அத்தியாயம் - 7

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ரோசி கஜன்

Administrator
Staff member
Nov 11, 2018
1,719
1,113
113
கோடை விடுமுறைக்கென, தம்பி, தங்கை குடும்பங்களோடு தாயும் வந்திருந்ததில், காயு வீடு கலகலவென்றிருந்தது. அவர்களும் வெகு இயல்பாகவே கயல்விழியையும் தம்மில் ஒருத்தியாகச் சேர்த்துக்கொண்டார்கள்.

“பிள்ளைக்கு எப்ப கலியாணம்?” மகள் காதைக் கடித்திருந்தார், காயுவின் தாய்.

“அம்மா, அவா இருக்கேக்க இப்பிடி எதுவும் கதைக்க வேணாம்.” என்று விட்டு, அவள் பற்றிச் சொல்லியும் இருந்தாள், காயு.

“நல்ல குணமான பிள்ளையாக் கிடக்கு! அங்க கனடாவில ரெண்டு இடத்தில நல்ல பெடியள் இருக்கினம், கேட்டுப் பாக்கலாம்.” என்ற காயுவின் அன்னை, கிடைத்த சந்தர்ப்பத்தில் கயல்விழியிடம் கேட்டுமிருந்தார். அவளால் பட்டென்று பதில் சொல்ல முடியவில்லை. அப்படியே இருந்தால், அமைதியே சம்மதமென்று அடுத்த கட்டத்துக்குப் போய்விடுவார் போலிருந்தது. சின்ன முறுவலோடு அவரை ஏறிட்டாள், கயல்விழி.

“ஒரேதா வெளிநாடிட்டில வந்திருக்கிறதில விருப்பம் இல்ல ஆன்ட்டி. கோவிக்க இல்லையே!” அழகாக மறுத்தாளென்றால், “அதுக்கென்ன! அங்க ஊரில ரெண்டு மூணு பெடியள் இருக்கினம், எங்கட சொந்தங்களில தானம்மா. நல்ல படிப்பு, வேலை எண்டு இருக்கிறாங்கள். உமக்குப் பொருத்தமா இருப்பினம். உம்மட வீட்டாக்களோடு கதைக்கிறன்.” அவரும் விடாது தொடர, காயுதான் அப்போதைக்கு வந்து காப்பாற்றியிருந்தாள்.

இப்படியிருக்கையில், ஆற்றோரக் கரையோடிருக்கும் பெரிய பூங்காவொன்றிக்கு பிக்னிக் செல்லவுள்ளதாகச் சொல்லி இவளையும் அழைத்திருந்தார்கள். கயல்விழியும் விதம் விதமாகச் சாட்டுகள் சொல்லி மெல்ல நின்றுவிட முயன்றும் முடியவில்லை. அப்படி, அவர்களோடு வந்துள்ள இந்த நாள், கயல்விழியைப் பொறுத்தமட்டில் மிகவும் அழகானதாக, அருமையானதாக, புதுவகை உணர்வுகளைத் தருவதாக அமையவுள்ளது என்பதை அவளறியாளே!

சுற்றத்தின் அழகை உள்வாங்கியவாறே ஆற்றோரமாக நின்று, கலகலவென்று விளையாடிய சிறுவர்களைப் பார்த்திருந்தவள் அருகில் வந்தமர்ந்தாள், காயு.

“என்ன மேடம் தனிய இருந்து சிரிச்சுக் கொண்டிருக்கிறீங்க?”

“இல்ல இல்ல ஒண்ணுமில்ல, லாதி ஆக்களத்தான் பாத்துக் கொண்டிருக்கிறன். தம்பி தங்கச்சிட பிள்ளைகளும் சேர ஆளுக்குச் சரியான சந்தோசம் தான் என்ன?”

“எப்பவும் அப்பிடித்தான் கயல். இவை இங்க வந்து நிண்டாலோ நாங்க அங்க போய் நிண்டாலோ இவவைக் கையிலயும் பிடிக்க ஏலாது!” காயுவின் விழிகளும் அங்கதான். ஆண்கள் அவர்கள் அருகிலேயே அமர்ந்திருந்தார்கள். பார்வைகள் பிள்ளைகளில். அப்போது பூபாலனருகில் வந்தமர்ந்தான், பிரணவ். சிட்டாகப் பறந்து திரியும் லாதியைத் தொடர்ந்து கொண்டிருந்த கயல் பார்வை வட்டத்தினுள் அவன் வரவில்லை.

மிக இயல்பாகப் பார்ப்பதுபோல் இவர்களைத் திரும்பிப் பார்த்தான், பிரணவ். முறுவலித்தாள் காயு. ‘உன் மறுப்பைப் புரிந்து கொண்டேன், உன் விருப்பை மதிக்கிறேன்.’ என்று வெளியில் காட்டிக்கொண்டாலும் ‘மனம் மாற மாட்டாளா இவள்!’ என்ற நப்பாசை இருக்கத்தான் செய்யுது. ‘பூபாலன் சொல்லுறது சரிதான்.’ மனதுள் எண்ணிக் கொண்டாள், காயு.

