அழகுப்பதுமையின் அன்பிற்கினியவன் - 20

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,207
16,435
113
Germany
அத்தியாயம் 20

அதிகாலையிலேயே சிற்பிகாவைத் தொடர்ந்து அன்பிற்கினியன், மாரிமுத்து, பாக்கியம், நீலகண்டன் என அந்த வீடே விழித்துக்கொள்ளும். அன்பிற்கினியனின் ஆயுளுக்காகச் சிற்பிகா முருகனுக்கு நெய் தீபமேற்றி உருக்கமாக வேண்ட, மற்ற நால்வரோ அன்பிற்கினியன் மற்றும் சிற்பிகாவின் வாழ்க்கை எந்தத் தடங்கலுமின்றிச் சீராகச் செல்ல வேண்டும் என்று கடவுளிடம் மனமுருகி வேண்டுவார்கள்.

அம்புஜமும் அவர்களுடன் அதிகாலையிலேயே எழுந்து கொண்டாலும், மற்ற ஐந்து பேருக்கும் அருகில் வராமல் தள்ளியே நின்று கொள்வார். சொல்லப்போனால், மற்ற ஐவருமே அவரை ஒரு பொருட்டாக மதிக்காமல் விலகியே இருந்தார்கள் என்பதே உண்மை.

மங்கம்மாவிற்கு மட்டும் தனியாகச் சமைத்து வைக்கும் அம்புஜம், தன் மகனின் ஆயுளுக்காகவும், அவன் இழந்த பாசம் தனக்கு மீண்டும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் அவரும் விரதம் இருந்தார்.

மங்கம்மாவுக்குத் தன்னுடைய திட்டம் எதிர்காலத்தில் என்னவாகுமோ என்ற பயம் காரணமாக, பெரும்பாலும் அறைக்குள்ளேயே முடங்கிக் கிடக்கத் தொடங்கினார்.

அன்பிற்கினியனுக்கு அவரை நினைத்து என்ன சொல்வதென்றே புரியவில்லை. சில மனிதர்கள் தன்னைச் சுற்றித்தான் உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது என்ற கற்பனை வலைக்குள் வாழ்வதோடு, மற்றவர்களையும் அந்த வலைக்குள் சிக்க வைக்க வேண்டும் என்று நினைப்பார்களே... அதுவே மங்கம்மாவின் இயல்பாகிப் போனது.

அவருக்கு நிஜ உலகத்தைப் புரியவைப்பதும், மற்றவர்களுக்கும் சிந்திப்பதற்கும் சொந்த வாழ்க்கையைத் தீர்மானிப்பதற்கும் உரிமை உண்டு என்பதை உணர வைப்பதும் அசாத்தியமான காரியம். எதைப் புரியவைக்க முயன்றாலும், அவர் தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று தன் பிடியிலேயே உறுதியாக நிற்பார். தன் வாதங்களால் எப்படியாவது மற்றவர்களைத் தன் வசப்படுத்திவிடுவார்.

இப்படியாக மங்கம்மாவும் அம்புஜமும் ஒருபுறம் ஒதுங்கியிருக்க, மற்றவர்கள் தங்களுக்குள் ஒரு புதிய பிணைப்பை வகுத்துக்கொண்டனர்.

அதிகாலையில் சாமியறையில் பூசை முடிந்ததும் எல்லோரும் சிறிது நேரம் கதைத்து சிற்பிகாவின் பாடசாலைக்கு செல்வதற்கான நேரம் வந்ததும், சிற்பிகாவும், மாரிமுத்துவும் பள்ளிக்கும், அன்பிற்கினியன் கல்லூரிக்கும், நீலகண்டன் மில்லுக்கும் புறப்படுவார்கள். அவர்கள் சென்ற பின், பாக்கியம் மட்டும் வீட்டிலிருந்து ஐவருக்காகவும் சமைத்துவிட்டு அவர்களது வருகைக்காகக் காத்திருப்பார்.

நீலகண்டன், பள்ளி முடிந்து சிற்பிகாவையும் மாரிமுத்துவையும் காரில் அழைத்துக்கொண்டு வருவார். பின்னர் அவர்கள் எல்லாரோடும் அமர்ந்து மதிய உணவை உண்பார். அன்பிற்கினியன் மட்டும் தன் கல்லூரி நேரத்திற்கு ஏற்ப, அப்பாவிடம் சாப்பாடு கொண்டு வரச் சொல்லியோ அல்லது நேரம் கிடைக்கும்போது வீட்டிற்கு வந்தோ சாப்பிட்டுக்கொள்வான்.

