• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அத்தியாயம் - 16

STN - 92

Member
Staff member
மனம் - 16

அன்று காலையில் அட்சயாவால் எழுந்துக் கொள்ளவே முடியவில்லை. அவளுக்கு முன் எழுந்திருந்த குருபிரசாத் தான் அவளை எழுப்பிக் கொண்டிருந்தான்.

“இன்னைக்கும் நாம லீவ் போடலாமா? ப்ளீஸ்..” என்றவளிடம்,

“ஆமா. ஆபீஸ் என்னோட மாமனாரோடது. கேட்ட உடனே லீவ் கொடுப்பாங்க. போய் குளி டி.” என அவளை எழுப்பி குளியலறைக்குள் தள்ளினான்.

திருமணத்திற்கு பிறகு அன்று தான் இருவருமே அலுவலகத்திற்கு செல்கின்றனர். குருபிரசாத் எப்பொழுதும் போல் இருந்தாலும் அட்சயாவிற்கு ஒருவித தயக்கமாக இருந்தது.

அதனை அப்படியே குருவிடம் சொல்ல, “இதுல என்ன இருக்கு? நமக்கு கல்யாணம் முடிஞ்சது. இப்ப ஆபீஸ் போறோம். அவ்ளோ தான்.” என்றவனை முறைத்துக்கொண்டே காலையுணவை சாப்பிட்டாள்.

டாப்ஸ், ஜீன்ஸ் என கிளம்பியவள் ஐடி கார்டை கையிலே வைத்துக்கொள்ள, “அதை கழுத்துல மாட்டினா தான் என்ன?” என அவளின் கையில் இருந்து பிடுங்கிய குருபிரசாத் அவனே அவளின் கழுத்தில் போட்டும் விட்டான்.

“நீங்க மட்டும் உங்க பெல்ட்ல மாட்டிருக்கீங்க?” என்றவள் கையை அவனின் இடுப்பிற்கு கொண்டு செல்ல, “ஹேய்..” என நெளிந்தபடியே தடுத்தவன் அவளை இழுத்துக் கொண்டு அறையைவிட்டு வெளியேறனான். அவனுக்கு ஹெல்மெட்டை எடுத்துக்கொண்டு, அட்சயாவின் கையிலும் ஒரு ஹெல்மெட்டை கொடுத்தான்.

கீழே சென்றதும் குருபிரசாத்தே அவளின் தலையில் ஹெல்மெட்டை மாட்டிவிட்டான்.

“இது போட்டா என்னோட ஹேர்ஸ்டைல் கலைய போகுது..” என சலிப்புடன் சொல்லிக்கொண்டே அவனின் தோளில் கைவைத்து ஏறியவள், வாகனத்தில் அமர்ந்ததும் அவனின் இடுப்பை பிடித்துக் கொண்டாள். சிரிப்புடன் வாகனத்தை இயக்கினான் குருபிரசாத்.

குருவிற்கு மிக நெருக்கமானவர்கள் மட்டுமே திருமணத்திற்கு வந்திருந்தனர். எனவே, அவர்கள் அலுவலகத்திற்கு வந்ததும் ஒரு சிலர் வந்து இருவருக்குமே வாழ்த்து கூறிவிட்டு சென்றனர்.

“வாங்க கல்யாண பொண்ணு.” என பவ்யா அட்சயாவை வரவேற்க சிரிப்புடன் அவளின் அருகில் அமர்ந்துக்கொண்டாள்.

இரண்டு வாரங்கள் கடந்து வருவதால் குருவிற்கு மலைபோல் வேலைகள் குவிந்திருக்க, தலையை கணினியில் புதைத்துக் கொண்டான்.

அத்தனை நாட்கள் குருவின் அண்மையில் இருந்த அட்சயாவிற்கு நொடிக்கொரு முறை கண்கள் அவனிடமே சென்றுக் கொண்டிருந்து. ஆனால் குருவோ வேலையை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்க, “இவர்களுக்கு என்னைய மாதிரி தோணவே இல்லையா?” என நினைத்துக் கொண்டவளின் கணினி திரையில்,

“எவ்ளோ நேரம் டி என்னையே பார்த்துட்டு இருக்க போற? அபி ஏதும் உனக்கு வேலை கொடுக்கலையா?” என குருவிடம் இருந்து மெசேஜ் வந்து விழுந்தது.

உடனே தலையை உயர்த்தி அட்சயா பார்க்க, குரு அவளை பார்த்து புருவத்தை உயர்த்தினான். பதிலுக்கு அவனுக்கு சில பொம்மைகளை அனுப்பிவிட்டு வேலையை பார்க்க துவங்கினாள்.

