• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அசோகவனத்தில் ராமன் - 24 (Final Part )

நிதனிபிரபு

Administrator
Staff member
இறுதி அத்தியாயம்


சித்தார்த்தனின் வீட்டிலிருந்து கிளம்பியவள் நேரே சென்றது தனது தாம்பரம் கிளைக்கு. ஏதோ ஒரு நினைவில் அங்கு வந்துவிட்டிருந்தாள். பேசாமல் வீட்டிற்கு சென்றால் என்ன என்று கூட ஒருகணம் தோன்றியது. உண்மையில் அவளுக்கு பயமான பயம். சித்தார்த்தன் அவளைத் தேடி இனி வரவே போவதில்லையோ என்று.


அவளின் முன் அவ்வளவு கோப்புகள் கிடந்தும், அவன் நினைவுகள் அவள் இதயத்தில் ஈக்களாய் உட்கார்ந்து, புழுக்களாய் ஊர்ந்து, கொசுக்களாய் அவளின் கவனத்துளிகளை நொடிக்குநொடி உறிஞ்சிக் கொண்டிருந்தன.


அப்போது‌ தான், “மே ஐ கமின் மேடம்?” என்று உள்ளே வந்தாள் நந்தினி.


அவளின் கையில் ராஜினாமா கடிதம்.


ஆத்மீகா கண்ணபிரான் ஆச்சர்யத்தையும் சந்தேகத்தையும் ஒரு சேர முகத்தில் எதிரொளித்தாள்.


நந்தினி அந்த முகபாவனைக்கு ஆணவமாக பதிலளித்தாள்.


“இனி எனக்கு இந்த வேலை அவசியப்படாது மேடம். ஏன்னா நான் வேலை கொடுக்கப்போற இடத்துக்குப் போகப்போறேன். புரியலைல்ல? உங்களோட காம்படீட்ட கம்பெனி சத்யா கார்மெண்ட்ஸ் எம்.டி இப்ப என் வருங்கால கணவர். சும்மா இன்டர்வீவ் அட்டன் பண்ண தான் நான் அவங்க கம்பெனிக்கு போனேன். என்னை பார்த்ததுமே அவர் ஃப்ளாட். ஸோ, இனிமே உங்களோட அதிகாரம் எதுக்கும் நான் அஞ்சப்போறதில்ல” என்று மிடுக்காய் சொன்னாள்.


அவளை நினைத்து சிரிப்பு தான் வந்தது ஆத்மீகா கண்ணபிரானுக்கு. அந்த சத்யா கார்மெண்ட்ஸ் எம்.டி-யை பற்றி அவளுக்கு நன்றாகவே தெரியும். எதிலுமே அவனிடம் நேர்மை கிடையாது. அவனது அப்பாவின் பெயரை கெடுக்க வந்தவன் இவன் என்று தான் இவளுக்கு அவனின் ஊழல்களை பார்த்தால் தோன்றும்.


ஆனால், நந்தினி அவனுக்கு ஜாடிக்கேத்த மூடி தான் என்பதையும் அவளால் மறுக்க முடியவில்லை.


ஒரு சாக்கடையை தன் மேல அப்பிக் கொள்வதில் தான் இவளுக்கு எவ்வளவு மகிழ்ச்சி என்று உள்ளூர நினைத்துகொண்டே, “கங்ராட்ஸ் மிஸ் நந்தினி!” எ‌ன்றாள்.


நந்தினி அசட்டு புன்னகையுடன் “தாங்க்ஸ்” என்றுவிட்டு, ஒரு வெடிக்குண்டை பற்றவைத்தாள்.


“என்ன மேடம் ரொம்ப சோகமா தெரியுறீங்க? அந்த துள்ளல், மிடுக்கு, அகங்காரம் ஒன்னத்தையும் காணோமே? என்ன சித்தார்த்தன் உங்களை வேண்டாம்னு சொல்லிட்டாரா?” என்றதும், இறுகிய முகமாக அவளைப் பார்த்தாள் ஆத்மீகா கண்ணபிரான்.


