• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அத்தியாயம் 30

ரோசி கஜன்

Administrator
Staff member
அன்று, ஏரியில் வேந்தனைக் கண்டதிலிருந்து ஒவ்வொரு நிகழ்வும் இலக்கியாவின் மனதுள் புரண்டு கொண்டிருந்தது. ஏறிய வேகத்தில் கடைசி இருக்கையில் சென்றமர்ந்தவள் நிமிர்ந்தால், அவளையே பார்த்திருந்தவன் நெற்றி மேலேறி என்னவென்று கேட்டது. இவள் ‘ஒண்ணுமில்ல’ என்ற அர்த்தத்தில் தலையாட்ட முதலே மின்னலாகக் கண்ணடித்து அவனைப் பார்த்த கவியின் பார்வையை பின்னால் திரும்ப வைத்துமிருந்தான்.

இலக்கியாவால் எதுவும் செய்ய முடியவில்லை. அப்படியே பார்த்துக்கொண்டிருந்தாள். முகத்தின் உணர்வுகளை மறைக்காதிருக்க அவளுள்ளம் பட்ட பாடு விபரிக்க முடியாததாகவிருந்தது. முகமெங்கும் குப்பென்று பூத்துவிட்ட வியர்வைத் துளிகள்!

“ஏய் இலக்கி, என்னடி உடம்புக்க ஏதாவது செய்யுதா என்ன?” கவிதான். வேந்தன் உள்க்கண்ணாடியால் பார்க்கவும் திரும்பினாளேயொழிய அவள் வேறெதையும் காணவில்லை.

எல்லார் பார்வையும் பின்னால் திரும்ப, இலக்கியினுள் பதற்றமேறியது.

“இல்ல இல்ல ஒண்ணும் இல்ல.” முகத்தை அழுந்த துடைத்தவள், “இலேசா வயிறு நோ மா, வேற ஒண்ணும் இல்ல.” முன்னாலிருந்த தாய்க்குக் கேட்கும் படி முணுமுணுத்தாள்.

வேந்தனுக்கோ சிரிப்பு! சமாளிக்க என்ன எல்லாம் சொல்லப் போறாள் என்று பார்க்கும் ஆர்வமும். “போகலாமா இல்ல...” கேட்படி திரும்பியவனை கணம் முறைத்துவிட்டாள். அதற்கும் அவன் நெற்றி மேலேறி இறங்கியது.

“போகலாம் தம்பி...அது ஒண்ணுமில்ல.” சுகுணா சொல்ல, முறுவலோடு வாகனத்தை எடுத்தானவன். அவர்களை முந்திக்கொண்டு பெரியவரின் மகன் கார் சென்றது.

முதலில், காரிலேயே நகரைச் சுற்றி வந்தார்கள். பொன்மஞ்சள் வெயில் வலு அதிகாரத்தோடு நகரைத் தழுவி நின்றது. அதன் தழுவலில் வெவ்வேறு நிறங்களில் எழுந்து நின்ற கட்டிடங்கள் தகதகவென மிளிர்ந்தன. அவற்றையெல்லாம் தோற்கடிக்கும் வகையில் ஆணவத்தோடு உயர்ந்து நின்றது ‘ஸ்டிராடொஸ்ஃபெயர் டவர்’ (Stratosphere Tower).

ஏற்கனவே வந்து போன இடமென்றாலும் பார்க்கத் தெவிட்டவில்லை, அந்நகரம்.

அப்படியே சென்று காரை நிறுத்திவிட்டு இறங்கியவர்கள் முதலில் ‘ப்ரீமொன்ட் ஸ்ட்ரீட்’ நோக்கி நடந்தார்கள்.

“இரவில இன்னும் வடிவா இருக்கும் என்ன?” முதல் முறையாக வரும் மாறன் கேட்க, “ஓம், ஆனா ஒரே இரவில எல்லாம் பார்க்கிறது எண்டா ஏலாத காரியம். அதுவும் விடிய நாம வெளிக்கிடவும் வேணும் எல்லா!” என்றான், வேந்தன்.

இப்படியே கதைத்தபடி சென்றவர்கள் எதிர்ப்பட்ட கடைகளுள்ளும் சென்று வந்தார்கள்.

“கவலைப்படாமல் என்ன வேணுமோ வாங்குங்க. வேற ஒரு வாகனம் ஒழுங்கு செய்யலாம்.” பரிகாசமாகச் சொன்ன வேந்தனை முறைத்தாள், இலக்கியா.

“இவர் பெரிய ட்ரவல்ஸ் ஒனராம் எங்களுக்கு வாகனம் ஒழுங்கு செய்து தரப்போறாராம்.” பட்டென்று சொல்லிவிட்டவள், சட்டென்று திரும்பிய வினித்தின் பார்வையில், ‘அடியேய் இலக்கி! உனக்கு வாய் சும்மா இராதா?’ தன்னைத்தானே குட்டிக்கொண்டாள்.

அவன், அவளைப் பார்த்த வேகத்தில் வேந்தனிடம் திரும்பினான்.

அவனோ, விழிகளும் உதடுகளும் இணைந்து நகைக்க நின்றிருந்தான்.

“சொன்னாலும் சொல்ல இல்லையெண்டாலும் அதான்டி மண்டு உண்ம!” கவி. பகிடியாகச் சொன்னாளா இல்லை கடிந்து கொண்டாளா என்றே தெரியாதபடி சொன்னவள், தங்கையை இழுத்துக்கொண்டு முன்னாலிருந்த கடைத்தொகுதியினுள் நுழைந்துவிட்டாள்.

அவர்களையே தொடர்ந்த வேந்தனின் பார்வையை அவதானித்தபடி நெருங்கினான், வினித்.

“டோய் அண்ணா, உண்மையாவே டிரைவர் அவசரத்துக்குக் கிடைக்கேல்ல எண்டுதான் இந்த ட்ரிப் வந்தியா இல்ல...வேற...” இழுத்தவன் விழிகளில் விசமம்.

