• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அத்தியாயம் - 14

STN - 92

Member
Staff member
மனம் - 14

குருபிரசாத்தின் வீட்டின் வாயிலில் மணமக்கள் வந்து நிற்கும் பொழுதே மழையின் வேகம் கூடியது. காலையில் இருந்து மென்தூரலாய் இருந்த மழை அப்பொழுது தான் சற்று வலுக்க துவங்கியது.

“கல்யாண பொண்ணு அரிசியா சாப்பிட்டிருப்பா போல.. அதான் நேத்துல இருந்து மழை விடாம பெய்யுது.” என கார்த்திகை மாத மழையை கல்யாண பெண்ணுடன் உவமை படுத்தி கேலி பேசினார்கள். அதில் சுற்றி இருக்கும் அனைவரும் சிரித்துவிட்டனர்.

முதல் முறை திருமணம் முடித்து வந்து, வீட்டிற்குள் கூட செல்லாமல் சண்டை போட்டு சென்ற இடம் தான் அது! அதனை உணர்ந்தாற்போல் தானாகவே அட்சயாவின் கையை பிடித்துக் கொண்டான் குரு.

நளினி ஆரத்தி எடுத்து மணமக்களை உள்ளே அழைத்துச் சென்றாள். அவர்களுடனே அட்சயாவின் அக்கா, மாமா, சபாபதி இன்னும் சில உறவினர்களும் வந்திருந்தனர்.

வாயிலை தாண்டி உள்ளே செல்ல, குருவின் வீட்டின் வாசலில் இருபுறமும் தூண்வைத்த திண்ணை இருந்தது. வலதுக் காலை எடுத்து வைத்து அட்சயா அவ்வீட்டின் உள்ளே சென்றாள்.

வீட்டினுள்ளும் தூண்கள் வைத்து தான் கட்டப்பட்டிருந்தது. பாக்கியத்தின் தாத்தா காலத்தில் இருந்த வீடை வசதிக்கேற்ப மாற்றியிருந்தாலும் அப்படியே தான் பராமரிகின்றனர்.

“முதல்ல விளக்கு ஏத்தலாம் வாங்க.” என நளினி, அட்சயாவையும் குருவையும் பூஜை அறைக்கு அழைத்து சென்றாள். அங்கு விளக்கு ஏற்றி, வணங்கிவிட்டு வந்தார்கள்.

அவர்களுக்கான பால், பழம் கொடுக்கும் சடங்கை முடித்தவுடன், “நீ வா அட்சயா. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு.” என அவளை நளினி அழைத்தாள்.

எட்டு மாத வாயிற்றுடன் சுற்றிக் கொண்டிருந்த கங்காவிடம், “நீயும் கொஞ்சநேரம் தூங்கு ம்மா. உனக்கும் அலைச்சல் தான?” என்ற பாக்கியம் கங்காவையும் அட்சயாவுடனே அனுப்பி வைத்தார்.

மாலை போல் காஃபி, டிபன் சாப்பிட்டுவிட்டு உறவினர்கள் ஒவ்வொருவராக கிளம்பினார்கள். அட்சயாவிற்கு பத்திரம் சொல்லிவிட்டு கங்கா கிளம்ப எத்தனிக்க, “அக்கா..” என தவிப்புடன் அவளின் கையை பிடித்துக் கொண்டாள்.

“பக்கத்து தெருவுல இருக்க மண்டபத்துக்கு தான அச்சு போறோம். நாளைக்கு காலையிலை குலதெய்வ கோவில்ல பார்க்கலாம். என்ஜாய்..” என தங்கையின் கன்னத்தில் தட்டிவிட்டு கிளம்பினாள். அவளுடனே அவர்களின் உறவினர்களும் சென்றுவிட்டனர்.

இரவிற்கான பிரத்யேக அலங்காரத்துடன் குருவின் அறை இருந்தது. மென்பட்டு புடவையில் கையில் பால் சொம்புடன் அட்சயா உள்ளே வர, அவளின் வருகையை பார்த்து விசிலடித்தப்படியே கதவை அடைத்து தாளிட்டவன் அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

வெளியே கார்த்திகை மாத அடை மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது. குருவின் பார்வை அட்சயாவிற்கு வெட்கத்தையும் மீறி ஒரு பதட்டத்தை கொடுத்தது.

