அத்தியாயம் - 1

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Kavithillai

New member
Staff member
Apr 13, 2026
3
1
3
India
மதிய நேரத்து வெயில், விடுதி அறையின் தூசி படிந்த ஜன்னல் திரைச்சீலைகள் வழியாக மெலிதாக ஊடுருவி, தரையில் நீளமான ஆரஞ்சு நிறக் கோடுகளை வரைந்திருந்தது. தன் குறுகிய கட்டிலில் சொகுசாய் உறங்கிக் கொண்டிருந்தாள் யாழினி. அவள் மார்பின் மேல் சோழர் வரலாற்றைப் பற்றிய ஒரு தடிமனான குறிப்புப் புத்தகம் திறந்து கிடந்தது. திடீரென, அவளின் அமைதியான உறக்கத்தை கலைத்தது கைப்பேசி அழைப்பு.

அருகிலிருந்த மேஜையின் மேல் வைக்கப்பட்டிருந்த போன், அதிர்ந்து உரத்த சத்தத்துடன் அலறத் தொடங்கவும், மெல்ல திரும்பி படுத்தாள். தூங்க விடாமல் அழைப்பு மீண்டும் மீண்டும் வந்துக் கொண்டிருக்கவும் அலுத்துக் கொண்டே, கண்களை திறவாமல் கைகளை மட்டும் துழாவி ஹைலைட்டர்கள், பாதி குடித்த டீ கப்புகள், சிதறிய காகிதங்களுக்கு நடுவே கிடந்த போனை ஒருவழியாகப் எடுத்து,

"ஹலோ ..." என்றாள்.

"எவ்வளவு நேரமா கால் பண்ணிட்டு இருக்கேன் ... சீக்கிரம் எடுக்க தெரியாதா ..." என்று சீரிய தோழியின் கோபத்தை கண்டு கண்ணை கசக்கிக் கொண்டே எழுந்து உட்கார்ந்தாள் யாழினி.

"ம்ப்ச் ... ஏண்டி கத்துற ... செம்ம டயர்ட் டி ... ஒரு வழியா ஆதித்ய கரிகாலன் பத்தி அக்குவேறு ஆணிவேறா முழு ரிசர்ச் டாக்குமெண்டையும் முடிச்சு பிரிண்ட் அவுட் எடுத்து வச்சிருக்கேன் ... எஸ்ட்ராவா அவன பத்தின ஆடியோ-விஷுவலும் விடிய விடிய தூங்காம உட்கார்ந்து ரெடி பண்ணியிருக்கேன் ... பக்காவா வந்துருக்கு ... என் கண்ணே பட்டுடும் போல அவ்வளவு அழகா பார்த்து பார்த்து செதுக்கிருக்கேன் ஆதித்யன ..." என்று பெருமைபட்டுக் கொண்ட தோழியை நினைத்து வேதனை கொண்டாள் ஸ்வேதா.

"யாழ் ... அந்த எரும ப்ரீத்தா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவளோட தீசிஸ்ச சப்மிட் பண்ணிருக்கா டி ..." என்று தயங்கி தயங்கி ஒலித்த குரலில் குழப்பம் கொண்ட யாழ்,

"அந்த எரும என்ன பண்ணா நமக்கு என்ன டி ... இத சொல்லத்தான் என்ன எழுப்பி விட்டியா ... சரியான லூசு ..." திட்டிக் கொண்டே அழைப்பை துண்டிக்க போனவள்,

"லூசு ... அவ ஆதித்த கரிகாலன் தலைப்புல தீசிஸ சப்மிட் பண்ணிருக்கா ..." என்ற பதிலில் ஷாக் அடித்தது போல அதிர்ந்து போனாள்.

என்ன விளையாடுறாளா ... நான் தானே ஆதித்ய கரிகாலன் பத்தி தீசிஸ் பண்றதா நேம் கொடுத்தேன் ... அவ எப்படி சப்மிட் பண்ணலாம் ... ஹெச்.ஓ.டி எப்படி ஒத்துக்கிட்டார் ..." மூச்சடைக்க கத்தியவளுக்கு,

"சிஸ்டத்துல அவ பேர் கீழ ஆதித்ய கரிகாலனும் ... உன் நேம்கு சங்ககால கரிகாலனும் லாக் ஆகியிருக்கு டி ..." கவலையுடன் பதிலளித்த தோழியிடம்,

"எப்படிடி ..." என்ற யாழினியின் குரல் கமறி ஒலித்தது.

