• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அன்பில் வந்த ராகமே - 11

STN 23

New member
மேலும் இரண்டு வாரங்கள் கழிந்த நிலையில்…

இந்த வருடம் ஊரில் நடக்க இருக்கும் திருவிழாவிற்கான முக்கிய தினங்களையும் ஏற்பாடுகளையும் தீர்மானிக்க ஊரின் முக்கியஸ்தர்கள் அனைவரும் மாரியம்மன் கோவில் அருகே அமைந்திருந்த அரச மரத்தடியில் குழுமி இருந்தனர்.

“வர வெள்ளிக்கிழமை இல்லாம அடுத்த வெள்ளி கூழ் ஊத்திட்டு அடுத்த மாசம் 18ஆம் தேதி திருவிழா வச்சுக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கோம்.. எல்லாரும் என்னப்பா சொல்றீங்க?” என்று பேச்சை ஆரம்பித்தார் பார்த்தசாரதி.

“தலைவரே அடுத்த வெள்ளி என்றால் கூழ் ஊத்தறதுக்கு இன்னும் பத்து நாள் தானே இருக்கு.. அதை முடிச்சுட்டு 18 ஆம் தேதியே திருவிழா வெச்சா எல்லா ஏற்பாட்டையும் எப்படி முடிக்க முடியும்?” என்றான் இளந்தாரி ஒருவன்.

“ஆமா சாரதி, நோட்டீஸ், மைக் செட், பேனர், தண்டல், பாட்டு கச்சேரி என்று எவ்வளவு ஏற்பாடு இருக்கு.. ஒரு மாசமாவது இடைவெளி இருந்தா தானே சுலபமாக இருக்கும்..” என்றார் ராஜமாணிக்கம்.

“நீ சொல்றதும் சரி தான் மாணிக்கம். ஆனால் இன்னும் தள்ளி போட்டா அதுக்குள்ள ஸ்கூல் ஆரம்பிச்சுடும் உறவுக்காரங்க வரது கஷ்டமாகிடும். அதெல்லாம் பார்த்து தான் இந்த தேதி முடிவு பண்ணி இருக்கு.. வழக்கம் போல ஒவ்வொன்றையும் எடுத்து செய்ய நம்ம கிட்ட தான் குழு இருக்கே?!”

“குழு இருக்கு ஆனா அது ஒழுங்கா செயல்படனுமே?!”

“என்னப்பா சொல்ற?”

“பின்னே என்னங்க போன முறையே திருவிழாக்கு வாங்கின தண்டல் பணத்துல 20 ஆயிரம் ரூபா துண்டு விழுந்துச்சு.. மறந்துட்டீங்களா தலைவரே?!” என்றார் மற்றொருவர்.

“ஞாபகம் இருக்குப்பா அதனால தான் இந்த முறை எல்லா குழுவிலும் இளந்தாரிங்க மட்டும் இல்லாமல் ஒவ்வொரு பெரிய மனுஷனை போடலாம்னு இருக்கேன்..”

“அன்னன்னைக்கு கணக்கு வழக்கு அன்னைக்கு ராத்திரி முடிச்சிட்டு தான் கிளம்பனும். கணேசன் சொன்ன மாதிரி போன முறை வசூல் பண்ண பணத்துல துண்டு விழுந்ததால தாம்பூல தட்டெல்லாம் உண்டியல் பணத்தில் இருந்து வாங்க வேண்டியதா போயிடுச்சு..”

“இந்த முறை அப்படி நடக்கக் கூடாது. அதோட போன முறை ஆடு வெட்டுவதற்கு ஆளாளுக்கு ஒரு விலையை நிர்ணயம் பண்ணி இருந்தாங்க. அப்படி இல்லாம வர ஆளுங்க எல்லாரும் ஒரே விலையை வாங்குற மாதிரி பாத்துக்கணும்..”

“ஆமா தலைவரே அதே மாதிரி கறி வெட்டி கொடுக்கிறதுக்கு போன முறை ஆளுங்க சரியா கிடைக்காம போயிட்டதால நேரத்துக்கு சாப்பாடு போட முடியலன்னு சொன்னாங்க. இந்த முறை போதுமான அளவு ஆளுங்களை போடணும்..”

