• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அத்தியாயம் - 13

STN - 92

Member
Staff member
மனம் - 13

அறையில் விட்டத்தை பார்த்து படுத்திருந்தாள் அட்சயா. சற்று முன்பு தான் சபாபதியுடன் வீட்டிற்கு வந்துருக்க, “கொஞ்ச நேரம் தூங்கு அச்சு. காலைல பேசிக்கலாம்.” என்ற சபாபதி அவனின் அறைக்குள் சென்றுவிட்டான்.

எப்பொழுதும் பயணம் செய்து வந்தால் முதலாக குளிக்க செல்பவள் இன்று எதையும் செய்ய பிடிக்காமல் அப்படியே படுத்துவிட்டாள். இரவு முழுக்க குருவுடன் செய்த பயணமே மீண்டும் மீண்டும் அவளின் கண்முன்னே விரிய, கண்களை மூடி அந்தக்கணத்தை அனுபவித்தாள்.

விடிந்ததும் எழுந்து குளித்து அறையில் இருந்து நேராக பூஜை அறைக்கு தான் சென்றாள். வெகு நாட்களுக்கு பின் கண்களை மூடி திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்ற வேண்டுதலையும் வைத்தாள்.

சபாபதி மற்றும் ஆவுடையப்பன் வரவேற்பறையில் அமர்ந்திருக்க, அங்கே சென்றவள் ஆவுடையப்பனின் அருகில் அமர்ந்தாள். அவள் வந்த விஷயத்தை ஏற்கனவே சபாபதியின் மூலம் அறிந்திருந்தவர் அட்சயாவின் முகத்தை தான் பார்த்தார்.

“அப்பா..” என வெட்கத்துடன் அழைத்து அவரின் கைகளை பிடிக்க, உடனே சபாபதி சிரித்துவிட்டான்.

“அப்பா அண்ணாவை பாருங்க கிண்டல் பண்ணுறான்.”

“சும்மா இரேன் டா. நீ சொல்லு பாப்பா.” என பேப்பரை மடக்கிவிட்டு அவளின் புறம் திரும்பினார். அவர்களுக்கான காஃபியுடன் பரிமளமும் வந்துவிட்டார்.

கைகளில் இருக்கும் விரல்களை பார்த்துக் கொண்டே அவளுக்கும் குருவிற்கும் நடந்த உரையாடல்களை தெரிவித்தாள்.

“அவங்க அம்மா..” என்ற பரிமளம் ஆவுடையப்பனின் பார்வையில் அமைதியாக,

“அவங்களே பார்த்துக்குறேன்னு சொல்லிட்டாங்க ம்மா.” என வேகமாக சொன்ன மகளின் முகத்தில் வந்த மகிழ்வை கண்டவர் எப்படியாவது இந்த கல்யாணத்தை முடிக்கணும் என்று நினைத்துக் கொண்டார்.

“உனக்கு ஓகே னா. எங்களுக்கென்ன ம்மா. நான் கோபி மாப்ள கிட்ட பேசிட்டு வரேன்.” என மகளின் கன்னம் தட்டியவர் அறைக்குள் சென்றார்.

அவரின் பின்னே வந்த பரிமளம், “இப்ப என்னங்க பண்ணுறது?”

“நம்ம பொண்ணு ஆசைப்படுறாளே பரிமளம். அவ மட்டும் இல்லை அந்த தம்பியும் இவகிட்ட பேசிருக்காங்க. அவங்க வீட்டை அவர் சரி பண்ணிடுவாருன்னு தான் தோணுது. எதுக்கோ நாம கோபிகிட்ட பேசுவோம்.” என சாதக பாதகங்களை அலச துவங்கினார்கள்.

காலையில் மணி ஒன்பதை நெருங்கிக் கொண்டிருக்கும் பொழுது தான் அவனின் வீட்டுற்குள் பிரவேசித்தான் குருபிரசாத். பாக்கியமும் குணசீலனும் காலை உணவை உண்டபடி அமர்ந்திருந்தனர்.

உள்ளே நுழைந்தவனை பார்த்தவர்கள், “வரேன்னு சொல்லவே இல்லையே குரு. நைட் முழுக்க நீயே வண்டியொட்டிட்டு வந்தியா?” என குணசீலன் கரிசனையாக கேட்டார்.

“ஆமாப்பா. தீடீர்னு பிளான் பண்ணுற மாதிரி ஆகிடுச்சு. அட்சயாவை அவங்க வீட்ல விட்டுட்டு நான் அப்படியே இங்க வரேன். சாப்பாடு எடுத்து வையுங்கம்மா குளிச்சிட்டு வரேன்.” என இரண்டிரண்டு படிகளாய் தாண்டி அவனின் அறைக்கு சென்றான்.

