• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அத்தியாயம் - 4

STN - 92

New member
Staff member
மனம் - 4:

“அந்த புள்ளை உன்கூட தான் வேலை பார்க்குறதா அசோக் மாப்ள சொன்னாரே குரு. நீயும் அந்த பிள்ளையும் ஒண்ணா வேலை பார்க்குறது அந்த பொண்ணு வீட்டுக்கு தெரியுமா தம்பி.” என குணசீலன் குருவை அழைத்து விசாரித்தார். சென்னை சென்று வந்த இருநாட்களிலே அசோகன் குணசீலனுக்கு தகவல் சொல்லிவிட்டார்.

“அப்பா.” என பல்லை கடித்தவன்,

“இப்ப உங்களுக்கு என்ன தெரியணும்? நான் யார்கிட்டயும் எதையும் மறைச்சி செய்யல. அத்தான் ஊருக்கு வந்தாங்க; அவளை பார்த்தப்ப பேசுனாங்க. அவங்க வீட்டுக்கு தெரியுமா இல்லையான்றது எனக்கு தேவையில்லாதது ப்பா.”

இப்படி எடுத்தெரிந்து பேசுகிறானே என ஒருபக்கம் தோன்றினாலும், “அதுக்கில்லைய்யா. மறுபடியும் எதாவது பிரச்சனை வர போகுதுன்னு தான் அப்பா சொல்லுறேன்.” என குணசீலன் தணிந்த குரலில் சொல்ல,

“பிரச்சனை வருமான்னு தெரியாது. அப்படியே வந்தாலும் அதை நானே பார்த்துக்குறேன்.” என சொல்லிவிட்டு உடனே அழைப்பை துண்டித்தான்.

தந்தையான குணசீலனுக்கு அவனின் வார்த்தைகள் வலிக்க தான் செய்தன. “போதும். நீங்க செஞ்சது எல்லாமே போதும். இதோட நிறுத்திக்கோங்க.” என அன்று அவன் இவர்களிடம் சண்டையிட்டது நினைவில் வர, அவர்களின் குலதெய்வம் ஐயனாரை வேண்டிக்கொள்ள மட்டும் முடிந்தது அவரால்.

அன்று பவ்யா விடுமுறை எடுத்திருந்ததால், மதிய உணவு நேரத்தில் அட்சயா தனியாக தான் கேன்டீன் வந்திருந்தாள். அங்கேயோ கூட்டம் நிரம்பி வழிந்தது. ‘இன்னைக்கு சாப்பிட்ட மாதிரி தான்.’ என மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

அங்கே நால்வர் அமரும் இடத்தில் அபிலாஷும் குருபிரசாத்தும் மட்டும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். இவளை கவனித்த அபிலாஷ் கையசைத்து அழைத்தான்.

எங்கும் இருக்கைகள் காலியாக இல்லாமல் இருக்க, அவர்களுடனே சென்று அமர்ந்தாள். இருவரையும் பார்த்து ஸ்நேகமாக சிரித்தவள் உணவினை எடுத்து உண்ண துவங்கினாள்.

இருவாய் உணவை உண்டதும், அட்சயாவுக்கு விக்கல் வந்தது. அங்கிருந்த டம்ளரில் தண்ணீர் இல்லாமல் இருந்தது. ஜக் முழுவதும் தண்ணீர் இருந்ததால் அவளால் இடக்கையில் அதனை தூக்க முடியவில்லை.

அவளிடம் இருந்து ஜக்கை வாங்கிய குருபிரசாத், “டம்பளரை பிடி..” என தண்ணீரை ஊற்றினான்.

தண்ணீர் குடித்து முடித்ததும், “தேங்க்ஸ்” என கூற வந்தவள் குருபிரசாத்தின் பார்வையில் அவ்வார்த்தையையும் முழுங்கிவிட்டாள்.

“நெருக்கமானவங்க யாரோ நினைக்குறாங்க போல அட்சயா. அதான் உனக்கு விக்கல் வருது.” என அபிலாஷ் சிரிப்புடன் சொல்ல, அவனின் காலிலே மிதித்தான் குரு.