“நான் தான் மேடம்- அவரு ராஜபரம்பரைனு தெரிஞ்சு தான் நீங்க அவர் பின்னாடி சுத்தி சுத்தி வர்றீங்கன்னு ஒரு குண்டை தூக்கிப்போட்டேன். உங்க இணைப்பு பாலம் நொறுங்கிப் போச்சி. ஹாஹாஹா என்ன‌ சொன்னீங்க பாம்பா? அடிபட்ட பாம்பு ஆபத்தானது மேடம்” என்று அசல் பாம்பு போல் நாக்கை அசைத்துக் காட்டினாள் நந்தினி.


ஆத்மீகா அவளை அற்பமாக பார்த்தாள்.


“நந்தினி நீங்க பாம்புன்னா, நான் போர்வாள். என் மேல எதேர்ச்சையா மோதி வேணா கீறலோட தப்பிக்கலாம். ஆனா என்னை எதிர்க்க நினைச்சு விழுங்குனீங்கன்னா, உங்க விஷப்பை கிழியும். வாயெல்லாம் ரத்தமாகும். ஒருவேளை என்னை உடைச்சிடலாம்னு நெனச்சு உடம்பால வளைச்சு இறுக்குனீங்கன்னா, துண்டு துண்டா ஆவிங்க. மைன்ட் இட்!” என்று கர்ஜித்தாள்.


“கீழ விழுந்த போர்வாள் இப்படித்தான் சத்தம் போடுமா மேடம்?” என்று கேட்டுவிட்டு அலட்டலாக வெளியேறினாள் நந்தினி.


அந்த கேடுகெட்டவளின் சில்லறைத்தனத்தை விட, சித்தார்த்தனின் தன் மீதான குறைமதிப்பீடு தான் அதிகமா வலித்தது ஆத்மீகாவுக்கு.


கண்மூடி சாய்ந்தாள்.


*


அன்று மாலை எவ்வித அறிவிப்புமின்றி அவளை வீட்டில் சந்திக்க வந்திருந்தான் சித்தார்த்தன்.


அவளுக்கு ஆதி‌ அந்தம் பதற்றம். அவள் வாழ்க்கையில் இதற்கு முன் இத்தகைய பதற்றத்தை கண்டதில்லை.


“உட்காருங்க மிஸ்டர் சித்தார்த்தன்” என்று வரவேற்பறை இருக்கையில் அமர வைத்தாள்.


காபி தருவித்து தந்தாள். அவன் அதை குடித்து முடிக்கும் நேரம் வரை சித்தாரா பற்றிய பேச்சு தான் ஓடிக்கொண்டிருந்தது. இடையிடையே லீலாவதி பற்றிய பேச்சும்.


மௌனம் வந்து தலைநீட்டிய தருணம் தனது சந்தேகத்தை கேட்டான் அவன்.


“ஒருவேளை அந்த இருபது லட்சத்தை நீங்க எனக்கு விட்டுக் கொடுத்த நாளைக்கப்பறம் நாம சந்திக்க வாய்ப்பே கிடைக்காம போயிருந்தா, என்னை நீங்க தேடி வந்திருக்க மாட்டீங்க தானே மேடம்?”


“கடவுள் சத்தியமா மிஸ்டர் சித்தார்த்தன். ஆனா என் வாழ்க்கை தான் தேய்ஞ்ச ரெகார்டாகியிருக்கும். என் மன சஹாரால பெஞ்ச முதல்மழை நீங்க மிஸ்டர் சித்தார்த்தன். உடம்பை தொடுறதுக்கு முன்னாடியே மனசை தொட்டுட்டீங்க ரெண்டு லட்சத்தை அறக்கட்டளை உண்டியல்ல போட்டு.”


அவனுக்கு அவளின் மனத்திறப்பு வேனிற்கால பனிக்கூழானது.


“உங்களுக்கு நான் ராஜ வம்சத்தை சேர்ந்தவன்னு தெரிஞ்ச பின்னாடி, அந்த சொத்துகளுக்காகவாவது என்னை அடையனும்னு தோணவே இல்லையா மேடம்?” என்றதும், விரக்தியாக சிரித்தவள் இல்லையென்று தலையசைத்தாள்.


“ஏன் உங்க வியாபார மூளை ஆஃப் மோடுக்கு போயிடுச்சா?” என்று இலகுவாக கேலி பேசியதும்,


“இது அப்படியில்ல மிஸ்டர் சித்தார்த்தன். அந்த சொத்து எதுவும் கண்டிப்பா எனக்கு வேண்டாம்- உங்களுக்கே வேண்டாங்கும்போது. ஆனா சித்தாரா உங்களுக்கு சட்டப்பூர்வ வாரிசாகும்போது அவ ஆசைப்பட்டா, அவளை நான் தடுக்க மாட்டேன்.” என்று உறுதியாக சொன்னாள்.