மதிய உணவு நேரம் குரு உடன் வருவான் என அட்சயா பார்த்திருக்க அவனோ அபிலாஷுடன் சென்றுவிட்டான். உடனே பவ்யாவை இழுத்துக் கொண்டு சென்றவள் அவர்கள் அமர்ந்திருந்த டேபிளில் தான் அமர்ந்தாள்.

பவ்யா அவர்கள் இருவரையும் சுவாரஸ்யமாக பார்த்தாள். குரு சாப்பிட்டு முடிக்கும் வரை வேண்டுமென்றே வேலையை பற்றியே பேசிக்கொண்டு சாப்பிட, “இனிமே உங்க கூட நான் சாப்பிட வர மாட்டேன். சாப்பாட்டு நேரத்துல கூட வேலையா?” என அட்சயாவிடம் புலம்பினாள் பவ்யா.

வேலை முடிந்து ஒன்றாக தான் இருவருமே வீட்டிற்கு வந்தனர். வரும் வழியிலே சில பொருட்களை அட்சயா வாங்க வேண்டும் என சொல்ல, இருவரும் சேர்ந்தே சென்று வாங்கினர். அனைத்து அனுபவமும் இருவருக்குமே புதிதாக இருக்க, மனநிறைவுடன் அதனை அனுபவித்தனர்.

வீட்டுற்குள் இருவரும் உள்ளே நுழைந்தவுடன், அங்கிருந்த மேசையில் லேப்டாப் பையை வைத்த குருபிரசாத் அவனது வழக்கம் போல், பெல்ட்டை கழட்டிக்கொண்டே டக்கின் செய்த சட்டையை பேண்டில் இருந்து வெளியேற்றினான்.

அவனை கவனித்தவள், “என்ன பண்ணுறீங்க?” என ஒற்றை கையால் கண்ணைகளை மூடிக்கொண்டே கேட்டாள் அட்சயா.

“டிரஸ் தான் டி மாத்த போறேன்?”

“அதை ரூம்ல போய் மாத்த வேண்டியது தான?” என ஒருகையால் இருகண்களையும் மூடிக்கொண்டிருந்தவளின் கையை விலக்கியவன், “ஆபீஸ்ல மட்டும் முழுங்குற மாதிரி பார்த்த?” என அவளை சுவற்றில் சாய்த்தவன் அவளை நெருங்கினான்.

“ஹ்ம்ம். டர்டியா இருக்கோம். போய் பிரெஷ் ஆகணும்..” என அவனை தள்ளிவிட்டாள்.

சிரிப்புடன் அவளிடமிருந்து விலகியவன் உடைமாற்ற அறைக்குள் சென்றுவிட்டான். இருவரும் சேர்ந்து காஃபி குடித்தனர். பின் குருபிரசாத் மடிக்கணினியுடன் அமர்ந்துவிட்டான்.

“இன்னுமா உங்க வேலை முடியல?”

“ம்ம்ம். கொஞ்ச வேலை இருக்கு.” என அவன் வேலையை தொடர, அட்சயாவே இருவருக்கும் இரவுணவை செய்தாள்.

அந்த வார விடுமுறையில் குருவின் வீட்டில் இருந்த ட்ரெண்ட்மில்லை பார்த்தவள், “நானும் இதுல நடக்கவா..” என அதில் ஏற்கனவே நடந்துக் கொண்டிருந்த குருபிரசாத்தின் அருகில் வந்து கேட்டாள் அட்சயா.

“ஓகே.” என தோளை குலுக்கியவன் அதனை நிறுத்திவிட்டு அதிலிருந்து இறங்கினான்.

“ஷூ கண்டிப்பா போடணும். நீ போய் உன்னோட ஷூவை போட்டுட்டு வா..” என சொல்ல அவளும் சென்று ஷூவை அணிந்து வந்தாள்.

“இந்த கம்பியை பிடிக்காம அந்த ஸ்பீடுக்கு ஏத்த மாதிரியே நடக்கணும்.” என குறைவான வேகத்தில் அவளை நடக்க வைத்தான் குரு. முதலில் தடுமாறினாலும் குருவின் கையை பிடித்துக் கொண்டு நடக்க துவங்கிவிட்டாள்.

