“அப்பு அண்ணே, ஒரு கை பிடியுங்கோவன். நித்திர கொண்டிட்டார் போலக் கிடக்கு!”
“இந்தப் பெடி ஏன்தான் இப்பிடிக் குடிச்சுக் குடிச்சுச் சாகுதோ! பார்த்து... பார்த்து...”
“அண்ணே! சூரியாண்ணே இங்க பாருங்கோ, உங்கட வீடு வந்திட்டு!”
கன்னத்தில் விழுந்த தட்டில் இலேசாகச் சொரணை வந்தது. ஆட்டோவின் தாலாட்டில் அயர்ந்து தூங்கிப்போனேன் போல!
பச்! தூங்கியிருந்தால் அவர்கள் கதைத்துக் கொண்டது எப்படிக் கேட்டிருக்கும்? இலேசாகக் கண்கள் செருகீற்றுத் தான்.
“பார்த்து அண்ணே ... பார்த்து ” அவர்களும் சேர்ந்து தள்ளாடினார்கள்.
“உள்ப்பக்கமாகத் தள்ளுங்க!” கேட்டைத் திறந்தார்கள்.
ஆட்டோவின் சத்தத்தில் அம்மா நிச்சயம் கதவு திறந்திருப்பார்.
வெகுவாக முயன்று கண்களைத் திறக்கவும் துவண்ட கால்களை நேராக வைக்கவும் முயன்றேன். அவர்களும் தம் பங்கிற்கு இருபக்கமும் தோள் மூட்டில் பலமாகப் பிடித்திருந்தார்கள்.
கிட்டத்தட்ட இழுத்துச் சென்றார்கள். அவர்களுக்கு இது தேவையா என்ன? புத்திக்குத் தெரியுது; கேடுகெட்ட மனம்!
‘ஆட்டோவுக்குக் காசு குடுக்க வேணுமே - பெடியன் பாவம்!’
அதே கேடுகெட்ட மனம்தான் இப்படியும் சிந்தித்தது.
“காசு ...ஆட்டோக்கு...” நேராக நிற்க முயன்றபடி, சட்டைப் பைக்குள் துலாவ முயன்றேன்.
“விடுங்கண்ணே, நாளைக்குத் தாங்க; இப்ப நான் குடுக்கிறன்.” என்றான் பெடியன்.
“நன்...றி...டா...” குழறினேன். வீட்டு வாயிலுக்கு வந்திருந்தோம். இல்லையில்லை கொண்டு வரப்பட்டிருந்தேன்.
அந்த இரவுப்பொழுதில் முற்றத்தில் படர்ந்திருந்த ஊசி மல்லிகையின் சுகந்தம் என் தேவதையை என்னருகில் அழைத்திழுத்து வந்தது.
வலதுபக்கக் கரத்தை விடுவித்து வாயிலருகில் இருந்த தூணைப் பிடித்துக் கொண்டேன். என் வாழ்வைப் போலவே அதுவும் சிதிலமடைந்து கிடந்தது. வீடும் தான். தாத்தா காலத்து வீடு. பிரச்சனைகளின் வடுக்களை முழுமையாக ஆற்ற அவ்வளவாக வசதியின்றிக் கிடக்கின்றது, முனைப்பும் தான் இல்லை.
கல்யாணி இந்த வீட்டினுள் வர முதல் இதற்குப் புதுப்பொலிவு கொடுக்க எண்ணியிருந்தேன். ம்ம்...எங்கே? எண்ணத்திலேயே மடிந்து போயிற்று.
இரண்டு படிகள் ஏறினால் முன்வாயில். இனித் துணையின்றி உள்ளே போய்விடமாட்டேனா?
“மேலே நடவுங்கண்ணே!” மீண்டும் கரத்தைப் பற்றியபடி படியில் ஏறினான் பெடியன். ஆட்டோச் சாரதியும் கால் வைத்தார்.
“இல்ல...பரவாயில்ல நானே ...போய்க் கொள்...ளுவன்.” நிமிர்ந்து நிற்க முயன்று, தோற்று, தூணில் சாய்ந்து கொண்டேன்.
வாயிலில் ரௌத்திரமாக நின்றவர் அம்மா. பின்னால் தங்கச்சி.
அவர்களையும் என்னையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு, “சரியண்ணே, உங்கட மோட்டார் சைக்கிளக் காலம கராஜில கொண்டு வந்து விடுறன்.” சொன்ன வேகத்தில் சென்று விட்டார்கள்.