தான் அமர்ந்திருந்த மடக்குக் கதிரையை கயல்விழியின் அருகில் நகர்த்திப் போட்டவள், “கேட்கக் கூடாதெண்டு நினைச்சாலும் முடியேல்ல கயல்.” லாதியில் இருந்த பார்வையைத் தன் புறம் திருப்பினாள்.

“உம்மட நல்ல ஃபிரெண்டா எனக்குள்ள விருப்பத்தச் சொல்லுறன் உடனே முறைக்கிறது இல்ல, ஒகே!” என்று தொடங்கி, “நீரும் கலியாணம் செய்து பிள்ளை குடும்பம் எண்டு இருக்கிறதப் பாக்கத்தான் எனக்கும் விருப்பம்.” அவள் கரத்தைப் பற்றியபடி மென்மையாகச் சொல்ல, முறுவலோடு அவள் முகம் பார்த்தாள், கயல்.

“காயு...இவ்வளவு நாளுக்கு எனக்கு ஃபிரெண்ட் எண்டு நெருக்கமா ஒருத்தரும் இருக்கேல்ல தெரியுமா? நான் அந்தளவுக்கு ஆரோடும் பழகினது இல்ல. இப்ப இந்த நிமிசம் அப்பிடிச் சொல்ல மாட்டன். என்ர ஒரே ஒரு நல்ல சிநேகிதி நீர்தான்.” சொல்லிக்கொண்டே அவள் கரத்தை இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள், கயல். என்னவோ எல்லாம் சொல்ல வேண்டும் போல் நினைத்தாலும் சுலபத்தில் முடியவில்லை. சற்று நேரம் அமைதியாக இருந்தவளை தோளோடு அணைத்துக் கொண்டாள், காயு.

“உம்மட்ட சொல்லுறதில என்ன இருக்கு காயு. உண்மையா எனக்கு கலியாணம், குடும்பம் எண்ட ஒண்டிலும் பெரிசா ஈடுபாடு இருக்கேல்ல. காரணம், சொந்த அனுபவம் தான். அம்மா, அப்பா அவேட நெருக்கம் எல்லாம் இன்னும் எனக்குள்ள பசுமையா இருக்கு!” சொன்னவள், அந்நினைவுகள் ஊடாகச் செல்வது போல் அமைதியாகிவிட்டாள்.

காயுவுக்குத்தான் எப்படி என்ன சொல்வதென்று புரியவில்லை. சின்ன வயதில் பாசத்துக்காக ஏங்கியிருகிறாள் என்றுதான் தெரியுமே. அந்த வடு மனதில் ஆழமாக இருக்கு!

“அப்பிடி இருந்திட்டு இப்ப அப்பாவும் சித்தியும்...” தானே ஆரம்பித்த கயல்விழி, சொல்லவந்ததை நிறுத்திவிட்டாள். இருந்தாலும் அவள் மனம் புரிந்தது காயுவுக்கு. “கயல்...” அன்போடு அழைத்தாள்.

“விடும்...எனக்கு ஏனோ எல்லாம் பொய், நடிப்புப் போல ஒரு உணர்வு காயு. அதுவே இவ்வளவு நாளும் தாத்தா, அம்மம்மா, சுடர், என்ர படிப்பு, தொழில் எண்டதுகளச் சுற்றி மட்டும் தான் முழுக்கவனமும் இருந்தது.” படபடவென்று சொன்னவள், “ஆனா...” காயுவின் முகம் பார்த்தவள் பிடி இறுகிற்று.

“இங்க வந்து உங்கள, லாதிய எல்லாம் பார்த்த பிறகு இப்ப எனக்கும் ஒரு குடும்பம் இருக்க வேணும் எண்ட ஆசை வந்திருக்கு.” சொன்னவளை, இறுகவே கட்டிப் பிடித்துக்கொண்டாள், காயு.

“செல்லகுட்டி!” மகளைக் கொஞ்சும் குரலில் அவள் அழைக்க, முறுவலோடு கயல் கரமும் அவளை வளைத்துக்கொண்டது.

“கயல், இப்ப நீர் சொன்னத மட்டும் என்ர மனுசன் கேட்க வேணும் அப்பிடிச் சந்தோசப்படுவார் தெரியுமா?”

“ஹா...ஹா...அப்படியே பட்டுட்டாலும். அதுக்கும் ஏதாவது சொல்லுவார்.” என்றவளை முறைத்தாள், காயு.



மேலும் வாசிக்க ....

அத்தியாயம் - 7 (2)


அத்தியாயம் - 7 (3)

அத்தியாயம் - 7 (4)
 

Author: ரோசி கஜன்
Article Title: அத்தியாயம் - 7
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: Shameem @ Sumithra