அழகுப்பதுமையின் அன்பிற்கினியவன் - 10

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ரோசி கஜன்

Administrator
Staff member
Nov 11, 2018
1,720
1,145
113
அன்று முருகப் பெருமானுக்கு உரிய விசேஷமான மாத கிருத்திகை விரதம் என்பதால், பூந்தென்றலூரின் குன்றின் மேல் வீற்றிருக்கும் மௌனமலை முருகன் கோவிலுக்குப் பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.

தன் பாதுகாப்புப் படையினரை அழைத்துக்கொண்டு வந்தால், அவர்களது நடை, உடை மற்றும் பாவனைகளே கோயிலுக்குச் சாமி கும்பிட வரும் சாமானியப் பக்தர்களுக்கு ஒருவித அச்சத்தையும் இடையூறையும் ஏற்படுத்தக்கூடும் என நிகாரிகா எண்ணினாள்.

அதனால், அவர்களைத் தங்கியிருக்கும் வீட்டிலேயே இருக்கச் சொல்லிவிட்டு, ஒரு சாதாரணப் பெண்ணாகத் தானே காரை ஓட்டிக்கொண்டு கோயிலுக்கு வந்தாள். மலையடிவாரத்தில் ஒரு ஓரமாகக் காரை நிறுத்திவிட்டு, அவள் படிகளில் ஏறத் தொடங்கிய போது, அவளது சிறுவயது நினைவுகள் மெல்ல வந்து அவளை ஓர் இனிய கீதமாய் தாலாட்டின.

அவள் சிறு பிள்ளையாக இருந்தபோது நிகாரிகா இந்தக் கோவிலுக்கு அடிக்கடி வருவாள். அப்போதெல்லாம் அவளுக்குப் பாதுகாவலர்களாக மூன்று பேர் பயில்வான் கணக்காக வருவார்கள். அவர்களைத் தாண்டி அந்தக் குமரியிடம் யாராலும் வாலாட்ட முடியாது.

எவனாவது நிகாரிகாவின் அழகைக் கண்டு மயங்கி, அவளிடம் வலிய வந்து பேச முற்பட்டாலே போதும், அந்த மூன்று பேரின் விழிகளிலிருந்தும் நெருப்புப் போலத் தீக்கங்குகள் தெறிக்கும். அவர்களின் அந்த உக்கிரமான பார்வைக்குப் பயந்தே, அவளை நெருங்கிப் பேசக் கூட எவரும் துணிய மாட்டார்கள்.

அவர்களில் ஒருவன், “உன்னால் நடக்க முடியவில்லையென்றால் நான் தூக்கிக்கொண்டு போகட்டுமா?” என்று அக்கறையோடு கேட்பான்.

இன்னொருவனோ, “இன்னும் கொஞ்சப் படிகள்தான்... எங்க அழகுக் குட்டியால் ஏற முடியவில்லையென்றால் வேறு யாரால் முடியும்?” என்று அவளை உற்சாகப்படுத்துவான்.

மூன்றாமவனோ, அவளுக்கென்றே கொண்டு வந்த தண்ணீர் போத்தலை நீட்டி, “நீ காலையில் ஒழுங்காகச் சாப்பிட்டிருந்தால் ஏன் இப்படி மூச்சு வாங்கப் போகிறது? வர வர உனக்குச் சாப்பாட்டில் விளையாட்டு அதிகமாகிவிட்டது” என்று அதட்டுவான். அந்த அதட்டலிலும் அத்தனை பாசம் பொதிந்திருக்கும்.

அவளது இதயத் துடிப்போடு கலந்திருந்த மூன்று இதயங்கள் அவை.

அன்று அவளுடன் வந்த அந்த மூன்று இதயங்களும், இன்று பணத்திற்காக அவளுக்குப் பாதுகாப்பு அளிக்க வரும் கமாண்டோக்களைப் போன்றவர்கள் அல்ல. கடமைக்காகக் காவலுக்கு நிற்பவர்களுக்கும், அரணாக இருப்பவர்களுக்கும் இடையே உள்ள மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசத்தை அவள் இப்போது உணர்ந்தாள்.