“என்னங்க சொல்லிட்டு போறான். அந்த பொண்ணு வீட்டுக்கு இப்ப எதுக்கு போனானாம்?” என பாக்கியம் ஆரம்பிக்க,

“இரு பாக்கியம் என்னனு விசாரிக்கலாம். நைட் முழுக்க தூங்காம வந்திருக்கான். முதல்ல வந்து சாப்பிடட்டும். நீயும் சாப்பிடு.” என பாதி உணவில் இருந்த இருவரும் சாப்பிட்டுவிட்டு எழ, குருவும் வந்து சாப்பிடும் வரை அமைதியாக இருந்த பாக்கியம்,

“இப்ப எதுக்கு குரு அங்க போன?” என குரலை உயர்த்தினார். அதற்குள் பாக்கியத்தின் அம்மா, அப்பா அனைவரும் வரவேற்பறையில் ஒன்று கூடிவிட்டனர்.

அவர்களின் முன்னே இருந்த ஒற்றை சோபாவில் அமர்ந்தவன், “நானும் அட்சயாவும் எல்லாமே பேசிட்டோம் ம்மா. இப்ப உங்க சம்மதத்தோட கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கோம்.” என்றான் சுற்றிவளைக்காமல்.

“என்ன சொல்லுற குரு? நீங்க பேசி முடிவு பண்ணா போதுமா?”

“நீங்க தான மா. உங்க சம்மதம் இல்லாம கல்யாணம் பண்ணோம்னு சொன்னீங்க. அதான் இந்த முறை உங்க சம்மதம் கேட்குறோம்.”

“இதுக்கு நான் ஒத்துக்கவே மாட்டேன் குரு. அவங்க நம்ம ஆள் இல்லை.” என்ற பாக்கியத்தை ஆயாசமாக பார்த்தவன் அவனின் தந்தை, அம்மாச்சி, தத்தாவையும் பார்த்தான்.

“சிம்பிள் ம்மா. உங்க கிட்ட கேட்டேன் நீங்க ஒத்துக்கலனு நானே கல்யாணம் பண்ணி தனியா போய்டுவேன்.”

“அம்மா கிட்ட அப்படிலாம் பேசாத ராசா. பொறுமையா சொல்லு பாக்கியம் கேட்டுக்குவா..” என பாக்கியத்தின் தாயார் சொல்ல,

“என்ன குரு அப்படிலாம் உன்னை பேச சொன்னாளா அவ?” என பாக்கியம் எகிறினார்.

“யாரும் எனக்கு எதுவும் சொல்லி கொடுக்க தேவையில்லம்மா. அன்னைக்கு கல்யாணம் பண்ணிட்டு அப்படியே போகலயே உங்க சம்மதத்துக்காக இங்க தான வந்தோம். ஆனா நீங்க..” என்றவன் ஒரு நொடி நிறுத்து தலையை கோதினான்.

அதிலே அவன் கோபத்தை கட்டுப்படுத்துவது தெரிந்தது. “நீங்க எங்களை உள்ள கூட விடலயேம்மா. அப்ப இந்த வீட்டுல பிறந்து வளர்ந்த எனக்கு என்ன உரிமை இருக்கு இங்க?” என ஆற்றாமையுடன் கேட்டவன்,

“அதெல்லாம் முடிஞ்சி நாலு வருஷத்துக்கு மேல ஆகுது ம்மா. என்னால இதுக்கு மேல பொறுமையா இருக்க முடியாது.”

“நீங்க சம்மதிச்சா உங்க தலைமைல கல்யாணம் நடக்கும் இல்ல ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணி சென்னைக்கே போய்டுறேன். சாயந்தரம் வரைக்கும் டைம் எடுத்துக்கோங்க. இன்னைக்கே முடிவு தெரிஞ்சாகனும். எனக்கு இப்ப தூக்கம் வருது..” என்றவன் அறைக்குள் சென்று அசோகனிடம் அனைத்தையும் சொல்லிவிட்டான்.

“மச்சான் துணை கிடைக்கும்னு பார்த்தா உனக்கு தான் நான் துணையா இருக்கனும் போல..” என்றவர்,

“நளினியை அனுப்பி விடுறேன் மாப்ள. அவ எடுத்து சொன்னா அத்தை கேட்பாங்க..” என வைத்துவிட்டார்.

நளினி வந்தவுடன் அவளிடமும் பாக்கியம் கத்தி கொண்டிருப்பது குருவிற்கு கேட்க தான் செய்தது. கதவை சாற்றிவிட்டு உறங்க துவங்கினான்.

