அத்தியாயம் - 41

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ரோசி கஜன்

Administrator
Staff member
Nov 11, 2018
1,719
1,113
113
வேந்தன் நெற்றி மேலேறியிறங்கியது.

“நீங்க எனக்கு என்ன சொன்னீங்க? அப்பா கனடா போய்ட்டார் எண்டா, இப்ப இங்க வந்து நிக்கிறார்! பெரியக்காவுக்கும் மகனுக்கும் காய்ச்சல் அது இது எண்டிங்க எண்டா இப்பிடி வெளிக்கிட்டுக் குடும்பா வந்து நிக்கிறா! சின்னக்கா குடும்பமும் நிக்கீனம்!" கேட்டவனைப் பார்த்த ரத்னாவின் முகம் முழுதும் நகைப்பு!

"அதேன் இங்க நிண்டு கேட்கிற... வா!" கரத்தைப் பற்றியபடி விரைந்து நடந்தார்.

அவர்கள் மண்டப வாசலை அடையமுதல் உள்ளிருந்து விரைந்து வந்த்திருந்தார்கள், இலக்கியாவின் குடும்பத்தினர்! மொத்தக் குடும்பத்தின் முகத்திலும் வியப்புக் கலந்த சந்தோசம்!

வேந்தனோ சிலையாகவே நின்றுவிட்டான். "ம்மா! என்னம்மா நடக்குது இங்க?!" அவனுக்கு நம்பவே முடியாதிருந்தது. இலக்கியாவின் குடும்பத்தினர் தன் குடும்பத்தோடு வந்திணைந்து நின்ற விதத்தைப் பார்க்கையில் விசயம் இரண்டு குடும்பத்துக்கும் தெரிந்து விட்டதென்று புரிந்திட்டு, அவனுக்கு.

"ஒண்ணுமே விளங்காத மாதிரி நிக்கிறதப் பாருங்க!" செல்ல முறைப்போடு வந்து இழுத்துக்கொண்டு சென்றாள், அவன் பெரிய தமக்கை.

"ஏன் தம்பி நீங்க மட்டும் தான் சர்ப்பரைஸ் தர நினைப்பீங்களோ! எப்பிடி எங்கட சர்ப்பரைஸ்?" சின்னத் தமக்கை.

இவனோ, சங்கடத்தோடு நாதனையும் மாறனையும் பார்த்துவிட்டு இலக்கியின் தந்தையைப் பார்த்து அடக்கமாகவே முறுவலித்தான். “இங்க வரும் வரைக்கும் உங்கட சொந்தக்காரரிண்ட கலியாணத்துக்குத்தான் வாறம் எண்டு தெரியாது அங்கிள்." சொல்லவும் செய்தான்.

நாதன் வந்து இறுக அணைத்து முதுகில் தட்டிவிட்டு, “மனம் நிறைஞ்ச சந்தோசம் தம்பி!" மனதாரச் சொன்னார். அடுத்தடுத்து, சுதர்சன், மாறன், சிவா என்று கட்டியணைக்க, அவன் தமக்கைமார் சீண்டலோடு பார்த்து நின்றார்கள்.

“நல்ல ஆளணி உள்ள இடமாத்தான் பிடிச்சிருக்கிற என்னடா!" அவர்களின் முணுமுணுப்பைக் காதுகளில் வாங்கியவன் முறைத்தான்.

"அப்பா அது..." நகர்ந்து தந்தையின் கரங்களைப் பற்றிக்கொண்டான்.

"நேர்ல சொல்லுவம் எண்டு நினைச்சன். அதுக்க பெரிய பிளான் எல்லாம் போட்டு எனக்கு வேலையே இல்லாமல் செய்தாச்சு!" சொன்னவன் குரலில் மகிழ்வு துள்ளிற்று!

“அடடே ரத்னா அக்கா வாங்க வாங்க!" திருமணப்பெண்ணின் தாயான மலரின் தங்கை மகள், விரைந்து வந்து வரவேற்றார்.

"ஏன் வெளில நிக்கிறீங்க, உள்ள வாங்க!" அழைத்துக்கொண்டு நகர்ந்தவர், "இவையளைத் தெரியுமா? சுகுணா அண்ணி நீங்களே இவயளப் பார்த்துக்கொள்ளுங்கோ!" அழைத்துச் சென்று அமர்த்திவிட்டு நகர்ந்து விட்டார்.

"எப்பிடிம்மா தெரியும்? வினித்தா மதியா உளறினது? சொல்லவே இல்ல எண்டு சாதிச்சான்கள்." என்றபடி நாதனுக்கருகில் அமர்ந்து கொண்டான், வேந்தன். அவன் மறுபுறம் தந்தை. தாய். நீளமாகப் போட்டிருந்த மேசையில் இரு குடும்பங்களும் எதிரெதிரே அமர்ந்துகொண்டார்கள். அப்போதுதான் இவர்களைக் கண்டுவிட்டு விரைந்து வந்திணைந்துகொண்டாள், கவி.