நீலகண்டன் சரியாக நான்கு மணிக்கு மில்லிலிருந்து வந்துவிடுவார். பிறகு, அவர் மற்ற நான்கு பேரையும் அழைத்துக்கொண்டு மாலையில் எல்லோருமாகச் சேர்ந்து மௌனமலை முருகன் கோயிலுக்குச் செல்வார்கள். அங்கே சிற்பிகா கந்த சஷ்டி கவசம் படிக்க, மற்றவர்கள் அவளுடன் சேர்ந்து மனமுருக வேண்டிக்கொள்வார்கள். இப்படியே நாட்கள் நகர்ந்ததே தவிர, யாருமே மங்கம்மாவிடமோ, அம்புஜத்திடமோ ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை.

இப்படியாக விரதம் முடிந்த 48ம் நாள் சிற்பிகா கடைசி நாள் உபவாசமிருந்து விரதத்தை முடித்த பின், சிற்பிகாவை ஒருநாள் கூட வீட்டிலே வைத்திருக்க மனமில்லாமல், இரவோடு இரவாக நீலகண்டனும் அன்பிற்கினியனும் சேர்ந்து சிற்பிகாவையும் மாரிமுத்துவையும் ஆச்சிரமத்தில் கொண்டு போய் விடத் தயாரானார்கள்.

அன்பிற்கினியன் ஆச்சிரமம் வரை காரில் வந்தவன், காரிலிருந்து இறங்காமல் உள்ளேயே இருந்து கொண்டான். அவனும் சிற்பிகா மற்றும் மாரிமுத்துவோடு சென்றால், எதற்காக ஒரே வீட்டிலிருந்து இருவரையும் ஆச்சிரமத்தில் சேர்க்கிறீர்கள்? என்ற பேச்சு எழும்பும். அத்துடன் சிற்பிகாவின் முகவரியாக அன்பிற்கினியன் தென்னவன் வீட்டு முகவரியையே கொடுத்திருக்க, எதற்குத் தேவையில்லாத கேள்விகளைச் சந்திக்க வேண்டும் என்று நினைத்தான்.

அதனால், நீலகண்டனே இந்தப் பெண் எங்கள் பக்கத்து ஊர்க்காரி, எனக்குத் தெரிந்தவள்தான் என்பதால் நானே கூட்டி வந்தேன் என்று சொல்லிக்கொள்ளட்டும் என முடிவெடுத்து, அவன் காரிலேயே தங்கிவிட்டான்.


நீலகண்டனே எல்லா நடைமுறைகளையும் சரிபார்த்து, சிற்பிகாவுக்கும் மாரிமுத்துவிற்கும் ஆச்சிரமப் பாதுகாவலராக கையொப்பமிட்டார். அனைத்துக் கோப்புகளிலும் கையெழுத்திட்டு முடிக்க, சிற்பிகாவும், மாரிமுத்துவும் விடுதிக்குள் செல்ல வேண்டிய நேரம் வந்தது.

அவர்களது உடமைகளை எடுப்பதற்காக மூவரும் காருக்கு அருகே வந்தபோது,

இனி அவளின் பொறுப்புக்கள் தனக்கு இல்லை. அவளுக்காக தாயிடமும் மங்கம்மாவிடமும் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்ற விடுதலை உணர்வை விட, தன் உடலின் ஓர் உறுப்பையே இழந்துவிட்டதைப் போன்ற ஒரு வலியே அவனை வாட்டியது. எதையோ பறிகொடுத்த உணர்வில், அவன் தன் தலையைக் கைகளில் தாங்கியவாறு மிகுந்த சோகத்துடன் அமர்ந்திருந்தான்.

நீலகண்டன் சிற்பிகாவின் உடமைகளை எடுத்துக்கொண்டு முன்னே செல்ல, அவரைப் பின் தொடர்ந்து மாரிமுத்துவும் சென்றுவிட்டான்.

