• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அத்தியாயம் 32

ரோசி கஜன்

Administrator
Staff member
ஸ்கை வோக்கிலிருந்து முதல் ஆளாக வெளியில் வந்திருந்த இலக்கியா, அதல பாதாளம் என்பார்களே அப்படிச் சரிந்து இறங்கிய கண்யனை வீடியோ எடுப்பதில் முனைந்துவிட்டாள்.

இளையவர்களும், அப்படியே சுற்றத்தை உள்வாங்கிக்கொண்டே நகர்ந்து அங்கிருந்த குன்றிலேறிச் சென்று புகைப்படமெடுப்பதில் முனைந்தார்கள். அஜியும் அவர்களோடு இணைந்து கொண்டாள்.

குன்றிலேறி கரமிரண்டையும் விரித்தபடி ஆகாயத்தைப் பார்த்து நின்றவளை ஆரூரன் கைபேசிக்குள் அடக்கினானென்றால், விழிகளால் உள்ளிழுத்து இதயத்துள் அடைத்துக் கொண்டான், வேந்தன்.

"ஹாஃப் ஜீன்ஸ் போட்ட தேவதை என்ன அண்ணா?! ரசியுங்கோ ரசியுங்கோ!" வேந்தன் முதுகில் தட்டிச் சொன்ன வினித், "டோய் ஏன்டா? நிண்டு ஒரு நிமிசம் கதைக்கக் கிடைக்குதில்ல எண்டா இப்படித் தூர நிண்டு பார்க்கிறதும் பொறுக்கேல்லையா உனக்கு?" எரிச்சல் பட்ட தமையனைப் பார்த்து வாய்விட்டே நகைத்தான்.

"நீங்க பேசாமல் இப்பவே பெரியம்மாக்குச் சொல்லி இலக்கியாட அம்மாவோட கதைச்சிருங்க. பிறகு என்ன? மிச்ச ரெண்டு நாள் சரி சோடியா, மற்றவேக்கு மறைக்கத் தேவையில்லாமல் சுற்றலாம்." கண்ணடித்தபடி ஆலோசனை சொன்னான்.

"பச்! அம்மா ஆக்களுக்கு நேர்ல போய்ச் சொல்லலாம் டா. அதும் இன்னும் ரெண்டு நாட்கள்தானே!" வேந்தன்.

"அப்ப, இப்படித் தள்ளி நிண்டு பெருமுச்சு விடக் கூடாது!" என்றவன், முறைத்த தமையனிடம், "இல்லையோ உங்களுக்குப் பதிலா நானே சொல்லவா?" மீண்டும் கண்ணடித்தவனை இப்போது முறைத்தான், வேந்தன்.

“நானா சொல்ல முதல் ஆரிட்டையாவது வாய் விட்டியோ... நல்லா உத படுவ தம்பி!” எச்சரிக்க, “என்ன இப்பிடி வெருட்டுறீங்க?” என்றபடி வந்திருந்தாள், வினித்தின் வருங்கால மனைவி. பக்கத்தில் அதே கேள்வி பார்வையிலிருக்க, கவி.

"ஹா..ஹா...அண்ணோய்..." வினித் சிரித்த சிரிப்பில் பெண்கள் பார்வை வேந்தனை ஆராய்ந்தன.

"போடா டேய்..." மழுப்பிவிட்டு பட்டென்று நகர்ந்துவிட்டான், அவன். வினித் சிரிப்பு மட்டுமல்ல, "என்னத்தச் சொல்ல வேணாம் எண்டவர்?" கவியின் குரலும் தொடர்ந்தாலும் அவன் திரும்பவில்லை.

"சொல்ல விருப்பமோ சொல்லு, வேல மிச்சம்!" முணுமுணுத்தபடி வந்தவனை, "என்ன தனியாக் கதைக்கிறீங்க வேந்தன்?" எதிர்கொண்டான், மாறன்.

"இல்ல இல்ல ஒண்ணும் இல்ல." சமாளித்துவிட்டாலும் பார்வை பறந்துபோய் குன்றிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்த இலக்கியாவில் பட்டுத் திரும்பியது. மாறன் பார்வையும் அங்கே சென்றுவிட்டு வந்தது, "கவின் அவளப்போட்டு ஒரு வழி பண்ணுறான்." என்றபடி.