சரியாக பத்து நிமிடம் கழித்து, “போதும் அச்சு. ஸ்டாப் பண்றேன். அப்படியே மெதுவா நட..” என அவன் நிறுத்த, அவளோ உடனே நடையை நிறுத்திவிட்டாள். ஆனால் அந்த இயந்திரம், மெதுவாக அதனின் வேகத்தை குறைத்துக் கொண்டிருக்க அதில் தடுமாறியவளின் ஷூ அதில் மாட்டிக்கொள்ள, அப்படியே பின்னே சாய்ந்தாள். நல்லவேளையாக குரு அவளை பிடித்துவிட காலை மட்டும் அட்சயாவால் ஊன்ற முடியவில்லை.

அவளை தூக்கி வந்து சோபாவில் அமர்த்தியவன் அவளின் காலை ஆராய்ந்தான். லேசாக வீங்கியிருக்க, வலியில் அவளுக்கு அழுகையாக வந்தது.

“நான் தான் அப்படியே நடனு சொல்லத்தான செஞ்சேன்.” என்றவனின் மனமும் அடித்துக் கொண்டது. வேகமாக சென்று சுடுதண்ணியை எடுத்து வந்து அவளின் காலை அதில் வைத்தான்.

“ரொம்ப வலிக்குது ங்க.” என்றவள் குருவை அணைத்துக் கொள்ள, குரு பயந்தேவிட்டான். நேரம் செல்ல செல்ல வீக்கமும் அதிகரிக்க நொடியும் தாமதிக்காமல் அவளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுவிட்டான்.

அங்கே அவளை பரிசோதனை செய்து பார்த்தவர்கள் கணுக்காலில் சுளுக்கு என சொல்லிவிட்டு அதற்கு வலி நிவாரணிகளையும், களிம்பையும் கொடுத்து அனுப்பி வைத்தார்கள்.

வீட்டிற்கு வந்ததும் அவளுக்கு சௌகரியமாக இருக்க ஸ்கர்ட் அணிந்துக் கொண்டாள். குருதான் அவளை முழுதாக கவனித்துக் கொண்டான். அபிலாஷும், ஜெசிந்தாவும் வந்து பார்த்துவிட்டு சென்றார்கள்.

விஷயம் அறிந்த பரிமளம், “நான் வரவா அச்சு” என்றிட,

“இல்லம்மா மாத்திரை போட்டதும் இப்ப வீக்கம் குறையுது. ரெண்டு நாள்ல சரியாகிடும்னு டாக்டரே சொல்லிட்டாங்க.” என சொல்லிவிட்டாள். சபாபதி கூட, “இந்த சாகசம்லாம் உனக்கு தேவையா ஆச்சு.” என கேட்டுவிட்டான்.

இதனை அலுவலகத்தில் தெரிவித்து இருவருமே வீட்டிலிருந்து தான் வேலை பார்த்தனர். அட்சயா வர வேண்டாம் என சொல்லியிருந்தாலும், ஆவுடையப்பனும், பரிமளமும் வந்து பார்த்துவிட்டு தான் சென்றனர்.

மூன்று நாட்களில் அட்சயாவிற்கு ஓரளவு சரியாகிவிட அலுவலகம் செல்ல தொடங்கிவிட்டாள். “இப்ப நீ வேலைக்கு போகணும்னு என்ன அவசியம் அச்சு? வீட்ல இருந்து ரெஸ்ட் எடுக்க கூடாதா?” என பரிமளத்தின் பேச்சை அவள் கண்டுகொள்ளவேயில்லை.

ஒருவாரம் சென்றிருக்க, அன்று குருவிற்கு முன்னதாகவே அட்சயா வீட்டிற்கு வந்துவிட்டாள். “எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு அச்சு. அது முடிய எப்படியும் எட்டு மணிக்கு மேல ஆகிடும். எனக்காக வெயிட் பண்ணாம நீ முன்னாடியே வீட்டுக்கு கிளம்பு.” என அவளை அனுப்பி வைத்தான்.

அன்று தான் அவர்களுக்கு திருமணம் முடிந்து ஒரு மாதம் முடிந்திருந்தது. பூர்ணிமாவிடம் அழைத்து பேசிவிட்டு பரிமளத்திடம் சமையலை பற்றி கேட்டுக் கொண்டவள் பாடலை சத்தமாக வைத்துவிட்டு சமைக்க துவங்கினாள். அனைத்தும் குருவிற்கு பிடித்ததாக தான் இருந்தது.

