• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அத்தியாயம் 34

ரோசி கஜன்

Administrator
Staff member
“சரி பிள்ளைகள் இனி மற்றதப் பார்ப்பமே!” மாறன் சொல்லிவிட்டு முன்னால் செல்ல, அடுத்த கண்காட்சிக்கு (Hall of the shy exhibits) நகர்ந்தார்கள்.

உள்ளே நுழைந்ததும், சுழலும் புவியுருண்டை மற்றும் வெவேறு நாட்டு நேரம் காட்டும் கடிகாரங்கள் கொண்டு இரவு பகல் பற்றி விளக்கப்பட்டிருந்தது.

அடுத்து, ஒரு அரைவட்டக் குட்டித்திரையிருந்தது. பார்த்ததும் தெளிவாகத் தெரியும் பூமியின் கோள வடிவமும், அசையாதிருந்த ஆய்வகக்கட்டிடத்தின் மேலே நீலவானில் நிலவு போல் அசைந்து நகரும் சூரியனும், அது மறைந்ததும் நட்சத்திரங்கள் ஜொலிக்கும் வானத்தின் நகர்வும் எல்லோருக்குமே ஆச்சரிய உணர்வைத் தந்தது. தெரியாத, கேள்விப்படாத விசயமில்லையென்றாலும் பார்க்கையில் ‘வாவ்’ போடாதிருக்கவும் முடியவில்லை.

“எனக்கு எண்டா நாம இப்ப ஸ்பேசில நிக்கிறது போல இருக்கு!” வாய் பொத்தி ஆச்சரியப்பட்டாள், ராஜியின் மகள்.

“அதான்.” அவள் சகோதரன். மீண்டும் மீண்டும் பார்த்துவிட்டே அவ்விடம் விட்டு நகர்ந்தார்கள்.

அடுத்து, பால்விதியில் சூரியனும் கோள்களும் நட்சத்திரங்களும், பருவகால மாற்றங்களின் மாதிரி எண்டு பார்த்துக்கொண்டே கடந்தவர்கள் சூரியன் பற்றிய விளக்கங்களோடு அங்கிருந்த சோலார் தொலைநோக்கி மூலம் ஆதவனை நேரடியாகவே பார்க்கவும் முடிந்தது. ஒற்றைக் கண்ணால் பார்க்கையில் பெரிய நிலவு போலிருந்தாலும் அப்போது கூட அது துளியும் குளிர்மையை உணர்த்தவில்லை. அருகில் ஒரு திரையில் ஆதவனின் அருகாமைக் காட்சியில் அதன் மேற்பரப்பில் குமிழி குமிழியாகக் கொதிப்பதைப் பார்க்க முடிந்தது.

அந்நேரம் வேந்தனின் கைபேசியின் கிணுகிணுத்தது. "மதி ட கோல்..." கைப்பேசியைப் பார்த்தபடி சொன்னவன், "அங்கிள், இங்க பார்த்திட்டு வாங்க, நான் மேல நிக்கிறன். அங்க பார்த்திட்டுக் கீழ போகலாம்." என்றுவிட்டு வெளியேறிவிட்டான்.

குட்டி குட்டிக் கண்ணாடிப் பெட்டிகளுள் நம் உடலிலுள்ள கூறுகளும், அல்லாத தனிமங்களும்(எலிமென்ட்ஸ்) பேர்களோடு வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்துவிட்டு நகர்ந்தவர்கள், சந்தர்ப்பம் பார்த்திருந்து விருட்டென்று வெளியேறிவிட்ட கவியைக் கவனிக்கவேயில்லை. அந்தளவுக்குக் கிரகணங்களின் உருவாக்கம் பற்றிய கண்கவர் விளக்கங்களிருந்தன.

அதற்கப்பால், கிரகணங்களின் தோற்றம் பற்றிய விளக்கம், கடலலைகளில் ஏற்படும் மாற்றங்கள் (Tides) பற்றிய விளக்கங்கள், முழுமதி மெல்ல மெல்ல தேய்ந்து செல்லும் மாதிரி விளக்கமென்று ஒவ்வொன்றும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் வகையிலும் கவரும் வகையிலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

இப்படி இவர்கள் பார்த்துக்கொண்டிருக்க, வேந்தன் எங்காவது தென்படுகிறானாவென்று பார்வையைச் சுழற்றியபடியே வந்த கவி, மேலே செல்லும் படிகளின் முடிவில் பக்கச்சுவரில் சாய்ந்தபடி நின்று கைபேசியில் கதைத்துக் கொண்டிருப்பவனைக் கண்டுவிட்டு வேகமாக ஏறினாள்.