இடையில், "இல்ல... என்னவோ இருக்கு...ரகசியம் போல!" என்றபடி வந்த கவி, வேந்தனைப் பார்த்த பார்வையில் அவன் பலமாகவே சிரித்துவிட, பட்டென்று வந்து மோதியது இலக்கியாவின் பார்வை.

"அப்படி என்ன இரகசியம்...சொல்லுங்க வேந்தன், வினித் அண்ணா என்ன சொல்லப் போறன் எண்டவர்? எங்களிட்டையா?" அவள் விடாது பிடித்துத் தொங்க, அதையும் இதையும் சொல்லி அவள் கவனைத்தை வேறு வழிக்குத் திரும்புவதில் கண்ணும் கருத்துமாக நின்றானவன்.

இப்படி, அவர்கள் அளவளாவி நின்றதைப் பார்த்துவிட்டு அப்பால் விலகி நடந்த இலக்கியாவின் மனம் ஒரு நிலையில் இல்லவே இல்லை. இருந்தாலும், எதையுமே வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. அஜி, ராஜியின் பிள்ளைகளோடு கதைத்தபடியே மெல்ல மெல்ல நகர்ந்து வந்தவர்கள், “அவையளும் இங்கதானே வருவீனம், நாம போய்ப் பார்ப்பம்.” என்று, ராஜியின் மகள் ஆசைப்படவே பரிசுப் பொருட்கள் வாங்கும் கடைக்குள் உள்ளிட்டார்கள்.

சிறிது நேரம் சென்றிருக்கும், “உங்கள என்ன செய்யிறது? அங்க தேடினா இங்க வந்து நிக்கிறீங்க? சொல்லிப்போட்டு வந்திருக்கலாமே அஜி." மாறன் வர, தொடர்ந்து மற்றவர்களும் வந்து சேர்ந்தார்கள்.

அதன் பின்னர் எல்லோருமாக பிட்சா ரெஸ்டாரண்ட் சென்று கலகலப்பாக உணவையும் முடித்த பின்னர், வினித் ஆட்கள் விடை பெற்றுக்கொண்டார்கள்.

" ‘நீடில்ஸ்’ல தானே தங்க இருக்கிறீங்க? இங்க இருந்து மூண்டு மூண்டரை மணிநேர ஓட்டம் என்ன?" வினித் கேட்க, "ஓம், எப்படியும் நாலு மணித்தியாலம் ஆகும். ஆறுதலாப் போகலாம்." மணி பார்த்தபடி சொன்னான், வேந்தன்.

“வேந்தன் நானே ஓடுறன்.” என்றாள் கவி. பதில் சொல்லவில்லை அவன். வினித் ஆட்கள் விடைபெற்றுச் செல்லவும் தாமதியாது வந்து சாரதியாசத்தை நிறைத்துவிட்டான்.

அதைப்பார்த்த ஆரூரன் வாய்விட்டுச் சிரிக்க, கவியின் முகம் கோணிவிட்டது.

“காலமையே இண்டைக்கு நான் ஓடுறன் எண்டு சொல்லிட்டன் வேந்தன், பிளீஸ் இறங்குங்கோ!" மல்லுக்குத் தயாராகிவிட்டாள். அதைப் பார்த்துக்கொண்டே உள்ளேயேறி கடைசி இருக்கையில் அமர்ந்த வேகத்தில், எடுத்த புகைப்படங்கள், வீடியோக்களைப் பார்க்கத் தொடங்கிய இலக்கியாவைத் தொடர்ந்து விட்டு கவியில் படிந்த வேந்தன் பார்வையில், உண்மையில் சின்ன யோசனை மின்னியதோ என்றளவில் இருந்தது. அக்கணத்தில் தான், தன்னுடனான கவியின் பேச்சு, செய்கைகள் இலக்கியாவைப் பாதிக்குதோவென்ற எண்ணம் அவனுள் முளைத்தது. அதேநேரம், கவியும் எப்போதேன்றில்லாது மிக்க உரிமையோடு கதைப்பதையும் அப்போதுதான் உணர்ந்து கொண்டான்.

