• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அசோகவனத்தில் ராமன் - 6

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 6


அன்றிரவு மகிழ்ச்சியாக வீடு திரும்பினான் சித்தார்த்தன். அவனுக்கு ஆத்மீகா கண்ணபிரான் இவ்வளவு இரக்க குணம் கொண்டவளாக இருந்தது வியப்பாக இருந்தது.


என்னயிருந்தாலும் தன் அன்னையை போல் அவளும் ஒரு பெண் தானே என்று யோசித்தான். அன்னையின் நினைவில் அவரின் புகைப்படத்திற்கு சூட்ட, ஒரு முழம் மல்லிகைப்பூவை வாங்கிக்கொண்டு வந்தான்.


ஆனால், அவனுக்கு முன்பாகவே புகைப்படத்தில் பூ சூட்டப்பட்டிருந்தது. திகைத்தான்.


இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணமாகியிருந்தாலும் இன்னும் புதுமணப்பெண்ணின் பூரிப்புடன் காணப்பட்ட‌, அவனது இரண்டாவது தங்கை மதுமதியை பார்த்ததும் தான், அவனுக்கு பூவின் ரகசியம் புரிந்தது.


“மது தனியாவா வந்த?” என்று ஒருவேளை அவள் தனது கணவனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இங்கே வந்திருக்கிறாளோ என்று சந்தேகமாக வினவ,


மதுமதி, “இல்லண்ணா அவர் கூட தான் வந்தேன். இதோ இருக்காரே.” என்று தன் பின்னேயே வந்த கணவனை காண்பித்தாள்.


பின், “உன்னை பார்த்துட்டு போகத் தாண்ணா வெயிட்டிங். உனக்கொரு குட்‌ நியூஸ் வச்சிருக்கோம் நாங்க. நீ.. நீ.. மாமா ஆகப் போறண்ணா” என்றவள் வெட்கப்பட, அவனுக்கு மனம் ஆசுவாசப்பட்டது.


“மது உண்மையாவா? ரொம்ப சந்தோசமா இருக்குடா. தாயாகறதெல்லாம் ஒரு வரம்னு சொல்வாங்க. நீ வரம் வாங்கியிருக்க” என்று அவள் தலையை ஆதுரமாய் தடவிவிட்டான்.


பின், ஞாபகம் வந்தவனாய் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த பானுமதியிடம், “காபி டீ ஏதாவது போட்டுக் கொடுத்தியா பானு? மது நான் போய் உனக்கு பிடிச்ச தட்டு இட்லி வாங்கிட்டு வரட்டுமா? அவருக்கு என்ன பிடிக்கும்?” என்று கேட்டதும்,


“அய்யோ! இல்லண்ணா. அத்தை எங்களுக்காக சப்பாத்தி குருமா செஞ்சு வச்சு வெயிட் பண்ணிட்டு இருக்காங்களாம். லேட்டா போனா ரெண்டுபேருக்குமே டோஸ் விழும்.” என்றவள் கிளம்புவதற்காக பரபரக்க, அண்ணனின் முகம் வாடியது.


திருமணத்திற்கு முன்பு எப்படி எல்லோரிடமும் துணிச்சலாக வாயடிப்பாள் இந்த மதுமதி? அவளின் அந்த தைரியம் எங்கே போயிற்று? தண்ணீராய் பாத்திரத்திற்கு தகுந்தாற்போல் தன்னை வளைத்துக்கொண்டாளா என்று ஆச்சரியமாய் இருந்தது அவனுக்கு.


மதுமதியோ அவசரமாய் விடைபெற்றாள்.


மனம் கனத்தது அவனுக்கு. ஆனாலும், பிறந்த வீட்டிற்கு சென்று வரவாவது அனுமதிக்கும் அவளது மாமியாரை நினைத்து சற்று தேறத்தான் செய்தான்.


பின்னே அவனது முதல் தங்கை இந்துமதியின் மாமியார் அவள் பிறந்து விட்டிற்கு சென்றாலே, பேரனுக்கு கொசுக்கடி தடம் வந்துவிடுகிறது என்று, அவளை இங்கே அனுப்ப மறுக்கும் அக்கிரமமும் நடக்கத் தானே செய்கிறது? தங்கையரை நினைத்து பெருமூச்சு விட்டான்.