சற்றே தூரத்தில், தென் கலிபோனியா கடற்கரை மலைதொடரான ‘சன்டா மோனிகா’ மலைத்தொடரின் ‘ஹொலிவுட் மலை’ப்பகுதியிலுள்ள ‘லீ மலையில்’ பளிச்சென்று தெரிந்தது, ‘ஹொலிவூட் சின்னம்’! அப்பகுதி முழுவதுமாய் வானை முட்டுமளவில் பரந்திருந்த அம்மலைச் சுற்றத்தை விழிகள் உள்வாங்குவதில் மும்முரமாகவிருக்க, மதியோடு உரையாடிக்கொண்டிருந்தான், வேந்தன்.

"என்ன நடக்குது அங்க? இன்னும் ரெண்டு நாள் தானே, சோகமா இருப்பீங்களே! பேசாம திருப்பி அங்க இருந்து கூட்டிக்கொண்டு உலா வரலாமே!" கடியோடு ஆரம்பித்திருந்தான், மதி.

"போடா டேய்...நானே ரெண்டு நாள் எப்ப முடியும் எண்டு இருக்கிறன். வீட்டில சொல்லி இலக்கி வீட்டில கதைச்சிர வேணும்."

"பார்றா! கலியாணம் பேச பேசச் சாட்டுச் சொன்ன வேந்தனா இது!" மீண்டும் பரிகாசம் செய்த மதி, "நான் இப்ப ஏன் எடுத்தன் ஏண்டா... பெரியம்மா எடுத்தா..." ஆரம்பித்தான்.

“ஓ! நேற்றிரவு கதைச்சன். இரவுக்கு எடுக்கிறன் எண்டும் சொல்லி இருந்தன். என்னவாம்?"

"இல்ல...இலக்கியா பற்றிச் சொல்லிட்டியா?"

"இப்பத் தானே சொன்னன். போய்த்தான் சொல்ல வேணும்." தொடங்கிய வேந்தன், "ஏன் மதி? இவன் வினித்துக்குத் தெரியும்...சொல்லிப் போட்டானோ!" என்ற வேகத்தில்," இல்ல இல்ல அவன் சொல்லியிரான். சொல்ல வேணாம் எண்டு சொன்னனே." என்றான், யோசனையோடு.

"ஓ! அப்ப சும்மாவும் கேட்டிருக்கலாம். இங்க வந்து போனபிறகு ரெண்டு நாள் எடுத்து எதுக்கு அவன் காரோடிக்கொண்டு வரவேணும் எண்டு கேட்டவா எண்டு சொன்னன் தானே?”

“ஓம்!”

“அண்டைக்கே, பெரியம்மாவ சமாதானம் செய்ய வெளிக்கிட்டு ‘அவன் ஒண்ணும் சும்மா வெளிக்கிட இல்ல’ எண்டு வாய விட்டன் வேந்தன். ‘அப்படியெண்டா...எனக்கு விளங்கேல்லையே’ எண்டு பிடிச்சிட்டார். அவனுக்கும் இப்பிடிப் பயணங்கள் விருப்பம் எல்லா அதைத்தான் சொன்னன் எண்டு சொல்லிட்டன். அதுக்கு அவர் ‘என்னவோ போ... ஒரு கலியாணம் செய்து மனிசி பிள்ளைகள் எண்டு சுற்றாமல் ஊராரக் கூட்டிக்கொண்டு என்ன சுத்தல் வேண்டிக்கிடக்கு!’ எண்டு அப்பவே சொன்னவா. இப்ப எடுத்து ரெண்டு நாள் தங்கியிருந்தவே தானே, ஆக்கள் எப்பிடி அப்பிடி இப்பிடிச் சும்மா கதையோட கதையாத்தான் கேட்டவா. கவியோட கதைச்சிருக்கிறா போல... அதெல்லாம் சொன்னா."

"ம்ம்ம் ...பிறகு..."

"உனக்கு ஒரு பொம்பள பார்த்திருக்கிறாவாம் எண்டும் சொன்னா வேந்தன். தங்களுக்கு நல்லா பிடிச்சிட்டாம். தனக்கு அவா தான் மருமகள் எண்டும் சொன்னாவா... அதுக்கு நான், வேந்தன் ரெண்டு நாளில வந்தபிறகு என்ன எண்டாலும் முடிவெடுங்க பெரியம்மா, அவசரப்படாதீங்க எண்டு சொல்லிப் போட்டன்."

"ம்ம் ..." என்ற வேந்தனுக்கு வினித் போட்டுடைத்துவிட்டானோ என்றிருந்தது.
 
