• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அத்தியாயம் - 12

STN - 92

Member
Staff member
மனம் - 12

வெள்ளிக்கிழமை, மதிய உணவு முடிந்ததுமே எனக்கு பிளைட்கு நேரமாச்சு என பவ்யா அவளின் ஊரான கேரளத்திற்கு கிளம்பியிருந்தாள். இன்னும் இரண்டு நாட்களில் பவ்யாவிற்கு நிச்சயம் நடக்க உள்ளதால், நேற்று மாலை முழுவதும் அட்சயா அவளுடன் தான் அழகு நிலையத்தில் இருந்தாள். திருமணத்திற்கான பவ்யாவின் ஈடுபாட்டையும் ஆர்வத்தையும் பார்க்க பார்க்க அட்சயாவிற்குள்ளும் ஆசை துளிர்விட்டது.

அன்று சுதன் திருமணம் முடிந்து மருதமலை கோவிலிற்கும் சென்றுவிட்டு அட்சயாவின் வீட்டினர் அனைவரும் வீட்டிற்கு செல்லவே இரவாகியது. இரவுணவையும் முடித்துவிட்டு அனைவருமே வரவேற்பறையில் தான் இருந்தனர். மறுநாள் பொதுவிடுமுறையாக இருக்க கோபிநாத் கூட அவர்களுடன் தான் இருந்தார்.

“கோபி மாப்ள ஒரு வரனை பத்தி சொல்லுறாங்க அச்சு. உனக்கு பிடிச்சிருந்தா மேற்கொண்டு பேசலாம்.” என ஆவுடையப்பன் தொடங்கினார்.

‘மறுபடியுமா?’ என மனதிலே அலறியள், “இப்ப எதுக்கு ப்பா. கொஞ்சநாள் போகட்டுமே. நான் இப்ப தான வேலைக்கே போறேன்.” என மழுப்பினாள்.

“நீதான வேலைக்கு அனுப்புனா கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்ன?” என பரிமளம் சத்தம் போட,

“நீ சும்மா இரு.” என மனைவியை அதட்டிவிட்டு, “இவங்க கூட சென்னைல தான் பாப்பா இருக்காங்க. உனக்கு ஓகேனா சொல்லு பார்க்குறோம்.” என அட்சயாவின் முடிவிற்கு முதன்மை கொடுத்து தன்மையாக தான் ஆவுடையப்பன் கேட்டார். இம்முறை மகளின் வாழ்வில் எந்தவொரு அவசரமும் காட்ட விரும்பவில்லை அவர்.

‘எப்படி தவிர்ப்பது?’ என புரியாமல் அமைதியாகவே இருந்தால் அட்சயா. அவளின் மனமோ, “உனக்காக நீ தான் பேசணும் அச்சு.” என எடுத்து சொன்னது.

சுதனின் திருமணத்தில் அட்சயா குருவிடம் நேரிடையாக பேசவில்லை என்றாலும் அவளின் பார்வை அவனை தொடர்ந்ததை கவனித்த கோபிநாத், இப்பொழுதும் அமைதியாக அட்சயாவின் அலைப்புறுதலை கவனிக்க தான் செய்தார். அவளாக சொல்லாத பொழுது எதையும் அனுமானத்தின் அடிப்படையில் முடிவெடுக்க அவர் தயாராகவில்லை.

“நான் பார்த்தவங்கள தான் கல்யாணம் பண்ணனும்னு இல்லை அச்சு. உனக்கு வேற யாரையாவது பிடிச்சிருந்தா கூட சொல்லு. மாமாவே அவங்ககிட்ட பேசுறேன்.” என கோபிநாத் அடிக்கோடிட்டு காட்டினார். அனைவரின் முகத்தையும் பார்த்தாள் அட்சயா.

“எதையாவது சொல்லேன் டி. உனக்கு முடிச்சிட்டு இதோ அவுத்துவிட்ட காளை மாடு மாதிரி ஊர் சுத்திக்கிட்டு இருக்க இவனுக்கு அடுத்து பார்க்கணும்.” என்ற பரிமளத்தை முறைத்து பார்த்தான் சபாபதி.

