அத்தியாயம் - 11

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 92

Active member
Staff member
May 5, 2026
80
200
33
Chennai
மனம் - 11:

இன்னும் ஒரு மாதத்தில் தீபாவளி வருவதால் அசோகனுடன் சேர்ந்து பட்டாசுகளை சிவகாசியில் இருந்து சென்னைக்கு பத்திரமாக கொண்டு வந்து இங்கிருக்கும் கடைகளுக்கு பிரித்து அனுப்பும் வேலையில் ஈடுபட்டான் குருபிரசாத்.

அனைத்துமே வெடிபொருட்கள் என்பதால் மிகவும் கவனத்துடனே சிவகாசியிலிருந்து வந்தன. அதில் குருபிரசாத்திற்கு தொடர்ச்சியான அலைச்சல் தான். அவனின் வேலையையும் பார்த்துக் கொண்டு கிடைக்கின்ற இடைவெளியில் இதையும் பார்ப்பது அழுப்பாக இருந்தாலும் தொடர்ந்து செய்தான்.

இரண்டு நாட்கள் தாக்கு பிடித்தவனின் உடல் மூன்றாம் நாள் என்னையும் கவனி என படுத்தியெடுத்தது. அதன் விளைவாக மூன்றாம் நாள் குருபிரசாத் காய்ச்சலில் படுத்துவிட்டான். அபிலாஷ் தான் அவனை மருத்துவமனை அழைத்து சென்று அலுவலகத்தில் விடுப்பும் சொல்லியிருந்தான்.

“ஜெஸி வேற ப்ரக்னன்ட்டா இருக்கா டா. என்னை நானே பார்த்துப்பேன். நீ போய் அவளை பாரு..” என குரு அவனை துரத்திவிட்டாலும் அவ்வப்பொழுது வந்து பார்த்துக் கொள்ளதான் செய்தான்.

மூன்று நாட்களாக குரு அலுவலகம் வராததால் பவ்யாவிடம் பேச்சுவாக்கில் விசாரித்தாள் அட்சயா. “அவங்களுக்கு காய்ச்சல்.” என்று மட்டும் பவ்யா சொல்ல வேறேதும் அவளிடம் கேட்டுக் கொள்ள முடியவில்லை.

வேறு யாரிடம் கேட்பது என அவள் யோசிக்க, ‘உனக்கு ஹெல்ப் வேணும்னா மட்டும் அவருக்கு ஃபோன் பண்ணுற தான? இப்பயும் ஃபோன் பண்ணியே எப்படி இருக்காங்கன்னு கேளு..’ என அவளின் மனமே எடுத்துக் கொடுக்க நடுங்கும் கைகளால் அலைபேசியை எடுத்து குருவை அழைத்துவிட்டாள்.

இட்லி சாப்பிட்டுவிட்டு அப்பொழுது தான் மாத்திரை போட்டு படுக்க சென்றவன், அட்சயாவின் அழைப்பில் ஃபோனை காதில் வைத்து, “ஹலோ..” என்றான்.

“நா..நான் அட்சயா பேசுறேன்.”

“ம்ம். தெரியுது சொல்லு..” என்ற குரல் சோர்ந்து தான் வந்தது.

“அது.. உங்களுக்கு உடம்பு சரில்லனு பவ்யா சொன்னா. அதான்..”

“அது உண்மையானு கேட்க ஃபோன் பண்ணியா?”

“இல்ல இல்ல. இப்ப எப்படி இருக்கீங்கன்னு கேட்க தான் கூப்பிட்டேன்.” என திக்கி திணறி கேட்டுவிட்டாள்.

“ஹ்ம்ம். பரவால..”

“ஹாஸ்பிடல் போனீங்களா?”

“ம்ம்ம்.”

“சாப்டாச்சா?”

“ம்ம்ம்.”

அவளின் கேள்விகள் அனைத்திற்குமே ஒற்றை எழுத்தை பதிலாக்கிக் கொண்டிருந்தான்.

‘ஒருவேளை பேச முடியலையோ? அவ்ளோ டயர்டா இருக்காங்களா?’ என யோசித்தவள், “வெச்சிடட்டுமா?” என்றாள்.

அதற்கு மட்டும், “வை டி” என வேகமாக சொல்லிவிட்டான். ‘குசலம் விசாரிக்க வந்துட்டா.’ என காய்ச்சலின் வெளிப்பாட்டில் அவளிடம் தான் காய்ந்துவிட்டான்.