வந்ததிலிருந்து அவர்களோடு கதைத்தாலும், ‘எங்க இவள்?’ அவன் விழிகளோ இலக்கியாவைத் தேடியபடி!

"அவன் மதிய நேர்ல காணட்டும் எண்டுதான் இருக்கிறன்; பொல்லாத கல்லுளிமங்கன் ஒரு வார்த்த விடேல்ல. விக்கியும் சொல்லேல்ல. நீயும் வினித்தும் கதைச்சதக் கேட்டுட்டு அவன்ட அம்மாதான் சொன்னவா." என்ற ரத்னா, "எனக்குமே பிள்ளையப் பாத்தோன்ன பிடிச்சிருந்ததுதான்." என்றவர் பார்வை தள்ளியமர்ந்திருந்த கவியில்!

"வாம்மா, இப்பிடிப் பக்கத்தில வந்திருங்க!" தன்னருகில் வெறுமையாகவிருந்த இருக்கையைக் காட்டியழைத்தார்.

நாதனோடு கதைக்க முயன்ற வேந்தன் சட்டென்று திரும்பினான், இலக்கியாவைக் கண்டுவிடும் ஆவலோடு! முதல் நாளிலிருந்து கைபேசியைக் கூடத் தொடாது கலியாணத்து வந்தவளாச்சே!

அங்கேயோ, படபடத்த விழிகளோடும் இதழ்கள் நிறைந்த முறுவலோடும் வேந்தனைப் பார்த்த படி வந்தமர்ந்தது, கவி.

பேயறைந்தது போலாகிற்று வேந்தனுக்கு. மனதளவில் கடுமையாக அதிர்ந்திருவனால் சில கணங்கள் அசையக்கூட முடியவில்லை. அவன் புத்தி வேலையே செய்யவில்லை. கவியையே பார்த்திருந்தான் போலும்.

"போதுமடா தம்பி! நாங்களும் இருக்கிறம்." எதிரிலமர்ந்திருந்த சின்னத் தமக்கையின் சீண்டல் மட்டுமல்ல இவன் காலில் ஒரு மிதி கூடப் போட்டாளவள். பட்டென்று கலைந்தவன், "அங்கிள்!" நாதனின் கரத்தை அழுந்தப்பற்றியவனுக்கு வார்த்தைகள் வரேனென்றது.

‘அம்மா என்ன செய்து வச்சிருக்கிறீங்க?’ மனதுள் அலறியபடி தாய் புறம் பார்த்து முறைத்தான். அவன் மாற்றத்தை எல்லோருமே அவதானித்தார்கள். கவியுட்பட! இதுவரை தன்னை அவன் விரும்பவில்லை என்பது அவளுக்கு ஓரளவு தெரியும். அது எல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை. வீட்டினர் 'இவள் உனக்கானவள்' என்று கைகாட்டும் போது மறுக்கக் காரணம் இருக்காதென்றே நினைத்திருந்தாள். அதுபார்த்தால்...இவ்வளவு அதிர்வு ஏன்? உனக்கே உனக்கென்று நீட்டிப் பிடித்த பொருள் கைக்கெட்டும் தூரம் வந்து பட்டென்று விலகிவிட்ட உணர்வின் தாக்கத்தில் இருந்தாளாவள்.

மீண்டும் நாதனிடம் திரும்பியவன், "ஒரு நிமிசம் அங்கிள், வாறிங்களா?" எழுந்துவிட்டான்.

உறவினர் திருமண வீடு; கொஞ்சம் கொஞ்சமாக விருந்தினரை உள்வாங்கிக் கொண்டிருந்தது, மண்டபம்; அதற்குள் வச்சு இதை எப்படிக் கதைப்பது? 'ஐயோ!' என்றாகிற்று அவனுக்கு.

'முதல் இவள் எங்க?' மனதுள் பதற்றம் வேறு.

வேந்தனின் வேகநடைக்குத் தாக்குப் பிடிக்க முடியவில்லை, நாதனால். 'நிச்சயமாக ஏதோவொரு பிரச்சனை இருக்கு!' மனம் வேறு பதற்றத்தில் குதித்திருக்க, பின்னால் விரைந்தார்.

