• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அன்பில் வந்த ராகமே - 13

STN 23

New member
“மாமா கொலை பண்ணினதுக்கு அவர் பக்கம் ஒரு நியாயம் இருக்க வாய்ப்பு உண்டுன்னு உனக்கு ஏன் மாமா தோணல?” என்று ஆழ்ந்த குரலில் ராகவி கேட்க, முரளி அவளை அமைதியாக பார்த்தான்.

“கொலை பண்ணினது ஒரு பக்கம் இருக்கட்டும் ஆனா அதுக்கு முன்னாடி மாமா எப்படிபட்ட மனுஷன்னு ஊருக்குள்ள கேட்டுப்பார் மாமூ..” என்றவள்,

“அப்படி கேட்டா, அவர் எவ்வளவு அமைதியானவர், பொறுப்பானவர், பொறுமையானவன்னு அவங்களே சொல்லுவாங்க. அப்படிப்பட்டவர் தானே ஒரு கொலை பண்ணினதா சொல்லி தண்டனையை ஏத்துக்கிட்டு ஜெயிலுக்கு போயிருக்கிறார் என்றால் அதுக்கு ஏதாவது ஒரு நியாயமான காரணம் இருக்கும்னு ஏன் மாமா நீ யோசிக்கவே இல்லை?”

“யோசிக்கலைன்னு நினைக்கிறியாடி?”

“நீ சொல்ற மாதிரி நான் ஊருக்குள்ள போய் கேட்க வேண்டிய தேவையே இல்லை. என் அம்மாவே பலமுறை இதை பற்றி சொல்லி இருக்காங்க. ஆனா அந்த கொலைக்கான காரணமா ஊர் என்ன எல்லாம் பேசுச்சுன்னு உனக்கு தெரியுமா?”

“என்ன? என்ன பேசுச்சு?”

“உன் மாமாவுக்கும் அவர் கொலை பண்ணின அந்த ஆளுக்கும் ஏதோ ஒரு பொண்ணு விஷயத்துல தகராறு வந்து அதனால தான் கொலை பண்ணி இருப்பாருன்னு சொன்னாங்க. இன்னும் சிலர் ஒரு படி மேல போய், உன் மாமாவுக்கும் கொலை செய்யப்பட்ட அந்த ஆளோட பொண்டாட்டிக்கும் தொடர்பு இருந்ததாகவும் அதனால வந்த வாக்குவாதம் கொலையில முடிஞ்சதாகவும் சொன்னாங்க…”

“அந்த ஆள் போஸ்ட் ஆபீஸ்ல வேலை செஞ்சதால ஆண் பெண் என்ற பேதம் இன்றி எல்லாரோடவும் நல்ல பழக்கம் உண்டு. அப்படி ஒன்னு இரண்டு முறை அந்த ஆளோட பொண்டாட்டி கிட்ட பேசி இருக்கலாம். அதை பார்த்துட்டு கண்ணு, காது, மூக்கு எல்லாம் வச்சு ஊர் ஒரு கதை கட்டி விட்டுடுச்சு…”

“இதை யார் சொன்னா உனக்கு?”

“என் அம்மா தான்! இங்கே என்னோட கோபமே அவனை ஏன் கொன்னாரு என்கிற உண்மையை சொல்லாதது தான்…”

“அவங்க இரண்டு பேரும் வேற வேற கட்சி, அரசியல் பேசிட்டு இருந்த போது வாக்குவாதமாகி அதை தொடர்ந்து ஒருத்தருக்கு ஒருத்தர் அடிச்சுக்க ஆரம்பிச்சு, கடைசியில் அது கொலையில் போய் முடிஞ்சிடுச்சுன்னு வாக்குமூலம் கொடுத்து இருக்கார்…”

“போலீசும் கோர்ட்டும் அதை தீர விசாரிச்சாங்களா இல்லையான்னு தெரியாது. அன்னைக்கு ஊர் திருவிழா என்பதால பெரும்பாலான ஊர் ஜனம் கோவிலில் இருந்ததால இந்த கொலையை நேரில் பார்த்த சாட்சி யாரும் இல்லை. அதனால அவரோட வாக்குமூலத்தை மட்டும் வைத்து அரெஸ்ட் பண்ணிட்டாங்க..”

