• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அத்தியாயம் - 39

ரோசி கஜன்

Administrator
Staff member
"பிள்ள என்னாச்சி தடிமனாக்கிப்போட்டுது போல!” இலக்கியாவினருகில் படுத்திருந்த மலர் தலையைத் தடவியபடி கேட்டார்.

“தலைக்குக் குளிச்சியாம்மா? இன்னும் ஈரமிருக்கு. இப்படியே தூங்கினா தடிமன் வராமல் என்ன வரும் சொல்லு!" கடிந்து கொண்டார்.

விரித்திருந்த கூந்தலைப் பரப்பி விட்டது, அவர் கரம். எப்போதுமே தனிப்பட்டு அவளுக்கே அவளுக்கான பரிவை வெளிப்படுத்துவார், மலர். அது அவளைச் சாதாரண நேரங்களிலேயே பலகீனப்படுத்திவிடும். இப்போது?

விழிகள் இரண்டாலும் வெளியேறியது, சூடான உப்பு நீர்.

"லேசா அப்பம்மா.... நீங்க துங்குங்கோ!" தணிந்தகுரலில் சொன்னவள், "கரைச்சல் தாறனோ?" பெரியவர் பக்கம் திரும்பாதே கேட்டாள். மெல்லிய இரவு விளக்கொளியில் தன்புறம் திரும்பிக் கிடக்கும் மலருக்கு முகத்தைக் காட்டி மேலும் கேள்விகளை வளர்க்க விரும்பவில்லை, அவள்.

"இல்ல பிள்ள நீ படு. எனக்கு எப்பவும் புது இடம் எண்டா லேசில தூக்கம் வராது." புரண்டு படுத்தாரவர்.

அதே அறையிலிருந்த மறு கட்டிலில் கவியும் சுகுணாவும் நல்ல நித்திரையிலிருந்தார்கள்!

நல்ல அலைச்சல் எல்லோர் உடலையும் அசதிக்குள்ளாக்கியிருந்தது. இரட்டிப்பாகச் சந்தோசமும் சேரவே நிறைய நேரம் கதைத்துக்கொண்டிருந்துவிட்டுத்தான் கலைந்திருந்தார்கள்.

இலக்கியாவோ, கவி வேந்தன் கலியாணப் பேச்சுச் சம்பிரதாய நடைமுறைகள் வரையும் வந்தாயிற்று என்பதைக் கேள்விப்பட்ட கணத்தில் தன்னைத் தொலைத்தவள் தான், அவர்கள் பார்வையிலிருந்து தப்பியோடி குளியலைறைக்குள் புகுந்து வாய் பொத்தி குமுறியழுதிருந்தாள். சுக்கல் சுக்கலாகிப் போயிருந்த இதயம் சுவாசிக்கவே மிகவும் சிரமப்பட்டது. சின்ன இடம், வெளியில் கேட்டுவிட்டால்? அப்போதும் பயம் வேறு ஆட்டிப்படைத்தது. நீண்ட காலத்துக்குப் பின் நன்றாகவே வேதனையை உணர்ந்து நின்றாளவள்.

"முகம் கழுவிறன் எண்டு போன இலக்கியா இன்னும் வரேல்லையா?" சுகுணாவின் குரலைத் தொடர்ந்து குளியலறைக் கதவுப் பிடி அப்படியும் இப்படியும் திருப்பப்பட்டது. அதில் தான் சுற்றமுணர்ந்திருந்தாள். பட்டென்று குளிர் நீரைத் திறந்து முகத்தில் விசிறி அடித்தாள், பலதடவைகள்.

நேரே முன்னாலிருந்த நிலைக்கண்ணாடியில் தெரிந்த தன்னுருவை அவளுக்கே சுத்தமாகப் பிடிக்கவில்லை. சற்று முன்னர் உலகை வென்றுவிட்ட மகிழ்வோடு இந்த அறைக்குள் நுழைந்தவள் இவளா என்றவகையில் விழிகள் உப்பிச் சிவந்து, மூக்குக் விடைத்து, தலைகலைந்து ஒரு மாதம் தீராத வருத்தத்தில் கிடந்த கோலத்தில் நின்ற தன்னைப் பார்த்தவள் இதழ்கள் வெறுப்பில் மடிந்தன.