பரிமளம் வேறு, “அங்க போயும் பயமா இருக்குனு சொல்லிட்டு இருக்காத அச்சு. எல்லாத்தையும் எதிர்கொண்டு தான் ஆகணும். நீங்க ரெண்டு பேரும் பேசி, பழகி தான் கல்யாணத்துக்கு சரி சொல்லிருக்கீங்க.” என திருமணத்திற்கு இடைப்பட்ட காலத்தில் அவளின் காதில் இரத்தம் வரும் அளவு அறிவுரை வழங்கியிருந்தார்.

அந்நேரம் டமால் டமாலென தொடர்ந்து இடி இடித்தது. அதன் சத்தத்தில் பயந்தவள் குருவின் அருகில் சென்று அவனை ஒட்டி நின்றுக் கொண்டாள். அதை பார்த்து சிரித்தவன், “அட்சயாவுக்கு இடினா பயம் போலயே?”

“பயம்லாம் இல்லை.” என குனிந்துக் கொண்டவள், “பால்.” என நீட்டினாள்.

“அதை டையர்ட் ஆகுறப்ப குடிப்போம்.” என அதனை வாங்கியவன் அங்கிருந்த மேசையில் வைத்துவிட்டு அட்சயாவின் முகத்தை தன்னிருக்கரங்களாலும் தாங்கினான்.

அவளின் முகத்தில் மெல்ல முத்த ஊர்வலம் நடத்தியபடியே, “அச்சு. ஷல் வீ?” என அவளின் இதழ் அருகில் சென்று மெதுவாக மென்மையாக கேட்டான். அணைப்பின் இறுக்கத்தின் மூலம் பதிலை சொன்னவளை தன்னிருக்கரங்களாலும் தூக்கிக் கொண்டான்.

அதில் பதறி அவனின் சட்டையை பிடித்தவள் கண்களை மூடிக்கொண்டாள். அவளை படுக்கையில் சரித்தவன் அவளின் இமைகளில் முத்தமிட்டு, “அச்சுவுக்கு இன்னும் பயம் இருக்கா?” என கேட்டு கேட்டே அவளை மொத்தமாக தனக்குள் சுருட்டிக் கொண்டான்.

குருபிரசாத்தின் வேட்கை நிறைந்த மெய்தீண்டலில் அட்சயா, அச்சு வெல்லமாக தான் உருகி கரைந்தாள். காதல் பாடத்தில் அவன் குருவாக இருக்க, அவனால் அவளுக்குள் உருவாக்க பட்ட உணர்வில் சிலிர்த்து அவனுள்ளே மொத்தமாக அடங்கினாள.

அத்தனை வருடங்கள் இருவரின் ஆழ்மனதிலும் இருந்த வலிகள், வேதனைகள், இறுக்கங்கள், ஏமாற்றங்கள், எதிர்பார்ப்புகள் என அனைத்துமே விலக, இருவருமே மற்றவரின் ஆழ்மனதில் வேரூன்றி உடல், பொருள், ஆவி என அனைத்திலுமே ஒன்றாக கலந்தனர்.

விடியலில் அட்சயா தான் முதலில் கண் விழித்தாள். அவளை கைவளைவில் வைத்துக்கொண்டே உறங்கிக் கொண்டிருந்தான் குருபிரசாத்.

சிறுப்பிள்ளைகள் பொம்மையை பத்திரப்படுத்துவது போல் அவளை இறுக்கமாக அணைத்து பிடித்திருந்தான், குரு. எழ பிடிக்காமல் அப்படியே அவனை பார்த்துக் கொண்டே படுத்திருந்தாள்.

“பார்த்து முடிச்சுட்டனா சொல்லு. நான் கண்ணை திறக்குறேன்.” என்றவனின் குரலில் பட்டென்று எழுந்துவிட அவளை சுற்றியிருந்த போர்வை விலகியது.