"யாருக்கும் தெரியாம திருட்டு தனம் பண்ணியிருக்கா டி ... அவ முதல்ல சங்ககால கரிகாலன் தலைப்பைத்தான் எடுத்தா. ஆனா, அவனைப் பத்தி நெட்லயும், லைப்ரரிலயும் ஒரு சின்ன துப்பு கூட கிடைக்கல. அவளால டாக்குமெண்ட் ரெடி பண்ண முடியாதுனு தெரிஞ்சுடுச்சு ... அதான் அவளோட பிரின்சிபால் மாமாவ வச்சு டைட்டில மாத்திக்கிட்டா ..." என்று ஆத்திரத்துடன் உண்மையைக் கொட்டினாள் ஸ்வேதா.

ப்ரீதா ஆராய்ச்சித் துறைக்கு வந்தது முதலே யாழினிக்குச் ஜென்ம எதிரி. எப்பொழுதும் கீரியும் பாம்புமாய் சீறிக் கொள்வார்கள். ஆனால் இன்று சத்தியமாக தன் இரண்டு வருட உழைப்பை ஒரே நொடியில் திருடுவாள் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. நாளை காலைக்குள் ஆவணத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். இப்போது போய் பேராசிரியரிடம் சண்டை போட்டால், செல்வாக்கு மிக்க ப்ரீதாவுக்கு முன்னால் தனக்குத்தான் தண்டனை கிடைக்கும். தன் இரண்டு வருட முதுகலை பட்டப்படிப்பே பாழாய் போய்விடும் என்று நினைத்தவளுக்கு தலை சுற்றியது.

மேஜை மேல் இருந்த ஆதித்த கரிகாலன் பற்றிய குறிப்புப் புத்தகத்தை ஆத்திரத்துடன் மூடினாள். அவளது கண்கள் சிவந்தன. சில நொடிகள் அமைதியாக கண்ணை மூடி திறந்தவளுக்கு தன்னை நிலைப்படுத்திக் கொள்ள சிறிது நேரம் பிடித்தது. அவள் அமைதியை கண்டு பதறிப் போன ஸ்வேதா,

"ஹலோ ... ஹலோ ... யாழ் ... லைன்ல இருக்கியா ..." என்று அலறவும்,

"நா கிளம்பி காலேஜ்கு வரேன் ... நீ ஹெச்.ஓ.டி ரூம்கிட்ட வெய்ட் பண்ணு ..." என்றவள் அவள் பதிலுக்கு கூட காத்திராமல் போனை வைத்திருந்தாள்.

கையிலிருந்த போனை தூக்கி மேஜை மேல் எறிந்துவிட்டு கோபத்துடன் மெத்தையில் சரிந்தவளின் கண்கள் விட்டத்தை வெறித்தபடி கண்ணீர் சொரிந்தது.

ஆதித்திய கரிகாலன் அனைவராலும் நன்கு அறிந்த சோழ இளவரசன் ஆவான். இருந்தும் மக்களுக்கு தெரியாத சில விஷயங்களை அவன் வாழ்ந்ததாக கூறப்பட்ட இடத்திற்கு சென்று அங்குள்ள மக்களிடம் பேசி பல தகவல்களை தேடி எடுத்து இந்த தீசிஸை முடித்திருந்தாள். நினைக்க நினைக்க கண்ணீர் கட்டுப்படுத்த முடியாமல் பெருக்கெடுத்து ஓட, கோபத்துடன் குளியலறைக்குள் சென்றாள்.

தன் முன் கண்ணீருடன் நின்ற பெண்ணை பார்ப்பதற்கு வேதனையாக இருந்தது அந்த பேராசிரியருக்கு. அதுவும் அவள் காட்டிய ஆவணங்களை பார்த்தவருக்கு இதற்காக எவ்வளவு உழைப்பை அப்பெண் போட்டிருக்கிறாள் என்றும் புரிந்தது.

அவர் ஒரு பெருமூச்சுடன் தன் கண்ணாடி வழியே யாழினியைப் பார்த்தார்.

"யாழினி, உன்னோட உழைப்பு என்னன்னு இந்த ரிசர்ச் ஃபைலைப் பார்த்தாலே தெரியுது. ஆதித்த கரிகாலனைப் பத்தி நீ சேகரிச்சிருக்கிற பல தகவல்கள் நிஜமாவே ஒரு மாஸ்டர் பீஸ்! ஆனா..." என்று அவர் தயங்கவும்,

"ஆனா என்ன சார் ... சிஸ்டம்ல என் டைட்டிலை ப்ரீதா திருடியிருக்கா ... அவ மாமா பிரின்சிபால்ங்கிறதுக்காக அவ பண்ணின தப்ப நீங்க எப்படி சார் சப்போர்ட் பண்ணலாம்?" என்ற யாழினியின் குரல் அழுகையையும் தாண்டி ஆத்திரத்தில் நடுங்கியது.