அவனின் குரலே சரியில்லாமல் இருக்க, தனியா வேற இருக்காங்க யாரு அவங்கள பார்த்துப்பாங்க என யோசித்தாள். ‘நீ தான அவங்கள வேணாம்னு சொன்ன இப்ப எதுக்கு ரொம்ப அக்கறை படுற?’ என அவளின் ஒரு மனம் எடுத்துக் கொடுக்க, மற்றொரு மனமோ, ‘அதுக்காக அவங்கள பத்தி விசாரிக்க கூட செய்ய கூடாதா?’ என்றது.

மறுவாரம் தான் குருபிரசாத் அலுவலகத்திற்கு வந்திருந்தான். ஒரு சிலர் அவனிடம் சென்று நலம் விசாரித்தனர்.

அவளின் இடத்திலே அமர்ந்திருந்த அட்சயாவிற்கு குருவிடம் தானாகவே சென்று பேச தயக்கமாக இருந்தது. அவளின் தயக்கத்தை குருவின் மேல் உள்ள அக்கறை வென்றுவிட்டது. எனவே, மற்றவர்கள் அவனைவிட்டு விலகியதும் அவனின் அருகில் சென்றாள்.

அவனை பார்த்தாலே மிகவும் சோர்ந்து தான் தெரிந்தான்.
“இப்ப எப்படி இருக்கீங்க?” என்றவளை நிமிர்ந்து பார்த்தவன்,

“பக்கத்துல தான இருக்கேன். நீயே பார்த்து சொல்லு எப்படி இருக்கேன்.” என்றிட,

‘மத்தவங்க கிட்ட ஒழுங்கா தான பேசுனாங்க. அவங்க இருக்கப்பவே நாமளும் வந்திருக்கலாம் போல..’ என யோசித்துக் கொண்டிருந்தவளை அருகில் இருந்த ரொலிங் சேரில் அமர சொன்னான்.

அவள் அமர்ந்ததும், “உன்கிட்ட ஒரு வேலை சொன்னேனே.. அது இப்ப எந்த ஸ்டேஜ்ல இருக்கு?” என கணினியை பார்த்து தீவிரமாக கேட்டான்.

‘ஐயையோ என்ன வேலை சொன்னாரு? மெயில் ஏதாவது போட்டாங்களோ? நான் தான் பார்க்கலையா?’ என யோசித்தவள் திருதிருவென முழித்துக்கொண்டே, “மெயில் போட்டீங்களா? நான் கவனிக்கலையே!” என அவனிடமே சொல்ல,

வந்த சிரிப்பை அடக்கியவன், “அன்னைக்கு உன்னை ஹாஸ்டல்ல ட்ராப் பண்ணுறப்ப சொன்னனே.. எனக்கு நல்ல பொண்ணா பார்த்துக் கொடுன்னு. அதை பத்தி தான் கேட்குறேன். எந்த லெவல்ல இருக்கு எத்தனை பொண்ணுங்களை விசாரிச்சிருக்க?” என வேலையை பற்றி கேட்பதை போலவே முகபாவத்தை வைத்துக்கொண்டு கேட்டான்.

‘கடவுளே!’ என மானசீகமாக கடவுளை வேண்டியவள், “அது நீங்க சும்மா விளையாட்டுக்கு தான சொன்னீங்க?” என்றவளின் முகமே மாறிவிட்டது.

“எது விளையாட்டா? சீரியஸா கேட்குறேன் மா.” என்றவனின் முகத்தில் என்ன இருக்கிறது என அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை.

அவளிடமே அவனுக்கு பெண் பார்க்க சொல்லி கேட்பது அவளுக்கு கோபத்தை உண்டாக்க, “ஏன் உங்களுக்கு பிடிச்ச மாதிரி உங்க கேஸ்ட்லயே உங்க அம்மா பார்ப்பாங்க தான. அவங்க கிட்டயே கேட்கலாமே..” என அவனை முறைத்துக் கொண்டே சொன்னாள். அதில் அவளை திரும்பி பார்த்தவன்,

“ஹ்ம்ம் பார்த்துட்டே தான் இருக்காங்க. பட், செகண்ட் மேரேஜ்னு எந்த பெண்ணும் ஒத்துக்க மாட்டிங்குது. நீ வேற ஒரே நாள்ல என்னை விட்டுட்டு போய் டிவோர்ஸ் பண்ணிட்டியா அதான் எதுவும் அமைய மாட்டிங்குது. இன்னைக்கு கூட வாட்ஸப்ல ரெண்டு பொண்ணு போட்டோ அம்மா அனுப்புனாங்க. அவங்கள எதுக்கு கஷ்டப்படுத்தனும். நீ தான என்னை விட்டுட்டு போன அதான் நீயே பாருனு சொல்றேன்.” என்றவனிடம் வாதாடவும் அவளால் முடியவில்லை.