‘முதல்ல அவங்ககிட்ட பேசிட்டு நம்ம முடிவை சொல்லலாம்’ என ஒரு முடிவுக்கு வந்த அட்சயா, “நா யோசிச்சிட்டு சொல்லவா ப்பா.” என்றாள் மெதுவாக.

அவ்வளவு நாட்களும் திருமணத்தை வேண்டாம் என மறுத்துக் கொண்டிருந்தவள் முதல்முறை ‘யோசிக்க வேண்டும்.’ என சொன்னதே அவருக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. “சரி ம்மா. உன் விருப்பம் தான். நீ யாரை சொல்லுறியோ அவங்ககிட்டயே அப்பா பேசுறேன்.” என ஆவுடையப்பன் சொன்னார்.

அவையனைத்தையும் நினைத்தபடியே அலுவலகத்தில் அமர்ந்திருந்தாள் அட்சயா. “எப்படியும் ஃபிரைடேனு எல்லாரும் சீக்கிரமா கிளம்பிடுவாங்க. அப்ப போய் அவங்க கிட்ட பேசலாம்.” என நினைத்தவளை கலைத்தது அவளின் அலைபேசி.

அதிலோ அவள் முன்னாள் தங்கியிருந்த விடுதியின் உரிமையாளர் பேசினார். அவர் பேச பேச அவளின் முகம் கலக்கமாக மாறியது. இறுதியில் நன்றி கூறி வைத்துவிட்டாள்.

நேரம் செல்ல செல்ல அனைவரும் ஒவ்வொருவராக அலுவலகத்தில் இருந்து கிளம்ப துவங்கினர். தலையை உயர்த்தி குருபிரசாத்தின் இருக்கையை பார்க்க அதுவோ காலியாக இருந்தது. எதிலோ மாட்டிக்கொண்ட உணர்வில் அழுகையை வரும் போல் இருந்தது. இருக்கும் இடத்தை உணர்ந்து மெல்ல தன்னையே தேற்றிக் கொண்டவள், சபாபதியை அழைக்க ஃபோனை எடுத்தாள்.

ஆனால் அந்நேரம் கதவை திறந்துக்கொண்டு யாருடனோ பேசியப்படியே குருபிரசாத் உள்ளே வர அவளை அறியாமலே அவளின் மனம் அமைதியடைந்தது. அவளின் பார்வையை உணர்ந்த குருபிரசாத்தும் இருக்கையில் சென்று அமர்ந்தான்.

ஒருவாரமாக அவளின் பார்வை அவனையே வட்டமடிப்பதை குரு கவனிக்க தான் செய்தான். சில நேரம் இவனிடம் பேசவென வந்துவிட்டு ஏதேதோ சொல்லி சென்றவளை பார்த்தவனிற்கு சுவாரஸ்யமாக இருக்க, அவளின் கண்ணாமூச்சி ஆட்டத்தை கலைக்க விரும்பாமல் இருந்தான்.

நேரமோ இரவு ஏழை கடந்திருக்க, இதற்கு மேல் முடியாது என தோன்றியதில் இருக்கையில் இருந்து எழுந்த அட்சயா குருவை நோக்கிச் சென்றாள். அவளின் வருகையை எதிர்பார்த்து காத்திருப்பான் போல, அவள் அருகில் வரும் முன்னே அவளை திரும்பி பார்த்தான்.

அவளின் முகமே சற்று வாடி போயிருந்தது. ‘ஏதாவது பிரச்சனையா?’ என தொண்டைவரை வந்த வார்த்தையை கடினப்பட்டு விழுங்கியவன், “என்ன?” என சாதாரணமாக கேட்டான். அமைதியாக அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் அட்சயா.

‘என்னாச்சு இவளுக்கு?’ என்ற யோசனையுடன், “நான் வேணா உன்னை ஹாஸ்டலுக்கு ட்ராப் பண்ணட்டுமா?” என்றான்.