Last edited:

ரோசி கஜன்

Administrator
Staff member
"அதுக்கு ஏன் அப்பிடிச் சொல்லுற எண்டு கேட்டுக் குடைஞ்செடுத்திட்டா. பேசாமல் சொல்லி விடுவமா எண்டளவுக்கு இருந்திச்சடா. ஆனாலும் நான் சொல்லேல்ல. அதையிதைச் சொல்லிச் சமாளிச்சு வச்சிட்டன். ‘இவ்வளவு நாளும் அவனிட விருப்பம் முக்கியம் எண்டு இருந்திட்டு இப்ப எப்பிடி நீங்களா ஒரு பொம்பிளையப்ப்பார்த்து மருமகள் எண்டு முடிவெடுக்கலாம் எண்டு’ பகிடி பகிடியா சொல்லியிருக்கிறன். அப்பத்தான் இலக்கி பற்றி தெரிஞ்சு கேட்கிறாவோ எண்டு சந்தேகம் வந்திச்சு."

"இருக்காது எண்டு நினைக்கிறன். சும்மாதான் கதைச்சிருப்பா. எதுக்கும் இரவுக்கு நான் கதைக்கேக்க தெரியப் போகுது விடு!" அவன் சொல்லிக் கொண்டிருக்கையில், அருகில் யாரோ வந்து நின்ற உணர்வில் திரும்பினான். கவிதான்.

"சரி மதி பிறகு கதைப்பம்." அழைப்பைத் துண்டித்தவன், "அதுக்கிடையில எல்லாம் பார்த்தாச்சா?" கேட்டபடி, மற்றவர்கள் வருகிறார்களாவென்று கீழே எட்டிப் பார்த்தான்.

"இல்ல...பார்த்துக்கொண்டு வருகினம். நான்...எனக்கு...உங்களோட கொஞ்சம் கதைக்க வேணும், அதான் வந்தனான்." சற்றே தடுமாற்றமாகத் தொடங்கினாலும் கவியின் விழிகள் வேந்தன் முகத்தில் நிலைத்து நின்றிருந்தன!

அப்பார்வையைச் சந்தித்த கணம் வேந்தன் மனம் திடுக்கிட்டு விட்டது என்றுதான் சொல்லவேண்டும். மீண்டுமொருமுறை கீழே எட்டிப் பார்த்தான். அவர்கள் வந்துவிட மாட்டார்களா என்ற தவிப்பு வேக வேகமாக வந்தொட்டிக்கொண்டது. இருந்தபோதும் அதைக் காட்டிக்கொள்ளாது, "சொல்லுங்க, என்ன கவி?" வினவினான்.

"எனக்கு உங்களோட இலக்கியா அப்படி டீஸ் பண்ணுறது போல கதைக்கிறது பிடிக்கேல்ல. அதனாலதான் ஒவ்வொரு முறையும் அவளக் கண்டிச்சன்." பட்டென்று இப்படிச் சொன்னதும் மீண்டும் அவன் நெற்றி சுருங்கியது. விழிகளில் கடினமேறியது. கவியால் அதைத் துல்லியமாக உணர முடிந்தது. இருந்தாலும் அவள் சொல்ல வந்ததைச் சொல்வதிலிருந்து பின்வாங்கவில்லை.

“அவள் அப்பிடிக் கதைக்கிறது உங்களுக்கும் மற்றவேக்கும் பகிடியாத் தெரியலாம். எனக்கு அப்பிடித் தெரியேல்ல. அதுக்காகச் சொல்ல, நீங்க ..." என்கையில், அவள் கண்கள் கலங்கிவிட, நன்றாகவே அந்தரப்பட்டுவிட்டான், வேந்தன்.

"அதுதான் சொன்னனே, நானும் ரோட்டு மிஸ் பண்ணின டென்ட்சனில இருந்தன் எண்டு." என்றவன், “அதோட அவா உங்கட தங்கச்சி. நான் நேற்றுத் தெரிஞ்சவன்..." சொல்லிக்கொண்டுவர அவசரமாக இடையிட்டாள், கவி.

“நேற்றுத் தெரிஞ்சவரோ இண்டைக்குத் தெரிஞ்சவரோ எனக்கு அவள் அப்பிடிக் கதைக்கிறது பிடிகேல்ல வேந்தன். அவளெண்டு இல்ல ஆர் அந்த இடத்தில இருந்திருந்தாலும் இப்பிடித்தான் சொல்லியிருப்பன்." என்றவள் பார்வை மீண்டும் அவன் பார்வையில் தரித்து நின்றது.

"சொறி கவி, உங்கள நான் ஹெர்ட் பண்ணியிருந்தா திரும்பவும் சொறி!" என்றவன் முகம் முழுவதுமாக இறுகியிருந்தது.

"அய்யோ...இப்ப நீங்க சொறி சொல்ல வேணும் எண்டு..." ஆரம்பித்தவளைத் தொடரவிடவில்லை அவன்.