அதையுணர்ந்த மறுநொடி முகத்தில் வெகுவாகவே அமைதி!

"இல்ல, இனி இருட்டிரும். இடையில நிண்டு இறங்கி ஏறுறத விட இப்பவே நான் ஓடுறன்." திட்டமாகவே சொல்லிவிட்டான். அவள் முகம் கூம்பிப் போயிற்று! என்றாலும், தாமதியாது முன்னிருக்கையில் ஏறிக்கொண்டவள், “நான் வீடியோ எடுக்கப் போறன். இதில இருந்தாத்தான் நல்லா எடுக்க ஏலும்.” பெல்ட்டைப் போட்டுக்கொண்டாள்.
 
Last edited:

ரோசி கஜன்

Administrator
Staff member
"பிள்ள அந்தத் தம்பியக் கரைச்சல் படுத்த வேணாம். பேசாமல் பின்னால இரம்மா. நீங்க இன்னும் கொஞ்சத்தில் அசந்து தூங்குவீங்க. நான் இருந்தா கதைச்சுக்கொண்டு வருவன் எல்லா? நீ பின்னால வா." என்றார் நாதன்.

"நான் எங்க எந்த நேரமும் தூங்கிறனானோ? நானே இருக்கிறேனே சித்தப்பா. இப்ப இதில என்ன இருக்கு?” அவள் பொதுவாகவே சொல்லிவிட, அதன் பிறகு என்ன செய்வது. நாதன் பின்னால் ஏறியமர்ந்துவிட்டார். மீண்டும் ஒருதடவை இலக்கியாவை நோக்கிச் சென்றது, வேந்தன் பார்வை. அவள் பார்வையோ கைபேசியில்!

வாகனத்தை இயக்கி அமைதியாகவே செலுத்தினான். ஒரே ஒருதடவை காஸ் ஸ்டேஷனில் இறங்கியேறியவர்கள் அடுத்த நான்காவது மணித்தியாலம் அந்திப் பொழுது சாயும் நேரத்தில் ‘நீடில்ஸ்’ வந்திருந்தார்கள்.

"சூரியன் மறையாட்டியும் எட்டுக்கு மேல ஆகிட்டு. இன்னும் ரெண்டு நாட்கள் தானே...முக்கியமா ஏதாவது வேணும் எண்டா நாம கடைக்குப் போகலாம். என்ன மாதிரி அண்ணி?" நாதன் கேட்க, "அதும் நல்லதுதான், செக் இன் செய்து நாங்க அலுவல் பார்க்க நீங்க போயிட்டு வந்திருங்க." என்றான், மாறன்.

"நானும் வரட்டோ?" கவி கேட்க, "இல்ல, அண்ணியும் நானும் தம்பியோட போயிட்டு வாறம். நாளைக்கு நேரத்தோட போக வேணும், போய் அலுவலப் பாருங்க!" என்ற நாதன், “அறைகள் எல்லாம் எப்பிடி எண்டு பார்த்திட்டுப் போகலாம்." என்று, சென்று அறைகளைப் பார்த்துவிட்டு வரும் வரை அப்படியே வாகனத்தில் அமர்ந்திருந்தான், வேந்தன்.

இறங்கிச் செல்கையில் அவன் புறமே திரும்பாது சென்றுவிட்ட இலக்கியா, அவனுள் எரிச்சலைச் சுரக்கச் செய்து விட்டாள்! இத்தனை நாள் இல்லாதவகையில் ஒருவகைச் சோர்வும் அவனைத் தாக்கியது. பிரயாணம் முடிகிறது என்ற எண்ணம் தந்த உணர்வேயது.

“வீட்ட போன அடுத்த நிமிசம் அம்மா ஆக்களிட்டச் சொல்லி இவையளிட்ட கதைக்க வேணும்!” எடுத்துவிட்ட முடிவை மீண்டும் சொல்லித் தன்னைத் தேற்றிக் கொண்டாலும் சோர்வு ஒன்றும் அகன்றுவிடவில்லை. அப்படியே பின்னால் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டான்.