ஹாஸ்டல் என்றதும் வேகமாக மறுத்தவள், “இல்ல வேணாம்.” என கூறினாள்.

அதற்குள் அங்கிருந்தவர்கள் அவர்கள் இருவரையும் அடிக்கடி பார்க்க, “ஆபிஸ் வெளிய போய் பேசலாம் வா.” என்றவன் கிளம்பினான். அவளும் அவளின் பொருட்களை எடுத்துக்கொண்டு அவனுடன் செல்ல, இருசக்கர வாகனத்தில் ஏற சொன்னான். அட்சயாவோ, “எங்க போறோம்?” என்றாள் தயக்கத்துடன்.

“உன்னோட சம்மதம் இல்லாம எங்கயும் கூட்டிட்டு போற ஐடியால நான் இல்லை. இப்போதைக்கு எதிர்க்க இருக்க கஃபேக்கு தான் போறோம்.” என்றவனின் தோளை பிடித்து ஏறியவளின் கைகள் நடுங்கியது.

அன்று மழையின் இரவில் பைக்கில் ஏறியதும் கையை எடுத்துக் கொண்டவள் இன்று அவனின் தோளை கெட்டியாக பிடித்துக் கொண்டாள்.

அடித்துக் கொண்டிருக்கும் சூறாவளியில் சிக்கிக்கொண்ட கொடி மரத்தை சுற்றி இறுக்கமாக பற்றிக்கொள்வது போல் இருந்தது அவளின் செயல்.

கஃபேவிற்கு இருவரும் வந்து சில நிமிடங்கள் கடந்திருந்தது. அட்சயாவின் முகத்தில் தோன்றிய உணர்வுகளை வைத்தே அவள் எதையோ யோசித்துக் கொண்டிருக்கிறாள் என புரிந்தது.

“நான் சொன்ன வேலை முடிஞ்சிடுச்சா. பொண்ணு பார்த்துட்டியா? அதை சொல்ல தான் இவ்வளவு யோசிக்குறியா?” என இயல்பாக கேட்டான் குரு.

“என்ன?” என அவனை பார்த்தவள் அவன் சொன்னது புரிந்தவுடன், “ஏன்? உங்களுக்கு வேற பொண்ணு தான் வேணுமா?” என்றாள் பட்டென்று.

“கம் அகைன்.” என அவளை மீண்டும் சொல்ல சொன்னான் குரு. அதற்குள் அவன் ஆர்டர் கொடுத்த காஃபி வந்திருக்க அட்சயா முகத்தை நிமிர்த்தவே இல்லை.

“நீ ஏதாவது சொன்னா தான் என்னால மேற்கொண்டு முடிவெடுக்க முடியும். மணிரத்னம் படத்துல வர மாதிரி இரண்டு வார்த்தை பேசுனா எனக்கு என்னனு புரியும்.” என்றான் காஃபியை குடித்துக் கொண்டே.

பெண் பார்க்க வந்திருக்கும் மாப்பிளையின் தோரணமாக தான் அவன் அமர்ந்திருந்தான். அவனை நிமிர்ந்து பார்த்தவள்,

“நாம மறுபடி கல்யாணம் பண்ணிக்கலாமா? இந்த டைம் உங்க வீட்ல இருக்க எல்லாரோட சம்மதத்தோட..” என ஒருவழியாக படபடக்கும் இதயத்துடன் கேட்டேவிட்டாள்.

“என் அம்மாகிட்ட இருந்த பயம் உனக்கு இப்ப போய்டுச்சா?” என குரு திருப்பி கேட்க, உதட்டை சுழித்துக் கொண்டாள்.

குருபிரசாத் எதுவுமே பேசவில்லை. நிதானமாக அவளை பார்த்துக்கொண்டே காஃபியை அருந்தியவன், “கிளம்பலாமா?” என்றான்.

அவன் அமைதி அவளுக்கு கலக்கத்தை கொடுத்தது. ‘எதுவுமே சொல்லல..’ என அவனை ஏறிட்டு பார்க்க அவனோ என்னவென்று கண்களாலே கேட்டான்.