எப்போதுமே தன்னில் தான் தீரா அன்பு கொண்டவள், அவள். அதுவே, எல்லாம் கடந்து இத்தனை கலகலப்போடு நடமாட வைத்திருந்தது. இக்கணமோ, தன்னைத் தானே கொடுமையாக வெறுத்தாள். கடந்த சில நிமிடங்கள் வழங்கியிருந்த மிகப்பெரிய பரிசது!

பேப்பர் டவல் ஒன்றால் முகத்தை அழுந்தத் துடைத்தபடி கதவைத் திறந்தவளைப் பார்த்த மலர் நெற்றி சுருங்கியது.

"இதென்ன பிள்ள உன்ர முகம் இப்பிடி இருக்கு! காச்சல் ஏதுமா?" கழுத்தில் கைவைத்துப் பார்த்தார். ‘வந்திறங்கேக்க நல்லா நிண்டியே, இப்ப என்ன?’ என்று, சாதாரணமாக என்றால் கேட்டிருப்பார். அவர் கவனம் முழுவதும் வேந்தனில் குவிந்திருந்ததில் இவர்களை எங்கே பார்த்தார்!

'கண்ணீர்... ஒரு துளியேனும் விட்டுவிடாதே!' பெரும் அலறலோடு மனதை அதட்டி அடக்கினாள், இலக்கியா.

"ஒண்ணுமில்ல அப்பம்மா தலையிடி அதான்." இலாவகமாக நகர்ந்து, விக்சை எடுத்து நெற்றி முழுவதும் பரபரவென்று தேய்த்துக் கொண்டவளை பின்னால் சென்று கவனிக்க அவர்களுக்கு நேரமிருக்கவில்லை. மறுநாள் காலையிலேயே மலரும் சுகுணாவும் திருமண வீட்டுக்குப் போகவிருந்தார்கள். மதியம் கோவிலில் திருமணம். அதற்குப் பத்து மணிபோல் எல்லோரும் போவதாகவும் முடிவு. இரவு வரவேற்பு. அதைப் பற்றிக் கதைத்தபடி பெண்களிருக்க, ‘அடுத்த அறைக்குச் சென்று பேசாமல் படுத்திருவம்’ என்ற முடிவோடு மெல்ல வெளியில் கால்வைத்த இலக்கியா, அதேவேகத்தில் உள்ளே இழுத்துக்கொண்டாள்.
 
Last edited:

ரோசி கஜன்

Administrator
Staff member
ஒருவேளை வேந்தன் இன்னமும் அந்த அறையிலிருந்தால்? இனி, அவன் முகமேறிட முடியாதென்று தோன்றிற்று!

‘இந்த ரெண்டு கிழமையா நானும் வேந்தனும் விரும்பிறம்’ என்று குடும்பத்தினரிடம் எப்படிச் சொல்ல முடியாதோ, அப்படியே, இப்போதைக்கு அவனைப் பார்க்கவோ கதைக்கவோவும் முடியாது. மெல்லச் சென்று ஒரு ஓரமாகப் படுத்துவிட்டாள்.

கண்கள் மணிக்கணக்கில் மூடிக்கிடந்தாலும் உறக்கம் அருகிலும் வரவில்லையே! எல்லோருமே தூங்கிய பின்னும் அப்படியே கிடந்தாள், துளிர்த்த வேகத்தில் வேரோடு பிடுங்கி எறியப்பட்ட தன் நேசத்தை எண்ணியபடியே!

‘மக்கே! வேந்தன் இதை ஏற்பானா?’ என்றெல்லாம் சிந்தை செல்லவில்லை. அவள் மட்டில் தன் வீட்டினரின் சந்தோசத்துக்குக் கேடு விளைவிக்கும் எச்செயலும் செய்யக்கூடாது அவ்வளவும் தான். வேந்தன் தனக்கு வேண்டாம் என்ற முடிவை எப்படி எடுத்தாள் என்று அவளுக்குத் தெரியாது. ஆனால், எடுத்திருந்தாள். ‘கவிக்காவுக்குத்தான் அவர் பொருத்தம்’ எண்ணியவளுக்குத் தான் தியாகியாகவும் தெரியவில்லை. ஒதுங்குவது அவள் கடமை. தலையாய கடமை!