"என் சம்பந்தமா நீங்க அந்தளவுக்கு ரியாக்ட் செய்யத் தேவையில்லை எண்டுதான் இப்பவும் சொல்லுவன். இத்தின நாட்களில ஒரு முறை கூட என்ர மனசக் கஷ்டப்படுத்திறது போல இலக்கியா கதைக்கேல்ல." என்றவன் குரலில் இருந்த ஏதோவொன்று கவிக்குக் கோபத்தைத்தான் உண்டு பண்ணிற்று.

அதுவே, அவனோடு தொடர்ந்து கதை வளர்க்கும் விருப்பத்தையும் அற்றுப் போகச் செய்திட்டு!

"என்ர மனசில இருந்ததைச் சொல்ல நினைச்சன் வேந்தன். பொறுமையா யோசிச்சுப் பார்த்தா நான் என்ன சொல்ல நினைக்கிறன் எண்டு நல்லாவே விளங்கும், நான் போறன்." விறுவிறுவென்று அப்பால் நடந்து மக்களோடு மக்களாகக் கலந்து விட்டாள். அவன் தான் திகைப்போடு அப்படியே நின்றிருந்தான்.

‘இதென்னடா புதுப்பிரச்சினை?!’ மனதுள் ஆடிப்போய்விட்டான். ‘கவி...நானும் இலக்கியாவும் ஒருத்தர ஒருத்தர் விரும்பிறம்.’ தாமதிக்காது சொல்லிவிட்டால்! அவள் சென்ற பக்கமாக நகர்ந்தவனை, ‘வேந்தன் ணா கவிக்காவ கண்டீங்களா? இங்க ஆளையே காணேல்ல.” ஆரூரன் குரல் நிறுத்தியது.

“கவி...இங்கதான்... இதால போனா.” தடுமாறியபடி சொன்னவன், “நீங்களும் வாங்க இங்க பார்த்திட்டுக் கீழ போகலாம்.” என்று, மேலே வந்தவர்களோடு சேர்ந்து நகர்ந்தவனால் அதன்பின் தன்னியல்பாக இருக்கவியலவில்லை.

படிகளில் ஏறிவரும் போதே, வேந்தனைத் தொட்ட முதல் பார்வையில் அவன் முக இறுக்கத்தைக் கணக்கிலெடுத்துகொண்டது, இலக்கியாவின் உள்ளம்.

'மதி அண்ணா ஏதாவது சொன்னாரோ!' என்ற யோசனைதான் முதலில் தோன்றிற்று. சுற்றுப்புறத்தைப் புகைப்படமெடுக்கும் சாட்டில் தயங்கி நின்று கடைசியாக ஏறி வந்தவள், அவனும் தனக்காகத் தயங்கி நிற்பானென்றே எதிர்பார்த்தாள். அவனோ, ஆருரனோடு நகர்ந்துவிட்டான்.

"வாவ்! கீழ இருந்து பார்த்தத விட வடிவா இருக்கே!" இரசித்துச் சொன்னாள், அஜி.

அம்மதியப்பொழுதிலும், முன்புறமாகப் பரந்து விரிந்திருந்த ‘லொஸ் ஏஞ்சல்ஸ்’ டவுன் டவுனின் முழுமையான தோற்றம் மிக மெல்லிய புகாருள் அழகிய ஓவியமென மிளிர்ந்து கொண்டிருக்க, சுற்றி அமைந்திருந்த மலைத் தொடரும் வானும் சேர்ந்து அவர்களின் விழிகளுக்கு இரசனையை அள்ளி வார்த்துக்கொண்டிருந்தது.
 

ரோசி கஜன்

Administrator
Staff member
"கவி..." அவளைக் கண்டுவிட்டு அழைத்தார், சுகுணா. அவர்களை நோக்கி வந்தவள் பார்வை முதலில் வேந்தனில்தான் தங்கி விலகியது. அவனோ, கர்மசிரத்தையாக டவுன் டவுனைப் புகைப்படமெடுத்துக்கொண்டு நின்றான்.

"என்னம்மா நீ சொல்லாமல் கொள்ளாமல் இங்க வந்து நிக்கிற? நாங்க அங்க தேடினம்." சின்னக் கண்டிப்போடு சொன்னார், நாதன்.

"அங்க நான் பார்த்திட்டன் சித்தப்பா அதான் வந்தன். இப்ப என்ன துலைஞ்சா போகப் போறம்!" என்றவள், "வெளில வந்துதான் நிண்டன், வேந்தன் மேல நிண்டார் அதுக்குப் பிறகுதான் மேல வந்தன்." சொல்லிக்கொண்டே சென்றவள், "வேந்தன் நாங்க எல்லாரும் நிக்கிறம் அப்படியே டவுன் டவுனைக் கவர் பண்ணி ஒரு ஃபோட்டோ!" அவன் கண்களை நேராகச் சந்தித்தபடியே புகைப்படக்கருவியை நீட்ட, எவ்வித உணர்வும் காட்டாத முகத்தோடு வாங்கிக்கொண்டவன் சில புகைப்படங்களையும் எடுத்தான்.