சற்றே தள்ளி மாறனோடு கதைத்தபடி நின்ற நாதனை நாடிவிட்டு வினித்திடம் திரும்பிய வேந்தனின் பார்வையிலும் நகைப்பே!

“உனக்கு வேற வேல இல்லையோ! தேவையில்லாமல் கற்பனை பண்ணாத சரியா!” முதுகில் தட்டினான்.

சமாளிக்கிறான் என்பது வெளிப்படையாகவே தெரிந்ததில் வினித் முகத்தில் சுவாரசியம் அதிகமானது. அதை உணர்ந்துகொண்ட வேந்தன், “அப்ப நாளைக்கு எங்களோட கிராண்ட் கண்யன் வாறியா?” கதையை மாற்றிவிட்டான்.

“வர ஆசைதான், ஆனா வேலைகளும் கிடக்கு.” இழுத்தான், அவன்.

“வேலை எந்த நாளும் தானே இருக்கு! எங்களுக்கும் தான் இருக்கு, நாங்க லீவு எடுக்கேல்லையா? அப்பிடி லீவு போடுங்க வினித்! நாளைக்கு நீங்களும் வாறிங்க!” என்றபடி வந்த வினித்தின் வருங்காலத் துணை, “நீங்களும் உள்ள வாங்கவன்.” வினித்தை அழைக்க, “அண்ணா நீங்களும் வாங்கவன், எப்பிடியும் இருளத்தான் வோட்டர் பொன்டெயின்ஸ், வல்கானோ ஷோ ரெண்டுக்கும் போகலாம்.” என்றபடி நகர, “பரவாயில்ல நீங்க போயிட்டு வாங்க.” என்றுவிட்டு வெளியில் நின்றுகொண்டான், அவன்.

அவனுக்கும் உள்ளே செல்ல ஆசைதான். இலக்கியாவுக்கு எதையாவது வாங்கிக் கொடுக்கவும். ஆனால், இம்முறை அவளோடு சேர்ந்து அவள் விருப்புக்கு வாங்கிப் பரிசளிக்கவே மனம் ஆசை கொண்டது. அதற்கு இது சமயம் அல்லவே! அதனால், பேசாது நாதன் ஆட்களோடு நின்று கொண்டான்.
 

ரோசி கஜன்

Administrator
Staff member
அப்படியே கடைகள் சுற்றிவிட்டு வொல்கானோ ஷோ பார்க்கவென்று ‘மிராஜ் ஹோட்டல்’ நோக்கிச் செல்கையில் ஓரளவுக்கு இருள் கவியத் தொடங்கியிருந்தது.

இருந்தாலும் ‘ஃப்ரீமொன்ட் ஸ்ட்ரீட்’ பகல் போல் வண்ண ஒளியில் குளித்து நின்றது. அதற்குப் பொருந்தும் வகையில், நடமாடிய மக்கள் முகங்களிலும் குதூகலமே! அப்படிப்பட்ட இரம்மிய சூழலில் விழிகளைச் சுழற்றியபடி மெல்ல மெல்ல நடப்பதே பெரும் சுகமளிப்பதாய் இருந்தது.

“மிராஜ் ஹோட்டல் வல்கானோ ஷோ இங்க நல்ல பிரசித்தம். கொஞ்சம் முதலே போய்ட்டம் எண்டா முன்னுக்கு நிண்டு வடிவாப் பார்க்கலாம். இந்த நாட்களில சுற்றுலா வந்த ஆக்களால இடமில்லாமல் நிறைஞ்சு இருக்கும்.” வினித்.

“நாங்க முதலும் போயிருக்கிறம் என்னம்மா.” கவி கேட்க, “ஓம்...ஆனா எனக்குப் பெரிசா நினைவில்ல.” என்றாள், இலக்கியா.

“ஒன்பது பத்து வயசில பார்த்திருப்பீங்க.” சுகுணா சொல்ல, “நாங்க பார்க்கேல்ல.” என்ற ராஜியின் மகன் மகளோடு, “நானும் நானும்.” மாறனின் கையைப் பிடித்துக்கொண்டு நடந்து கொண்டிருந்த கவினும் சேர்ந்துகொண்டான்.

“சின்னாக்களுக்கு இந்த ஷோ உண்மையாவே நல்லா இருக்கும், எனக்கு உண்மையான வல்கானோ இடங்களுக்குப் போக விருப்பம், இன்னும் சந்தர்ப்பம் கிடைக்கேல்ல.” வேந்தன் சொல்ல, “எனக்கும் சரியான விருப்பம் அண்ணா, போகேக்க சொல்லுங்கோ நானும் வாறன்.” என்றான் ஆரூரன்.

“கட்டாயம், உலகம் முழுதும் 1,500 ஆக்டிவ் வல்கானோக்கள் இருக்கு. அதில 75 வீதம் பசிஃபிக் ரிங் ஒஃப் ஃபயர்க்க இருக்கு.” தொடர்ந்தது, வேந்தனே தான்.

“கூகிள் தொடங்கிட்டு!” கடித்த இலக்கியா, “சரி சரி போகேக்க எங்களையும் கூட்டிக்கொண்டு போங்கோ என்ன! ஹவாய், ஐஸ்லாண்ட், இத்தாலி. இதில முதல் எங்க போறதா பிளான் ? இது மூண்டும் தான் முதலிடத்தில இருக்கிறதுகள்.” என்று அவள் சொல்லி முடிக்கவில்லை, “சும்மா சும்மா வேந்தன கூகிள் எண்டு சொல்லுறது, ஆனா உண்மையில நீ தான் கூகிள்!” பட்டென்று இடையிட்டிருந்தாள், கவி.

