அத்தியாயம் - 5

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ரோசி கஜன்

Administrator
Staff member
Nov 11, 2018
1,719
1,113
113
“அக்காகோய்! மாப்பிள்ள ஃபோட்டோ பாக்காதது உங்கட பிழை. சரி அதும் நல்லதுக்குத்தான். இப்ப நேரயே பாத்தாச்சு எல்லா?! எப்பிடிப் பிடிச்சிருக்காக்கா? அவருக்கு உங்கள நல்லாப் பிடிச்சிருக்காம். ஃபோட்டோவிலயே பிடிச்சது இப்ப டபிள் டிரிபில் ஒகேவாம்!” அப்பட்டமான மகிழ்வைக் காட்டிய தங்கை முகத்திலிருந்து பார்வையைத் திருப்பிக்கொண்டாள், கயல்.

“முதல் லைட்டைப் போடுங்க பாப்பம். முகம் பாத்துக் கதைக்கத்தானே வீடியோ? அங்க உங்கட வெள்ளை முழி மட்டும் தான் லைட்டா தெரியுது! வெக்கத்தில சிவக்கிறத எப்பிடி நான் பாக்கிறது?” தொடர்ந்து கடித்தாள், சுடர்விழி. விசுக்கென்று நகர்ந்தது கயலின் கரம். மறுநொடியே, அவள் முகத்தின் சிடுசிடுப்பை சகோதரிக்குக் கடத்துவதே தன் பிரதான கடமை என்ற வகையில் படுக்கையருகிலிருந்த அழகிய விளக்கு உயிர் பெற்றது. பட்டென்று முகம் சுருங்கிப் போனாள், சுடர்விழி.

“ஏனக்கா? இந்த மாப்பிள்ளையும் பிடிக்கேல்லையா?” குரலின் சுருதி வெகுவாகக் குறைந்திருந்தது. முகத்தில் அப்பட்டமான ஏமாற்றம்!

“பச்!” பதில் சொல்லவா வேண்டும் என்ற வகையில் பார்த்திருந்தாள் கயல்விழி.

“பூபாலன் அண்ணாட நெருங்கின சிநேகிதனாம். அது மட்டும் இல்ல அம்மாக்குத் தூரத்துச் சொந்தமும்.” தமக்கையின் முகத்தின் இறுக்கம் அதிகரிப்பதைப் பார்த்தாலும் விடாது தொடர்ந்தாள், தங்கை.

“நல்ல குடும்பம். நாங்க அவையள் எல்லாரோடையும் கதைச்சம் கா! நல்ல பெடி! பிடிக்கேல்ல எண்டா ஒரு காரணம் பொருத்தமாச் சொல்லுங்க பாப்பம்? சும்மா சும்மா தட்டிக் கழிக்கிற விளையாட்டு இந்த முறை செல்லாது சொல்லிட்டன்.” படபடவென்று பொரிந்தாள்.

தன்னை வெருட்டும் தங்கையைப் பார்க்கையில் வேடிக்கையாகவிருந்தது, கயல்விழிக்கு. மெல்லிய முறுவல் உதட்டில் முளைத்திருந்தது. அதைப் பார்த்த சுடர் மனமோ துள்ளிற்று, ‘அப்பாடா அக்காக்குப் பிடிச்சிட்டு!’ என்று.

“இங்க பாரடி, அவர் ஆரா வேணும் எண்டாலும் இருக்கட்டும். ஆனா, என்ர வாழ்க்க பத்தி நான் தானே முடிவெடுக்க வேணும்? அதென்ன நீங்களாப் பாத்து முடிவெடுக்கிறது. அமெரிக்கா போனதும் இங்க பூபாலன் வீட்ட போயிரு, அவையோட தொடர்பில இரு எண்டு எல்லாரும் மாறி மாறிச் சொன்னதுக்குப் பின்னால இருக்கிற விசயம் இது தான் எண்டு எனக்குத் தெரியாமல் போச்சுதே!” சொல்லிக்கொண்டு வந்தவள் தங்கையினருகில் அசைவுணர்ந்தாள்.

தமக்கை நெற்றி சுருங்க, “அது அம்மாதான் கா!” என்றாள், சுடர்விழி.

இவள் மனதுள் சுறுசுறுவென்று எரிச்சல் பரவியது. “வீட்டில கலியாண வயதில் பிள்ளைகள் இருந்தா இதெல்லாம் வழமைதான் சுடர்; ஆனா, இந்த வழமைகளுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லையே!” என்றவள், தொடர்ந்து சொல்ல முயன்ற நாவை கட்டுப்படுத்திக்கொண்டாள். ‘திடீர்ப் பாசம் பொத்துக்கொண்டு வருதாக்கும். இன்னும் கலியாணம் நடக்கேல்ல எண்டு நான் அழுது கொண்டு திரிய இவையள் எனக்கு உதவ வருகினமோ!’ மனம் முறுக்கிற்று.