அவளுக்கு இங்கே ஓம் எனும் பிரணவ மந்திர ஒலியைத் தவிர வேறு சத்தமே கேட்காத அந்த அமைதி நிகாரிகாவுக்குப் பிடிக்கும். அதனால் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் இங்கே வரலாம் என்று அடம்பிடித்து அவர்கள் மூவரையும் இழுத்துக் கொண்டு வருவாள்.

அன்று சிறு பிள்ளையாக அவள் மலை ஏறிய போது, அவளது இதயத் துடிப்பு வேகமாக எகிறி அவளைப் பாடாய்ப்படுத்தும். ஆனால் இன்று, முறையான ஆரோக்கியமான உணவுகளாலும், விடாப்பிடியான உடற்பயிற்சிகளாலும் அவளது இதயம் மிகவும் அமைதியாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தது.

இப்போது மலை ஏறும்போது அவளுக்கு மூச்சு இரைக்காமல் உடல் வலிமை பெற்றிருந்தது. ஆனால் அவள் உடல் பெற்ற வலிமை உள்ளத்தில் இல்லை. அன்று அந்த மூவர் காட்டிய அந்தத் தூய பாசம் மட்டும் மீண்டும் இப்பொழுதும் தனக்குக் கிடைக்காதா என அவள் மனம் ஏங்கியது.

அந்த மூவரில் இருவரைக் கண்டுவிட்டாள். அவளை அதட்டிப் பேசித் தன் பாசத்தைக் காட்டுபவன் அன்பிற்கினியன் என்றால், அவள் வளர்ந்து பெரிய பெண்ணாக மாறிய பின்னும், அவளைத் அழகுக்குட்டி எனச் சிறுவயது போலவே கருதி அரவணைப்பவன் தென்னவன்.

இவர்கள் இருவருடைய பாசத்திற்கும் அல்லது எந்தவொரு வரையறைக்கும் உட்படாதவன் இன்னுமொருத்தன். அவனது பாசத்தை இவ்வளவுதான் என்று யாராலும் அளவிட முடியாது, கணக்கிடவும் முடியாது. அந்த எஞ்சிய ஒருவனைக் காணாது அவள் உள்ளம் தவியாய்த் தவித்தது.

அவனைப் பற்றிய நினைவுகளுடனேயே கோவிலுக்குள் சென்றவள், தன் நலத்தோடு அவர்களின் நலனையும் சேர்த்து வேண்டி, தன் இஷ்ட தெய்வமான முருகனை மனங்குளிர வணங்கினாள்.

அவளை அங்கே தனியாகக் கண்ட ஊர்மக்கள் சிலர் வியப்புடன் பார்த்தனர். நிகாரிகா யாரையும் சட்டை செய்யவில்லை. ஏதோ தான் மட்டும் தனித்துவிடப்பட்டது போன்ற ஒரு துயரம் அவள் நெஞ்சைப் பிழிந்தது. அங்கிருந்த முருகனின் சாந்தமான முகத்தைப் பார்த்தபடித் தன்னைத் தானே தேற்றிக்கொண்டாள்.

பூசகர் அர்ச்சனைக்காகப் பெயர் கேட்டபோது, அவளது வாய் தானாகவே “சிற்பிகா, மக நட்சத்திரம்” என்று சொன்னது.

இந்த ஊருக்கு நிகாரிகா என்ற பெயரில் ஒரு பெண் வந்திருக்கும் செய்தி ஏற்கனவே பூசகருக்குத் தெரிந்திருந்தது. ஆனால், பல வருடங்களாக அங்கே பூசகராக இருப்பதால், சிற்பிகா என்ற பெயர் அவருக்கு மிகவும் பரிச்சயமானது. அன்பிற்கினியனின் மனைவியான சிற்பிகாவை, மங்கம்மா அடித்து விரட்டிவிட்ட செய்தி அவருக்குத் தெரியும்.