மதியம் இரண்டு மணிபோல் தான் கீழே வந்தான். “வாங்க அத்தான். வா க்கா.” என அசோகன் நளினியை வரவேற்றவன் சாப்பிட அமர, நளினியே வந்து பறிமாறினாள்.

“எதுக்கு டா இவ்ளோ அவசரம். இப்ப தான வீட்ல சொல்லியிருக்க. ஒரு பத்து நாள் போகட்டுமே. அம்மாவை கொஞ்ச கொஞ்சமா நம்ம வழிக்கு கொண்டுவரலாம்.” என அன்னையின் காதில் விழாதவாறு நளினி கேட்க,

“எப்படியும் அவங்க ஓகே சொல்லி தான் ஆகணும் க்கா. அதுக்கு எதுக்கு அவ்ளோ நாள் வெயிட் பண்ணனும்.” என்றவனை முறைத்தாள்.

“மாமா.” என அவனிடம் வந்த அக்காவின் பிள்ளைகளுக்கும் ஊட்டியபடி உணவை முடித்தவன், “சொல்லுங்க ம்மா. என்ன முடிவு பண்ணிருக்கீங்க?” என பாக்கியத்திடம் கேட்டான்.

“நான் இதுக்கு ஒத்துக்கவே மாட்டேன் குரு.” என்றார் பாக்கியம். அனைவரும் எவ்வளவோ பேசிவிட்டார்கள். ஆனால் கொஞ்சமும் இறங்க மாட்டேன் என்று இருப்பவரை என்ன செய்வது என தெரியவில்லை.

ஒரு நிமிடம் முழுவதும் அமைதியாக இருந்தவனை தான் அனைவருமே பார்த்தனர். சோபாவின் கைப்பிடியில் விரலால் தாளம் போட்டவன், “சரி ம்மா. உங்க இஷ்டம்.” என எழுந்துக் கொண்டான்.

“நீ என்ன பண்ண போற குரு?” என உள்ளுக்குள் உறுத்தினாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் கேட்டார் பாக்கியம்.

“நான் தான் என்னோட முடிவை காலைலயே சொல்லிட்டேனே ம்மா.” என்றவன், “நான் தீப்பெட்டி ஆபீஸ் வரைக்கும் போயிட்டு வரேன்.” என வெளியேறிவிட்டான்.

“சொல்லுறதை கேளு பாக்கியம். நீ சரின்னு சொன்னா கல்யாணம் பண்ணிட்டு இங்க வருவாங்க. இல்லனா அந்த பொண்ணு கூடவே அவன் தனியா போய்டுவான். நல்லா யோசிச்சிக்கோ.” என பாக்கியத்தின் தாயார் சொல்ல,

“அதுக்காக வேற ஆளுங்களை எப்படி ம்மா..” என பிடிவாதமாக நின்றார் பாக்கியலட்சிமி.

“காலத்துக்கு ஏத்த மாதிரி இருக்க கத்துக்கோ பாக்கியம். நீ இப்ப சரின்னு சொன்னா அந்த பெண்ணையும் குருவையும் உன் கைக்குள்ளேயே வெச்சிக்கலாம். இல்லனா நாளைக்கு என்ன நடக்குமோ.” என்றவரை “தப்பு தப்பா சொல்லாதீங்க அம்மாச்சி.” என முறைத்தாள் நளினி.

அப்படி இப்படியென ஏதேதோ பேசி ஒருவழியாக அரைமனதாக பாக்கியத்தை சம்மதிக்க வைத்தார்கள்.

“நாளைக்கே அவங்க வீட்டுக்கு போய் பேசலாம்.” என மாலைப்போல் குரு சொல்லிட, பாக்கியத்திடமும் இதற்கு மேல் பொறுமை காக்க முடியாது என தோன்றியதால் அதனை அப்படியே அட்சயாவின் வீட்டுனரிடம் அசோகன் தெரிவித்தார்.

முடிவு எடுக்கும் வரை தான் அட்சயா, குரு என இருவருமே பேசினார்கள் அதன் பிறகு மாப்பிள்ளை வீட்டின் சார்பாக அசோகனும், பெண் வீட்டின் சார்பாக கோபிநாத்துமே யாருக்கும் சங்கடம் வராதளவுக்கு பேசினார்கள்.

இரவில் குருவிற்கு அழைத்த அட்சயா, “நாளைக்கே பூ வெச்சி உறுதி படுத்த வரீங்களா?” என,

“நான் தான் ஏற்கனவே சொன்னனே..”

“ம்ம்ம். ஆனாலும் ரொம்ப வேகமா இருக்க மாதிரி இருக்கு.”