மண்டபத்தை விட்டு வெளியில் வந்த வேகத்தில், "அங்கிள் எப்படிச் சொல்ல எண்டே தெரியேல்ல. அம்மாவே பிழையா விளங்கி...பச்! வினித்ட அம்மா அரைகுறையா எதையோ சொல்லிப்போட்டா போல! இது எங்கட வாழ்க்கை. முறையா ரெண்டு குடும்பத்திட்டையும் சொல்லிச் செய்யவேணும் எண்டுதான் அவ்வவளவு பொறுத்திருந்தது. வெளிக்கிட்ட பயணம் நல்ல படியா முடியட்டும் எண்டு நாள்கள எண்ணிக்கொண்டு காத்திருந்தம் அங்கிள்!" சொன்னவன் கண்கள் கலங்கிற்று.

‘பிழையா விளங்கியது எண்டால் என்ன அர்த்தம்?’ நாதன் முகம் இறுக்கத்துக்குப் போயிருந்தது. அதை அவன் பொருட்படுத்தவில்லை.

"நானும் இலக்கியாவும் ஒருத்தர ஒருத்தர் விரும்பிறம் அங்கிள்." தொடங்கியவன், படபடவென்று ஒரே முச்சில் கொட்டிவிட்டான். இதை நாதனோ, இவர்கள் பின்னாலேயே எழுந்து வந்த அவர் சகோதர்களோ சற்றுமே எதிர்பார்க்கவில்லை என்றது அவர்கள் அதிர்வில் நின்ற நிலை.

நாதனின் பார்வை தன் பின்னால் செல்லத் திரும்பிப் பார்த்தான் வேந்தன். அவர்கள் நின்ற நிலையில் மிகவுமே அந்தரப்பட்டுவிட்டான்.

" அம்மா ஆக்கள் இப்பிடியெல்லாம் அவசரப்பட்டு உங்கட வீட்டில கதைப்பினம் எண்டு நான் கனவிலும் நினைகேல்ல! சொறி எண்டெல்லாம் ஈசியாச் சொல்லவும் முடியேல்ல! கவி...எனக்கு நல்லதொரு ஃபிரெண்ட், அதையும் விட என்ர இலக்கியாவிட சகோதரி. உங்கள் எல்லாரையுமே அப்பிடித்தான் நான் பார்த்தன். அடிக்கடி என்ர குடும்பத்தோட வாற உணர்வு எண்டு சொன்னது எல்லாமே அதை மனதில வச்சுத்தான்."
 

Author: ரோசி கஜன்
Article Title: அத்தியாயம் - 41
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

ரோசி கஜன்

Administrator
Staff member
Nov 11, 2018
1,719
1,113
113
மீண்டும் நாதனின் கரத்தைப் பற்ற, அவர் நாசுக்காக விலக்கிக்கொண்டார். அவருக்கு, அந்தக் கணம் அவனில் அவன் குடும்பத்தில் என்று நல்லாவே கோபம் வந்திட்டு. இலக்கியாவில் கூட! கவிக்கு இவனைப் பிடித்திருக்கென்று சொன்னதை இவன் அறியானே! இதைக் கேட்டால் அவள் உள்ளம் என்ன பாடு படும். அதுவும் தான் விரும்பியவன் தங்கையின் காதலனென்று அறிக்கையில்! அங்கு நின்ற அக்குடும்ப ஆண்கள் நால்வரின் மனதிலும் பதற்றமும் கோபமும்.

"பயணம் வெளிக்கிட்ட அண்டு இவரைக் கண்டதும் இலக்கி என்ன செய்திருக்க வேணும் அண்ணா? அண்டைக்கு போட்டில கூட்டிக்கொண்டு வந்து விட்டது இவர் தானெண்டு சொல்லியிருக்க வேணுமா இல்லையா? அவளை நல்ல புத்திசாலி எண்டு நினைச்சம். எவ்வளவு அன்பும் நம்பிக்கையும் வச்சிருந்தம். எல்லாத்தையும் விடுங்க, இதையெல்லாம் கேட்டா அம்மா எவ்வளவு மனக்கஸ்டப்படுவா! வீட்டில பெரிய பிள்ளைகளே இப்படியெல்லாம் நடந்தா சின்னவே பாடு!" தமையனைப் பார்த்துக் கேட்டார், நாதன். முகம் இறுக நின்ற சுதர்சன் வாய்திறக்கவில்லை.

"அங்கிள் ...அது வந்து...” ஆரம்பித்த வேந்தனை நாதனின் உயர்ந்த கை நிறுத்தியிருந்தது.

"இது நீங்க நினைக்கிறது போல சின்னப் பிரச்சினை இல்ல வேந்தன்.” என்று அவர் தொடங்க, "சரி எல்லாம் விடுங்க, நேற்றிரவு இவருக்கும் கவிக்கும் கலியாணப் பேச்சு முற்றுவரை வந்திட்டு என்றதக் கேட்டுக்கொண்டு பேசாமல் தானே நிண்டவள் இலக்கியா?" இடையிட்டது சிவாவின் குரல்.