அவனுக்கு அவள் சொல்வது புரிந்தது.


“உங்களுக்கு ஒருநாள்கூட உங்க கடந்த காலத்தை நினைச்சு குற்றவுணர்ச்சி இல்லையா மேடம்?” என்று மனதுள் நாணல்பூவாய் அரித்ததை கேட்டேவிட்டான்.


அவள் யோசித்துவிட்டு இல்லையென்று தலையசைத்தாள்.


அவன் முகம் களையிழந்தது.


“நான் என் பழைய வாழ்க்கைமுறை தப்புன்னோ, அதுக்கு காரணம் இன்னாருன்னோ எப்பவும் யோசிச்சதில்ல மிஸ்டர் சித்தார்த்தன். ஆனா ஒரு சின்ன வருத்தம் மட்டும் எனக்கு இருக்கு. எனக்கும் உங்களுக்கு கிடைச்ச மாதிரி ஒரு அம்மா கிடைக்காம போயிட்டாங்களேன்னு. அப்பறம் இன்னொரு தவறான புரிதல் மட்டும் இதுல வந்திடவே கூடாது மிஸ்டர் சித்தார்த்தன். நான் சித்தாராவுக்கு அப்பா இல்லாத குறையை போக்கத்தான் உங்கக்கூட இணைய விரும்பறேன்னு மட்டும் நீங்க நெனச்சிடவேக்கூடாது. ஏன்னா சிங்கிள் பேரண்ட்டா இருந்து உங்க அம்மா உங்களை நல்லா வளர்க்கலையா? என் டாடி என்னை? அதுமாதிரி ஐ ஹோப் ஆன் மைசெல்ஃப்! ஸோ, அது இங்க பிரச்சனையில்ல. நான் ஒரு காலத்துல அப்படியிருந்தது என் அந்த நேரத்து நியாயம். அதை அப்படியே கடந்து போயிரனும்.”


“முடியுமா மேடம்?”


“நான் முடியும்னு நம்பறேன். வேறென்ன வேணும்? என்னை இங்க சிலுவைல அறைய ஆளிருக்காங்களா என்ன? உங்ககிட்ட கூட தலைகுனிஞ்சு நிற்க மாட்டேன் மிஸ்டர் சித்தார்த்தன். ஏன்னா, எங்கேயாவது எந்த ஆண்மகனாவது என் உடம்பை உனக்கு சுத்தமா கொடுக்க முடியலையேன்னு‌, அவன் காதலிக்கிட்ட ஃபீல்‌ பண்ணி பார்த்திருக்கீங்களா நீங்க? பின்ன நான் மட்டும் எதுக்கு ஃபீல் பண்ணனும்? நான் ஒரு சகதில புரண்டேன். நதியைப் பார்த்ததும் அதுல குதிச்சு என்னை சுத்தம்‌ பண்ணிக்கிட்டேன். அதுக்காக என் மேல நாறுதுனு நீங்க சொல்வீங்கன்னா என்னை நெருங்காதீங்க. சிம்ப்ள்!”


“கேட்கறேன்னு கோபிச்சுக்காதீங்க. நாம சந்திக்கறதுக்கு முன்னாடி கல்யாணத்தை பத்தி உங்க ஒப்பினியன் என்னவா இருந்தது மேடம்?”


“இதுல கோபிக்க என்ன இருக்கு? நான் வாழ்க்கையில எடுக்கவே கூடாத முடிவா ரெண்டை வச்சிருந்தேன் மிஸ்டர் சித்தார்த்தன். ஒன்னு தற்கொலை. இன்னொன்னு கல்யாணம். உண்மை தான். தொழில்ல மட்டுமில்ல, வாழ்க்கையிலயுமே நான் என் டாடியை தான் எனக்கு ரோல் மாடலா பார்த்தேன். எனக்குனு ஒரு சரி தவறை உருவாக்கிக்கிட்டேன். ஆனா உங்களால நா‌ன் கல்யாணத்து மேல நம்பிக்கை வைக்கறது ஆசைப்படுறது எனக்கு விந்தையா இருக்கு.”