“அதுக்கு என்ன தாராளமா பண்ணிடலாம். அப்புறம் அம்மாவோட அலங்காரத்துக்கு தேவையான பூவெல்லாம் இன்னும் தரமா இருக்கணும். போன முறை மாதிரி சொதப்ப கூடாது..”

“அது மட்டுமில்லியா போன வருஷசம் வீட்டுக்கு 2000 ரூபா தண்டல் வாங்கினோம் இந்த முறை 2500 வாங்க முடிவு பண்ணி இருக்கு, எல்லாருக்கும் சம்மதமா?”

“சம்மதம்..” என்றனர் ஒருமித்த குரலில்.

“அப்புறம் திருவிழா முடிஞ்சு தாம்பூலம் கொடுக்கும் போது மஞ்சள் குங்குமம் வெத்தலை பாக்கு பழத்தோட தேங்காவும் பூவும் சேர்த்துக்கணும்..”

“தேங்காவா? அப்படி பார்த்தா பட்ஜெட் அதிகமாகுமே.. சின்ன காயே பத்து ரூபாய்க்கு கம்மியா யாரும் கொடுக்கறது இல்ல..”

“அதுதான் இந்த முறை ஐநூறு ரூபா கூடுதலா வாங்குறோமே அப்புறம் என்னப்பா?” என்ற பார்த்தசாரதி மற்ற விவரங்களையும் பேசி திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கவனிக்கும் குழுக்களையும் முறையே பிரித்தார்.

“அதே மாதிரி நன்கொடை கொடுக்கிற ஆட்களோட பட்டியலை தனியா பிரிச்சுடனும். போன முறை இரண்டு பேரோட பேரு நோட்டீஸ்ல விட்டுப் போயிடுச்சு இந்த முறைப்படி நடக்கக்கூடாது..” என்றவர்,

“மாணிக்கம் இது போன வருஷ நோட்டீஸ். விழா குழுவுல புதுசா இருக்கிறவங்க பெயரை சேர்த்துடு. வேற யார் பேராவது விட்டுப் போய் இருக்கான்னு பாத்துட்டு அப்புறம் அச்சடிக்க சொல்லுங்க..”

“சரிங்க தலைவரே!!” என்று இளந்தாரிகள் அனைவரும் கிளம்ப மற்றவர்கள் அங்கேயே தேங்கி நின்றனர்.

“என்னப்பா நீங்க யாரும் கிளம்பலையா?”

“கிளம்பனும் சாரதி. ஆனா அதுக்கு முன்ன ஒரு முக்கியமான விஷயம் பேசணும்..”

“என்ன விஷயம் சொல்லுங்க?”

“அது ஒன்னும் இல்லப்பா மங்கை குடும்பத்தை நீ 20 வருஷமா ஒதுக்கி வச்ச ஆனா இன்னைக்கு உன் பொண்ணு புதுசா முரளி கூட உறவாடுவதை பார்த்தால் எங்களுக்கு என்னமோ சரியா படலை..”

“அத்தை பையன் மாமன் மக உறவை நீங்க யார் கேள்வி கேட்கிறது என்று கேட்கலாம்.. ஆனா அந்த உறவை நீ அறுத்து கழிச்சதால தான் இப்போ இந்த இடத்துல உட்காந்திருக்க அதை ஞாபகப்படுத்த வேண்டியது எங்க கடமை இல்லையா?”

“ஊரும் வேண்டாம் உறவும் வேண்டான்னு வேற ஜாதி பையனுக்கு உன் தங்கச்சியை கட்டிக் கொடுத்த ஆனா உன் மச்சான் கொலை பண்ணதால நம்ம ஊருக்கே கொலைகார ஊர் என்று பெயர் வந்துடுச்சு..”

“அவனால நாங்களும் எத்தனை பேர் கிட்ட அவமானப்பட்டு இருக்கோம்னு நீ மறந்து இருக்க மாட்டேன்னு நம்புறேன்..” என்று சொல்ல பார்த்தசாரதியின் நினைவுகளும் அன்றைய நாளுக்கு சென்றது.

கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு முன் அவர்கள் ஊரின் போஸ்ட் ஆஃபீசுக்கு மாறுதல் கிடைத்து வந்து சேர்ந்தவர் தான் பாரிநேயன்.