“நமக்கு கல்யாணம் ஆகி நாலு வருஷம் முடிஞ்சிடுச்சு. அட்லீஸ்ட் மூணு குழந்தையாவது இருக்கணும். ஆனா நீ என்னன்னா இதையே வேகம்னு சொல்லுற?” என குரு குறைப்பட்டான்.

“என்ன! நாலு வருஷத்துல மூணு குழந்தையா?” என அதிர்ச்சியில் அட்சயா விழிக்க,

“சரி ரெண்டு குழந்தைங்கனு வெச்சிப்போம்.” என்றவனிடம் அதற்குமேல் பேச அவளால் முடியவில்லை.

கல்யாணத்திற்கான பிடித்தம், வீட்டினரின் சம்மதம் அடுத்து திருமணம் என அடுத்தடுத்த கட்டங்களில் அவர்களின் உறவு நிலை நகர துவங்கியது. திருமணத்திற்கு அடுத்த நிலையை எண்ணி அட்சயாவிற்குள் குறுகுறுக்க, குருபிரசாத் அதனை சாதாரணமாகவே கையாண்டான்.

“நேர்ல அவ்ளோ பேசுன. இப்ப ஒன்னும் சொல்ல மாட்டிங்குற?”

“அது.. நான் தூங்க போறேன் குட் நைட்.” என வைத்து விட்டாள். அட்சயாவிற்கு உடம்பெல்லாம் படபடத்து விட்டது. பூர்ணிமாவிடம் ஏற்கனவே விஷயத்தை சொல்லியிருக்க அவள் மிகவும் சந்தோஷபட்டாள். என்ன அட்சயாவுடன் தான் அவளால் இருக்க முடியவில்லை.

மறுநாள் காலையில் குருபிரசாத்தின் உறவினர்கள் சிலருடன் அட்சயாவை பெண் பார்க்க வந்திருந்தனர். விடிகாலையில் புறப்பட்டவர்கள் வரும் வழியிலே காலை உணவை முடித்துக்கொண்டு பத்து மணி போல் தான் வந்தனர்.

வந்தவர்களுக்கு காஃபி, டீ, கேசரி, வடை என அனைத்தையும் கொடுத்து முடித்த பின்னே பெண்ணை அழைத்து வந்தார்கள்.

இளம்பச்சை நிறத்தில் புடவை அணிந்து கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தவளிடமிருந்து குருபிரசாத்தால் பார்வையை திருப்ப முடியவில்லை. அவனுமே பட்டு வேஷ்டி சட்டையில் தான் வந்திருந்தான்.

ஆரம்ப கட்ட நலவிசாரிப்புகளும், அறிமுகங்களும் முடிந்தபின்
எப்படி ஆரம்பிப்பது என தெரியாமல் அனைவரும் அமர்ந்திருக்க, குருவின் அருகில் சென்ற சர்வேஷ், “நீங்க தான் தித்தியை கல்யாணம் கட்டபோறீங்களா..” என குருபிரசாத்தை குறுகுறுவென பார்த்தான்.

“ஆமா நானே தான். நீ சொல்லு உன்னோட சித்தி குட் கேர்ளா பேட் கேர்ளா..” என சர்வேஷை கையில் பிடித்துக் கொண்டு கேட்டான் குருபிரசாத்.

திரும்பி அட்சயாவை பார்த்தவன், குருவின் காதிற்கு அருகில் சென்று சத்தமாக, “தித்தி ரொம்ப பேட் கேர்ள். என்னோட சிப்ஸ், சாக்லேட் எல்லாம் பிடுங்கி சாப்பிடுவா..” என சொல்லிட, அங்கிருந்த அனைவருக்குமே சிரிப்பு வந்துவிட்டது. பாக்கியத்திற்கு கூட சிரிப்பு வர அதனை கட்டுப்படுத்திக் கொண்டார். அட்சயாவிற்கு சங்கடமாக இருக்க அவளின் அக்கா கங்காவை தான் முறைத்தாள்.

“டேய் இங்க வா டா.” என கோபிநாத் அவனை இழுத்துக்கொள்ள, “உங்க பையனா..” என அசோகன் அப்படியே பேச்சினை துவங்கினார்.

“என்னென்னமோ நடந்துடுச்சி. அதெல்லாம் மனசுல வெச்சுக்காம பசங்க விருப்பத்தை மட்டும் நாம இப்ப யோசிப்போம்.” என்ற குணசீலனை ஆவுடையப்பனும் அமோதித்தார்.

“அடுத்த மாசம் கார்த்திகைல நல்ல முகூர்த்தம் இருக்கு. அதை விட்டா அடுத்து தை மாசம் தான்.” என குறித்து வைத்த தேதிகளை பரிமளம் சொன்னார்.