"நீங்களும் நில்லுங்க அண்ணா, செல்ஃபி எடுப்பம்." ஆரூரன்.

வழமையாகவென்றால் இலக்கியா எங்கே நிக்கிறாளென்று பார்த்துவிட்டு, 'தாரும் நான் எடுக்கிறன்.' என்று நகர்ந்து, 'இங்க நிக்கத்தான் பின்னால வியூ நல்லா இருக்கு' என்று தொடங்கி ஏதோவொரு சாட்டுச் சொல்லிவிட்டுப் படங்களைத் தட்டுவானே. இப்போதும் அதை எதிர்ப்பார்த்தது, இலக்கியாவின் மனம். அவனோ, அமைதியாக நின்றுவிட்டான். கடைசி நிமிடத்தில், நகர்ந்து அவனருகில் நின்றுகொண்டது கவியேதான்.

அங்கு, நான்கு இடங்களில் வைக்கப்பட்டிருந்த தொலைநோக்கிகள் நோக்கி நகர்ந்த ராஜியின் பிள்ளைகளும் கவினும் அச்சுற்றத்தை அருகிலிழுத்துப் பார்க்க முனைந்தார்கள்.

“உள்ள போய் ‘சயிஸ் டெலஸ்கோப்’ இருக்கு பார்க்கலாம் என்ன அண்ணா?" ஆரூரன் கேட்க, "ம்ம்ம்... அதுக்கு இரவு தான் சரியான நேரம்." என்று வேந்தன் சொல்ல, "அப்ப நாங்க இரவு வரை நிப்பம்." அருகில் வந்து சொன்னாள், கவி. இயல்பாக நகரும் சாக்கில் நகர்ந்தான், வேந்தன். அவளும் நகர்ந்தாள்.

"அது சரி ...ஆரோ ஷொப்பிங் போற கதை கதைச்சவே!” கவி சொன்னதுக்கு அஜி சீண்ட, "சரி விடுங்க, இன்னொரு முறைக்கு இரவில பார்க்க வந்திட்டாப் போச்சு." என்றவள், "என்ன வேந்தன், கூட்டிக்கொண்டு வருவீங்க தானே?" பகிடி போலத்தான் கேட்டாள். வேந்தனுக்குத்தான் எரிச்சலாகிற்று.

"அண்ணாவ வச்சே உலகம் சுத்துற பிளான் போடுறா கவிக்கா...அண்ணா கவனம்." ஆரூரன் பகிடியாகச் சொல்ல, சின்னச் சிரிப்பொன்றை மட்டும் உதிர்த்தவன் மெல்ல நகர்ந்து விட்டான்.

பயண ஆரம்பித்ததிலிருந்து அவர்களை விட்டு விலக்காதிருக்கச் சொன்ன வேந்தன் மனமோ, இக்கணம், ‘தூரமாய்ச் சென்றுவிடு’ என்றே உணர்த்திக் கொண்டிருந்தது. அப்பப்போ தன்னைத் தொட்டு விலகும் கவியின் பார்வை அவனுள் மிகையான எரிச்சலை உண்டு பண்ணிக்கொண்டிருந்தது.

'அவா பார்த்தா நீ ஏன் அவவைப் பார்க்கிற?' தன்னையே கடிந்துகொண்டவனுக்கு, அவன் மனம் விரும்பும் பெண்ணின் பாசத்துக்குரிய தமக்கை அவளென்பதை இழுத்துப் பிடித்து நினைவில் வைத்திருக்க வேண்டிய தேவையும் ஏற்பட்டது.

மெல்ல நகர்ந்தவன் ‘பிளனட்டேரியம்’ செல்வதற்கான நுழைவுச் சீட்டுக்களை இயந்திரத்தில் அடித்தெடுத்துக் கொண்டு வர, "எங்க தம்பி போய்ட்டிங்க?" என்றவாறே எதிர்கொண்டார், நாதன்.

"டிக்கட் எடுத்தாச்சு அங்கிள் போவமா? நேரமும் போய்க்கொண்டு இருக்கு."

"அட ...நீங்க என்ன தம்பி...எவ்வளவு முடிஞ்சிது?" தன் பேர்ஸை எடுத்தார் நாதன்.

"என்ன அங்கிள் இது...இதெல்லாமா கணக்குப் பார்ப்பீங்க?" அவர் கைபிடித்துக் கதைத்தபடி நகர்ந்தான்.