அவன் உண்மையாக சொல்வதாக நினைத்து, “ஆனா உங்களுக்காக நான் எப்படி பார்க்க முடியும்?” என்றாள் பிடித்தமின்மையை முகத்தில் காட்டி.

“நீ தான டி என்னோட ஃபர்ஸ்ட் பொண்டாட்டி. நீயே எனக்கு நல்ல சர்டிஃபிகேட் கொடுத்தா சீக்கிரமாவே எனக்கு கல்யாணம் நடக்கும். எனக்கும் முப்பது வயசு ஆக போகுது. அதுமில்லாம அடுத்த முறை ஃபிவர் வந்தா யாரும் இல்லாம தனியா கஷ்டபட வேணாம் பாரு.” என அடுக்கினான்.

அவன் சொன்னதில் மற்றதை விட்டுவிட்டு, “அபி அண்ணா உங்கள பார்த்துக்கிட்டாங்க தான?”

“அவன் என்ன என்னை மாதிரி தனியாவா இருக்கான்? என்கூடவே இருக்க? அவனுக்கும் பொண்டாட்டி இருக்கு மா.” என்றவன்,

“ஃபோன்ல அம்மா அனுப்புன போட்டோஸ் இருக்கு. பார்த்து நீயே செலக்ட் பண்ணுறியா..” என குரு அவனின் ஃபோனை எடுக்க,

“எனக்கு இப்ப மீட்டிங் இருக்கு.” என விட்டால் போதுமென்று ஓடியே விட்டாள் அட்சயா. அவளின் வேகத்தை பார்த்தவன் மனதிலே சிரித்துக் கொண்டான்.

அங்கு கணினியின் முன் அமர்ந்து, ‘விட்டுட்டு போனேன். விட்டுட்டு போனேன்னு எத்தனை வாட்டி தான் சொல்லி காட்டுவாங்களோ.. நானென்ன பிடிக்காமையா விட்டுட்டு போனேன்?’ என சிடுசிடுவென வேலை பார்க்க, “அப்ப பிடிச்சி தான் விட்டுட்டு போனியா?” என்ற குருவின் குரல் அவளின் ஆழ்மனதில் இருந்து கேட்டது. அதில் பதறி சுற்றும் பார்க்க அனைவரும் அவர்களின் வேலையை பார்ப்பது தெரிய, குருவிடம் சிக்கிக்கொண்ட மனதை முயன்று வேலையில் திசை திருப்பினாள்.
 

Author: STN - 92
Article Title: அத்தியாயம் - 11
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

STN - 92

Active member
Staff member
May 5, 2026
80
200
33
Chennai
சுதனின் திருமணம் கோவையில் விமரிசையாக நடந்துக் கொண்டிருந்தது. குருபிரசாத், அட்சயா இருவரின் வீட்டிலும் இருந்து அனைவருமே வந்திருந்தனர்.

திருமணம் முறிந்து எந்த ஒரு விஷேஷங்களிலும் கலந்துக் கொள்ளாத அட்சயாவை கூட அழைத்து வந்திருந்தனர். ஆவுடையப்பன், பரிமளம், கங்கா அவளின் மகன் சர்வேஷ் என அவர்களுடன் அமர்ந்திருந்தாள், அட்சயா. சபாபதியும் கோபிநாத்தும் வேலை இருந்தால் பார்ப்பதாக சொல்லிவிட்டு நகர்ந்தனர்.

சுதனுடனே குரு தங்கியிருக்க, பாக்கியலட்சுமியும் குணசீலனும் அந்நேரம் தான் வந்தனர். வந்தவர்கள் அபிலாஷின் பெற்றோர்களுடன் அமர்த்துக் கொண்டனர்.