“எதுக்கு தள்ளி போடணும். பொண்ணுக்கு சௌகரியமா இருந்தா அடுத்த மாசமே வெச்சிக்கலாம்.” என்றார் பாக்கியத்தின் அம்மா.

அதன் படி இன்னும் ஒரு மாதத்தில் அட்சயாவிற்கும் குருவிற்கும் திருமணம் முடிவாகியது. எடுத்து வந்த புடவையை கொடுத்து மாற்றிவர சொல்லி அந்நேரமே அட்சயாவிற்கு நளினி பூவைக்க, திருமணத்தை உறுதி படுத்திவிட்டார்கள்.

“எங்களுக்கு வரதட்சணை எதுவும் வேணாம். நகையெல்லாம் கூட உங்க விருப்பம் தான். ஆனா, கல்யாணம் எங்க ஊர்ல எங்க முறைப்படி தான் நடக்கணும். எங்க சடங்கு என்னென்னனு சொல்லிடுறோம். அது படி எல்லாமே இருக்கணும்.” என்றார் அதுவரை அமைதியாக இருந்த பாக்கியம்.

குருபிரசாத்தின் பார்வை முழுவதும் அவனின் அன்னை மீது இருந்தது. அதற்கு மேல் அவனாலும் பாக்கியத்தை நெருக்க முடியவில்லை. யாராவது ஒருவரின் சம்பிரதாயத்தில் தான் திருமணம் நடக்கும் என்பதால் அவர்களே பேசி முடிவிற்கு வரட்டும் என அமைதியாகிவிட்டான். கங்கா அட்சயாவை அழைத்து உள்ளே சென்றுவிட்டாள்.

“நீங்க விருப்பப்பட்டா கல்யாணத்துக்கு அப்புறம் இங்க தனியா வரவேற்பு கூட வெச்சிக்கோங்க. ஆனா கல்யாணம், குலதெய்வ கோவிலுக்கு பொங்கல் வைக்குறது, தலை முழுக்குனு எல்லாமே முடிஞ்சத்துக்கு அப்புறம் தான் மறுவீட்டுக்கு இங்க அனுப்புவோம்.” என திட்டவட்டமாக சொல்லிவிட்டார், பாக்கியம்.

மொத்தமாக திருமணத்தில் மாப்பிள்ளை வீட்டின் கை தான் ஓங்கியிருக்கும் என அவர் சொல்வதிலே அப்பட்டமாக தெரிந்தது.

பெண் வீடு என்பதால் ஆவுடையப்பனும் எதுவும் சொல்லாமல் அனைத்திற்கும் சம்மதம் சொன்னார். பரிமளத்திற்கு தான் கொஞ்சம் உருத்தலாக இருந்தது. “அச்சு வேற ரொம்ப அமைதியான பொண்ணு. இவங்க கிட்ட எப்படி இருக்க போறாளோ.” என அப்பொழுதே எண்ண துவங்கிவிட்டார்.

பேசி முடித்து அட்சயாவின் வீட்டில் இருந்து அனைவரும் வெளியே வந்தனர். அங்கே ரோஷனும் அவனின் அம்மாவும் வந்தனர்.

நேராக ஆவுடையப்பனிடம் சென்ற சுடர்மணி, “என்ன இருந்தாலும் என்னோட அண்ணா பொண்ணு என் பையனுக்கு தான? மாமா பொண்ணுன்னு உரிமைல என்னோட பையன் கிருக்குத்தனமா எதாவது பண்ணிருக்கான் தான். அதுக்காக நீங்க யாரோ ஒருத்தனுக்கு தூக்கி கொடுப்பீங்களா? அப்ப என் பையனோட நிலைமை?” என சண்டையிட்டார்.

இப்பொழுது தான் பாக்கியம் இறங்கி வந்திருக்க அனைருக்கும் பதட்டமாக இருந்தும். குரு மட்டுமே ரோஷனை முறைத்துக் கொண்டிருந்தான்.

“என் பொண்ணுக்கு அதுல விருப்பம் இல்லை. உன் பையன் மேல இருக்க கேஸை மறுபடி என்னால ஓபன் பண்ண முடியும். ஒழுங்கா போய்டுங்க.” என்ற ஆவுடையப்பனிடம்,

“உங்க கிட்ட என்ன பேச்சு மாமா.” என்ற ரோஷன்,

“இங்க பாருங்க. அட்சயா..” என பாக்கியத்திடம் ரோஷன் வர அவனின் கன்னத்திலே அறைந்திருந்தான் குருபிரசாத், “அவ பெரு கூட உன் வாய்ல இருந்து வர கூடாது.” என விரல் நீட்டி மிரட்ட,

“விடு குரு. அவன் ஏதோ சொல்ல வரானே என்னனு கேட்போம்.” என்ற பாக்கியம் ரோஷனின் முன் சென்று நிற்க அனைவருக்கும் பதட்டம் அதிகரித்தது. பாக்கியத்தை பற்றி தெரிந்திருந்த குருவும் குணசீலனும் தான் அமைதியாக இருந்தனர்.