ஊரின் தலைக்கட்டான பார்த்தசாரதி அவருக்கு தங்கள் வீட்டின் அருகிலேயே வாடகைக்கு விடப்பட்டிருந்த ஆறு குடித்தனங்கள் அடங்கிய வீட்டின் மாடியில் இருந்த ஒற்றை அறையை தான் வாடகைக்கு கொடுத்திருந்தார்.

தேவ மங்கை அப்போதுதான் 12 ஆம் வகுப்பு முடித்து வீட்டோடு இருந்தார். வீட்டின் பின்புறம் இருந்த தோட்டத்தில் மாலையில் மலர்களைப் பறிக்க சென்ற தேவமங்கையை முதல்முறை பார்த்ததுமே பாரிநேயனுக்கு மிகவும் பிடித்து விட்டது.

அடுத்த நாள் காலை பால் வாங்குவதற்காக பார்த்தசாரதி வீட்டிற்கு சென்ற போது அவரும் மங்கையும் சேர்ந்து தான் பால் விநியோகம் செய்து கொண்டிருந்தனர்.

பார்த்தசாரதி வெளியூர் செல்லும் போதெல்லாம் மங்கை தனியாக பாலை அளந்து கொடுத்து கணக்கு எழுதுவார். அப்போதெல்லாம் நேரம் தாழ்ந்து வருவதை வாடிக்கையாக வைத்திருந்த பாரி அவருடன் பேச்சு வளர்க்க மங்கைக்கும் அது பிடித்தது.

அவரின் பிடித்தம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர பாரிநேயன் ஊருக்கு வந்து சேர்ந்த ஆறு மாதங்களுக்கு உள்ளாகவே இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது.

அதை அறிந்த பார்த்தசாரதி மகிழ்ச்சியோடு தங்கையின் மனம் கவர்ந்தவனுக்கு அவரை திருமணம் செய்து கொடுக்க முடிவெடுத்து உறவுகளுக்கு தெரிவித்த போது ‘வேறு ஜாதிக்காரனுக்கு எப்படி பெண் கொடுக்கலாம்?’ என்று அனைவரும் மங்கையின் திருமணத்திற்கு எதிராக நின்றனர்.

ஆனால் சாரதி தங்கைக்காக ஊரையும் உறவையும் எதிர்த்தார்.

“இதுவரைக்கும் நம்ம சாதியில எவனுமே வேற சாதி பொண்ணையோ பையனையோ கட்டுனது கிடையாது. அப்படி இருந்தும் நீ இதை செய்றனா தலைக்கட்டா இருக்கிற தகுதியை இழந்துடுவ.. அதுமட்டும் இல்லை நாங்க எல்லாரும் உன் குடும்பத்தோடு இருக்கிற உறவை முடிச்சுக்குவோம் என்று சொன்ன போது அதை பொருட்படுத்தாமல் திருமணம் செய்து வைத்தார்.

அடுத்த நாள் ஊர் பிரச்சனைக்காக அவர் பேச வந்த போது பெரும் எதிர்ப்பு கிளம்பிட அதை தொடர்ந்து தன் பதவியை ராஜினாமா செய்து கிளம்பிவிட்டார். அன்றிலிருந்து ஏழு வருடம் வரையிலும் அவருக்கு கிடைக்க வேண்டிய பதவி, மரியாதை அனைத்தும் மறுக்கப்பட்டது.

அதையெல்லாம் சாரதி எளிதாக கடந்து விட்டாலும் மங்கைக்கு அதில் வருத்தம்.

“பதவி என்ன பெரிய பதவி உன் முகத்தில் இருக்கிற சந்தோஷத்துக்கு அதெல்லாம் ஈடாகுமா? இதை எல்லாம் கண்டுக்காத தேவா..” என்று தங்கைக்கு ஆறுதல் சொல்வார்.

ஆனால் அதே ஊரை சேர்ந்த கள்ளச்சாராயம் காய்ச்சும் விஜயன் என்பவனை பாரி கொலை செய்த பின்னர் ஊராருக்கும் சாரதிக்கும் இடையில் இருந்த புகைச்சல் அதிகரித்து பெரும் பிரச்சனையாக வெடித்தது.