ஒன்றாக படித்து ஒரே மேடையில் பட்டம் வாங்கியிருந்த மூவரில் இருவருக்கு திருமணம் முடிந்த பொழுதும் தன் மகன் தனியாக இருப்பதை நினைத்து கலங்கினார் பாக்கியம். ஆனாலும் அதனை வெளிக்காட்டாமல் இருந்துக் கொண்டார்.

அபிலாஷின் மனைவி மாசமாக இருப்பதால், சுதனின் திருமணம் முடிந்தவுடனே அவர்கள் சாப்பிட சென்றுவிட்டனர்.

உள்ளே நுழைந்ததுமே அட்சயாவின் குடும்பத்தை கவனித்துவிட்டார் பாக்கியம். இருந்தாலும் அவர்களை கண்டுகொள்ளாமல் இருப்பதை போல் இருந்துக் கொண்டார்.

அனிச்சையாக திரும்பிய பாக்கியத்தின் கண்ணில் அட்சயா தான் விழுந்தாள். அட்சயா, அவளின் அக்கா மகன் சர்வேஷுடன் எதுவோ பேசி சிரித்துக் கொண்டிருந்தாள்.

அவளையே பார்த்த பாக்கியத்தை கவனித்த குணசீலன், “அந்த பொண்ணு தான..” என பாக்கியத்திடம் தெரியாததை போல் விசாரித்து அவரின் முறைப்பை பரிசாக பெற்றுக் கொண்டார். உடனே, “லோடு ஒன்னு அனுப்பனும். முடிஞ்சிடுச்சானு ஃபோன் பேசிட்டு வரேன்.” என நகர்ந்துவிட்டார் குணசீலன்.

பாக்கியத்தின் முன்னே அமர்ந்திருந்த பெண்கள் இருவர் பேசுவது பாக்கியத்தின் காதில் நமக்கு விழுந்தது.

“இந்த கூத்தை பார்த்தீங்களா க்கா. அன்னைக்கு நம்ம சுதனோட அக்கா கல்யாணத்துல பிரச்சனை நடந்து கல்யாணம் பண்ணி பிரிஞ்சி போனாலே ஒரு பொண்ணு. மறுபடி இன்னைக்கும் மினுக்கிக்கிட்டு வந்திருக்கா..” என அட்சயா அமர்ந்திருந்த திசையை காட்டினார்.

“வாழ்க்கையே இல்லனாலும் எப்படித்தான் இப்படி கிளம்பி வர முடியுதோ? இவ சும்மாலாம் இருந்துருக்க மாட்டா க்கா. அந்த பையனுக்கு எதாவது சிக்னல் கொடுத்திருப்பா அதான் அவன் வேலையை காட்டிட்டான். காதும் காதும் வெச்ச மாதிரி அவங்கப்பா உடனே வேற ஒருத்தனுக்கு கல்யாணத்தை முடிச்சு விட்டுட்டாரு.” என அவர் சொல்ல அருகில் இருந்த இன்னொருவரும் யாரை பத்தி பேசுறீங்க என கதை கேட்க துவங்கிவிட்டார்.

“அந்த பொண்ணுக்கு அந்த கல்யாணம் கூட நிலைக்கல போல க்கா. இவ வண்டவாளம் தெரிஞ்சி தான் அந்த வீட்டுலயும் இவளை சேர்த்துக்காம துரத்தி விட்டுட்டாடங்களாம். அப்புறம் டிவோர்ஸ் பண்ணி சுளையா பணத்தையும் வாங்கிக்கிட்டதா சொல்லுறாங்க.” என நரம்பில்லாத நக்கினை நாலாபுறமும் சுழட்டி கத்தி போன்ற வார்த்தைகளை விசீனர்.

விவாகரத்தின் கடைசி நாளிலும், “நீங்க விருப்பப்பட்டா உங்க கணவர் கிட்ட அலிமோனி கேட்கலாம் ம்மா. தப்பில்லை.” என ஜட்ஜ் கூறியதற்கு,

பிரிய போகும் நேரத்தில் ‘உங்க கணவர்.’ என்ற வார்த்தை அட்சயாவின் மனதில் வலியை கொடுத்தாலும், “பணத்துக்காக தான் இந்த கல்யாணம்னு எல்லாருமே சொல்லுறாங்க மேடம். இப்ப நான் அதை கேட்டா அது உண்மை ஆகிடுமே. எனக்கு எதுவும் வேணாம்.” என சொல்லிவிட்டு தான் குருவை விட்டு முழுதாக பிரிந்து சென்றாள்.