ஓரெட்டில் என்னை நெருங்கிய அம்மா, “ச்சே!” மூக்கைப் பொத்திக் கொண்டார்.
பின்னாலே வந்து நின்ற தங்கையோ படு கேவலமாகப் பார்த்தாள்.
“ஏன்டாப்பா! நீ திருந்தப் போறதே இல்லயா? இவ்வளவுக்கும் பிறகு இப்படிக் குடிச்சுப்போட்டு வந்திருக்கிறியே!” அடிக்குரலில் கத்தினார் அம்மா.
“ஐயோ அம்மா! நீங்க வேற...இவர் கடைசிவரைக்கும் திருந்தவே மாட்டார். நீங்க இந்த நடு இரவில இப்பிடிக்கத்தி ஊரக் கூட்டி என்ன வரப் போகுது சொல்லுங்க?
நான் திரும்பவும் சொல்லுறன் மா, பெரியக்காவும் நீங்களும் சேர்ந்து உதயாவுக்குச் செய்யிறது மகாத் துரோகம்!
கேட்க ஆளில்ல எண்டுதானே இப்பிடியெல்லாம் நடக்கிறீங்க? பெரியத்தார் இருந்திருக்க இப்பிடியெல்லாம் நடக்குமா என்ன?” என்ற தங்கச்சிக்கு அழுகை வந்துவிட்டது.
அவளுக்குச் சில மாதங்களுக்கு முதல் தான் திருமணம் ஆகியிருந்தது. வெளிநாட்டிலிருக்கும் அவள் கணவன் ஒரு குடிகாரனாக இருந்தால்? இதைப் பலதடவைகள் சொல்லிவிட்டாள்.
நான் அவளை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. அதேநேரம், உதயாவிற்குத் துரோகம் செய்வதாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டைத் துளியும் ஏற்க முடியவில்லை.
என் வாழ்வில் ஒளிவு மறைவு எல்லாம் இல்லவே இல்லை. நான் இப்படிப்பட்டவன் என்று தெரிஞ்சே தானே தலையாட்டினாள்? பிறகென்ன?
ஒரு வார்த்தை பேசாது மெல்ல நகர்ந்து, ஒருவழியாகத் தள்ளாடியபடியே என்னறைக்குள் வந்துவிட்டேன்.
“பகல் சாப்பாடும் கொண்டு போகேல்ல. ‘அதெல்லாம் கடையில சாப்பிடுறன்.’ எண்டான். சாப்பிட்டானோ தெரியாது.” முணுமுணுப்போடு பின்னால் வந்தார் அம்மா.
“வெறும் வயித்தில நல்லாக் குடிச்சிட்டு வந்து இரவு முழுதும் அப்பிடியே கிடந்தா குடல் அழுகிப் போயிரும் சூர்யா. வந்து ரெண்டுவாய் சாப்பிட்டுப் போட்டுப்...” சொல்லிக்கொண்டே பின்னால் வந்தவர் நான் அறைக்கதவை அடித்துச் சாத்தியதும் அப்படியே நின்றுவிட்டார்.
“படுபாவி! படுபாவி! ஒரே பிள்ள...அதுவும் தங்கம் எண்டு எவ்வளவு இறுமாப்போடு இருந்தன். எல்லாத்துக்கும் சேர்த்து வச்சுச் செய்யிறான். கடைசியில இவன் அநியாயமா அழிஞ்சுதான் போகப் போறான்.”
அம்மாவின் தீனமான அழுகை என்னை ஏனோ உலுக்கவில்லை. அதைவிடப் பரிதாபம் ‘சூர்யா’ என்பவனின் வாழ்வு என்றே தோன்றிற்று!
“கல்யாணி...ஏன் அப்பிடி அவசரப்பட்டுட்ட? என்னை விட்டுட்டுப் போகக் கூடாதெண்டு நீ நினைக்ககேல்லையா? அப்பிடி ஒரு வைராக்கியம் இருந்திருந்தா உன்னை விட்டு உன்ர உயிரை யாரால எடுக்க ஏலும்? யமனும் தோத்துப் போயிருப்பானேடி!”
பிதற்றலோடு தள்ளாடியபடி அங்கிருந்த கட்டிலில் குப்புற விழுந்தேன்.
மேலும் வாசிக்க ...

Author: ரோசி கஜன்
Article Title: அத்தியாயம் - 5
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.