"நான் யாருக்கும் சப்போர்ட் பண்ணல யாழினி. ஆனா யுனிவர்சிட்டி போர்டல் படி, ப்ரீதாவோட ஃபைல் ஆல்ரெடி அப்ரூவ் ஆகி டெல்லி மெயின் ஆபீஸ்க்கு ஃபார்வர்ட் ஆயிடுச்சு. இனிமே அதை யாராலயும் மாத்த முடியாது. நாளைக்குக் காலைல 10 மணிக்கு தீசிஸ் சப்மிட் பண்ற டெட்லைன் ... கைல கிடைக்கிற டீடைல்ஸ் வச்சு நீ புதுசா டாக்குமெண்ட் ரெடி பண்ணி சப்மிட் பண்றது கூட முடியாத காரியம் ..." என்று நிறுத்தியவர், எழுந்து அவளருகே சென்றார். அவளது தோளைத் தட்டி,

"யாழினி ... ப்ரீதா உன்கிட்ட இருந்து ஆதித்த கரிகாலனைத் திருடிட்டதா நீ நினைக்கிற. ஆனா நான் என்ன நினைக்கிறேன்னா, அந்தச் சங்ககாலக் கரிகாலனே தன் வரலாற்றை எழுத உன்ன தேர்ந்தெடுத்திருக்கான்னு தோணுது ... ஆதித்த கரிகாலன் ஒரு இளவரசன் மட்டும்தான். ஆனா, இந்தச் சங்ககால கரிகாலன் சோழ வம்சத்தின் அஸ்திவாரத்தை அமைத்த மாபெரும் பேரரசன்" என்றவர், தன் மேஜை டிராயரைத் திறந்து, ஒரு பழைய குறிப்பேட்டை எடுத்தார்.

"இது நான் முன்னாடி பண்ணின ஒரு சின்ன ஃபீல்ட் வொர்க் நோட்ஸ். சங்ககால கரிகாலன் இளமையில வசிச்ச இடம், மயிலாடுதுறை மாவட்ட எல்லையில இருக்கிற 'கொடிமங்கலம் காடுகள்' பகுதியிலதான் இருந்ததா ஒரு வாய்மொழி வரலாறு இருக்கு. அங்க ஏதோ ஒரு ரகசிய நடுகல் இருக்கிறதாவும் கேள்விப்பட்டிருக்கேன். என்னோட இன்புளுயன்ஸ வச்சு உனக்கு ஒன் வீக் டைம் வாங்கி தரேன் ... முடிஞ்சா அங்க போய் உன் தீசிஸ்க்கு தேடு ... இத விட்டா உன்னோட இந்த ரெண்டு வருஷ 'மாஸ்டர் ஆஃப் ஆர்ட்ஸ்' (M.A.) தொல்லியல் படிப்பு வீணாப்போயிடும் ... யோசிச்சு முடிவெடு ..." என்று அந்த நோட்ஸை அவளிடம் நீட்டினார்.

பேராசிரியரின் வார்த்தைகளும், ப்ரீதாவின் மேல் இருந்த அசாத்தியக் கோபமும் யாழினியின் மனதுக்குள் ஒரு புதிய வெறியைக் கொடுக்க அந்த நோட்டை வாங்கிக் கொண்டாள். புன்முறுவலுடன்,

"பயப்படாம போ ... உன்னால ஏதாவது உண்மை வெளில வருதான்னு பாப்போம் ... அப்புறம் தனியா போகணும்னு பயப்படாத ... அங்க இருக்கிற நம்ம டிபார்ட்மெண்ட் உனக்கு முழு சப்போர்ட் பண்ணுவாங்க ... அங்க போய் நீ பீல்ட் ஒர்க் முடிக்கிற வரைக்கும் உன்கூட ஆளுங்க இருப்பாங்க ... டோண்ட் ஒர்ரி ... ஆல் தி பெஸ்ட் ..." என்று வாழ்த்தி வழியனுப்பிவைத்தார்.