அதை நினைத்த பாக்கியம் சும்மா இருக்காமல், “ஏங்க.. நீங்க யாருன்னு தெரியல. ஆனா எதுக்கு ஒரு பொண்ணை பத்தி சபைல இப்படி தப்பா பேசுறீங்க?” என கேட்டுவிட்டார்.

“அதை கேட்க நீங்க யாருங்க..” என சொல்லிவிட்டு அந்த பெண்களும் நகர்ந்துவிட்டனர். பின் குணசீலன் வந்ததும் அவரை அழைத்துக்கொண்டு சாப்பிட சென்றார் பாக்கியலட்சுமி.

“அச்சு சாப்பிட வரச்சொல்லி ஃபோன் பண்ணா எடுக்க மாட்டியா?” என சபாபதி அவளின் முன்னே வந்து நின்று முறைத்துக் கொண்டிருந்தான்.

“அப்பா கிட்ட தான் என்னோட ஃபோன் இருக்குன்னா..” என சிரித்தவளை முறைத்தான்.

அந்த நிகழ்விற்கு பின் அட்சயா ஃபோனை அவ்வளவு சுலபத்தில் உபயோகிக்க மாட்டாள். தோழிகள் யாராவது மெசேஜ் அனுப்பினாள் கூட சில நிமிடங்கள் கழித்து அலைபேசியிலிருந்து அவர்களுக்கு அழைத்தே பேசிவிடுவாள்.

சூடு கண்ட பூனையாக ஃபோனின் பயன்பாட்டை வெகுவாக குறைத்துக் கொண்டாள்.

“வாங்க போகலாம். அப்ப தான் சீக்கிரமா மருதமலை கோவிலுக்கும் போக முடியும்.” என பரிமளம் எழுந்துக் கொண்டார். கல்யாணத்தை முடித்துவிட்டு மருதமலை கோவிலிற்கு செல்வதாக திட்டம் இருப்பதால் தான் குடும்பத்தில் அனைவருமே வந்திருந்தனர்.

சாப்பிட்டுவிட்டு கைகழுவ சென்ற இடத்தில, “இந்த ஃபோனை பிடி அச்சு கைகழுவிட்டு வரேன்.” என கங்கா நகர்ந்தாள்.

அந்நேரம் அட்சயாவின் அருகில் வந்த ஒருவர். “ஏன்மா அவ்வளவு நடந்தும் இன்னும் ஃபோனும் கையுமா தான் சுத்திக்கிட்டு இருக்கியா? இந்த காலத்து பிள்ளைங்களுக்கு பட்டாலும் புத்தி வராது.” என தானாகவே அறிவுரை என்ற பெயரில் அவளின் ரணத்தை குதறிவிட்டு சென்றனர்.

அவரின் பின்னே வந்த பாக்கியத்தின் காதிலும் அவர் சொல்லியது விழ அவரை பார்த்து திகைத்த அட்சயாவை பார்த்தும் பார்க்காததுபோல் முகத்தை திருப்பிக்கொண்டு சென்றார் பாக்கியம்.

எங்கு சென்றாலும் அவளை துரத்தும் வார்த்தைகள்! அவள் எவ்வளவு மீண்டு வந்தாலும் மீண்டும் மீண்டும் கேட்கும் வார்த்தைகள்!

தவறு செய்தவனை பார்க்கும் பொழுதெல்லாம் “எதுக்கு இப்படி பண்ண? இனிமே இப்படி பண்ணாத..” என அறிவுரையை வழங்குவார்களா தெரியாது.

ஆனால், ஒரு தவறினால் பாதிப்படைந்தவர்களை பார்க்கும் பொழுதெல்லாம் அறிவுரை என்ற பெயரில் நிச்சயம் காயத்தை கிளறிவிடுவர்.

அப்படிப்பட்ட கடுஞ்சொற்களை கேட்ட அட்சயாவின் முகமே களையிழந்துவிட்டது. இருந்தும் முகத்தை சரிசெய்தவள் கங்கா வந்ததும் அவளுடன் சென்றுவிட்டாள்.

‘ஐஸ் கிரீம் வேண்டும்.’ என அடம்பிடித்த சர்வேஷை அட்சயா அங்கே அழைத்து சென்றாள். அங்கே தான் குருபிரசாத் அவனின் கல்லூரி நண்பர்களுடன் சிரித்து பேசிக் கொண்டிருந்தான்.