"அதுதானே! இப்பிடி சொந்தக்காரரிண்ட கலியாண வீட்டில வச்சு நாம பரிசிகெட வேணும் எண்டா அப்படி அங்க நிண்டவள்?" மீண்டும் நாதன்.

சுதர்சன் கண்கள் கலங்கி நின்றார். முதல் நாள் கல்யாணக் கதையைச் சொன்னதும் கவியைக் கட்டிப்பிடித்து அவள் அழுததுதான் அவர் நினைவில். 'விட்டுக் கொடுத்திட்டு விலகிர நினைச்சிட்டாளா? சந்தோசமா வந்திறங்கியவளுக்கு அவ்வளவு முடியாமல் போற அளவுக்குக் காய்ச்சல் எப்பிடி வரும்? என்ர பிள்ளை மனசுக்கு வச்சுக்க குமைஞ்சு கொண்டிருந்திருக்கிறாள்' இலக்கியாவின் சின்ன முக வாட்டத்தையும் பார்க்க விரும்ப மாட்டார் சுதர்சன். இன்று? குடும்பத்தினரின் கோபத்துக்கு, அப்படியில்லை வெறுப்புக்கு ஆளாகிவிடுவாளோ என்று பதறியது அவருள்ளம்.

"அங்கிள் நாங்க இங்க வருவம் எண்டு எனக்கே வந்தப் பிறகுதான் தெரியும். அப்படியிருக்க அவளுக்கு எப்பிடித் தெரியும்? அவள் இரவிலிருந்து நான் எடுக்க எடுக்க கதைக்கவும் இல்ல. ஃ போன் ஓஃப்லதான் இருந்திச்சு." படபடத்தான், வேந்தன். இலக்கியாவைக் குற்றவாளியாக்குகிறார்களே, அவனுக்கு முன்னால் வைத்தே!

"நீங்க இப்ப வந்து என்னதான் சொல்லுங்க வேந்தன், உங்களிட்ட இருந்து இதை நான் எதிர்பார்க்கேல்ல. அண்டைக்கு கிரிஃப்த் ஒப்சர்வேட்டரில இருந்து வரேக்க தான் அண்ணா சொல்லி எங்களுக்கு விசயம் தெரியும். உங்கட அம்மா கவியும் நீங்களும் விரும்பிறதாத்தான் சொல்லிக் கதைச்சிருக்கிறா. எனக்குக் கூட சரியான கோவம் வந்திச்சு, உங்களிலும் கவியிலும்." நாதன் சொல்கையில், அன்று அவர்கள் பார்த்த பார்வைக்கு அர்த்தம் புரிந்திட்டு, அவனுக்கு.

"அப்பவே என்னட்ட நீங்க கேட்டிருக்கலாம் அங்கிள். எத்தனையோ தரம் உங்களிட்டச் சொல்ல நினைச்சிட்டு ...பச் ....பயணத்தில சின்னதாகவும் பிரச்சினை ஏன் எண்டு விட்டுட்டன். இலக்கியாவுமே அதை விரும்பேல்ல. வீட்டில சொல்லி நாளைக்கு உங்களோடு கதைப்பம் எண்டுதான் நினைச்சிருந்தன் அங்கிள்."

பரிதாபமாக இருந்தது அவன் சொன்ன விதம். இருந்தாலும் நாதன், மாறன், சிவாவுக்கு கோபமே வந்திட்டு. சுதர்சனோ, மகள்களைப் பற்றியே எண்ணிக்கொண்டு நின்றார். அவர்களிடையே இப்படியொரு விசயம் நடைபெறுமென்று கனவிலும் அவர் எண்ணியிருக்கவில்லை.

"பயணம் முழுதும் ரெண்டு பேரும் கடிபட்டுக்கொண்டு வந்து எங்களை எல்லாம் முட்டாள் ஆக்கியிருக்கிறீங்க என்ன?" நாதன் சீறினார் என்றே சொல்லலாம்.

அப்படி அவர் கோபப்படுவதை பார்த்தபடியே வந்த வேந்தனின் தாய் தந்தையின் முகத்தில் பெரும் குழப்பம்.

மகன் நாதனை இழுத்துக்கொண்டு எழுந்த விதம் அவர்களுக்குப் பெரும் குழப்பத்தையே கொடுத்தது. “என்ன எண்டு பார்த்திட்டு வாறம்.” என்று சுதர்சனம் ஆக்கள் எழுந்து செல்கையில் என்ன செய்வதென்று புரியாதமர்ந்திருந்தவர்களால் ஏழெட்டு நிமிடங்கள் கூடப் பொறுக்க முடியவில்லை. தாமும் எழுந்து வந்திருந்தார்கள். நல்லவேளையாக கவி, சுகுணா, மலர் மூவரும் கலியாண அலுவல்களில் தவிர்க்க முடியாதுதான் எழுந்து சென்றிருந்தார்கள்.