"தம்பி நல்லா களைச்சுப் போனீங்கள் போல! நீங்க வேணும் எண்டா போய் பிரெஷ் அப் செய்யுங்கோ, நாங்க போயிட்டு வாறம்." நாதனின் குரலில் டப்பென்று கண் திறந்தவன் நிமிர்ந்தமர்ந்தான்.

"இல்ல இல்ல, களைப்பெல்லாம் ஒண்டும் இல்ல அங்கிள், உங்களத்தான் பார்த்துக்கொண்டிருந்தன், வாங்க போயிட்டு வந்திருவம்." என்றவன், பார்வை சுகுணாவுக்குப் பின்னால் ஏறும் இலக்கியாவில்.

அவளோ, ஏறியமர்ந்த வேகத்தில் கைபேசியில் பார்வை பதித்துவிட்டாள்.

"இப்ப என்னத்துக்கு இப்பிடிக் கதைக்காமல் இருக்கிற நீ?" கேட்டுவிட வேண்டும் போலெழுந்த உணர்வை அதட்டல் போட்டு அடக்கிக்கொண்டே வாகனத்தை எடுத்தான்.

"அறை எல்லாம் நல்லதா அங்கிள்?"

"ஓம் தம்பி, பிழை சொல்ல ஏலாது." என்ற நாதன், "நேற்றுத்தான் வெளிக்கிட்டது போல இருக்கு, இந்தா ரெண்டு கிழமைகள் ஓடிட்டு என்ன?" என்றதுக்கு, வேந்தன் முறுவல் செய்ததோடு நிறுத்திக்கொண்டான்.

"நாளாண்டைக்கு இரவு ரெட் வூட் சிட்டி ல ஹொட்டல் என்ன அங்கிள்?" திடீரென்று கேட்க, "ஓம் தம்பி, நாளைக்கு இரவுக்கு 'பக்கர் பீல்ட்'...அடுத்தது சான்ஸ்பிரான்சிஸ்கோ தான். நாங்க சுற்றிப் பார்த்திட்டு இரவு ஹொட்டல் போகேக்க அம்மா அண்ணா ஆக்களும் வந்திருப்பீனம்."

"ஓ! பிறகும் நாலு நாட்களுக்கு இதே வாகனம் புக்கிங்?"

"ஓம் தம்பி கலியாணம் ஒண்டு இருக்கு. அதோட அஜிக்கும் சொந்த பந்தம் நிறைய இங்கதான். எங்களுக்கும் தான். வந்திட்டுப் போகாமல் போக ஏலாதே!"

"அது சரிதான். அந்த நாலு நாட்களுக்கும் வேற ஒரு டிரைவர் ஏற்பாடு செய்து விடுறன் அங்கிள்." சொன்னவன் பார்வை ரியர் வியூ மிரரில்! சட்டென்று நிமிர்ந்த இலக்கியாவின் பார்வையும் அங்குதான். பயணம் முடிந்தாலும் இன்னும் நான்கு நாட்களுக்கு இருப்பானேயென்ற சிறு சந்தோசம் இருந்ததே!

அவள் பார்வையை எதிர்கொண்டவன் பார்வை நிதானமாக விலகிப் பாதையில் பதிந்தது.

"அதுக்கென்ன தம்பி, நீங்க இவ்வளவு செய்ததே பெரிசு! எத்தனை சொன்னாலும் தகும்." இப்படியே கதைத்தபடி வந்து, சூப்பர் மார்கட் வாயிலில் அவர்களை இறக்கியவன், "கார நிப்பாட்டிட்டு வாறன்." செல்ல, நகர்ந்துவிட்ட வாகனத்தைப் பார்த்திருந்துவிட்டு உள்ளே வந்தாள், இலக்கியா.

அறைக்குள் நுழைந்த வேகத்தில் கவியும் இளையவர்களும் குளியலறைகளைப் பிடித்துக்கொள்ள, “அப்ப நீயும் வாம்மா, கடைக்குப் போயிட்டு வருவம்.” என்று சுகுணா சொன்னதும் வந்தவள் மனதில், வேந்தனோடு நான்கு வார்த்தைகள் கதைக்கக் கிடைத்தால் என்றதொரு ஏக்கம்! அதற்குக் கிடைக்காவிட்டாலும் மேலும் அரை ஒரு மணித்தியாலம் அவனருகில் கழிக்கலாமே! ஸ்கை வோக்கில் ஏற்பட்ட ஏமாற்றமும் கவி சார்பாக எழுந்த மனக்குழப்பமுமாக கடந்த கணம் வரை இருந்தவள், அரிதாகக் கிடைத்த இச்சிறுபொழுதை அவன் பார்வையில் கழிக்க நினைத்தால்...