அவன் மெதுவாக தான் கொண்டு வந்திருந்த பையை அவளிடம் நீட்டினான்.


கைக்கடிகாரத்திற்கு இவ்வளவு பெரிய பை தேவையில்லை என்று நினைத்தபோதே அவளுக்கு நெஞ்சு முட்டியது.


முகத்தில் எந்தவித மாற்றத்தையும் வெளிகாட்டாமல் அதற்குள் இருக்கும் பொருளை வெளியே எடுத்தாள். அதுவொரு தேறல் சிவப்பு பனாரஸ் பட்டுப்புடவை.‌


பழைய புடவையாகினும் அது பராமரிக்கப்பட்டிருந்த விதத்தில் அதன் தரம் இன்னும் மங்காமல் இருந்தது.


அதிலும் முழுக்க முழுக்க வெள்ளி இழைகளால் சரிகை பார்டரும், புட்டாஸும் கொண்ட அந்த புடவையின் மதிப்பை சித்தார்த்தன் அறியமாட்டான்.


அறிந்திருந்தால் தங்கைகளின் திருமணத்தின்போதே விற்றிருப்பான். அதுவொரு பழைய புடவை என்பதால் அவ்வளவு விலைபோகாது என்று நினைத்திருந்தான்.


குறிப்பாக அது அவனது அன்னையின் திருமணப்புடவை. அவனின் தந்தை முன்னேறி வந்த கால கட்டத்தில் பார்த்து பார்த்து தன் வருங்கால மனைவிக்காக வாங்கியது. அநுத்தமாவின் நகைகள் அவரின் பெண்களுக்கு சென்றிருக்க, மகனுக்கு மிஞ்சியது அது மட்டுமே. அவர் முன்பே கேலியாக அது அவனின் மனைவிக்கு தான் என்று குறிப்பிட்டிருக்கிறார்.


அந்த கடான் பட்டி‌னை தொட்டு தடவிப் பார்த்தாள் ஆத்மீகா கண்ணபிரான். பொதுவாக‌ அவளுக்கு புடவைகளின் மீது ஆர்வம் கிடையாது. அதை அணிவது அவளுக்கு மலைப்பாம்பை தன் மேல் சுற்றிக்கொள்வது போல் அவ்வளவு மூச்சுமுட்டலை தரும். ஆனால், இன்று‌ அவன் கொடுத்தான்‌ என்று‌ தடவிப் பார்த்தாள். பின், அவனை பார்த்தாள்.


“இது என்‌ அம்மாவோட கல்யாணப்புடவை மேடம். அவங்களுக்கு மருமகளா வரப்போறவளுக்கு கொடுக்க ஆசைப்பட்டது. அப்பறம் உங்களுக்கு மட்டுமே சொந்தமான வாட்ச்” என்று தனது பேண்ட் பாக்கெட்டிற்குள் கையைவிட்டு அதை எடுத்து தந்தான்.


அவள் கோவில் தீர்த்தம் போல் அதை வாங்கி பார்த்தாள். மனம் சிறகடித்தது. அவன் புறப்படுவதற்காக எழுந்து நின்றபோது, தடுத்தாள்.


“நானும் சித்தாராவும் ஒரு பெர்த்டே பார்ட்டிக்கு போறோம் மிஸ்டர் சித்தார்த்தன். நீங்க ஃப்ரீனா எங்களோட ஜாயின் பண்ணிக்கலாமே” என்றதும், அவன் சற்று யோசித்துவிட்டு சரியென்று தோள்களை குலுக்கினான்.


ஏற்கனவே விருந்திற்கு பாசிப்பச்சை நிற கோட்சூட் அணிந்து தயாராய் நின்றவள், சித்தாராவை அழைத்து வருவதாக மேலே சென்றாள்.


தனது‌ தோழியின் பிறந்தநாள் என்பதால் குதூகலமாக வெளீர்பச்சை நிறத்தில் டிஸ்யூ சில்க் கவுன் ஒன்றை அணிந்து பச்சை ஆப்பிளாய் நின்றிருந்தாள் சித்தாரா.


அவளை கீழே அனுப்பிய‌ ஆத்மீகா, புடவையை அலமாரியில் வைக்க மனமில்லாமல், அதே நிறத்தில் பொருத்தமான க்ராப் டாப் ஒன்றை அணிந்து, புடவையை கட்டி முடித்து கீழே வந்தாள்.