அங்கேயே இருந்த குவிமாட மண்டபத்தினுள் அமைக்கப்பட்டிருந்தது ‘பிளனட்டேரியம்’. உள்ளே செல்ல நின்ற வரிசையில் இணைந்து கொண்டவர்கள் அடுத்த இருபதாவது நிமிடமே உள்ளே நுழைய முடிந்தது. விழிகளை சுழற்றிக்கொண்டே நடுப்பகுதியிலிருந்த சொகுசு இருக்கைகளில் அமர்ந்துகொண்டார்கள்.

"நல்ல சனம்." வேந்தன் அருகிலேயே நாதன் அமர மறுபுறம் ஆரூரன் அமர்ந்திருந்தான். அவனுக்கு நேர் பின்னால் அமர்ந்த இலக்கியாவுக்கு, 'பார்க்கிறார் கூட இல்லையே!' மனதில் பெரும் சிணுக்கம். வேந்தன் முகத்தை வைத்தே அவன் இயல்பாகவில்லை என்பது புரிந்ததில் குழப்பமும் சேர்ந்து கொண்டது.

"centered in the universe, water is life, அதோட the light of the Valkyries என்ற மூன்று ஷோஸ் இருக்கு. கிட்டத்தட்ட ஒன்றரை மணித்தியாலம் வரும்." என்றான் ஆரூரன்.

'centered in the universe' இப்பத் தொடங்க போகுது. அதைப் பார்த்திட்டுப் போவம். கீழயும் பார்க்க வேணும்." கைக்கடிகரத்தைப் பார்த்தபடி சொன்னான், மாறன்.

அனைத்தையும் பார்த்துவிடும் ஆசையிருந்தாலும் பாய்ந்து செல்வதாக உணரும் நேரத்தைப் பிடித்தா வைக்க முடியும்? சம்மதித்தார்கள்.

"லா லா லேண்டில எம்மா ஸ்டோனும் ரியான் கோஸ்லிங்கும் பறந்து வந்து நட்சத்திரங்களோட நடனமாடுறது படமாக்கியது இங்கதான்." ராஜியின் மகளுக்குச் சொல்லி கொண்டிருந்தாள், இலக்கியா.

"என்ன இலக்கிக்கா நீங்களும் வேந்தன் அண்ணாவுக்கு அசிஸ்டென் ஆக்கிட்டிங்களா?" ஆரூரன் கேட்டு முடிக்கவில்லை, கவியின் பார்வை சரேலென்று தங்கையிடம் பாய்ந்தது. அவளோ, முறுவலோடு வேந்தன் திரும்புவான் என்று காத்திருக்க, குவிமாட மேற் கூரையில் பார்வை பதித்திருந்தானவன்.

குறிப்பிட்டிருந்த நேரத்தில், நிகழ்வு ஆரம்பிப்பதன் முகமாக ‘ஆண்ட்ரியா’ என்று தன்னை அறிமுகம் செய்துகொண்ட தேன்குரலொன்று அங்கிருந்தோரைக் கட்டிப் போடத் தொடங்கியது.

அவ்வட்டவடிவ மண்டபத்தின் குவிந்த கூரை முழுவதும் திரையாகியிருந்தது. சட்டென்று சூழ்ந்து விட்ட இருளும் மறுநொடியே மேலே திரையில் மின்னிய நட்சத்திரங்களும் அவர்களை அப்படியே வான் அருகே இழுத்துச் சென்றன.

அச்சூழலுக்கு மிகப் பொருத்தமாக மிருதுவாக ஒலித்த அக்குரல், ஆதவன் அஸ்தமனத்தோடு சேர்ந்து வானியல் நிதர்சனங்களை ஒன்றொன்றாக முன்னால் வைத்துக் கொண்டிருந்தது.
 

ரோசி கஜன்

Administrator
Staff member
அடுத்துக்கடந்த அரைமணிநேரம் எப்படிப் போனதென்று யாருக்குமே தெரியாவண்ணம் அந்நிகழ்வை அந்தளவுக்கு இரசித்தவர்கள் மனதில், மிகுதியிரண்டையும் பார்க்க முடியாதே என்ற வருத்தம் இருக்கவே செய்தது.

அங்கிருந்து வெளியில் வந்த வேகத்தில் நிலத்தின் கீழாக அமைக்கப்பட்டிருந்த ‘ஸ்பேஸ் ஹோல்’ மற்றும் தியேட்டருக்குச் செல்லும் நோக்கில் படிகளால் இறங்கினார்கள்.