“அம்மா இதை நம்பவே இல்லை. பலமுறை போய் அந்த ஆள் கிட்ட கெஞ்சி கதறி அழுதிருக்காங்க. அப்பவும் அதே பல்லவியை பாடினதுல தான் எனக்கு மொத்தமா வெறுத்துப் போச்சு…”

“நிமிஷ நேரத்துல எங்க இருந்து அந்த ஆத்திரம் வந்ததுன்னு தெரியலை அப்படிபட்ட நேரத்துல அவனை கொலை பண்ணினதா சொன்னாங்க… எது எப்படி இருந்தாலும் இதனால அதிகளவு அவமானம், ஏளனம், மனஉளைச்சல் அனுபவிச்சது நாங்க தானே?! நீ சொல்ற பொறுமையும் நிதானமும் அமைதியான குணமும் இருக்கிற ஒரு ஆள் செய்யக்கூடிய வேலையா இது?”

“நீ இவ்ளோ சொல்ற ஆனா அத்தை மாமாவை நம்புறாங்க. இப்ப வரைக்குமே அவரை போய் பார்த்துட்டு தானே இருக்காங்க…”

“அது எங்க அம்மாவோட பெருந்தன்மை!! என்னதான் ஊரார் ‘கொலைகாரன் மகன்’ன்னு அடையாளப்படுத்தினது ஒரு பக்கம் இருந்தாலும், அப்பாவோட அன்பும் பாசமும் கிடைக்க வேண்டிய வயசுல அது இல்லாம போனது எவ்வளவு பெரிய வலி என்று உனக்கு தெரியாது ராகா..”

“அப்பா கூட கடைக்கு போனோம், அப்பா சைக்கிள் ஓட்ட கத்து கொடுத்தார், எனக்கு பிடிக்கும்னு நடுராத்திரி கடைத்தெருவுக்கு போய் பரோட்டா வாங்கிட்டு வந்தார். இந்த வருஷம் லீவுல வண்டி கத்துக் கொடுக்கிறேன்னு பசங்க பேசும் போது எனக்கு எப்படி இருக்கும்.., தெரியுமா?

“அதை விட என் தங்கச்சி ஒரு வயசு குழந்தை அப்போ!! அப்பாவோட முகம் கூட அவ மனசுல பதிஞ்சு இருக்காது அப்பா என்கிற உறவை அவ தெரிஞ்சுகிட்ட்டது ஃபோட்டோல தான்.”

“அப்பாவோட அன்பு, அரவணைப்பு, பாதுகாப்புக்காக என் தங்கச்சி எவ்வளவு ஏங்கி இருப்பா… குறைந்தபட்சம் அவளைப் பற்றியாவது யோசித்து இருக்கலாமே! அப்படி என்ன கோபம்?”

“தெரியாத்தனமா கோபத்துல உன்னை ஒரே ஒரு அடி அடிச்சிட்டு இந்த ஒரு வாரமா நிம்மதி இல்லாம தவிக்கிறேன்டி நான்! ஆனா அந்த ஆளால எப்படி இருக்க முடியும்?”

“வேண்டாம்… இதுக்கு மேல இதை பற்றி பேச வேண்டாம். விட்டுடு ராகா” என்றவன் தளர்ந்து போய் அங்கேயே அமர்ந்து விட்டான்.

அதே நேரம் முரளிக்காக சுடச்சுட வெங்காய பஜ்ஜி, போண்டா, டீயை எடுத்துக்கொண்டு அங்கே வந்த பரிமளா முரளி அமர்ந்திருந்த நிலையை கண்டு, “என்னாச்சு?” என்றார் மகளிடம்.

“ஒன்னும் இல்லம்மா… சும்மாதான். நீ போ, நான் பார்த்துக்கறேன்..”

“அதுதான் தம்பி வீடு தேடி வந்து இருக்காங்களே இதுக்கு மேலயாவது அங்க போகலாம் தானேடி. நீ வராததுல அண்ணியும் ரொம்ப வருத்தப்பட்டாங்க…”

“சரி மா..” என்றவள், “மாமூ உன் மாமியார் உனக்காக பஜ்ஜி, போண்டா கொண்டு வந்திருக்காங்க பாரு, சாப்பிடு..”

“ஒன்னும் வேண்டாம்…”

“கொஞ்சம் முன்னாடி தானே கோபப்பட மாட்டேன்னு சொன்ன? ஆனா இப்போ வேண்டான்னு சொல்ற.. ப்ச் உன் வார்த்தையை எல்லாம் தண்ணில தான் எழுதி வைக்கணும்!” என்றவளின் வாயில் பஜ்ஜியை வைத்து அவள் பேச்சை நிறுத்தினான்.

“உன்னை சாப்பிட சொன்னா எனக்கு எதுக்கு ஊட்டின?”

“நீ சமாதானமாகாம நான் சாப்பிட மாட்டேன்..” என்றான் உறுதியான குரலில்.

“என்ன பிளாக்மெயில் பண்ணி என்னை வழிக்குக் கொண்டு வர நினைக்கிறியா? உன்னால முடிஞ்சா செய்து காட்டு” என்றாள் சவாலாக.