சர்ரென்று வாகனத்தை எடுத்துச் சென்றவனுக்குக் தன்னில் மனவருத்தம் என்பதும் புரிந்ததில் அவளுள்ளே கலக்கம்! வெளிக்காட்டிக்கொள்ளாது நகர்ந்தாள்.

"அம்மா நான் இந்தப் பக்கமாப் பார்க்கிறன், நீங்க அந்தப்பக்கமா வாங்கவன். கெதியா வாங்க வேண்டியதுகள வாங்கலாம்.” ஒரு கைவண்டிலை எடுத்தபடி இலக்கியா சொல்ல, “அதுவும் நல்லதுதான்.” என்று நகர்ந்த சுகுணா எடுத்த வண்டிலைத் தள்ளிக்கொண்டு சென்றார், நாதன்.

மனம் எது எதுவோ முணுமுணுத்தபடி கிடந்தாலும் அதைக்கடந்து, வாங்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டு வந்தவற்றைப் பார்த்தெடுத்து வண்டிலுக்குள் போடுவதும் நகர்வதுமாக சென்றவள், ஓரிரு நிமிடங்களுக்குள்ளேயே, "நீர் எடுக்க வேண்டயதுகள எடும், நான் தள்ளிக்கொண்டு வாறன்." என்ற குரலோடு வண்டிலில் படிந்த கரத்தைப் பார்த்துவிட்டு நின்று திரும்பினாள்.
 

ரோசி கஜன்

Administrator
Staff member
“டோய்...என்ன பார்வை இது?! ஸ்கை வோக்கில வச்சு நல்ல சந்தோசமா எல்லா நிண்டனீர்? பிறகு நீராத்தான் விலகி விலகி ஓடினீர்! நீர் எப்பப் பார்ப்பீர், சின்னதா சிரிப்பீர் எண்டு பார்க்கிறதே எனக்கு வேலையா இருக்கு!" சொன்னவன் குரலில் அவனையும் மீறிக் கசிந்திருந்தது, சலிப்பு!

பட்டென்று அவன் கரத்தைத் தட்டி விட்டபடி நகர முயன்றாள்.

'கண்ணுக்கு முன்னால என்ன நடக்குது எண்டு உண்மையாவே இந்தாளுக்கு விளங்கேல்லையோ!' எண்ணிய மனம், 'நான் தான் தேவையே இல்லாமல் கண்டபடி எல்லாம் நினைக்கிறனோ!' சட்டென்று கலக்கமும் கொண்டது.

'கவிக்கா சும்மா கதைக்கிறதும் எனக்குப் பிழையாய் படுதோ!' எண்ணிக்கொண்டே அவனைப் பார்க்க, அவளையேதான் பார்த்துக்கொண்டு நின்றானவன்.

"என்ன பிரச்சினை இலக்கி? சொன்னாத்தானே தெரியும். என்ன குழப்பம்?" கேட்ட வேகத்தில், "கிடைக்கிற சின்ன சின்ன சந்தர்ப்பங்களிலும் பார்த்துப் பார்த்து உம்மைத் தேடி வந்தா நீர் இப்பிடித்தான் என்னை அசட்டை செய்யிறீர்!" தொடர்ந்தவன் குரலில் மீண்டும் அவன் முகம் பார்த்தவள் விழிகள் கலங்கிப் போயின.

"பச்! இப்ப என்னத்துக்குக் கண் கலங்கிறீர்?"

"நான் ஒண்ணும் விலகிப் போகவும் இல்ல, இப்ப கண் கலங்கவும் இல்ல." முறைப்போடு சொன்ன வேகத்தில், “நீங்க மற்றவையோட பிசியா நிண்டீங்க, அதான் விலகி வந்தன்." என்றபடி பொருட்கள் எடுக்கும் சாட்டில் திரும்பியிருந்தாள்.