"என்ன தம்பி பிரச்சினை?" என்று வந்த தாயை முறைப்பதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை, வேந்தனுக்கு.

"எல்லாம் உங்களால அம்மா..." தொடங்கிய வேகத்தில் நிறுத்திவிட்டான். என்னதான் என்றாலும் நாதன் ஆட்களுக்கு முன்னால் வைத்துத் தாயோடு அப்படிக் கதைக்கத் தொடங்கியதில் தன்னிலேயே கோபம் கொண்டான்.

மகன் நின்ற விதமும் கதையும் வேந்தனின் பெற்றோரைக் குழப்பத்திலாழ்த்தியது.

“ஒண்ணுமே விளங்கேல்ல...சொன்னாத்தானே தெரியும்.” வேந்தனின் தந்தை மகனைப் பார்த்துத்தான் சொன்னார். சற்று முன்வரை எவ்வளவு மகிழ்வோடிருந்தார்கள்.

நாதன் பக்கத்தில் யாரும் வாய் திறக்கவில்லை. 'உன்ரயும் உங்கட வீட்டாக்களிடயும் கெட்டித்தனம் பற்றி நீயே சொல்லேன்' என்ற மாதிரி ஒரு பார்வை பார்த்தார், நாதன்.

"அம்மா...நான் இலக்கியா...அதான் அங்கிளிட ரெண்டாவது மகளத்தான் விரும்பிறன். ரெண்டு பேருமே ஒருத்தர ஒருத்தர் விரும்பிறம்." என்றாரம்பித்துச் சுருக்கமாகச் சொல்லிவிட்டவன், "வினித்ட அம்மா அரையும் குறையுமாக் கேட்டுட்டுச் சொன்னா நீங்களும் அவசரப்பட்டுக் கதைச்சிருக்க வேணாம் மா. இப்பப் பாருங்க தேவையில்லாத குழப்பம். கவிக்கும் தேவையே இல்லாமல் மனக்கஷ்டம்." வருத்தத்தோடு சொன்னவனைப் பார்க்கப் பிடிக்காது நகர எண்ணினார், நாதன். அதற்குள், "இலக்கியாதான்!" சிணுங்கிய கைபேசியைக் காதில் பொருத்தினான், மாறன்.

"வேந்தன்...இப்ப என்னப்புச் செய்யிறது? நீ இப்படிச் சொன்னாலும் அந்தப் பிள்ளை கவியை எங்கள் எல்லாருக்குமே பிடிச்சிருக்கடா!" அவனருகில் நெருங்கி நின்று கெஞ்சலாகச் சொன்ன தாயின் கரத்தை உதறிவிட்ட வேந்தன் முகத்தில் எக்கச்சக்கக் கோபம்!

"இப்ப என்ன சொல்ல வாறீங்க எண்டு விளங்குதா உங்களுக்கு!" அடிக்குரலில் வார்த்தைகளைத் தள்ளிவிட்டான்.

அப்போதும் அவன் பார்வை மட்டும் மாறனில். 'இலக்கியா இங்க எங்கோதான் நிக்கிறாளா? இதையெல்லாம் பார்த்து எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாள்.' உடனே அவளை பார்க்க ஆசைகொண்டு நின்றானவன்.

‘ஆர் என்ன சொல்லட்டும் உனக்கு நான் எனக்கு நீ எண்டு முடிவாகிப் பலநாட்களாச்சு!' மனதுள் சொல்லிக்கொண்டான். அதேநேரம், 'அண்டைக்கு நான் வாங்கிப் பரிசாக் குடுத்த உடுப்பக் குடுத்தது போல என்னையும் குடுக்க நினைச்சிட்டாளோ!' மனம் சீறலிலும் இறங்கியிருந்தது.

மாறனோ, மறுபுறம் சொன்னதை ஒரு நிமிடமும் கேட்டிரான், ஒத்த வார்த்தை பேசவில்லை. அழைப்பைத் துண்டித்துவிட்டு இறுகிய முகத்தோடு சுதர்சனையும் நாதனையும் மாறி மாறிப் பார்த்தவன் கோவத்தை அடக்கிக்கொள்ள முயல்வது தெரிந்தது.
 

ரோசி கஜன்

Administrator
Staff member
Nov 11, 2018
1,719
1,113
113
"இலக்கி...இலக்கியா கலியாணத்துக்கு வரேல்லையா?" வேந்தன்.

அவன் புறம் திரும்பவில்லை மாறன். "உங்கட மகள்...தான் அறைக்குப் போய்ட்டாளாம். தகவல் சொன்னாள்." சுதர்சனிடம் சொல்லிவிட்டு, "இப்ப இந்த விசயத்தை இங்க வச்சுக் கதைக்காமல் பிறகு கதைக்கிறதுதான் நல்லது அண்ணா! " என்றான், கோபம் மறையாத குரலில்.

