• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அசோகவனத்தில் ராமன் - 15

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 15



பானுமதிக்கு கடந்த சில மாதங்களாகவே ஒரு சந்தேகம். ஒருவேளை லீலாவதியும் சித்தார்த்தனும் விரும்புகிறார்களோ என்று. அப்படியிருந்தால் அந்த பிணைப்பை எண்ணி பூமிக்கும் வானுக்கும் துள்ளி குதிக்கும் முதல் ஆள் அவள் அல்லவா?


லீலாவதியின் சகுந்தலமும், வாத்சல்யமும்- நிச்சயம் லட்சத்தில் ஒருவரிடம் தான் இருக்கும் என்று நம்பினாள் பானுமதி. அதுவும் அவள் தனக்கும் தன் அண்ணனுக்கும் செய்த உபகாரங்கள் எல்லாம் எண்ணிலடங்காதவை.


ஒரு கட்டத்தில் தனது அன்னையின் மறு உரு அவளெனவே எண்ணத் துவங்கிவிட்டாள் அவள்.


தனது துன்பத்தை பகிர்ந்து, என்னை விடவா ஒருவர் ஒடிந்து போகமுடியும் பானு என்றவள் கேட்டபோது, கண்களில் கார்காலம் வந்தது அவளுக்கு.


அவளால் தான் சமூகத்தில் நான்கு பேர் மதிக்கும் நிலைக்கு அவள் உயர்ந்தாள். அந்த நன்றியுணர்வு செத்தாலும் அவளை விட்டு போகாது என்று நினைத்தாள்.


எழுந்த சந்தேகத்தில் இடையில் ஒருமுறை தனது அண்ணனிடமே அவள் கேட்டுவிட்டாள், “லீவாவதி மேடத்தை நீ விரும்புறியாண்ணா?” என்று.


அவன் அவ்வாறு நினைப்பது கூட பாவம் என்று சொல்லிவிட்டுச் சென்றான்.


ஆனால், லீலாவதியின் கண்களில் படர்ந்த அந்த காதல் ஏக்கம், ஒரு பெண்ணாய் அவளுக்கு புரியத்தான் செய்தது.


கடவுள் விரைவில் தனது அண்ணனின் மனதை மாற்ற வேண்டும் என்று வாராவாரம் சிவன் கோவிலுக்கு சென்று பூஜை புனஸ்காரங்கள் செய்தாள். அது தெய்வ சங்கல்பமாக வேண்டி, தனது மற்ற சகோதரிகளையும் துணைக்கழைத்தாள்.


இந்துமதி, மதுமதியிடம் கூட சித்தார்த்தன் லீலாவதியை மணக்க சம்மதிக்க வேண்டும், அதற்காக இறைவனிடம் நன்றாக வேண்டிக் கொள்ளுங்கள் என்றாள்.


தங்களின் குடும்ப கடனை அடைக்க உதவி, மாபெரும் பலமாக திகழும் லீலாவதியை தங்களின் அண்ணியாக அடைவதில் அவர்களுக்கும் பூரண சம்மதம் தான். பிராதித்தார்கள்.


நிலைமை இப்படி இருக்க, தனது ஆத்மார்த்த தோழியான இந்துமதிக்கு அலைபேசியில் அழைப்பு விடுத்தாள் நந்தினி. ஆத்மீகா கண்ணபிரான் மீதான காழ்ப்புணர்ச்சி அவளை நிம்மதியாக இருக்கவிடவில்லை.


தோழியிடம் சித்தார்த்தனை பற்றி விசாரித்தாள்.


என்னதான் தன் அண்ணன் அவளின் முன்னாள் காதலனாய் போய்விட்டாலும், தொடர்ந்து அவனது நலனில் அக்கறை கொண்டவளாய் விசாரிக்கும் தனது தோழி நந்தினியை நினைத்து பெருமிதம் கொண்டாள் இந்துமதி.


அவளிடம் கரையுடைத்த வெள்ளமாய் தனது உள்ளக்கிடக்கையெல்லாம் கொட்டினாள். ஆற்றுவது போலும் தேற்றுவது போலும் பாவனை செய்த நந்தினி தனக்கு தேவையான தகவல்களை பெற்ற திருப்தியில் இணைப்பை துண்டித்தாள்.