“இதுக்குதான் பாத்திரம் அறிஞ்சு பிச்சை போடணும் கோத்திரம் அறிஞ்சு பொண்ணு எடுக்கறதும் கொடுக்கிறதும் இருக்கணும்னு பெரியவங்க சொல்லி இருக்காங்க. ஆனா நீ உன் தங்கச்சிக்காக எல்லாத்தையும் தூக்கிப் போட்ட இப்ப பாத்தியா ‘கொலைகார ஊரு’ என்கிற பட்டம் தான் உன் மச்சானால நமக்கு மிச்சம் என்று ஆளாளுக்கு பேசினர்.

அப்போதுதான் முதல் முறையாக ‘தவறு செய்து விட்டோமோ?!’ என்ற எண்ணம் பார்த்தசாரதிக்கு உருவாக தங்கையிடம் பேசினார். ஆனால் அவரோ கணவன் பக்கம் நின்றார்.

“உனக்கு மூளை கெட்டுப் போச்சா தேவா? அதுதான் அவனே ‘நான் தான் கொலை பண்ணுனேன்’ என்று ஒத்துக்கிட்டானே.. ஒரு வருஷமா இரண்டு வருஷமா 25 வருஷம் தண்டனை அனுபவிக்கணும் கோர்ட் சொல்லிடுச்சு..”

“அவன் அதை அனுபவிக்கட்டும் ஆனா உனக்கு என்ன இருக்கு? அவன் உறவை அறுத்து கழிச்சுட்டு தாலியை கழற்றி விட்டு குழந்தைகளோடு வீட்டிற்கு வந்துவிடு” என்றார்.

ஆனால் மங்கைய எதற்கு ஒப்புக்கொள்ளவில்லை

“சொன்ன புரிஞ்சுக்கோ தேவா, அப்படி நீ வந்துட்டா ஊரும் உறவும் நமக்கு பக்கபலமா இருக்கும். நாம இழந்த மரியாதையும் திரும்ப கிடைக்கும்..” என்று அழைக்க அவர் ஒப்புக்கொள்ளவில்லை.

இறுதியில் தங்கையின் குடும்பத்தை சாரதி தலை முழுக அதன் பின்னரே அவருக்கு உறவுகள் மத்தியில் மரியாதையும் ஊர் தலைவர் பதவியும் கிடைத்தது.

என்ன தான் மரியாதை திரும்ப கிடைத்தாலும், இழந்த உறவின் இடத்தை அது ஒருபோதும் நிரப்பவில்லை.

“இதோபாரு சாரதி கொலைகாரன் எப்படியோ அவன் பிள்ளையும் அப்படித்தான் இருப்பான். ஒருவேளை உன் மகளை நீ அவனுக்கு கட்டி குடுக்கணும்னு எண்ணம் வச்சிருந்தா., நாங்க சொல்றதுக்கு முன்னாடி நீயாகவே பதவியை விட்டு விலகிடு அதுதான் எல்லாருக்கும் நல்லது..” என்றார் மூத்தவர் ஒருவர்

“என்ன சித்தப்பா இப்படி சொல்றீங்க? அது ஏதோ..” என்றவருக்கு ‘என்ன சொல்லி சூழலை சமாளிப்பது’ என்று புரியவில்லை.

“பஞ்சும் நெருப்பும் பக்கம் பக்கம் இருந்தால் என்னைக்கு இருந்தாலும் பத்திக்க தான் செய்யும். இப்பவே ஊருக்குள்ள தைரியமா ஜோடி போட்டுட்டு பழகறவங்க நாளைக்கு உன் விருப்பத்தையோ ஊர் கட்டுப்பாட்டையோ மதிக்கவா போறாங்க?”

“நீ மட்டும் சரின்னு சொல்லு வேதாச்சலத்தோட தங்கச்சி பையன் ஒருத்தன் வெளிநாட்டில் வேலை செய்றான், மாசம் லட்சக்கணக்குல சம்பாதிக்கிறான்.. கண்ணுக்கு நிறைவாவும் இருக்கான் நம்ம ராகவிக்கு ரொம்ப பொருத்தமா இருப்பான்..”

“இப்போ எதுக்கு இந்த பேச்சு?” என்ற சாரதிக்கு தன் பெண்ணின் திருமணத்தை மற்றவர்கள் முடிவு செய்வது இனிக்கவில்லை.