“அதான்...” ஆமோதித்த வேந்தனை, திரும்பி முறைத்தாள், இலக்கியா. அந்தப் பார்வையை எதிர்பார்த்தே அந்த ‘அதான்’ சொன்னான் போலும்! கண்ணிமைக்காது அவளையே பார்த்தபடி முன்னேறினான். நெற்றி வேறு மேலேறியிறங்கியது. அவள்தான் பார்வையை விலகிக் கொள்ள வேண்டியதாயிற்று!

ஓரெட்டில் அவளை அணுகி கரத்தைப் பற்றி இறுகப் பிடித்தபடி இந்த இரம்மியமான மாலைப்பொழுதை இரசிப்போடு கழிக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் அவனை முழுமையாகவே ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது.

கதையைச் சரி வளர்ப்போமே என்ற முடிவில், “நீங்க இல்லாமலா கட்டாயம். மூண்டு இடங்களுக்குமே போகலாம், எப்ப போகலாம் எண்டும் நீங்களே சொல்லுங்கவன்.” தொடர்ந்தான்.

முன்னால் நடந்து கொண்டிருந்த இலக்கியாவின் நடை வெகு இயல்பாகத் தயங்கி, அவனருகில் வந்ததும் மெல்ல நடக்கத் தொடங்கியது.

மீண்டும் ஒரு வெட்டும் பார்வை அவனை நோக்கிப் பாய, “இந்தப் பயணம் முடிஞ்ச கையோட எண்டாலும் எங்களுக்கு ஒகே, என்னடா ஆரூரன்?” சகோதரனையும் சேர்த்துக்கொண்டாள்.

“எனக்கும் பிரச்சனை இல்ல.” வேந்தன் பதிலிறுக்க, “செலவு யாழ் ட்ரவல்ஸ் ஏற்கும் தானே?” விழிகள் சிரிக்க அவள் கேட்க நாதனே சிரித்துவிட்டார்.

“இதெல்லாம் ஒரு செலவா? ஏற்றிரலாம்.”

“ஐயே! பெரிய தாராளப் பிரபு!” அவள் முணுமுணுப்பாகச் சொன்னது அருகில் நடந்த வினித் செவியில் நுழைந்து விட்டது.

“அங்கிள், போற போக்கைப் பார்த்தா உங்கட வீட்டுப் பயணத்துக்கு எண்டு யாழ் ட்ராவல்ஸ் தனியா ஒரு வாகனம் ஒதுக்கும் போல இருக்கே!” நாதனிடம் கேலியாகச் சொன்னாலும் அவன் பார்வை வேந்தனின் சின்ன சின்ன அசைவுகளையும் அவனோடு மல்லுக்கு நிற்கும் இலக்கியாவையும் உள்வாங்கிக் கொண்டே வந்தது.

கதைத்தபடியே எட்டுமணிக்கு ஆரம்பிக்கும் ஷோவுக்கு அரைமணி முன்னதாகவே வந்துவிட்டவர்கள், நன்றாகப் பார்க்கக் கூடியவகையில் ஒரு இடத்தைப் பிடித்து நின்று கொண்டார்கள்.

“லேசாப் பசிக்கிற மாதிரிக்கிடக்கு.” மாறன் தொடங்க, இளையவர்கள் ஒவ்வொருவரும் ‘பசி பசி’ பாட்டைப் பாடத் தொடங்கிவிட்டார்கள்.

“இப்போதைக்கு கையில ஒண்ணும் இல்லையா? இந்த ஷோ முடியவிட்டுச் சாப்பிட்டுட்டே வோட்டர் ஃபொன்டைன் ஷோ பார்க்கப் போகலாம்.” பொறுப்பாகச் சொன்னான், வேந்தன்.

“ஏன் தம்பி இல்ல, எல்லாரிட முதுகுப் பையிக்கையும் ஒவ்வொரு சாப்பாடுகள் கிடக்கு. ட்ரிங்க்ஸ் கூட இருக்கு.” சுகுணா சொல்ல, “அப்பப் பிறகு என்ன எதையாவது கண்ணில காட்டுங்கவன்.” மீண்டும் மாறன் தான்.

“சின்னப் பிள்ளைகளை விட நீங்க மோசம்!” என்றபடி தன் பையிலிருந்த கப் கேக்குகளை எடுத்தாள், அஜி. அப்படியே, விதம் விதமான பிஸ்கெட்டுகள், நட்ஸ் என்று நொறுக்குத்தீனியை உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தாலும் எல்லோரின் கவனமும் சுற்றத்தைத் தழுவியபடிதான்.

அவர்கள் நின்ற இடத்திலிருந்து நேர் முன்னாலிருந்தது எரிமலைக் குன்று!

“1987 ல இந்த ஹோட்டல் கட்டினதில இருந்து இதுவும் இருக்கு.” வினித் சொல்லிக்கொண்டே வீடியோவை இயக்கினான்.

மெல்லிய மஞ்சளொளி எரிமலைகுன்றின் வடிவை பார்வையாளருள் அனுப்பிக் கொண்டிருந்தது. பெரிய குன்றைச் சுற்றிலும் நீரில் குட்டி குட்டியாக மஞ்சள் ஒளியேந்திய குன்றுகள் இறைந்து கிடந்தன.

பின்னணியில், கருநீல உடையுடுத்திய வான்மகளை சின்ன சின்ன கருந்திட்டு மேகம் தழுவி விளையாடிய வண்ணமிருக்க, அருகிலேயே உயர்ந்து நின்றது, ‘ட்ரஷர் ஐலண்ட்’ கட்டிடம்! மறுபுறம், தன்னை நோக்கி இத்தனை உல்லாசப்பயணிகளை தினம் தினம் இழுத்திடும் கர்வத்தோடு பளிச்சென்று நிமிர்வாக நின்று கொண்டிருந்தது, ‘மிராஜ் ஹோட்டல்’.