அங்கே நின்று அன்பிற்கினியனைப் பார்த்துத் தயங்கி நின்றாள் சிற்பிகா. அவள் அவன் அருகே வந்ததைக் கூட உணராமல் அவன் தன் சிந்தனையிலேயே மூழ்கியிருந்தான்.

அப்பொழுது தன் கழுத்தில் இருக்கும் அந்தத் தாலிக் கயிற்றை என்ன செய்வது என்று தெரியாமல் சிற்பிகா தவித்தாள்.

"அன்பு..." என்று மெதுவாக அழைத்துத் தன் இருப்பை உணர்த்தினாள் சிற்பிகா. அவளின் மெல்லிய குரலில் அவன் நிமிர்ந்து அவளைப் பார்த்தபோது, அவனது கண்கள் சிவந்து போயிருந்தன.

யார் சொன்னது ஆண்களுக்கு அழத் தெரியாது என்று? அவளுக்காக அவன் கண்கள் கலங்கி, கண்ணீர் திரையிட்டிருந்தது. அவளை மங்கம்மாவின் கூர்மையான பார்வையிலிருந்து விலக்கிவிட்ட நிம்மதி ஒருபுறம், அவளைப் பிரிய மனமில்லாத தவிப்பு மறுபுறம் என அவன் இதயம் இரண்டு கோணங்களில் துடித்துக் கொண்டிருந்தது.

எப்போதும் கம்பீரமாக இருந்த அந்த விழிகளில் இன்று தெரிந்த ஈரம், சிற்பிகாவின் நெஞ்சை உருக்கியது. அவளுக்காக அழ ஒரு உயிர் இருக்கிறது என்பது, அவளுக்குப் பிரிவின் வலியை விடப் பெரிய ஆறுதலைத் தந்தது.

தன் சோகங்களைத் தனக்குள் அடக்கிக்கொண்டு, "என்ன?" என்பது போல அவன் அவளைப் பார்த்தான். அந்தப் பார்வைக்கு அவளால் வார்த்தைகளால் பதிலளிக்க முடியவில்லை. அதற்குப் பதிலாக, தன் கழுத்திலிருந்த தாலிக் கயிற்றைத் தவிப்பான ஒரு பார்வையால் அவனுக்கு உணர்த்தினாள்.

அந்த நொடி வரும் என்று அவனும் எதிர்பார்த்தான். விடுதியில் தன்னுடன் தங்கும் மற்றப் பெண்களிடம் தாலியை மறைத்து வைப்பது ஒன்றும் லேசுப்பட்ட காரியமல்லவே! அதனால், அவள் தராவிட்டாலும் அதை அவளிடம் கேட்டுப் பெற வேண்டும் என்றுதான் அவனும் நினைத்திருந்தான். ஆனால், இப்போது அந்தத் திட்டமெல்லாம் மறந்து அவளது பிரிவு மட்டும் முன்னால் வந்து நின்றதில், அவனது மூளையே மழுங்கிப் போய்விட்டது.

தன் கரகரத்த தொண்டையைச் செருமிக்கொண்டு, அவளது அந்தத் தவிப்பைப் புரிந்துகொண்ட அன்பிற்கினியன், "அதைக் கழற்றிக் என்கிட்ட கொடுத்திட்டுப் போ" என்று தன் கையை அவளை நோக்கி நீட்டினான்.

சிற்பிகா தயங்கியபடி நிற்க, அன்பிற்கினியன் மிக நிதானமான குரலில், "வேற வழியில்லை சிற்பி... அங்கே இதோடு இருந்தா உனக்குத்தான் தேவையில்லாத கேள்விகள் வரும். இப்போதைக்கு இது என்கிட்டயே பத்திரமா இருக்கட்டும்" என்றான்.

அவளது நடுக்கமான விரல்கள் அந்த மஞ்சள் கயிற்றைத் கழுத்தில் தேடிக் கண்டுபிடித்தன. இதுவரை அவனின் உயிர் காக்க வேண்டும் என்பதற்காகக் கழுத்தில் இருந்த அந்தத் தாலி, இப்போது பிரியப் போகிறது என்று நினைத்தபோது, இனம் புரியாத ஒரு வலி அவளுக்குள் ஊடுருவியது. மெல்லத் தாலியைக் கழற்றி, தன் உள்ளங்கையில் மடித்து வைத்தாள்.