சாப்பிட்டு முடித்த அபிலாஷ், “எனக்கு மீட்டிங் இருக்கு.” என எழுந்து சென்றுவிட்டான்.

சாப்பிட்டு முடித்தாலும் ஃபோனை பார்த்துக்கொண்டே அவளுக்காக அமர்ந்திருந்த குருபிரசாத்திடம், “உங்களுக்கு வேலை இருக்கும். நீங்க போங்க..” என சொல்ல,

அலைபேசியில் இருந்து கண்களை நிமிர்த்தியவன், “பாதில விட்டுட்டு போற பழக்கம் எனக்கில்லை.” என அவளின் கண்ணை நோக்கினான்.

அவளால் அவனை எதிர்கொள்ள முடியவில்லை. குனிந்தபடியே உணவையும் உண்டு முடித்தாள்.

ஒரு முடிவை எடுத்தபின் நமக்கு மகிழ்ச்சி கிடைக்கவில்லை என்றாலும், நிம்மதியாவது கிடைக்க வேண்டும். அப்படி நிம்மதியும் கிடைக்கவில்லையெனின் அம்முடிவு நிச்சயம் நமக்கானது அல்ல.

அட்சயாவும் அந்நிலையில் தான் இருக்கிறாள். சூழ்நிலை கைதியாக, சுயநலமாக அவசரப்பட்டு எடுத்த முடிவை பரிசீலிக்கவும் முடியாமல் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறாள்.

அதுநாள் வரை குருபிரசாத்தை பார்க்காமல் இருந்தவளிற்கு அவனின் சந்திப்பின் தாக்கத்தால் மனதில் உருவான குழப்பம், குற்றவுணர்வு, ஆதங்கம், நெருடல் என கலவையான உணர்வுகளில் காதல் இருப்பதாக அவளால் உணர முடியவில்லை.
 

STN - 92

New member
Staff member
அந்தவார வெள்ளியன்று அட்சயாவை அழைத்து செல்ல சென்னை வந்துவிட்டான் சபாபதி. “ஏன் ண்ணா. நான் தனியா வர மாட்டேனா?” என கேட்டபடியே காரில் ஏறி அமர்ந்தாள்.

“நைட் நீ எப்படி தனியா வருவியோனு பயப்படுறதுக்கு இது பரவால..” என்றவனை ஆதூரமாக பார்த்தாள்.

இந்த பாதுகாப்பும், அரவணைப்பும் தான் அவளை மிகவும் பலவீனப்படுத்துகிறது. பாசம் என்று வேலியை போட்டு, அதற்குள்ளே அவளை சுதந்திரமாக இருக்க சொன்னால் அது எப்படி சுதந்திரமாகும்?

ஆனால் அதனை முகத்தில் காட்டாமல், சபாபதியுடன் பேசியபடியே வீட்டிற்கு பயணித்தாள்.

முதல் மாத சம்பளத்துடன் வீட்டிற்கு வந்த அட்சயா அனைவருக்கும் வாங்கிய பரிசுகளை கொடுத்தாள். பூர்ணிமாவிற்கு வாங்கியதை மறுநாள் அவளை சந்திக்கும் பொழுது கொடுத்துவிடலாம் என தனியாக எடுத்து வைத்தாள்.

“நம்ம அச்சு. சென்னைக்கு போய் நல்லா கலரா மாறிட்டா தான ம்மா..” என அட்சயாவின் அக்கா கங்கா கிண்டலாக சொன்னாள்.

“ஏசில வேலை பார்த்தா அப்படி தான் இருக்கும் க்கா.” என சபாபாதியும் எடுத்துக்கொடுத்தான்.

“சும்மா இருங்க ரெண்டு பேரும். நானே பிள்ளை மெலிஞ்சி போய் வந்துருக்கானு இருக்கேன்.” என அவர்களை அடக்கிய பரிமளம் அட்சயாவிற்கு பிடித்ததாக சமைத்தார்.

“அப்பா எனக்கு ஒரு கேரளா சாரீ வேணும். நெக்ஸ்ட் வீக் நானும் பவ்யாவும் எங்க ஆபீஸ் ஓணம் செலேப்ரேஷனுக்கு கேரளா சாரீ தான் கட்ட போறோம்.” என குதூக்களித்தாள்.