அடுத்த நொடி தான் தங்கியிருந்த விடுதிக்கு சிட்டாய் பறந்த யாழினி நேரத்தை கடத்தாமல் மயிலாடுதுறைக்கு கிளம்ப தயாரானாள். கூடவே வருவேன் என்று அடம்பிடித்த ஸ்வேதாவிடம்,

"ஸ்வே ... நாளைக்கு தீசிஸ் சப்மிட் பண்ற கடைசி நாள் ... சார் எனக்கு மட்டும்தான் டைம் எக்ஸ்டெண்ட் பண்ணிருக்கார் ... நா பாத்துப்பேன் டி ... நீ கவல படாத ... அப்புறம் நா எங்க போயிருக்கேன்னு யார்கிட்டையும் சொல்லாத ..." என்றவள் பையை தூக்கிக் கொண்டு கிளம்பிவிட்டாள்.

மறுநாள் மதியம் ... மயிலாடுதுறை மாவட்ட எல்லையிலுள்ள கொடிமங்கலம் கிராமத்தின் எல்லையில் வந்து யாழினி இறங்கிய போது, வெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. பேராசிரியர் சொன்னபடியே, தொல்லியல் துறையைச் சேர்ந்த இரண்டு உள்ளூர் கள உதவியாளர்கள் அவளுக்காகக் காத்திருந்தனர்.

"வணக்கம்மா... ப்ரொபசர் போன் பண்ணி நீங்க வர்றதை சொன்னாரு. ஆனா, நீங்க தேடி வந்திருக்கிற அந்த நடுகல் இருக்கிற பகுதி ரொம்ப அடர்ந்த காட்டுக்குள்ள இருக்கு ... இப்போல்லாம் அங்க யாரும் போறதே இல்லமா " என்று எச்சரித்தபடி அவர்கள் யாழினியைக் காட்டுப் பாதைக்குள் அழைத்துச் சென்றனர்.

மரங்களின் அடர்த்தி அதிகமாக ஆக, சூரிய ஒளியின் கீற்றுகள் கூடத் தரையைத் தொட முடியாமல் காடு அந்தகார இருளை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தது. பேராசிரியரின் பழைய குறிப்பேட்டையும், கையில் இருந்த மொபைல் மேப்பையும் மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டே யாழினி வேகமாகக் காலடிகளை எடுத்து வைத்தாள்.

திடீரெனக் காட்டின் ஒரு வளைவில், அவளுடன் வந்த இரண்டு உதவியாளர்களும் சற்றுத் தள்ளி முன்னால் சென்றுவிட, யாழினி பேராசிரியரின் நோட்ஸைப் பார்த்துக் கொண்டே தடம் மாறி ஒரு அடர்ந்த முட்புதர் நிறைந்த பகுதிக்குள் நுழைந்தாள். தன் கையில் இருந்த மொபைல் போனைப் பார்த்தவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. நெட்வொர்க் சிக்னல் முற்றிலும் துண்டிக்கப்பட்டு, மொபைல் திரை செயலிழந்து நின்றது.

"அண்ணே... அண்ணே..." என்று அவள் பதற்றத்துடன் கூப்பிட்ட குரல் அந்தக் காட்டின் அமைதியைக் கிழித்ததே தவிர, அவளுடன் வந்தவர்களின் குரல் திரும்பக் கேட்கவில்லை. அவர்கள் எங்கே சென்றார்கள் என்றே தெரியவில்லை.

பயத்தில் அவளது இதயம் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது. பேராசிரியரின் நோட்ஸைப் பார்த்தபடியே, சிக்னல் இல்லாத தன் மொபைலைத் தூக்கிக் பிடித்துக் கொண்டு அவள் காட்டின் இன்னும் ஆழமான பகுதிக்குள் சில தூரம் நடந்தாள். சுற்றிலும் அடர்ந்த மரங்களும், வளைந்து நெளிந்து கிடக்கும் பழங்கால விழுதுகளும் அவளை அச்சுறுத்தின. மேலும் சில அடிகளை எடுத்து வைத்தவள், திடீரென மரங்களின் இடுக்கில் ஒரு பழங்காலக் கட்டிட அமைப்பைக் கண்டு திடுக்கிட்டு நின்றாள். அது ஒரு கைவிடப்பட்ட, சிதைந்து போன பண்டைய காளி கோயில்.