அதில் நாணம் கொண்டவள் மீண்டும் அவனிடமே சரண் புகுந்துக் கொண்டாள். சத்தம் வராமல் சிரித்த குரு, “எங்க அவ்ளோ வேகமா போற..” என அவளுள் மீண்டும் புதைந்தான்.

சிறுது நேரம் கழித்து அவனிடமிருந்து கெஞ்சி, கொஞ்சி விலகியவள் குளியலறைக்குள் சென்று குளித்து வர, அடுத்தது குருவும் குளிக்கச் சென்றான். குளித்து முடித்தவன் துண்டுடன் வெளியே வர அதற்குள் அட்சயா புடவையே கட்டியிருந்தாள்.

“உனக்கு சேலை கட்ட தெரியாது. நான் தான் ஹெல்ப் பண்ணனும்னு நினைச்சேன்.” என்றவனை கண்ணாடியில் பார்த்துவிட்டு திரும்பியவள்,

“எங்க கடைல டிஸ்பிளேல இருக்க பொம்மைக்கு நான் தான் சேலை கட்டிவிடுவேன். சோ, எனக்கு நல்லாவே சேலை கட்ட தெரியும்.” என தலையை உலர்த்தினாள். அவன் துண்டுடன் நிற்பதால் அவனின் பக்கமே அவள் திரும்பவில்லை. அவளை கண்டுகொண்டவன், அவளை பின் புறமிருந்து அணைத்தான்.

“ஏங்க கோவிலுக்கு டைம் ஆகுது?”

“ம்ம்ம்..” என அவளை வாசம் பிடித்தபடியே, “அதென்ன நைட் மட்டும் குரு, குருன்னு பலவித மாடுலேக்ஷன்ல கூப்டு டெம்ப்ட் பண்ணிட்டு இப்ப மட்டும் மரியாதையா கூப்பிடுற..” என்றவனின் முகத்தை அவளால் பார்க்கவே முடியவில்லை.

“ப்ளீஸ்ங்க. ட்ரஸ் மாத்துங்க கீழ போகலாம்.” என்றவளை அதற்கு மேல் தொல்லை செய்யாமல் அவனும் கிளம்பி வர, அவனின் கையை பிடித்து வந்தவள் அறையை விட்டு வெளியே வந்ததும் விட்டுவிட்டாள்.

“அடிப்பாவி.” என்றவன் அவளின் கையை பிடித்தவாரே தான் கீழே இறங்கி வந்தான்.

அங்கே தான் குருபிரசாத்தின் வீட்டினர் அமர்ந்திருந்தனர். நளினி சொன்னபடி இருவரும் சென்று சாமி கும்பிட்டுட்டு வந்தனர்.

பின் அட்சயாவை அழைத்து சென்று அனைவருக்கும் காஃபி போட்டு கொண்டு வந்தாள் நளினி. அனைவருமே எடுத்துக்கொள்ள பாக்கியம் மட்டும் எடுக்கவில்லை.

“அன்னம்மா.” என அங்கு வேலை செய்பவரை அழைத்தவர், “எனக்கு ஒரு காஃபி எடுத்துட்டு வாங்க.” என்றார்.

அட்சயாவிற்கு கண்கள் கலங்கியது, ஆனாலும் சமாளித்தவள் குருவின் அருகில் சென்று அமர்ந்துக் கொண்டாள்.

அன்னம்மா அந்த பக்கம் நகர்ந்ததுமே, “எதுக்கு ம்மா இப்படி ஹர்ட் பண்ணுற மாதிரி நடந்துக்குறீங்க?” என்றான் குரு அட்சயாவின் கலங்கிய முகத்தை பார்க்கமுடியாமல்.

“நீ ஆசைப்பட்ட மாதிரியே கல்யாணம் பண்ணி வெச்சாச்சு குரு. இதுக்கு மேல வேற எதையும் என்கிட்ட எதிர்பார்க்காத. அவ கையால நான் எதையும் வாங்க விரும்பல.” என்ற பாக்கியத்தை நேர் பார்வை பார்த்தவன்,

“அப்படினா அவ என்னை கூட தான தொட்டிருக்கா? நாளைக்கு எங்களுக்கு குழந்தைங்க வந்தாலும் அவ மூலமா தான வரும் அப்ப என்ன பண்ணுவீங்க? அவ வேற ஆளுன்னு என் குழந்தையை கூட நீங்க தொடவே மாட்டீங்களா?” என கடுப்புடன் கேட்டான். குருவின் கேள்வியில் பாக்கியத்திற்கே தான் செய்வது அதிகமோ என தோன்றிவிட்டது.