அவர் அவளை ஆச்சரியமாகப் பார்க்க, நிகாரிகாவோ தன் பார்வையாலேயே அவரை மிரட்டினாள்.

‘இது அந்தப் பெண்ணாக இருக்காது, அந்தப் பிள்ளை நல்ல பிள்ளையாயிற்றே’ என்று அவர் மனதிற்குள் நினைத்துக் கொண்டிருக்க... கடவுளுக்கு தொண்டு செய்பவரிடம் பொய்யுரைக்க மனமற்ற நிகாரிகாவோ அவர் காதுபட, “இரண்டுமே ஒன்றுதான்” என்று மெல்லிய குரலில் சொன்னாள். அவளின் பதிலில் அவர் திகைத்துப்போய் வாய் பிளந்து அவளையே பார்த்தபடி நிற்க, அவரைப் பார்த்து மென்மையாகப் புன்னகைத்தாள்.

பின்னர், இதமான மலைக்காற்று வீசும் ஓரிடத்தில் சிறு இருக்கை போல ஒன்று சிமெந்தினால் அமைக்கப்பட்டிருக்க அதில் அமர்ந்தபடி, தன்னுடைய கடின முகமூடியைக் சிறிது நேரம் கழற்றி வைத்துவிட்டு, தன் கைக்கெட்டும் தூரத்தில் நின்ற கடம்ப மரத்தின் இலைகளைப் பிடுங்கி, மலையிலிருந்து கீழே எறிந்து, அது எந்தப் பக்கம் காற்றில் போகிறது என்று ஒரு சிறுமி போல விளையாடிக்கொண்டிருந்தாள்.

அவளது இந்த விளையாட்டைச் சற்றுத் தொலைவில் மறைந்திருந்த ஒரு ஜோடி கண்கள் மிகுந்த அதிர்ச்சியுடனும் திகைப்புடனும் உற்றுப் பார்த்தன.

தான் காண்பது உண்மைதானா என்று வியப்பில் விரிந்த அந்தப் பார்வை, அடுத்த சில நொடிகளில் அவளைத் துளைக்க ஆரம்பித்தது. ஏதோ ஒரு பெரிய உண்மையை உணர்ந்துகொண்டது போல அவனது கண்கள் சட்டென மாறின.

தூரத்திலிருந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்த அந்த விழிகள் ஓரம் மெல்லக் கசிந்தன. ‘எட்டு ஆண்டுகளுக்கு முன்பு குள்ளச்சி என்று சொல்லும் அளவில் இருந்தவள், இன்று நன்றாக வளர்ந்துவிட்டாளே! ஆனால், வளர்ந்து என்ன பயன்? சிறு வயதில் குழப்பமான நேரங்களில் எதைச் செய்வாளோ, அதையேதான் இப்பொழுதும் செய்து கொண்டிருக்கிறாள். இவளை எங்கெல்லாம் தேடியிருப்பேன்? இப்படி ஒரு புதிய அவதாரத்தில் வருவாள் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லையே! அன்பு அத்தானின் வாழ்க்கை இனி சரியாகிவிடும் என்பது ஆறுதலாக இருந்தாலும், இவளுக்கு என் மீது கோபமோ?’ என்று அவன் மனம் சஞ்சலமுற்றுத் தவித்தது.

தன் நீண்ட காலத் தேடல் ஒரு முடிவுக்கு வந்த சந்தோஷத்தில், அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

யாரோ தன்னைத் தொடர்ந்து கவனிப்பது போன்ற உள்ளுணர்வு நிகாரிகாவுக்குத் தோன்றியது. சட்டென்று விறைப்புற்றுத் தன் விழிகளை நாலாபுறமும் சுழலவிட்டாள். ஆனால், அவள் பார்வைக்கு எவருமே தென்படவில்லை. ‘என் உள்ளுணர்வு ஒருபோதும் தப்பியதில்லையே... பின்னே யாராக இருக்கும்?’ என்ற யோசனையில் சில வினாடிகள் ஆழ்ந்தாள்.