எரிமலைக் குன்றைச் சுற்றியோடிய நீர் மெல்லிய சலசலப்போடு இவர்கள் நின்ற இடத்தினடியால் சென்று கொண்டிருக்க, பின்னால் பாதையில் விரையும் வாகன ஒலிகளோடும் மக்களின் பேச்சு, நகைப்பொலியோடும் சேர்ந்து அவ்விடம் இனிய குதூகலம் நிறைந்ததாகக் காணப்பட்டது. சற்றே இவற்றை தள்ளிவிட்டு உற்றுக் கேட்டால் சிறு சிறு பூச்சிகளின் கீச்சிடல்கள் விடாதொலித்து, அத்தனை நடமாட்டத்திலும் ஒரு வனாந்தர உணர்வையும் ஏற்படுத்திக் கொண்டிருந்தது.
 

ரோசி கஜன்

Administrator
Staff member
சரியாக எட்டடிக்க, அதுவரை மஞ்சள் ஒளியில் தன்னை வெளிப்படுத்தி நின்ற செயற்கை எரிமலை, அதிலிருந்து தன்னை மீட்டுக்கொண்டது. சட்டென்று சூழ்ந்த இருள் காத்திருந்த பார்வையாளர்களின் கவனம் முழுவதையும் தன் வசமாக்கியது.

எல்லோர் கரங்களும் மேலெயுயர்ந்தன. அவை தாங்கி நின்ற கைபேசிகளும் புகைப்படக்கருவிகளும் எரிமலையைக் குறிபார்க்க, போட்டி போட்டுக்கொண்டு அனைவர் கண்களும் அதில் தான்!

எரிமலையின் நடுப்பகுதியில் வெண்புகையோடு சிவப்பொளி மெல்ல எழுந்தமர்ந்தது. அருகுகளிலும் மெல்ல மெல்ல வெண்புகை கசிய, சிவப்புபொளியின் கசிவும் அதிகரித்தது.

குன்றின் அருகால், இடுக்குகளில் எல்லாம் சிவப்புக் குழம்பு கசிய, சுற்றியிருந்த நீரும் அதைப் பிரதிபலிக்க, ‘என்னைப் பார்’ என்று சீறிப் பாய்ந்தது, நெருப்புக் குழம்பு! அது அடங்க, போட்டிபோட்டுச் சீறியது நீர்! மாறி மாறி இரண்டும் விளையாட்டுக் காட்டின.

கீழே, அந்தக் குன்றைச் சுற்றியிருந்த சிறு சிறு எரிமலை வாய்களும் தாமும் ஒண்ணும் குறைந்தவர்களில்லையென்று நெருப்பைக் கக்க, “கடவுளே! இத அந்த ஹோட்டல் அறையில இருந்து பார்த்தா இன்னும் பே வடிவா இருக்குமே!” என்றபடி, வீடியோ எடுத்தாள், இலக்கியா.

மறுநொடியே, “கலியாணம் முடிஞ்ச கையோட அங்க வந்து தங்குவம்!” அவள் காது மடல்களை உரசியது வேந்தனின் இரகசியக் குரல். பட்டென்று திரும்பியவள், அப்போதுதான் அவன் தன் பின்னால் நின்றதையே கண்டாள். கொஞ்சம் முதல் வினித் மாறனோடு கதைத்துக் கொண்டிருந்தானே!

'இவரை...' மனதுள் சிடுசிடுப்பு எழுந்ததற்குத் துணையாக அவனை முறைக்க முயன்றாள். மாறாக, விழிகளில் நேசம் தான் கசிந்து தொலைத்தது. அச்சிறு சீண்டலை அவன் நேசிப்பவள் இரசிக்கிறாளென்று உணர்ந்தால் யார் தான் சும்மா இருப்பார்கள்!

அவன், மெல்ல மேலும் சற்றே நெருங்கி நிற்க, அவளுக்குப் பதைபதைப்பில் மூச்சடைத்துப் போயிற்று!

முன்னால் தள்ளியெல்லாம் நிற்க முடியாது அவளே தடுப்பாகப் போட்டிருந்த கம்பியில் சாய்ந்துதான் நின்று கொண்டிருந்தாள். அருகில் நின்ற அஜி, கவினைத் தூக்கி வைத்திருந்து முன்னால் பார்த்துக் கொண்டிருக்க, மறுபுறம் நின்ற பெரியவரின் பேத்தி தன்னருகில் நின்ற வினித்தோடு கதைத்தபடி எரிமலையை இரசித்து நிற்க, மற்றவர்களும் சுற்றத்தின் இரம்மியத்தில் தொலைந்து நின்றதில் வேந்தனுக்கு வசதியாகத்தான் போயிற்று!

"டோய்! என்ன சத்தமே இல்ல...வருவம் என்ன?" மீண்டும் கேட்க, சட்டென்று, தன்னையும் மீறித்தான் முழங்கையால் ஒரு இடி கொடுத்துவிட்டாள். சும்மா எல்லாம் இல்லை, நல்ல இடித்தான்.

“டேய்ய்ய்!" வாய்விட்டபடி பின்னால் நகர்ந்த வேந்தனைப் பார்த்து, "ஹா..ஹா.." பெரிதாகச் சிரித்தேவிட்டான், வினித். அவன் கண்களில் சுவாரசியமும் விசமமும் கலந்து கட்டி நின்றன. வேந்தனின் மனவாழத்தை அறிவது போலவே ஆழ்ந்து வேறு பார்த்தான். அவனைத் தொடர்ந்து பெரியவரின் பேத்தி, அஜி என்று திருப்ப, வேந்தன் முகத்தில் சற்றே தவிப்பு! இலக்கியாவுக்கோ படீர் படீரென்று நெஞ்சு அடிப்பது கேட்க, முன்னிருந்த கம்பியில் ஒட்டி நின்றவள் பின்புறமாகத் திருப்பவேயில்லை. வலு மும்மரமாகப் புகைப்படங்கள் எடுப்பது போன்ற பாவனையில் நின்று விட்டாள்.