சித்தார்த்தன் உறைந்துவிட்டான். கட்டியவளுக்கு அது போதும்.


அவனின் மடியில் பாந்தமாய் அமர்ந்திருந்த சித்தாராவோ, “மம்மி இந்த அங்கிளும் நம்ம கூட ப்ரணு பெர்த்டே பார்ட்டிக்கு வராங்களாம். பாவம் கூட்டிட்டு போலாமா?” என்றதும்,


சிரித்துக்கொண்டே, “கண்டிப்பா” என்றாள் ஆத்மீகா.


மடிப்பு வைக்காமல் தோளும் இடக்கையும் தாங்கிய புடவையை லேசாக நகர்த்தி கைக்கடிகாரத்தை காண்பித்தாள். அவன் வசீகரமாய் புன்னகைத்தான்.


மூவரும் இணைந்து விருந்தில் கலந்து கொண்டார்கள்.


குழந்தைகளுக்கான நிறைய பொழுதுபோக்கு அம்சங்கள் காணப்பட்டது அங்கு. அதனால், சித்தார்த்தனின் கையிலிருந்து அதை நோக்கி ஓடிவிட்டாள் சித்தாரா.


ஆனால், பிறந்தநாள் கொண்டாடும் குழந்தையின் தாயைப் பார்த்தபோது மெலிதாக அதிர்ந்தான் சித்தார்த்தன்.


ஏனெனில், அது அவனது பழைய முதலாளியின் மகள். ஒருநாள் அவளுடன் வந்தபோது தான் ஆத்மீகா கண்ணபிரானை முதல் முதலாக சந்தித்தான் சித்தார்த்தன்.


சற்று தள்ளி அந்த லவ்லி உணவகத்தின் முதலாளியுமே நின்றிருந்தார். மரியாதைக்காய் அவரிடம் பேசச்சென்றான் சித்தார்த்தன்.


அப்போது அவன் ஆத்மீகா கண்ணபிரானுடன் வந்திருப்பதை அறிந்துகொண்டு அவளின் தோழி பிருந்தா அவளை தனியே தள்ளிக்கொண்டு போனாள்.


அவளிடம், “எப்படி ஆத்மீ? என்னால நம்பவே முடியல. நீ மிஸ்டர் ஹாண்ட்ஸமை ச்சே! சித்தார்த்தனை வழிக்கு கொண்டு வந்தது எனக்கு ரொம்ப ரொம்ப ஆச்சரியமா இருக்கு. நீயொரு நிகழ்கால க்ளோயோபாட்ரா. ஆமா பொதுவா நீ இப்படி ஆட்களோட வெளிய சுத்தறது கிடையாதே - இன்னைக்கென்ன? ஒருவேளை இடையில விட்டதை மறுபடியும் ஆரம்பிச்சிட்டங்கறதுக்கான குறியீடா? ஆமா இவரோட ஒருநாள் ரேட் எவ்ளோ?” என்றதும், ஆத்மீகா கண்ணபிரானின் கண்கள் சிவந்தன. ரத்தம் கொதித்தது. பளாரென தோழியின் கன்னத்திலொரு அறைவிட்டாள்.


“மைண்ட் யுவர் வேர்ட்ஸ் பிருந்து! அவர் அப்படிப்பட்டவர் கிடையாது. அவர் ராமன். அவரும் நானும் கல்யாணம் பண்ணிக்கப் போறோம்” என்று வார்த்தைகளை கடித்து துப்பியதும், வாயைப் பிளந்தாள் பிருந்தா.


“யூ ஆர் இன்சேன்! உன்னோட ரேஞ்சுக்கு நீ இவரைப்போய் கல்யாணம் பண்ணிக்கப்போறியா? ஆத்மீ, பிசினஸ்ல சரியான முடிவுகளை எடுக்கற நீ, வாழ்க்கையில தப்பான முடிவை எடுக்கற” என்று எச்சரித்தாள்.


ஆத்மீகா கண்ணபிரானுக்கு ஆத்திரமாத்திரமாக வந்தது. அவனிடம் என்ன குறையை இவள் கண்டாள் என்று நெஞ்சம் குமுறியது‌.


“என்னை ஏத்துக்கற நீ- என் குழந்தையை ஏத்துக்கற நீ- என் குழந்தையோட அப்பாவை மட்டும் ஏன் ஏத்துக்க மாட்டிக்கற?” எ‌ன்று ஒரே போடாகப் போட்டாள்.