நிறைய வருடங்களின் பின் “அம்மா அப்பா” மீண்டும் மீண்டும் கதறியது அவளுள்ளம்.

*****

மறுநாள் பரபரபான விடியல் ...

இரண்டு கிழமைகளாகவே பரபரப்பாக எழுந்து முதல் ஆளாகப் புறப்படும் இலக்கியா மட்டும் படுக்கையை விட்டெழவில்லை.

“இரவிரவா நிறைய நேரம் தூங்காமல் கிடந்த பிள்ள கொஞ்சம் கிடக்கட்டும், விடு!” மலர் சொல்ல, “அப்ப அவளிட உடுப்புகள் ரெண்டு செட்டையும் வெளில எடுத்து வச்சிட்டுப் போங்கம்மா, குளிச்சிட்டு வந்து அயன் பண்ணப்போறன்.” என்றாள், கவி.

எடுத்து வைத்துவிட்டுக் கிளம்பினார், சுகுணா. மலர், சுதர்சன், சிவா தம்பதியோடு திருமண வீடு நோக்கிப் புறப்பட்டுமிருந்தார்கள்.

குளியலறையிலிருந்து வந்த கவி, கஃபே ஒன்றை உறிஞ்சியபடி கைபேசியைப் பார்த்துக்கொண்டிருக்க, “என்ன இலக்கிக்கா இன்னுமா எழும்பேல்ல? ஒரு பத்தரை போல வெளிக்கிடுவம் எண்டு அப்பா சொன்னவர்.” வந்தான் ஆரூரன்.

“தலையிடி எண்டு படுத்தவள் கொஞ்சம் கிடக்கட்டும். இன்னும் நேரமிருக்குத்தானே?” என்ற கவி, “கஃபே போடவாடா உனக்கு?” அருகிலமர்ந்தவனிடம் கேட்க, “அதெல்லாம் எழும்பினோன்ன குடிச்சிட்டன் கா.” என்றவன், “உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்லட்டே?” குரலைத் தணித்து அவள் காதருகில் குசுசுகுசுத்தான்.

“என்னடா? பீடிகை எல்லாம் பலமாத்தான் கிடக்கு!” கவியின் முகத்தில் நகைப்பு.

“இல்ல, உங்கட ஆள் எனக்கு எடுத்தவர்...” அவன் முடிக்கவில்லை, “ஆர் வேந்தனா?” குறுக்கிட்டிருந்தவளும் இரகசியமாகவே கேட்டாள்.

“ஓம், ஏதோ கண்டு கனகாலம் போல எல்லாரையும் சுகம் கேட்டவர். கலியாண வீடு போற அவசரத்தில எல்லாரும் வெளிக்கிடுறம் எண்டு சொன்னன்.” சீண்டலாகச் சொல்லிவிட்டு, “கனடா போக முதல் கட்டாயம் சந்திப்பம் எண்டிட்டுத்தான் வச்சவர்.” என்றவன், “வீட்டுக்குப் போனோன்ன ஆன்ட்டி சொல்லி இருப்பா எல்லாக்கா? உங்களோட கதைக்க நினைச்சிட்டு என்னோட கதைச்சார் போல!” சிறிதுநேரமிருந்து கடித்துவிட்டு, “அலட்டாமல் ஓடு! நான் அயர்ன் பண்ண வேணும்.” அவள் எழ, “கனவு கண்டு கொண்டு அயர் பண்ணி உடுப்புகள எரிக்கிறேல்ல.” என்றுவிட்டே வெளியேறினான்.

சகோதரன் தலை மறைந்ததும், ‘வேந்தனுக்கு எடுத்துப் பாப்பமா?’ கவியின் மனதுள் பரபரப்பாகவிருந்தது. இருந்தாலும் அடக்கிக்கொண்டாள். அவன் தான் எடுக்கவேண்டும் என்றது, அவளுள்ளம். மனதில் தோன்றிய விருப்பை மறையாது கோடிகாட்டியது இவள். அதற்குரிய மரியாதை கொடுத்தானா என்ன?