அடுத்து தனது உடன் பிறந்தவர்களை ஒரேயிடத்தில் சந்திக்கும் வாய்ப்பு எப்போது கிடைக்குமோ என்றவன் கலங்கிக் கொண்டிருக்க, பானுமதி தனது தமக்கை கொடுத்த இரண்டாயிரம் ரூபாய் தாளையே விரித்து பார்த்துக் கொண்டிருந்தாள். போகன்வில்லா பூத்துக் குலுங்கியது அவளுக்குள்.


அதே சமயம் வண்டலூரில் இருந்த தனது பங்களாவில் மெத்தையில் சிகரெட் புகைத்தபடியே யோசித்துக் கொண்டிருந்தாள் ஆத்மீகா கண்ணபிரான்.


அவள் இதற்கு முன்பு சித்தார்த்தனை போல் பேராசையற்ற ஒரு ஆண்மகனை சந்தித்தது கிடையாது. ஏன் மாதத்திற்கு இருவர் என அவள் தன் கட்டிலுக்கு வரவழைக்கும் ஆண்கள் கூட அழகில் அவனுக்கு ஒருபடி கீழ் தான்.


ஏனோ அவன் மீதான மோகம் அவளுக்கு கூடிக்கொண்டேயிருப்பது போல் ஒரு பிரம்மை. தலையை உதறி பீங்கான் பூந்துவாலையில் சிகரெட்டின் நெருப்புத் தலையை துவட்டினாள்.


மறுநாள் தனது நண்பன் விஹானின் பிறந்தநாள் என்பதால் அன்றைய இரவு‌ கொண்டாட்டத்தில் அவனுக்கு பரிசளிப்பதற்காக, அந்த பேரங்காடியில் நின்று தனக்கு பிடித்த மாதிரி ஒரு கைக்கடிகாரத்தை தேடிக்கொண்டிருந்தாள் ஆத்மீகா கண்ணபிரான்.


அவளுக்கு சற்று தள்ளி நின்று தனது காதலனுக்காக இரண்டாயிரம் ரூபாய் மதிப்பில் கைக்கடிகாரம் ஒன்றை தேடிக் கொண்டிருந்தாள் பானுமதி.


அவள் கேட்ட தொகையில் காண்பிக்கப்பட்டவை எதுவும் அவளுக்கு திருப்தியாயில்லை. அவளுக்கு திருப்தியாக இருந்தவையோ இருபதாயிரம் முப்பதாயிரம் விலை‌ மதிப்பில் இருந்தன. ஏக்கத்துடன் வேடிக்கை பார்க்க மட்டுமே முடிந்தது அவளால்.


அப்போது தான் ஆத்மீகா கண்ணபிரான் அவளது பார்வை வட்டத்தில் சிக்கினாள். அன்று அவளை கோவிலில் பார்த்தது நன்றாக நினைவிருந்தது அவளுக்கு.


அதிலும் அன்று அந்த ஹாஃப் வொயிட் நிற சுடிதாரின் கழுத்திறக்கத்தில் அவள் மாட்டியிருந்த அந்த போலரைஸ்டு ப்ராடா சன்கிளாஸ், அவளின் கண்களை பெரிதாக்கத் தானே செய்தது!


இன்று ஆத்மீகா அட்டகாசமாக பிஸ்கட் நிற பிளேசர், உள்ளே இடுப்பளவுச் சட்டை, அதே நிறத்தில் கால்சட்டை என்று ஒரு தொழிலதிபருக்கு உரிய கம்பீரத் தோற்றத்தில் நின்றது கண்டு தாழ்வுணர்ச்சியோடு பார்த்தாள்.


அதரங்களுக்கு மேட் ந்யூட் லிப்ஸ்டிக், கண்ணிமைகளுக்கு அடர் பழுப்பு நிற ஐ-ஷாடோவ், முகத்தில் லேசாக கான்டூர் திருத்தியென்று நேர்த்தியாக இருந்த ஆத்மீகா கண்ணபிரான், நேர்வகிடெடுத்து விரித்து விட்டிருந்த மினுமினுப்பான கூந்தல் கூட பானுவை இன்னும் குன்றச் செய்தது.


தன் கையில் ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள கிங் செய்கோ கைக்கடிகாரத்தை கட்டிப் பார்த்த ஆத்மீகா இருமுறை கையை திருப்பி திருப்பி பார்த்துவிட்டு, அதற்குரிய பணத்தை செலுத்தினாள். கடையின் சிப்பந்தி அதை பரிசு பொட்டலமாகக் கட்டச் சென்ற போது, கடையை சுற்றி நோட்டம் விட்டாள்.