நீண்டநாள் கழித்து இது வேண்டும் என ஆசையாக கேட்ட மகளை பார்த்த பரிமளத்திற்கு மனதே குளிர்ந்துவிட்டது. “வேலைக்குன்னு போய் சுயமா யோசிக்க இருந்தாலே அவ சரியாகிடுவா மாமா.” என கங்காவின் கணவர் கோபிநாத் சொன்னது தான் அவருக்கு நினைவு வந்தது.

“கடையே உனக்கு தான் பாப்பா. நாளைக்கு வந்து என்ன வேணுமோ எடுத்துக்கோ. என்னோட பொண்ணுங்களுக்கு போக தான் மீதி வியாபாரத்துக்கு.” என ஆவுடையப்பன் சொன்னதும்,

“அப்படினா கடையவே எடுத்துப்பாங்க ப்பா..” என சபாபதி சொன்னான்.

வெகு நாட்களுக்கு பின் அந்த வீட்டின் சூழல் மாறியிருக்க, பரிமளத்திற்கு கண்களே கலங்கிவிட்டது. ‘அப்படியே என்னோட பொண்ணுக்கு நல்ல வரனா வந்துட்டா போதும் ஆத்தா..” என பன்னாரியம்மனை வேண்டிக்கொண்டார்.

காலை உணவை முடித்துவிட்டு கடைக்கு சென்ற அட்சயா ஒரே மாதிரி இரண்டு புடவைகளை எடுத்தாள். “இன்னொன்னு யாருக்கு அச்சு?” என சந்தேகமாக சபாபதி.

“இன்னொன்னு பூர்ணிக்கு ண்ணா.” என்றவளை என்ன சொல்வது என தெரியாமல் முறைத்தான். அவனது முறைப்பை அவள் கண்டுகொள்ளவே இல்லை.

சிறுவயதில் இருந்து வந்த பழக்கத்தை அவளால் மாற்றிக்கொள்ள முடியவில்லை. பூர்ணிமாவும் எது வாங்கினாலும் இவளுக்கும் சேர்த்து தான் வாங்குவாள். அட்சயாவும் அப்படியே. குடும்பத்திற்குள் சண்டைவந்து பிளவு விழுந்த போதும் அவர்களால் பேசாமல் இருக்க முடியவில்லை.

மாலையில் அட்சயாவை சபாபதி தான் கோவிலிற்கு அழைத்து சென்றான். பூர்ணிமாவை சந்திக்க தான் செல்கிறாள் என அவனுக்கும் தெரிந்தே தான் இருந்தது. பூர்ணிமாவிடம் அவளுக்கு வாங்கிய உடைகளை கொடுத்தவள், “நீங்க கிளம்புங்க ண்ணா. நா கொஞ்ச நேரம் பூரி கூட இருந்துட்டு வீட்டுக்கு வரேன்.” என்ற அட்சயாவை கண்டனதுடன் பார்த்தான் சபாபதி.

“என்னால யாரையும் நம்பி உன்னை தனியா விட முடியாது அச்சு.” என்றவன் அவளின் கையை பிடித்து இழுத்துக்கொண்டே சென்றான். நெருப்பை போன்ற வார்த்தைகளை பூர்ணிமாவிடம் வீசிவிட்டு வந்தவனின் உள்ளமும் வலிக்க தான் செய்தது. ஆனால் அவனால் எதையும் மறக்க முடியவில்லையே!

இருசக்கர வாகனத்தில் அமைதியின் உருவாக வந்த தங்கையை கவனித்தவன், “என்ன அச்சு சைலண்ட்டா வர..”

“...”

“அச்சு?”

“என்னண்ணா?”

பூர்ணிமாவை பேசியதற்கு நிச்சயம் சண்டையிடுவாள் என எண்ணியிருக்க, அவளின் அமைதியே அவனுக்கு மனதை பிசைந்தது.

“அண்ணா மேல கோபமா?”