‘இனி அவரே எடுத்துக் கதைக்கட்டும்.’ மனதிலிருந்த சிணுக்கம் முகத்தில் வந்தாலும் தன்னையும் மீறிய முறுவலோடேதான் தன் உடைகளை அயர்ன் செய்தெடுத்து வைத்தாள்.

அடுத்து, தங்கையின் ஆடைகளை அயர் பண்ணி அவள் புறமாகவிருந்த அலுமாரிக்குள் தொங்க விட்டுக்கொண்டிருக்கையில் சின்ன அனத்தல், இலக்கியிடமிருந்து!

பட்டென்று சென்று, முகம் வரை முடியிருந்த போர்வையை மெல்ல விலக்கிப் பார்த்தாள். கண்ணீர் கறையோடு விழிகள் மூடிக்கிடந்தாளவள். இலக்கியா மிகவுமே கலகலப்பானவள். எல்லோர் பிரியத்துக்குமுரியவள். வளர்ந்த பின்னர், என்றுமே இப்படி அவளைக் கண்டதாக இவளுக்கு நினைவேயில்லை.

“இவள் என்ன இன்னுமா நான் சொன்னதுகள நினைச்சிக் கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறாள்!” அடியுள்ளத்தில் குற்றவுணர்ச்சி குடைந்ததில் வார்த்தைகள் வெளிவந்திருந்தன.

“இலக்கி..டி இலக்கி!” அவள் கன்னத்தில் தட்டியவள் தகதகவென்று சுட்ட சூட்டில் பயந்தேபோனாள்.

“இவளுக்குச் சரியாக் காய்ச்சல் அடிக்குதே! அடியேய் எழும்பு இலக்கி!” பதற்றத்தோடு கன்னத்தில் தட்டினாள்.

தலை விண்ணென்று வலித்தது. கூடவே உள்ளுக்குள் நடுக்கமும் உடம்பு உளைவுமாக கண்களைத் திறக்கவே மிகச் சிரமப்பட்டாள், இலக்கியா. தமக்கையின் குரல், கிணற்றுக்குள்ளிருந்து ஒலிப்பதுபோல...ஏதோ கனவுபோலவேதான் கேட்டிட்டு! கன்னத்தில் ஏற்பட்ட அதிர்வுதான் விழிகளைப் பிரிக்கச் செய்திட்டு எனலாம்.

மிக்க சிரமத்தோடு விழிகள் திறந்தவள் தவிப்போடுநின்ற தமக்கையைக் கண்டதும் குபுக்கென்று கண்ணீர் விட்டாள்.

கவி, அவள் சகோதரி, என்னதான் சின்னச் சின்னதாக சண்டைகள் போட்டாலும் ‘நான் பெரியவள்’ என்றதை நிலைநாட்ட முயன்றிருந்தாலும் பாசத்தில் குறைவைத்து இவள் கண்டதில்லையே.

“இலக்கிக் குட்டி! என்னடி? ஏலாமல் இருக்கா? ஐயோ அம்மா அப்பம்மா எல்லாம் கலியாண வீட்ட போய்ட்டினமே!” பரிவும் படபடப்புமாக விழிநீரைத் துடைத்துவிட்டாள், கவி.

“நீ முதல் எழும்பு, நான் ரதிச் சித்திய வரச் சொல்லுறன்.” கைபேசியை எடுக்க நகர்ந்தவள் கரத்தைப் பற்றி நிறுத்தினாள், இலக்கியா.

“எனக்கு ஒண்ணும் இல்லக்கா. இரண்டு பரசிட்டமோல் தாங்க சரியாகீரும்.” காய்ந்து கிடந்த உதடுகளைக் கடினத்தோடு பிரித்துச் சொன்னவள் முதல் நாள் வரை எத்தனை சுறுசுறுப்பாகச் சுற்றி வந்தாள், வாயாடிக்கொண்டு!