“என்னப்பா இப்படி கேட்டுட்ட? உன் தங்கச்சிக்கு பண்ண தப்பை உன் பொண்ணு விஷயத்துல திரும்ப பண்ணிடாத.. அப்படி உன் பொண்ணு தான் முக்கியம்னு நினைச்சேன்னா நாங்க வேற மாதிரி முடிவு எடுக்க வேண்டியது இருக்கும்..” என்றதில் சாரதியின் கோபம் எல்லையை கடந்தது.

“என்னை கேட்கறீங்களே, நீங்க எல்லாம் எதுக்கு உங்க வீட்டு பொண்ணுங்களை கொலைகாரன் பையன் கிட்ட வேலைக்கு அனுப்புறீங்க?” என்று தாங்க முடியாமல் அவர் கேட்க இத பாருப்பா வேலை இங்கிருந்து வேற சம்பந்தம் என்பது வேற புரியுதா

“நாங்க யாரும் உன் தங்கச்சி பையனுக்கு பொண்ணு கொடுக்கவோ இல்ல உன் தங்கச்சி பொண்ண எடுக்கவோ செய்யலையே, அப்படி இருந்தா நீ கேள்வி கேளு பதில் சொல்றோம்..”

“ப்ச் எதுக்கு பா இப்போ இந்த பேச்சு?” என்று ஒருவர் குறுக்கிட்டு, “சாரதி இதுக்கு உன்னோட முடிவு என்னன்னு சொல்லு..” என்றார்.

“நான் யோசிச்சு சொல்றேன்” என்றார் துண்டை உதறி தோளில் போட்டபடி.

“புதுசா யோசிக்கிறதுக்கு ஒன்னும் இல்ல சாரதி, ஏற்கனவே ஊர் வழக்கத்துக்கு மாறா ராகவியை சென்னையில படிக்க வச்சு வேலை பார்க்க வச்ச.. என்னை கேட்டா உன் பொண்ணு அந்த தைரியத்துல தான் அவன் கூட ஜோடி போட்டு சுத்தி இருக்கு இதெல்லாம் நமக்கு சரி வராது..”

“ஆமா சாரதி, ஒரு கால் கட்டு போட்டா எல்லாம் சரியாயிடும். இத்தனைக்கும் மாப்பிள்ளை பார்க்கிற கஷ்டம் கூட உனக்கு இல்லை..” என்றிட பார்த்தசாரதி நிச்சயம் இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்ற முடிவோடு அங்கிருந்து கிளம்பினார்.

அடுத்து வந்த வாரத்தில் ஒருநாள்…

அன்று காலையே பண்ணைக்கு வந்த ராகவி முரளியை அழைத்துக் கொண்டு கிளம்பினாள்.

இத்தனை நாட்களும் ராகவி தங்கு தடையின்றி இங்கே வந்து பண்ணையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வேளைகளில் ஈடுபட்டு கொண்டு தான் இருக்கிறாள்.

‘தன் சம்மதம் இல்லாமல் தன்னை மீறி திருமணம் செய்ய மாட்டேன்..’ என்று ராகவி சொல்லிவிட்டதால் பார்த்தசாரதி மகளை கட்டுபடுத்தவில்லை.

“எங்கடி போறோம்?” என்றான் முரளி அவள் சொன்னபடி வண்டியை செலுத்தி கொண்டு.

“சொல்றேன், சொல்றேன் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு. அமைதியா போ மாமூ..” என்றிட அடுத்த ஒருமணி நேரத்தில் ராகவி நிறுத்த சொன்ன கட்டிடத்தை கண்ட முரளியின் கண்கள் ரத்தமென சிவந்து போனது.

ஆம், உயரமான சுவரும், மேலே முட்களாளான கம்பியும் என்று அமைந்திருந்த ஜெயில் கண்ணில் பட்டவுடனே முரளியின் கை ஸ்டியரிங்கில் இறுகப் பிடித்து தன்னை கட்டுபடுத்த முயன்றது.

“என்னடி இது?” என்றான் பல்லைகடித்து கொண்டு.,

“பார்த்தா தெரியலை ஜெயில்..” என்று புருவம் உயர்த்தினாள்.

“தேவை இல்லாம என் கிட்ட வாங்கி கட்டிக்காத, வா கிளம்பலாம்” என்றவனுக்கு தெரியுமே அவன் தந்தை இந்த ஜெயிலில் இருப்பது.