பல நூறு ஆண்டுகளாக மனித நடமாட்டமே இல்லாததால், அக்கோயிலைச் சுற்றிலும் அடர்ந்த முட்புதர்களும் பாசிகளும் மண்டியிருந்தன. கோயிலின் கருவறை முற்றிலும் இடிந்து கிடக்க, அதன் எதிரே பாதி உடைந்த நிலையில் ஒரு விசித்திரமான பெண் சிலை நின்றிருந்தது. ஒரு கையில் ஆயுதத்தை ஏந்தி, கம்பீரமான போர்க்கோலத்தில் இருக்கும் அந்தப் பெண் சிலையை பார்த்தவளுக்கு பயத்தில் அடிவயிறு கலங்கியது.

அந்தச் சிலைக்கு மிக அருகில், மண்ணில் பாதி புதைந்தபடி ஒரு கல் நின்றிருந்தது. அதை கண்ட நொடியே அவளுக்கு நன்கு புரிந்தது தான் தேடி வந்த நடுகல் அதுதான் என்று.

பல நூற்றாண்டுகளாகப் பல தொல்லியல் ஆய்வாளர்கள் இந்தக் காட்டுப் பகுதிக்கு வந்திருந்தாலும், அடர்ந்த முட்புதர்களால் சூழப்பட்டு சிதலமடைந்த கோவிலின் அருகில் செல்ல யாரும் முயலவில்லை. மேலும் மண்ணில் புதைந்திருந்ததால் அந்த கல்லை யாரும் உற்று நோக்கவில்லை.

யாழினிக்கு அந்த கோவிலின் அருகில் செல்ல பயம். சூரியன் உச்சியில் உதித்தாலும் அவன் கதிர்கள் அந்த இடத்தை தீண்டவில்லை. கையில் இருந்த டார்ச்சின் உதவியுடன் தான் அங்கிருப்பதை பார்த்து கொண்டிருந்தாள். காட்டு பூச்சிகளின் சத்தம் வேறு பீதியை கிளப்ப, அரண்டு போனவள் அங்கிருந்து சென்றுவிட்டாள் போதும் என்ற மனநிலைக்கு வந்திருந்தாள்.

உடல் முழுவதும் வியர்வையில் குளித்திருக்க, இதயம் வேகமாக துடிப்பதால் நெஞ்சு வலிப்பது போல இருந்தது. கண்ணை மூடி சில நேரம் அமைதியாக நின்றவளின் மனம்,

'இவ்வளவு தூரம் வந்துட்ட ... கிட்ட போய் பாக்குறதுல என்ன வந்துட போகுது ... போ போ தைரியமா போ ...' என்று ஊக்கப்படுத்த, காலை தூக்கி முன்னே அடிவைக்க போனவள் அங்கிருந்த சிலையையும் கோவிலையும் பார்த்து அப்படியே நின்றுவிட்டாள்.

'ஒரே புதரா இருக்கு பாம்பு இருந்தா என்ன பண்றது ... அந்த கோவில பாக்க ரொம்ப பாழடைஞ்சது போல இருக்கு ... இங்க கடைசியா ஆட்கள் வந்து பல வருஷம் ஆகும் போல ...' என்று உள்ளுக்குள் புலம்பியவளின் கண் முன்னே ப்ரீத்தா வந்து போனாள். கூடவே

'நான் என்ன நினைக்கிறேன்னா, அந்தச் சங்ககாலக் கரிகாலனே தன் வரலாற்றை எழுத உன்ன தேர்ந்தெடுத்திருக்கான்னு தோணுது ...' என்ற பேராசிரியரின் வார்த்தைகள் காதில் வந்து போயின.

"இவ்வளவு வருஷம் யார் கண்ணுலையும் படாத இந்த கோவில் என் கண்ணுக்கு தெரிஞ்சுருக்குனா, ஏதோ ஒன்னு இருக்கு ... பயப்பட கூடாது ..." என்று தனக்கு தானே ஆறுதல் கூறிக் கொண்டவள், வரவழைத்துக் கொண்ட தைரியத்துடன் அந்த கோவிலை நோக்கி சென்றாள்.

ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து, அடர்ந்து படர்ந்திருந்த புதர்களை தான் கையோடு கொண்டு வந்திருந்த தடியால் அடித்து பாதை வகுத்துக் கொண்டவள். சிலையின் அருகில் சென்றவள், நடுக்கத்துடன் தன் பையிலிருந்த சிறிய பிரஷை எடுத்து, அந்தக் கல்லில் படிந்திருந்த தடிமனான பாசியையும் காய்ந்த இலைகளையும் மிகக் கவனமாகத் துடைத்தாள்.