“கொழுப்பாடி உனக்கு? ஈரத்தலையோட படுத்திருந்தியாம்.” ஏசிக்கொண்டே பரசிட்டமோலும் தண்ணீரும் எடுதுக்கொடுத்துக் குடிக்க வைத்தாள். மீண்டும் படுக்கையில் சுருள முயன்றவளையும் விடவில்லை.

“எழும்பி மெல்ல மெல்ல வந்து பல்லைத் தீட்டு! வெறும் வயித்தில குளிச போட்டிருக்கிற எல்லா. கோப்பி போட்டுத் தாறன் குடிச்சிட்டு இரு!” அவளை எழுப்பி குளியலறை வரை பிடித்துக்கொண்டு போய்விட்டவள், “கதவச் சாத்தாமல் சும்மா மூடிட்டு நில்லு!” அதட்டலும் போட்டாள்.

இலக்கியாவுக்கோ தன்மீதே கடும் கோபம். எப்படி எப்படியெல்லாம் நினைத்து மனதைச் சமாதானம் செய்ய முயன்றாலும் முடியவில்லை. ‘இதுக்கு ஒரே ஒரு முடிவுதான் இப்ப இருக்கு, நான் கண்காணாமல் எங்கயாவதும் போயிற வேணும்!’ எண்ணிக்கொண்டவளுக்குச் சட்டென்று என்ன செய்வதென்றும் புரியவில்லை. அந்தப் பெரிய குடும்பத்தின் பாசமான கதகதப்பினுள் இருந்தவளுக்கு அதை விட்டு வெளியே என்றொரு வாழ்வை நினைக்கவும் கடினமாகிற்று.

“ஏன் என்ன நடந்திட்டு? நேற்று நல்லாத்தானே இருந்தவள், இங்க வந்தப்பிறகு ஆள் கொஞ்சம் டல்லாத்தான் இருந்தா என்ன? நேரத்துக்கே படுத்திட்டா!” வெளியில் ரதியின் குரல் கேட்க, “எங்க இலக்கியா?” என்றபடி வந்திருந்தான், மாறன்.

“வோஷ் ரூமுக்க.” கவி சொல்ல, “சரி, நான் டோஸ்ட் வாங்கிக் கொண்டு வாறன்.” அவன் சொல்லிச் செல்வதும் கேட்க, பொல பொலவென்று கண்ணீர் விட்டபடித்தான் காலைக்கடன்களை முடித்தாள்.

அடுத்த ஒரு மணித்தியாலத்தில் காய்ச்சல் குறைந்திருந்தாலும் மனதைப் போலவே உடலும் வெகுவாகவே சோர்ந்திருந்தது.
 

ரோசி கஜன்

Administrator
Staff member
அப்படியே அங்கிருந்த மென்னிக்ருகையில் சாய்ந்திருந்தவளை யோசனையாகப் பார்த்தார், நாதன்.

“சரி இப்ப கலியாணத்துக்கு வந்து அலைய வேணாம். ஆனா, தனிய எப்படிம்மா சுகமில்லாத பிள்ளைய விட்டுட்டுப் போறது! ஆராவது நிண்டா நல்லம். பின்னேரமா சுகம் வந்திட்டுது எண்டா வரலாம்.” அங்கிருந்த மனைவியிடம் சொல்லவும் செய்தார்.

“இல்ல இல்ல சித்தப்பா, நீங்க எல்லாரும் போங்க, நான் தனிய இருப்பன். இதில என்ன இருக்கு? அறைக்கத் தானே இருக்கப் போறன். அப்படியே ஏதாவது தேவையெண்டா கோல் செய்யிறன்.” வற்புறுத்தி அவர்களை அனுப்பிவிட்டுப் படுக்கையில் சுருண்டவள், முதல் நாள் அணைத்து வைத்த கைபேசியைத் தொட்டும் பார்க்கவில்லை. கண்ணீரில் முட்டிக்கலங்கி நின்ற பார்வை அடிக்கடி அதை நாடிச் சென்று வந்தாலும் அதையெடுக்க கரத்துக்கு உத்தரவிடவில்லை, அவள்!
 
Top Bottom