“உன் பின்னாடி சுத்தின ராதிகாவுக்கு கூட கல்யாணம் ஆகிடுச்சு குரு. நீ எப்ப பண்ணிக்க போற?” என ஒருவன் கேட்ட்டான். குருவிற்கு அட்சயாவின் பக்கவாட்டு தோற்றம் நன்றாக தெரிந்தது.

வேண்டுமென்றே அவளை பார்த்துக் கொண்டே,
“நானாடா வேணாம்னு இருக்கேன். அமைய மாட்டிங்குது. இப்ப தான் நல்ல பொண்ணா பார்க்க சொல்லி முக்கியமானவங்க கிட்ட பொருப்பை கொடுத்துருக்கேன். சீக்கிரமே நல்ல முடிவா வரும்னு எதிர்பார்போம்.” என் குரு சொல்ல அவனை ஓரக்கண்ணால் முறைத்துவிட்டு அட்சயா திரும்பினாள்.

“தித்தி வா போலாம்..” என ஐஸ் கிரீமை வாங்கிய சர்வேஷ் சொல்ல அவனின் கையை பிடித்தவள் பட்டு வேஷ்டி சட்டையில் சுவரில் சாய்ந்து நின்றிருந்த குருவை திரும்பி ஒருநொடி பார்த்தாள். அவளை பார்த்த குரு கண்ணை சிமிட்ட, படபடக்கும் மனதை கட்டுப்படுத்தி அங்கிருந்து அகன்றாள்.

‘யாராவது பார்த்தா என்னாகுறது?’ என சுற்றியும் பார்த்துக்கொண்டே அவள் நடக்க, “அப்ப யாரும் பார்க்கலனா உனக்கு ஓகேவா?” என எப்பொழுதும் போல் அவளின் ஆழ்மனதிலிருந்து குருவின் குரல் ஒலித்தது.

குருவின் குறும்பு பேச்சும், உரிமையான பார்வையும் அவனின் மனதை அவளுக்கு உணர்த்த தான் செய்தது. ஆனாலும் அவனுடன் என்னால் சேர முடியுமா என்ற சந்தேகம் அவளுக்குள்ளே தழும்பி வழிந்தன.

‘இப்ப தான் அவங்க அம்மா உன்னை பார்த்து முகத்தை திருப்பிக்கிட்டு போனாங்க ஆச்சு. போக முடியாத இடத்துக்கு வழியை தேடாத..’ என அலைபாயும் மனதை கட்டுப்படுத்திக் கொண்டாள்.

இங்கே, “யாருடா அந்த பொண்ணு. உன்னையே முறைச்சு பார்த்துட்டு போறா..” என நண்பர்கள் அனைவரும் குருவை கிண்டலடித்து திணற வைத்தனர்.

*****

“நம்ம குரு எதுக்குங்க அவங்ககிட்ட போய் பேசணும்? மறுபடி எதாவது பிளான் பண்ணுறாங்களா?” என சுதனின் திருமணம் முடிந்து இரவு வீட்டிற்கு வந்தவுடன் உடையை மாற்றிவிட்டு பாக்கியலட்சுமி ஆரம்பித்தார்.

“நீயா எதையாவது சொல்லிட்டு இருக்காத பாக்கியம். அவங்கள தெரியும்ன்றதால நம்ம குரு அவங்க கிட்ட போய் பேசினான். எல்லாத்துக்கும் குத்தம் சொல்லாத..”

“ஆமா. அந்த மரியாதையெல்லாம் நம்ம பையனுக்கு மட்டும் தான் இருக்கனும்ல?”

“அப்படினா அந்த பொண்ணு உன்கிட்ட வந்து பேசனும்னு நீ
எதிர்பார்க்குறியா? சரி அப்படியே வந்து பேசினாலும் பதிலுக்கு நீ பேசிருப்பியா பாக்கியம்?” என தூண்டில் போட்டார் குணசீலன்.

“நானெதுக்குங்க அவகிட்ட பேசணும்? என்னுடைய விருப்பம் இல்லாம என் பையன் கல்யாணம் நடந்ததை என்னைக்குமே நான் மறக்கவும் மாட்டேன். மன்னிக்கவும் மாட்டேன்.”