மலையிலிருந்து கீழே பார்க்கும்போது, ஒரு பக்கம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நிலம் பச்சைப்பசேல் எனக் காட்சியளித்தது. இன்னொரு பக்கம், வீடுகளின் சிவப்பு நிற ஓடுகளும், அதைச் சுற்றியிருந்த மரங்களும் மனதை வருடின. அவளது ஆழமான சிந்தனைகளை எல்லாம் இயற்கையின் அந்தப் பேரழகு மெல்லத் தன்னுள் இழுத்துக்கொண்டது.

சுட்டெரிக்கும் சூரியனின் உக்கிரத்தைக் கூட உணராமல், அந்த இயற்கையின் அழகில் மெய்மறந்து நேரத்தையே மறந்திருந்தவளின் அமைதியைக் கலைக்கும் விதமாக, தந்தையிடமிருந்து வந்த அழைப்பு கைபேசியில் ஒலித்தது.

கைபேசியின் ஓசை அந்த இடத்தின் அமைதியைக் குலைப்பது போல இருக்க, வந்த அழைப்பைச் சட்டெனத் துண்டித்தாள் நிகாரிகா.

கைபேசியின் தொடுதிரையிலேயே நேரத்தைப் பார்த்தபோது, மணி மதியம் ஒன்றைக் கடந்திருந்தது. பத்து மணிக்குக் கோவிலுக்கு வந்தவள் இவ்வளவு நேரம் இங்கேயே இருந்ததை நினைத்துத் தன்னையே நொந்துகொண்டாள். கோயிலிலிருந்து வெளிவந்து, வேகமாகப் படிகளில் இறங்கிக்கொண்டே தன் தந்தைக்குத் திரும்ப அழைத்தாள்.

மறுமுனையில் குருமூர்த்தி அழைப்பை ஏற்றதும், "டாடி… ஸாரி.. கோயில்ல இருக்கும்போது டிஸ்டர்ப் பண்ணக்கூடாதுன்னு போனை கட் பண்ணிட்டேன். நான் மலையிலிருந்து இப்பதான் இறங்குறேன். நீங்க எனக்காகக் காத்திருக்காம சாப்பிடுங்க" என்றாள். இன்று மதிய உணவைத் தந்தையுடனும் அகத்தியனுடனும் சாப்பிடத் திட்டமிட்டிருந்ததால், அவர் அதற்காகத்தான் அழைக்கிறார் என்று அவளாகவே எண்ணிக்கொண்டாள்.

ஆனால் குருமூர்த்தியோ, "நிகாரிகா... நானும் அண்ணாவும் உடனே லண்டன் கிளம்ப வேண்டும். நீ வந்தால் சொல்லிவிட்டுப் புறப்படுவோம்" என்றார்.

இன்னும் ஒரு வாரம் இங்கே கிராமத்தில் தங்குவதாகச் சொல்லிவிட்டு, திடீரெனத் திட்டம் மாறியதைக் கேட்டு, "ஏன் டாடி... என்னாச்சு?" என்று பதற்றமாக வினவினாள்.

"நிகா.. பதற்றப்பட ஒன்றுமில்லை. ஒரு முக்கியமான ஆவணத்தில் கையெழுத்துப் போட வேண்டியிருக்கிறது. நமது தனி விமானத்தைத் தயார் செய்யச் சொல்லிவிட்டேன். நீ வந்ததும் ஒருமுறை பார்த்துவிட்டுப் புறப்படுவோம்" என்றார்.