மூச்சினை இழுத்துவிட்ட
அட்சயா, “எனக்கு ஊருக்கு போக பஸ் புக் பண்ணி தரீங்களா?”

“இப்பவா?” என அவன் மணியை பார்க்க அதுவோ எட்டை கடந்திருந்தது.

“இப்ப ஹாஸ்டல் போ. நாளைக்கு காலைல ஊருக்கு போ.”

“இல்ல ஹாஸ்டல் வேண்டாம். இப்பவே ஊருக்கு போகணும்.” என்றவுடன் அவனுக்கு தெரிந்த ட்ராவல்ஸில் பேசினான். அனால் தற்சமயம் எந்த பேருந்திலும் இடம் காலியாக இல்லை என கூறினார்கள்.

“எங்கயும் சீட் இல்ல. எதுக்கு இப்ப அவசரமா போகணும்.” என அவளை கூர்ந்து கேட்டான்.

“அது.. என்னோட பழைய ஹாஸ்டல்ல இருந்து கால் பண்ணாங்க.” என்றவள் தயங்கி தயங்கி “ரோஷன் என்னை தேடி அங்க வந்ததா சொன்னாங்க. அதான் புது ஹாஸ்டலுக்கும் வருவானானு ஊருக்கு போக போறேன்.” என்றவளை முறைத்தவன்,

“ஏன் டி அவனுக்கு பயந்தா ஓட பார்க்குற? உங்க அப்பா தான் அவன் மேல கேஸ் போட்டு, எழுதி வாங்கிருக்காரே அப்புறம் அவனால உன்னை ஒன்னும் பண்ண முடியாது.” என சொல்லியவனை ஆச்சரியமாக பார்த்தாள்.

‘என்னை பத்தி எல்லாமே தெரிஞ்சி வெச்சிருக்காரே..’ என வியந்தவள், “இல்ல நான் ஊருக்கு போறேன்.” என பிடிவாதமாக நின்றாள்.

ஒருநிமிடம் யோசித்தவன்,
“என்கூட வரியா? வண்டில போகலாம்.” என அழைத்தான்.

‘பைக்லயா?’ என வெளியே நின்ற வண்டியை பாத்து விழித்தாள். அவளின் முகபாவத்தில் சிரித்தவன், “அதுல இல்ல. கார்ல போகலாம். அபிக்கிட்டே சொன்னா எடுத்துட்டு வருவான்.” என்றவனை அவளுக்கு மறுக்க தோன்றவில்லை.

“சரி.” என்றவள் சபாபதிக்கு அழைத்து தான் ஊருக்கு வருவதை அறிவித்தாள்.

“என்ன விளையாடுறியா அச்சு? மணி என்ன?” என சபாபதி அதட்டினான்.

“நான் பத்திரமா வந்துடுவேன் ண்ணா.” என்றவளின் கையில் இருந்த ஃபோனை பறித்துவிட்டான் குருபிரசாத். அட்சயா அதிர்ந்து விழிக்க,

“நான் குருபிரசாத் பேசுறேன்.” என்றவனின் அதிரடி குரலில் ஒருநொடி குழம்பிய சபாபதி, “ஹா.. ஹான் சொல்லுங்க.. நீங்க எப்படி அச்சுக்கூட? அச்சுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே..” என்றான் பதட்டத்துடன். ‘அச்சுவுடன் இவர் எதற்கு இருக்கிறார்?’ என்ற எண்ணமும் சபாபதிக்கு எழாமல் இல்லை.

“சம்பரதயத்துக்கு கூட எப்படி இருக்கீங்கனு வரலையே..” என்ற குருவின் கேள்வியில் சபாபதி ஃபோனில் எப்படி முழிப்பான் என்பதை அட்சயாவின் முகத்தை பார்த்து தெரிந்துக் கொண்டான்.

“சாரி. எப்படி இருக்கீங்க?”