"நான்...நான் தான் எல்லாத்துக்கும் காரணம், மன்னிச்சுக்கொள்ளுங்கோ!" கண்கள் கலங்கச் சொன்னார், ரத்னா. அவருக்குப் பெருத்த அவமானமாக இருந்தது. வாழ்க்கையில் இப்படி ஒருபோதும் நடந்ததில்லை.

அவர் மகனுக்கு அப்படியெல்லாம் இல்லைப்போலும். "அங்கிள் இலக்கி வரேல்லையா? மீண்டும் அதையறிவதிலேயே குறியாக நின்றவனை முறைப்போடு பார்த்தார், ரத்னா.

"அதான் இப்பச் சொன்னனே..." வெடுக்கென்று சொல்லி வேந்தன் முகத்தைச் சுருங்க வைத்த மாறன் தொடர்ந்தான்.

"வந்தவள், சொல்லாமல் கொள்ளாமல் போயிட்டாள். அறையில போயிருந்துகொண்டு தகவல் சொல்லுறாள்." இலக்கியாவிடவிருந்து இது எதையுமே அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அந்தக் கோபத்தோடுதான் சொன்னான்.

"இங்க நாங்க வந்ததைக் கண்டிட்டுத்தான் போனாளோ!" என்ற வேந்தனை மிகுந்த அதிருப்தியோடு பார்த்தார், ரத்னா.

'தன்ர இஷ்டத்துக்கு எல்லாம் செய்யிற பிள்ளை போல!' மனதுள் சொன்னவர், ஒரே ஒருதடவை 'ஹை' சொன்ன இலக்கியின் முகத்தை நினைவுக்குக்கொண்டு வர முயன்று தோற்றவருக்கு, மகனருகில் அவன் வாழ்க்கைத் துணையாக நிறுத்தி வைத்து அழகுபார்த்துவிட்ட கவியை விலக்கிட மனமே வரேன் என்றது.

மகனிடம் அதைச் சொல்லவா முடியும்? முதல், இருவரும் விரும்புகின்றோம் என்று சொல்கையில்...இரு மகள்களைப் பெற்ற அன்னையாக அப்படியெல்லாம் சிந்திக்கவும் முடியவில்லை. கலங்கிவிட்ட கண்களைக் காட்டப் பிரியப்படாது மறுபுறம் திரும்பி தன் தவிப்பை மறைக்க முயன்றார்.

"சரி, பிறகு கதைப்பம்.” வேந்தனின் பெற்றோரைப் பார்த்துச் சொல்லிவிட்டு நகர முயன்ற சுதர்சன், "இலக்கியா தான்." என்றபடி வேந்தன் கைபேசியைப் பார்வையிட நின்று என்னவென்பதாகப் பார்த்தார்.

அவசரம் அவசரமாக வாசித்தவன் முகம் உணர்வுகளை மறைக்காது அள்ளித் தெளித்துக்கொண்டிருந்ததை, அவனையே பார்த்திருந்தவர்களால் புரிந்துகொள்ள முடிந்தது. நாதன், சகோதர்களை பார்த்தார். நிமிடத்தில் வாசித்துவிட்ட வேந்தன், நாதன் முன்னால் கைபேசியை நீட்டினான். கேள்வியாகப் பார்த்தாரவர். வாங்கிக் கொள்ளவில்லை.

டப்பென்று அவளனுப்பிய செய்தியை நாதனுக்கு அனுப்பியவன், "வாசிச்சுப் பாருங்க அங்கிள்!" என்றவன், குரலில் கோபம் தெறித்தது.

"இவளுக்குப் பெரிய தியாகி எண்ட நினைப்பு!" வெளிப்படையாகவே சொல்லி பற்களை நறநறத்தான். ஓங்கி ஒரு குத்து விடும் ஆத்திரம். செய்தான். அருகிலிருந்து சுவரில். “தம்பி உனக்கென்ன விசரே!” பதறிப்போனார், ரத்னா. “காட்டான் வேலையெல்லாம் செய்யிறான் பாருங்க!” கணவரிடம் தழுதழுத்தார்.

“வேந்தன்!” அடிக்குரலில் ஒரு அதட்டல் தந்தையிடமிருந்து. அவன் அவரைப் பார்த்தால் தானே! “கன்ட்ரோல் யுவர் ஸெல்ப்! இப்ப என்ன நடந்திட்டு? நான் நினைக்கிறன் இதெல்லாம் நமக்குத் தேவையில்லாத விசயங்கள்." கடினத்தோடு உதிர்ந்தன அவன் தந்தையின் வார்த்தைகள்.