அதிர்ச்சியில் வாயடைத்து நின்றாள் பிருந்தா.


அவளிடமிருந்து பார்வையை திருப்பியபோது தான், தாங்கள் பேசியதனைத்தையும் கேட்டுவிட்ட சித்தார்த்தனை பார்த்தாள். அவனை அவமானப்படுத்திய குற்றவுணர்ச்சி அவள் மனதை வாட்டியது.


அவன் கையைப் பற்றிக்கொண்டு சித்தாராவையும் அழைத்துக்கொண்டு அங்கிருந்து வேகவேகமாக வெளியேறினாள்.


வீட்டையடைந்தபோது சித்தாரா தூங்கியிருந்தாள்.


காரிலிருந்து இறங்கப்போனவனை தடுத்தவள், “நானே உங்களை வீட்டுல கொண்டுபோய் விட்டுடுறேன். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. சித்தாராவை மேல படுக்க வச்சிட்டு வந்திடுறேன்” என்று உள்ளே சென்றாள்.


வெளியே வரும்போது வழக்கமான கோட்சூட்டில் இருந்தாள்.


காரை இயக்கியதுமே, “வீட்டுக்கு சீக்கிரமா போயே ஆகனுமா?” என்று கேட்டாள்.


அவன் தலை இல்லையென்று ஆடியது. பெருமூச்சு விட்டாள்.


அவளின் மன அலைப்புறுதல் சாலையில் கவனத்தை பதிக்கும் போது கொஞ்சம் காணாமல் போயிருந்தது.


நேரே பெசன்ட் நகர் கடற்கரையில் வந்து காரை நிறுத்தியவள், மணலில் கால்கள் புதைய புதைய கடலை நோக்கி நடந்தாள். அவன் பின் தொடர்ந்தான். பலத்தக்காற்று! அலைகளெல்லாம் அவள் மனதுடன் டெலிபதியில் உள்ளவைகள் போல கொந்தளித்துக் கொண்டிருந்தன.


வானில் நிலவை தேடினாள். ஏமாற்றம்! இன்று அமாவாசை என்று அறிந்ததும், அவனை நோக்கி திரும்பினாள். அவன் முகம் அவள் முன் நிலவாக!


அவள் குரல் கரகரப்புடன் ஒலிக்கத் துவங்கியது.


“நான் என் கடந்த காலம் இப்படியெல்லாம் உங்களை பாதிக்கும்னு எதிர்பார்க்கல மிஸ்டர் சித்தார்த்தன். ஐ அம் எக்ஸ்ட்ரீம்லி சாரி. இவ்வளவு நாள் சரியா தெரிஞ்ச எல்லாம், இப்ப தப்பா இருக்கு. எனக்கு நீங்க அதிகமோனு தோணுது. ஆனாலும்.. ஆனாலும்… நீங்க எனக்கு வேணும்னு இருக்கு. முதல்தடவை நீங்க என் வீட்டுக்கு வந்தப்ப நான் உங்களை செல்ஃபி எடுத்தது ஞாபகமிருக்கா மிஸ்டர் சித்தார்த்தன்? அதை நான் பிருந்தாவுக்கு காமிச்சி காலரை தூக்கி விட்டுக்க தான் எடுத்தேன். ஆனா, எல்லாம் தலைகீழாகிடுச்சி. அதுக்காக எல்லாரும் என்னை காயப்படுத்தட்டும். ஆனா உங்களை ஏன்? இனி இது அடிக்கடி நடக்கும். நீங்க என்னை வெறுத்திடலையே மிஸ்டர் சித்தார்த்தன்? உங்களை கூட்டுப்புழுவா எனக்குள்ள அடைச்சி வைக்க ஆசை. ஆனா நீங்க பட்டாம்பூச்சி மிஸ்டர் சித்தார்த்தன். பறந்து போங்க.” என்றபோது ஒரு சொட்டு கண்ணீர் அவளின் வலக்கன்னத்தில் இறங்கியது.


முதல்முறை அவள் கண்ணீரை காண்கிறான் சித்தார்த்தன். அவன் துடைக்க எத்தனிக்கும் முன் கோட் பாக்கெட்டிலிருந்த கைக்குட்டையை எடுத்து அவளே துடைத்துக்கொண்டாள்.