அவள் அதை அன்பிற்கினியனை நோக்கி நீட்ட, அவனும் தன் கையை ஏந்தி அதனைப் பெற்றுக்கொண்டான். அந்த நொடி, ஒரு கணம் இருவரின் விரல்களும் உரசிக்கொண்டன. அந்தத் தீண்டலில் அவனது கையின் வெப்பத்தை அவள் உணர்ந்தாள். அவளுள் இருந்த நடுக்கத்தை அவன் உணர்ந்தான். அந்த மஞ்சள் கயிறு அவன் கைக்கு மாறியதும், ஏதோ ஒரு பெரும் சொத்தைத் தன்னிடம் ஒப்படைத்தது போல அவன் தன் விரல்களால் அதனை மென்மையாக மூடிக்கொண்டான்.

யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக, அதைத் தன் சட்டைப் பைக்குள் வைத்துத் தன் இதயத்தோடு சேர்த்து அழுத்திக் கொண்டவன், "இது எப்பவுமே உனக்குச் சொந்தமானது மட்டும் தான். நானும் எப்பவுமே உனக்கு மட்டுமே சொந்தமானவன். யாரும் என்னை தன் பக்கம் வளைக்கமுடியாது. இது என்கிட்ட பத்திரமா இருக்கும் சிற்பி… நீ இதை வேறு ஒருத்தி கழுத்தில் நான் கட்டிடுவன் என்று கவலைப்படாம உன் படிப்புல மட்டும் கவனத்தைச் செலுத்து" என்று அவன் சொன்னபோது, அவனது குரல் லேசாகக் கம்மியது.

சிற்பிகா பதில் பேசாமல் மௌனமாகத் தலையசைத்தாள். அங்கிருந்து நகரும்போது அவளது கழுத்து வெறுமையாகத் தெரிந்தாலும், அவளது இதயம் அவன் கொடுத்த அந்த நம்பிக்கையால் நிறைந்திருந்தது. காருக்குள் அமர்ந்திருந்த அன்பிற்கினியனோ கண்ணாடி வழியாகச் சிற்பிகாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவளை அங்கே விட்டுவிட்டு மீண்டும் வீடு திரும்பி வரும் வழியில், வண்டியில் கனத்த நிசப்தம் நிலவியது. அந்த மௌனத்தைக் கலைக்க விரும்பிய நீலகண்டன் தன் மகனை ஏறிட்டுப் பார்த்து, "என்னடா அன்பு... மனசுக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கா?" என்று மெதுவான குரலில் கேட்டார்.

அன்பிற்கினியன் ஒரு பெருமூச்சை விட்டுவிட்டு, "இல்லைப்பா... ஆனா அவளை இப்படி ஒரு நிலைமையில தள்ளி விட்டுட்டோமேன்னுதான் வருத்தமா இருக்கு." என்றான்.

வீட்டுக்குத் திரும்பியதும், அம்புஜம் வாசலிலேயே காத்துக்கொண்டிருந்தார். மகன் உள்ளே வந்ததும், "அவளை விட்டுட்டு வந்துட்டியா அன்பு?" என்று ஆவலோடு கேட்டார்.

அன்பிற்கினியன் அவரை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. தன் சட்டைப் பையில் இருந்த அந்த மஞ்சள் கயிற்றை ஒருமுறை தொட்டுப் பார்த்துவிட்டு, தன் அறைக்குள் சென்று கதவைத் தாளிட்டுக்கொண்டான்.

நீலகண்டன் தன் மனைவியை ஒரு தீர்க்கமான பார்வை பார்த்து, "உன் மருமக கழுத்திலிருந்து தாலி இறங்கிடுச்சு... அவ சின்னப்பிள்ளை தாலியோட புனிதத்துவம் அவளுக்குத் தெரியாது உனக்குத் தெரியுமில்லை.. அதுக்கு என்ன அர்த்தம்னு நீயே யோசிச்சுப் பார்." என்றவர், சற்று இடைவெளி விட்டு, "உன் பையனோட உயிரை இன்னுமே மிச்சம் வச்ச அந்தக் கடவுள், அவனோட சந்தோஷத்தை மொத்தமாப் பறிச்சிட்டார்!" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

சிற்பிகா வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டால் தன் வீடு பழையபடி மாறிவிடும் என்று நினைத்துக் கொண்டிருந்த அம்புஜத்திற்கு, அவள் தாலியைக் கழற்றிக் கொடுத்துவிட்டுச் செல்வாள் என்பது எதிர்பாராத அதிர்ச்சியாக இருந்தது.