“நீங்க நிச்சயம் பண்ணிட்டு போறீங்களே என்னோட மாமா பொண்ணு. அவ நடத்தை சரில்லை.” என்றவன் மேலும் செல்வதற்குள் பாக்கியத்தின் கை அவனின் கன்னத்தில் பதிந்தது.

“எம்பூட்டி தைரியம் இருந்தா.. அந்த பொண்ணோட அப்பா, அம்மா, அண்ணா, நாளைக்கு கல்யாணம் கட்ட போறவன்னு இவ்ளோ பேர் அவளை சுத்தியிருக்கும் போதே அவளை பத்தி தப்பா பேசுவ? பொண்ணுனா அவ்ளோ சாதாரணமா போச்சா உனக்கு? தொலைச்சிடுவேன்.” என மீண்டும் மற்றொரு கன்னத்திலும் அறைவிட அட்சயாவின் குடும்பம் தான் ஆடிபோயினர்.

பாக்கியத்திற்கு, அவர்கள் வேறு இனத்தை சேர்ந்தவர்கள். தன் மகனின் கல்யாணத்தில் தன்னுடைய விருப்பத்திற்கு முக்கியத்துவம் இல்லை என்பது தான் பெரிய குறையாக தெரிந்தது. பணத்திற்கான திருமணம் இல்லை என்பதை அட்சயா சென்ற பொழுதே புரிந்துக்கொண்டார்.

அவரின் சொந்தங்களிடம் கூட குருவின் காதல் திருமணம் பிடிக்கவில்லை என்ற வதந்தி தான் பரவியிருந்ததே தவிர அட்சயாவை பற்றி ஒரு தவறான செய்தி கூட இல்லை. பாக்கியலட்சுமியும் ஒரு பெண்ணை பற்றி அவதூறு பரப்ப கூடாது என அப்படியே விட்டுவிட்டார். இன்று அவரின் முன்னே அவளை பற்றி தவறாக சொன்னால் விட்டுவிடுவாரா?

“இப்படி ஒரு பிள்ளையை பெத்து வெச்சிக்கிட்டு எப்படி உன்னால வெளிய தலை காட்ட முடியுது?” என சுடர்மணியையும் சரமாரியாக கேட்டுவிட்டு தான் ஓய்ந்தார்.

கன்னத்தில் கைவைத்து நின்ற ரோஷனின் அருகில் சென்ற குருபிரசாத் அவனின் சட்டையை பிடித்து, “ஏற்கனவே உங்க குடும்பம் தட்டை தூக்கிட்டு வந்ததுக்கு தான ஒரு வருஷமா நீ படுத்த படுக்கையா இருந்த?” என்று நக்கல் குரலில் யாருக்கும் கேட்காத வண்ணம் சொல்ல அதிர்ந்து முழித்தான் ரோஷன்.

“அப்படினா..”

“நானே தான். ஆள் வெச்சி உன்னோட கைக்கால் உடைக்க தெரிஞ்ச எனக்கு அதுக்கு மேலயும் போக முடியும்.”

“இரு. இப்பவே நாம் போலீஸ் போறேன்.”

“போ. உன்னோட ப்ரண்ட்ல இருந்து உங்க நகைக்கடைல வேலை பார்க்கிற வரைக்கும் என்னோட ஆளுங்க இருக்காங்க. டாக்ஸ் கட்டாம பிளாக்ல எவ்ளோ கோல்ட் வாங்குறீங்க, விக்குறீங்கனு எல்லாமே எனக்கு தெரியும். ஏன் நாளைக்கு ராஜஸ்தான்ல இருந்து வாங்க போற வைரம் வரைக்கும் தெரியும். ஐடி ரைட் விட்டா மொத்தமா போய்டும். நீயா விலகிடு. இல்லனா விளைவு ரொம்ப மோசமா இருக்கும்.”

ஏற்கனவே ரோஷனின் நடவடிக்கையில் நொந்து போன அவனின் தந்தை அவனை கடைபக்கமே விடவில்லை. இது மட்டும் அவருக்கு தெரிந்தால் என்ற பயம் ரோஷனின் கண்ணில் தெரிந்தது.