கையிலிருந்த கைக்கடிகாரத்தை கழற்றி அவனிடம் நீட்டினாள்.


அவன் அசையாமல் நின்றான். பலத்த மௌனம் அவர்கள் இருவருக்குமிடையில்.


அவன் தொண்டையை செருமி ஆரம்பித்தான்: “நீங்க ஏன் மேடம் சித்தாராவை இந்த உலகத்துக்கு கொண்டு வந்தீங்க?”


“அவ பார்க்க உங்களை மாதிரியே இருப்பாளோன்னு ஒரு நட்பாசை மிஸ்டர் சித்தார்த்தன். ஆனா, உங்கக்கூட எடுத்த செல்ஃபி தான் தினமும் கைக்கொடுத்துச்சி”


“ஏன் சித்தாரான்னு பேர் வச்சீங்க?”


“உங்க பேர் ஏதாவதொரு வகையில என் காதுல கேட்டுட்டே இருக்கனும்னு நெனச்சேன். சரியான பைத்தியக்காரி நான்.”


“நான் இருந்த ரூம் ஒரு கரடி குகை. சரியா கால் நீட்டி கூட தூங்க முடியாது. அங்க ஏசி கிடையாது. தலகாணி கல்லு மாதிரி இருக்கும். அந்த மெத்தை‌ இருபது வருசம் பழசு. அங்க ஏன் மேடம் நீங்க வந்து படுத்தீங்க?”


“அறை முழுக்க உங்க வாசனை நெறைஞ்சு‌ கெடந்ததே!”


அவன் முகம் முழுக்க விகசிப்பு. மெதுவாக அவளை நெருங்கி அந்த கைக்கடிகாரத்தை அவளின் கையிலேயே கட்டிவிட்டான்.


“அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்

செறிதோறும் சேயிழை மாட்டு” என்று முணுமுணுத்தவனை அவள் புரியாமல் பார்த்தாள்.



“திருக்குறள் மேடம். கலைஞரோட உரையையே சொல்றேன். மாம்பழ மேனியில்- அழகிய அணிகலன்கள் பூண்ட மங்கையிடம் இன்பம் நுகரும் போதெல்லாம் ஏற்படும் காதலானது, இதுவரை அறியாதவற்றைப் புதிது புதிதாக அறிவதுபோல் இருக்கிறது.” என்று ஒப்பித்தான்.



“நீங்க ஒரே ஒரு தடவை தான் என்கிட்ட இன்பம் நுகர்ந்திருக்கீங்க மிஸ்டர் சித்தார்த்தன்” என்று கசப்பாக சிரித்தாள்.



“அந்த அவச்சொல்லுக்கு இனியும் ஆளாக மாட்டேன் மேடம்” என்று அவளின் இதழ்களை தன்வசப்படுத்தினான்.



இருவரி‌ன் இதழ்களும் வற்றாத சுவையான மையினால் காதல் கவிதைகள் இயற்றின. அவள் எக்கி நின்றபோது கால்விரல்கள் மணலுள் புதைந்தன- அவன் கை விரல்கள் அவள் இடையுள் புதைந்த மாதிரி.


இதுவரை முப்புலன்களில் ஜீவித்த அவளின் காதல், அவனால் ஐம்புலன்களில் ஜீவித்தது.


சுபம்!


நாவலின் இறுதிவரை லைக் இட்டு, கமெண்ட் இட்டு உடன் பயணித்த அனைவருக்கும் நன்றி நண்பர்களே! குறிப்பாக வாசகர் கவிதா அவர்களுக்கும், ஷமீம் அவர்களுக்கும் மிக்க நன்றி.


மேலும், செந்தூரம் தமிழ் நாவல் போட்டியை தொய்வின்றி சிறப்புற நடத்தும் எழுத்தாளர்கள் நிதனிபிரபு, ரோசிகஜன் மற்றும் விஷாகினி அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.


இனி இந்நாவலை வாசிக்கும் வாசகர்கள் எனக்கு புரியும் ஆகப்பெரும் உதவியாவது இந்நாவலுக்கு விமர்சனம் எழுதுவதும், ஸ்டோரி லிங்க் பகிர்வதும் தான். செய்வீர்கள் என்று நம்புகிறேன். நன்றி!
 
Last edited by a moderator:
Top Bottom