அப்பப்போ வேந்தனோடு விழிகளால் சரி பேசிவிட முனைந்து முனைந்து தோற்றபடி இருந்த முடிந்தது. எல்லோருக்கும் முன்னால்தான் இறங்கிக் கொண்டிருந்தாலும் அருகில் வந்தவனிடம் தாழ்ந்த குரலில் கதைக்க முடிந்ததே போதுமாக இருந்தது, அவளுக்கு.

“ஏன் ஒரு மாதிரி இருக்கிறீங்க?” கேட்டவளை ஒரு கணம் பார்த்தவன் விழிகளில் நகைப்பு! ‘உன்ர அக்கா இப்பிடிச் சொல்லுறா’ என்று எப்படிச் சொல்லுவான்? மனம் அடித்துக் கொண்டாலும், அவளருகில், மனதில் சற்று முன்வரை இருந்த குழப்பங்கள் ஒன்றுமேயில்லை என்றவகையில் அகல்கின்றதே! “ஒண்டுமில்ல...” முறுவலோடு சொன்னான்.

“பொய், என்னவோ இருக்கு. மதி அண்ணா ஏதாவது சொன்னவரா?” மென்குரலில் கேட்டவள் விழிகளில் தவிப்பு! அதையுணர்ந்து கொண்டவனை, அவள் கைப்பற்றி தன்னருகே இழுக்கத் தூண்டியதுள்ளம். அடக்கிக்கொண்டான். தன் சிறு முகமாற்றத்தையும் அவள் கண்டுகொண்டாள் என்பதே அவனுக்குள் பெரும் சந்தோசத்தை தோற்றுவித்திருந்தது.

“உண்மையாப்பா ஒண்ணுமில்ல.”

“நம்ப ஏலாமல் கிடக்கே!” அவள் சொல்லிக்கொண்டிருக்கையில், “அண்ணா இது முடிய காரிலேயே டவுன் டவுன் சுற்றிப் பார்க்கலாம் என்ன?” ஆரூரன் வந்து சேர்ந்துவிட மெல்ல விலகிக் கொண்டாள், இலக்கியா.

அப்படியே உள்ளே நுழைந்து கிட்டத்தட்ட u வடிவிலிருந்த கொரிடாரினால் நடக்க ஆரம்பித்தவர்களை மெல்லப் பிடித்திழுத்தன, அதன் இடபக்கச் சுவரில் கண்ணாடித் தடுப்பின் பின்னாலிருந்த ஆபரணங்கள்.

“அப்பிடியே நீட்டுக்கும் இருக்கே!” வியந்தபடி வீடியோ எடுக்கத் தொடங்கினாள், இலக்கியா.

“எல்லாமே நகைகள் போல இருக்கு...சங்கிலி, பென்டன், தோடுகள், நெக்லஸ், புரோச் கூட இருக்கு!” அஜி.

“ஆபரணங்கள் தான்...எல்லாமே சூரிய, சந்திர கோள்கள் நட்சத்திரங்கள் வடிவில இருக்கு.” சொன்னபடி, அலைபோல் நெளிந்து வளைந்து செல்லும் ஆபரணத் தோரணத்தைப் பார்த்தவாறே நகர்ந்தான், வேந்தன்.

அப்படியே சென்று, ‘Edge of space exsibits’ பகுதிக்குள் உள்ளிட்டார்கள்.

“இந்தப்பகுதி எல்லாமே விண்கற்கள், எந்த இடத்திலிருந்து எடுத்தது எண்ட விபரங்களோட இருக்குப் போல!” கவி. வேந்தனோடு கதைத்தபின் அவள் பழைய கலகலப்புக்கு வந்துவிட்டாள்.

ஒன்றொன்றாகப் பார்த்தபடி நகர்ந்தவர்கள், அடுத்திருந்த நிலவின் மாதிரி உருவம், அது சம்பந்தமான விபரங்கள் மட்டுமன்றி நிலவிலிருந்து எடுத்துவரப்பட்ட துண்டொன்றையும் பார்வையிட்டார்கள்.

அடுத்து, விண்வெளியிலிருந்து பூமியை வந்தடையும் இரண்டாம் நிலை கதிரியக்கச் சக்திகளின் தடங்களைச் செய்முறை விளக்கமாக ‘கிளவுட் சேம்பரும்’, இதே இரண்டாம் நிலைக் கதிரியக்கச் சக்திகள் ஒவ்வொரு நொடியும் நம் உடல்கள் வழியாகக் கடந்து செல்கின்றன என்பதைக் காட்டும் வகையில் ‘ஸ்பார்க் சேம்பரும்’ அமைத்திருந்தார்கள். ஒவ்வொருவரும் அதைக் கடந்து செல்கையில் அது மின்னி மின்னி மறைந்தது.