அவன் பதிலொன்றும் சொல்லவில்லை. "சொறி" முணுமுணுத்தான். எதிர்பார்த்தானே! அதுதான் நடந்திருக்கு. 'வேந்தன் எனக்கு உங்களில உண்மையான அன்பு இல்ல எண்டு நினைக்கிறன். அப்பிடி இருந்திருந்தா வீட்டில உங்களுக்கும் அக்காவுக்கும் கலியாணம் முற்றாக்கி இருக்கெண்டு சொல்லேக்க சிரிச்சுக்கொண்டே அக்காவுக்கு வாழ்த்துச் சொல்லியிருக்க முடியாது. ஓம் தானே. அவரும் நானும் விரும்பிறம் எண்டு சொல்லி இருப்பனே! நான் சொல்லேல்ல வேந்தன். இனியும் சொல்ல மாட்டன். உங்கள உண்மையாவே விரும்பாத ஒருத்திய விட உங்கள விரும்பிற உங்கட வீட்டாக்கள் எல்லாருக்கும் பிடிச்ச கவிக்கா உங்களுக்கு நல்ல பொருத்தம். எனக்கும் அதில சரியான சந்தோசம். அதனால எனக்கும் உங்களுக்கும் இனி ஒரு பேச்சு வார்த்தையும் வேணாம். இதுக்குப் பதில் கூடப் போட வேணாம். தயவு செய்து. புரிஞ்சு கொள்வீங்க என்ற நம்பிக்கையுடன்.’ இலக்கியா சுதர்சன்.

வாசித்துவிட்டு நாதன் நீட்டிய கைபேசியை வாங்கி ஒவ்வொரு வார்த்தைகளாக வாசித்த சுதர்சன் கண்களால் கடகடவென்று உருண்டு தெறித்திட்டு கண்ணீர். தம்பிமாரை நிமிர்ந்து பார்த்தவரால் கதைக்க முடியவிலை.

"அவள்... என்ர மகள். சின்னனில இருந்து சின்னதாகக் கூட பிரச்சினை தராள். எல்லாம் சமாளிச்சுப்போக நினைக்கிற பிள்ள! இப்ப இங்க நடந்ததும் அவள்ட கைமீறின விசயம். தனக்குத் தெரிஞ்ச வகையில முடிவெடுத்திருக்கிறாள்." கைபேசியை சகோதரனிடம் நீட்டியவர், "இதை எழுத அவள் என்ன பாடு பட்டிருப்பாள் எண்டு எங்களுக்குத் தெரியும் தம்பி. கலியாண வீடு முடியவிட்டு நாங்க கதைப்பமே! ப்ளீஸ்.” என்றார், கெஞ்சலோடு.

'பெரியவளைச் சமாதானம் செய்து சின்னவளுக்கு அவள் விரும்பிய வாழ்க்கையை அமைச்சுக் குடுக்க வேணும்.' இரண்டு மகள்களுக்கும் தந்தையாக முடிவெடுத்தது, அவருள்ளம்.

"அப்படி என்ன அனுப்பி இருக்கிறா தாங்க தம்பி பார்ப்பம்." ரத்னா, மகன் கரத்திலிருந்து கைபேசியை எடுத்துக்கொண்டவர் கடகடவென்று வாசித்தார்.

"உங்கட சின்ன மகள் சொல்லுறதிலும் உண்மை இருக்கு. உண்மையா விரும்பியிருக்க இத்தறிக்கு உங்களிட்டச் சொல்லி எல்லா இருக்க வேணும்!?" என்ற தாயைப் பார்த்த வேந்தன் பார்வையே, "நிப்பாட்டுங்கம்மா!' என்று சொல்லிற்று!

"என்னவோ செய். எத்தின இடத்தில உனக்குப் பார்த்திருப்பன்? எப்பயாவது உனக்குப் பிடிக்காதது செய்ய நினைச்சனானா? இப்பயும் உன்ர விருப்பத்த நிறைவேற்றுவம் எண்டுதான் நினைச்சன். அதுக்கு இப்பிடி முறைக்கிற! நீ முதலே சொல்லியிருக்க இப்ப இதுவரை வந்திராது. நீங்க வாங்கப்பா, இதில நிண்டு சீன் போட்டது காணும்." கணவரையும் அழைத்துக்கொண்டு விறுவிறுவென்று உள்ளே நடந்தவர், ‘அப்பிடியெண்டா கவிக்கும் இவனில் விருப்பமோ!' என்றெழுந்த எண்ணத்தில் தலை சுற்றியது, அவருக்கு.

'அந்தக் குடும்பத்தில இவன் எப்பிடி சந்தோசமா இருப்பான்?' யோசனையில் ஆழ்ந்த மனம், இப்போது இந்தக் குடும்பத்தில் சம்பந்தம் வேணுமா என்றளவில் வந்து நின்றிட்டு!