“ம்ம்.” என்றவன்,

“உங்க தங்கச்சி தான் ஊருக்கு போகணும்னு என்கிட்ட கேட்டாங்க. பஸ் எதுவும் இல்லை. அதான் நானே கார்ல கூட்டிட்டு வரேன்.” என்றவன் ஒரு வினாடி நிறுத்தி, “நான் கூட்டிட்டு வரலாம் தான?” என கேட்கவும் செய்தான்.

அட்சயாவே அவனிடம் சென்று கேட்டிருக்கிறாள் என்றாள் எதுவோ இருக்கிறது என புரிந்துக் கொண்ட சபாபதி, “கூட்டிட்டு வாங்க.” என்றதும் அட்சயாவிடம் ஃபோனை கொடுத்தான். சபாபதி எதாவது கேட்பான் என பார்க்க, அவனோ பத்திரம் கூறி வைத்துவிட்டான்.

“இங்கயே சாப்டுட்டு கிளம்பலாம்.” என்ற குரு இருவருக்கும் சேர்த்தே உணவை ஆர்டர் கொடுத்தவன் அபிலாஷிடமும் பேசிவிட்டு வைத்தான்.

ஆர்டர் செய்த உணவுகள் வரவும் அட்சயா தான் அதனை எடுத்து வைத்தாள். பின் இருவரும் சேர்ந்தே உணவினை உண்டு முடிக்க, அங்கு வந்துவிட்டதாக அபிலாஷ் குருவிற்கு அழைத்துவிட்டான்.

“உள்ள வந்து சாவி கொடு டா.” என்று குருபிரசாத் அழைத்ததும் உள்ளே வந்தவனை பார்த்து சிரித்த அட்சயா, “வாங்கண்ணா சாப்பிடுங்க.” என அழைத்தாள்.

“இருக்கட்டும் மா.” என்றவன் சங்கடம் கொடுக்கும்படி இருவரிடமும் எதுவும் கேட்கவில்லை. குருவிடம் கார் சாவியை கொடுத்துவிட்டு அவனின் பைக் சாவியை வாங்கிக்கொண்டு சிறு தலையசைப்புடன் கிளம்பிவிட்டான்.

காரில் ஏறி கிளம்பும் பொழுது சபாபதிக்கு அழைத்து தகவல் சொன்னாள் அட்சயா. வெள்ளி இரவு என்பதால் ரோட்டில் வாகனங்கள் ஊர்ந்த வண்ணம் இருந்தது. மழை வேறு லேசாக தூர துவங்க சாலையில் நெரிசல் மேலும் அதிகரித்தது.

“சாரி. நீங்க டையர்டா இருப்பீங்க. உங்கள கஷ்டப்படுத்துறேன்.” என்றவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு திரும்பினான்.

சிக்னலில் வாகனம் நிற்க, காரில் உள்ள அமைதி பிடிக்காமல் பாட்டை போட்டுவிட்டான் குருபிரசாத்.

“சந்தா ஓ சந்தா இவள் சம்மதம் தந்தாள்”

என்ற பாடல் ஒலிக்க, அட்சயாவின் மனதை அப்படியே பிரதிபலிப்பது போல் இருந்தது. லாவகமாக வாகனத்தை செலுத்திய குருவின் பக்கவாட்டு தோற்றத்தை பார்த்தபடியே இருந்தாள். அவளின் பார்வையை அறிந்தாலும் கண்டுக் கொள்ளவில்லை அவன்.

அடர்நீல நிற சட்டையை கைவரை மடித்து விட்டிருந்தான். அவ்வப்பொழுது வண்டி சிக்னலில் நிற்கும் பொழுது ஸ்டெரிங்ல் தாளம் போட்டபடியே வந்தான். அப்படியே அவனை அங்குலம் அங்குலமாக அருகில் அமர்ந்து பார்த்துக் கொண்டே வந்த அட்சயாவை அவம் உபயோகிக்கும் வாசனை திரவியமும் மயக்கியது.

சென்னையை தாண்டியவுடன் வண்டி வேகமெடுத்தது. அவளின் பார்வையை அதற்கு மேல் கண்டுகொள்ளாமல் இருக்க முடியவில்லை. எனவே, “இன்னும் இவ்ளோ நேரம் என்னையே பார்த்துட்டு இருக்க போற? உனக்கு தூக்கம் வந்தா தூங்கு..”

