்.
 
Last edited by a moderator:

Author: நிதனிபிரபு
Article Title: அசோகவனத்தில் ராமன் - 20
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Members online

No members online now.