அவன் வெறுக்கும் கடந்த காலத்தை நினைவு படுத்தியதும் இல்லாமல் உலகிலேயே தான் வெறுக்கும் ஒரே நபரை சந்திக்க ராகவி அழைத்து வந்ததில் முரளியின் கோபம் கட்டுப்பாட்டை மீறியது.

“அச்சோ மாமூ, அந்த க்ரிஷ் இங்கே தான் இருக்கான். அவனுக்கு இன்னும் நான் தான் அவன் நிலைமைக்கு காரணம்னு தெரியாது. அதை சொல்ல தான் கூட்டிட்டு வந்தேன். ஆனா நீ ஏன் இவ்ளோ கோபப்படுற?” என்றிட முரளியின் கண்கள் இடுங்கியது.

“ப்ச் நான் சொன்னா நம்ப மாட்ட.. முதல்ல உள்ள வா அவனை கொஞ்சம் வெறுப்பேத்திட்டு வரலாம்..” என்று அழைத்து சென்றாள்.

“அவனை அடிச்சது யாருன்னு தெரியாததுல அவனுக்கு பாதி பைத்தியமே பிடிச்சுடுச்சுன்னு சொன்னாங்க அதுதான் உன்னை அவனுக்கு காட்டி முழு பைத்தியம் பிடிக்க வைக்க முடிவு பண்ணி இருக்கேன்..” என்றாள் சிரிப்போடு.

ஆனால் முரளியால் சிரிக்க முடியவில்லை. அவன் மனதினுள் ஏதோ ஒரு இனம் புரியா நெருடல்!! மனம் அமைதியில்லாமல் தவிக்க ராகவி அடுத்து பேசிய எதுவுமே அவன் சிந்தையில் ஏறவில்லை.

ஒவ்வொரு இடத்திலும் ஜெயிலில் இருப்பவரை பார்ப்பதற்கான அனுமதி சீட்டை கொடுத்தவள் முரளியை கொண்டு சென்று ஒரு நபரின் முன் நிறுத்தினாள்.

அங்கே நரை முடி, கண்களில் கண்ணாடி, ஒடுங்கிய தேகத்தோடு நின்றிருந்த மனிதரை கண்ட முரளியின் ரத்த நாளங்கள் சூடேறியது.

பாரி ஜெயிலுக்கு வந்த போது முரளி ஏழு வயது சிறுவன்!!

பாரியை அவன் பார்த்தது க்ஷணப்பொழுது என்றாலும் அவனால் மறக்க கூடிய முகமா அது!!

வருடங்கள் பல கடந்த போதும் யாரும் அடையாளபடுத்தி அறிமுக படுத்த வேண்டிய தேவையே இல்லாமல் பாரியை உடனே கண்டு கொண்டான்.

“ஏன்டி இந்த ஆள் தான் க்ரிஷ்ஷா?” என்றான் தன் எதிரில் இருந்த பாரியை கண்டு.

“உண்மையை சொன்னா வர மாட்டன்னு தான் பொய் சொன்னேன் மாமூ.. ஆனா ப்ளீஸ் நான் சொல்றதை கொஞ்சம் கோபப்படாம கேளு...” என்று அவன் கையை பிடிக்க அதை வேகமாக உதறியவன்,

“ஊரே கொலைகாரன் மகன்னு என்னை சொல்லுதுடி ஆனா இன்னும் ஒரு நிமிஷம் இங்க இருந்தாலும் நிச்சயம் நான் கொலைகாரனாகிடுவேன்..” என்றவன் கட்டுக்கடங்கா கோபத்தோடு கிளம்பினான்.

“முரளி!!” என்று இத்தனை வருடங்களாக தேக்கி வைத்திருந்த அன்பை மொத்தமாக வெளிப்படுத்திய பாரியின் குரல் அவன் நடையை தடை செய்தது.

“இன்னைக்கு மாமாவோட பிறந்தநாள். அவர் உன்னை பார்த்து இருபது வருஷமாச்சு. ரொம்ப மிஸ் பண்றார், உன் மேல அவருக்கு எவ்ளோ பாசம் தெரியுமா? ஒரே ஒருமுறை உன்னை கண்ணுல காட்ட சொன்னார் அதனா..” என்றவளை ஓங்கி அறைந்திருந்தான் முரளி.

தீயென எரிந்த கன்னத்தை பிடித்தபடி செயலற்று போய் அவனை பார்த்தாள் ராகவி.
 
Last edited:
Top Bottom