கல்யாணம் முடிந்து மறுவீடு வந்திருந்த சமயத்தில் பரிமளம், “மாப்பிள்ளையை பார்த்தா நல்லா சாப்பிடுவாங்க போல தெரியுது அச்சு. எப்பவும் வெளியவே வாங்காம வீட்லயே நல்லா சமைச்சி கொடு.” என அவளுக்கு சொல்லியிருக்க,

“ஏன் அவங்க எனக்கு சமைக்க மாட்டாங்களா?” என சண்டை பிடித்தாலும் தன்னவனுக்கான சமையல் என வரும் பொழுது ஆசையாக தான் செய்தாள்.

பிரியாணி, தயிர்பச்சடி, சிக்கன் வறுவல், முட்டை என அனைத்தையும் செய்து வைத்தவள் குளிக்க சென்றிருக்க, தன்னிடம் உள்ள சாவியால் கதவை திறந்து உள்ளே நுழைந்தான் குருபிரசாத். “நம்ம வீட்ல தான் நல்ல வாசனை வருதா?” என சமையலறையில் எட்டி பார்க்க, அங்கிருந்த டைனிங் டேபிளில் அனைத்தையும் அழகாக எடுத்து வைத்திருந்தாள் அட்சயா.

குளித்துவிட்டு முழங்கால் வரை இருக்கும் சிவப்பு நிற கவுன் அணிந்து தலையை கொண்டையாக போட்டுக்கொண்டே வந்தவள் குருவை பார்த்துவிட்டு, “வந்துட்டிங்களா? எப்ப வந்தீங்க? காஃபி குடிக்குறீங்களா” என கேட்டுவிட்டு, “இல்ல இல்ல போய் பிரெஷ் ஆகிட்டு வாங்க. சாப்பிடவே செய்யலாம்.” என அவளே சொல்ல,

“எப்பவும் சமையல் செய்ய என்னை தான் ஹெல்ப் பண்ண சொல்லுவ. இன்னைக்கு என்ன நீயே எல்லாத்தையும் பண்ணிருக்க? உனக்கு கால் வலிக்கலையா?” என அவளின் காலை பரிசோதித்தவனை முறைத்தவள்,

“இன்னைக்கு நமக்கு ஒன் மன்ந்த் அனிவர்சரி.” என கைகளை கட்டிக்கொண்டே சொன்னாள்.

“ஓ அதுக்கு தான் இந்த டைனிங் செட். கவுன். அப்புறம் இந்த குருவிக்கூடு கொண்டையா?” என்றவன் அவளின் கூந்தலில் இருந்த கிளிப்பை எடுக்க முடி அப்படியே அவளின் தோளில் வழிந்தது. சில முடிகள் அவளின் முகத்தில் விழ, அதனை அவளின் காதின் பின் சொருகியவன், “டூ மினிட்ஸ்ல வந்திடுறேன்” என உள்ளே சென்றுவிட்டான்.

அபிலாஷ், ஜெசிந்தாவிற்கும் கொடுத்துவிட்டு இருவருமே சாப்பிட அமர்ந்தார்கள். முதல் வாயை குருபிரசாத் அவளுக்கு ஊட்டிவிட சிரிப்புடன் வாங்கிக் கொண்டாள். பேசிக்கொண்டே ஊட்டிவிட்டு உணவை முடித்தார்கள்.

“ரைடு போலாமா?” என்றகுருபிரசாத், ஈ சி ஆர் சாலையில் அந்த இரவு நேரத்தில் காரில் அட்சயவி அழைத்து சென்றான்.

ஓட்டுனர் இருக்கையின் அருகில் அமர்ந்திருந்த அட்சயா வலப்பக்கம் திரும்பி குருவை பார்த்தவாறு அமர்ந்துக் கொண்டாள். இரவின் ஏகாந்த காற்றில், அவர்களுக்கு பிடித்த பாடல்களை கேட்டுக்கொண்டே, சிறிது நேரம் சுற்றிக் கொண்டிருந்தவர்கள் நள்ளிரவை தாண்டியதும் தான் வீடு திரும்பினார்கள். அவனுக்காக ஆசையாக சமைத்தவளுக்கு அவ்விரவில் வஞ்சனையின்றி அன்பை வாரி வழங்கினான் குருபிரசாத்.

கிறிஸ்துமஸ், நியூஇயர் என பத்து நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு அபிலாஷ் அவனின் ஊரிற்கு சென்றிருந்தான். அவன் இல்லாததால் குருப்ரசாத் தான் இரண்டு குழுவையும் பார்க்கும்படி ஆகியது.

மீட்டிங் அறைக்குள் இரண்டு குழுவுமே இருந்தாலும், அனைவரும் குருபிரசாத், அட்சயவை தான் கவனித்தனர். குரு அதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்றாலும் அட்சயாவிற்கு கடுப்பாகியது.