“உன்மேல எதுக்குண்ணா நான் கோவபட போறேன். எனக்கு என்னைய நினைச்சாதான் பிடிக்கவே இல்லை. என்னால எத்தனை பேர் கஷ்டப்படுறீங்க?” என அவளின் குரல் உடைந்து வந்தது.

“இப்படி யோசிக்க கூடாது. பேச கூடாதுன்னு உனக்கு சொல்லிருக்கேன் தான..” என அதட்டலாக சபாபதி மொழிய, “சாரி ண்ணா.” என்றவள் வேறெதுவும் பேசவில்லை.

களையிழந்து வந்த மகளின் முகத்தை கவனித்த பரிமளம், “காலைல நல்லா தான இருந்தா.. இப்ப என்னவாம்?” என சபாபதியிடம் விசாரணையை துவங்கினார்.

“உங்க பொண்ணு தான? நீங்களே கேளுங்க..” என அவனும் கத்திவிட்டு உள்ளே சென்றான். வலியுடன் அவனை பார்த்த பூர்ணிமாவின் விழிகள் அவனை இம்சிக்க, “ச்சை இம்சை..” என எரிச்சலாக வந்தது அவனுக்கு.

மறுநாள் இரவு சென்னைக்கு கிளம்பி கொண்டிருந்தாள் அட்சயா. “நானே போயிடுவேன் ண்ணா. நீ எதுக்கு தேவையில்லாம அலையுற?” என அவள் சொன்னாலும் கேட்காமல் அவளுடன் பேருந்து நிலையத்திற்கு வந்திருந்தான். தொடர்ச்சியாக இரவு நேரத்தில் வாகனத்தை ஓட்ட வேண்டாம் என ஆவுடையப்பன் சொல்லியிருக்க பேருந்திலே பதிவு செய்துவிட்டான்.

பேருந்திற்காக காத்திற்கும் பொழுது அவர்களின் அருகே ரோஷன் வந்தான். “என்ன அச்சு? சென்னைல வேலைக்கு போய் பளபளனு ஆகிட்ட..” என அட்சயாவை தலை முதல் கால் வரை கண்களாலே அளந்தான். அதில் அருவருப்பாக உணர்ந்தவள் சபாபதியின் பின்னே சென்று தன்னை மறைத்துக் கொண்டாள்.

“ஏய்! என்னடா சொன்ன?” என சபாபதி அவனின் சட்டை காலரை பிடித்து சண்டை பிடிக்க, “ண்ணா. விடு ண்ணா. நாம போகலாம். எல்லாரும் பார்க்குறாங்க..” என சுற்றியும் பார்த்துவிட்டு சபாபதியின் கையை பிடித்து பின்னே இழுத்தாள்.

“என்னா மச்சான்? உங்க வீட்டுக்கு மாப்பிள்ளையா வர போறவனுக்கு இப்படி தான் மரியாதை கொடுக்குறதா?” என்ற ரோஷனை அடிக்க கையை ஓங்கினான் சபாபதி. ஆனால், அதற்குள் அங்குள்ளவர்கள் அவர்கள் இருவரையும் பிரித்துவிட்டனர்.

அந்நேரம் சரியாக அவர்கள் செல்லும் பேருந்து வரவும் சபாபதியுடன் பேருந்தில் ஏறிவிட்டாள் அட்சயா. சீட்டில் சாய்ந்து கண்ணை மூடியவளிடம், “அச்சு..” என அழைக்க,

“எனக்கு ஒன்னும் இல்லைணா. ஐம் ஓகே.” என்றவளின் மனதில் குருபிரசாத் தான் தோன்றினான். ஒருமாதத்திற்கு மேலாக அவனுடன் ஒரே அலுவலகத்தில் வேலை பார்க்கிறாள். அவனின் பார்வையில் அவளுக்கான தேடல் இருந்தாலும் அதில் அவ்வளவு கண்ணியம் இருக்கும். ஆனால் அவனையே காயப்படுத்திய தன்னை மன்னிக்க முடியாமல் மனம் நொந்து போனாள்.