“சரி. அவங்க உன்கிட்ட சம்மதம் கேட்டு வந்திருந்தா நீ ஒத்துக்கிட்டு இருந்திருப்பியா?”

“அவங்க வேற ஆள். அதெப்படிங்க நான் ஒத்துப்பேன்.” என பாக்கியம் சிடுசிடுக்க,

“அதான் அவங்க அவசரமா கல்யாணம் பண்ணி வெச்சாங்க போல. அவங்க நிலைல இருந்தும் கொஞ்சம் யோசி பாக்கியம்.” என்றவரை பாக்கியம் முறைத்தார்.

“அவங்க பண்ண தப்பை சரிக்கட்ட பார்க்காதீங்க. என்னைக்கும் நான் அதை மன்னிக்கவே மாட்டேன்.”

“அவங்க பண்ணது தப்பு தான். ஆனா அதுக்கு பதிலா நாம பண்ணது பாவம் தான பாக்கியம்? அன்னைக்கு அவ்ளோ அழுத பொண்ணு கிட்ட அத்தை தாலியை கழட்டி கேட்டது எல்லாம் எதுல சேர்க்குறது?”,

“அப்படி ஒரு வேலையை பண்ணிட்டு. என் பையனுக்கு கல்யாணம் நடக்கனும்னு கோவில் கோவிலா போய் வேண்டினா மட்டும் நல்லது நடந்திடுமா?” என்றார் குணசீலன்.

பாக்கியத்தின் முகத்தில் யோசனை ரேகைகள் நீள்வதை பார்த்தார். ‘என்ன தான் மகன் நானே எல்லாத்தையும் பார்த்துக்குறேன்.’ என சொல்லியிருந்தாலும் தன்னாலான முயற்சியை குணசீலன் செய்ய முனைந்தார்.

“இன்னைக்கு நம்ம குருவை நீ கவனிச்சியானு தெரியல. ஆனா அந்த பொண்ணை பார்க்குறப்ப தானாவே அவனோட முகம் அவ்ளோ பிரகாசமா இருந்துச்சி பாக்கியம்.” என பாக்கியத்தின் கையை பிடித்தவர்,

“குருக்கு வாழ வேண்டிய வயசு. அவனுக்கு பிடிச்ச பொண்ணோட வாழட்டுமே. இன்னும் உன்னோட ஜாதி எண்ணத்தையும் வறட்டு கோபத்தை இழுத்து பிடிச்சிக்கிகிட்டு இருந்தா நம்ம பையன் வாழ்க்கை தான் வீணா போகும். நல்லா யோசி.”

“அப்படியும் உனக்கு விருப்பம் இல்லனாலும் பரவால. நீ எதுக்கும் கொஞ்சம் ரெடியாவே இரு. எப்ப வேணா குரு வந்து அந்த பொண்ணையே தான் மறுபடி கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்ல போறான்.” என இப்பொழுதே பாக்கியத்தை தயார் படுத்தினார் குணசீலன்.

குணசீலன் அவ்வளவு எடுத்து சொன்னாலும், குருபிரசாத்தின் வாழ்வில் பாக்கியத்தின் சம்மதம் இல்லாமல் நடந்த நிகழ்விற்கு காரணமாகியவர்களை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

அதே நேரம் அட்சயாவின் வீட்டிலும் குருவை பற்றி அவளிடம் விசாரித்துக் கொண்டிருந்தனர்.
 

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
எப்பா டேய் ஒரு முடிவுக்கு வாங்க டா....
எம்மா அச்சு நீயும் கொஞ்சம் consider பண்ணலாமே....
அப்ப தான் உனக்கு பயம் எல்லாம்....இப்ப தான் உனக்கு maturity இருக்கு இல்ல.....
மனம் விட்டு பேசினா தானே ரெண்டு பேர் மனமும் புரியும்
 
  • Love
Reactions: STN - 92

STN - 92

Active member
Staff member
May 5, 2026
80
200
33
Chennai
எப்பா டேய் ஒரு முடிவுக்கு வாங்க டா....
எம்மா அச்சு நீயும் கொஞ்சம் consider பண்ணலாமே....
அப்ப தான் உனக்கு பயம் எல்லாம்....இப்ப தான் உனக்கு maturity இருக்கு இல்ல.....
மனம் விட்டு பேசினா தானே ரெண்டு பேர் மனமும் புரியும்

நெஸ்ட் எபில பேசிடுவாங்க🤣

நன்றி dear❤️