அத்தியாயம் - 3

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ரோசி கஜன்

Administrator
Staff member
Nov 11, 2018
1,719
1,113
113
“ஹேய்...வாங்க வாங்க!”

எப்போ வருவார்கள் என்று காத்திருந்து கதவைத் திறந்திருந்தாள் போலும். முன்னாலிருந்த நாலைந்து படிகளையும் கடகடவென்று கடந்து வந்திருந்தாள், அவ்விளம் பெண். கயல் வயதோ அல்லது ஒன்றிரண்டு அதிகமாகவோ இருக்கலாம். நிறம் குறைவென்றாலும் பனிப்பொழுதின் புலர்வில் பளிச்சென்றிருந்தாள். முகம் முழுதும் மலர்வு.

அதுவரை, நிச்சயமாக, ஒருவிதமான அசௌகர்ய உணர்வோடுதான் வந்திருந்தாள், கயல். அப்பெண்ணைப் பார்த்த மாத்திரத்தில் புதுநபரென்ற தயக்கம் சிறிதும் வரவில்லை. அந்தளவு சந்தோசத்தோடு வரவேற்றாள், காயு.

முறுவலோடு ‘ஹை’ சொன்னபடி இறங்கினாள், கயல்விழி.

குளிருக்குக் கரமிரண்டையும் இறுகக் கட்டிக்கொண்டு வந்திருந்த காயு, வரவேற்பாகக் கட்டிப்பிடித்துவிட்டு கயல்விழியின் கரத்தைப் பற்றியபடி, “உள்ள வாங்க கயல்விழி. எப்பிடி எங்கட நாட்டுக்குளிர்? முதல் முதல் நல்ல குளிர் நேரமா வந்திருக்கிறீங்க!” விசாரித்தபடி வீடு நோக்கி நடந்தவள், பின்னால் கையாட்டியபடி வந்த பூபாலனிடம் திரும்பினாள்.

“பெட்டிகள எடுகேல்லையா பாலன்?” கேட்டவள் பார்வை தன்னருகில் நிற்பவளை நாடியிருந்தது.

“நல்லாப் போச்சுப் போ! இப்பவே, ‘நேர நான் தங்கப் போற இடத்துக்குக் கொண்ட விடு!’ எண்ட கட்டளை வந்திச்சுத் தெரியுமோ! அதுக்கு முதல், ‘டக்சி பிடிச்சுப் போக எனக்குத் தெரியும் உனக்கு ஏனிந்த வேண்டாத வேலை?’ எண்டும் கேட்டா! வீட்ட வந்து ஒரு கப் கோப்பி குடிச்சிட்டுப் போங்க எண்டு தலைகீழா நிண்டு கூட்டிக்கொண்டு வந்திருக்கிறன், நீ வேற!” சீண்டியபடி வந்தானவன்.

“இல்ல... நான் அப்பிடியெல்லாம் சொல்லேல்ல!” அவசரமாகச் சொன்னாள், கயல்.

“அப்ப நான் பொய்யா சொல்லுறன்? இப்ப இங்க விரும்பியா வந்தீர்? இல்லையே! கடனே எண்டுதானே வந்தீர். அதைத்தான் சொன்னன்.” என்றுவிட்டு மனைவியைப் பார்த்தவன், “இப்பிடிக் குளிருக்க நிப்பாட்டி வச்சுக் கதைச்சா இனி இந்தப் பக்கமாத் தலைவச்சும் படுக்க மாட்டா! உள்ள வாங்க.” முன்னால் நடந்து வீட்டுக்குள் உள்ளிட்டான்.

“என்ன கயல்விழி இது? உங்களுக்குத் திங்கள் தானே வேல? அப்பிடித்தான் உங்கட அம்மம்மா சொன்னவா. மூண்டு நாட்களுக்கு அங்க போயிருந்து என்ன செய்வீங்க? இங்க நிண்டுபோட்டு ஞாயிறு பின்னேரமாப் போகலாம்.” உரிமையோடு சொன்னபடி உள்ளே அழைத்துச் சென்றாள், காயு.