அப்போது பானுமதியும் பட்டாள்.


ஆச்சரியமடைந்தவளாக அவளிடம் சென்றவள், “ஹாய்! ஐ அம் ஆத்மீகா கண்ணபிரான்” என்று வலக்கையை நீட்ட,


திகைத்தவள், “நான்.. நான்.. பானு” என்றாள்.


அவ்வேளை இரு கரடிகள் நுழைந்தார்கள். அவர்கள் கைகளில் கனமான கைத்துப்பாக்கிகள் இருந்தன.


கடையின் சிப்பந்திகள் அவர்களின் மிரட்டலில் இரு கைகளையும் மேலே தூக்கிக்கொண்டு நிற்க, அங்கு நின்றிருந்த பன்னிரண்டு வாடிக்கையாளர்களும் அனிச்சையாக கைகளை மேலே தூக்கினர். ஆனால், ஆத்மீகா கண்ணபிரானை தவிர.


வாடிக்கையாளர்களையும், சிப்பந்திகளையும் ஒரே பக்கமாக நிற்க வைத்த இருவரும், ஆத்மீகா மட்டும் தனது இடத்தைவிட்டு அசையாமல் நிற்பது கண்டு, “ஏய்! என்ன உனக்கு உயிர் மேல பயம் இல்லையா? அங்கப்போய் நில்லு” என்று துப்பாக்கியை தூக்கிக் காட்ட, அதனை அசகாயமாக அவனது கையிலிருந்து தட்டிப் பறித்தவள், தான் கற்றிருந்த கராத்தேவின் உதவியால் அவனின் உயிர் நாடியிலேயே ஒரு உதைவிட்டாள்.


அவன் சுருண்டு விழுந்தபோது காப்பாற்ற இன்னொருவன் ஓடி வர, அவனின் வயிற்றிலும் காற்றில் எம்பி ஒரு உதை. பின்னாலிருந்த கண்ணாடிப்‌ பெட்டியில் போய் முட்டி விழுந்தான்‌ அவன். துப்பாக்கி காததூரம் கிடந்தது.


கூட்டத்திலிருந்து ஓடி வந்த சிப்பந்திகள், “மேடம் இவங்க ரெண்டு பேரும் எங்க ஓவ்னரோட சன்ஸ். கடை விளம்பரத்துக்காக நேச்சுரலா இருக்கனும்னு இப்படியொரு கான்சப்ட் பண்ண ஆசைப்பட்டாங்க. எங்க வொர்கர்ஸ் எல்லாருக்குமே இது தெரியும்.” என்று கீழே கிடந்தவர்களை தூக்கி நிறுத்தியதும்,


“வாட் நான்சன்ஸ்? கஸ்டமர்ஸை உங்க தேவைகளுக்கு உபயோகப்படுத்திக்கற உரிமையை யார் உங்களுக்கு கொடுத்தது? பாருங்க எல்லாரும் எவ்வளவு பயந்து போய் நிற்கறாங்கன்னு. நீங்களே உங்க கடை பேரை‌ கெடுத்துக்கற முட்டாள்தனத்துக்கு பேரு விளம்பரமா? விளக்கமாத்துக்கு பேரு பட்டுகுஞ்சம். ம்?” என்று இளக்காரமாய் கர்ஜித்த வேளையில், கூட்டம் சலசலத்துக்கொண்டே வெளியேறியது. பானுமதியும்‌ தான்.


ஆத்மீகா அந்த தற்குறிகளை அதற்கு மேல் வறுக்க விருப்பமின்றி, “எங்க நான் கிஃப்ட் பேக் பண்ண சொன்ன வாட்ச்?” என்று கேட்க, சிப்பந்திகள் பொட்டலத்தை அவள் கையில் வைத்தனர்.


முறைத்துக்கொண்டே வெளியேறினாள்.


அன்றிரவு, லைலக் நிற கோட் சூட்டில் அவள் அந்த பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டபோது விஹான், “ஆத்மீ… மை பெஸ்ட் ஃப்ரெண்ட்?” என்று தன் இரு கைகளையும் விரித்து அவளை கட்டியணைக்க,


தானும் மனதார கட்டிக்கொண்டவள், “ஹாப்பி பர்த்டே விஹான்” என்று அவனை விடுவித்தாள்.