அவளின் கண்கள் வஞ்சினத்தில் மின்னின.


“என்னை சித்தார்த்தனை நெருங்கக்கூடாதுனு சொன்ன இல்ல ஆத்மீகா கண்ணபிரான்? உன்னையே அவனை நெருங்கவிடாதபடி செய்யுறேன். அவன் எனக்கு கிடைக்கலைனாலும் பரவாயில்ல. ஆனா, உனக்கு மட்டும் கிடைக்கவே கூடாது.” என்று உறுதிபூண்டாள்.


*


எதிர்பார்த்த நன்னாளும் வந்ததில் முகம் முழுக்க பூரிப்பு ஆத்மீகா கண்ணபிரானுக்கு. பின்னே ஆறரை வருட தவிப்பல்லவா!


சித்தார்த்தன் வேலை பார்க்கும் அரண்மனைக்கு அருகிலேயே ஒரு பெரிய மாளிகையை வாடகைக்கு எடுத்தாள். அதில் அவள், விஹான் மற்றும் அவள் மகள் என மூவரும் தங்க ஏற்பாடு.


வேலையாட்கள் முதற்கொண்டு சென்னையிலிருந்தபடியே தேடிப் பிடித்து வைத்திருந்தாள்.


அன்றைய இரவு பயணக் களைப்பில் அவரவர் அறைகளில் உறங்கியவர்கள், காலையில் நடைபயிற்சி மேற்கொள்ள பக்கத்து பூங்காவை தேர்ந்தெடுத்தனர்.


அவர்கள் காதுகளை ஹூடிகளால் மூடியபடி மெல்லோட்டம் சென்றபோது, எதிரில் சித்தார்த்தன், பானுமதி, லீலாவதி மற்றும் அவளின் மகள் ஈஷா என ஒரு படையே சிரித்துப் பேசிக்கொண்டு வந்து கொண்டிருந்தது.


இரு படையும் ஒருவர் வழியை ஒருவர் மறைத்து நின்றபோது, லீலாவதி அவர்களின் செல்வாக்கை பறைசாற்றும் தோற்றத்தில், “நீங்க ஊருக்கு புதுசா? இங்க எங்க தங்கியிருக்கீங்க?” என்று விசாரித்தாள்.


அவளின் கள்ளம் கபடமற்ற தூய உள்ளத்தை முதல்முறையாய் வெறுத்தான் சித்தார்த்தன். இவர்களிடம் இப்போது பேசி தான் ஆக வேண்டுமா என்று எரிச்சல்.


பானுமதியோ குழந்தையுடன் அவர்களை சேர்த்து வைத்து பார்த்ததில் தனது அண்ணனின் புஜத்தை பற்றினாள்.


அவன் அவள் பார்வை செல்லும் திசையில் பயணித்தான். குழந்தை குறிஞ்சிப்பூவாக மலர்ந்திருந்தது.


இது? இது? என்னுடையதா? இல்லை! இருக்கவே இருக்காது என்று அலறியது அவனது உள்ளம்.


“ஹாய்! ஐ அம் சித்தாரா.” என்று தனது மலர்க்கரத்தை நீட்டியது பூச்செண்டு.


பதிலுக்கு, “ஈஷா” என்று கரம் நீட்டியது சில்வண்டு.


தாய்மார்கள் புன்னகைத்து கொண்டார்கள்.


சித்தார்த்தன் தான் உள்ளுக்குள் கொதித்துக் கொண்டிருந்தான்.


தன்னை பழி வாங்கவே அவள் தன் குழந்தைக்கு தன் பெயர் சூட்டியிருக்கிறாள் என்று தீர்மானம் செய்தான். ஆனால், ஆத்மீகா கண்ணபிரான் சூட்டியதன் நோக்கம் வேறு.


அவளுக்கு அவன் பெயர் அவள் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்க வேண்டும் ஏதாவதொரு வகையில்.


அவளின் பித்து தெரியாத கனவான் மேலும் வெகுண்டான்.