“இல்ல தூக்கம் வரல..” என்றவள் இருக்கும் இடத்தை சபாபதிக்கு அழைத்து சொன்னாள். பதிலுக்கு அவன் என்ன சொனானோ அமைதியாக வைத்துவிட்டாள்.

“எதுக்கு அவங்கள டிஸ்டர்ப் பண்ணுற? என்கூட தான இருக்க. அதுக்கு கூட எங்க இருக்கனு அடிக்கடி சொல்லணுமா?” என கடுப்புடன் கேட்டான் குரு.

அதில் மெல்ல சிரித்தவள், “அண்ணா கூட அதையே தான் சொன்னாங்க. அவங்க கூட தான வந்திட்டு இருக்க. சேலம் வந்ததும் சொல்லுன்னு சொன்னாங்க.” அவளின் முகத்தில் வந்த புன்னைகையை பார்த்த அவனுக்கும் சிரிப்பு வந்தது.

“அவன். அந்த ரோஷன்.. ப்ச் இங்கேயும் வருவான்னே நினைக்கல.. அதான் திடீர்னு ஊருக்கு போறேன்.” என்றாள் சலிப்புடன்,

“அவனை பார்த்து நீ எதுக்கு பயப்படுற?” வாகனத்தின் கீரை மாற்றியபடி கேட்டான்.

“நா ஒன்னும் பயப்படல. அவனையெல்லாம் பார்க்கவே கூடாதுன்னு தான் நினைக்குறேன்.” என்றவளுக்கு பூர்ணிமாவின் நினைவு வர அமைதியாகிவிட்டாள்.

அவளின் அமைதியை பார்த்தவன், “என்ன திடீர்னு கல்யாணம் பண்ணிக்கலாம்னு கேட்குற?” என பேச்சை மாற்றினான். அவளாக அவனிடம் வந்து கேட்டது அவனுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும் அவளிடம் பேசி தெளிவு படுத்திக்கொள்ள விரும்பினான்.

“திடீர்னுலாம் இல்லை. எங்க வீட்ல எப்ப கல்யாண பேச்சை எடுத்தாலும் உங்க ஞாபகம் தான் வரும். உங்களுக்கு வேற கல்யாணம் ஆகிருக்கோம்னு நானே என்னை சமாதானப்படுத்திப்பேன். ஆனா இங்க உங்கள பார்த்ததும் தான்.”, என்றவள் நிறுத்திவிட்டு தொடர்ந்தாள்,

“அண்ணா கூட வேலையை விட்டுட்டு வர சொன்னாங்க. ஆனா நான் தான் உங்கள பார்த்துகிட்டாவது இருக்கலாம்னு இங்கயே இருந்தேன்..” என்றவள் அவள் மனதில் இருந்த உணர்வுகள் அனைத்தையும் அவனிடம் சொல்லி விட்டாள்.

அப்படியே அவளை ஒவ்வொன்றாக பேச வைத்தான். அதுநாள் வரை நத்தையாக சுருண்டிருந்தவள் தன் கூட்டில் இருந்து வெளியே வந்தாள். சிறுவயதில் இருந்து வளர்ந்ததை அவளும் பேசிக்கொண்டே வர அதில் முக்கால்வாசி பூர்ணிமாவின் பெயர் தான் அடிபட்டது.

இவ்வளவு நெருக்கம்னு தான் அன்னைக்கு கொஞ்சம் கூட சந்தேகமே வரமா மேல வந்திருக்கா போல என அவனே நினைத்து கொண்டான்.

வாகனம் அப்பொழுது மேல்மருவத்தூர் வந்திருக்க, அதனை ஓரம் கட்டினான். அவன் டீ குடிக்க இறங்க இவள் எதுவும் வேண்டாம் என மறுத்துவிட்டாள். சிறிது நேரம் அப்படியே காற்றில் நின்றுவிட்டு மீண்டும் பயணம் தொடங்கியது. இம்முறை அட்சயாவுக்கு கண்கள் சொக்க அப்படியே தூங்கிவிட்டாள்.