"அது...ஒண்ணுமில்ல, கவின என்னட்ட தாங்கோ நான் வச்சிருக்கிறன்.” சொன்ன வேகத்தில் அவனை வாங்கிக்கொண்டவன், வினித் பார்வையிலிருந்து தப்பிவிடும் நோக்கில் நகர்ந்து நாதனருகில் நின்று கொள்ள, "என்னவோ இருக்கு...ம்ம்ம்." பெரிதாகவே சொன்னான், வினித்.

"என்ன? ஆருக்குச் சொல்லுறீங்க?" அப்பாவியாக விசாரித்தாள், பெரியவர் பேத்தி.

"ம்ம்ம்...வேற ஆருக்கு, என்ர அண்ணாக்குத்தான்!" அவன் சிரிக்க, "உனக்கு வேலையே இல்ல என்ன? வந்த வேலைய மட்டும் பாரடா!" வேந்தன்.

"பாக்கிறன் பாக்கிறன், அதைத்தான் பாக்கிறன்!" திருப்பிக் கடித்த வினித் பார்வை, இலக்கியாவை நாடியது. அவள் செவிகள் எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டிருந்தாலும் பார்வை முன்னால் தான்.

எரிமலைக்குன்று மூச்சை நிறுத்திவிட்டு பழையபடி மஞ்சளொளியில் குளித்து நிற்கவும் பார்வையாளர்கள் நகர்ந்தார்கள்.

"சாப்பிட்டுட்டு வோட்டர் ஷோ பார்க்கப் போவம் என்ன தம்பி?" நாதன் கேட்க, “ஓம் அங்கிள்.” என்றபடி, அவரோடு இணைத்து நகர்ந்த தமையன் கரத்தைப் பற்றி நிறுத்தினான், வினித்.

வாய் திறந்து எதுவும் பேசாதவன் விழிகளோ, ‘உண்மையைச் சொல்லு!’ என, உரிமையோடு அதட்டியது.

“பச்! விடடா, உன்ன!”

“முதல் சொல்லுங்க, விடுறன்.” அவன் மல்லுக்கு நிற்க, “என்னத்தச் சொல்லட்டாம் வேந்தன்?” மற்றவர் கேட்க நினைத்து அமைதியாக நிற்க, கவி கேட்டே விட்டாள்.

“அவன் அலட்டுறான்.” என்றபடி, அருகில் நின்ற நாதனைப் பார்த்தவன், “சரி சரி கையை விடு, இரவைக்கு உன்னோட வீட்ட வாறன்.” என்றுவிட்டான், அவன் அதைதான் கேட்ட கணக்கில்.

“ம்ம்ம் ம்ம்ம்...” வினித். இருந்தாலும் அடங்கிவிட்டான்.

"சாப்பிடக் கனதூரம் போக வேணுமோ? இங்க இருந்து ஒரு பத்து நிமிச நடையில வோட்டர் ஷோவுக்குப் போயிரலாம்." கவி கேட்க, "இதும் பத்து நிமிச நடைதான், சாப்பாடு அருமையா இருக்கும்." என்றான், பெரியவரின் பேரன்.

"இப்ப என்ன, இடம் பார்க்கத்தானே வந்தம்...பார்த்துக்கொண்டே நடக்க வேண்டியதுதான்." என்றபடி சென்றார் நாதன்.

"அதானே..." என்ற சுகுணா, "இலக்கி என்னம்மா நீ!" அவளைப் பிடித்து நிறுத்தினார். அப்போதுதான், தான் அப்படியே நடந்து அங்கிருத்த பூந்தொட்டியொன்றில் மோதிவிட இருந்தது புரிந்ததவளுக்கு.

“நடக்கேக்கையே அதும் இவ்வளவு சனநெருக்கடி உள்ள இடத்தில, அப்பிடி என்ன ஃபோனை நோண்டுறது. இந்தப் பயணம் வெளிக்கிட்டு நீ ஃபோன் பாவிக்கிறதும் கூடிட்டு!" தொடர்ந்து கண்டித்த சுகுணா, "ரோட்டப் பார்த்து நட!" என்றுவிட்டு நடந்தார்.
 

ரோசி கஜன்

Administrator
Staff member
தாமதியாது திரும்பிப் பார்த்த வேந்தன் உதடுகளில் முறுவல்! காரணம், அவன் பேசி சிணுங்கியது; அவள் அவனுக்குத்தான் என்னவோ அனுப்பியுள்ளாள்.

‘நான் கார் மாறி ஏறினா விடமாட்டிங்க, இப்ப நீங்க வினித் அண்ணாவோட போகப் போறிங்களா?’ கோப ஸ்மைலிகளோடு வந்திருந்தது, குறுஞ்செய்தி.

‘இங்க பாருங்க போக வேணாம்!’

‘வேந்தன் இன்னும் மூணே மூணு நாள்தான்.’ கண்கள் குளமாகி நிற்கும் ஸ்மைலிகளோடு பட்டுப்பட்டென்று வரிசையாக வந்து விழுந்தன.

முதலில் முறுவலோடு பார்த்தவனுக்கு, கடைசியில் அவள் அனுப்பியதை வாசிக்கையில் நெஞ்சினுள் ஏக்கமோடியதைத் தவிர்க்க முடியவில்லை. சரேலென்று திரும்பிப் பார்த்தான். அவள் பார்வை அவனையே தொடர்ந்திருக்கும் போல, ‘வேணாம்’ என்று, மின்னலாகத் தலையாட்டினாள்.

அவனுதடுகளில் முறுவல்! ‘நான் ரெண்டு தடவைகள் சொல்லியும் இன்னும் நீ பதில் சொல்லேல்ல, அதோட... இப்பக் கொஞ்ச முதலும் ஒண்டு கேட்டன், அதுக்கும் பதில் வரேல்ல. எல்லாத்துக்கும் பதில் சொல்லு நான் போகேல்ல!’ படபடவென்று தட்டி அனுப்பினான்.