அன்று என்னை மீண்டும் அடி பணிய வைப்பேன் என்றதற்கு அர்த்தம் இது தானா? என்னை என்ன நினைத்தாள் இவள்? குழந்தையைக் காட்டியதும் காலில் வந்து விழுவேன் என்றா? ஒருகாலும் நடக்காது. முதலில் இது என் பிள்ளையாகவே இருக்க முடியாது. இருந்தாலும் எனது எச்சிலில் பிறந்தது இது. எனது குற்றத்தில் பிறந்த இன்னொரு குற்றம். பாவத்தின் நிழல் இது. என் மேல் இது படவேக்கூடாது என்று வெறுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் அக்குழந்தையை.


அவனின் முகத்தில் தோன்றி மறையும் மாற்றங்களை பேச்சுவாக்கில் படம்பிடித்துக் கொண்டிருந்த ஆத்மீகாவின் கண்கள், ஆத்திரத்தில் விரிந்தன.


ஒரு பாவமும் அறியாத குழந்தையை வெறுக்க இவனுக்கு எவ்வளவு துணிவு என்று நரம்புகள் புடைத்தன அவளுக்கு.


பின், சூழ்நிலை கருதி தன்னை அடக்கிக் கொண்டாள்.


லீலாவுடனான அறிமுகப்படலம் முடிந்தவுடன், நகரப்போனவளை நிறுத்தினாள் லீலாவதி.


“வீட்டுக்கு போனதும் உங்க குடும்பத்துக்கு திருஷ்டி சுத்திப் போடுங்க” என்றாள்.


“ஏன்?” என்றாள் ஆத்மீகா கண்ணபிரான்.


“பின்ன நானே அதிகமா கண்ணு வச்சிட்டேனே உங்க குடும்பத்து மேல” என்றதும்,


பக்கென சிரித்தவள், “நாங்க வேற குடும்பம்; இவரு வேற குடும்பம்” என்று தன் மகளுடன் விலகி நின்றாள்.


லீலாவதியின் முகத்தில் விரும்பத் தகாத மாற்றம்.


யாரோ ஒருவனுடன் இப்படி குழந்தையை அழைத்துக்கொண்டு உல்லாசமாயிருக்க வந்திருக்கிறாளே என்று, உடனடியாக அவளிடமிருந்து விடைபெற்றாள்.


பானுமதியோ நிம்மதி பெருமூச்சு விட்டாள்.


விஹானி‌ன் காதல்‌ விழிகள்‌ அதனை கவனித்துக்கொ‌ண்டு தான் இருந்தன. அதை மட்டுமா? தொடக்கத்திலிருந்தே அவனது கண்கள் ஈக்களாகி பானுமதியைத் தானே பலாச்சுளையாய் மொய்த்துக் கொண்டிருந்தன.


ஆறரை வருட பிரிவை, பத்து நிமிடங்களில் கரைக்க முயன்றான் அந்த பைத்தியக்காரன். அவள் விலகிச் சென்றபோதோ இதயமிருக்குமிடத்தில் ரத்தம் கசிந்தது‌ அவனுக்கு.


“ஜொல்லு விட்டது போதும். போலாமா?” என்று விஹானின் காதோரம் முனுமுனுத்தாள் ஆத்மீகா.


அவர்களின் கால்கள் வேகம் பிடித்தன.


*


வீட்டிற்கு வந்த பானுமதி அண்ணனிடம் புலம்பி தவித்தாள்.


“அண்ணா என்னை அழ வைக்கனும்னே அந்த மேடம் அவரை இங்க கூட்டிட்டு வந்திருக்காங்கண்ணா? அவங்க ஏன்னா இவ்வளவு மோசமானவங்களா இருக்காங்க?” என்று சிறுபிள்ளையாய் சினுங்கினாள்.


தனக்குள்ளும் அதே கேள்வியை கேட்டுகொண்டான் சித்தார்த்தன்.


“அண்ணா எப்படியாவது அவங்களை இங்கயிருந்து போக சொல்லுண்ணா? என்னால இயல்பா இருக்க முடியல” என்று உடைந்து அழுதவளின், கன்னங்களை தாங்கினான் அண்ணன்.