அப்படியே அண்ணனின் கைபிடித்து அவனின் தோளில் சாய்ந்தவள் சிறிது நேரத்தில் உறங்கியும் போனாள். தங்கையின் நிலையை பார்த்த சபாபதிக்கு ரோஷனின் மீது கோபமாக வந்தது. அந்த கோபம் அனைத்தும் அவனின் தங்கையான பூர்ணிமாவிடம் தடையின்றி திரும்பியது.
 

STN - 92

New member
Staff member
காலிங் பெல்லின் இரைச்சலில் கண்விழித்த குருபிரசாத்திற்கு கண்கள் தீயாக காந்தியது. இரவு முழுக்க வேலையை பார்த்ததால் அவனின் கண்கள் நன்கு எரிந்தன.

எழுந்து சென்று முகம் கழுவிவிட்டு கதவை திறக்க, அங்கே வாய் முழுக்க சிரிப்புடன் அவனின் நண்பன் சுகன் நின்றிருந்தான். குருபிரசாத் அவனை முறைக்க, “வழியை விடு டா. முறை பொண்ணு மாதிரி முறைச்சுக்கிட்டே இருப்ப. அதுக்கு தான அட்சயா இருக்காளே.” என சொல்லிக்கொண்டு அவனை இடித்தப்படி உள்ளே சென்றான்.

“நீ எதுக்கு வந்த..” என சுதனின் பின்னே வந்தான் குரு.

“இருடா. ஏசி பஸ்ல வந்தது. அர்ஜண்ட்டா பாத்ரூம் போகணும்.” என உள்ளே சென்றுவிட்டான்.

அட்சயாவுடைய பெரியம்மாவின் மகனை தான் சுதனின் அக்கா திருமணம் செய்திருக்கிறார். சுதனின் மூலம் தான் அட்சயாவும் அவளின் குடும்பமும் குருபிரசாத்திற்கு அறிமுகம் ஆகியதே!

வெளியே வந்த சுதன், “பசிக்குது டா. சாப்பாடு இருக்கா..?” என்றான்.

“பாத்ரூம் போறதுக்கும் சாப்புடுறதுக்கும் தான் பெங்களுர்ல இருந்து கிளம்பி வந்தியா?” என்று குரு கேட்டான். அவனை கண்டுகொள்ளாமல் கிட்சனிற்குள் சென்றான் சுதன்.

“சமையல் இன்னும் செய்யலையா டா. பெங்களூர்ல இருந்து வரேன். பசிக்குது..” என அங்கிருந்த பீம்பேகில் உட்கார்ந்தான்.

“மணி ஏழு தான் டா ஆகுது. உனக்கு அதுக்குள்ள பசிக்குதா? முதல்ல எதுக்கு வந்த அதை சொல்லு..” என குரு அவனின் பிடியிலே நின்றான்.

“உயிர் தோழனை பார்த்து எதுக்கு வந்த எதுக்கு வந்தன்னு கேட்டிட்டே இருக்க? உன்கிட்ட பேச தெம்பு வேணும் இரு சாப்பாடை ஆர்டர் போடுறேன்.” என ஃபோனை எடுத்து மடமடவென ஆர்டர் செய்தான். அவனை முறைத்த குரு குளியலறை சென்றுவிட்டான்.

“எதுக்கு டா காலையிலையே ஃபோன் பண்ணி வர சொன்ன?” என கேட்டிக்கொண்டே அபிலாஷும் உள்ளே நுழைந்தான்.

“உங்ககிட்ட ஒரு விஷயத்தை சொல்ல தான் வந்தேன்.” சுதன் வெட்கப்பட்டுக்கொண்டே சொன்னான்.

“சகிக்கல சொல்லி தொலை.” என்ற குரு அவனின் அருகில் அமர்ந்தான்.

“எனக்கு கல்யாணம் முடிவாகிருக்கு டா..” என உடலை நெளித்து சொன்னான்.

“உன்னை பத்தி தெரிஞ்சும் உனக்கு பொண்ணு கொடுக்க ஆள் இருக்கா?” என அபிலாஷின் கேள்விக்கு அருகில் அமர்ந்திருந்த குருபிரசாத்தும் சிரித்துவிட்டான்.