அப்படியே அடுத்த கண்காட்சியான ‘Gunther depths of space’ இல், அத்தனை கோள்களின் மாதிரியும் வைக்கப்பட்டு அவை பற்றிய தரவுகளும் தனித்தனியாகவே இருந்தன. கண்முன்னால் இருந்த மாதிரிகளைத் தொட்டுப் பார்த்துணர முடிந்தது.

கவினுக்கு முழுமையாக விபரம் புரியவில்லை என்றாலும் மேலே தொங்கிக் கொண்டிருந்த கோள்கள் அவனை வெகுவாகக் கவர்ந்துவிட்டது.

“தூக்குங்க அப்பா தொட்டுப்பார்க்க!” மாறனிடம் மல்லுக்கட்டிவிட்டு வேந்தனிடம் பாய்ந்துவிட்டான்.

மேலே ஒருபக்கமாக, அண்டவெளியும் பால்வெளியில் சூரியனும் கோள்களும் பயணப்படும் காட்சி சிறு வட்டத் திரையில் ஒளிர்ந்து கொண்டிருந்தது. சிறியவர் பெரியவர் என்றில்லாது எல்லாரையும் வியப்போடு நின்று பார்க்கவும் வைத்ததது.

“நம்மட பூமி அவ்வளவு வேகமாகச் சுத்துதோ!” கேட்டபடி அருகில் நின்ற ரதியின் கரத்தை இறுகப் பற்றி எல்லோரையும் சிரிக்க வைத்தாள், ராஜியின் மகள்.

“இதை மிஸ் பண்ணலாமா? வாங்க வாங்க ஒரு ஒருவரா முதல் எடுப்பம்.” ஓடிச் சென்று அங்கிருந்த ஐன்ஸ்டீன் வெண்கல உருவத்தோடு ஒட்டி நின்று செல்ஃபி கிளிக்கிக் கொண்டாள், கவி.

“வேந்தன் ஃபோட்டோ ஒன்று.” அவனிடம் கமராவை நீட்ட, “தாங்க நான் எடுத்துவிடுறன்.” ஆரூரன் முந்திக்கொண்டான்.

ஒவ்வொருவராக, தனியாகவும் சேர்ந்தும் நின்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்கள்.

“இனி என்ன நல்லா நேரம் போயிட்டு. லைட்டா பசிக்கத் தொடங்கிட்டு.” நாதன் ஆரம்பிக்க, “போகலாம் அங்கிள்... நாலு மணி தாண்டிட்டு என்ன.” என்றான், வேந்தன்.

“எங்க போறது? இன்னும் கிஃப்ட் ஷொப் போகேல்ல. வாங்க அங்க இருக்கு.” அவர்களின் பதிலை எதிர்பாராது நகர்ந்தாள், கவி. பின்னால் விரைந்தான், ஆரூரன்.

“கெதியா வந்திருவம் சித்தப்பா.” என்றபடி ராஜியின் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு சென்ற இலக்கியா, “அஜி சித்தி நீங்களும் வாங்கோ.” கூட்டிக்கொண்டு நடந்தாள்.

“அப்ப நாம ஒரு கஃபே குடிப்பம் என்ன அண்ணா.” மாறன் சொல்ல, “ம்ம் சரி...” என்று நகர்ந்தவர்கள், “வாங்கிறத வாங்கிட்டு கெதியா வாங்க. நாங்க கஃபே ல இருக்கிறம்.” என்றுவிட்டு நடந்தார்கள்.

“டவுன் டவுனால ஒரு சுற்று சுற்றிப் பார்த்திட்டு நல்ல ரெஸ்டாரண்ட் பார்த்துச் சாப்பிடுவம் தம்பி. என்ன சொல்லுறீங்க? இல்ல, சாப்பிட்டுட்டும் பார்க்கலாம்.”

“எல்லாருக்கும் ஓகே எண்டா முதல் சாப்பிடலாம் அங்கிள். இந்த மெக்சிகன் சீ புட் ரெஸ்டாரன்ட் ஆரூரன் ஆக்கள் தான் சொன்னவே. நல்லா இருக்கும். சாப்பிட்டுட்டு வேணும் எண்டா ஒரு மோலில இவையள விடலாம். பிறகு அப்படியே சுத்திட்டு இரவு எட்டுக்கு இங்க இருந்து வெளிக்கிட்டாலும் பத்தரைக்க ‘பேக்கர்ஸ்ஃபீல்ட்’ போயிரலாம்.” வேந்தன் சொல்லிக்கொண்டிருக்கையில், தன்னிருப்பை உணர்த்தியது சுகுணாவின் கைபேசி.

பார்த்தவர், “என்ன இந்த நேரம் இவர் எடுக்கிறார்!” சொன்னவாறே காதுகளில் பொருத்திக்கொண்டார்.
 
Top Bottom