*****

“நம்ம அச்சுவையும் மாப்பிள்ளையையும் தலை பொங்கலுக்கு கூப்பிடனும் பரிமளம். விருதுநகர் போய் கூப்பிடணுமா இல்ல சென்னைக்கு போகணுமானு சம்பந்தி கிட்ட தான் கேட்கணும்.” என இரவுணவை சாப்பிடும் பொழுது சொல்லிக் கொண்டிருந்தார் ஆவுடையப்பன்.

“ஆமாங்க மறுபடி அவங்க முறைனு ஒன்னு சொல்லி அதை செய்ய வைப்பாங்க.” என்ற பரிமளம் அவரின் பிடித்தமின்மையை காட்டினார்.

“நம்ம பொண்ணு சந்தோசமா இருக்காளா அதை மட்டும் பாரு. நாளைக்கு நம்ம சபாவுக்கு கல்யாணம் ஆனதும் நீ என்ன பண்ண போறேன்னு நான் பார்க்க தான போறேன்.” என்றார் ஆவுடையப்பன்.

சாப்பிட்டு முடித்து சபாபதியின் வரவிற்காக வரவேற்பறையில் அமர்ந்திருந்தார்கள். “இன்னைக்கு நம்ம தரகரை பார்த்தேன். துணியெடுக்க நம்ம கடைக்கு வந்திருந்தார். பூர்ணிமாவுக்கு அவங்க வீட்ல மாப்பிள்ளை பார்க்குறதை பத்தி சொல்லிட்டு போனார்.”

“நம்ம அச்சு கூட படிச்சவ. அவளுக்கும் நல்ல வாழ்க்கை அமையட்டும்.” என்றார் பரிமளம் பெருமூச்சுடன்.

“ஆமா பரிமளம். அவ ரொம்ப நல்ல பொண்ணு. நல்லாயிருக்கட்டும்.” என சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது தான் ஹோட்டலில் இருந்து வந்த சபாபதி உள்ளே நுழைந்தான்.

“யாரைப்பா நல்லாருக்கட்டும்னு சொல்லுறீங்க?.” என கேட்டுக்கொண்டே ஜக்கில் இருந்த தண்ணீரை எடுத்து வாயில் சரித்தான்.

“நம்ம பூர்ணிமா தான் சபா.” என ஆவுடையப்பன் சொல்லியதும் அவனுக்கு புரை ஏறியது. அதில் பரிமளம் அவனை சந்தேகமாக பார்த்தார்.

“பார்த்து தண்ணியை குடி ப்பா.” என்ற ஆவுடையப்பன், “பூர்ணிமாவுக்கு தான் மாப்பிள்ளை பார்க்குறாங்களாம் சபா. ஆனா அந்த விளங்காத பையன் பண்ண வேலையால எல்லாரும் அவளை பொண்ணெடுக்கவே யோசிக்கிறாங்க போல. தரகர் சொல்லிட்டிருந்தார். நீ சாப்டுட்டு படுப்பா” என எழுந்து அறைக்குள் சென்றுவிட்டார் ஆவுடையப்பன்.

அவர் சொல்லி சென்றதில் சாப்பிடக்கூட தோணவில்லை. “நான் ஹோட்டல்லயே சாப்பிட்டுட்டேன் ம்மா. நீங்க தூங்குங்க.” என பரிமளத்தையும் அறைக்குள் அனுப்பிவிட்டு அவனது அறைக்கு வந்த சபாபதிக்கு தூக்கம் தான் எட்டா கனியாக இருந்தது.

புத்தாண்டு விடுமுறைக்கு குருபிரசாத்தும் அட்சயாவும் விருதுநகர் வந்திருந்தார்கள். அவர்கள் அங்கிருக்கும் பொழுதே, அங்கே சென்ற ஆவுடையப்பனும் பரிமளமும் தலை பொங்கலுக்கான சீர் வரிசையை கொடுத்துவிட்டு பொங்கலுக்கு அழைப்பையும் விடுத்தனர்.

அவர்களை நன்முறையில் கவனித்த பாக்கியலட்சுமி, “பொங்கல் அன்னைக்கு காலைல இங்க பொங்கல் வெச்சதும் உங்க வீட்டுக்கு அனுப்புறோம்.” என இம்முறை தன்மையாகவே சொல்லியிருந்தார்.

மகளின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியையும் பூரிப்பையையும் பார்த்தவர்கள் மனநிறைவுடனே சேலத்திற்கு திரும்பினார்கள்.
 
Top Bottom