“ஒரு கல்யாணம் பண்ணி, பிரிஞ்சி போன இவனுக்கே பொண்ணு கொடுக்க லைன்ல நிற்கும் போது எனக்கு கிடைக்காதா டா..”

“அடிங். டேய் வாய ஓடச்சிடுவேன்.” என வேகமாக எழுந்துவந்த குருவை தடுத்து பிடித்தான் அபிலாஷ்.

“என்னை விடு அபி. இந்த நாயால தான அன்னைக்கு அவ்ளோ நடந்துச்சு. வெட்கமே இல்லாம வந்து உட்கார்ந்துருக்கான் பாரு.” என குருபிரசாத் கத்திக்கொண்டிருக்க உணவு பொட்டலங்களை டெலிவரி செய்யும் ஆள்வந்து அழைப்பு மணியை அழுத்தினர்.

“இருடா. சாப்ட்டுட்டு சண்டை போடலாம்..” என உணவை வாங்கிய சுதன் இருவரையும் சாப்பிட அழைத்தான்.

இருவரும் அவனை முறைக்க, “நடிக்காதீங்க டா. வாங்க. உங்களுக்கும் சேர்த்து தான் வாங்கினேன்.” என அவர்களையும் அழைத்தான். அபிலாஷிடம் ஜெசிந்தாவிற்கும் ஒரு பர்சலை கொடுக்க, “இதுல ஒன்னும் குறைச்சல் இல்ல..” என குரு சடைத்துக் கொண்டான்.

பின் மூவரும் உணவு உண்ண அமர்ந்தனர். “இவனோட முன்னாள் மனைவி எங்க கம்பனில தான் டா இப்ப வேலை பார்க்குறா? உனக்கு தெரியுமா?” என அபிலாஷ் குருவை பார்த்துக்கொண்டே சொன்னான்.

“உனக்கு முன்னாடியே எனக்கு தெரியும். அந்த பொண்ணுக்கு வேலை வாங்கி கொடுத்ததே இந்த நல்லவன் தான.” என குருபிரசாத்தை கைகாட்டினான் சுதன்.

அதிர்ச்சியாக குருவை திரும்பி பார்த்த அபிலாஷ், “அடப்பாவி! என்னமா அன்னைக்கு நடிச்ச? என்னமோ எல்லாம் முடிஞ்சுது முடிஞ்சுதுனு சொல்லி மறுபடியும் ஸ்டார்ட் பண்ணி வெச்சிருக்கியா டா..” என நம்ப முடியாமல் அபிலாஷ் கேட்டான். அதற்கு மெலிதாக சிரித்தான் குருபிரசாத்.

“எப்படியோ நல்லார்ந்தா சரிதான். வேலை வாங்கிக்கொடித்த கதையை சொல்லு. கேட்போம்..” என கதை கேட்கும் ஆவலில் அபிலாஷ் இருந்தான்,

“பெருசா ஒன்னும் இல்ல டா. சபாபதி, அதான் டா அட்சயாவோட அண்ணா என்கிட்டே தான் அவன் தங்கச்சிக்கு வேலை இருந்தா சொல்ல சொன்னான். நான் இவன் கிட்ட எதாவது தெரியுமானு தான் கேட்டேன். இவன் என்னோட கம்பெனிலயே சேர்த்துக்குறேன்னு சொல்லிட்டான்.” என போட்டு கொடுத்தான் சுதன்.

“என்கிட்ட சொன்னா என்னவாம் டா. அவங்க வீட்ல நீ தான் வேலை வாங்கிக் கொடுத்தன்னு தெரியுமா டா..” என அபிலாஷ் குருவிடம் திரும்பினான்.

“நான் தான் வேலை வாங்கிக்கொடுத்தேன்னு நீயே கண்டுபிடிக்கல. அண்ட் நான் டைரக்ட்டா பேசல டா. எச் ஆர் கிட்ட சொல்லி இன்டர்வியூ மூலமா தான் சேர்த்துவிட்டேன்.”