“பானுமா இங்கப் பாரு! அவங்க நம்மளை எதுவும் செய்ய முடியாதுடா. நம்ம வாழ்க்கையில இவங்கன்னு மட்டும் இல்ல, இன்னும் பெரிய பெரிய அயோக்கியங்க கூட வரலாம்‌. அவங்களையெல்லாம் பார்த்து நாம ஓடி ஒளியக் கூடாது. வந்து பாருனு நிக்கனும். ஏன்னா இந்த உலகம் அவங்களுக்கானதும் தான். நம்மளுக்கானதும் தான்” என்றதும், அழுகை தேம்பலானது அவளிடம்‌.


உண்மையில் அதை அவன் அவளுக்கு சொன்னானா, இல்லை தனக்கு தானே சொல்லிக்கொண்டானா என்று அவனுக்கே தெரியவில்லை.


“அண்ணா ஒருவேளை அவர் பழைய நெனப்புல என்னை நெருங்கினா, நான் என்னண்ணா பண்ணட்டும்?” என்றாள் இயலாமையாக.


“உனக்கு தோணுறதை பண்ணு பானு. உனக்கு உன்னை விட வேற யாரும் நல்லது யோசிச்சிட முடியாது” என்றதும், அவள் முகத்தில் குழப்ப ரேகைகள்.


அவள் வாழ்க்கையின் முடிவை அவளிடம் விட்டாயிற்று. ஆனால், தனது வாழ்க்கை முடிவு?


எழுந்து குளிக்கச் சென்றான். பானுமதி பள்ளிக்கு கிளம்பி நின்றபோது, ஆத்மீகா விஹானுடன் அரண்மனைக்குள் நுழைவதை கண்டாள்.


வேண்டாம் வேண்டாம் என்றாலும், மனம் விஹான் வேண்டும் வேண்டும் என்றது.


அவனை ஒளிந்திருந்து பார்ப்பதற்காக ஒரு ஆலமர அளவு தூணின் பின் சென்று நின்றாள்.


மெதுவாக எட்டிப் பார்த்தபோது அவன் அவளுக்கு பின்னால் நின்று செருமினான்.


அவள் துள்ளி விலகினாள்.


அவன் கைகளை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்கவும், அவளுக்கு கண்களை கரித்தது.


அவன் முகம் பார்க்கவும் தயங்கி, துப்பட்டாவை சுற்றினாள். அதில் ஒரு துளி கண்ணீர் விழுந்து மறைந்தது.


அவன் முன்பு போல் இல்லை. அவளுக்கு அதுவே மிகவும் வலித்தது. உடல் இரண்டு சுற்று மெலிந்து, கண்களில் கருவளையமும், உதட்டில் சிகரெட்டின் நட்பால் ப்ளூபெர்ரி தடிப்பும் இருப்பது கண்டு உள்ளுக்குள் மறுகினாள்.


இது தனது பிரிவால் தானா என்று ஒரு கணம் மகிழ்ந்த உள்ளம் மறுகணமே அதற்கு என்ன ஆதாரம் என்று அதட்டல் போட்டதில், விலகி நடந்தாள்.


அவன், “நில்லு பானு!” என்றான்.


அவள் நிற்கவில்லை.


“நான் உனக்காகத் தான் பானு இங்க வந்திருக்கேன். நீ இல்லாம நான் போக மாட்டேன். இதை மட்டும் மனசுல வச்சிக்கோ” என்றதும், அவ்வார்த்தைகளில், புயலாக அவனை நோக்கி திரும்பினாள் பானுமதி.


“நீங்க ஆமான்னா காதலிக்கனும். இல்லைனா விலகி போயிடனும். என்ன நியாயம் சார் உங்களோடது?” என்று ஏளனம் செய்தாள் தாங்க முடியாத கோபத்தில்.


“பானு பழைய கதையை பேச வேணாம் ப்ளீஸ்”


“ஏன்? அதுவும் நான் தான? பேசி தான் ஆகனும். அன்னைக்கு எது உங்களை என்னை காதலிக்க விடாம தடுத்துச்சி சொல்லுங்க? எதுவாயிருந்தாலும் என் காது குளிர கேட்டுட்டா, காலம் முழுமைக்கும் அதை நினைச்சி கண்ணீர் சிந்துறதுக்கு எனக்கு வசதியா இருக்கும்.”


“பானு என்னை மன்னிச்சிடுமா. அன்னைக்கு நான் உன்னை தப்பா புரிஞ்சிக்கிட்டேன்.”