அவன், “எங்க பர்த்டே பாய்க்கு கிஃப்ட்?” என்றதும்,


“நல்ல பண்புகளை அளவுக்கதிகமா கத்து வச்சிருக்கற போல?” என்று நையாண்டி பேசிவிட்டு, தான் கொண்டு‌ வந்த காப்பி நிற ஹமீஸ் பர்கின் கைப்பையிலிருந்து, பரிசு பொட்டலத்தை எடுத்துக் கொடுத்தாள்.


ஆனால், அவன் அதை ஆர்வமாக பிரித்த போது தான் அவள் முகம் விளக்கெண்ணெய் குடித்தது.


காரணம், அது அவள் தேர்வு செய்த கைக்கடிகாரமே கிடையாது. ஆனால், அதையும் அழகாக இருக்கிறது என்றான் விஹான்.


கையில் அவளுக்கு அதை அணிந்துகாட்டும் விதமாய் அவன் தான் ஏற்கனவே அணிந்திருந்த கைக்கடிகாரத்தை கழற்றப்போக, அவள் தடுத்து நிறுத்தினாள்.


அவன் கையை திருப்பி திருப்பி பார்த்தாள். காலையில் அவள் பணம் செலுத்தி ரசீது பெற்ற அதே கிங் செய்கோ கைக்கடிகாரத்தை தான் விஹான் தற்போது அணிந்திருந்தான். ஒரு நொடி துணுக்குற்று, பின் இயல்புக்கு திரும்பினாள்.


“வாட்ச் ரொம்ப நல்லாயிருக்கு” என்று மனதார தெரிவித்தாள்.


“இதுவும் இன்னைக்கு வந்த பிறந்த நாள் பரிசு தான் ஆத்மீ. மத்த பரிசுகளை விட இது ரொம்ப ஸ்பெசல். ஏன் தெரியுமா? நான் முன்னாடியே சொன்னேன் இல்லையா? நான் ஒரு பேரழகியை விரும்பறேன்னு. அவ கொடுத்தது தான்.” என்று முகம் கொள்ளா புன்னகையுடன் கூறினான்.


“ஓ” என்று யோசனையாக நெற்றியை சுருக்கியவள், “உன் பேரழகிக்கு பேர் எதுவும் வைக்கலையா அவ அப்பா அம்மா?” என்று கிண்டலாகக் கேட்டாள்.


அவன் தன் சிங்கப்பல் தெற்றிய சிரிப்புடன், “ஏன் வைக்காம? அவப்பேரு பானுமதி” என்றான்.


அவள் மீண்டும் “ஓ” என்றதோடு அங்கிருந்து சென்றாள்.



தொடரும்…

சும்மாவே ஆடுவாள் நம்ம ஆத்மீகா கண்ணபிரான். இதில் இந்த பானுமதி வேறு சலங்கையை கட்டி விட்டுட்டாளே!

இதுவொரு போட்டிக்கதை என்பதை மறக்கவேண்டாம் நண்பர்களே! பசங்க படத்தில் வருவது போல் என்னை உற்சாகப்படுத்த கைத்தட்ட வேண்டாம். லைக்கையும், கமெண்ட்டையும் தட்டினாலே போதும்.
 
Last edited by a moderator:

Sowdharani

Well-known member
பார்சல் மாறி போனதுக்கு பானு என்ன பண்ணுவா ஆனா அதை மறைத்து அதே கிப்ட் யை கொடுதகு இருக்க வேண்டாம்
 

Gowri Karthikeyan

Well-known member
சூப்பர் கிஃப்ட் change ஆகிட்டு போல....
அதையும் அந்த புள்ளை இவனுக்கு கிஃப்ட்டா கொடுத்துட்டு போயிட்டா.....
இப்ப ஆத்மி கண்ணிலே பட்டுடுச்சி
 

STN-124

New member
பார்சல் மாறி போனதுக்கு பானு என்ன பண்ணுவா ஆனா அதை மறைத்து அதே கிப்ட் யை கொடுதகு இருக்க வேண்டாம்
😍இதற்கு நன்றாக அனுபவிப்பாள் சிஸ்😏
 

STN-124

New member
சூப்பர் கிஃப்ட் change ஆகிட்டு போல....
அதையும் அந்த புள்ளை இவனுக்கு கிஃப்ட்டா கொடுத்துட்டு போயிட்டா.....
இப்ப ஆத்மி கண்ணிலே பட்டுடுச்சி
அவ ஆட்டம் இனி ஆரம்பம் சிஸ்... அவ்வ்வ்வ்😄❤
 
Top Bottom