“இது பிளாக்மெயில் கிடையாது ராகா. நிஜமா சொல்றேன் மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு.. இத்தனை நாளும் எனக்கு சுத்தமா சாப்பாடு இறங்கலடி. வேணும்னா நீ என்னை ஒன்னுக்கு ரெண்டு அடியா திருப்பி அடிச்சுரு அப்போவாவது உன் கோபம் குறையுதான்னு பார்க்கிறேன்..”

“என்ன கையில மருதாணி இருக்கிறதால அடிக்க மாட்டேன்னு நினைச்சியா? இதுக்காகவே கையை கழுவிட்டு வந்து அடிப்பேன்!”

“நானும் அதைத்தான்டி சொல்றேன்! உன் கோபம் தீர அடிச்சுடு. ஆனா இப்படி பேசாம இருக்காத, என்னால தாங்க முடியல…”

“மாமூ…”

“நிஜமாத்தான் சொல்றேன்…” என்றவனை பெருமூச்சோடு பார்த்தவள், “சரி, மன்னிச்சுட்டேன் போதுமா? ஆனா நீ இதெல்லாம் சாப்பிட்டுட்டு தான் வீட்டுக்கு கிளம்பனும்…” என்றதில் முரளியின் முகம் பிரகாசமானது.

“அப்புறம், நான் தானா அங்கே வருவேன். தேவையில்லாம என்னை கம்பெல் பண்ண கூடாது…”

“நிஜமாவே மன்னிச்சிட்டியா?”

“ஆமா… ஆனா இன்னொரு முறை கை நீட்டறது மட்டும் இல்ல, கண்மூடித்தனமான கோபமும் உன் கிட்ட இருக்க கூடாது. அப்படி இருந்தா கண்டிப்பா நான் உன்னை கல்யாணம் பண்ணனுமான்னு யோசிக்க வேண்டியதா இருக்கும்..” என்றதில் தூக்கி வாரிப்போட்டது முரளிக்கு.

“ஹே! என்.. என்னடி இப்படி பேசுற? விளையாட்டுக்குக் கூட அந்த வார்த்தையை சொல்லாத ராங்கி”

“நானும் ஒன்னும் ஆசைப்பட்டு சொல்லலை மாமூ ஆனா நீ இப்படியே உன் கோபத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துட்டு இருந்தா அது நம்ம லைஃப்க்கு நல்லது இல்ல. உன்னை நீ இந்த விஷயத்துல கண்டிப்பா மாத்திக்கணும்..” என்றாள் தீர்க்கமான குரலில்.

“கண்டிப்பா செய்றேன்” என்றவன் மீண்டும் அவளுக்கு பஜ்ஜியை எடுத்துக் கொடுக்க, வாங்கிக் கொண்டவள், “நீயும் சாப்பிடு..” என்றாள் அவன் அருகில் அமர்ந்தபடி.

இருவரும் பேசிக்கொண்டு சாப்பிட்டு முடிக்க, அவனுக்காக கொண்டு வந்த டீயையும் இருவரும் பகிர்ந்து கொண்டனர்.

“அப்புறம்?!” என்று ராகவி கேட்க, “இன்னைக்கு ரொம்ப அழகா இருக்க ராகா..” என்றான் ரசனையோடு.

“அஹான்!! அதுக்கு என்ன பண்ணலாம்?” என்று அவள் தன் நாண சிவப்பை சிரிப்பின் பின் மறைக்க, “ரொம்ப வலிச்சதா?” என்று அவள் கன்னத்தை மென்மையாக வருடினான்.

“இல்லாம போகுமா?” என்று அவன் கையை பிடித்தவள், “முரட்டு கை மாமூ உனக்கு! அடிச்ச அரை மணி நேரம் எரிச்சல் அடங்கலை தெரியுமா? அவ்வளவு வலி… இரண்டு நாள் உன் கைத்தடம் அப்படியே கன்னத்தில் இருந்துச்சு. அப்பா பாக்காத படி மாஸ்க் போட்டுட்டு சுத்தினேன்..”

“ஸாரிடி!!” என்றவன் அவள் முகத்தை கையில் ஏந்தி கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டான்.

“ஒரு முத்தத்துல எல்லாம் வலி குறையாது..” என்று அவள் சிரிக்க,

“அப்போ வேற என்ன பண்ணனும்?”

“ஒரு அடிக்கு ஆயிரம் முத்தமாவது கொடுத்தா தான் கணக்கு சரி வரும் சண்டியரே!!” என்று கண் சிமிட்டி சொல்ல சட்டென சிரித்து விட்டான் முரளி.