“ஏனக்கா இப்பிடி எல்லாம் கதைக்கிறீங்க?” சுடர்விழியின் விழிகள் நிறைந்து போயின.

“இங்க பார் கயல், உன்னில எப்பவும் எங்களுக்கு அக்கறையும் அன்பும் இருக்கு, சுடர் போலவே. எந்த வழமையும் செய்ய முடியாமல் உன்ர அம்மம்மா வீட்டிலயே இருந்தது நீதான்.” வேதாவின் கண்களும் கலங்கியிருந்தன.

“எல்லாம் விளங்கிற அறிவான பிள்ள நீ, இது மட்டும், என்னை மட்டும் விளங்க ஏலாமல் இருக்குதே! உனக்கு அதுக்கு மனம் இல்ல போ!” படபடவென்று சொன்னவர், தெறித்து விழுந்த விழிநீரை துடைத்துக்கொண்டே விசுக்கென்று எழுந்து சென்று விட்டார்.

சுடர் ஒன்றும் சொல்லவில்லை. தமக்கையையே பார்த்திருந்தவளின் பார்வை, தாயின் மனக்குறை அப்படியேயுள்ளது என்றது.

“இங்க பார் சுடர், இப்ப நான் உங்க ஆரிலும் குறை கண்டுபிடிக்கவோ சொல்லவோ வரேல்ல. எனக்கு இந்தக் கலியாணம் பிடிக்கேல்ல. என்ர சம்மதம் தெரிய முதலே, என்னட்டயே கலியாணத்துக்குப் பிறகு இப்பிடிச் செய் அப்பிடிச் செய் இங்க வேலைக்குப் போகலாம் அங்க இருக்கலாம் எண்டு தங்கட திட்டத்தைச் சொல்லினம்.” சொன்னவள், தீர்க்கமாகத் தங்கையைப் பார்த்தாள்.

‘எனக்காக முடிவெடுக்கிற மாப்பிள்ளையும் அவரிட வீட்டாரும் அதுக்குப் பாசம், அக்கறை எண்டு பெயர் வச்சாலும் எனக்கு அதெல்லாம் தாக்குப் பிடிக்க முடியாது; என்ர வாழ்கையில எந்தக் கட்டத்திலும் ஆரும் மூக்கை நுழைக்கத் தேவையில்ல.’ வெட்டு ஒன்று துண்டு ரெண்டாகச் சொல்லவே விரும்பினாள். சின்னவள் என்ன மாதிரி விளங்குவாளோ என்ற தயக்கம் சொல்ல விடவில்லை.

“விடு, எனக்குச் சரிவராது!” தங்கையிடம் இப்படிச் சொன்ன வேகத்தில், சிறியதாயாருக்கு அழைத்தாள்.

“சொல்லு கயல்.” என்ற வேதா அமைதியாகவிருந்தார்.

“அவ்வளவு நல்ல இடம் எண்டா பேசாமல் சுடருக்குச் செய்து வையுங்கோ சித்தி, உண்மையா மனதாரத்தான் சொல்லுறன். எனக்கு இப்ப அவசரமாக் கலியாணம் செய்யிற பிளான் இல்ல. அதோட வெளிநாட்டில தொடர்ந்து இருக்கிறது எல்லாம் சரி வராது.” தன்மையாகவே சொல்லியும் விட்டாள். அப்பவும் வேதா எதுவும் சொல்லவில்லை. இவள் அம்மம்மாவும் தாத்தாவும் தான் மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்துவிட்டு விட்டுவிட்டார்கள்.

காயுவால் அப்படியிருக்க முடியவில்லை. மறுநாள், முதல் வேலையே இதுதான் என்றவகையில் கதைத்துக்கொண்டு வந்தாள். இரவு வரிசையாக வீட்டினரோடு வாதாடியிருந்த எரிச்சலின் மிச்சம் அப்படியே விழிகளில் நிறைந்திருக்கப் பார்த்தாள், கயல்விழி.

“நான் இங்க வந்து நிக்கிறதே லாதியோட சந்தோசமா நிண்டுட்டுப் போக. அதுக்க நீங்க இப்பிடித் தேவையில்லாம எல்லாம் கரைச்சல் தந்தா இனி வரமாட்டன் சொல்லிப்போட்டன்.” அந்த மாப்பிள்ளை பற்றியே நொய் நொய் என்று கதைத்து, இவள் தலையாட்டலைப் பெற்றே தீருவேன் என்றவகையில் காயு நிற்க, எரிச்சலில் இப்படிச் சொல்லிவிட்டாள்.கேட்ட காயுவும் கேட்டுக்கொண்டே வந்த பூபாலனும் முகம் சுருங்கிப் போயினர்.


மேலும் வாசிக்க ...

 

Author: ரோசி கஜன்
Article Title: அத்தியாயம் - 5
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.