சிலையில் இருந்த அப்பெண்ணின் முகம் பாதி சிதலமடைந்திருந்ததால் அது யாருடைய சிலை என்று அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. இரு கைகளில் ஒருகையில் கூர்மையான ஈட்டியணை ஏந்திருந்த அப்பெண்ணின் முகம் பார்ப்பதற்கு ஆக்ரோஷமாய் இருந்தது. சற்று நேரம் அந்த சிலையின் அங்க அமைப்பு உடை முதலியவற்றை ஆராய்ந்தவள் ஒரு முடிவிற்கு வந்திருந்தாள்.

இது ஒரு தெய்வத்தின் சிலை இல்லை என்றும் ஏதோ பெயர் தெரியாத வீரமங்கையின் சிலை என்றும் தெரிந்தது. யாராக இருக்கும் என்று ஆர்வம் பிறக்க சுற்றியும் பார்வையை சுழல விட்டவளுக்கு, பாதி மண்ணில் புதைந்திருந்த கல் கண்ணில் பட்டது.

அந்த கல்லை சுற்றியுள்ள மண்ணை அகற்றுவதற்குள் பாதி உயிர் போய்விட்ட உணர்வு. கையோடு கொண்டு வந்திருந்த சிறு சிறு உபகரங்களை கொண்டு மண்ணை அகற்றியவள், கல்லை முடிந்தளவிற்கு சுத்தம் செய்திருந்தாள். பார்த்த உடனே அது ஒரு நடுகல் என்று புரிந்தது.

கல்லில் ஒரு ஆணின் முகம் பொறிக்க பட்டிருக்க வேண்டும், எத்தனை காலத்திற்கு முந்திய கல்லோ, எத்தனை எத்தனை இடர்பாடுகளை எதிர்க் கொண்டதோ முகம் முழுவதும் முற்றிலும் சிதலமடைந்திருந்து. முகத்திற்க்கு மேல் பழங்காலத் தமிழ் பிராமி எழுத்துக்கள் மெலிதாகத் தெரிந்தன. ஆனால், பலத்த இயற்கைச் சீற்றங்களால் சில எழுத்துக்கள் முற்றிலும் சிதைந்து, தேய்ந்து போயிருந்தன.

அவள் தன் விரல்களால் அந்தப் பள்ளங்களைத் தடவிப் பார்த்து, எழுத்துக் கூட்டிப் படிக்க முயன்றாள்:

"செ... ம்பி... வ... [ ]... [ ] ... ன்..." நடுவில் இருந்த சில முக்கிய எழுத்துக்கள் முற்றிலும் உதிர்ந்து போயிருந்தன.

தனக்கு தானே வேறு வேறு எழுத்துக்களை போட்டு பார்த்து கடைசியாக "செம்பிவளவன்" என்ற அந்த முழுமையான பெயரை கண்டுபிடித்தாள்.

பெயரை கண்டு பிடித்த மகிழ்ச்சி அப்பட்டமாக அவள் முகத்தில் பிரதிபலித்தது. தான் எதையோ சாதித்ததை போன்று உணர்ந்தவளுக்கு, அந்த பெயர் யாரை குறிக்கிறது என்று புரியாமல் குழம்பினாள். தனக்கு தெரிந்த வரை செம்பியன் பெயரை கேள்வி பட்டிருக்கின்றாள் , வளவன் பெயரை வேள்வி பட்டுருக்கின்றாள், ஆனால் இது வரை வரலாற்றில் "செம்பிவளவன்" என்ற பெயரை எங்கும் பார்த்ததில்லை என்று உணர்ந்தவள், அது யாராக இருக்கும் என்று குழம்பிப் போனாள்.

அதுவரை கல்லின் அருகில் மண்டியிட்டு உட்கார்ந்து பார்த்திருந்தவள், மொபைலில் இதை அனைத்தையும் படம் பிடிக்க எண்ணி எழுந்தவளின் கால் இடறிவிட, தடுமாறி கல்லின் மேல் விழுந்தாள். நல்ல பழங்காலத்து கல்லில் எதிர்பாராமல் விழுந்ததால் நெற்றி நங்கென்று கூர்மையான பகுதியில் இடித்துவிட மயங்கி கீழே சரிந்தாள் யாழினி.

கல்லில் சிந்திய ரத்தம் மெல்ல செம்பிவளவன் என்ற வார்த்தையில் பட்டு, சிதைந்திருந்த முகத்தை தீண்டியது.
 

Author: Kavithillai
Article Title: அத்தியாயம் - 1
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.