“சிரிச்சா எப்படி? பதில் சொல்லுங்க..”

“சரி, கணக்கு வச்சுக்கோ… கல்யாணத்துக்கு அப்புறம் மீதி தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பதை கொடுக்கிறேன்..”

“அடப்போ சண்டியரே, எவனாவது கிடைச்ச சான்ஸை விடுவானா? அநியாயத்துக்கு நல்லவனா இருக்க மாமூ நீ!” என்று அவன் தாடையை பிடித்து கொஞ்ச அதற்கும் அவனிடம் சிரிப்பு தான்.

“இப்படி எதாவது கேட்டா உடனே சிரிச்சு மழுப்பிடு..” என்று சிரித்தவள்,

“எனக்கு சண்டியரை விட இந்த சமத்து பையனை தான் ரொம்ப பிடிச்சிருக்கு” என்று நெட்டி முறித்தவள் தானுமே அவன் நெற்றியில் அழுத்தமாக முத்தம் வைத்தாள்.

“சரி, என்ன இன்னைக்கு திடீர்னு தாவணி கட்டியிருக்கே? ஏதாவது விசேஷமா?”

“விசேஷமெல்லாம் ஒன்னும் இல்லை மாமூ. இது நீ போன திருவிழாக்கு எனக்கும் அபிக்கும் ஒரே மாதிரி எடுத்து கொடுத்தது. அப்போ ஒரே ஒரு முறை கட்டினது தான். அதுக்கப்புறம் அலமாரில தூங்கிட்டு இருந்துச்சு. சரின்னு இன்னைக்கு கட்டினேன்..” என்ற அதேநேரம் பரிமளா அவசரமாக அங்கே வந்தார்.

“என்னம்மா? ஏன் இவ்வளவு டென்ஷனா இருக்க?”

“உன் அப்பா வந்துட்டாரு ராகவி… வண்டி சத்தம் தெரு முனையில் கேட்குது..” என்றவர், “தம்பி, அவர் உங்களை பார்த்தா ஏதாவது பிரச்சனை ஆகிடப் போகுது..” என்றார் கைகளை பிசைந்தபடி.

அவர் முகத்தில் இருந்த பதற்றத்தை கண்டவன் “அப்போ நான் கிளம்பறேன்…” என்று கூடத்துக்கு வர, அதற்குள் வீட்டினுள் வந்து விட்ட பார்த்தசாரதி முரளியை கண்டு அதிர்ந்து போனார்.

“நீ… நீ எங்க இங்க?” என்று கேட்க, இருவருக்கும் இடையில் வந்த சுந்தரவல்லி, “நா.. நான் தான் டா வர சொன்னேன்..” என்றார்.

“நீயா? எதுக்கு ஆத்தா இவனை இங்க வர சொன்ன?”

“எனக்கு மேலுக்கு முடியல. நேத்து இருந்து எத்தனை முறை உன்கிட்ட சொன்னேன். ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போறேன்னு சொன்னியே தவிர கூட்டிட்டு போனியா? காலையில எழுந்ததும் உன் பாட்டுக்கு கிளம்பி போயிட்டே.. அதான் என் பேரனை நான் வர சொன்னேன்.”

“நீ சொன்னா வந்துருவானா?” என்றார் பார்த்தசாரதி அடக்கப்பட்ட கோபத்தோடு.

“ஏன், எனக்கு இங்க வர உரிமை இல்லையா?” என்று முரளி நேரடியாக தாய்மாமனை கேட்க, ‘எங்கே வார்த்தை தடித்து விடுமோ?!’ என்று மற்றவர்கள் பதறி போயினர்.

“ஏன் ராசா… பேசி நேரத்தி வீணாக்குறே? வா போலாம்..” என்று பேரனை இழுத்து கொண்டு வெளியில் சென்றார் சுந்தரவல்லி.

ஆனால் வெளியில் சென்ற முரளியை பார்த்திருந்த பார்த்தசாரதிக்கோ அவன் வரவு சரியாக படவில்லை.

‘இன்று வீட்டுக்குள்ளேயே வந்து விட்டவன் நாளை எதற்கும் தயங்க மாட்டான்?’ என்ற உண்மையை புரிய, ‘இதற்கு மேலும் இதை வளர விடக்கூடாது’ என்ற முடிவுக்கு வந்தார்.

அதை தொடர்ந்து அடுத்த வாரமே ராகவியை பெண் பார்க்க வெளிநாட்டு மாப்பிள்ளை வந்திருந்தான். அவனுடன் ஊரின் முக்கியஸ்தர்களும் உறவுகளும் அடக்கம்.
 
Top Bottom