அவள் முகத்தில் வெளிப்படையாகவே முறுவல் விரிந்தது! ‘பதில் சொன்னால் தான் இவருக்கு விளங்குமாம்!’ மனதுள் செல்ல முணுமுணுப்பு!

‘அப்படி என்ன கேட்டீங்க எண்டு நினைவில்லயே! அதும் கொஞ்சம் முதல்... ம்ம்ம்.. உண்மையாவே ஒண்டும் நினைவில்ல.’ பட்டென்று தட்டிவிட்டாள்.

“இலக்கி! என்னடி நீ?” கவி.

“அப்பிடிப் பின்னுக்கு நிண்டு நிண்டு ஆருக்கு மெசேஜ் போடுற? கெதியா வா பாப்பம்.” முன்னால் சென்றுவிட்டுத் திரும்பிய கவி, கடிந்தபடி அழைத்தாள். முறுவல் மாறாது மலர்வோடு ஓடிவந்து சேர்ந்த தங்கையை ஒரு சாதியாகப் பார்க்கவும் செய்தாள்.

“ஆருக்கு இப்பிடி அவசரமா மெசேஜ் தட்டுற?” சந்தேகமாகக் கேட்டாள் போலிருந்தது, இலக்கியாவுக்கு.

“சிந்துக்கு எரிமலைக்குன்றுப் படங்கள் அனுப்பினன், அவளுக்குத்தான் கா!” சமாளிப்பு.

‘இந்தப்பயணம் வெளிக்கிட்ட நாளில இருந்து இப்பிடி விதம் விதமா சமாளிக்கிறதே நமக்கு வேலையாப்போச்சு!’ மனதுள் எண்ணியவள், தமக்கையின் பார்வை அடிக்கடித் தன்னில் படிந்து விலகவே, “அக்கா நீங்க எடுத்த வீடியோக்கள் எனக்கு அனுப்பி விடுங்கோ!” கதையை மாற்றியபடி நடந்தாள். இருந்தாலும் மனமோ வேந்தனின் பதிலுக்காகக் காத்துக் கிடந்தது.

அவன் ஒன்றும் அனுப்பவில்லை. அதுமட்டுமில்லாது அடுத்து வந்த ஒரு மணித்தியாலம் சாப்பிட்டுவிட்டுக் கிளம்புவதில் சென்றிருந்தது. அவ்வளவு நேரமும் வேந்தன் வினித்தோடு அமர்ந்திருந்தான்.

அதன் பிறகு, ‘வோட்டர் பொன்டயின் ஷோ’ பார்ப்பதற்காக ‘பெல்லாஜியோ ஹோட்டல்’ நோக்கி நடக்கையில் கிடைத்த சிறு சந்தர்ப்பத்தில், "போகேல்ல எல்லா?" மெல்லக் கேட்டாள்.

"அது உம்மட கையில."

"வேந்தன்!"

"ம்ம்ம்...என்ர பெயர் சரி நினைவிருக்கே!".

"பச்! இப்ப என்னதான் சொல்ல வாறீங்க?" கோபம் போலவேதான் கேட்டாள்.

"நான் என்ர பாட்டில போக நீர் தான் வந்து கதைச்சனீர்!" அவன் குரலில் சீண்டல்.

"ஓஓ!" அவள் எதையோ சொல்லவர, "என்ன ரெண்டு பேருக்கும் திரும்பவும் ஏதாவது முட்டலோ!?" வந்திணைந்திருந்தான், ஆரூரன்.

"அப்ப ரெண்டுபேருக்கும் முட்டுப்படுறதுதான் வேலையோ?" மறுபுறமாக வந்திணைந்துகொண்டான், வினித்.

"அதையேன்ணா கேட்கிறீங்க? இந்தப் பயணம் தொடங்கியதில இருந்து ஒரே சண்டைதான்." ஆரூரன்.

"ஓஓ...ஹோ...” இராகம் இழுத்த வினித், விசமமாகத் தமையனைப் பார்த்தான். "அண்ணா இனி நீ ஒண்ணுமே சொல்லத் தேவையில்ல!" வேந்தனின் காதைக் கடிக்கவும் செய்தான்.

அதன் பின்னர் இலக்கியாவால் அவர்களோடு நடக்க முடியவில்லை. மெல்லப் பின்தங்கி அஜியோடு இணைந்துகொண்டாள்.

வரும் வழியெல்லாம் தகதகவென்று மிளிர்ந்த சுற்றத்தை பார்த்தபடி பெல்லாஜியோ வந்து சேர்ந்திருந்தவர்கள், ஷோவை தெளிவாகப் பார்க்கக் கூடியவகையில் இடம்பிடித்து நின்றுகொண்டார்கள்.

"இதையும் மேல இருந்து பாத்தால் தான் ..." சொல்லிக்கொண்டு வந்த இலக்கியா கப்பென்று வாய் மூடிவிட்டாள். மறுநொடியே, அவள் விழிகள் தேடலில் இறங்கியிருந்தன. எரிமலைக்குன்றடியில் இப்படி வாய்விடத்தானே காதில் குசுகுசுத்திருந்தான். இப்போதோ, சற்றே தள்ளி நாதன் மாறனோடு நின்றுகொண்டிருந்தான் வேந்தன். அவன் தோளில் வாகாக அமர்ந்திருந்தான், கவின்.

இலக்கியின் பார்வை சென்ற இடத்தை அடைந்த அஜியின் விழிகளில் நகைப்பு. “வேந்தனோட நல்லா ஒட்டிட்டான் என்ன? பாருமன் இருக்கிற வடிவ!" மகனை இரசித்தபடி கூற, "ஓமோம்..." மென்று விழுங்கினாள், இலக்கியா.