“வெயிட் காலர் ஜாப் தான் போறேன்னு நினைக்காத. நானும் அடிமட்டம் வரைக்கும் இறங்கி வேலை பார்த்திருக்கேன். தீப்பெட்டி தொழில் பார்க்குறவனை உரசி பார்க்கலாம்னு பார்க்காத. அப்புறம் மொத்தமா எரிஞ்சிடுவ..” என்றவன் அவனின் சட்டையை விட்டான். ஒருவித இயலாமையில் சுடர்மணியை கூட்டிக்கொண்டு வெளியேறினான் ரோஷன்.

அவ்வளவு நாள்வரை பாக்கியத்தின் மேல் இருந்த பயம் அனைத்தும் ஒருவித மரியாதையாக மாறியது அட்சயாவிற்கு.

இரவில், “நான் இன்னைக்கு சென்னைக்கு கிளம்புறேன். நீங்களும் வரீங்களா?” என அட்சயா குருவிடம் கேட்டாள்.

“இன்னும் ஒருவாரம் இங்க தான். தீப்பெட்டி ஆபீஸ்ல கொஞ்சம் வேலை இருக்கு பார்க்கணும்.”

“நீங்க அந்த ரோஷன் கிட்ட என்ன சொன்னிங்க? அவன் அமைதியா போய்ட்டான்.” என அதுவரை மண்டையில் குடைந்த கேள்வியை கேட்டுவிட்டாள்.

“இனிமே அவன் உன் பக்கம் வர மாட்டான். அதை பத்தி யோசிக்காத..” என அழுத்தமாக குரு சொல்ல உதட்டை சுழித்துக் கொண்டவள்,

“கை நீட்டி அடிக்குற பழக்கம் எப்படி வந்துச்சுன்னு இன்னைக்கு தான் தெரிஞ்சிச்சு..”

“ஏய். எங்கம்மா சொல்லுறியா?”

“ச்ச ச்ச எங்கத்தையை சொல்லுறேன்.”

“ஓ அப்படி. எனக்கு கை மட்டும் நீளாது வாயும் நீளும் தெரியுமா?” என உல்லாசமாக குரு கேட்டான்.

“நீங்க யார்கிட்டயும் அவ்ளோவா பேசி நான் பார்த்தது இல்லையே..”

“பேசுறதுக்கு மட்டும் தான் வாய் நீளனுமா?” என்றவனின் பதிலில் அட்சயா அமைதியாகிவிட,

“அட்சயாவுக்கு புரிஞ்சிடுச்சு போலயே! உங்க வீட்ல எல்லாரும் அச்சு, பாப்பானு கொஞ்சுறதை பார்த்து நான் தான் எல்லாமே சொல்லிக் கொடுக்கணுமோன்னு நினைச்சேன் பரவால.” என குரு சிரித்தான்.

“ஏங்க..”

“நாலு வருஷமா ஏங்கி தான் டி இருக்கேன்.” என்றவன் அவனின் உணர்வுகளை அவளுக்குள் கடத்தினான்.

அதனின் தாக்கத்தை தாங்க முடியாமல், “என்னங்க நீங்க” என ராகமிழுக்க,

“அதென்ன நீங்க, வாங்க, போங்கனு சொன்ன இப்ப ஏங்க, என்னங்கன்னு சொல்லுற. பேர் சொல்லி கூப்பிடு.”

“ம்ஹும். நான் மாட்டேன்.”

“சரிவிடு. நேரம் வரப்ப உன்னை சொல்ல வைக்குறேன்.” என்றவனிடம் தர்க்கம் செய்யாமல் அலைபேசியை வைத்துவிட்டாள்.

அலுவலகத்தில் கல்யாணத்தை ஒரு வாரம் முன்பு சொல்லிக் கொள்ளாமல் என இருவருமே இருந்துக் கொண்டார்கள்.

பவ்யாவிடம் மட்டும் ரகசியாக அட்சயா சொல்ல, “அன்னைக்கு மால்ல பார்க்குறப்பவே நினைச்சேன் அச்சு” என்றவள் அவளிடம் வாழ்த்துக்களை தெரிவித்தாள்.

இரு குடும்பங்களும் சேர்ந்து பத்திரிகை அடித்து வைத்திருந்தனர். அடுத்த வாரம் தீபாவளியுடன் வாரயிறுதியும் சேர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை கிடைத்தது.

அதிலே குலதெய்வத்திற்கு பத்திரிகை வைப்பது; திருமணத்திற்கு உடை, நகை வாங்குவது என திருமண வேலைகள் துரிதமாக நடந்தது.

பாக்கியமும் அனைத்தும் தான் சொன்னபடி நடக்கிறதா என கண்ணில் விளக்கெண்ணெயை உற்றிக்கொண்டு கண்காணித்தார்.