தன் மனதின் சந்தேகம் மட்டும் அவனுக்குத் தெரிய வந்தால்... அது பெரும் கேவலமாகத் தெரிந்தது, அவளுக்கு.

அவனுக்கோ தன் நினைப்பு சரியென்றானது. கவியை, தன் இலக்கியாவின் சகோதரியாகவே பார்த்தானவன். எல்லோரோடும் கதைப்பது சிரிப்பது போலவேதான் நடந்து கொண்டான். அது இவளைப் பாதித்திருக்கு!

"டோய் என்ன சேட்டையா?" அவள் தோள் பற்றித் தன்னை நோக்கித் திருப்பியிருந்தான். அருகில் நின்றவர்கள் முறுவலோடு பார்த்துவிட்டு நகர, முறைத்தபடி விலகி நின்றவள், "அங்கால அம்மாவும் சித்தப்பாவும் நிக்கீனம் வேந்தன்; எப்பயும் இங்க வரலாம், நினைவு வச்சிருங்க!" சிடுசிசிடுப்பு!

"வரட்டும் வரட்டும், பிரச்சின இல்ல." வெடுக்கென்று சொல்லிவிட்டவன், "நானா ஆரிட்டையும் கதைக்கிறதுக்குப் போறதில்ல இலக்கி, அவையா வந்து கதைச்சா கலைச்சு விடவா ஏலும்? எல்லாம் நம்மட முகராசி!" தன் முகத்தை வட்டமிட்டுக் காட்டி வசீகரமாகச் சிரித்தவன் முகத்தில் தரித்து நின்றது, அவள் பார்வை.

"என்னடா ...நீரே சொல்லும், நீர் என்னட்ட சிலுப்புறது போல நான் அவேட்ட செய்ய ஏலுமா?" தாழ்ந்த குரலில் கேட்டவன் உதடுகளில் முறுவல்!

சட்டென்று நீர் மணிகள் உருண்டு விழ, "எனக்கு...எனக்கு பயமா இருக்கு வேந்தன்!" சொன்னவள் உதடுகள் அழுவேனாம் என்று துடித்தன.

"பச் இலக்கி...என்ன இது?" அவள் கரமிரண்டையும் பற்றிக் கொண்டவனுள் அவளை அணைத்து தம் உறவினுள் பயத்துக்கு அவசியமில்லை என்றுணர்த்தும் ஆவலெழுந்தது. சுற்றத்தைத் துளாவித் திரும்பிய விழிகள் அவன் மனதுக்குத் தடாவும் போட்டுவிட்டன.

"உனக்கு... என்னில நம்பிக்கை இல்லையா இலக்கி?"

"என்ன நீங்க? நம்பிக்கை இல்லாமல் தான்..." முறைத்தாள். கரத்தை விடுவித்துக் கண்களைத் துடைத்தபடி, "முன்னப் பின்ன கண்டிராத உங்கள ..." மிகுதியைச் சொல்லவில்லை, முறைப்போடு பார்த்தாள்.

"பிறகு என்ன? இன்னும் ரெண்டு நாளில பயணம் முடிஞ்சு, பிறகும் நாலைஞ்சு நாட்கள் சான்ஸ்பிரான்ஸ்சிஸ்கோவில நிப்பீங்க தானே? அங்க இருந்து கனடா திரும்பிப் போகேக்க உமக்கு நான் எனக்கு நீர் எண்டு எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்...இது ப்ராமிஸ்!" என்றவன் விழிகள் பளிச்சிட்டன.

அவன் சொன்ன வார்த்தைகளும் அந்தக் குரலும் மீண்டும் அவள் விழிகளை கலங்கடித்திருக்க, மறைத்துக்கொள்ளும் வகையில் சட்டென்று திரும்பி அங்கிருந்த பிஸ்கட் பக்கட்டுகளில் தமக்குத் தேவையானவற்றைத் தெரிந்தெடுக்கத் தொடங்கிவிட்டாள்.