“வேந்தன் நல்ல மாதிரி என்ன சித்தி? கவின் மட்டும் இல்ல நம்மட குடும்பத்தில எல்லாருக்குமே பிடிச்சிருக்கு!” அஜியின் மறுபுறம் நின்ற கவி சொல்ல, சட்டென்று திரும்பியது சுகுணாவின் பார்வை! கவியோ வேந்தனைத்தான் பார்த்துக்கொண்டு நின்றாள். ‘பெரியம்மா சொன்னது சரியோ!’ என்ற எண்ணம் சுகுணாவுள்.

தமக்கை சொன்னதையும் சொல்லும் போது அவள் முகம் பிரதிபலித்த மகிழ்வுணர்வையும் அவதானித்த இலக்கியாவின் மனதுள் எதுவோ எல்லாம் செய்தது. கவியின் பார்வை வேறு வேந்தன் புறமே திரும்பியும் இருந்தது. அதுவரையும் இருந்த உற்சாகம் மொத்தமாக வடிந்திட தவிப்பும் பதற்றமுமாக நின்றாளவள்.
 

ரோசி கஜன்

Administrator
Staff member
பெலாஜியோ ஹோட்டலின் முன்னால், சட்டென்று பார்த்தால் அரைவட்டவடிவில் அமைந்திருந்தது, அந்நீர்த் தடாகம். அதில் நிகழப் போகும் அற்புத நீர் நடனத்தை இரசிக்கக் காத்திருந்தன, பல நூறு கண்கள். அவர்களுக்கு விருந்தளிக்கவென்று தடாகத்தின் நடுப்பகுதியை ஒட்டி இரு வட்டங்களாகச் சீறலாக உயர்ந்தெழுந்தது நீர். அதை, பார்ப்போருக்குப் பட்டவர்த்தனமாக்கியது, கீழே ஒளிர்ந்த வெள்ளொளி!

"பகல்ல எண்டா லைட் இராது. எண்டாலும் வடிவாத்தான் இருக்கும். மனுசர விட நாங்க வடிவா ஆடுவம் எண்டு சொல்லுறதுபோல, சீறுர தண்ணி போடுற நடனம் இருக்கே!" இரசனையோடு சொன்னான் வினித்.

முற்றிலும் உண்மைதான்! உயர எழும் நீரின் அசைவு பார்ப்போரின் உடலிலும் நளினமான அசைவை உண்டு பண்ணியது. நிச்சயம், காதலர்களுக்குரிய நேரமாக இதைக் கொள்ள முடியும். ஏகாந்தமில்லா இரவில் ஏகாந்த உணர்வைத் தோற்றுவித்து, நேசத்தின் பிடியில் அகப்பட்டுள்ள ஒவ்வொருவரையும் தன்பால் சுண்டியிழுத்தது, அந்நிகழ்ச்சி. அதைத் துல்லியமாகவே உணர்ந்து கொண்டது, இலக்கியாவினுள்ளம். அவள் மனதில் கடந்த கணம் வரையிருந்த பதற்றமும் தவிப்பும் காணாது போயிருக்க, ஒரு காதலியாக மட்டுமே தன்னையுணர்ந்து நின்றாளவள்.

ஓடிச்சென்று அந்நீர் வட்டங்களினிடையால் புகுந்து நெளிந்து வளைந்து நடனமாட ஆவல் கொண்ட இதயம், தன் கைப்பற்றுதலுக்கு நேசிக்கிறவனின் அருகாமையைத் தேடியது. சட்டென்று விலகிய விழிகளைச் சுழற்றினாள், இலக்கியா.

வேந்தனைக் காணவில்லையே! தவிப்பில் உழன்ற கண்களிரண்டும் மீண்டும் நீர்த் தடாகம் நோக்கி நகர்ந்தன, மெல்லிய கலக்கத்தோடு! அங்கோ, இவள் விழிகள் விலகிய சில கணங்களுள் தடாகம் முழுவதுமாக நடனம் ஆக்கிரமிப்புச் செய்திருந்தது. பார்ப்போர் ஒவ்வொருவர் கவனமும் அங்குதான். வியப்பைத் தம் குரல்களில் காட்டவும் தயங்கவில்லை.

சாதாரணமாக இருந்திருக்க இவளும் தான் ‘வாவ்’ என்று கூச்சலிட்டுத் துள்ளியிருப்பாள். காதல், இனிமையான அற்புத உணர்வுதானென்றாலும் அவள் சுயத்தையே மாற்றிவிட்டதே! மாற்றியவன் இப்போது கண்ணிலும் படுகிறான் இல்லை. மீண்டும் அவனைத் தேட விளைந்த விழிகள் அசையாது நின்றுவிட்டன. காரணம், அவள் இடக்கரத்தை கதகதப்போடு தன் விரல்களுள் பொத்தியிருந்தது, ஒரு கரம்.

அவளுக்கு இப்போது திரும்பிப் பார்க்க மிகையாகவே தயக்கமாக இருந்தது. அதில் பெரியவரின் பேத்திதானே நின்றிருந்தாள். அவனைப் பார்க்காது மெல்லத் திரும்பினாள், இலக்கியா. இடையில் வேறு சிலர் நிற்க வினித்தும் பெரியவரின் பேத்தியும் அப்பால் நகர்ந்து சென்று நின்று கொண்டிருந்தார்கள். தற்செயல் போல் பார்த்த வினித் பார்வையில் எக்கச்சக்ச நகைப்பு! இவள் முகம் சூடாகிற்று.

'வினித் அண்ணா நிச்சயமாக் கண்டுபிடிச்சிட்டார்.' மனம் ஊர்ஜிதம் செய்த கணம், சற்று முன்வரை அவன் அருகாமைக்கு ஏங்கிய உள்ளம் இப்போது செல்லக் கோபத்தோடு அவனை முறைத்திட்டு! அவன் அவளைப் பார்க்கவில்லை, பார்வை முன்னால் தடாகத்தில். வலது கரத்தில் கவினை ஏந்தியிருந்தவன் இடக்கரத்தால் இவள் கரத்தை அழுந்தப் பற்றியபடி, "நீ என்னைத் தேடேல்ல எண்டு சொல்லு அங்கால போயிறுறன்.” மெல்ல வார்த்தைகளை விட்டான்.