சென்னையில் இருக்கும் பொழுதே அட்சயாவை அழைத்து சென்று அவளுக்காக மெட்டி வாங்கிக்கொடுத்தான் குருபிரசாத். அவன் ஆசையாக வாங்கிக்கொடுக்க மறுப்பேதும் சொல்லவில்லை அட்சயா.

திருமணத்திற்கு ஒருவாரம் முன்பு தான், அலுவலகத்தில்
தெரிவித்திருந்தான் குருபிரசாத். சிலர் ட்ரீட் கேட்டனர். சிலர் வாழ்த்தினர். சிலர் வம்பு பேசிவிட்டு நகர்ந்தனர். இரண்டு வார விடுப்பு எடுத்துக்கொண்டு சென்னையைவிட்டு அவரவர் ஊரிற்கு பயணித்தனர்.

வெள்ளிக்கிழமை,

பெரியவர்களின் ஆசியுடன் அட்சயாவின் கழுத்தில் பொன் தாலியை அணிவித்து, இம்முறை இருபக்க உறவினர்களின் வாழ்த்துகளிலும் நண்பர்களின் கேலியிலும் அட்சயாவை தன் சரி பாதியாக ஏற்றுக்கொண்டான் குருபிரசாத்.

தன் நெஞ்சில் உரசிய மாங்கல்யத்தை உணர்ந்த அட்சயாவின் உடல் சிலிர்ந்தது. விழிகள் கலங்க உதடுகள் சிரிப்பில் விரிய குருவை பார்த்தவளின் கையை இறுக்கமாய் பிடித்துக் கொண்டான், குருபிரசாத். பின், குருபிரசாத்தின் வீட்டிற்கு மணமக்கள் புறபட்டனர்.

இரண்டு பெரிய வெள்ளி குத்து விளக்குகளுடன் அட்சயாவும் குருவும் முன்னே நடக்க அவளின் பின்னே ஒரு பெரிய பித்தளை பானை நிறைய அரிசியும் அதில் ஒரு பித்தளை காமாட்சி விளக்கும் வைத்து சபாபதி எடுத்துச் சென்றான்.

“அவங்க வழக்கபடி பொண்ணோட சகோதரன் தான் அரிசியால நிரம்புன பானையை தூக்கணுமாம் கங்கா. அது மேல காமாட்சி அம்மன் விளக்கு வெச்சி அனுப்பினா நம்ம அச்சு அங்க போய் அந்த விளக்கை ஏத்தனுமாம்.” என பாக்கியம் தெரிவித்ததை வீட்டில் சொல்லிக் கொண்டிருந்தார் பரிமளம். “அவ்ளோ தான ம்மா நான் பார்த்துக்குறேன்.” என கெத்தாக சொல்லியிருந்தான் சபாபதி.

மண்டபத்தில் இருந்து வீடு நடக்கும் தூரம் தான் என்பதால் அங்கிருந்தே ஒற்றை தோள்பட்டையில் வைத்து தூக்கி வந்தான், சபாபதி.

சிறிது நேரத்திலே சபாபதிக்கு அதனின் எடை புரிந்து விட்டது. கிட்டத்தட்ட அந்த பானை, பதினைந்து கிலோவிற்கு மேல் அரிசியை பிடித்தது. அவனால் அதனை தோளில் வைத்துக்கொண்டு மெதுவாக நடக்க முடியவில்லை.

முன்னே அன்னநடை போட்டுக்கொண்டிருந்த அட்சயாவிடம், “அச்சுமா.. கொஞ்சம் வேகமா நடங்க மா. அண்ணனால இதை தூக்கிட்டு ஸ்லோவா முடியல..” என சபாபதி சொல்ல,

அவனை திரும்பி பார்த்த குருபிரசாத், “நீங்க முன்னாடி போங்க..” என அவனுக்கு வழிவிட்டு நகர்ந்தான்.

“எங்கள்துல பொண்ணுங்க தான் பானையை தூக்குவாங்க.” என அட்சயா சொல்ல.

“உன்னால இந்த பானை வெயிட்ட தாங்க முடியுமா?” என்பதற்கு காதில் இருக்கும் ஜிமிக்கிகள் ஆட மறுத்து தலையசைத்தவளின் கண்களை பார்த்துக்கொண்டே,

“அட்சயா என்னோட வெயிட்டை மட்டும் தாங்குனா போதும்.” என குருபிரசாத் கண்ணடித்து சொல்ல, அவளின் கன்னங்கள் இரண்டும் வெட்கத்தில் சிவந்தன.
 
Top Bottom