கயலுக்குத்தான் பெரும் தர்மசங்கடமாகிற்று!

‘அம்மம்மா அம்மம்மா...உங்கள!’ மனதுள் எரிச்சல் வேறு.

உள்ளிட்டதும் வரவேற்பாக வந்து மோதியது, கதகதப்பு. வெளியில் காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் புதிதாக அறிமுகமாகியிருந்த குளிர் நடுக்கம் சற்றேனும் கட்டுக்குள் வரத்தான் செய்தது.

காலணிகளை கழட்டி ஓரமாக வைத்துவிட்டு, கம்பளிச் சட்டையையும் சால்வையையும் கழட்டி அங்கிருந்த கொழுக்கியில் கொழுவிவிட்டு, கரமிரண்டையும் தேய்த்துத் தன் கன்னத்தில் கொடுத்துக் கொண்டவளையே பார்த்திருந்தாள், காயு.

பார்த்ததும் சிலரை மனதுக்கு மிக நெருக்கமானவராகப் பிடித்துப் போகுமே! அப்படித்தான் இவளையும் பிடித்திட்டு.

“உங்களுக்கு ரூம் எல்லாம் தயார் பண்ணி வச்சிருக்கிறன் வாங்க!” கை பிடித்து நடந்தாள்.

“அய்யய்யோ என்னதிது!? அதெல்லாம் ஒண்ணும் தேவையில்ல. நான்...எனக்குச் சூடா ஒரு கோப்பி தாங்க குடிச்சிட்டுப் போவம். தங்கப் போற இடத்தில என்னோட வேலை செய்யிற ஆக்கள் தான் இருக்கினம் எண்டவை. இந்த மூண்டு நாட்களும் அவையளோட அறிமுகம் செய்து கொள்ள உதவியா இருக்கும். வேலை தொடங்கினா அசையவே நேரம் வராது.” படபடத்தவளுக்குக் காதுகொடாது விசாலமான வரவேற்பறையைக் கடந்ததும் இருந்த கதவைத் திறந்து உள்ளே அழைத்துச் சென்றாள், காயு.

“என்னட்ட கத சொன்னது போல இப்பச் சொல்லிப் பாரும் பார்ப்பம்!”

மனைவியின் பிடியில் சிறுமியாய் இழுபட்டுச் செல்பவளைப் பார்த்துப் பொங்கிய நகைப்பைக் கட்டுப்படுத்தியபடி அடக்கமாகச் சொன்னான், பூபாலன்.

"இப்பிடி நீங்க வாறதெண்டு மாமி ஆக்கள், அதான் பாலனிட அம்மா சொன்னோன்ன இந்த அறை ஒழுங்கு செய்தாச்சுத் தெரியுமா? நீங்க என்ன எண்டா வேற எங்கயோ தங்கப்போறன் எண்டு சொல்லுறீங்க! பேசாமல் இங்கயே இருங்க!"

பலநாட்கள் பழகிய தோரணையில் சொன்னவளுக்கு என்ன சொல்வதென்று தடுமாறிப் போனாள், கயல்.

அங்கிருந்த மேசையில் கைப்பையை வைத்துவிட்டு அருகில் நின்றவளைப் பார்த்தவள் எதுவுமே சொல்லாமல் முறுவலித்தாள்.

"உங்கட அம்மம்மா சொன்னது சரிதான். 'என்ன சொன்னாலும் அமைதியா நிண்டு கேட்பாள் மா. ஆனா, தான் நினைக்கிறதுதான் செய்வாள்' எண்டு சொல்லிப்போட்டா. ஆனா... அது அவரிட்ட, இந்த காயு வேற மாதிரி சரியோ! இப்பத்தானே வந்திருக்கிறீங்க!" பலமான மிரட்டல் விட்டாள், காயு.