ஷோரூம் திறப்பு விழாவுக்காகத் தன் மகளுக்காகவே எல்லா வேலைகளையும் ஒத்திவைத்துவிட்டு வந்தவர், ஒரு வாரம் கூடத் தங்க முடியாமல் பணிச்சுமையால் கிளம்ப வேண்டியிருந்தது. தங்கள் நிறுவனத்தை நம்பிப் பல கோடி குடும்பங்களின் வாழ்வாதாரம் இருப்பதை உணர்ந்த நிகாரிகாவும், “சரி டாடி... நான் சீக்கிரம் அங்கே வருகிறேன்” என்றாள்.

"அன்புத் தம்பிக்கு இப்போது கால் எப்படியிருக்கிறதாம்?" என்று குருமூர்த்தி அக்கறையுடன் விசாரிக்க...

நேரில் அன்பிற்கினியனைச் சென்று பார்க்காவிட்டாலும் காலையில் தென்னவனிடம் கைபேசியில் பேசி விவரம் அறிந்திருந்தவள், "பெரிய அடியில்லை.. சுளுக்கும், சின்ன சிராய்ப்பும்தான் டாடி, சுளுக்கை ஊரிலே உள்ள ஒரு பாட்டி எடுத்துவிட்டுட்டாங்களாம். இப்ப ஒகே என்று தென்னவன் அண்ணா சொன்னார்" என்று நிகாரிகா கூறினாள்.

"இந்த முறை அவரைப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை... அடுத்த முறையாவது பார்க்க வேண்டும்" என்று அவர் ஏக்கமாகச் சொல்ல, நேற்று அன்பிற்கினியவன் வர மறுத்ததை அவரிடம் சொல்ல விரும்பாமல், "நேரம் கிடைக்கும்போது பார்க்கலாம் டாடி" என்று கூறி இணைப்பைத் துண்டித்தாள்.

மலை உச்சியிலிருந்து அவளை ஆராய்ந்து கொண்டிருந்த அந்த மர்மமான கண்கள், அவளது முழு உரையாடலையும் கவனித்தன. ‘ஏன் தன்னைப் பற்றிய உண்மையைச் சொல்லாமல் வேறு யாரோ போல ஊருக்குள் நுழைந்திருக்கிறாள்?’ என்ற பெரும் குழப்பத்தில் அவன் திகைத்து நின்றான்.

அப்பொழுது அங்கு வந்த பூசாரி, நிகாரிகா சொன்ன உண்மையை மெதுவாக அவனின் காதில் ஓதினார். இப்போது அவனுக்குச் சந்தேகமே இல்லாமல் அது சிற்பிகா தான் என்று உறுதியாகியது. எனினும், ‘அவள் எதற்காக உண்மையை மறைக்கிறாள்?’ என்று தெரியாததால், இந்த விஷயம் இப்போதைக்கு வேறு யாருக்கும் தெரிய வேண்டாம் என்று பூசாரியிடம் கேட்டுக்கொண்டான்.

அவரும் காரணம் தெரியாவிட்டாலும், நிகாரிகாவின் பின்னணி தெரிந்தவர் என்பதால், உண்மையைச் சொன்னால் தன் உயிருக்கு ஆபத்து வருமோ என்ற பயத்தில் தலையாட்டிவிட்டுச் சென்றார். அந்தப் பார்வைக்குச் சொந்தக்காரனோ, அவளின் கண்ணில் படாதவாறு மீண்டும் மறைந்து கொண்டான்.
 

Author: ரோசி கஜன்
Article Title: அழகுப்பதுமையின் அன்பிற்கினியவன் - 10
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
370
83
Chennai
எனக்கு தெரியுமே மர்ம கண்ணுக்கு யார் சொந்தக்காரனு 🤩🤩🤩🤩🤩
அது மாரி தான்.....
இவளோ லவ்லி யா இருந்து இருக்காங்க.....
எல்லா இந்த மங்கம்மா கிழவி பண்ண சதி
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.