அப்போதும், அவள் அவனை ஏறிடவில்லை. கரத்தை மெல்ல விடுவித்துக்கொண்டவள், அதேவேகத்தில் அவன் கரத்தைக் கெட்டியாகப் பற்றிக்கொண்டாள். மெல்ல நெருங்கியும் நின்றுகொண்டவள், சற்று முன்னர் ஆசைகொண்டது போலவே அவன் விழிகளைத் தொடர்ந்து தடாகத்தில்... பார்வையால் குதித்தாள்.

நிமிடங்கள் இதமோடு கரைந்தன!

“போகாட்டி இதில வச்சு என்னப் பிச்சு எடுப்பான்; விடிய நேரத்துக்கே வந்திருவன்.” திட்டுக்கிட்டுப் போய் அவனைப் பார்த்தாள், இலக்கியா.

தடாகத்தில் நிகழ்ந்து கொண்டிருந்த அழகிய நீரொளி நடனமும் அவன் அருகாமையும் தந்த மயக்கத்தில் நின்றாளோ! கணத்தில் அது விலகிட, “நீங்க எங்கயும் போக வேணாம்!” மெல்லிய குரலென்றாலும் அதில் ஏகப்பட்ட அழுத்தம்.

அவன் சிரிக்கிறான் என்று தெளிவாகவே தெரிந்தது. விழிகளும் சேர்த்து நகைத்தன.

“அப்ப நான் கேட்டதுக்கு உடனே பதில் சொல்லு!” அவன் சொல்லி முடியவில்லை, “என்ன பதில்?” அவன் நாடியைப் பிடித்துத் தன் முகத்தின் நேரே வைத்தபடி வினவியிருந்தான், கவின்.

இலக்கி மட்டுமில்லை வேந்தனும் தான் திடுக்கிட்டுப்போனான்.

அஜியின் தலை அவர்கள் பக்கம் திரும்ப முதல், “டோய்...டோய்....” வேந்தன் அவன் தலையை பிடித்துச் செல்லமாக ஆட்டினானென்றால், பற்றியிருந்த அவள் கரத்தில் சிறு அழுத்தத்தோடு விட்டுமிருந்தான்.

“இன்னும் சின்னப்பிள்ள என்ன? கிழட்டுப் பொடியன்! ஒரே தூக்குக் காவடி, இறங்கி அக்காவோட நில்லும் பார்ப்பம்!” சாமாளிக்கப் பார்த்தாள் இலக்கியா.

“நோ...கவின் மாமாவோட.” ஒருகரம் வேந்தனின் கழுத்தை வளைத்துக்கொள்ள, நிமிர்ந்தபடி சொன்னானவன்.

“நல்ல செல்லம் தான்!” என்ற அஜி, “மாமா பாவம் தம்பி இறங்குங்க!” தொடர்ந்தவள், வேந்தன் வினித் நோக்கி நடர்ந்து கொண்டிருக்கவும், சற்று முன்னர் தள்ளி நின்றவன், அவனிடம் செல்லவே நகர்ந்து வந்திருக்கிறான் என்றே எண்ணிக்கொண்டாள்.

அவன் பட்டென்று விலகிச் சென்றதில் சுற்றத்தின் அழகு கப்பென்று வடிந்து போயிற்று, இலக்கியாவுக்கு. என்ன ஏதென்றில்லாது விழிகள் கூட மெலிதாகச் கசிந்திட்டு! தவிப்பில் மிதக்கும் மனதோடு அவ்விடத்தில் நிற்கப் பெரும்பாடு பட்டுவிட்டாளவள். 'அவ்வளவு சொல்லியும் போகப் போறாராமே' சற்று முன்னிருந்த சந்தோச மனநிலையில் மங்கல்! அதுவும், வேந்தன் இயல்பாகக் கலகலத்துக்கொண்டு நின்றால்...

அங்கிருந்து, அவர்கள் தங்கவிருந்த விடுதிக்கு அழைத்து வந்து விட்டுவிட்டு, அவளிடம் பார்வையால் விடை பெற்றவன், வாகனத்தை எடுக்க முதல், ‘டோய்! மெசேஜ் போடுவன் தூங்கிராதேயும்!’ என்றுவிட்டே சென்றிருந்தான்.

அவள் மனநிலை யாரோடும் கலகலப்பாகக் கதைக்கவிடவில்லை. அவர்களோடு தங்காது சென்றுவிட்டான் என்றா மனம் குழம்பிக் கிடக்கு? அப்போ, இன்னும் எண்ணிச் சில நாட்களின் பின்னர்? அவளுள் இக்கேள்வி பூதாகரமாக நின்றது. தம் விருப்பை வீட்டில் சொல்வது பற்றியும் மனம் எண்ணிக்கொண்டது, அந்த வேலையை வேந்தன் பார்ப்பான் என்றும் கூட!

இதே எண்ணத்தோடு படுக்கையில் சாய்ந்தாலும் கண்கள் அடிக்கடி கைபேசியில்! அது எங்கே? அவன் புறமிருந்து ஒரு 'ஹாய்' கூட வரவில்லை. இவள் விரல்களோ, 'என்ன செய்யிறீங்க' என்று போடுவமா என, பலதடவை முனைந்தாலும் தட்ட முனையாது ஒதுங்கிக்கொண்டன.

தன் வாழ்வில் இச்சில நாட்களில் நிகழ்ந்துவிட்ட மாற்றம் பற்றிய எண்ணங்ளோடு உழன்று கொண்டிருந்துவிட்டு நடுச்சாமம் கடந்து, தன்னையுமறியாது கண்ணயர்ந்தாள், இலக்கியா.
 
Top Bottom