“ஆனா நான் உங்களை சரியா புரிஞ்சிக்கிட்டேங்க. உங்க உயரம் எது? என் உயரம் எதுனு எனக்கு பொட்டுல அடிச்ச மாதிரி சொன்னது உங்க விலகல். என்னை கேட்டா காசு இல்லாதவங்கலாம் காதலிக்கவே கூடாது. இந்த காதல் இருக்கே காதல்! அது சாதி, மதம், மொழி, இனம், பணம்னு எந்த ஏற்றத்தாழ்வும் பார்க்காதுனு சொல்றதெல்லாம் சுத்த பேத்தல். அது எல்லாத்தையும் பார்க்கும். என்ன பார்க்காத மாதிரி கொஞ்ச காலம் நடிக்கும். தேவை தீர்ந்த பின்னாடி, பழைய குருடி கதவை திறடி கதை தான். எனக்கு என் இடம் எதுனு புரிய வச்சதுக்கு ரொம்ப தாங்க்ஸ்.” என்று கைகளை கூப்பினாள்.


அவனுக்கு தன் மேலேயே கோபம் எழுந்தது. அன்று பிரியமான மரத்தை வெட்டுவதை போல், அவள் மனதை சிதைத்ததை நினைத்து வெட்கினான்.


“உங்களை கெஞ்சி கேட்கறேன் இங்கயிருந்து போயிடுங்க. என்னை என் வழியில வாழ விடுங்க. நீங்க இங்க இருந்தா நான் வானத்துல பறப்பேன். ரொம்ப ரொம்ப வேகமாக. அதே மாதிரி உயரத்துல இருந்து கீழயும் விழுவேன். என்னை தாங்கி பிடிக்க நீங்க இருக்க மாட்டீங்க. என் மேல பிரியமானவங்க இருப்பாங்க. என் எடை தாங்காம அவங்களும் காயப்பட வேண்டி இருக்கும்” என்று அவனை போக வைக்க, இரவு முழுவதும் மனதில் எழுதியதையெல்லாம் வாசித்தாள்.


அவன் அசையவில்லை. தவறிழைத்தவன் தண்டனை பெற்று தான் ஆக வேண்டும் என்று அவள் பேசுவதையெல்லாம் அமைதியாக கேட்டான்.


பின், தொண்டையைச் செருமி, “என் கண்ணைப்‌ பாரு பானு” என்றான்.


அவள் பக்கவாட்டில் பார்த்தாள்.


“நான் மனசுல நினைச்சதை நீ கேட்ட காலம் போய், நான் பேசுறதை நீ கேட்கறதுக்கு கூட விரும்பாத காலம் வந்துடுச்சில்ல? கொடுமை பானு. ஆனா ஒரு உண்மையை மட்டும் நீ தெரிஞ்சிக்கனும் பானு. அன்னைக்கு நான் ஒரு தப்பான முடிவு எடுத்தேன். இப்ப அதையே தான் பானு நீயும் பண்ற” என்று கனத்த மனதோடு சொல்லிவிட்டு அகன்றான்.


அக்கனம் அவள் கால்களை பற்றிக்கொண்டது.


அசைய முடியாமல் நின்றாள். சித்தார்த்தன் வந்து தான் அவளை அழைத்துச் செல்லும்படியானது.


உள்ளே அஞ்சலிதேவியிடம் நலம் விசாரித்துக் கொண்டிருந்த ஆத்மீகா கண்ணபிரான், விஹானைக் கண்டதும் அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள்.


அவனைக் கண்டதும் அவள் மீது அவர் கொண்டிருந்த பயங்கள் விலகின.


அன்று மாலை தங்கள் அரண்மனையில் நடக்கும் தேநீர் விருந்துக்கு அவளையும் அழைத்தார். அவள் தயக்கமாக ஒப்புக்கொண்டாள்‌‌.



தொடரும்…


ஆத்மீகாவின் காதல் குறித்து உங்கள் அபிப்ராயம் என்ன நண்பர்களே?

தொடர்ந்து லைக் கமெண்ட் பண்ணினால் தான் அத்தியாயங்களும் தொடர்ந்து வரும் நண்பர்களே!
 
Top Bottom