“ஏன் டா? நேத்து தான் உங்களுக்கு கல்யாணம் முடிஞ்சிருக்கு. இன்னைக்கே இப்படியெல்லாம் பேசனுமா?” என நளினி குருவை அமைதிப்படுத்தினாள்.

“முதல்ல எல்லாரும் வாங்க சாப்பிடலாம். கோவிலுக்கு பத்து மணிக்குள்ள போகணும்.” என பாக்கியத்தின் தாயார் அழைத்துச் சென்றார்.

குருவை தவிர அனைத்துமே அந்நியமாக இருந்தது அட்சயாவிற்கு. எனவே, அவனுடனே ஒட்டிக்கொண்டு சென்றாள். அட்சயாவிற்கு நல்ல பசி. ஆனால் தொண்டையில் உணவு இறங்குவேணா என சண்டித்தனம் செய்தது. மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் தவித்தவள் முகத்தில் எதையும் காட்டாமல் தண்ணீரை குடித்தப்படி ஒரு இட்லியை மட்டும் சாப்பிட்டு முடித்தாள்.

“உனக்கு தேவையானது எதையாவது எடுக்கணும்னா மேல போய் எடுத்துட்டு வா அச்சு. கோவிலுக்கு கிளம்பலாம். உங்க வீட்டாளுங்க எல்லாரும் ஏற்கனவே அங்க போய்ட்டாங்க.” என்ற நளினி குருவிற்கும் கண்ணை காட்ட அட்சயாவை அழைத்துக் கொண்டு அறைக்குள் சென்றான்.

உள்ளே சென்றதும் அவனை அணைத்தவள் அவன் மார்பிலே முகத்தை புதைத்து கொண்டாள். “அம்மா அப்படி தான் அச்சு. கொஞ்சம் கொஞ்சமா மாறிடுவாங்க..” என அவளை அணைத்து அவளின் கன்னத்தில் முத்தமிட்டவன் அவள் சரியானதும் கீழே அழைத்து வந்தான்.

அனைவரும் ஒன்றாக கிளம்பி அவர்களின் குலதெய்வ கோவிலுக்கு சென்றனர். மழை பெய்து அந்த இடமே நசநசவென இருந்தது. இடத்தை சுத்தம் செய்ததும் அட்சயா தான் பொங்கல் வைத்தாள். பரிமளமும் நளினியும் அவளுக்கு உதவினர்.

அவர்களின் தோட்டத்தில் சொல்லி அனைவருக்கும் இளநீர் எடுத்து வர சொல்லியிருந்தான் குரு. நல்ல பெரிய இளநீராக அட்சயாவின் கையில் கொடுத்தவன், “காலைல நீ சரியா சாப்பிடல தான. இதை முழுசா குடி.” என அவளின் கையில் திணித்தான். பாக்கியத்தினால் அவளுள் உண்டான வெறுமை குருவின் செயலால் குளிர்ந்தது.

ஒருவழியாக பொங்கல் வைத்து சாமி கும்பிட்டுவிட்டு அனைவருமே வீடு திரும்பினர். மறுநாள் தலை முழுக்கு முடிந்தவுடன், “நாளைக்கு நாங்க மறுவீடு அழைச்சிட்டு போகட்டுமா? அடுத்த ரெண்டு நாள்ல எங்க ஊர்ல வரவேற்பு வெச்சிருக்கோம் வேற.” என்றார் ஆவுடையப்பன் குணசீலனிடம்.