“சரி விடு. அட்சயா உன்கிட்ட எதாவது பேசுனாளா?” - சுதன்

“யாரு உன்னோட அத்தை பொண்ணா? அவளுக்கு என்னையும் தெரியல, அசோக் மாமாவையும் தெரியல. இவ்வளவு ஏன் இவனையே உத்து உத்து பார்த்து தான் மேடம் கண்டுப்பிடிச்சாங்க..” என்றான் அபிலாஷ் கிண்டலுடன்.

“அதுவேறயா? பேசாம ரெண்டு பேரையும் கடத்தி நாமளே மறுபடியும் அவங்களுக்கு கல்யாணம் பண்ணி சென்னைலேயே குடி வெச்சிடலாமா?” என சுகன் கேட்க,

“அப்படி ஒரு பிளான் இருந்தா முன்னாடியே சொல்லுடா.” - அபிலாஷ்.

“ஏன் டா. ஹெல்ப் பண்ண போறீயா?”

“அதெல்லாம் இல்ல டா. நீங்க சொல்லுற நாளுக்கு முன்னாடியே எங்கயாவது ஜெசிய கூட்டிட்டு போய்டுவேன். குடும்பமா டா உங்களோடது. வெட்டுக்குத்து ஒன்னு தான் இல்லை..”

அவர்களின் பேச்சை குருபிரசாத் அமைதியாக வேடிக்கை மட்டும் தான் பார்த்தான். “டேய் நீ எதாவது சொல்லு டா. அப்ப தான நாங்க களத்துல இறங்க முடியும்.” என குருவின் கையில் தட்டினான் சுதன்.

“நானே பார்த்துப்பேன்.” என குருபிரசாத் முடித்துவிட்டு பால்கனி பக்கம் எழுந்து சென்றான்.

“லோடலோடனு பேசுறவங்களை கூட நம்பலாம் போல. இப்படி அமைதியா இருக்கவங்களை தான் கணிக்கவே முடியாது.” என குருவை சுட்டிக்காட்டிய அபிலாஷ், சுதனுடன் வேறு விஷயங்களை பேச தொடங்கினான்.

அட்சயா படிப்பை முடிக்கும் வரை குருபிரசாத் குறுக்கிடாமல் தான் இருந்தான். ஆனால், அவள் வீட்டில் அவளுக்கு வேறு இடத்தில மாப்பிள்ளை பார்க்க முடிவெடுத்தவுடன் அவனால் பொறுக்க முடியவில்லை.

அவர்களிடம் நேரடியாக போய் பேசவும் அவனது அகம் இடம் கொடுக்கவில்லை. எனவே, சுதன் மூலம் அட்சயா வேலைக்கு தேடுவது தெரியவர, இவனே அவளை இவனிடம் அழைத்துக் கொண்டான்.

அட்சயாவோ இவனை தவிர்த்து வர, அவளிடம் நெருங்கும் வழித்தெரியாமல் குருபிரசாத் தான் தயக்கமும் தவிப்புமாக இருக்கிறான். ‘நேரடியாக பேசி எங்கே இன்னொரு ஏமாற்றத்தையும் புறக்கணிப்பையும் ஏற்க முடியாமல் போய்விடுமோ?’ என உணர்ந்தவன் அவளுக்காக சற்று காத்திருக்க முடிவெடுத்தான்.
 
Aww குருவை ரொம்ப பிடிக்குதே 🤩🤩🤩🤩🤩
பூரி பாவம் பா....ஏண்டா சபா அவளை போட்டு இப்படி படுத்தி வைக்கற....
அச்சு....பிரேக் தி வேலி....உன் ஃபேமிலிக்கு குரு கூட சேர்த்து வைக்கும் எண்ணம் எல்லாம் இல்ல போலவே......
 

STN - 92

New member
Staff member
Aww குருவை ரொம்ப பிடிக்குதே 🤩🤩🤩🤩🤩
பூரி பாவம் பா....ஏண்டா சபா அவளை போட்டு இப்படி படுத்தி வைக்கற....
அச்சு....பிரேக் தி வேலி....உன் ஃபேமிலிக்கு குரு கூட சேர்த்து வைக்கும் எண்ணம் எல்லாம் இல்ல போலவே......
Thankyou dear😍
 
Top Bottom