நீலகண்டனுக்குப் பின்னால் ஓடியவர், "எதுக்கு அவ தாலியைக் கழற்றிக் கொடுத்தா?" என்று கோபத்துடன் கேட்டார்.

"உன் மகனுக்கு இரண்டாம் கல்யாணம் செய்யப் பொண்ணு பார்க்கும்போது, இது இடஞ்சலா இருக்கக்கூடாது இல்லையா? அதுக்குத்தான்!" என்று பதிலளித்தவர், "உன் பையன் இப்போ நடைப்பிணமாயிட்டான். அவனுக்கு எப்படிக் கல்யாணம் பண்ணி வைக்கிறீங்கன்னு நானும் பார்க்கிறேன்!" என்று ஆவேசப்பட்டார்.

அங்கே நீலகண்டனின் சத்தம் கேட்டுச் சமையலறையிலிருந்து வெளியே வந்த பாக்கியத்தைக் கண்டு, "நீ சமையல்கட்டில் யாருக்குச் சமைக்கிறாய்? உன் பிள்ளைகளை வெற்றிகரமாக இந்த வீட்டிலிருந்து துரத்தியாச்சே!" என்றார் எள்ளலாக.

"அன்பு விடியலிலிருந்து இன்னும் எதுவும் சாப்பிடல..." என்று பாக்கியம் கவலையுடன் சொல்ல, அந்தத் தகவல் தன் மனைவிக்குத் தெரியுமா என்பது போல அம்புஜத்தின் பக்கம் பார்வையைத் திருப்பினார் நீலகண்டன். அந்த முகத்திலிருந்த திகைப்பே, மகன் சாப்பிடாதது அம்புஜத்திற்குத் தெரியாது என்பதைச் சொல்லாமல் சொன்னது.

பாக்கியத்திடம் திரும்பிய நீலகண்டன், "இவளை மாதிரி ஒரு அம்மாவுக்குப் பிள்ளையாகப் பிறந்த பாவத்துக்கு, அவன் இன்னும் எத்தனை நாள் பட்டினி கிடக்கணும்னு நினைக்கிறானோ... விடு, இருந்து சாகட்டும்!" என்று கசப்புடன் சொல்லிவிட்டுச் சென்றார்.

கணவனின் அந்தக் கடும் வார்த்தைகளால் மனம் நோக, நிலைமையைக் கையாளவும் தெரியாமல் ஒருவிதத் தவிப்போடு வரவேற்பறையிலேயே திகைத்து நின்றார் அம்புஜம்.

அன்பிற்கினியன் அறைக்குச் சென்று குளித்துவிட்டு வெளியே வந்தான். பாக்கியம் சோபாவில் அமர்ந்து ஏக்கத்துடன் அவனது அறையையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டவன், "அத்தை... அப்பாவைக் கூப்பிடுங்க, நாம சாப்பிடலாம்" என்றான்.

பாக்கியம் அவனை ஆச்சரியத்துடன் பார்க்க, அந்த ஆச்சரியத்தைப் புரிந்துகொண்டவன், "உங்க பொண்ணுக்கு நான் இப்போ யாரோவா இருக்கலாம். ஆனா, என்னால நீங்களும் சாப்பிடாம இருக்கீங்கன்னு அவளுக்குத் தெரிஞ்சா, அவ என்னைத் தான் பிடிச்சுப் பேசுவாள். அதான்..." என்று மெல்லிய புன்னகையுடன் கூறினான்.

"நீ போய் பாயை விரி அன்பு... நான் போய் அண்ணாவைக் கூட்டிட்டு வர்றேன்" என்று பாக்கியம் உற்சாகத்துடன் நீலகண்டனின் அறைக்குச் சென்றார். 'மகன் எப்படியும் சாப்பிட வரமாட்டான். அவன் பட்டினியாக இருக்கும்போது நமக்கெதற்குச் சாப்பாடு?' என்ற எண்ணத்துடன் நீலகண்டன் படுக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்.