இரண்டு முறை கார் கதவிலே இடித்துக் கொண்டவளை பார்த்தவன் அவனின் தோளிலே சாய்த்துக் கொண்டான். அவளும் அவனின் கையை பிடித்துக்கொண்டே உறக்கத்தை தொடர்ந்தாள். வாகனத்தில் மெல்லிய இசையில் பாடலும் கசிந்துக் கொண்டுதான் இருந்தது.

நன்றாக ஒருமணி நேரம் உறங்கியவள் விழித்துவிட்டு நேராக அமர்ந்துக் கொண்டாள். “உங்க வீட்ல நம்ம கல்யாணத்துக்கு ஓகே சொல்லுவங்களா.. உங்க அம்மா..” என அவள் தயங்கி தயங்கி கேட்க,

தூங்கியெழுந்து வேகமாக கேட்டவளை ஒருநொடி திரும்பி பார்த்துவிட்டு, “தூங்குறப்ப இதை தான் யோசிச்சிட்டு இருந்தியா?”

“ப்ளீஸ் சொல்லுங்க..”

“அம்மாவை ஒத்துக்க வைக்குறது என்னோட பொறுப்பு.” என்றவனை இமைக்காமல் பார்த்தாள்.

“நான் அப்படி உங்கள விட்டுட்டு வந்திருக்க கூடாது. என்னை மன்னிச்சிடுங்க. ஆனா எனக்கு அப்ப என்ன பண்ணுறதுனே புரியல. அதான்.. உங்கள பத்தி யோசிக்காம நானே நம்மக்கான முடிவை எடுத்துட்டேன்.” என அவளே உணர்ந்து சொன்னாள். அவளின் கையை அழுத்தி பிடித்தவன் அப்படியே அதனை அவனின் நெஞ்சோடு வைத்துக் கொண்டான்.

அந்த பயணம் முழுவதும் ஒவ்வொன்றாக அட்சயா யோசித்து யோசித்து பேசிக்கொண்டே வர அவளின் மனதில் இருந்த அனைத்தும் அவனிடம் சென்று சேர்ந்தது.

“எனக்காகவே வந்தாய்
என் நிழல் போலவே நின்றாய்
உனைத் தோற்று நீ என்னை வென்றாயே..

அடியே கொல்லுதே
அழகோ அள்ளுதே உலகம்
சுருங்குதே இருவாில் அடங்குதே!”

என ஒலித்துக்கொண்டிருந்த பாடலின் வரிக்கேற்ப அப்படியே இந்த பயணம் இருவருக்குமான பயணமாக நீளாதா என்று தான் இருவருக்குமே தோன்றியது.

“நீங்க இன்னும் எதுவுமே சொல்லலையே? உங்களுக்கு ஓகே தான?” சிறுகுரலில் கேட்டவளின் கண்களில் எதிர்பார்ப்பு அதிகரித்தது.

“எங்க வீட்ல பேசிட்டு நாளைக்கே கூட பொண்ணு கேட்டு வரேன்.” என அவன் சொல்ல சேலம் வரவேற்கிறது என்ற பலகை அவர்களையும் வரவேற்றது.

காலை மூன்று மணியளவில் அந்த பேருந்து நிலையத்தில் அவ்வளவு கூட்டம் இல்லை. ஆட்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக தான் இருந்தனர். ஆனாலும் சில டீ கடைகள் இயங்கிக் கொண்டிருந்தது.

அட்சயாவின் அழைப்பில் அங்கு வந்துவிட்டான் சபாபதி. குரு வண்டியில் இருந்து இறங்க, “வீட்டுக்கு வாங்க..” என சபாபதி அழைத்தான்.

“இருக்கட்டும். இன்னொரு நாள் வரேன்.” என்றவனையும் அட்சயாவையும் மாறி மாறி பார்த்தான் சபாபதி.