அனைவருமே பாக்கியத்தின் முகத்தை பார்த்தனர். “நாளைக்கு கார்த்திகை தீபமாச்சே! இங்க நாங்க எல்லாருமே விரதம் இருப்போம். உங்க பொண்ணுக்கு கல்யாணம் ஆகி முதல் முறையா வர்ற தீபம். அவங்க ரெண்டு பேரும் இங்க தான் இருக்கணும்.” என்றவர்,

“அதுக்கு அடுத்த நாள் செவ்வாய் கிழமை. அன்னைக்கும் அனுப்ப முடியாது. அடுத்தநாள் புதன் கிழமை மறுவீடு அனுப்புறோம்.” என்றார் திட்டவட்டமாக.

“ஆனா அன்னைக்கு தான வரவேற்பு..” என்ற சபாபதியை அமைதியாக இருக்க சொன்னார் ஆவுடையப்பன். அன்று மாலையே அவர்கள் அனைவரும் சேலத்திற்கு திரும்பிவிட்டனர்.

செல்லும் வழியில், “அவங்க சொல்லுறபடி தான் எல்லாமே நடக்கனும்னு எதிர்பார்க்குறது தப்பு தான ப்பா.” என சபாபதி கேட்க,

“கார்த்திகை தீபத்தை அப்பா கவனிக்கவே இல்லை டா. அச்சு கல்யாணம் முடிஞ்சி வர முதல் விசேஷம். அங்கேயே இருக்கட்டும். மாப்ள அம்மா கறாரா இருந்தாலும் நல்லவங்க தான்.” என சபாபதியை அதற்கு மேல் எதுவும் பேச கூடாது என சொல்லிவிட்டார்.

அசோகனும் நளினி கூட அன்றே அவர்களின் வீட்டிற்கு புறபட்டனர். வீட்டினரின் பிரிவால் தவித்த மனைவியை லவ் குருவாக மாறி சமாதானப்படுத்தினான் குருபிரசாத்.

பாக்கியத்தை தவிர அனைவருமே அட்சயாவிடம் நன்றாக தான் பேசினார்கள். மாலையில் மகாதீபத்தை பார்த்துவிட்டு தான் விரதத்தை முடிக்க வேண்டும் என அனைவருமே அன்று முழுக்க சாப்பிடாமல் தான் இருந்தனர். மாலைப்போல் விளக்குகளை ஏற்றிவைத்து அண்ணாமலையாரை வணங்கிவிட்டு தான் அவர்களின் விரதத்தை முடித்தனர்.

அதற்கடுத்த நாள், அட்சயாவை அவர்களின் தீப்பெட்டி தொழிற்சாலைக்கு அழைத்து சென்றான் குருபிரசாத்.

“வாங்க அண்ணா. வாங்க மேம்.” என அவர்களை வரவேற்ற அருண் உள்ளே அழைத்து சென்றான்.

“அண்ணினே கூப்பிடு டா.” என்ற குரு, “நம்ம வீட்ல இருக்க அன்னம்மாவோட பையன். படிச்சி முடிச்சிட்டு இங்கயே வேலை பார்க்குறான்.” என அட்சயாவை உள்ளே அழைத்துச் சென்றான்.

ஒரு இடத்தில தீப்பெட்டிக்கு தேவையான மருந்து தயாரித்தல் நடந்துக் கொண்டிருந்தது. மற்றொரு இடத்தில மெழுகு தீக்குச்சிகள் ஒரு புறமும், மர குச்சிகள் ஒரு புறமும் தனித்தனியாக தயாராகிக் கொண்டிருந்தது.

அடுத்த இடத்திற்கு அழைத்து சென்றான். அங்கே தீப்பெட்டியின் மேல் பெட்டியும்(இருபுறமும் மருந்து இருக்கும் பெட்டி), கீழ் பெட்டியும் (குச்சிகள் இருப்பது) மெஷின் மூலம் தயாரிக்க பட்டுக் கொண்டிருந்தது.

“இந்த மேல் பெட்டியை எல்லாம் முன்னாடி கைலையே பண்ணுவாங்க.” என குரு சொல்ல,

“இதையா?” என தீப்பெட்டியின் இருபக்கமும் மருந்தினால் இருக்கும் மேல் பெட்டி காண்பித்தாள்.

“ஆமா. நான் கூட சின்ன வயசுல பெட்டி ஒட்டிருக்கேன். அப்பலாம் இங்க இருக்க லேடீஸ் கூட வந்து வேலை செய்வாங்க..” என அதனை விளக்கினான். அந்த மேல் பெட்டியில் அவர்களின் கம்பெனி பெயரும் பொறிக்கபட்டிருந்தது.