அம்புஜமோ, தான் அறைக்கு வந்தால் கணவனின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று அஞ்சி, தனக்கென ஒரு தனி அறையை ஒதுக்கிக்கொண்டு அங்கேயே கடந்த 48 நாட்களாகத் தங்கியிருக்கிறார்.

அதனால் நீலகண்டன் தனியே தங்கியிருப்பது தெரிந்த பாக்கியம் அவசரமாய் அறைக்கதவைத் திறந்து கொண்டு வருவதைக் கண்ட, "என்ன பாக்கியம்?" என்று அவர் பதறிப்போனார்.

"அண்ணா, அன்பு சாப்பிட வந்துட்டான். நீங்க சாப்பிட வாங்க!" என்று அவர் அழைக்க, "நிஜமாவா?" என்று கேட்டவாறே நீலகண்டன் வெளியே வந்தார். "ஆமாண்ணா... அவனுக்கு நான் சாப்பிடாம இருந்தா சிற்பி அவனைப் பேசுவாளாம்" என்று பாக்கியம் சிறு சிரிப்புடன் சொல்ல,

"அப்ப இனி அவனைச் சிற்பியை வைச்சு நல்லா பயம் காட்டிவிடணும்... இல்லைன்னா இவன் சாப்பிடாமலேயே திரிவான்" என்று நீலகண்டனும் சொன்னார்.

அங்கே மகன் பாயை விரித்துக் கொண்டிருப்பதைக் கண்டு, "என்னடா... பொண்டாட்டி பேசுவான்னு பயமா?" என்று நீலகண்டன் கேலியாகக் கேட்க, சிற்பிகாவை பொண்டாட்டி என்று ஒருவர் சொல்ல முதல் முதலாகக் கேட்கிறான் அன்பிற்கினியன் அதனால் ஒரு கணம் அமைதியானான்.

பின் தன்னைத் தானே ஆசுவாசப்படுத்தியபடி "அவ படிப்புக்கு என்னால எந்த இடையூறும் வரக்கூடாதுப்பா. இந்த வீட்ல அவ நிம்மதி இல்லாம இருந்தா... அங்கே நிம்மதியா இருக்கட்டும்" என்றவன், "நீங்க சாப்பாட்டைப் போடுங்க அத்தை" என்றான்.

சாப்பாடு பரிமாறிக் கொண்டிருந்த பாக்கியத்தின் கவலை தோய்ந்த முகத்தைப் பார்த்தவன், "அத்தை... மாரியையும் சிற்பியையும் நீங்க ரொம்ப மிஸ் பண்ணுவீங்கன்னு எனக்குத் தெரியும். ஆனா அவங்க படிக்கப் போயிருக்காங்கன்னு மட்டும் நினையுங்க. படிப்பு முடிஞ்சதும் நான் அவங்களைக் கூட்டிட்டு வந்துடுவேன்... இல்லைன்னா அவங்க இருக்குற இடத்துக்கே நாம போயிடலாம்" என்று ஒரு முடிவோடு கூறினான் அன்பிற்கினியன்.

“அதுக்கு இன்னும் நிறைய வருஷம் இருக்குடா...” என்று பாக்கியம், தன் மகனையும் மகளையும் பிரிந்து தவிக்கப் போகும் ஏக்கத்துடன் தழுதழுத்த குரலில் சொன்னார்.

“அத்தை... அங்கே உங்க பொண்ணு நிம்மதியா படிப்பா. அங்கே யாருடைய பேச்சும் அவ மனசை நோகடிக்காது. அவளும் பாவம் தானே? உங்களுக்காகவும் மாரிக்காகவும் இன்னும் எத்தனை நாள்தான் இவங்க பேசுற கொச்சையான பேச்சையெல்லாம் கேட்டுட்டு இருப்பா? அவ தன் சின்ன வயசு சந்தோஷங்களை அனுபவிக்கவே இல்லை அத்தை... இப்போவாவது அந்தப் பருவத்துக்குரிய சுதந்திரத்தோட அவ இருக்கட்டும்" என்றான் அன்பிற்கினியன்.
 
Last edited:

Author: நிதனிபிரபு
Article Title: அழகுப்பதுமையின் அன்பிற்கினியவன் - 20
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.