அங்கிருந்த டீ கடைக்கு சென்றனர். காலையிலே சஷ்டி கவசம் அங்கு ஒலித்துக்கொண்டிருக்க அழகாய் இருந்தது அந்த விடியல்.

“நா உன்னை தேடி சென்னை போனா.. நீ இங்க இருக்கியா..” என அந்நேரம் ரோஷன் அவர்களை நெருங்க, சபாபதி தங்கையை பார்த்தான். அவளோ குருவின் சட்டையை பிடித்துக்கொண்டு அவனின் முதுகில் மறைந்துக் கொண்டாள். அதிலே தங்கையின் மனம் அவனுக்கு புரிந்துவிட்டது.

குருவை அங்கு எதிர்பார்க்காத ரோஷன், “ஹே நீ அவன் தான? நீ வேணாம்னு தான அவ வந்தா மறுபடி சேர்ந்துட்டீங்களா..” என்றவனின் வாயிலே குத்தினான் குருபிரசாத். அதில் அவன் வாயில் இருந்து இரத்தம் வழிந்தது.

“ப்ளீஸ் அவன்கிட்ட பிரச்சனை வேணாம். நீங்க வாங்க..” என சபாபதியும் அட்சயாவும் அவனை இழுக்க,

“இனிமே இவ பின்னாடி வந்த.. தொலைச்சிடுவேன்.” என மிரட்டிவிட்டே அவனை விட்டு விலகினான் குருபிரசாத்.

சபாபதி முன்னே நடந்து அவனின் காரில் அமர்ந்துவிட, பின்னே குருவுடன்
காரை நோக்கி நடந்த அட்சயா, “மறுபடி சென்னை போறீங்களா?” என ஏறிட்டாள்.

“இல்ல. விருதுநகர் போகணும். அம்மாகிட்ட நம்ம கல்யாணத்தை பத்தி பேசனும்ல..” என அவன் கண்ணடித்து சொல்ல அட்சயாவின் முகத்தில் வெட்க பூக்கள் பூத்தாலும் அவளின் கண்கள் கலங்கியது.

காரில் அமர்ந்தபடியே அவர்களை பார்த்த சபாபதிக்கு நிறைவாக இருந்தது. உள்ளிருந்தே “அச்சு.” என குரல் கொடுத்தான்.

காரின் கதவை திறந்து அவளை சபாபதியுடன் அனுப்பி வைத்த குருபிரசாத், தன்னுடைய வாகனத்தை விருதுநகர் நோக்கி விரட்டினான்.

சொன்னபடியே மறுநாள் காலையிலே வீட்டினர் அனைவரையும் அழைத்துக் கொண்டு அட்சயாவை பெண் கேட்டு வந்துவிட்டான், குருபிரசாத்.
 
Wow அச்சு இது நீயா🥰🥰🥰🥰🥰
பார்ரா சூப்பர் போ🤩🤩🤩🤩🤩
நா குருக்கு ரெண்டு மூணு ஷர்ட் ஸ்பான்சர் பண்ணலாம்னு இருக்கேன்🤭🤭🤭🤭🤭
அன்னைக்கு ஓணம் function அப்பவும் இதே blue shirt தானே போட்டு இருந்தான்😅😅😅😅
 

STN - 92

Member
Staff member
Wow அச்சு இது நீயா🥰🥰🥰🥰🥰
பார்ரா சூப்பர் போ🤩🤩🤩🤩🤩
நா குருக்கு ரெண்டு மூணு ஷர்ட் ஸ்பான்சர் பண்ணலாம்னு இருக்கேன்🤭🤭🤭🤭🤭
அன்னைக்கு ஓணம் function அப்பவும் இதே blue shirt தானே போட்டு இருந்தான்😅😅😅😅
அவ்வ் அதே கலரா🙈

அச்சு அப்பா துணி கடைதான வெச்சிருக்காங்க, அங்க போய் மொத்தமா அள்ளிக்கலாம்😜

நன்றி dear❤
 

Kalai Karthi

Active member
குரு கலக்குகிறான். அச்சு மனதை சொன்னது அழகு. சபா சூப்பர்.
 
Top Bottom