"டோய்! அதுக்கு முதல் நீர் எனக்குச் சொல்ல வேண்டியத்தைச் சொல்லிவிடும்." சீண்டல் குரலில் திரும்பி அவனை ஏறிட்டபடி எடுத்த பிஸ்கட்டுகளை வண்டியில் வைத்துவிட்டு மெல்ல நகர்ந்தவள், "எனக்கு எண்டா...உங்களிட்ட சொல்ல... அப்பிடியொண்டும் இல்லயே!" விழிகள் சுருங்கச் சிரித்தபடி இரகசியமாக இழுத்துச் சொன்னவளை என்ன செய்வது?

"சொல்வீர் சொல்வீர்...கேட்க வேணும் எண்டு எனக்கு இருக்கு!" முறைப்போடு சொன்னானவன்.

மெல்ல முறுவலித்தாள், இலக்கியா. அச்சிறு முறுவல் அவள் முகத்தை பளிச்சென்று ஆக்கியிருந்தது. அவன் பார்வை அவள் முகத்தையே வட்டமிட்டது. சுற்றிலும் அந்நியர் பலர் இருந்தாலும் ‘ஏன்டா அவளை பார்க்கிற?’ என்று கேட்க மாட்டார்களே! இதையே அவள் குடும்பம் இருக்கையில் முடியுமா என்ன? மனதாரப் பார்வையால் வருடினான்.

அதில் முகம் மேலும் பளிச்சிட, "வாங்க..." வண்டிலைத் தானுமொரு கரத்தால் பற்றி நடந்தபடி, "வேந்தன்...உண்மையாவே உங்களோட நிறைய நாளா பழகினது போலவே இருக்கு. அதேநேரம்...எப்பிடி இதெல்லாம்...நம்பவும் ஏலாமல் இருக்கு. அண்டைக்கு அந்த மோலில டிம் ஹொட்டன்ல ஏன் அப்பிடிப் பார்த்துக்கொண்டு நிண்டீங்க? முதலே என்னைத் தெரியுமா என்ன?" கேட்க வேண்டும் என்று நினைத்து நினைத்து சந்தர்ப்பம் அமையாத கேள்வியைக் கேட்டாள்.

“ஹா...ஹா...ஹா...” பலமாகச் சிரித்தவனை, சுற்றத்தில் நின்றவர்கள் திரும்பிப் பார்த்து முறுவலித்தார்கள்.
 

ரோசி கஜன்

Administrator
Staff member
"அய்யோ! ஏன் இப்பிடிப் பெரிசாச் சிரிக்கிறீங்க?" என்றவள் முகத்திலும் முறுவல். "சொல்லுங்க வேந்தன் முதலே என்னைத் தெரியுமா?" மீண்டும் கேட்டாள்.

"இல்ல, அண்டைக்குத்தான் முதல் முதல் கண்டனான்." என்றவன் விழிகளில் சீண்டல்.

“பொய் எண்டு உங்கட பார்வை சொல்லுதே!"

“உண்மையாவே அண்டைக்குத்தான் கண்டன். ஆனா, அந்த டிம் ஹொட்டனில இல்ல." என்றுவிட்டு, சிரிப்போடு, அவள் மோதிவிட்டுச் சென்றதைச் சொல்ல, "வேந்த...தன்!" முழியை உருட்டிக்கொண்டு நின்றுவிட்டாளவள்.

"அண்டைக்குக் கவினப் பிடிக்க ஓடேக்க ஆரிலோ இலேசா மோதினன் தான். வேற ஒண்டும் நினைவில்லை. உங்களிலா?"

"ஹலோ ஹலோ! இலேசா மோதினீங்களோ! இத மட்டும் என்ர ஃபிரெண்ட் கேட்கோணும் நீங்க சரி! அண்டைக்கே அவ்வளவு ஏசிக்கொண்டு நிண்டவன் தெரியுமா?" சிரித்தான் வேந்தன்.

"ஓ! மோதிட்டு ஒரு சொறி சொல்லாமல் போய்ட்டாள் எண்டு டிம் ஹொட்டணில ஒரு மாதிரிப் பார்த்தீங்க சரி; பிறகு, கையத் தவறிப் பிடிச்சது நான் எண்டாலும் பக்கத்தில வேணும் ஏண்டா வந்து நிண்டீங்க?" அவள் முறைப்போடு கேட்க, இப்போது முறைப்பது அவன் முறையாயிற்று.