"அதான் வோஷ் ரூம்...பாலனிட்ட உங்கட பெட்டியக் கொண்டுவரச் சொல்லுறன், பிரெஷ் அப் செய்யுங்க சாப்பிடலாம். அதோட எங்கட குட்டியம்மா இனி எழும்பிருவா. நேற்று முழுதும் உங்களப் பத்தியே கேட்டுக்கொண்டிருந்தா!" படபடவென்று சொன்னபடி வெளியேற முயன்றவளை நிறுத்தியிருந்தது, கயலின் கைப்பிடி!

"பெட்டி எல்லாம் தேவையில்ல காயு. இப்ப என்ன நான் இங்க பக்கத்தில தானே இருக்கப் போறன். எனக்குமே இப்பிடித் தெரிஞ்சவே பக்கத்தில இருக்கிறது உண்மையாவே சந்தோசம் தான்..." அவள் கதைத்துக்கொண்டிருக்கவே, “கொஞ்சம் இருங்க வாறன்." வெளியேறியிருந்தாள், அவள்.

"பாலன்...கயலிட பெட்டிகள எடுத்துக்கொண்டு வாங்கோப்பா! இவ்வளவு தூரம் பயணம் செய்து வந்தவா குளிச்சுச் சாப்பிட்டு இங்க நிண்டுபோட்டு அறைக்குப் போறது எண்டா போகட்டும்."

"கரைச்சல் படுத்தாதயப்பா. பிறகு இந்தப் பக்கமும் வர மாட்டா!”

"நீங்க முதல் சொன்னதச் செய்யுங்கோ!" அவள் சொல்லிக்கொண்டு இருக்கையில், "வேணாம் எண்டா கேக்கிறாவே இல்ல. ஹாண்ட் லக்கேஜ் மட்டும் போதும். கார்த் திறப்பத் தாங்க நானே எடுத்திட்டு வாறன்." என்றபடி வந்தாள் கயல்.

பூபாலன் மனைவியைப் பார்த்துச் சிரித்தபடி எழுந்தான்.

"இவா என்னட்ட அடி தான் வாங்கப் போறா! நீங்க போய் எடுத்துக்கொண்டு வாங்கோவன்." கணவனைப் பிடித்து வெளிவாசல் பக்கம் தள்ளி விட்டாள், காயு.

நகைப்போடே சென்றவன் பின்னால் செல்ல அடியெடுத்துவைத்த கயல், காயுவின் பிடியில் நின்றுவிட்டாள்.

"அவர் எடுத்துக்கொண்டு வருவார், வாங்க." மீண்டும் அறைக்குள் இழுத்துச் சென்று, "புதுத் துவாய் எல்லாமே பாத்ரூமுக்குள்ள இருக்கு.” குளியலறைக்குள் அழைத்துச் சென்றாள். “இந்தக் கபேர்ட்டில எல்லாமே இருக்கு." அவள் காட்டிக்கொண்டிருக்கையில் இரு பயணப்பைகளையும் கொண்டு வந்து வைத்துவிட்டுச் சென்றிருந்தான், பூபாலன்.

"ரெண்டையும் கொண்டு வந்திருக்கிறாரே ...விடிய வெள்ளன வந்து நல்லாவே கரைச்சல் தாறன் என்ன?" அதுவரை மனதுள் அந்தரப்பட்டுக்கொண்டிருந்தவள் வாய்விட்டே சொல்லிவிட்டாள்.

கரமிரண்டையும் இடுப்பில் வைத்து முறைத்தாள், காயு.

"உண்மையா நீங்க அடிதான் வாங்கப் போறீங்க!” முழியிரண்டையும் உருட்டினாள். கயல்விழிக்கு முறுவல் அரும்பிற்று!

மேலும் வாசிக்க …

 

Author: ரோசி கஜன்
Article Title: அத்தியாயம் - 3
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.