அடுத்து தீக்குச்சியில் மருந்தை பொருத்தும் இடத்திற்கு அழைத்து சென்றான். மாஸ்க், க்ளோவ்ஸ் என அனைத்தையும் போட்டுக் கொண்டு தான் அவளை உள்ளே அழைத்து சென்றான்.

இரண்டு இன்ச் நீளத்தில் இருக்கும் குச்சியில் கிரீடம் வைப்பது போல் மருந்து வைக்கப்படுவதை வியந்து பார்த்தாள், அட்சயா. பின் அவையனைத்தும் காய்ந்த பின் அந்தந்த பெட்டியில் அடைத்து பேக்கிங் பிரிவிற்கு சென்றது.

“லைட்டார்லாம் வந்ததுக்கு அப்புறம் கூட மேட்ச் பாக்ஸ் சேல்ஸ் ஆகுதா?” என சுற்றி பார்த்துக் கொண்டிருந்த அட்சயாவின் கேள்விக்கு,

“இன்னைக்கும் நம்ம வீட்டுலேயும், கோவில்லையும் விளக்கு ஏத்தணும்னா நம்ம மக்கள் தீப்பெட்டியை தான தேடுறாங்க..” என்றவன் பதிலில் சிரித்து கொண்டாள்.

அதன் பிறகு அலுவல் அறைக்கு சென்றவன் அங்கு வேலையை பார்க்க, அட்சயா அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“என்ன கல்யாணம் பண்ணி ஹனி மூன் கூட்டிட்டு போகாம இப்படி தீப்பெட்டி ஆபிசை சுத்தி காட்டுறானு பார்க்குறியா?” என அவளை நிமிர்ந்து பார்த்து கேட்டான்.

அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தில் குருபிரசாத் அவனின் குழுவிற்கு தலைமை வகித்தாலும், அங்கு அனைவருமே சமம் என்ற நிலைப்பாடு தான் இருக்கும்.

ஆனால், இங்கு அவனுக்கு இருந்த மரியாதையும் அனைவரிடமும் அவன் பழகும் விதத்தையும் பார்த்தவள், “அதெல்லாம் இல்லை. நீங்க ஏன் பிசினஸ் பார்க்காம, வேலைக்கு வந்தீங்கன்னு யோசிச்சிட்டு இருந்தேன்?”

“யார் சொன்னா நான் பிசினஸ் பார்க்க மாட்டேன்னு? மாசத்துல ரெண்டு வாட்டி வந்து பார்த்துட்டு தான் போவேன். அருண் இருக்குறதால எல்லாம் ஃபோன் மூலமாவே நடக்குது.”,

“கொஞ்ச நாள் தனி குடித்தனத்தை என்ஜாய் பண்ணிட்டு அப்புறம் இங்க வந்து செட்டில் ஆகிடலாம்.” என கண்ணடித்து கொன்னவனை முறைக்க முடியாமல் சிரித்துவிட்டாள்.

மறுநாள் விடிகாலையில் அனைவரும் சேலத்திற்கு புறபட்டனர். “எல்லாருமே வேன்ல போய்டலாம் குரு. நீங்க ரெண்டு பேர் மட்டும் எதுக்கு கார்ல?” என குணசீலன் மறுத்து சொல்ல,

“நீங்க நாளைக்கே ரிட்டர்ன் வந்துடுவீங்க ப்பா. ஆனா, நாங்க அங்க ஸ்டே பண்ணுவோம்ல. சோ, வெளிய போக எனக்கு கார் வேணும்.”

“சரி டா. டிரைவரையாவது ஓட்டிட்டு வர சொல்லு..” என்றவரை மறுத்துவிட்டவன் அட்சயாவுடன் தனியாக அவளின் வீட்டிற்கு சென்றான். விடிகாலையில் மஞ்சளும் சிவப்புமாக இருந்த விடியலில் அந்த பயணம் அவர்களுக்கு அழகாக அமைந்தது.
 
Top Bottom