இவ்வளவுக்கும் பிறகு எதுவுமே நடவாத பாவனையில் அவர்களோடு சென்றமரவும் முடியவில்லை.

இவர்களைக் கடந்து சென்ற சிவா, மாறனைப் பார்க்கவே முடியவில்லை, அவர்களால். "இதில ஆருமே வேணுமெண்டு ஒண்ணும் செய்யேல்ல. இந்தக் கலியாணத்த முடிச்சிட்டுக் கதைப்பம். அவையல் விரும்பிறம் எண்டு சொல்லேக்க கதைக்கவும் ஒண்ணும் இல்ல." ஓரமாக ஒதுங்கி நின்றுவிட்ட மனைவியைச் சமாதானம் செய்ய முயன்றார், வேந்தனின் தந்தை.

"நீங்க கொஞ்சம் பொறுமையாவும் இருந்திருக்கலாம் ரத்னா. நான் அப்பவும் சொன்னன் என்ன? விக்கிட அம்மா அரசல் புரசலா காதில விழுந்திச்சு எண்டுதானே சொன்னா!" தொடர்ந்த கணவரைக் கலங்கிய விழிகளோடு ஏறிட்டார், ரத்னா.

"நான் இப்பிடியெல்லாம் நடக்க வேணும் எண்டு ஆசைப்பட்டனான என்ன? எனக்கு உண்மையாவே அந்தப் பிள்ள கவியைப் பிடிச்சிருந்ததப்பா. கதைக்கிற நேரமெல்லாம் வேந்தனோட வேற நிண்டாவா, இரண்டும் இரண்டும் நாலென்று கணக்குப் போடுவினமா இல்லையா சொல்லுங்க!"

கேள்விபட்டதிலிருந்து எவ்வளவு மகிழ்வோடு ஒவ்வொன்றையும் செய்தார். கவிக்குப் பொருத்தமாக இருக்குமென்று, மருமகளாகப் போகிறவளுக்கு மனக்கண்ணில் அணிவித்துப்பார்த்து நகை வேறு வாங்கி வந்திருந்தார், முதல் முதல் பார்க்கையில் கொடுக்கவென்று. வேந்தன் கையில் இருந்த பரிசுப்பொருள் அவளுக்காக வாங்கியது. கண்களைத் துடைத்துக்கொண்டார் ரத்னா.

அவருக்குக் கவியின் தங்கை அவ்வளவாக நினைவில் வரவும் இல்லை, பிடிக்கவும் இல்லை. "உண்மையாக விரும்பியிருந்தால் மறைப்பானேன். சொல்லியிருக்க, இப்ப இதுவரை வந்திராதே! நேற்றே சுதர்சன் எடுத்துக் கதைச்சிருப்பாரே! அதைவிட்டுட்டு தமக்கைக்கு ஆசைகாட்டி மோசம் செய்யிறது போல இல்லையா அந்தப் பிள்ளேட வேல!" கணவனிடம் பொரிந்து தள்ளுவதைத்தானே செய்யவியலும். ஆற்றாமையோடு புலம்பினார்.

"கண்டோன்ன காதலிக்கத் தெரிஞ்சவாக்கு அந்தக் காதலன் மனம், குணம் தெரியாதாக்கும்! இவா உன்ன விரும்பேல்ல என்டோன்ன அவன் விட்டுப்போட்டு அவாட தமக்கையைக் கட்டிடிட்டுத்தான் மற்ற வேலை பார்ப்பான். அந்தப் பிள்ளைக்கு வாழ்க்கை என்ன அவ்வளவு விளையாட்டுப் பொருள் ஆகிட்டா? இவளச் செய்து என்ர மகனால் எப்பிடி சந்தோசமா வாழ்க்க நடத்த முடியும் சொல்லுங்க! பொறுப்பில்லாத பிள்ள!" தொடர்ந்த மனைவியைச் சமாதானம் செய்வதெப்படி! முதல், அவருள்ளும் இதே எண்ணம் தான்.

அதேநேரம் மகனில், மகன் தெரிவில் நம்பிக்கையில்லாதும் இருக்க முடியவில்லை. அதே குடும்பத்தில் சம்பந்தம் செய்வதென்றால் சின்னதாகவேனும் மனக்கசப்பு வந்துவிடாது பார்த்துக்கொள்ள வேண்டும். அவர் கவலையிது!

"வேந்தன் வீட்ட போய்ட்டானோப்பா!" அதுவரை மகன் உள்ளே வரவில்லையென்றதும் கேட்டவர், "நாமளும் போவம், பிள்ளைகள் இருந்து போட்டு கலியாணம் முடிய வரட்டும்." வெளியேற எத்தனிக்கையில் அவர்களை நோக்கி வந்தாள், கவி.