"நினைப்பு நினைப்பு! நான் என்பாட்டில நிண்டன் தெரியுமா? உம்மை மறந்திட்டுச் சரியா? நீர் தான் நீ எப்பிடி மறக்கலாம் எண்டு கையைப் பிடிச்சது. பிறகும் எங்கட கொட்டேஜில வந்திருந்து..."அவன் சொல்லிக்கொண்டே சென்றான்.

அவள் முகம் சிவந்திட்டு! “நான் உண்மையாவே தவறித்தான் கையைப் பிடிச்சன், சித்தி எண்டு நினைச்சு ." சொன்னவள் கரம் சட்டென்று அவன் கரத்தைப் பற்றிக் கொண்டது, உரிமையோடு!

நின்று அவள் முகம் பார்த்தவன், "மோதலில் ஆரம்பிச்ச உணர்வு இது...பிறகு விதி சேர்த்து வச்சிருக்கு!" சிரித்தான்.

“எக்ஸ்கியூஸ் மீ” அவர்கள் பின்னால் வந்து கொண்டிருந்த பெண்மணிக்குப் பொறுமை பறந்திருக்க, முன்னே செல்ல முயன்று கேட்டார். சட்டென்று விலகி வழிவிட்டு நகர்ந்தார்கள்.

"நீங்க அண்டைக்கு போட்டில வர நான் என்ன எல்லாம் நினைச்சுப் பயந்தன் தெரியுமோ!" அவள் சொல்ல, அந்த நாள் நினைவில் வாய்விட்டு சிரித்தவனையும் இலக்கியாவையும் கண்டனர், எதிர்ப்புறமிருந்து வந்த சுகுணாவும் நாதனும்.

"தம்பி இங்கயா நிக்கிறீங்க? நான் காணேல்ல எண்டதும் காரில எண்டு நினைச்சன்." நாதன் சொல்ல, "என்ன ரெண்டு பேரும் சந்தோசமா சுமுகமாக் கதைக்கிறீங்க? மழை வரும் போல இருக்கே!" என்ற சுகுணாவின் குரலில் நக்கல்.

"அம்மா நீங்களுமா?" இலக்கியா சிணுங்க, வேந்தன் பார்வை அவள் முகத்தில்.

அவள் அதையுணர்ந்த மறுநொடியே, “டிரிங்ஸ், தண்ணிக் கேஸ் எடுக்க வேணும் தானே, அங்க இருக்கு." விசுக்கென்று நகர்ந்து தண்ணீர் கேஸை எடுக்க, “வையும் எத்தின எடுக்க எண்டு சொல்லும்." அவளிடமிருந்து வாங்கி வண்டிலில் வைத்தான், வேந்தன். இலக்கியாவோ கர்மசிரத்தையாக குளிர்பாணத் தெரிவிலிருந்தாள்.

“அது சரி அப்படி என்ன கதைக்குச் சிரிச்சீங்க? சொன்னா நாங்களும் சிரிப்பமே!" சுகுணா அந்த இடத்தையே பிடித்துக்கொள்ள, "வேற என்னத்துக்கம்மா, அவர் இந்த ரெண்டு கிழமையும் கார் ஓடினதுக்கு ஸ்டார் ரேட்டிங் ‘ஒண்டு’ குடுத்தன். அந்த சந்தோசத்தச் சிரிச்சுக் கொண்டாடுறார்." அவன் முகத்தை மின்னலாகப் பார்த்துவிட்டு முன்னால் நகர்ந்தே விட்டாள்.

"அதானே பார்த்தன், நானும் என்ன ஃபிரெண்ட்ஸ் ஆகியாச்சு எண்டு நினைச்சன்."

"ஆன்ட்டி நாங்க நல்ல ஃபிரெண்ட்ஸ் தான், வெளில காட்டிக்கொள்ள மாட்டம் என்ன இலக்கியா?" வேந்தன் குரல் கேட்டது போலில்லாது நகர்ந்தாலும் முகமும் மனமும் நிறைந்திருந்தது அவளுக்கு.

அதுவே, மறுநாள் காலைப்பயணத்திலும் தொடர்ந்தது.
 
Top Bottom